நம் உள்ளத்தில் பல ஐயங்கள் இருக்கின்றன. ஐயம் தெளிந்தால் எல்லாவகையிலும் நல்லது. இளைய தலைமுறையினர், தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைப் பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக, நாம் நெற்றியில் திருமண், திலகம் ஏன் இட்டுக் கொள்கிறோம் என்பது போன்ற கேள்விகள். அந்தக் கேள்விக்கு உரிய சந்தேகங்களை ஒருவர் இன்னொருவருக்கு தெளிவுபடுத்தும் போது, அந்தச் செயல்களின் நன்மையறிந்து நாம் நம்பிச் செய்கிறோம்.
சனாதன தர்மம் (இந்து மதம்) துவக்கம் தெரியாத மதம். இங்கே உருவ வழிபாடு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பாவம், புண்ணியம், போன பிறவி, இந்தப் பிறவி, ராமன், கண்ணன் என்று எத்தனையோ அடிப்படைக் கொள்கைகள் இங்கே இருக்கின்றன. சனாதன தர்மம் வாழும் மண்ணில் பிறந்ததால் நாம் பாக்கியவான்கள்.
தெய்வ உருவங்கள் கோயில்களில் உள்ளன. ஏன் இந்த வழிபாடு? நாம் தானே கல், மண், தங்கம், வெள்ளி வாங்கிக்கொடுத்து இந்த உருவங்களை உருவாக்கச் சொன்னோம்! ஆனால், நிஜமான தெய்வம் எங்கோ உள்ளாரே! அங்கே இருக்கும் நிஜத்தை வணங்குவதை விட்டுவிட்டு, இங்கிருக்கும் உருவத்தை வணங்குவதால் என்ன பயன்? அந்த உருவங்கள் 16 அடி, ஒன்றரை அடி என்று கூடியும், குறைவாகவும் உள்ளதே!
சரி...இதை வழிபட்டால் என்ன லாபம்! வழிபடாவிட்டால் என்ன நஷ்டம்! இவை பற்றியெல்லாம் நாம் கேட்க வேண்டும். கேட்பதை விட படிப்பது இன்னும் நல்லது. மாடு வேகமாகச் சாப்பிடும். பிறகு, வாய்க்கு திரும்பக்கொண்டு வந்து அசை போடும். அதுபோல, நீங்களும் இவற்றைப் படிக்க வேண்டும். மீண்டும் மனதிற்கு கொண்டு வந்து அசை போட வேண்டும். அப்போது தான் நம் மனதில் இந்த விஷயங்கள் ஆழமாகப் பதியும்.
நம்மாழ்வார் பிறந்த ஸ்தலம் ஆழ்வார்திருநகரி. இங்கே பெருமாள், "பொலிந்து நின்ற பிரான்' என்ற பெயரில் இருக்கிறார். உருவம் இருப்பதால் தான் பொலிவு என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடிகிறது. ஆம்...அவர் பொலிவாக, அழகாக இருக்கிறார்.
அருவத்துக்கு ஏது பொலிவு?
""நின்ற, கிடந்த, அமர்ந்த, விக்ரமனாக, மாடு மேய்க்கும் கண்ணனாக, தண்ணீரில் நடனம் புரிபவனாக...இப்படி எத்தனையோ உருவங்களில் பெருமாளைப் பார்க்கிறோம். வைகுண்டப் பெருமானுக்கு இங்குள்ள சிலை போல் மதிப்புண்டா?'' என்று ஆழ்வார் கேட்கிறார்.
நமக்கு பக்கத்தில் உள்ளவருக்கு உரிய பெருமை வைகுந்தநாதனுக்கு கூட கிடையாது. அவர் எப்பேர்பட்டவரோ? இங்குள்ள உருவத்தை எளிதாகப் பார்த்து விடலாம். ஆனால், வைகுந்த நாதனைப் பார்க்க வேண்டுமானால் முக்தியடைந்து அங்கே போக முடியுமா? கையில் இருக்கும் மோர் சாதம் பெரிதா? நெய்யும், சர்க்கரையும் கலந்து தயாரிக்கும் அக்கார அடிசில் பெரிதா? தயிர் சாதம் நம் அருகிலுள்ள பெருமாள், அக்கார அடிசில் வைகுந்தத்தில் இருக்கிற பெருமாள். இப்போது நினைத்தாலும் வீட்டில் மோர்சாதம் தயாரித்து விடலாம். அதாவது, அருகில் இருக்கிற பெருமாள் கோயிலுக்குப் போய் விடலாம். வைகுந்தத்திற்கு நினைத்த மாத்திரத்தில் செல்ல முடியுமா? அதற்காக, வைகுந்தம் என்பது உண்மையில்லை என்றில்லை. எங்கோ இருக்கிற பெருமாளைக் காட்டிலும் இங்கே இருப்பவருக்கே பெருமை.
இன்னும் சொல்லப்போனால், கோயில் பெருமாளை விட வீட்டுப்பெருமாளுக்கு மதிப்பு அதிகம் தர வேண்டும். ஆனால், நாம் அதைச் செய்வதில்லை. துவாரகை வரை போய் பெருமாள் சிலை வாங்கி வந்திருப்போம். ஆனால், வீட்டில் பூஜை சரிவர நடக்காது. வீட்டுப்பூஜை ஒழுங்காக நடக்க வேண்டும். வீட்டுப்பூஜை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்துள்ள வரப்பிரசாதம்.
அவர் நமக்காகவே உருவமெடுத்துள்ளார். நமது பாவங்களைத் தொலைக்க, உயர்ந்த சிந்தனை பெற, காமம், மதம், மாச்சர்யம் நீங்க உருவ வழிபாடு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. நாம் சுகமாக வாழ உருவம். அது வேண்டாம் என்றால் அருவம். மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் என்று ஆயிரக்கணக்கான உருவங்கள் அவனுக்கு உள்ளன அல்லவா! அதுபோல் அருவம் என்பதும் ஒரு நிலையே.
அதற்காக அருவம் தான் நிலையானது என்று சொல்லக்கூடாது. உருவத்தோடு இருந்தால் தான், அவர் நம் புத்திக்கு எட்டுவார்.
அருவத்தை தியானிக்க நாம் ஒன்றும் யோகி இல்லை. அப்படி யாராவது தியானிப்பதாகச் சொன்னால் அது பொய்.
வால்மீகி, பரத்வாஜர் போன்ற ஞானிகளே உருவத்தை ஒப்புக்கொள்ளும்போது, நாம் சாதாரண ஆள். வேதாந்த தேசிகன், ""உருவம் இருந்தால் என்னால் அவனைப் பிடிக்க முடியும்,'' என்கிறார்.
இப்போது, கோயிலுக்கு கூட்டம் அதிகம் வருகிறது. இதற்கு காரணம் பயம் அல்லது பிரியம். கடவுளைக் கண்டு பயப்படுபவன் ஆஸ்திகன் அல்ல. அவர் மீது அன்பு கொண்டவனே நிஜமான ஆஸ்திகன். பெற்றோரைக் கண்டு பிள்ளை பயப்படுவதில்லை. அதுபோல் அவன் என் பெற்றோர் போல!
அவனைப் பயமின்றி ராஜாவாக, குழந்தையாக, யானையாக, இளவரசனாக பல உருவங்களில் பூஜிக்க வேண்டும்.
சிலர் உருவவழிபாடு கூடாது என்கிறார்கள். இவர்களுக்கு வரும் ஐயம் என்னவென்றால், கடவுளுக்கு உருவம் உண்டு என்று வேதங்கள் கூறுகிறதா? அல்லது நாமே சொல்கிறோமா என்பது தான் அந்த சந்தேகம்.
இதற்கு என்ன பதில் தெரியுமா? உருவம் உண்டு என்றும் சொல்கிறது, இல்லை என்றும் சொல்கிறது. இதென்ன குழப்பம் என்று தோன்றுகிறது.
ஒருவர் இன்னொருவரிடம், ""பிள்ளையாண்டான் படிக்கிறானா?'' என்கிறார். அதற்கு அவர், ""எங்கே படிக்கிறான், எட்டு மணி நேரம் படிக்க வேண்டியதை மூன்று மணி நேரம் படிக்கிறான்,'' என்பார். அதாவது அவன் படிக்கிறான் என்பதும் உண்மை, ஆனால், போதுமான நேரம் படிக்கவில்லை என்பதும் உண்மை. இப்படித்தான் வேதமும், கடவுளுக்கு உருவம் உண்டு என்றும் சொல்கிறது, இல்லை என்றும் சொல்கிறது.
""அந்தக் கடவுளை அதோ அங்கு பார்த்தேன். சூரியனுக்குள் பார்த்தேன். பொன்மயமான ஒளிபடைத்த உருவத்தைப் பார்த்தேன். கண்களில் தாமரையைக் கண்டேன், கால்நகம் முதல் திருமுடி வரை பொன்மயமாய் ஒளிர்ந்ததைக் கண்டேன். குழலகராய் பார்த்தேன். மீசையோடு கண்டேன். அனைத்தும் அழகு..அழகு... இப்பேர்ப்பட்ட உருவத்தைக் கண்டேன்!'' என்று பெருமாளை வேதம் வர்ணிக்கிறது. அதாவது உருவம் உண்டு என்றும் வேதம் சொல்கிறது, இல்லை என்றும் சொல்கிறது.
அப்படியானால் இந்த குழப்பத்திற்கு என்னதான் தீர்வு?
- இன்னும் ஆனந்திப்போம்
நன்றி - தினமலர்