வியாழன், 20 டிசம்பர், 2007

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார்

ஒரு பானை இருக்கிறது. அது காரியம் - அதாவது உண்டான வஸ்து. அந்த வஸ்துவுக்கு - காரியத்துக்கு - மூன்று காரணங்கள்.

முதலாவது `உபாதான காரணம்' பானையாய் எது மாறியதோ, அது உபாதான காரணம். இங்கே பானையை உருவாக்க பயனான மண் உபாதான காரணம்.

அடுத்தது மனுஷ்ய சக்தி - அந்த சக்தி தானே பானையை ஆக்குகிறது? இது `நிமித்த காரணம்' எனப்படுகிறது. பானையை உருவாக்கியவர் குயவர் நிமித்த காரணமாகிறார்.

குயவருக்குப் பானை செய்ய சக்கரம் வேண்டும். ஒரு தண்டம் வேண்டும். இவை பானை செய்ய அவருக்கு சஹகரிக்கின்றதால் (உதவுவதால்) `சஹகாரி காரணம்' எனப்படுகின்றது.

இப்படி ஒவ்வொரு காரியத்துக்கும் காரணங்களை ஆராய்ந்து கொண்டே போகலாம். இந்த உலகத்தைக் காரியமாக எடுத்துண்டோமானால், பரமாத்மா அதற்கு உபாதான காரணமா? நிமித்த காரணமா? சஹகாரி காரணமா?... என்று விசாரிக்கலாம்.

இதைப்பற்றி உபநிஷத் சொல்வதை ஆசார்யர்களெல்லாம் விவரிக்கிறார்கள். எல்லாக் காரணங்களுமாய் அவனே இருந்து வருகிறான். ஜகத்காரண வஸ்து அவன்!

பகவானே விச்வமாய்க் காட்சி அளிக்கிறான்.

`தத்வம் அஸி' என்கிற மகா வாக்யத்தை ஒரே பதத்தில் சொல்லணும் என்றால் `விச்வம்' என்று சொல்லணும்.

அந்த விச்வத்தில் நடப்பனவற்றுக்கு எல்லாம் எத்தனை காரணம் சொன்னாலும் ஐந்தாவது காரணமாய் பரமாத்மா இருக்கிறான்.

இந்த உபந்யாஸத்தையே எடுத்துக் கொண்டோமானால், இதற்கு ஐந்து காரணம்.

முதல் காரணம், உபந்யாஸ கருடைய, சரீரம். அது உபந்யாஸம் நடக்கிற இடத்துக்கு வந்து சேரணும். சரீரம் மட்டும் உபந்யாஸத்துக்குக் காரணமாயிடுமா...? சொல்கிறவனுடைய வாக்கு, கேட்கிறவனுடைய செவிப்புலன் என்கிற இந்திரியங்கள் இரண்டாவது காரணம்.

இந்த இரண்டுக்கும் மேலே மூன்றாவது காரணம் மனஸ். உடம்பு, இந்திரியங்களுடன் மனஸும் கூடச் சேரணும்.

ஒருத்தர் ராத்திரி சௌகரியமாய் தலையணை வெச்சுண்டு தூங்கறார். விடிஞ்சதும் பார்த்தா தலையணையடியிலே மூன்று பாம்பு! அது இருக்கறது மனஸுக்குத் தெரிஞ்சிருந்தால் தூக்கம் வருமா....? மனஸும் சேர்ந்து தூங்கினதால்தானே அவராலே தூங்க முடிந்தது....! ஆகையினாலே எந்தக் காரியத்துக்கும் மனஸ் கூடச் சேர வேண்டும்.

நாலாவதாக, சரீரத்துக்குள்ளே இருக்கிற ஆத்மா ஒரு காரணம். சாந்தோக்ய உபநிஷயத்திலே ஒரு கதை உண்டு. உடம்பின் காது, மூக்கு, கண், வாய் எல்லாத்துக்கும் ஒரேயடியாய் பெரிய சண்டை வந்ததாம். எல்லாம் பிரும்மாவிடம் போய், `எங்களுள் யார் பெரியவன்? நீங்கள் சொல்லுங்கள்...' என்றதாம்.

அதற்கு பிரும்மா சொன்னார், `நீங்கள் ஒவ்வொருத்தராக ஒரு வருஷகாலத்துக்குத் தனித்தனியே சரீரத்தை விட்டுப் பிரிந்து போங்கள். யாரு விலகறதாலே உடம்புக்கு அதிக பாதிப்போ அவர்தான் உயர்த்தி....'

`அப்படியே ஆகட்டும்'னு முதலில் கண் ஒரு வருஷயத்துக்குப் பிரிந்து இருந்ததாம். `தீய விஷயங்களைப் பார்க்காமல் நிம்மதியாய் இருந்தேன்' என்றார் உடம்புக்குரியவர்.

அதேபோலக் காதும் மூக்கும் மற்ற இந்த்ரியங்களும் அவரை விட்டுப் பிரிஞ்சு போன போதும் கஷ்டமில்லாமல் இருந்தார்.

ஒரு நாள் அந்த உடலுக்குள் இருந்த பிராணன் புறப்பட்டுப் போனது... அவ்வளவுதான்! பிராணன் கிளம்பினதும் மற்ற எல்லா இந்த்ரியங்களும் மொத்தமாகப் புறப்பட்டுப் போய் விட்டன!

ஆகவே, எந்த ஒரு செயலுக்கும் பிராணன் நாலாவது காரணம் என்று தெரிகிறது.

ஆனால் பிராணன் மட்டுமே தனித்துச் செயல்பட முடியுமா...? உடம்பும் இந்த்ரியங்களும் மனஸும் ஆத்மாவுடன் சேரணும். அதோடு இன்னொரு காரணமும் சேருகையில் தான் பூர்ணத்துவம் உண்டாகிறது. அது என்னவென்று பார்த்தால், அதுக்கு ஒரு கதை சொல்லலாம். நடந்த சம்பவம்...

ஸ்ரீரங்கத்திலே எம்பார் காலட் சேபம் பண்ணறார். அப்போ வடக்கு சித்திரை வீதிக்காரர் ஒருத்தர் திண்ணையிலே வீணாகக் காலத்தைப் போக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். எல்லோரும் அவரை, "காலட்சேபத்துக்கு வரக்கூடாதா - இப்படி வீணா காலத்தைப் போக்கறீர்களே..?" என்று கேட்டுக் கேட்டுப் பார்த்தார்கள். யார் கேட்ட போதும் அவர் மசியவில்லை; அப்படியே மறு பக்கமா தலையைத் திருப்பிக் கொண்டு விட்டார். இப்படியே பல நாட்கள் கழிந்தன. திடீரென்று ஒரு நாள் திண்ணைக்காரர் தாமே காலட்சேபத்துக்கு கிளம்பி வந்தார்.

எல்லாரும் ரொம்ப மகிழ்ந்து போனார்கள். பிரவசனம் பண்ணின எம்பார் கேட்டார் : "இத்தனை நாளா வராத இவர் இன்னைக்கு வந்திருக்கிறார் என்றால் அதற்கு யார் காரணம்? ஆசார்யர் காரணமா? அவரை வரச்சொல்லி வற்புறுத்திக் கூப்பிட்டவர்கள் காரணமா....? ஆசார்யர்தான் காரணம் என்று நினைக்கிறவர்களை கையை உயர்த்தலாம்.. ஆச்சார்யர்தானே எதிரிலிருப்பவர்களுக்கு எவ்வளவு புரியும் என்று பார்த்து, அதற்கு ஏற்பச் சொல்பவர்...?

அதனாலே அவர் காரணம்னு நினைக்கிறவர்கள் கை உயர்த்தலாம்...." என்றார்.

கூட்டத்தில் பாதிப்பேர் கையை உயர்த்தினார்கள்.

"சரி, அழைத்தவர்களின் வற்புறுத்தலால் தானே இவர் வந்திருக்கிறார்... அதனால் இவரை வரச்சொல்லிக் கூப்பிட்டவர்களே இவருடைய வருகைக்குக் காரணம் என நினைக்கிறவர்கள் கை உயர்த்தலாம்.....? என்றார்.

கூட்டத்தில் இன்னொரு பாதி கையை உயர்த்தியது!

அந்தச் சமயத்திலே ஆசார்யர் எம்பார் சொல்கிறார்.." இப்போ சொன்ன எதுவுமே காரணமில்லை... இவரை இங்கே வரவழைச்சதுக்குக் காரணமானவன் பரமாத்மாதான். இத்தனை நாளாக இல்லாமல், திடீரென்று இங்கே வரணும் என்று அந்த புத்தியைக்கொடுத்ததே அந்த பரமாத்மாதான்.." என்றார்.

உலகத்தின் சகல காரியங்களக்கும் ஐந்தாவது காரணமாய் இருப்பவன் அந்த பரமாத்மாதான்!

ஆடு, மாடு மாதிரி மனிதர்களை ஓட்டுவதில்லை, பகவான். ஜீவாத்மாவுக்கு ஒரே ஒரு முக்கியமான இடத்திலேயே சுதந்திரத்தைக் கொடுக்கிறான். நல்லது இது; கெட்டது இதுன்னு காட்டிக் கொடுத்து, அது எதைப் பிடிச்சுக்கறதுன்னு கவனிக்கிறான். `மனிதன் நல்லதைப் பற்றுகிறானா? தீயதைப் பற்றுகிறானா?' என்று யோசித்துப் பார்ப்பது அவனுடைய லீலை!

ஆகையினாலே விச்வம் என்கிற சப்தத்துக்குப் பொருள் கேட்டால், `ஐகத்காரண வஸ்துவாக பரமாத்மா இருக்கிறான்; அவனே காரியமாய் இப்படிப் பரிணமிக்கிறான். விச்வத்துக்குக் காரிய காரணம் அவனே ஆனதாலே விச்வம் என்கிற சப்தத்தினால் பரமாத்மா அழைக்கப்படுகிறான்.

இதுக்கு மேலே இன்னொரு அர்த்தமும் இருக்கிறது :

சுவாபாவிகமாக - அதாவது இயற்கையிலேயே எண்ணியிருந்த திருக்கல்யாண குணங்கள் இருப்பதாலே பகவான் என்று அழைக்கப்படுகிறான் அவன்.

பகவான் என்றால்...?

புத்தி உடையவன், புத்திமான், குணமுடையவன், குணவான், பகத்தை உடையவன் பகவான், என்ன குணங்கள்..? ஆறு குணங்களை அவனுக்கே உரியவையாக விவரிக்கிறார்கள். பகம் என்றால் ஆறு குணங்கள் :

முதலாவதாக ஞானம். குறுகுதல், விரிதல் என்பது பகவானுடைய ஞானத்துக்குக் கிடையாது. மனித ஞானம் மாதிரி இல்லை. அது.. மனிதர் ஒருவர் தத்துவம் படிக்கிறார். அவர் புத்தி ஒருநாள் அதை கிரஹிக்கிறது போல இன்னொரு நாள் கிரஹிப்பதில்லை! ஏன்..? அந்த புத்திக்கு சங்கோச விஹாஸம் இருக்கிறதனாலே அது அப்படி நடந்து கொள்கிறது. சில நாள் குறுகிப் போயிடறது: சில நாள் சாத்விகமான ஆகாரம் சாப்பிடாததாலே ஒத்துழைக்கிறதில்லை. இந்த மாதிரி கஷ்டங்களெல்லாம் பகவானுக்குக் கிடையாதே! நமக்கு இந்த்ரியங்கள் எல்லாம் வேண்டியிருக்கு. அப்படியில்லை பரமாத்மா. அவனுடைய ஞானம் சங்கோச விகாசம் இல்லாத ஞானம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக