உருவச் செஞ்சுடராழி வல்லானே! உலகுண்ட ஒருவா!
‘விண்ணுளார் பெருமாற்கு அடிமை
செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என்
செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய் கவி தன்னுளாய் பத்தியின்
உள்ளாய் பரமீசனே வந்து என்
கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய்
ஒன்று சொல்லாயே’
மேலே குறிப்பிட்டுள்ள பாசுரம் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம். கடலிலிருந்து ஒரு நல்முத்தைப் பெற்றதைப்போல அமைந்துள்ள பாசுரம் இது!
என்ன தமிழ், என்ன நடை, என்ன கவித்துமான அமைப்பு. எத்துணை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக படைக்கப்பட்ட அர்த்தம் பொருந்திய அருளமுதம் இது. ஞானத் தந்தையாகிய நம்மாழ்வாரின் திருவாய்மொழியானது வேதத்தின் பிழிவு இல்லையா? எவ்வளவு உருக்கத்தையும் நெருக்கத்தையும் இறைவனிடம் வைத்துப் போற்றுகிறார், நம்மாழ்வார். அதனால்தான் திவ்ய பிரபந்த பாசுரங்களை தூய துளசி தீர்த்தம் என்கிறார்கள், வைணவப் பெருமக்கள். ‘‘இசைமயமான பண்ணில் உள்ளவனே! நல்ல கவிதையில் இருப்பவனே! தூய்மையான பக்தியில் இருப்பவனே! எல்லாவற்றுக்கும் மேலான ஈசனே பரம்பொருளே! தத்துவத்தின் தலைமகனே! என் கண்களில் இருப்பவனே! நான் சொல்லும் சொல்லில் இருப்பவனே!
ஐம்புலன்களால் நான் படும்பாடு உனக்குத் தெரியாதா? மனம் என் வசத்தில் இல்லையே. காற்றைவிட அதிவேகமாக அலை பாய்ந்து கொண்டிருக்கிறதே என்ன செய்ய? சதா சர்வ காலமும் நான் உனக்கு அடிமை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், ஐந்து இந்திரியங்களும் விடுவேனா பார் என சவாலுக்கு என்னை அழைக்கின்றது. நான் என்ன செய்ய முடியும்? என்னுடைய தளர்ச்சியைப் போக்க இங்கு வந்து ஆறுதலாக ஒரு சொல் சொல்ல மாட்டாயா? என்று ஏங்கித் தவிக்கிறார் நம்மாழ்வார். அவர் மட்டுமா நாமும்தான். பாசுரத்தின் ஜீவநாடியான பகுதி எதுவென்றால் ‘‘அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை’’ என்ற பகுதிதான். உனக்கு அடிமை செய்ய நினைப்பது என்ன சாதாரண ஒன்றா? அதுவும் நித்ய சூரிகளின் தலைவனான உனக்கு, ‘‘விண்ணுளார் பெருமார்க்கு அடிமை செய்வாரையும்’’ பெரிய திருவடி போன்ற உன்னுடைய வாகனமான கருட பகவானுக்கே மனக்கலக்கம் ஏற்படுகிறபோது நான் எம்மாத்திரம் என்று தனக்குத்தானே கேள்வி கேட்டு விடை தேட முற்படுகிறார் நம்மாழ்வார்.
இதில் வியப்பு என்னவென்றால் மேலான பெரிய திருவடி என்று வியக்கப்படுகிற தொழப்படுகிற கருடனைப் போன்றவர்களும் சரி ஐம்புலன்களால் தன் வசத்தில் இல்லாமல் இருக்கும்போது நான் எம்மாத்திரம் என்கிறார் நம்மாழ்வார். அதனால்தான் பாசுரத்தின் முதல் வரியிலேயே விண்ணுளார் பெருமார்க்கு என்கிறார். சடகோபம் என்று அழைக்கப்படுகின்ற நம்மாழ்வாரின் பாதம் பொருந்திய சடாரியை அடியார்கள், பக்தர்களின் தலையில் வைத்து வழிபடுவது மிகுந்த புண்ணியச் செயலாகும். அப்படிப்பட்ட நம்மாழ்வார் சொல்லுகிறார், என் கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்! என்று சொல்லிக்கொண்டே வருகிறவர் பாசுரத்தின் முடிவில் ஒன்று சொல்லாயே என்று முடிக்கிறார்.இதன் பொருள் என்னவென்றால், கண்ணிலிருந்து நெஞ்சிலும், நெஞ்சிலிருந்து சொல்லிலும் வந்து தங்கிய நீ என் அண்மையில் இருப்பவன் ஆயிற்றே! உன்ன நான் இழக்க முடியுமா? மொத்தத்தில் நான் என் வசம் இல்லை என்னை வந்து நீ காப்பாற்ற வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுகிறார் நம்மாழ்வார்.
நடைமுறை யதார்த்தத்தில் உண்மையும் அதுதானே! மனம் ஒருமுகப்பட்டு நம்மால் எத்துணைப் பணிகளைச் செய்ய முடிகிறது? எத்தனை நாளைக்குச் செய்ய முடிகிறது? கூட்டிக் கழித்துப் பார்த்தால் எண்ணம் தொடங்கிய இடத்திலேயே மனம் மீண்டும் வந்து விடுகிறது! நான்கு மாடவீதிகளைச் சுற்றி திருத்தேர் மீண்டும் கிளம்பிய இடத்திற்கே அதாவது நிலைக்கே வந்துவிடுவதைப்போல் மனமும் பற்றுதலாலும் இந்திரியங்களின் மோகத்தாலும் பழைய நிலைக்கே திரும்பி விடுகிறது. இந்த இழி நிலையைப் போக்க வேண்டும் என்கிறார் நம்மாழ்வார். நம்மாழ்வாரே இப்படிச் சொன்னார் என்றால் சாதாரண மானுடர்களான நம்முடைய கதிதான் என்ன? பலவித எண்ண அலைகளால் அன்றாடம் நாம் இழுத்துச் செல்லப்படுகிறோம்! கண்ணும், நாக்கும் நம் வசத்திலா இருக்கிறது? எதைச் சாப்பிடக் கூடாது. உடலுக்கு நல்லதல்ல என்று தெரிந்தும் அதையே சாப்பிட நினைக்கிறது மனம். இதைத்தானே கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? என்று மிக எளிமையாக்கித் தந்திருக்கிறார்கள் நம் முன்னவர்கள். நம்மாழ்வாருக்கு மட்டும் இந்த அனுபவம் என்று இல்லை திருமங்கை ஆழ்வாரும் இதே நிலையில் நின்று சிந்தித்திருக்கிறார். அந்த அதி அற்புதமான பாசுரத்தைப்பார்ப்போம்.
திருவுக்கும் திருவாகிய செல்வா !
தெய்வத்துக்கரசே ! செய்யகண்ணா !
உருவச் செஞ்சுடராழி வல்லானே !
உலகுண்ட ஒருவா ! திருமார்பா !
ஒருவற்காற்றி உய்யும்வகை என்றால்
உடனின்றைவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிடவஞ்சி நின்னடைந்தேன்,
அழுந்தூர் மேல்திசை நின்றவம்மானே
திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிப் பாசுரம்.
ஐம்பொறிகளால் தாம் படும் பாட்டைப் போக்கியருள வேண்டும் என்று ஆமருவியப்பன் திருவடிகளில் வேரற்ற மரம்போல விழுந்து சரணம் புகுகின்றார் திருமங்கை ஆழ்வார்.ஒப்பற்ற அழகானவனே! தெய்வத்துக்கு எல்லாம் தெய்வமானவனே என்று தேரெழுந்தூர் பெருமாளைச் சிறப்பித்து சொல்கிறார்! ஐம்புலன்களும்கூட இருந்து என்னுள் புகுந்து தொடர்ந்து நெருக்கித் துன்புறுத்துகின்றது! இவற்றுக்கு அஞ்சியே உன் திருவடிகளில் சரணம் புகுந்தேன் என்கிறார். தன்னுடைய இந்திரியங்களை உடனிருந்து கொள்ளும் பகையாகப் பார்க்கிறார் ஆழ்வார்.
‘‘ஐவர் என்னுள் புகுந்து
ஒழியாது அருவித் தின்றிட’’
என்கிறார். என்னுடைய கட்டுப்பாட்டில் நான் இல்லை. கடவுளே என்னைக் காப்பாற்று என்று கதறுகிறார், ஆழ்வார். மயிலாடுதுறை கும்பகோணம் பாதையில் குத்தாலத்திற்கு அருகேயுள்ள தலம் தேரெழுந்தூர். திருவழுந்தூர் என்று அழைக்கப்படுகின்ற இந்த ஊர் கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊர். இங்குள்ள உற்சவரின் பெயர் ஆமருவியப்பன். உற்சவப் பெருமாளுக்கு முன்புறம் கன்றும், பின்புறம் பசுவும் அமைந்துள்ள பேரழகு வாய்ந்த தலமாகும். இந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு காணக் கண்கோடி வேண்டும். நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் சொல்வது என்ன? மனிதன் பலவீனமானவன். சிற்றின்பத்திற்காக பேரின்பத்தை துறக்கிறவன். திருமாலை வழிபடுவதை விட்டு விட்டு திரும்பிய திசைகளிலெல்லாம் மனம் போனபடி பயணம் செய்கிறவன். அப்படி வாழ்கிற வாழ்க்கை இனிக்காது. மேலான பரம்பொருளான இறைவனைப் பற்றுக் கோடாக நாம் பற்றிக்கொண்டால் வாழ்வு சிறக்கும் என்கிறார்கள். நாமும்தான் முயன்று பார்ப்போமே!
நன்றி - தினகரன்