செவ்வாய், 3 டிசம்பர், 2019

மயக்கும் தமிழ் - 25 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி

கண்டு கொண்டு என் கண் இணைஆரக்களித்து
பண்டைவினையாய்டின பற்றோடு அறுத்து
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே

திருவாய்மொழி

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் இதுவொரு மிகமிக அற்புதமான பாசுரம். கரும்பின் எந்தப் பாகமும் இனிப்பதைப் போல பிரபந்தம் முழுவதுமே தேன் கொண்ட சாரல் மழைதான். ஆழ்வார்களின் மயக்கும் தமிழால் நம் நெஞ்சமெல்லாம் நெக்குருகிப் போகின்றது. பாசுரங்களைப் படிக்க படிக்க மனதிற்குள் ஓர் மழைத்துளி வந்து விழுகின்ற பேருணர்வு ஆட்கொள்கின்றது. சரி. பாசுரத்திற்கு வருவோம்.பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உணர்வுகளை புரிதலை மிக அழகாக இயல்பாக உருக்கமாக மட்டுமில்லாமல் நம் நெஞ்சுக்கு நெருக்கமாகவும் சொல்லி மகிழ்கிறார் நம்மாழ்வார். தம்மோடு கலந்த இறைவனுக்குத் தம்மைக் காட்டிலும் காதலும் ஒருவித வாஞ்சை உணர்வும் மிக அதிகம் என்பதை இப்பாசுரத்தில் அருளிச் செய்கிறார்.


உன்னைக் கண்டால் வாரிக்கொண்டு விழுங்குவேன்’ என்று நான் ஆசை கொண்டிருந்தேன். இப்படி ஆசையை அடைந்த எனக்கு முன்னாலே தானும் இவ்வாறே அனுபவிக்க வேண்டும் என்று இறைவன் பாரிப்புக் கொண்டு என்னை முழுவதுமாக எடுத்துப் பருகிவிட்டான். இப்படிச் செய்தவன் யார் தெரியுமா? கரிய மேகத்தைப் போன்ற நிறமுடைய திருகாட்கரையில் உள்ள  என் அப்பன் ஆவான். அவன் என்னைக் காட்டிலும் விரைவு. அதாவது வேகம் கொண்டவன். பாசுரத்தின் ஜீவநாடியான மையக்கருத்து என்னவென்றால் அன்பு செய்வதில் போட்டா போட்டி நடக்கிறது. யார் யாருக்கும் தெரியுமா? ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவிற்கும்... இன்னும் எளிமையாகச் சொல்வதென்றால் ஆண்டவனுக்கும் அடியார்களுக்குமாம். ‘வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் தூணில்’ என்று பாசுரத்தை தொடங்குகிறார், ஞானத் தந்தையான நம்மாழ்வார்.

பகவானை நினைத்து பாசுரத்தை படைக்கிறார். உன்னைப் பார்த்தால் பாயை சுருட்டுவதுபோல் சுருட்டி வாரிக்கொள்வேன் என்ற உணர்வு மேலிட தன்னுடைய விருப்பத்தை முன்வைக்க, இறைவன் என்ன நினைக்கிறானாம் தெரியுமா?  அடியார்களின் விருப்பம் அறிந்து அடியார்கள் தன்னை நோக்கி வருவதற்கு முன் இவன் அடியார்களை நோக்கி நூறுகால் பாய்ச்சலில் அதாவது, நம்மூர்களில் சொல்வோமே புலிப்பாய்ச்சல் அதுபோல ஓடி வருவனாம்.‘என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்’ என்கிறார் ஆழ்வார். பாசுரத்தில் வருகிற பாரித்து என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

பாரித்தல் என்றால் மனத்தில் பெருக நினைத்தல். பாரிப்பு என்றால் பெருவிருப்பம் என்பது அறிஞர் பெருமக்களின் வியாக்கியானம். அதாவது, அர்த்தம் கற்பித்து இருக்கிறார்கள். என்ன ஆச்சர்யம் பாருங்கள்! அப்படிப்பட்ட இறைவன் யார்? அவன் எங்கிருக்கிறான்? எங்கிருந்து வருகிறான் தெரியுமா? இதற்கும் நம்மாழ்வாரே பதில் சொல்கிறார்.

கார் ஒக்கும் காட்கரை அப்பன்  கடியனே திருகாட்கரை மலை நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்று மிக முக்கியமான திவ்ய தேசம். ஷோரனூர் எர்ணாகுளம் ரயில் மார்க்கத்தில் உள்ள இடைப்பள்ளி ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கிறது. திருவோணத் திருநாளை இத்தலத்தில் மிக விமரிசையாக கொண்டாடுகின்றனர். அதுவும் ஆவணி மாதம் வருகிற திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளின் வாமன அவதாரத்தை நினைவு கூறும் வகையில் விழா கொண்டாடுகின்றனர். இதையெல்லாம் பார்க்கக் காணக் கண்கோடி வேண்டும் என்கிறார்கள், விபரம் அறிந்தவர்கள். காட்கரை அப்பன் என்பதுதான் மூலவரின் திருநாமம். தாயார் பெயர் என்ன தெரியுமா? பெருஞ்செல்வ நாயகி. இதைவிடத் தூய தமிழ்ப்பெயர் எங்கேயாவது இருக்க முடியுமா? இங்கே பெருமாள் கபில முனிவருக்கு காட்சி கொடுத்திருக்கிறார். இதுவொரு வாமனத் தலம். மகாவிஷ்ணு மாவலி சக்கரவர்த்திக்கு எப்படி காட்சி கொடுத்தாரோ அப்படியே தத்ரூபமாக இங்கே காணலாம்.

இயற்கை எழில் கொஞ்சுகிற நம் நெஞ்சுக்கு மிகவும் நேசமாக இருக்கும் இடம் திருகாட்கரை. பார்க்கும் இடமெல்லாம் பச்சைப்பசேலென புல்வெளிகள். கண்களுக்கு பெருவிருந்து, மனதிற்கு மகிழ்ச்சி. கோயிலின் உள்ளே நாம் கேட்டதை கேட்கப் போவதை அறிந்து தரத் தயாராக இருக்கும் பெருமாள் காட்கரை அப்பன். தாயார் பெருஞ்செல்வ நாயகி சாதாரண நாயகி இல்லையாம். பெருஞ்செல்வ நாயகியாம் இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஞானத்தந்தையாகிய நம்மாழ்வார் மனம் உருகி உருகி இந்தப் பெருமானையும் தாயாரையும் ஏற்றிப் போற்றுகிறார். காணக்கிடைக்காத அந்தப் பாசுரம் இதோ...

‘‘உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி;
பெருகுமால் வேட்கையும்; என்
செய்கேன் தொண்டனேன்’’

தெருவு எல்லாம் காவி கமழ் திருகாட்கரை மருவிய மாயன்  தன் மாயம் நினைதொறே? திருகாட்கரை தெருக்களில் செங்கழுநீர்ப் பூக்களின் மணம் சிறந்து விளங்கும். இங்கே எழுந்தருளியிருக்கிற மாயோனான காட்கரை அப்பனின் செயல்களையும் குணங்களையும் எண்ணிப் பார்க்கிறபோது என் உள்ளம் உருகுகிறது. யாருக்கு வருகிறதாம் சாட்சாத் நம்மாழ்வாருக்கு. வெண்ணெய் உருகுவதுபோல் ஆண்டவன்பால் ஆழ்வார் மனம் உருகுகிறதாம். அவன் மேல் வைத்த ஆசைகள் எல்லை தாண்டிச் செல்கிறது. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் மீதும் தாயார் மீதும் மிகுந்த வேட்கையை வைத்து விட்டேன். 

நான் என்ன செய்வேன்? அவனுடைய மாயத்தை எப்படி தாங்கிக் கொள்வேன்? மருகுகிறார் ஏங்கித் தவிக்கிறார். தவிப்பும் தாகமும் உள்ளவனுக்கு திடீரென்று மிகச் சுவையான அதுவும் சுணைநீர் கிடைத்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் ஆழ்வாரின் தாகமும் தவிப்பும் இந்தப் பெருமாளை தரிசித்தவுடன் அடங்கியதாம். இத்தலத்து எம்பெருமானின் கல்யாண குணங்களைப் போற்றி புகழ்ந்த நம்மாழ்வார் மொத்தம் பதினொறு பாசுரங்கள் அருளியிருக்கிறார்.

‘‘தென்காட்கரை அப்பா நினைகில்லேன்
நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே’’
‘‘இராப் பகல் என் கண்ணன் என்று,
அவன் காட்கரை ஏத்துமே.’’
‘‘ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது’’ 

 என்று ஒவ்வொரு பாசுரத்திலும் திருகாட்கரை அப்பன் மேல் கொண்டுள்ள நெருக்கத்தையும் உருக்கத்தையும் எடுத்துச் சொல்கிறார். என்னவிதமான பெரும்பக்தி இருந்தால் இப்படி வார்த்தைகள் வந்து விழும். இல்லாவிட்டால் நம்மாழ்வாரை தமிழ்க்கூறும் நல் உலகம் இப்படி ஏற்றிப் போற்றுமா? ‘‘வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்’’தமிழர்களுக்கு கிடைத்த தங்கப் புதையல் நம்மாழ்வார். இது சத்தியமான உண்மை. நம்மாழ்வாரே தங்கப் புதையல் என்றால் அவர் நமக்கு பாசுரத்தாலும் பக்தியாலும் காட்டிய திருகாட்கரை அப்பனும் பெருஞ்செல்வ நாயகியும் தங்கச்சுரங்கம் அல்லவா. வாழ்வில் ஒருமுறையேனும் திருகாட்கரைக்குச் சென்று காட்கரை அப்பனையும் தாயார் பெருஞ்செல்வ நாயகியின் திருமுகத்தை தரிசியுங்கள். பேரானந்தத்தை உணர்வீர்கள். சுப்ரீம் கோர்ட் நீதிபதி சொல்வதுபோல், நம்முடைய சுப்ரீம் கோர்ட் நீதிபதி நம்மாழ்வாரே சொல்லிவிட்டாரே! வேறென்ன வேண்டும் நமக்கு. அந்தப் பார் போற்றும் பரந்தாமனான திருகாட்கரை அப்பனை கண்ணாரக் கண்டு களியுங்கள். அவனருள் பெற்று ஆனந்தமாக வாழ்வோம்.

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக