வியாழன், 2 ஜனவரி, 2020

உயர் பாவை - 18 - சதாரா மாலதி

உம்பர் கோமானே உறங்காதெழுந்திராய்


[அம்பரமே தண்ணீரே சோறே] மாளிகைக்குள் வந்த கோபிகள் நந்தகோபரையும் யசோதைப் பிராட்டியையும் கண்ணபிரானையும் நம்பிமூத்தபிரானையும் எழுப்பும் பாசுரம் இது. முன்கட்டில் நந்தகோபர். இடையில் யசோதை அடுத்து பிள்ளைகள். கணவனின் கட்டிலையும் பிள்ளையின் தொட்டிலையும் விடாமல் இருப்பது பெண்ணரசி யசோதைக்கு இயற்கை தானே! நந்தகோபரின் கொடைமேன்மையைச் சொல்வது முதலடி. மேனிக்கு நிறம் கொடுப்பதில் முதன்மையான ஆடைகளையும், [அம்பரம்-வஸ்திரம்] பின்பு தாரகமான தண்ணீரையும் போஷகமான உணவையும் வேண்டுவோர்க்கு வேண்டியபடி அறமாக அளிக்கவல்லவனே! என்றார்கள். 'அறம்செய்யும்' என்று அழுத்திச் சொன்னதால் புகழைப் பயனாகக் கருதாமல் கொடையையே பயனாகப் பேணிக் கொடுக்கின்றமை விளங்கும். யாசகர்களுக்கு கொண்டாலல்லது வாழ்வில்லை என்றது போல இவருக்குக் கொடுத்தாலன்றி உயிர் தரிக்காது என்பது இங்கு கருத்து.


அம்பரமே, தண்ணீரே, சோறே என்று ஏகாரம் போட்டு நிறைய விவரங்களைச் சொல்லிவிடுகிறாள் ஆண்டாள்.


நந்தகோபன் தானம் செய்யும்போது வஸ்திரம் மட்டுமே தானம் செய்பவன், சோற்றை மட்டுமே தானம் செய்பவன், நீரைமட்டுமே தானம் செய்பவன் என்பதுபோல ஒவ்வொன்றின் தானமும் குறைவின்றி பூரணமாயிருக்கும் வகையில் கொடுத்துத் தீர்ப்பவன் நந்தகோபன் என்று பொருள். உலகத்தில் சாதாரணமாக jack of all trades master of none என்றிருப்பவர்களே அதிகம். மேதைகளின் விஷயமே வேறு. அவர்கள் தம் துறை தவிர எத்தனையோ துறைகளிலும் அதே மேதைமை கொண்டிருப்பார்கள். வெளியில் தெரியவராது. எதைச் செய்தாலும் இது தான் அவர் தம் speciality என்பது போலச் செய்வர். வல்லுனர்களின் லட்சணமே அது தான். என் பேராசிரியர் தாவர இயலில் மிகப் பெரிய ஆசாமி. பெயரும் ஸ்வாமி [B.G.L.Swami] தான். பெங்களூர் குண்டப்பா லட்சுமண ஸ்வாமி. அவருடைய தந்தை குண்டப்பா மிகப் பெரிய கன்னட எழுத்தாளர். பெங்களூரில் ஒரு வீதியே அவர் பெயரில் உண்டு. என் பேராசிரியர் ஒரு முறை கல்லூரியில் வண்ணப்புடவைகளில் தாவர இயல் சித்திரங்களை வண்ணமாகத்தீட்டி ஒரு கண்காட்சி நடத்தினார். புடவை டிசைன் காரர்கள் சொக்கிவிட்டார்கள். அந்தத் தொழிலுக்கே அவர் போய் விடலாம் என்று கருத்து தெரிவித்தார்கள். அவர்கன்னடத்திலும் தமிழிலும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். எழுதினால் அவருடைய முழு நேரத் தொழில் எழுத்து என்கிற மாதிரி இருக்கும். அவர் வகுப்பெடுத்தால் ஆசிரியராகவே பிறந்தவர் என்றிருக்கும். காலை வேளையில் மாநிலக் கல்லூரி தோட்டத்தில் நீர் பாய்ச்சும்போது ஒரு நல்ல தோட்டக் காரனைப் போல இருப்பார்.
இங்கே நம் நந்தகோபர் அப்படி என்கிறாள் ஆண்டாள். அவர் வஸ்திர தானம் செய்தால் அதையே உயிர்மூச்சாக நினைத்து ஆயுள் சங்கல்பமாக செய்கிறார் என்று தோன்றுமாம். நீர்ப்பந்தல் வைத்தால் இவர் நேர்ந்து கொண்டு தண்ணளி செய்கிறார் தண்ணீரை என்று படுமாம். இவர் அன்னதானம் செய்ய ஆரம்பித்தால் ஏதோ அன்னதானத்தில் இவரைவிட்டால் வேறொருவர் பேரைத் தட்டிக்கொண்டு போய் விடக்கூடாது என்று முனைந்து அதிலேயே தன் சொத்து முழுக்கவும் சாய்த்து விட்டாற் போலத் தோன்றும்படிக்கு அபரிமிதமாகச் செய்வாராம். தனித்தனியே ஒவ்வொரு தானத்தையும் அளவில்லாமல் செய்யக் கூடிய நந்தகோபரே! எழுந்திரும்.என்றாள் ஆண்டாள்.


அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
நீர் செய்த தானம் எல்லாம் சிறக்கும்படி கண்ணனை எங்களுக்கு அனுமதி தானம் செய்து கொடும் என்பது இங்கு குறிப்பு.


எங்களுக்கு உண்ணும்சோறு பருகும்நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன். [வாஸுதேவஸ் ஸர்வம் என்றபடி] இவனைத் தராமல் ஒளித்தால் இவ்வளவு தானம் செய்த உம்முடைய கீர்த்தி விட்டுப் போகுமே உமக்கு என்கிறாள் ஆண்டாள். 'இவர் மகன் தூரஸ்தனாகிலும் பேர் சொல்லப் புடவை வழங்குகிறதும், இனிது மறித்து நீரூற்றுகிறதும், வேண்டடிசில்* உண்ணும் போதுகளிலே சோறு வாங்கி இடுகிறதும் இவர் வயிற்றில் பிறப்பாலேயிறே' என்பது ஆறாயிரப்படி.


மாளிகையில் வாசல் புறத்திலா நந்தகோபரின் அறை இருந்தது என்று கேட்கிறார்கள் பக்தர்கள். பின் என்ன? உள்ளுக் கிடக்கிறது வைத்த மாநிதியமும் தாம் எடுத்த பேராளனுமாயிருக்க காவல் காக்க வேண்டாமோ என்றார்கள் பூர்வாசிரியர்கள். [புதையல் எடுத்தவன் எண்ணி எண்ணிப் பார்க்கமாட்டானா?] அது மட்டுமில்லாமல் ஆய்ச்சிகள் களவு கொள்வார்கள் என்று பயம் தந்தைக்கு.

அடுத்து யசோதைப் பிராட்டியை எழுப்புகிறார்கள்.


கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்!
வஞ்சிக் கொம்பு போன்ற பெண்களுக்கெல்லாம் ஏதாவது பிரச்னையென்றால் முதலில் தான் முகம் வாடும் கொழுந்து போன்ற யசோதைப் பிராட்டியே! எங்கள் ஸ்வாமினியே! ஆயர்குலத்தின் மங்கல விளக்கே! நீ அறிந்தாயா? [கொடிக்கு நோயென்றால் இலைத்துளிர்க் கொழுந்து வாடி இற்று விழுந்து காட்டித்தரும். ஆக எங்கள் அவலத்தை கிருஷ்ண விரஹத்தை நீ அறிந்து கொண்டால் போதுமானது] எழுந்திருந்தாயா? [நீ கொழுந்தாகவும் விளக்காகவும் இருந்து ஆயர்குலக்கொழுந்தும் ஆயர்குல விளக்குமான கண்ணனை நாங்கள் அடையுமாறு தந்து உபகரிப்பாயா?]


அம்பரமூடறுத்து ஓங்கிஉலகளந்த உம்பர்கோமானே உறங்காதெழுந்திராய்
அண்டகடாஹத்தை ஊடறுத்து விஸ்வரூபமெடுத்து உலகளந்த அமரர் அதிபதியே! அந்தப் பரம்பொருளே அவதரித்த எம் ஆயர்பாடிக் கண்ணனே எழுந்திராய்! [மூன்றடி அளந்த அவதாரத்தை ஏன் சொன்னோமெனில் வேண்டாதவர் தலை மேலும் விலக்குகிறவர் தலை மீதும் வைத்த பாதத்தை வேண்டி வேண்டிப் பணிகிற எங்கள் தலை மீது வைக்கலாகாதா? உன்னை எப்போதும் பார்த்திருக்கும் இமையாத அமரருக்கு உகப்பன செய்த நீ உன்னைப் பார்க்க முடியாமல் துடிக்கும் அபலைப் பெண்களுக்கு அதற்கெனவே எடுத்த கிருஷ்ணாவதாரத்தில் முகம் காட்டாமல் உறங்கி இன்னும் தவிக்க விடலாமா? எழுந்திருக்க வேண்டாமா?]


கண்ணன் வாயைத்திறக்காமல் மெளனமாக இருந்ததும் இவர்களுக்கு சந்தேகமாகிவிட்டது. முறைதப்பி மூத்தவரை எழுப்பாமல் கண்ணனை எழுப்பிவிட்டோமோ என்ற பதட்டத்துடன்
செம்பொற்கழலடிச்செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய். என்றார்கள்.


நீ பொற்கால் பொலியவிட்டு கோகுலத்தில் பிறந்து உன் கால்நலத்தால் கண்ணனும் பிறந்தான். யாரைப் பிரிந்தாலும் உன்னைப் பிரியமாட்டான் கண்ணன். நடந்தால் குடையாகவும் இருந்தால் ஆசனமாகவும் படுத்தால் பாயாகவும் இருக்கவென்று லட்சுமணன் பின்னால் பிறந்து பெற்ற ஐஸ்வர்யத்தை எல்லாம் முன்னால் பிறந்து அள்ளிக்கொண்ட நம்பி மூத்தபிரானே! பலராமனே!
படுக்கை படுப்பவனோடு தூங்கிப் பார்த்ததில்லை. எங்கள் கிடக்கைக்கு இடமான படுக்கை கண்ணன், உன் தம்பி. அவனோடு அவன் படுக்கையான நீயும் உறங்காமல் எழுந்து வரவேண்டும்.


பலராமன் அண்ணனானது எப்படியெனில் - கோகுலத்திலிருந்த வஸுதேவ பத்தினியான ரோஹிணியின் வயிற்றிலிருந்த வாயுரூபமான ஆறுமாதத்துக் கர்ப்பத்தைக் கலைத்துவிட்டு வசுதேவரின் இன்னொரு பத்தினியான தேவகியின் வயிற்றிலிருந்த ஆதிசேஷாம்சக் கர்ப்பத்தைக் கொண்டுபோய் அந்த ரோஹிணியின் வயிற்றில் சேர்த்திட [மாயையின் கைங்கர்யம்] இங்ஙனம் வஸுதேவ பத்தினியருள் தேவகியின் கர்ப்பத்தில் [ஏழாவது கருவாக] ஆறுமாதமும் ரோஹிணியின் கர்ப்பத்தில் மற்றோர் ஆறு மாதமும் இருந்து பலராமன் பிறந்தான். தேவகியின் எட்டாவது கர்ப்பத்தில் கண்ணன் பிறந்து கோகுலத்தில் வளர வந்தான் என்பதால் பலராமன் அண்ணனானான்.


அது மட்டுமல்ல. சுக்ரீவன், அனுமான், குகன் விபீஷணன் என்று பலரும் லட்சுமணன் சிபாரிசால் இராமனைக் கிட்டினார்கள். அப்படி பலராமனைக் கிட்டி கண்ணனை அடையலாம் என்கிற உத்தேசம் இந்தப் பெண்களுக்கு. அதற்கும் மேல் இவர்களுக்கு நாகணை மிகப் பிரியம். கண்ணனோடு நல்ல உறவாயிருக்கிற காலத்தில் 'நடலையெல்லாம் அந்த நாகணைக்கே சென்று உரைத்தி' என்று மூத்தபிரானோடு சொந்தம் கொண்டாடுவார்கள். ஊடல் சமயத்தில் 'அந்தத் தீ முகத்து நாகணை' என்பார்கள். [மூஞ்சியைப் பாரு, அண்ணனும் தம்பியும் லச்சணம் தான்]


சீதைக்கு அக்கினிப் பிரவேசத்துக்கு நெருப்பு மூட்டியபோது லட்சுமணன் 'இன்னொரு முறை உனக்குத் தம்பியாய் பிறக்கமாட்டேன். உன்னை ஆணையிடும் அண்ணனாகத்தான் அவதரிப்பேன்' என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டானாம். அப்படிப் பெரியவனாக பிறவியெடுத்த ஆதிசேஷ அம்சம் பலராமன். பாம்பைப் போலவே புஸ்ஸென்று கோபம் வரும் அவனுக்கு ஆயுதம் கலப்பை. மிகவும் கோபக்காரனான பலராமன் ஒரு முறை பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த யமுனையைப் பார்த்து, 'ஓ,யமுனா, இங்கே வா' என்றான். யமுனைக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லாரும் தான் இருக்கும் பக்கம் வந்து தன்னை உபயோகிக்க இவரென்ன அவரிருக்கும் பக்கம் தன்னைக் கூப்பிடுகிறார் என்று திகைத்து ஒருவேளை மது மயக்கமாயிருக்கக்கூடும் என்று எண்ணி அலட்சியமாகத் தன் பாட்டில் நடக்கலானாள். பலராமனுக்குக் கோபம் வந்தது. 'நான் கூப்பிடுகிறேன் என்னை மதிக்காமல் நீ போகிறாயா?' என்றபடி கலப்பையைக் கையிலெடுத்து அதன் நுனியால் நதியைப் பிடித்து இழுக்க யமுனா நடுநடுங்கித் தன் திசையை விட்டு இவனிருந்த பாதைக்குப் பெருகி வந்தாள். அப்படியே கிருஷ்ணனின் புதல்வன் சாம்பன் துரியோதனன் மகள் லக்கணையைக் கடத்தி வரும்போது கெளரவ சேனைகள் சாம்பனைக் கட்டி உதைக்க பலராமன் அஸ்தினாபுரத்து மதிலையே கலப்பையால் அசைத்து மதில் மேலுள்ள நாஞ்சில் என்ற உறுப்பைக் கொக்கி போல் மாட்டி யமுனையில் கவிழ்த்து விடவிருக்க தகராறைக் கைவிட்டனர் கெளரவர். அவ்வளவு பெருமைக்குரிய பலராமனையும் எழுப்பினார்கள். 


*பக்தவிலோசனத்து வேண்டடிசில் உண்டது - கண்ணனும் பலராமனும் ஒருமுறை யமுனைக் கரையில் நிறைய ஆடு மாடுகள் பிள்ளைகளுடன் மிகக் களைத்து உட்கார்ந்தபோது சிறுவர்கள் பசிக்கிறது என்றார்கள். கண்ணன் அருகாமையில் சில ரிஷிகள் ஆங்கிரஸ் என்ற யாகத்தைச் செய்வதாகவும் அங்கு போய் தன் பெயரையும் பலராமன் பெயரையும் சொன்னால் ஆகாரங்களைக் கொடுப்பார்கள் என்றும் சொல்லி சிலரை அனுப்பினான். பிள்ளைகள் அப்படியே போய் ரிஷிகளிடம் சொல்ல அவர்கள் கண்டு கொள்ளவேயில்லை. பிள்ளைகள் திரும்பி வந்து சொல்ல கண்ணன் புன்னகைத்து இந்தமுறை ரிஷிபத்தினிகளிடம் நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்றான். ரிஷிபத்தினிகள் விஷயம் கேட்டுப் பதறித்துடித்து அறுசுவை அன்னங்களோடும் நல்ல பாத்திரங்களில் நிரம்பின பட்சணங்களோடும் எல்லாருக்கும் விருந்து செய்வித்து அனுப்பினார்கள். இது நாச்சியார் திருமொழியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


ஆண்டாள் திருவடிகளே சரணம்


நன்றி - திண்ணை ஜனவரி 2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக