ஏத்துகின்றோம் நாத்தழும்ப ராமன் திருநாமம்!
‘‘நாவாயில் உண்டே நமோ நாரணா என்று
ஓவாது உரைக்கும் உரைஉண்டே மூவாத
மாக்கதிக்கண் செல்லும் வகைஉண்டே என் ஒருவர்
தீக்கதிக்கண் செல்லும் திறம்?’’
பொய்கையாழ்வார்
இந்த அற்புதமான பாசுரத்தை ஆழ்வார்களில் முதல்வரான ஆதிகவி என்று அழைக்கப்படுகிற பொய்கையாழ்வார் படைத்திருக்கிறார். இன்றைய காலகட்டத்திற்கு இந்தப் பாசுரம் மாமருந்து எனக் கருதலாம். பெருமுயற்சி எதுவும் இன்றித் திருவெட்டெழுத்தாகிய நாராயண மந்திரத்தைச் சொல்லி நலம் பெறலாமே. அதனைச் சொல்லித் துதிப்பதற்கு உறுப்பான நாவினைத் தேடி வெளியே, அதாவது, புறத்தில் தேட வேண்டிய எந்த அவசியமும் இல்லையே அந்நாவானது அவரவர் வாயிலேயே இருக்கிறதே. இந்த திவ்யமான, மங்களகரமான, இம்மைக்கும் மறுமைக்கும் பயன்தரக்கூடிய எட்டெழுத்து மந்திரமான நாராயண நாமத்தை உச்சரிப்பதை விட்டு விட்டு நம் நா வேறு எதை எதையோ பேசித் திரிகிறதே. தீய சொற்களும், ஒன்றுக்கும் பயன்தராத வார்த்தைகளை வாய் அசை போட்டுக் கொண்டிருக்கிறதே என்று இந்தச் சமூகத்தை நினைத்து, மக்களை நினைத்து ஒருவித ஏக்கப் பெருமூச்சு விடுகிறார் ஆழ்வார்.
ஆழ்வாரின் இந்தக் கருத்தும், விமர்சனமும் ஏதோ இன்று நேற்று நடப்பதைக் குறித்து எழுந்ததல்ல. ஆழ்வார்கள் காலத்திலேயே அதாவது ஏழாம் நூற்றாண்டிலேயே இந்தச் சிந்தனை அவரை வாட்டி வதைத்திருக்கிறது. மனமும் நாவும் நல்ல விஷயங்களைத் தேடிப்போக மறுக்கிறதே, ஐம்புலன்களும் நம் வசத்தில் இல்லையே, காட்டாற்று வெள்ளத்தில் எல்லாப் பொருட்களும் அடித்துச் செல்வதைப்போல புலன் நுகர்ச்சியில் நாம் அடித்துச் செல்லப்படுகிறோம் என்று அங்கலாய்க்கிறார். ஆழ்வாரின் இந்தக் கண்ணோட்டத்தைப் பார்த்தால் சாதாரண ஒன்றாகத் தெரியலாம். உள்ளார்ந்து பார்த்தால்தான் சமூகம் சார்ந்து சிந்தித்திருப்பதை நம்மால் நன்கு உணர முடியும்.
இன்றைக்கும் பத்திரிகை மற்றும் ஊடகத்தில் வருகிற செய்திகளைப் பார்த்தால் தேவையற்ற பேச்சால் அநாவசியமான சர்ச்சை எழுகிறது. சர்ச்சை சண்டையாய் முடிகிறது. ஆரோக்கியமான விவாதம் முக்கியமான ஒன்றுதான். ஆனால், நம்மில் எத்தணை பேர் தினமும் பயனுள்ள பேச்சை பேசுகிறோம். தனித்தனி மனிதர்களாக கணக்கெடுத்துப் பார்த்தால்கூட பெரும்பான்மை நேரம் பயனில்லாத நிகழ்வுகளால்தான் நேரத்தை செலவு செய்கிறோம் என்பதை நன்றாக உணர முடியும். நம் கவனச் சிதறல்களுக்கு மிகமுக்கிய காரணம் மனம் ஒன்றுபடாமை.
அமுதகவி என்று அழைக்கப்படுகிற பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தில் ‘‘ஏத்திய நாவுடையேன்; பூவுடையேன்; நின் தள்ளி நின்றமையால்’’ என்கிறார். உன் அழகிய திருப்பெயரைச் சொல்வதற்கு நாவும், உன்னை தூவித் துதிப்பதற்கு பூவும் உடையேன் நான் என்று அவரையே உதாரணம் காட்டுகிறார். உண்மையில் சொல்லப் போனால் ஆழ்வார்கள் தான் நமக்கு முன்மாதிரி. ஆழ்வார்களின் பாசுரங்களில் இருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் இறைவன் கட்டிப் பொன் போன்றவன் என்றும், அவன் திருநாமம் அதனை உருக்கிச் செய்த அணிகலன் போன்றது என்றும் பொருள் கொள்ள வேண்டும். தமிழ்த் தலைவன் என்று போற்றப்படுகிற பேயாழ்வாரும் ஒரு பாசுரத்தில்,
‘‘நாமம் பல சொல்லி நாராயணா என்று
நாம் அங்கையால் தொழுதும், நல் நெஞ்சே வா மருவி,
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தான் துழாய்
கண்ணணையே காண்க, நம் கண்.’’
நெஞ்சமே போற்றுதலுக்குரிய அவன் திருப்பெயரைச் சொல்லு. குளிர்ந்த துளசி மாலைகளை அணிந்திருக்கும் பரந்தாமனை, கண்ணபெருமானை கண்களால் தரிசனம் செய். கண் பெற்ற பாக்கியமே இதற்குத்தான் என்கிறார் ஆழ்வார்.‘‘ஏத்துகின்றோம் நாத்தழும்ப ராமன் திருநாமம்’’ என்கிறார் பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார். இதில் நாத்தழும்ப என்பதுதான் விசேஷமானது. அதாவது, ராமனுடைய எம்பெருமானுடைய திருநாமத்தைச் சொல்லிச் சொல்லி நாவில் தழும்பு ஏற்பட்டு விட்டதாம். இவர்கள் எல்லோரையும் விட குலசேகராழ்வார் ஒருபடி மேலே போய் விட்டார். தன்னுடைய பெருமாள் திருமொழிப் பாசுரம் ஒன்றில்...
‘‘பேயரே எனக்கு யாவரும்; யானும் ஓர்
பேயனே எவர்க்கும்; இது பேசி என்?
ஆயனே! அரங்கா! என்று அழைக்கின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே’’
பெருமாள் திருமொழி
உலகோர் அனைவரும் கைவிடும்படி ஆனாலும் எனக்குக் கவலையில்லை என்கிறார் உரத்த குரலில். ‘என்னடா இவர் சதாசர்வ காலமும் பெருமாள், கோயில், குளம், பக்தர்கள் அடியார் கூட்டம் என்று சிந்தித்துக் கொண்டு பயணம் செய்கிறான் என்று பலரும் பேசுகிறது என் காதில் விழுகிறது. நான் என்ன செய்ய? இந்த உலகம் இப்பொழுது எப்படி இருக்கிறது தெரியுமா? அழியப் போகிற பொருள்களில் நிலையில்லாத விஷயங்களில் இவர்கள் ஆசை வைத்து கடைசியில் துன்பத்திற்கு ஆளாகின்றனர். நானோ எப்போதும் இன்பம் தருகிற பேரின்ப வாசனை தருகிற பரம்பொருளிடம் பற்று பாசம் பந்தம் வைத்துள்ளேன். ஆயனாய் கிருஷ்ணனாய் இருந்தவன் தற்போது திருவரங்கத்தில் அரங்கனாய் பள்ளி கொண்டு அருள்பாலித்து வருகிறான். யார் யாரோ யாருக்கோ பித்தனாகி பித்தாகி இருக்கிறார்கள். ஆனால், நானோ அரங்கப் பெருமானிடம் பித்தனாகி விட்டேன். என்னை இவர்கள் பைத்தியக்காரர்கள் என்றால், என் பார்வையில் இவர்கள்தான் பைத்தியக்காரர்கள் எனத் தெரிகிறது என்கிறார், குலசேகராழ்வார்.
என்னவொரு ஒரு மனத்துணிச்சல் இருந்தால் இப்படிச் சொல்ல ஒருவரால் இயலும்!
திட பக்தியும், சம திருஷ்டியும் இருந்தால்தானே இந்த நிலைக்கு ஒருவர் வர முடியும்.
அதுவும் அரசனாக இருந்த ஒருவர் அதையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு ஆண்டவனின் நாமத்தை வாயார சொல்லச் சொல்லி மகிழ்வதும் அவன் பாதங்களையே பற்றுக் கோடாக வைத்திருப்பதும் சாதாரணமான ஒன்றா என்ன? மேலான உறுதிப்பொருளான பரம்பொருளிடம் குலசேகராழ்வார் ஆழ்ந்த உணர்வுகளை கொண்டுள்ளதை இந்தப் பாசுரத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. திருமழிசையாழ்வாரின் நான்முகன் திருவந்தாதியில் ஓர் அற்புதப் பாசுரம். திருமழிசை ஆழ்வார் இடம் மாறி தடம் மாறி நாராயணனே சரணம் என்று ஆர்ப்பரித்தவர். அதனால் மற்ற ஆழ்வார்களை விட அவரால் நாராயண நாமத்தையும் அதன் பலனையும் கூடுதலாக அனுபவிக்க முடிகிறது.
‘‘செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்;
புவிக்கும் புவி அதுவே கண்டிர் கவிக்கு
நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையேதான்’’
நான்முகன் திருவந்தாதி. நம் காதுகளுக்கு இன்பம் தருவது செந்தாமரைக் கண்ணன் திருநாமமே! ஆழ்வார் சொல்லுகிறார் எனக்கு மட்டும் இல்லாமல் உலகில் உள்ள எல்லோருக்கும் இன்பம் பயக்கும் விஷயம் இதுதான் என்று அறுதியிட்டுச் சொல்லுகிறார். அதனால்தான் பாசுரத்தில், ‘‘புவிக்கும் புவி அதுவே கண்டிர்’’ என்கிறார். அவன் நிறைபொருள் என்கிறார். வேதம் உட்பட எல்லா சாஸ்திரங்களும் இதைத்தான் சொல்லுகின்றன என்கிறார் திருமழிசையாழ்வார். ஆழ்வார்கள் ஆண்டவனை நன்கு உணர்ந்து அனுபவித்தவர்கள். தமக்குக் கிடைத்த இன்பத்தை அந்த இன்ப வெள்ளத்தில் நம்மையும் மூழ்குமாறு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் காலவெள்ளத்தால் அடித்துச் செல்லமுடியாத அற்புதமான பாசுரங்களை மயக்கும் தமிழில் நமக்கும் அருளியிருக்கிறார்கள். ஆழ்வார்கள் காட்டிய பகவானின் நாமாவை வாய்விட்டுச் சொல்லுவோம். அவனருள் பெற்று ஆனந்தமாக வாழ்வோம்.
நன்றி - தினகரன்