திங்கள், 2 டிசம்பர், 2019

மயக்கும் தமிழ் - 24 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

என் அமுதினைக் கண்ட கண்கள்!

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே 
விண்டே ஒழிந்த வினையாயின எல்லாம்
தொண்டேசெய்து என்றும் தொழுது வழியொழுக 
பண்டே பரமன் பணித்த பணிவகையே. 

திருவாய்மொழி

நம்மாழ்வாரின் தித்திக்கும் தேன்தமிழான திருவாய்மொழிப் பாசுரத்தில் இருந்து ஒரு நல்முத்துப் பாசுரம் இது. கண்டேன் கமல மலர்ப்பாதம் என்ற வரிகள்  உயிரூட்டமுள்ள, அர்த்தச்செறிவுள்ள, அதிஅற்புதமான பாசுரம். வைணவத்தைப் பொறுத்தவரை பிரபத்தி என்கிற பரிபூரண சரணாகதிதான் மிகவும் முக்கியமான  ஒன்று. இறைவனின் திருவடியைப் பற்றுவது என்பது தான் வாழ்வின் மிக முக்கிய குறிக்கோள். இதைத்தான் பாசுரத்தில் முதல் வரியாக கண்டேன் கமல  மலர்ப்பாதம்; அதாவது, இறைவனின் திருவடி தரிசனம் தனக்கு சர்வ நிச்சயமாக கிடைத்து விட்டது என்பதைத்தான் பார்த்தாகி விட்டது. அதில் எந்தச் சந்தேகமும்  கிடையாது. சாதாரணமாக நம்முடைய அன்றாட வாழ்வில் ஒருவரிடம் நமக்கு ஏதாவது வேலை ஆக வேண்டும் என்றால், ‘போய் அவர் காலைப் பிடி, வேலை  முடிந்து விடும்’ என்று இயல்பாகச் சொல்வதுண்டு. 


பஞ்சத்திற்கு படியளக்கும் ஒருவரின் காலைப் பிடிக்கும் நமக்கு, பாருக்கே இந்த உலகத்திற்கே படியளக்கும் பரந்தாமன் காலைப் பிடித்தால் இம்மைக்கும்  மறுமைக்கும் ஏற்றம் உண்டு, அதுதான் நாம் உய்யும் ஒரே வழி என்கிறார் நம்மாழ்வார். இறை அனுபவத்தை நேரில் பெறுவது என்பது எவ்வளவு பெரிய பாக்கியம்,  அதற்கான தகுதிகளைப் பெறுவது என்பது சாதாரணமான ஒன்றா என்ன? அதுவும் எப்படியாம்? கடவுளைக் காண தவம் செய்து கொண்டு இருக்கிறேன். என்  தவத்தை மெச்சி, புகழ்ந்து இறைவன் தன்னுடைய தரிசனத்தை தருவான் என்று ரிஷிகளும் மகான்களும் சொல்வார்கள். ஆனால், நம்மாழ்வார் என்ன சொல்லி  பாசுரத்தை தொடங்குகிறார் தெரியுமா? கண்டேன் கமல மலர்ப்பாதம் என்கிறார். கண்டேன் அதாவது, எம்பெருமானின் திருவடியைப் பார்த்தாகி விட்டது. பெருமாள்  திருவடி முதல் திருமுடி வரை கண்ணாரக் கண்டுகளிப்பதுதான் சாலச்சிறந்தது.

இதே நம்மாழ்வார் வேறொரு பாசுரத்தில் ‘‘கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் எல்லோரும் வாரீர்’’ என்கிறார். பேயாழ்வார்  ‘‘திருக்கண்டேன்’’ என்று எடுத்த எடுப்பிலேயே தாயாரோடு பெருமாளை அதாவது மகாலக்ஷ்மியோடு எம்பெருமானை பார்த்து விட்டேன் என்று பரவசப்பட்டு  தன்னுடைய பாசுரத்தை தொடங்குகிறார். திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் பல இடங்களில் இறைவனைப் பார்த்து பரவசப்பட்டதை பாசுரங்களில்  தெரியப்படுத்தி உள்ளார்.‘‘உன்னைக் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே’’ என்று மனம் உருகுகிறார். அரங்கன் மீது மாளாக் காதல் கொண்ட  திருப்பாணாழ்வாரின் இறை பக்திக்கு ஈடு இணை ஏது? இனத்தால் வருவதல்ல பக்தி, குணத்தால் சிறப்பதுதான் பக்தி. அதுதான் நம்மை ஆண்டவனிடம்  அழைத்துச் செல்லும் என்பதை தன்னுடைய திட பக்தியின் மூலம் இந்த ஊருக்கும் உலகிற்கும் தெரியப்படுத்தியவர், திருப்பாணாழ்வார்.

நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் திருப்பாணாழ்வார் மொத்தம் பத்து பாசுரங்களைத்தான் படைத்திருக்கிறார். அத்தனையும் அற்புதங்கள். சர்வ லோகத்திற்கும்  நாயகனான ஸ்ரீரங்கத்தில் துயில் கொண்டுள்ள அரங்கமா நகருளானை அப்படியே நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். கொண்டல் வண்ணனை  என்று ஆரம்பிக்கும் பாசுரத்தில், ‘‘என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே!’’இறைவனைப் பார்த்தாகி விட்டது! இனி வேறென்ன?  என்கிறார் திருப்பாணாழ்வார். மற்றொரு பாசுரத்தில், ‘‘நீள்மதிள் அரங்கத்து அம்மான், திருக்கமல பாதம் வந்து என்கண்ணினுள்ளன ஒக்கின்றதே.!’’ அந்த அழகிய மணவாளனுடைய திருவடித் தாமரைகள், அதாவது தாமரை இதழ்கள் போன்ற அவனுடைய பட்டுப் பாதங்கள் தாமாகவே என் கண்களுக்குள் புகுந்து  கொண்டு என்னை களிப்படைய வைக்கிறது, என்கிறார். 

கண்ணைத் திறந்து பார்த்தாலும் அவனுடைய அற்புதப் பாதங்கள்; கண்ணை மூடினாலும் அவனுடைய பாதங்கள் மனக்கண்ணில் தெரிகிறதாம் ஆழ்வாருக்கு!

பொய்கை ஆழ்வார் தன்னுடைய முதல் திருவந்தாதியில் அற்புதமான பாசுரம் ஒன்றில்...

‘‘தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுது இன்றி
மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கைதொழுவான்
அந்தரம் ஒன்று இல்லை அடை’’

பகவானின் மேல் ஆசை வைக்க வேண்டும் என்று தன் நெஞ்சுக்கு சொல்லுகிறார், பொய்கையாழ்வார். நான் சொன்னபடி கேட்கும் என் நெஞ்சே நீ வாழி  என்கிறார். இங்கேதான் ஒரு பெரிய சூட்சுமம் இருக்கிறது? நம்மில் எத்தனை பேருக்கு நாம் சொன்னபடி கேட்கும் நெஞ்சு இருக்கிறது? நெஞ்சமே என்றால் இங்கே,  மனசு, புத்தி, சிந்தனை இப்படி எப்படி வேண்டுமானாலும் நாம் பொருள் கொள்ளலாம். நாம் நல்ல குருவை அணுகி குற்றமின்றி மந்திரங்களைக் கற்றுக்  கொள்வதும் எம்பிரானுடைய திருவடிகளை நாம் கைகூப்பி இடைவிடாமல் பக்தி செய்ய வேண்டும் என்கிறார். இதில் வீணாக  நேரம் கடத்த வேண்டாம்.  காலக்கழிவு செய்வதற்கு நேரம் இல்லை என்கிறார், ஆழ்வார்.‘‘மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கைதொழுவான் அந்தரம் ஒன்று இல்லை அடை’’  அதாவது, மகாலட்சுமியோடு கூடிய எம்பெருமானை வணங்குவதற்கு நேரம் காலம் பார்க்க வேண்டுமா என்ன? நேரத்தையும் காலத்தையும் உண்டு  பண்ணுகிறவனே அவள்தானே! வாழ்வு சிறக்க, வளம் பெருக, குணங்கள் சிறக்க, மனம் மாசுபடாமல் இருக்க, சிந்தனைகள் விரிவடைய வேண்டுமானால் ஆழ்வார்  சொல்லும் இந்த ஒரு அற்புத வரிகள் தான் மாமருந்து.

‘‘மால் அடியே கை தொழுவான்’’ திடமான நம்பிக்கை, தீர்க்கமான முடிவு, உயர்ந்த சிந்தனை எல்லாம் ஒருங்கே பெற வேண்டுமானால் அவனை சரணாகதி  அடைந்தால்தான் கிடைக்கும் என்கிறார். அரசனாக இருந்து கோலோச்சிய குலசேகராழ்வார் தன்னுடைய பெருமாள் திருமொழியில் நெஞ்சை உருக்கும் பாசுரம்  ஒன்றில் இப்படிச் சொல்கிறார்... ‘‘பொன்னி அணி அரங்கத்து அரவணையிற் பள்ளி கொள்ளும் நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள் நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே’’ இந்தப் பாசுரத்தைப் படிக்கும் நமக்கே கண்களில் ஆனந்தக் கண்ணீர் வரும்போது, பரமனுக்கு பக்தியோடு படைத்த  குலசேகராழ்வாருக்கு கண்ணீர் பெருக்கெடுத்து வந்ததில் என்ன வியப்பு இருக்க முடியும்? இதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டுதான் நம் முன்னவர்கள், ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாத தரிசனம் பாவ விமோசனம்’ என்று மிக அழகாக, அருமையாக சொல்லி வைத்திருக்கிறார்கள்.

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக