வியாழன், 10 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 184

 எட்டாவது ஸ்கந்தம் - பதினாறாவது அத்தியாயம்

(அதிதி தன் புதல்வர்களான தேவதைகள் ஐச்வர்யத்தை இழந்து, காணாது போனமைக்கு வருந்தித் தன் கணவரான கச்யபரிடத்தில் அதன் பரிஹாரத்தை வேண்ட அவர் பயோவ்ரதத்தை (விவரம் கீழே) அனுஷ்டிக்கும்படி உபதேசித்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அப்பொழுது தேவதைகளின் தாயான அதிதி, தன் புதல்வர்கள் காணாது போய், தைத்யர்கள் ஸ்வர்க்கத்தைக் கைப்பற்றி வருகையில், நாதன் (தலைவன், காப்பாற்றுபவன்) அற்றவள் போலப் பரிதபித்தாள். இப்படியிருக்கையில், வெகுகாலமாய் ஸமாதியினின்று ஓய்ந்திருக்கின்ற ஜ்ஞானாதிகரான (ஆத்ம தத்வ ஜ்ஞானத்தை அடைந்தவரான) கச்யப முனிவர் உத்ஸவங்களும், அதற்குக் காரணமான ஸந்தோஷமும் அற்றுச் சூன்யம் (ஒன்றும் இல்லாமல்) போலிருக்கிற அந்த அதிதியின் ஆச்ரமத்திற்கு ஒருகால் வந்தார். குருகுலாலங்காரனே! அம்முனிவர் விதிப்படி பூஜை செய்யப்பெற்று, ஆஸனத்தில் உட்கார்ந்து முகம் வாடி நிற்கிற தன் பத்னியான அதிதியை நோக்கி இவ்வாறு மொழிந்தார்.

கச்யபர் சொல்லுகிறார்:- மங்கள ஸ்வபவமுடையவளே! இப்பொழுது இவ்வுலகத்தில் ப்ராஹ்மணர்களுக்காவது, பசுக்களுக்காவது, தர்மத்திற்காவது, ம்ருத்யுவின் இச்சையை அனுஸரித்திருக்கிற மற்ற ஜனங்களுக்காவது, ஒரு கெடுதியும் இல்லையே? என் அகமுடையவளே (மனைவியே)! நமது அகத்தில் (இல்லத்தில்) தர்மத்திற்காவது (அறம், நற்செயல்), அர்த்தத்திற்காவது (பொருள்), காமத்திற்காவது (இன்பம்) ஏதேனும் கெடுதி நேரிட்டிருக்கின்றதா என்ன? இந்த இல்லற வாழ்க்கையில் இந்த்ரியங்களை வெல்லமுடியாத மூடர்களே வருந்துவார்களன்றி, உன்னைப் போன்ற ஜிதேந்த்ரியர்கள் (புலன்களை வென்றவர்கள்) மனப்பற்றைக் கொள்ளமாட்டார்கள். நீ குடும்ப கார்யத்தில் ஊக்கமுற்றிருக்கையில், அதிதிகள் வந்து எதிர்கொள்வது முதலியன செய்து, உன்னால் பூஜை செய்யப்பெறாமல் நம் க்ருஹத்தினின்று திரும்பிப் போனார்களா என்ன? 

அதிதிகள் வந்து ஜலத்தினாலும்கூடப் பூஜை செய்யப்பெறாமல் திரும்பிப்போவார்களாயின், அவ்வீடுகள் நரிகள் வஸிக்கும் பாழிகள் போன்றவைகளேயாம். பதிவ்ரதையே! நல்லியற்கையுடையவளே! நான் புறப்பட்டுப் போனபின்பு, நீ மனவருத்தமுற்றுத் தகுந்தகாலங்களில் ஆஹவனீயம் (இல்லறத்தில் இருப்பவன் வேதத்தில் விதிக்கப்பட்ட ஹோமம் முதலிய அக்னி கார்யங்களைச் செய்வதற்கு மூன்று அக்னிகளை எப்பொழுதும் இல்லத்தில் வைத்து வளர்த்து பூஜிக்க வேண்டும். 

1.கார்ஹபத்ய அக்னி - என்பது மேற்கு திசையில் இருக்கும் அக்னி; ஹோமம் செய்யும் போது மனைவி கார்ஹபத்ய அக்னியின் அருகில் அமர்ந்து கொள்ள வேண்டும்; 

2.ஆஹவனீய அக்னி - என்பது கார்ஹபத்ய அக்னியிலிருந்து எடுக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்ட, ப்ரதான ஹோமம் செய்வதற்கான, கிழக்கு திசையில் இருக்கும் அக்னி; 

3.தக்ஷிணாக்னி என்பது தெற்கு திசையில் இருக்கும் அக்னி) 

முதலிய அக்னிகளில் ஹவிஸ்ஸுக்களால் (ஹோமத்தில் தேவதைகளுக்காக அக்னியில்  கொடுக்கப்படும் நெய்யுடன் சேர்ந்த அன்னம், புரோடாசம் என்கிற மாவினால் ஆன பண்டம் இவற்றால்) ஹோமம் செய்யாமல் தவறிப்போயினையா என்ன? அக்னி உரியபடி பூஜிக்கப்பட்டு வருமாயின், எல்லா விருப்பங்களையும் கறக்கும் (தரும்). க்ருஹஸ்தாச்ரமத்திலிருக்கும் (இல்லற தர்மத்தில் இருக்கும்) புருஷன் அந்த அக்னியின் பூஜையினால் புண்யலோகங்களைப் பெறுவான். ப்ராஹ்மணனையும், அக்னியையும் ஸமஸ்த தேவதாஸ்வரூபனான பகவானுக்கு முகமென்று ச்ருதிகள் கூறுகின்றன. ஆழ்ந்த மனமுடையவளே! உன் புதல்வர்கள் அனைவரும் க்ஷேமமாயிருக்கின்றார்களல்லவா? உன் முகக்குறிகளால் உன்மனம் அஸ்வஸ்தமாயிருப்பது (நலம் இன்றி இருப்பது) போலத் தோற்றுகின்றது. அதற்குக் காரணம் இன்னதென்று தெரியவில்லையாகையால், உன்னை வினவுகின்றேன், சொல்வாயாக.

அதிதி சொல்லுகிறாள்:- ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! ப்ராஹ்மணர்களுக்கும், பசுக்களுக்கும், தர்மத்திற்கும், இவ்வுலகத்திலுள்ள மற்ற ஜனங்களுக்கும் க்ஷேமமே. என் அகமுடையவரே! தர்ம (அறம்), அர்த்த (பொருள்), காமங்களுக்கு (இன்பங்களுக்கு) விளைநிலமாகிய க்ருஹஸ்தாச்ரமம் (இல்லற தர்மம்), பூஜையை விரும்புகிற அக்னிகள், அதிதிகள், ப்ருத்யர்கள், பிச்சைக்காரர்கள் ஆகிய இவையெல்லாம் உம்முடைய நன் மனத்தினால் குறைவற்றிருக்கின்றன. மஹானுபாவரே! நீர் ப்ரஜைகளுக்கு ப்ரபுவாயிருந்து, இத்தகைய தர்மங்களை உபதேசித்து அனுஷ்டிக்கும்படி செய்வித்துக் கொண்டிருக்கையில், நான் விரும்பும் விருப்பம் எதுதான் எனக்குக் கை கூடாது. “ஆனால் ஏன் மனவருத்தமுற்றிருக்கிறாய்?” என்றால் சொல்லுகிறேன். 

மரீசி மஹர்ஷியின் புதல்வரே! ஸத்வ, ரஜஸ், தமோகுணங்களில் ஒவ்வொன்று தலையெடுக்கப் பெற்றிருக்கிற தேவர், தைத்யர் முதலிய இந்த ப்ரஜைகளெல்லாம், உம்முடைய மனத்தினின்றும், சரீரத்தினின்றும் உண்டாயினவாகையால், அவை எல்லாவற்றையும் நீர் துல்யமாகப் பார்க்கும் தன்மையுடையவர். ப்ரபூ! ஆயினும் மஹேச்வரராகிய உம்மை ப்ரீதியுடன் பணிகிறவர்களிடத்தில் நீர் பக்ஷபாதம் (சிறப்பான நன்மையைச் செய்யும் தன்மை) உடையவரல்லவா? ஆகையால், உம்மை ப்ரீதியுடன் பணிகின்ற எனக்கு, நன்மை உண்டாகும் உபாயத்தை ஆலோசிக்க வேண்டும். 

நல்ல வ்ரதமுடையவரே! சத்ருக்களால் (எதிரிகளால்) ஐச்வர்யமும், வாஸஸ்தானமும் (இருப்பிடமும்) பறிக்கப்பெற்று வருந்துகின்ற எங்களைப் பாதுகாக்க வேண்டும். நீர் எல்லாத் திறமைகளும் அமைந்தவரல்லவா? உம்முடைய பத்னியாகிய நான் எவ்விதத்திலும் துக்கம் நேரக்கூடாதவளாயினும், இப்பொழுது தைத்யர்களால் இருப்பிடத்தினின்று துரத்தப்பட்டு, துக்கஸாகரத்தில் மூழ்கிக்கிடக்கிறேன். இப்பொழுது ப்ரபலர்களாயிருக்கிற தைத்யர்களால், என்னுடைய ஐச்வர்யம் (ஆளுமை), ஸம்பத்து  (செல்வம்), புகழ், வாஸஸ்தானம் (இருப்பிடம்) இவையெல்லாம் பறிக்கப்பட்டன. பிறர் கார்யங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் திறமையுடையவரே! என் புதல்வர்கள் இவற்றையெல்லாம் மீளவும் முன்போலவே எந்த உபாயத்தினால் பெறுவார்களோ, அதை உம்முடைய மங்களமான புத்தியினால் ஆலோசித்து நடத்தவேண்டும். நீர் பிறர்க்கு க்ஷேமத்தை விளைவிப்பவர்களில் சிறந்தவரல்லவா?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு அதிதியினால் வேண்டப்பெற்ற கச்யப ப்ரஜாபதி புன்சிரிப்புடன் அதிதியை நோக்கி மேல் வருமாறு மொழிந்தார்.

கச்யபர் சொல்லுகிறார்:- நல்லவளே! ஸ்ரீமஹாவிஷ்ணுவினுடைய மாயையின் பலம் அளவற்றது. அந்த மாயையினால் மதி (புத்தி) மயங்கியல்லவோ, இவ்வுலகமெல்லாம் புத்ராதிகளிடத்தில் (பிள்ளைகளிடத்தில்) ஸ்நேஹமாகிற (அன்பு என்கிற) பாசத்தினால் கட்டுண்டிருக்கின்றன? ப்ருதிவி (பூமி) முதலிய பஞ்சபூதங்களின் பரிணாமமான தேஹம் எங்கே? ப்ரக்ருதியைக் (அறிவற்ற ஜடப்பொருட்களைக்) காட்டிலும் விலக்ஷணனான (வேறான) ஆத்மா எங்கே? இவ்வாறு ஒன்றைவிட ஒன்று வெவ்வேறான தேஹம் (உடல்) ஆத்மா இவ்விரண்டில், கணவன், பிள்ளை முதலியவர் எதைச் சேர்ந்தவர்கள்? தேஹத்தோடு (உடலோடு) ஸம்பந்தமுடையவர்களா? ஆத்மாவோடு ஸம்பந்தமுடையவர்களா? ஆத்மாவுக்குப் பிள்ளை, பெண்டிர், கணவன் முதலியவர்களோடு ஸம்பந்தம் தேஹத்தின் (உடலின்) மூலமாய் உள்ளதேயன்றி, நேரே கிடையாது. தேஹம் (உடல்) வளர்தல், குறைதல் முதலிய விகாரங்களுக்கு (மாறுபாடுகளுக்கு) இடமாகையாலும் பஞ்சபூதங்களின் பரிணாமமாகையாலும் (மாறுபாடாகையாலும்) நித்யமன்றாகையால் அதைப்பற்றி ஏற்பட்ட பிள்ளை முதலியவர்களிடத்தில் ஸ்நேஹம் உண்டாவதற்குக் காரணம் தேஹாத்மப்ரமமே (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கமே) ஒழிய வேறன்று. ஆகையால், தேஹாத்மப்ரமத்தைத் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கத்தைத்) துறந்து, அந்தத் தேஹத்தைத் (உடலைத்) தொடர்ந்த பிள்ளை முதலியவர்களிடத்தில் ஸ்நேஹத்தை (அன்பு, பரிவு, பாசத்தை) மாற்றிக்கொண்டு, அவர்களைப்பற்றிச் சிந்திக்காதிருக்க வேண்டும். 

உனக்கு இவ்விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமென்னும் பிடிவாதம் உள்ளதாயின், வாஸுதேவனை ஆராதிப்பாயாக. அவன் தன்னை ஆராதிக்கும் ஜனங்களுக்கு ஹிதம் (நன்மை) செய்பவன்; அவன் ஸமஸ்த ப்ராணிகளின் ஹ்ருதயங்களில் வாஸம் செய்பவன்; நன்மையை விரும்பும் ஜனங்களால் வேண்டப்பெற்றவன்; ஷாட்குண்ய பூர்ணன் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவன்); அபாரமாகக் கொடுக்குந் தன்மையுடையவன். தன்னைப் பற்றினவர்களுடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையன்; தீனர்களிடத்தில் (புகலற்ற ஏழை, எளியவரிடத்தில்) தயை (கருணை) செய்பவன். ஷாட்குண்ய பூர்ணனும் அவாப்தஸமஸ்தகாமனுமாகிய (தான் விரும்பும் அனைத்தும் நிறைவேறப் பெற்றவனுமாகிய) பரமபுருஷனுடைய ஸேவை வீணாகாததென்பது என் அபிப்ராயம். அவன் உன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுப்பான்.

அதிதி சொல்லுகிறாள்:- மஹானுபாவரே! நான் பகவானை எவ்விதத்தில் ஆராதிக்க வேண்டும்? நான் எப்படி ஆராதித்தால், ஸத்ய ஸங்கல்பனான (தான் நினைத்ததை நிறைவேற்றுவதில் எந்த தடையும் இல்லாதவனான) பகவான் என் மனோரதத்தை நிறைவேற்றுவான்? அந்தணர் தலைவரே! பிள்ளைகளுடன் வருந்துகின்ற என் விஷயத்தில் எந்தவிதத்தில் சீக்ரமாக ஸந்தோஷம் அடைவானோ, அவ்விதத்தை எனக்கு உபதேசிக்க வேண்டும்.

கச்யபர் சொல்லுகிறார்:- நான் ப்ரஜைகளை விரும்பி, ப்ரஹ்மதேவனை வேண்டுகையில், அவர் எனக்கு ஒரு வ்ரதத்தை உபதேசித்தார். அதை நான் உனக்குச் சொல்லுகிறேன். அந்த வ்ரதம், ப்ரஹ்ம, ருத்ராதிகளுக்கும் ப்ரபுவான பரமபுருஷனைச் சீக்ரத்தில் ஸந்தோஷம் அடையச் செய்யும். பால்குன (பங்குனி) மாதத்தில் சுக்லபக்ஷத்தில் பயோவ்ரதமென்னும் வ்ரதத்தைப் பன்னிரண்டு நாள்கள் அனுஷ்டிக்க வேண்டும். அந்த வ்ரதத்தினால் மாறாத பக்தியுடன் தாமரைக்கண்ணனாகிய கண்ணனை ஆராதிக்க வேண்டும். அமாவாஸ்யை அன்று கிடைக்குமாயின் காட்டுப்பன்றிகள் தோண்டின மண்ணால் உடம்பைப் பூசி, நதியில் “பூமிதேவி! உன்னை யதாஸ்தானத்தில் (உனது இருப்பிடத்தில்) நிலைநிறுத்த விரும்பி பகவான் ஆதிவராஹ உருவங்கொண்டு உன்னைப் பாதாளத்தினின்றும் எடுத்தான். உனக்கு நமஸ்காரம். என் பாபத்தைப் போக்குவாயாக” என்னும் இம்மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். பிறகு ஸந்தியாவந்தனம் முதலிய நியமங்களை முடித்துக்கொண்டு, பூமியில் ஓரிடத்தை அலங்கரித்து, அவ்விடத்திலும் கும்ப ஜலத்திலும் (குடத்தில் உள்ள நீரிலும்), ஸூர்யமண்டலத்திலும், அக்னியிலும், குருவினிடத்திலும், மனவூக்கத்துடன் பகவானை ஆராதிக்க வேண்டும். 

பரமபுருஷனே! நீ ஷாட்குண்ய பூர்ணன் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவன்). நீ அபாரமாகக் கொடுக்குந் தன்மையுடையவன்; ஸமஸ்த பூதங்களிடத்திலும் வாஸஞ்செய்பவன் (வஸிப்பவன்); அதைப்பற்றியே உன்னை வாஸுதேவனென்று கூறுகிறார்கள். நீ ஸமஸ்த சேதனா சேதனங்களையும் ஸாக்ஷாத்கரித்துக் கொண்டிருப்பினும், அவற்றின் குணங்கள் தீண்டப்பெறாதவன். புருஷஸூக்தத்தில் நிரூபிக்கப்படும் மஹாபுருஷன் நீயே. இத்தகைய உனக்கு நமஸ்காரம். நீ கண் முதலிய இந்திரியங்களுக்கு விஷயமாகாதவன். அணு ஸ்வரூபனான (மிகச் சிறிய உருவுடைய) ஜீவனிடத்திலும் உட்புகுந்திருப்பவனாகையால் நீ ஜீவனைக்காட்டிலும் ஸுக்ஷ்மன் (நுட்பமானவன்). ஜீவனுக்குள் புகுந்து நிறைந்திருப்பது போல ப்ரக்ருதியிலும் புகுந்து நிறைந்திருக்கின்றாய்; ஆகையால் உன் ஸ்வரூபத்தை அளவிட முடியாது. நீ இருபத்து நான்கு தத்வங்களும் சரீரமாயிருக்கப்பெற்று, அவற்றின் ஸ்வரூபத்தை நன்றாக உணர்ந்தவன். ஸத்வாதி குணங்களின் பரிணாம ரூபமான (மாறுபாடான) அந்த இருபத்து நான்கு தத்வங்களுக்கும் நீயே காரணன். உனக்கு நமஸ்காரம். 

யஜ்ஞாதி கர்மங்களை வெளியிடுவதும், யஜ்ஞ புருஷனாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவை நன்றாக எடுத்துரைப்பதும் இரண்டு தலைகளும், மூன்று பாதங்களும், நான்கு கொம்புகளும், ஏழு ஹஸ்தங்களும் (கைகளும்) அமைந்த ஒரு அற்புத வ்ருஷபம் (காளை) போன்றதுமாகிய வேத வித்யையைச் சரீரமாகவுடையவன். அத்தகைய உனக்கு நமஸ்காரம். ப்ரவ்ருத்தி நிமித்தம் அதற்கு இடமான வஸ்து இவைகளை இரண்டு தலைகளாகவும், இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலமென்கிற மூன்று காலங்களை மூன்று பாதங்களாகவும், நாமம் ஆக்யாதம் நிபாதம் உபஸர்க்கம் என்று நான்கு வகைப்பட்ட சப்தங்களை நான்கு கொம்புகளாகவும், ஏழு வேற்றுமைகளை ஏழு ஹஸ்தங்களாகவும் (கைகளாகவும்) சொல்லுகிறது. உலகத்தில் புலப்படும் வ்ருஷபங்களுக்கு (காளைகளுக்கு) இரண்டு கொம்புகளும், நான்கு பாதங்களும், ஒருதலையும் உள்ளவை. ஆகையால் இந்த வேதமாகிற வ்ருஷபம் (காளை) விலக்ஷணமென்று (வேறு என்று) நிரூபிக்கப்படுகிறது.

உன்பாதத்தினின்று நழுவின கங்கா ஜலத்தைச் சிரத்தில் தாங்கினமையால் பரிசுத்தனாகிச் சிவனென்று பெயர் பெற்றவனும், பிறந்தவுடனே அழுதமையால் ருத்ரனென்று பெயர் பெற்றவனும், எல்லா வித்யைகளுக்கும் நிர்வாஹகனும் (நியமிப்பவனும்) பூதங்களுக்கு ப்ரபுவும் உமாபதியுமாகிய சங்கரன் உனக்குச் சரீரமாகி, உன்னால் தூண்டப்பட்டு ஸம்ஹாரத்தை நடத்துகிறான். ஆகையால் அதுவும் உன் செயல்தான். நீயே ப்ரஹ்ம தேவனுக்கு அந்தர்யாமியாய் இருந்து உலகங்களைப் படைக்கின்றாய். ஸமஸ்த பூதங்களும் உன்னால் தான் பிழைத்திருக்கின்றன. ப்ராண வாயுவும் நீயே. நீ ப்ரஹ்மதேவன் முதலாகப் பூச்சி புழு வரையிலுமுள்ள ஸகலமான ஜகத்திற்கும் அந்தராத்மாவாய் இருக்கின்றாய். நீயே யோக ஸ்ம்ருதிகளை வெளியிட்டு அந்த யோகைச்வர்யத்தை நிர்வஹிக்கின்றாய். இத்தகைய உனக்கு நமஸ்காரம். நீயே முதன்மையான தேவன்; தேவர்களுக்கும் தேவன். நீயே நாராயணன்; எல்லாமறிந்தவன். நீ நர-நாராயண ரிஷிகளாய் அவதரித்தவன். நீ உன்னைப் பற்றினவர்களுடைய மன வருத்தங்களைப் போக்கும் தன்மையுடையவன். உனக்கு நமஸ்காரம். 

நீ இந்த்ர நீலம் போலக் கரிய திருமேனியுடையவன்; ஸ்ரீமஹாலக்ஷ்மியால் அணைக்கப்பெற்றவன். ப்ரஹ்ம, ருத்ரர்களுக்கு அந்தர்யாமியாகி ஸ்ருஷ்டி (படைப்பு) ஸம்ஹாரங்களை (அழித்தல்) நீயே நிர்வஹிக்கின்றாய். நீ கேசவாதி த்வாதச (பன்னிரண்டு) மூர்த்திகளாய் அவதரித்தவன்; பீதாம்பரம் உடுத்தவன். உனக்கு நமஸ்காரம். வரேண்யா! (விரும்பி வரிக்கத்தக்க மேலான தெய்வமே!) வரம் கொடுப்பவர்கள் அனைவரிலும் சிறந்தவன் நீயே. ஆகையால் தான் பண்டிதர்கள் தங்கள் நன்மை நிறைவேறும் பொருட்டு உன் பாத தூளியை உபாஸிக்கிறார்கள். ஸ்ரீமஹாலக்ஷ்மியும், தேவதைகளும் உன் பாதார விந்தங்களின் வாஸனையை விரும்பினவர்கள் போன்று உன்னை அனுஸரிக்கிறார்கள். “வாஸுதேவனே! ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) அப்படிப்பட்ட நீ எனக்கு அருள் புரிவாயாக” என்ற இம் மந்திரங்களால் பகவானை ஆவாஹனம் செய்து அப்பகவானுக்கு ஆஸனமளித்து அர்க்யம், பாத்யம் முதலிய உபசாரங்களும் செய்து ச்ரத்தையுடன் ஆராதிக்க வேண்டும். 

இவ்வாறு ஆராதித்த பின்பு கந்தபுஷ்பங்களோடு கூடின க்ஷீரத்தினாலும் (பாலினாலும்) சுத்த ஜலத்தினாலும் (நீரினாலும்) வாஸுதேவ பகவானுக்கு ஸ்நானம் செய்வித்து, வஸ்த்ரம், யஜ்ஞோபவீதம், ஆபரணம், பாத்யம், ஆசமனம் இவைகளால் ஆராதித்துக் கந்தம், புஷ்பம் முதலிய உபசாரங்களும் ஸமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு உபசாரம் செய்யும் பொழுதும் த்வாதசாக்ஷர (பன்னிரண்டு எழுத்துக்கள் கொண்ட) மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டும். மீளவும் அம்மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே, சால்யன்னத்தை (செம்பா அரிசியின் அன்னம்) நெய்யும், வெல்லமும் சேர்த்துப் பாலில் பக்வஞ்செய்து, நைவேத்யம் கொடுத்து, த்வாதசாக்ஷர (பன்னிரண்டு எழுத்துக்கள் கொண்ட) மந்த்ரத்தினால் ஹோமம் செய்து நிவேதனம் செய்த அந்தப் பாயஸான்னத்தைக், கிடைப்பானாயின், புசிக்கக்கூடிய ப்ராஹ்மணனுக்குக் கொடுக்க வேண்டும். நேராத பக்ஷத்தில் தானாவது புசிக்க வேண்டும். 

இவ்வாறு ஆராதித்த பின்பு ஆசமனம் கொடுத்துத் தாம்பூலம் ஸமர்ப்பித்து, அப்பால் த்வாதசாக்ஷர (பன்னிரண்டு எழுத்துக்கள் கொண்ட) மந்த்ரத்தை நூற்றெட்டுத்தரம் ஜபித்துப் பகவானை ஸ்தோத்ரங்களால் துதிக்க வேண்டும். அப்பால் ப்ரதக்ஷிணம் செய்து தண்டம் போல் பூமியில் விழுந்து, ஸந்தோஷத்துடன் நமஸ்கரிக்க வேண்டும். பகவானுக்கு ஸமர்ப்பித்த புஷ்பம் முதலியவற்றைக் களைந்து சிரஸில் தரித்துக்கொண்டு அப்பால் பகவானை உத்வாஸனம் செய்ய வேண்டும் (அவனது முந்தய இருப்பிடத்தில் எழுந்தருளப் பண்ண வேண்டும்). 

பிறகு இரண்டு பேர்களுக்குக் குறையாமல் ப்ராஹ்மணர்களைப் பாயஸான்னத்தினால் விதிப்படி புஜிப்பிக்க வேண்டும். பிறகு நன்கு பூஜிக்கப்பட்ட அந்த பராஹ்மணர்களால் அனுமதி கொடுக்கப்பெற்று, இஷ்ட பந்துக்களுடன் அவர்கள் புசித்து மிகுந்த அன்னத்தைப் புசிக்கவேண்டும். அப்பால் அன்றைய தினம் ராத்ரி ப்ரஹ்மசர்யத்துடன் படுத்திருக்க வேண்டும். இவ்வாறு முதல்நாள் கழிகையில் மற்றைநாள் விடியற்காலையில் எழுந்து ஸ்நானம் செய்து, பரிசுத்தனாகி மனவூக்கத்துடன் முதல்நாள் செய்த ப்ரகாரமாகவே பகவானை ஆவாஹனம் செய்து, பாலாலும், சுத்த  ஜலத்தாலும் ஸ்நானம் செய்வித்துக் கந்தம் (சந்தனம்), புஷ்பம் (பூ), தீபம், அர்க்யம், பாத்யம் ஆசமனம் முதலியவற்றால் ஆராதிக்க வேண்டும். இவ்வாறே வ்ரதம் முடியும் வரையில் தினந்தோறும் ஆராதிக்க வேண்டும்.

பாலையே ஆஹாரமாகப் புசித்துக்கொண்டு பகவானை ஆராதிப்பதில் மிக்க விருப்பமுற்று இந்த வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். முதல் நாள் போலவே அக்னியில் ஹோமஞ்செய்து, ப்ராஹ்மணர்களையும் புசிப்பிக்க வேண்டும். இவ்வாறு தினந்தோறும் பன்னிரண்டு நாள் வரையில் பாலையே புசித்துக்கொண்டிருந்து பகவானை ஆராதித்தல், ப்ராஹ்மணர்களைப் புசிப்பித்தல், அவர்களைப் பூஜித்தல், ப்ரஹ்மசர்யம் தவறாதிருத்தல், வெறுந்தரையிற் படுத்தல், மூன்று காலமும் ஸ்நானம் செய்தல் ஆகிய இவற்றையெல்லாம் சுக்லபக்ஷ ப்ரதமை தொடங்கி த்ரயோதசி வரையில் தவறாமல் நடத்த வேண்டும். வீண்பேச்சுக்களையும் பலவகையான போகங்களையும் துறக்க வேண்டும். அஸத்துக்களோடு பேசலாகாது. ஸமஸ்த பூதங்களுக்கும் ஹிம்ஸை செய்யாமல் வாஸுதேவனையே அனுஸந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். 

இவ்வாறு பன்னிரண்டு தினங்கள் கடந்த பின்பு த்ரயோதசியினன்று சாஸ்த்ரங்களை உணர்ந்த நான்கு ருத்விக்குக்களைக் (வேதம் அறிந்த, யாகம் முதலிய கர்மங்களைச் செய்யவல்ல ப்ராஹ்மணர்களைக்) கொண்டு சாஸ்த்ரத்தில் சொன்ன விதியின்படி பஞ்சாம்ருதங்களால் பகவானுக்கு ஸ்நானம் செய்விக்க வேண்டும். பணத்தில் லோபமின்றி ஸமஸ்த உபசாரங்களும் அமைந்திருக்குமாறு பகவானுக்குப் பெரிய பூஜை செய்ய வேண்டும். மிகுந்த ஒளியுடைய ஸ்ரீமஹா விஷ்ணுவைக் குறித்துப் பாலில் ஹவிஸ்ஸைப் பக்வம் செய்து மனவூக்கத்துடன் புருஷஸூக்த மந்தரங்களைச் சொல்லி ஹோமம் செய்து பரமபுருஷனை ஆராதிக்க வேண்டும். 

அப்பால் அப்பரமபுருஷனுக்கு ப்ரீதியை விளைப்பதும் அறுசுவை அமைந்ததுமாகிய நைவேத்யத்தை அவனுக்கு நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு ஜ்ஞானம், அனுஷ்டானம் இவை நன்றாகவுடைய ஆசார்யனையும், ருத்விக்குக்களையும் தன் சக்திக்குத் தகுந்தபடி ஆடை, ஆபரணம், பசு, இவைகளால் ஸந்தோஷப்படுத்த வேண்டும். அதுவே ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்கு மிகுந்த ப்ரீதியை விளைவிக்கவல்ல ஆராதனமாம். 

பரிசுத்தமான புன்னகையமைந்தவளே! அறுசுவையமைந்த மேலான அன்னத்தினால் அந்த ருத்விக்குக்களையும் அங்கு வந்திருந்தவர்களும் புசிப்பிக்கத் தகுந்தவர்களுமான மற்ற ப்ராஹ்மணர்களையும் புசிப்பிக்கவேண்டும். அப்பால் ஆசார்யனுக்கும் ருத்விக்குக்களுக்கும் தன் பணத்திற்குத் தகுந்தபடி தக்ஷிணை கொடுக்கவேண்டும். அங்கு வந்திருக்கின்ற சண்டாளன் வரையிலுமுள்ள அனைவரையும் அன்னம் முதலியவற்றால் ஸந்தோஷப்படுத்த வேண்டும். 

இவ்வாறு தீனர் (புகல் அற்றவர்கள்), அந்தர் (குருடர்), க்ருபணர் (ஏழ்மையானவர்) முதலிய அனைவரும் புசித்த பின்பு அதெல்லாம் பகவானுக்கு ஸந்தோஷத்தை விளைப்பதேயென்று பாவித்துத் தானும் பந்துக்களோடு புசிக்க வேண்டும். முதல்நாளும் கடைசிநாளும் இடையில் பன்னிரண்டு நாள்களுமாகச் சேர்ந்த பதினான்கு நாள்களில் தினந்தோறும் ஆடல், பாடல், வாத்யம், ஸ்தோத்ரம் ஸ்வஸ்திவாசனம் (நல் ஆசீர்வாதங்கள்) இவைகளாலும் பகவானுடைய கதைகளாலும் அவனைப் பூஜிக்க வேண்டும். பரமபுருஷனுடைய ஆராதனங்களில் சிறந்த இந்தப் பயோவ்ரதமென்னும் வ்ரதத்தை எனக்கு ப்ரஹ்மதேவன் சொன்னான். அதை நான் உனக்குச் சொன்னேன். 

மிகுந்த பாக்யமுடையவளே! நீயும் இந்தப் பயோவ்ரதத்தை நன்றாக அனுஷ்டித்து இதனால், பரிசுத்தமான பக்தியையுடைய மனத்தினால் பணியத் தகுந்த பகவானை ஆராதிப்பாயாக. இந்த வ்ரதம் ஸர்வ யஜ்ஞமென்னும் பேருடையது. இந்த ஒரு வ்ரதமே ஸமஸ்த யஜ்ஞ (யாக) வ்ரதங்களுக்கும் நிகராயிருக்கும். மங்கள ஸ்வபாவமுடையவளே! இது எல்லா தவங்களிலும் சிறப்புடையது. இதை அனுஷ்டித்தால் எல்லா தானங்களும் செய்தாற்போலாகும். ஏனென்றால், இந்த வ்ரதம் ஸர்வேச்வரனான பரமபுருஷனுக்கு மேலான த்ருப்தியை விளைவிக்கவல்லது. எந்த நியமங்களாலும், யாகங்களாலும் பகவான் ஸந்தோஷம் அடைவானோ, அந்த நியமங்களே சிறந்த நியமங்களாம். அந்த யாகங்களே சிறந்த யாகங்களாம். மற்றவையெல்லாம் பயனற்றவைகளே. மங்கள ஸ்வபாவமுடையவளே! ஆகையால் நீ மனவூக்கமுற்று ச்ரத்தையுடன் இந்த வ்ரதத்தை அனுஷ்டிப்பாயாக. இதனால் பகவான் ஸந்தோஷம் அடைந்து உனக்கு வரங்களைக் கொடுப்பான்.

பதினாறாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக