வெள்ளி, 3 ஜனவரி, 2020

உயர் பாவை - 19 - சதாரா மாலதி

உந்துமதக்களிற்றன் ஓடாத தோள்வலியன்


'பொழிகின்ற மதத்தைக்கொண்ட யானைகளை உடையவனும் போர்க்களத்தில் தோற்றுப் புறமுதுகிட்டு ஒடாத அளவு தோள்பலம் படைத்தவனும் ஆன நந்தகோபன் மருமகளே! நப்பின்னை!' என்று அழைத்து கிருஷ்ணாவதாரத்தில் பிராட்டியான [யசோதையின் சகோதரன் கும்பன் மகள்] நப்பின்னையைக் கூப்பிடுகிறாள் ஆண்டாள்.


சிலபெண்கள் தம் பிறந்தகத்தில் பாலாய் ஓடிற்று தேனாய் ஓடிற்று என்பார்கள். மிகச் சில பெண்கள் புக்ககத்தில் தாம் நுழைந்த சமயத்தில் அப்படி ஏதேதோ இருந்ததாகப் பின்வரும் ஓரகத்தியருக்குக் கதை சொல்வார்கள். அந்தவீட்டு மகள்களும் மகன்களும் பேசாமலிருக்க இவர்கள் கதையாகச் சொல்வார்கள் தமக்கு அதிகம் தெரிந்தது போல. 


அப்படி ஆண்டாள் நந்தகோபன் குறித்து வள்ளல் என்கிறாள். யானைகட்டிப் போரடித்த விவசாயி என்கிறாள். தோற்காத போர்வீரன் என்கிறாள். இதெல்லாம் நிஜமா? அல்லது இதெல்லாம் புருஷன் மேலும் புக்ககத்தின் மீதும் தீராத பாசம் வைத்த பெண்களின் மீதுணர்ச்சி வெளிப்பாடா? என்று கேட்டார்கள் வாசகர்கள். ஆண்டாள் சொன்னால் சரியாகத்தானிருந்திருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள் பூர்வாசிரியர்கள். எப்படியெனில் உத்தமப் பெண் தன் கணவனைத் தனக்காக்கிக் கொடுத்த மாமன் மாமியைக் கொண்டாடாமல் இருக்க மாட்டாள். சீதை அப்படி அசோகவனத்தில் அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். 'என் மாமனார் மட்டும் இப்போது உயிருடன் இருந்திந்தால் என்னை இந்த நிலையில் விட்டு வைத்திருப்பாரா?' என்று வருந்திப் பேசியிருக்கிறாள். தந்தை ஜனகன் உயிரோடிருந்தும் அவனைப் பற்றி அந்த இடத்தில் பேசவில்லை. கணவனால் வந்த பந்தம் என்பதாலும் கெளரவம் சார்ந்த பந்தம் என்பதாலும் அப்படி அதில் ஈடுபடுகிறார்கள் என்று தோன்றுகிறது.


நந்தகோபன் அப்படி செல்வாக்கு பெற்றிருக்கத் தடையில்லை. இல்லாவிட்டால் வடமதுரை அரச வம்சத்து வசுதேவர் இவர்க்கு நண்பராக இருந்தமை எப்படி சாத்தியப்படும்? நந்தகோபன் இடையராக இருந்தும் யானைகள் உடையவராகவும் போர்வீரராகவும் இருந்ததால் தான் கம்சன் கூலிப்படை வைத்து அங்கங்கு குழப்பம் விளைவிக்க முடிந்ததே தவிர நேரடியாகப் படையெடுத்து இடையர் தலைவனைக் கண்ணனோடு கூண்டோடு அழிக்க முற்பட தைரியம் வரவில்லை என்கிறார்கள், பூர்வாசிரியர்கள்.


ஆக நப்பின்னை யாருடைய பேரைச் சொன்னால் பெருமைப் படுவாளோ அந்த மாமனாரின் பேரைச்சொல்லி இன்னாரின் மருமகளே என்று அழைத்தார்கள். கோகுலத்தில் நந்தகோபர் மருமகள் எத்தனையோ பேர், நான் ஒருத்தி தானா என்று அவள் குழம்பாமல் இருக்க அவள் பெயரையிட்டு அழைத்தார்கள். முறைப்பெண்ணான அவளைக் கும்பன் விதித்தபடி ஏழு எருதுகளை அடக்கி [அது தான் பரிசம்] மணந்து கொண்டான் கண்ணன். அதோடு நில்லாமல் நப்பின்னை சின்ன வயதிலிருந்தே கூடவே விளையாடி வீட்டுக்கு வந்து போக இருந்தவள். கண்ணனைக் குளிக்கவைக்கு முன் யசோதை சீக்கிரம் குளித்துவிடு, கொஞ்சம் நேரத்தில் அந்தப் பெண் வந்து விடுவாள் 'கண்டால்நகும்' பார்த்துச்சிரிப்பாள் என்று பயமுறுத்தும் அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவள். அந்த நப்பின்னை இங்கு அழைக்கப் படுகிறாள்.


பிராட்டி என்கிற புதிய அதிகாரியை ஆண்டாள் இந்தப் பாடலில் அறிமுகம் செய்கிறாள். பரமன் தரும் பேற்றுக்குப் பிராட்டியின் புருஷகாரம் தேவைப்படுகிறது என்று சொல்கிறாள். பிராட்டி என்கிற அதிகாரி ஜீவனுக்கு எப்போதும் சாதகமாகவே அருள்புரியும் அதிகாரி. எனினும் அவளை மீறி பகவானைக் கிட்டக் கூடாது. அவளுடைய சேர்த்தியில் தான் பகவாணை அணுகவேண்டும் என்கிறது தர்மம். இது நாம் சொல்லிக் கொண்டு வரும் ப்ரேமை என்கிற இணை நாடகத்துக்கு எப்படிப் பொருந்திவரும் என்று கேட்டால் ராசக்ரீடை தத்துவத்தை ஞாபகப் படுத்திக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு ஜீவக் கூறுக்கும் ஒரு பரமம் காத்திருக்கிறது. பிராட்டி ஜீவ பரம சம்பந்தத்தின் பாலம்.


'நீ விடவேண்டியதைவிட்டு என்னைப் பற்றினால் நான் உன்னை ரட்சிக்கிறேன் அஞ்சாதே' என்பது பகவானுடைய அபயப்ரதானம். பிராட்டியின் அபயப்ராதனம் 'நீ உன் பாபத்தைக் கண்டும் அஞ்சவேண்டாம், பகவான் தண்டிப்பான் என்கிற அவனுடைய சர்வாதிகாரம் கண்டும் பயப்படவேண்டாம், ருசி உண்டானபோதே நீ பகவானைப் பற்றலாம். நானிருக்கிறேன், நான் சொல்கிறேன் அவனுக்கு' என்பது.பிராட்டி புருஷகாரத்தால் அதாவது பிராட்டி இணைந்திருக்கும் நிலையில் பரமனை அணுகுவது ஜீவனுக்கு மிகவும் நல்லது என்று சொல்லப் படுகிறது.


எனக்குத் தெரிந்தவரை பிராட்டி [தேவி] என்று சொல்லப்படுகிற இந்து உருவகம் கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட personification of good and noble things [the God] உருவகத்தின் female counterpart. அதாவது மென்மையான betterhalf. இந்துவல்லாதார் கேலிசெய்யும்படிக்கு நம் கடவுளர் பெண்பித்து கொண்டு திரிபவர் என்பதல்ல. பெண் தன்மை ஆணுக்கும் ஆண் தன்மை பெண்ணுக்கும் எல்லாவிடத்திலும் உண்டு. இங்கு கட்டுச்செட்டான பெருமாளின் பெண்தன்மை அதாவது empathy பிராட்டியின் வடிவில் கூடவே இருக்கிறது. பரீட்சையில் பெயிலான மகனைத் தந்தை கண்டிக்கும்போது தாய் கூடவே இருந்து 'அன்றெல்லாம் அவனுக்கு மலேரியா, நிமோனியா' என்று வாயில் வந்ததைச்சொல்லி பத்துநாள் முன்பின் வந்ததை எல்லாம் பரீட்சை சமயமே வந்ததாக இட்டுக்கட்டி தந்தையிடம் அடி வாங்காமல் காப்பாற்றுகிற உதாரணமே இதுக்குப் போதும்.


பூடகங்களைப் புரிந்தும் புரியாதது போல நடிப்பது எதிர் முகாமுக்கு சாதகமாயிருக்கலாம். ஆனால் இந்து தர்மத்தை அனுசரிப்பவர்கள் உருவகங்களைப் புரிந்து வைத்து ஆண்டாள் போல கற்பனையை நீட்டி அதை enjoy செய்யவேண்டும். அப்படி அழகான நப்பின்னை புருஷகாரத்தை அருமையாகச் சொல்கிறாள் ஆண்டாள். 


உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் 
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய் 
கந்தம் கமழும் குழலி கடை திறவாய் 
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் 
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின கண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட 
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


நந்தகோபர் மாளிகையில் நந்தகோபர், யசோதை, பலராமர், கண்ணன் எல்லாரையும் எழுப்பி கண்ணன் அறை வாசலில் நின்று முறை தப்பி உம்பர்கோமானை எழுப்பினோமே நப்பின்னை இருக்க என்று ஞாபகம் வந்துவிட நப்பின்னையை எழுப்புகிறார்கள்.


நப்பின்னை தான் உள்ளேயிருப்பதைக் காட்டிக் கொள்ளவேண்டாம் என்று மெளனமாக இருக்க, பெண்கள் 'உன் இருப்பைச் சொல்ல உன் குழல் வாசம் வந்து விட்டதே!' என்பதைக் குறிப்பாலுணர்த்தி கந்தம்கமழும்குழலீ! என்றார்கள். [வாசனை, மலர், அதரங்கள், இடை, வரிசையில் முலை விட்டுப் போயிருந்தது எல்லா அவயவங்களும் என்று சேர்த்துக் கொள்ளவும். எல்லாமே பக்தி என்று முன்பே சொல்லியிருந்தேன்] சரி வருகிறேன் பொழுது விடிந்ததா? என்றாள் நப்பின்னை. 'கோழி வந்து வந்து எங்கும் கூவி நிற்கின்றன. குருக்கத்திக் கொடிப் பந்தலில் ஊஞ்சலாடிக்கொண்டு குயில்கள் பலமுறையும் கூவின' என்று இரு அடையாளங்கள் சொன்னார்கள் விடிந்ததற்கு.


கோழி கூவுதல் இவர்களுக்குப் பலவகையிலும் சங்கேதம். அதெல்லாம் நப்பின்னைக்குத் தெரிய நியாயமில்லை. களவொழுக்கத்தில் ஒரு முறை கோழி கூவினபோது கண்ணன் இருட்டில் ஒரு கோபியை சந்திப்பதும் அடுத்தமுறை கோழி கூவினதும் அவளை விட்டுப் பிரிவதும் ஆக முன் தீர்மானம் செய்து கூடுவதும் பிரிவதும் உண்டு. 'கோழிகூவுமென்னுமால் தோழி நானென்செய்கேன் ஆழிவண்ணர் வரும்பொழுதாயிற்றுக் கோழிகூவுமென்னுமால்' என்றாற்போல சாமக் கோழி கூவுவதும் அடுத்துக் கூவுவதும் பாதிப்பு என்று அறியாத நப்பின்னைக்குக் கோழி அழைப்பதைத் தமக்குள் ரசித்து அது புரிந்த மற்ற தோழிப் பெண்கள் ரசிக்கச் சொல்கிறார்கள். 


நப்பின்னை 'அதெல்லாம் இல்லை பொழுது விடியவில்லை' என்று சும்மா இருந்தாள் நப்பின்னை.
கொத்தலர் காவின் மணித்தடங்கண்படை கொள்ளுமிளங்குயிலே! என் தத்துவனை வரக்கூகிற்றியாகில் தலையல்லாற்கைமாறிலேனே! என்று தூங்கிக் கொண்டிருக்கிற குயில்களை எழுப்பிக் கூவச் சொல்லி வருத்துகிறவர்கள் ஆயிற்றே! நீங்கள்! குயில் கூவிப் பொழுது விடிந்ததை எப்படி நம்புவது?


அப்படி இவர்கள் சொன்னபடி அந்தக் குயில்கள் கூவாமல் போயிருந்தால். இன்று நாரணனை வரக்கூவாயேல் இங்குற்று நின்றுந்துரப்பன்' என்று அவற்றைச் சோலையிலிருந்து துரத்தி விடுவதாக பயமுறுத்தினீர்களே அதற்கு அஞ்சி பாவம் போல் அந்தக் குயில்கள் கத்தியிருக்கும் என்று நினைத்தபடி இப்போதும் மெளனமாக இருந்தாள் நப்பின்னை. பெண்கள் சாவித்துவாரம் வழியாக நப்பின்னை படுத்திருப்பதைப் பார்த்தார்கள்.


பந்தார்விரலி உன் மைத்துனன் பேர் பாடச் செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிக்க வந்து திறவாய் மகிழ்ந்து என்றார்கள்.


கண்ணபிரானும் நப்பின்னையும் இரவில் பந்தடித்து விளையாடினர். கண்ணனைத் தோற்கடித்தாள் நப்பின்னை. தனக்கு வெற்றி தந்த பந்தைக் குழந்தைப் பெண் இறுகப் பற்றிக் கொண்டு தூங்கினாள். பந்து இறுக்கின விரல்கள் பிரியவில்லை. அதைப் பார்த்த ஆய்ச்சிகள் ரசித்தார்கள். உனக்குப் பிரியமான அந்த பொம்மை வஸ்துவாக நாங்கள் இருந்திருக்கக் கூடாதா? என்கிறது போல. உன் கணவன் என்கிற பேரில் பரமன் இன்னும் பிரபலமானவன் எங்களைப் பொறுத்தவரை. [உன் மைத்துனன் பேர் பாட] [ஒரு பிரபல பாடகர் தம் வேட்டகத்துக்குப் போயிருந்தபோது அவருடைய புகழையெல்லாம் தாண்டி அவர் அங்கு 'ஆச்சாள் அகமுடையான்' என்பதாக அறிமுகப் பட்டதை வேடிக்கையாகச் சொல்லியிருப்பார். அது போல]


உன் கையில் பந்தைப் பார்த்தோம். என்னே உன் பெருமை. உனக்கு ஒரு கையில் நித்ய விபூதி ஒருகையில் லீலாவிபூதி. ஒரு கையில் சாட்சாத் எம்பிரான் ஒரு கையில் பொம்மை. ஒரு கையில் பரமன் ஒரு கையில் பொம்மை போன்ற ஜீவன் [அதாவது நாங்கள்] எமக்கும் பரமனுக்கும் இடையில் பாலம் போல நீ. என்பது புரிபட பந்தார்விரலி என்ற அழகியல் வாசகத்தைச் சொன்னார்கள்.


செந்தாமரைக் கையைச் சொன்னார்கள். கருணையால் சிவந்த கை பந்தை இறுக்கி இன்னும் சிவந்திருந்தது. சீரார் வளை என்பது கழலாத சரியான அளவுள்ள சரியாக சப்திக்கிற வளை. 'என்னுடைய கழல்வளையைத் தாமும் கழல்வளையே ஆக்கினரே' என்றாற்போல எங்கள் கையில் வளை கழல்கிறது. உன் கையில் சீராக இருக்கிறது.


நாங்களாக உள்ளே வர மாட்டோம். கதவு தாள் நீக்கியிருந்தாலும் நீ எழுந்து வளை ஒலிக்க வந்து திறந்துகொடுத்து உன்னால் அடையும் பேற்றையே விரும்புகிறோம். என்றார்கள்.


ராட்சசிகளும் காகாசுரனும் தன்னை மன்றாடாத போதும் தானாகவே அவர்களுக்குப் பரிவுரை செய்யும் அளவு கருணை மேலிட்டவள் பிராட்டி.


கிருஷ்ணாவதார சாரபூதையான நப்பின்னைப் பிராட்டியை எழுப்பி இந்தப் பாசுரம் முடிந்தது.


ஆண்டாள் திருவடிகளே சரணம்


நன்றி - திண்ணை ஜனவரி 2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக