வெள்ளி, 3 ஜனவரி, 2020

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 20 - கண்ணன் ரங்காச்சாரி

18


உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் 
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய் 
கந்தம் கமழும் குழலி கடை திறவாய் 
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் 
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின கண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட 
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


திருப்பாவை குரு பரம்பரை (அடியேன் மனத்தில் பட்டது)


வைகுந்தம் - நந்தகோபன் திருமாளிகை; எம்பெருமான் - ஸ்ரீ கிருஷ்ணன்; பெரிய பிராட்டி - நப்பின்னை (நீளா), பூமா பிராட்டி - கோதா நாச்சியார்; விஷ்வக்சேனர் - கோயில் காப்பான்; சேனை முதல்வன் - வாயில் காப்பான்; நம்மாழ்வார் (உய்யக் கொண்டார், மணக்கால் நம்பி உட்பட) - பலராமன்; நாதமுனி ( ஆள வந்தார், பெரிய நம்பி உட்பட) - நந்தகோபர்; யசோதா பிராட்டி - ராமானுஜர் (கண்ணனை உலகத்திற்குக் கொடுத்து ஆனந்திக்க வைத்தவள்).


வரிசைக் கிரமத்தில் வாயிற் காப்பான் தொடங்கி, ஒவ்வொருவராய் எழுப்பினாலும், ஏற்கனவே கண்ணனின் பேறுகை, கொண்டவளை அணுகாமல், நோன்பிருக்கும் கோபியர்கள் வேண்டியதைப் பெறுதல் சாத்தியமா?. இந்தப் பாடல் நப்பின்னைப் பிராட்டிக்கு ப்ரதான்யம் கொடுக்கும் வகையில் அமைந்தது.


எம்பெருமானுக்கு நம்மை எடுத்துக்காட்டும் பிராட்டியார் தயை பெறாமல், அவனை அடைய பெறுவது அசாத்தியமானது.


சீதாப் பிராட்டியின் திரு முலைகளைத் தீண்டிப் புண்படுத்தின பின்னரும் காகாஸுரனை எம்பெருமான் பிழைக்க விட்டது, அவன் தாயாரைச் சரணம் புகுந்ததால் தான். வாலிக்கோ, ராவணனுக்கோ வதம் ஏற்பட்ட முக்கியமானதோர் காரணம், பிராட்டி துணையின்றி ராமன் தனித்திருந்த போதில் இவர்களுடன் யுத்தம் நடந்ததால் தான்.


இருவரையும் சேர்த்தியில் வணங்கிய விபீஷண ஆழ்வான், பெரும் ஸுபிக்ஷம் கொண்டான்.
ஒரு சமயம், இவர்கள் ராமனுடன் போரிட்ட காலத்தில், சீதையும் உடனிருந்து, அவர்களும் 
சீதையையும், ராமரையும் சரணம் புகுந்திருந்தார்கள் என்னில் ராமாயணம் நடந்தே இருக்காது.
பிராட்டி தொடங்கி, எம்பெருமானையும் பிராட்டியையும் ஒரு சேர வணங்கிடும் வகையில் கோபியர் இந்தப் பாசுரத்தைச் சேவிக்கிறார்கள்.


'உந்து மத களிற்றன்' - மத் கஜம் என்னும் வகையில், மதம் பிடித்த யானையின் அசுர பலமும் மிடுக்கும் நிறைந்த நந்தகோபனைப் பாடுகிறார்கள். இவருடைய மகனான காரணத்தால் தான் கிருஷ்ணன், குவலய பீடம் என்ற யானையோடு போரிட்டு வென்றான், என்ற குறிப்பும் உண்டு. 'வாரணம் (ஆனை ) ஆயிரம் சூழ' என்று ஆயர்பாடியில் யானையும் பசுக்களும் சேர்ந்தே திரிந்து கிடக்குமாம்.


'ஓடாத தோள் வலியன்' - எதிரிகளோடு போர் செய்யும் போதினிலே புற முதுகுக் காட்டி ஓடாதவன். கிருஷ்ணன் செய்திட்ட குறும்புகளை, நந்தகோபரிடம் சென்று முறையிட விரும்பிய பெண்கள், நந்தகோபரின் தோள் வலிமையைக் கண்டு அஞ்சிக் கிடந்தார்கள்.


'பாஹு ராமஸ்ய சம்ஸ்ரிதா' - ராமனுடைய பரந்த தோள்களின் துணையில் இருந்த சீதா பிராட்டிக்கு அச்சம் சிறிதும் இருந்தது இல்லையாம்.


'நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்' - நப்பின்னைப் பிராட்டியை, வேறேதும் உறவு முறை சொல்லாது, நந்தகோபரின் மருமகளே என்றழைப்பதே நந்தகோபரின் வலிமைக்கும் பிரதாபங்களுக்கும் குறிப்பாகிறது.


நந்த கோபரும் நப்பின்னையும், ஒரு சிறு துரும்பால், கண்ணனுக்குத் துயரம் என்றால் கூட, விட்டுத் தராதவர்கள். 'ஸ்னுஷா தசரதஸ்யா ஹம்சத்ருசைதன்ய ப்ராதாபின:' என்று மாமனாரின் புகழாலே சீதா பிராட்டியை அடையாளப் படுத்துவத்தைப் போலே.


'ஹே கிருஷ்ண' என்று குழப்பம் தீர்த்து வைக்க அருச்சுனன் அழைத்த வண்ணம், கோபியர்கள் பிராட்டியை 'நப்பின்னை' என்று பேர் சொல்லி அழைத்து தம் மனக்கிடக்கையை வெளியிடுகிறார்கள்.


'கந்தம் கமழும் குழலீ' - சுகந்த பரிமளங்கள் நப்பின்னையின் குழலினுள் சேர்த்த காரணத்தினாலேயே வாசம் பெற்றதாம். 'மலரிட்டு நாம் முடியோம்' என்று விரதம் எடுத்த எங்களின் விரதத்தை, விரைவில் முடிக்க வழி செய் என்ற வகையில், நப்பின்னையின் நாறும் குழல் பற்றி கோபியர்கள் உரைக்கிறார்கள்.


'கடை திறவாய்' கிருஷ்ணனிடத்தும் பிராட்டியிடத்தும் தேங்கியிருக்கிற பரிமளத்திற்கு அணை போடாமல் நாங்களும் அனுபவிக்கும் வண்ணம், மதகைத் திறந்து விடு.


'வந்து எங்கும் கோழி அழைத்தன காண்' - ஒரு கோழி அல்ல, எல்லா இடத்திலும் கோழி கூவுவது விடிதலுக்கு அடையாளம் அன்றோ?


'மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்' - ஒரு சமயம் ஒரே வகை குயில்கள் கூவுவது ஒற்றைக் குயில் கூவலாக உறங்கிக் கிடப்பவர்க்கு கேட்டிடலாம் என்பதால், பல விதமான குயிலினங்கள் கூவியதாகப் பேசப் பெறுகிறது.


கூவி நிற்பன சாமக் கோழி என்று சொல்லிடக் கூடாதே என்பதால் பல வகை குயிலினங்கள் குறிக்கப் பெறுகின்றன. மாதவிப் பந்தல் என்னும் மலர்ந்த பூப் படுக்கையில் அமர்ந்து பறவைகள் கூவுவதும் விடிதலின் அடையாளம் அன்றோ?


'பந்தார் விரலி' ஓர் கையில் பந்தினையும், மற்றொரு கையில் கண்ணனையும் அணைத்த வண்ணம் உறங்கிக் கிடப்பவளே. நப்பின்னைக்கு கண்ணன் போக உபகரணம் (இன்பப் பொருள்), பந்து லீலா உபகரணம் (விளையாட்டுப் பொருள்). கண்ணனுக்கு நாரம் (மனிதன்) ஒரு கையில், அயனம் (உலகம்) இன்னொரு கையில்.


நப்பின்னையே! நீயும் கண்ணனும் விளையாடும் பந்து விளையாட்டில் நாங்களும் பங்கு பெறக் கூடாதோ?


'உன் மைத்துனன் பேர் பாட' - நீங்கள் இங்கு வந்த காரியம் என்னவோ என்று கேட்ட நப்பின்னையிடம், உன் காதலன் கண்ணனின் பேர் பாடத் தான் வந்திருக்கிறோம் என்று உரைத்திடவும், உள்ளே வர அனுமதி கிடைக்கவும்,


'செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப' - நீங்கள் அஞ்ச வேண்டாம் என்ற அவளின் அபய ஹஸ்தம். பந்தினையும் கண்ணனையும் அணைத்துச் சிவந்த கைகள். மழை தரும் மேகம் ஒலிப்பது போல வளையல் ஒலி எழுப்ப,


'வந்து திறவாய்' - கருணையோடு வந்து திறந்திடுவாய், யந்திரங்கள் எதுவும் இல்லாமல், அழகாய் நடந்து வந்து,


'மகிழ்ந்தேலோர் எம்பாவாய்' - நாங்கள் மகிழும் வண்ணம் செய்வாய் பெண்ணே.


ஆண்டாள் திருவடிகளே சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக