திங்கள், 2 டிசம்பர், 2019

ஆண்டாளின் தூய கனவு - அடியார்க்கடியவன், கேதாண்டபட்டி

உலகில் மனிதர்களாய்ப் பிறந்த நாம் இரவில் தன் நிலை மறந்து தூங்கும் போது அனேக கனவுகள் காண்கிறோம். இது அநேகமாக எல்லோருக்கும் நிகழ்வதுண்டு. சிலருக்கு பகலில் தூங்கும் போதும் கனவுகள் வருவதுண்டு. அதில் கெடுதல் ஆனதும், நல்லதும் மாறி மாறி வருவதும் உண்டு. பின்மாலை (விடியற்காலையில்) வேளைகளில் கனவு கண்டால் அது நிச்சயம் பலிக்கும் என்று பெரியோர் சொல்லுவார்கள். இதில் அநேகமாக நாம் காண்பதெல்லாம் கெட்ட கனவுகளே நிற்க. நாம் பல புராணங்கள் வாயிலாகவும் கனவு கண்டதைப் படித்து இருக்கிறோம்.


அது என்னவெனில், ஒரு சமயம் இலங்கையில் இது போல் நடந்து இருக்கிறது. திரிசடையானவள் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சீதையிடம் வந்து, தான் விடியற்காலையில் கண்ட கனவைப் பற்றி அப்படியே சொல்லுகிறாள். இது ஸ்ரீமத் ராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் வரும் விஷயமாகும். ஜானகியை நோக்கி, அம்மா, இனி நீங்கள் வருத்தப்பட வேண்டாம். உங்களுக்கு இனி நல்ல காலம் வரும் என்று நான் இன்று கண்ட கனவினால் நன்கு தெரிகிறது. ஒரு குரங்கின் மூலம் இந்த இலங்கை நகரம் எரிக்கப் படுவதாகவும், எல்லா இராக்ஷஸர்களும் அலறியடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடவும், இலங்கையர்கோன் எண்ணெய் தேய்த்துக் கொண்டு, கருப்பு வஸ்திரம் தரித்துக் கொண்டு தெற்கு நோக்கி ஓடுவதாகவும், பல அபசகுனங்களையும் கண்டேன். கூடிய சீக்கிரம் ஓர் நற்செய்தி உங்களுக்கு வரப்போவதாகவும் தெரிகிறது. ஆக இதனால் இலங்கை சீக்கிரத்தில் அழியப் போவதும் தெரிகிறது. நீங்கள் இனி கவலைப்படத் தேவையில்லை என சொல்லுகிறாள். இதைக் கேட்ட சீதையும் மனது சாந்தி அடைகிறாள் இப்படியாக திரிசடையின் கனவு இருக்கிறது. அநுமன் வருவதும், இலங்கைக் கொளுத்தப்படுவதும் தெரிகிறது. ஆக இதன் மூலம் கனவுகள் உண்மையை கூறுவதாகவும் நமக்குத் தெரிகிறது.


இதைப் போல் நாம் இங்கு மற்றொரு தெய்வீக கனவையும் பார்ப்போம்.ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த கோதையானவள் கோகுலவாசனான கண்ணனை அடைய நோன்புகள் நோற்று விரதம் இருக்கும் நாளில் ஒரு தினம் விடாமல் விடியற்காலையில் ஒரு நல்ல கனவு காண்கிறாள். அதை தூங்கி எழுந்த கோதையானவள் தன் அந்தரங்கத் தோழி ஒருத்தியிடம் கூறுகிறாள். 


என்னே அதிசயம் தோழி! நான் வெகு நாட்களாக ஆசைப்பட்டு கண்ணனை அடைய நோன்பு நோற்கும் இந்நாளில் இந்த நல்ல கனவு கண்டதைப் பற்றி வெகு ஆனந்தம் உண்டாகிறது. இந்த தூய கனவு பலிக்குமா என்று சொல்லுவாய் தோழி என்று தான் கண்ட கனவை தன் தோழியிடம் ஆதியோடு அந்தமாகக் கூறுகிறாள். இதை திவ்ய ப்ரபந்தமான நாச்சியார் திருமொழியில் 6ம் தசகத்தில் 10 பாசுரங்களால் பறக்கப் பாடியிருக்கிறாள். அதையும் நாம் இங்கு காணலாம். எம்பெருமானைப் பற்றிய கனவாகையால் இதற்கு ஆண்டாளின் தூய கனவு என்றும் சொல்லலாம்.


என் உயிர்த் தோழி : நாரணன் நம்பி அதி கம்பீரமாக ஆயிரம் யானைக் கூட்டங்கள் மத்தியில் தானும் ஒருவனாக அழகிய கரிய திருமேனியோடு வீதியில் வலம் வரவும், அதனை முன்னிட்டு எல்லோர் வீடுகளிலும் பூரண கும்பங்களும், பந்தல்களும் போட்டு தோரணங்களும் கட்டி அதி உற்சாகமாக அநேகவித அலங்காரங்களும் செய்யவும், என்னை பந்தலுக்கு அழைத்து வருகிறாள் என் நாத்தனார்.


அடுத்து ஸ்ரீராமபிரான் பட்டாபிஷேக மகோத்ஸவத்தில் வானர வீரர்கள் எப்படி நான்கு திசைகளிலும் சென்று புண்ணிய தீர்த்தம் கொண்டு வந்தார்களோ, அதுபோல் அநேக வைதிக பிராஹ்மணர்கள் எங்கள் கல்யாணத்திற்காக நான்கு திக்குகளிலும் சென்று அநேக புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு வந்து அதை எங்கள் க்ஷேமாந்தமாக ஜபித்து அந்த தீர்த்தங்களினாலும் எங்களை ப்ரோக்ஷித்தார்கள். இன்னும் வேத வாக்கியங்களிலே எங்களை ஆசீர்வதித்து என் கையிலும், புனிதமான கண்ணன் கையிலும் காப்பு நாண் கயிறுகள் கட்டினார்களடி.


மேலும் அநேக இளம் மங்கையர்கள் தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு வரவேற்கும் இக்காக்ஷியை சொப்பனத்தில் கண்டேனடி மற்றும் அவனுக்கும், எனக்கும் முகூர்த்தம் நிச்சயித்து, அதற்காக நடக்க வேண்டிய ஜானவாசம் என்பது நடந்து மேற்கொள்ள அழகிய பந்தலின் கீழ் வந்து நிற்கிறான் கோவிந்தனாகிய என் நாயகன், பாளை, கமுகு முதலியவற்றினால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் அந்த பந்தலின் கீழ் மாதவன் வந்து நின்ற அழகு சொல்ல முடியாததாகும். மேலும் சொல்லுகிறேன் கேள். இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து நடக்க வேண்டிய கல்யாண விஷயங்களை என் பெற்றோர்கள், உறவினர்களுடன் பேசி, அது முடிந்தபின் எனக்கு நாத்தனாராக வரப் போகும் துர்க்கையின் கையில் கூறைச் சேலையைக் கொடுத்து எனக்கு உடுத்தச் செய்து பின்னும் தீபங்களையும், பூரண கலசங்களையும் மற்றும் புஷ்பம், சந்தனம் முதலான சுப வஸ்துக்களையும் எடுத்துக் கொண்டு மதுரையார் மன்னனின் அடி நிலை தொட்டு எதிர் நோக்கி அழைக்கவும் கண்டேனடி. இது சமயம் கண்ணனும் அதி கம்பீரமாக நடந்து வரவும் கண்டேனடி இன்னும் சொல்கிறேன் கேள். அநேக வாத்தியங்கள் முழங்கவும், வெள்ளை சுரி சங்கு முழங்கவும், முத்துக்களால் நன்கு அலங்கரிக்கப்பட்ட பந்தலின் கீழ் மைத்துனின் நம்பியாகிய மதுசூதனன் வந்து என் கையைப் பற்ற கனவு கண்டேன் தோழி.


என் பிரியத்திற்கு உரியவளே. இன்னும் நடந்ததைச் சொல்கிறேன் கேள். வேதம் ஓதும் அந்தணர்கள் வேத மந்திரங்களை நன்கு சொல்லவும், அக்னி காரியங்களை எல்லாம் செவ்வனே செய்து மத்தகஜம் போன்ற கோகுலவாசனும், நானும் அந்த அக்னியை வலம் வரவும் கனவு கண்டேன்.


இது மட்டுமல்லாமல் என்னுடைய ஏழேழ் பிறவிக்கும் பர்த்தாவாக வர இருக்கும் நாராயணன் நம்பி, தன் அழகான திருக்கரத்தால் என் காலைப் பற்றி அம்மி மிதிக்க கனவு கண்டேன். உயர்ந்தவனான அந்த நாரண நம்பி என் காலை பிடித்தல் தகுமோ சொல்லுவாயாக.


என் அருமை பாங்கியே, என் உடன் பிறந்தவர்கள் வந்து என் கைகளில் பொரியை இட அதை இரணியகர்பனான அச்சுதன் என் கையைப் பற்றி அக்னியில் இடவும் கனவு கண்டேன், கடைசியாக ஒன்று சொல்லுகிறேன் கேள். அநேக பந்துக்கள் எங்களை குங்குமக் குழம்பினாலும், குளிர் சந்தனத்தினாலும் அலங்காரம் செய்து, யானையின் மீது ஏற்றி ஊர்வலம் வரச்செய்து மஞ்சள் நீரை வாரி இறைக்கவும், எங்களை அபிஷேகம் செய்து வைக்கவும் நான் கனவு கண்டேன். 


இதற்குத்தான் பச்சைக் கல் பாணம் என்று சொல்லுவார்களோ, இப்படியாக தான் கண்ட கனவை தன் நெருங்கிய தோழியிடம் சொல்லி சந்தோஷமடைகிறாள். கனவு கண்ட கூடிய சீக்கிரத்திலேயே கனவும் பலித்து பரந்தாமனையே பாணிக்கிரஹணமும் பண்ணிக் கொள்கிறாள் ஆண்டாள்.


இப்பாசுரங்கள் பதினொன்றையும் இன்றளவும் ஸ்ரீவைஷ்ணவர்களுடைய கல்யாணங்களில் சேவிப்பதை கண்கூடாகக் காண்கிறோம்


ஆயன் விஷயமாக கனவு கண்ட வேயர் குலத்தவரான வில்லிபுத்தூராரின் பெண்ணான ஆண்டாளால் சொல்லப்பட்ட இப்பாசுரங்களை சொல்லுபவர்கள், கேட்பவர்கள் வாழக்கூடிய ஸத்புத்திரர்களைப் பெற்று இப்பூவுலகில் மகிழ்வெய்தி கடைசியில் ஸ்ரீ கண்ணன் திருவடி சேர்ந்து பெருவீடு சேருவர்.

நன்றி - ஶ்ரீரங்கநாத பாதுகா ஆடி 1991

கருத்துகள் இல்லை: