வியாழன், 20 டிசம்பர், 2007

ஆண்டாள் - அவள் அரங்கனை ஆண்டாள்

மார்கழி மாதம் பிறக்கிறது என்பதை நினைத்தால் உடனே நினைவிற்கு வருபவை ஆண்டாளும், அவள் அருளிய திருப்பாவையும் தான். அவள் கண்ணனின் பக்தியில் திளைக்க கை கோர்த்து அழைத்துச் செல்கிறாள். இந்தத் திருப்பாவை நம்மை அறியாமை என்ற இருளில் இருந்து தட்டி எழுப்ப, நமக்கு வழிகாட்டி, இறைவனிடம் ஆட்படுத்துகின்றது. அவன் அருளையும் பெற்றுத் தருகிறது.

தந்தை விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார் ரங்கமன்னாருக்காகத் தினமும் கட்டிவைத்த துளசி மாலையைத் தான் அணிந்துக் கொண்டு அழகு பர்த்துப் பின் அரங்கனுக்கு அனுப்பி வைப்பாள் அவள். ஆண்டாளுக்கு தந்தையிட்ட பெயர் கோதை. கோதையின் இச்செயலை ஒரு நாள் பெரியாழ்வார் பார்த்துக் கொண்டே வந்துவிட, இறைவனுக்காக வைத்திருந்த மாலையை மகள் அணிந்திருப்பதைப் பார்த்து மனம் பதறினார். "என்ன காரியம் செய்தாய் கோதாய்? எனக் கடிந்துக் கொண்டார். அன்று பெருமாளுக்கு அணிவிக்க, அவர் மாலை எடுத்துச் செல்லவில்லை."

அவள் ஆண்டாள்:

அன்று இரவு பெரியாழ்வாரின் கனவில் வந்த ஸ்ரீமன் நாராயணன், "அவள் சூடிய மாலையே தனக்குகந்தது. அவள் ஆண்டாள்" எனச் சொல்லி மறைந்தான். "சூடிக் கொடுத்த சுடர்க் கொடியின்" திருப் பெயர் அன்று முதல் ஆண்டாளாயிற்று.

ஆண்டாளின் அவதாரம்:

ஆண்டாள் என்ற கோதை நாச்சியார் பெரியாழ்வாருக்கு மகளாய் அவதரித்தது ஸ்ரீ வில்லிப் புத்தூரில் கி.பி. 9ம் நூற்றாண்டில் நள வருடம், ஆடிமாதம், பூரம் நட்சத்திரம், வளர்பிறை, செவ்வாய்க்கிழமை, விஷ்ணுசித்தரின் வீட்டிலுள்ள நந்தவனத்தில் ஒரு துளசிச் செடியின் அருகே அவள் தோன்றினாள்.

துளசிச் செடியின் அருகில் ஒரு ஜோதியைக் கண்டார் பெரியாழ்வார். அருகில் சென்று பார்த்த போது இடக்கையில் கிளியுடன், இடது குழல் கொண்டையுடன் சர்வாலங்கார பூஷிதையாக ஒரு 12 வயதுச் சிறுமியாக இவளைக் கண்டார்.

பெரியாழ்வார் உடனே மகிழ்ந்து, தான் கொஞ்சி மகிழ குழந்தையாக வரவேண்டும் என வேண்டிக் கொண்டதற்கிணங்கி ஒரு குழந்தை உருவெடுத்து அவர் கைகளில் தவழ்ந்தாள். குழந்தையின் சுருண்ட கூந்தலழகைக் கண்ட பெற்றோர், அவளைக் கோதை எனப் பெயரிட்டழைத்தனர்.

இப்பூவுலகில் பெருமாளின் அடியார்களாக அவதரித்து, ஆழ்வார்களெனச் சிறப்புப் பெற்ற பன்னிரு ஆழ்வார்களில், பரமனைப் பக்தியினாலும், தனது நாயகி பாவத்தினாலும் சொல் மலர்களால் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற பாமாலைகளைச் சுவைபடச் சித்தரித்தாள். அதோடு மட்டுமல்லாமல் தாமே நாயகியாக வேண்டும் என்ற எண்ணமும் கொண்டு அரங்கனை ஆராதித்து, அவனை நாயகனாகவும் அடையும் பேறும் பெற்றாள்.

தந்தை முதலியவர்கள் கண்டு வியக்கும்படி இளமை முதலே எம்பெருமான் மீது பக்தி வேட்கை கொண்டு, எம்பிரானது பெருமைகளையே எப்போதும் சிந்தித்து, துதித்து வாழ்ந்து வந்த கோதை, தந்தை அரங்கனுக்காகக் கட்டி வைத்திருந்த மாலையை அவர் இல்லாத நேரம் தம்குழலிலே தரித்துக் கொண்டு அப்பெருமானுக்கு, "நான் நேரொத்திருக்கின்றேனே" எனச் சிந்தித்தாள்.

ஆண்டாளின் பக்தியும் காதலும்:

வளர்ந்து வந்த காலத்தில் இறை அறிவும், பக்தியும் அவளுடன் வளர்ந்தது, தமக்கு ஏற்ற காதலனாகக் கருதிய கடல்வண்ணன் மீது காதலும் வளர்ந்தது. இனி அவனை ஒரு நொடிப் பொழுதும் பிரிந்திருக்க முடியாது என்று எண் கண்ணனது பிரிவை ஆற்றாத ஆயர் குலப்பெண்கள் போலத் தாமும் நோன்பு நோற்று உயிர் தரிப்பது போல், அவ்வெண்ணங்களை திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற திவ்யப் பிரபந்தங்களின் மூலமாக பெருமாளுக்கு தெரிவிப்பது போல் இவ்வுலகுக்கும் தெரிவித்தாள்.

மணம் பேசுதல்:

இந்த நிலையில் பெரியாழ்வார் கோதையின் திருமணப் பேச்சைத் துவக்கினார். ஆண்டாளோ, "மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்வேன்" என்று கூற, பட்டர் பிரான், "பின் யாரை மணப்பாய்" என்று கேட்க, "யான் பெருமாளுக்கே உரியவளாக இருக்கிறேன்" என்றாள்.

தந்தையிடமிருந்து 108 திருப்பதிகளிலும் எழுந்தருளியுள்ள நாராயணனின் பெருமைகளைக் கேட்டுப் புளகாங்கிதமடைந்த கோதை, திருவரங்கனின் பெருமைகளைக் கேட்டவுடனே அளவற்ற இன்பமடைந்தாள். அரங்கனுக்கே தம்மை மணமகளாக நிச்சயித்து மனதில் அவனையே எப்பொழுதும் எண்ணியிருந்தாள்.

"கற்ப் பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோதிருப்பவளச் செவ்வாய்தான் தித்திருக்குமோமருப்பொசித்த மாதவன்தன் வாய்சுவையும் நாற்றமும்விருப்புற்றுக் கேட்கிறேன் சொல்லாழி வெண்சங்கே!" என்று மறுகினாள்.காதல் வளர்ந்தது:

பின் கோதை தம் ஆற்றாமையைத் தணித்துக் கொள்ள எண்ணி வில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும், அங்கிருந்த பெண்களையும், தம்மையும் ஆயர்குல மங்கையராகவும், வடபத்ரசாயியைக் கண்ணனாகவும், அவ்வூரை நந்தகோபனுடைய வீடாகவும் கருதி, திருப்பாவையைப் பாடியருளினாள். பின்னர் பதினான்கு திருமொழிகளை நாச்சியார் திருமொழிகளைப் பாடியருளினாள்.

கனவுகளும் வளர்ந்தன:

ஆழ்வார் எங்கேனும் நம்பெருமான் நம் மகளை மணம் புரிவது நடக்குமா என்று நினைத்திருக்கும் போது அவர் கனவில் பெருமாள் எழுந்தருளி, "உமது திருமகளைக் கோயிலுக்கு பிரதான அர்ச்சகர் கனவிலும் அவ்வாறே தோன்ற " நீங்கள் குடை, வாத்தியங்கள் முதலிய பல சிறப்புக்களுடன், ஸ்ரீவில்லிப் புத்தூருக்குப் போய் பட்டர்பிரானுடைய அருமை மகள் கோதையையும், அவரின் தந்தையுடன் கூட இங்கு அழைத்து வாருங்கள் என்று கூறினார். அதே நாள் பாண்டிய மன்னனாகி வல்லபதேவன் கனவிலும் தோன்றி, "நீங்கள் பலருடன் ஸ்ரீவில்லிப் புத்தூருக்குச் சென்று, கோதையை முத்துப் பல்லக்கில் திருவரங்கத்திற்கு அழைத்து வருவாயாக" என்று கூறி மறைந்தார். அன்றே கோதையும் தாம் பல கனவுகளைக் கண்டதாகத் தோழிகளிடம் கூறி மகிழ்கிறாள்.

"வாரணம் ஆயிரம் சூழவலம் செய்து நாராண நம்பி நடக்கின்றான்" என்று தொடங்கி திருமணக் காட்சிகளனைத்தையும் முறையே கண்டதாகப் பத்து பாடல்களில் பாடியுள்ளாள்.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூதமுத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி நான் என்பதும் இவற்றில் ஒன்றாகும்.

பாண்டிய மன்னனும் இறைவனின் ஆணையைப் பணியும் முகமாகத் திருவரங்கத்தையும், வில்லிப் புத்தூரையும் இணைக்கும் நெடுவழி முழுவதும் பூம்பந்தல் கட்டி அலங்கரித்து, தோரணங்கள் கட்டி உணர்த்தினான். அவ்வாறே கோயிலிலிருந்து புறப்பட்ட பட்டர் பெருமக்களும் இரவு தம் கனவில் அரங்கத்தம்மாள் காட்சி அளித்துக் கூறியதைத் தெரிவித்தனர்.

பெரியாழ்வார் இறைவனது அன்பை வியந்து, வேதியர்களுக்குச் சொல்லியனுப்பினார். அவர்கள் கொண்டு வந்த பல புண்ணிய நதிநீர் கொண்டு தோழிகள் கோதையை நீராட்டி, பொன்னாடை அணிவித்து தோழியர் புடைசூழ முத்துப் பல்லக்கில் திருவரங்கம் பெரிய கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.

கனவு நினைவானது:

பலரும், "ஆண்டாள் வந்தாள்! சூடிக் கொடுத்த சுடர்க் கொடி வந்தாள்! கரும்பமர் சூழற்கோதை வந்தாள்!" என்று கட்டியங்கூறி அழைத்துச் சென்றனர்.

பெரிய பெருமாளுடைய முன்மண்டபத்தை கோதையின் பல்லக்கு வந்தடைய, பின்பு கோதை பெருமாளை வணங்கினாள். அப்போது திருமாலின் அழகு கோதையைக் காந்தம் போல் கவர்ந்தது.

இரண்டறக் கலந்தாள்:

சூடிக் கொடுத்த நாச்சியார் சிலம்பு ஆர்க்க, சீரார் வளையொலிப்ப, கொடியேரிடையாட, காதளவு மோடிக் கயல்போல் மிளிரும் கடைக்கண் பிறழ, அன்ன மென்னடை கொண்டு அரங்கனின் அருகில் சென்று இன்பக் கடலில் ஆழ்ந்து, அரங்கனின் அடிகளைப் பணியக் கருதி, நம்பெருமானது திருமேனியின் கண் மறைந்து அவனுடன் இரண்டறக் கலந்தாள்.

பெரியாழ்வார், வெண்ணைப் பெருமாளிடம் சேர்த்துவிட்ட மகிழ்ச்சியில் வில்லிப்புத்தூர் திரும்பி பல காலம் ரங்கமன்னாருக்குக் கைங்கர்யம் செய்து வாழ்ந்திருந்தார். இன்றும் மார்கழி 30ம் நாள் திருவரங்கத்திலும் சரி, மற்ற பெருமாள் கோயில்களிலும் சரி ஆண்டாளுக்கும் அரங்கனுக்கும் கல்யாண வைபவம் சிறப்பாக நடக்கிறது. இதற்கு 10 நாட்கள் முன்பாகவே ஆண்டாளுக்கு நீராட்டுவிழா தொடங்கிவிடும். குறிப்பாக ஸ்ரீ வில்லிப் புத்தூரில் இது சிறப்பானதொரு வைபவம். பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராடுவதுபோல், ஆண்டாளுக்கு ஆற்றங்கரையில் எண்ணெய் நீராட்டுவிழா நடக்கும். ஆண்டாளின் கையில் உள்ள கிளி வெற்றிலை மற்றும் சில குறிப்பிட்ட இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் வாடாமல் நன்றாக இருக்கிறது. திருப்பதியில் இன்றும் ஆண்டாளிடமிருந்து மாலையை வாங்கி, உத்தரவு பெற்று பின் பெருமாளுக்குச் சூட்டிய பின்பு மார்கழி மாத பூஜை தொடங்குகிறது.

ஆண்டாள் கிருஷ்ணனுடைய பக்தியில், மற்ற ஆழ்வார்களைப் போலவே ஆழ்ந்து அனுபவித்த காரணத்தால் ஆழ்வார்களில் ஒருவராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டாள். பக்தை மீரா, சக்குபாய் இவர்களைப் போல பக்தைகளில் ஒருவராகவும் கருதப்படுகிறாள். எல்லாவற்றிற்கும் மேலாக சீதையைப் போல், ருக்மினியைப் போல் பூமிதேவித் தாயாராகவும் ஆகிறாள்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாக அரங்கனைத் தன் அன்பினால் ஆண்டு ஆண்டாள் என அழியாப் புகழ் பெற்றாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக