பொறுமையும் சகிப்புத்தன்மையும் இருந்தால்தான் இந்தப் பூவுலகில் நாம் நிம்மதியாக வாழமுடியும். ரேஷன் கடை, ரயில் நிலையம், பேருந்துகள், சாலைகள் என எங்கு பார்த்தாலும் கூட்டம்; எங்கு பார்த்தாலும் நெரிசல்; டிராஃபிக். இந்த நிலையில் பொறுமையைக் கடைப்பிடித்து சகிப்புத் தன்மையுடன் இருந்தால்தான், இந்தப் பிறப்பை நாம் சந்தோஷமானதாக ஆக்கிக் கொள்ளமுடியும்!
ஆனால், பகவானுக்கு இவை ஏதும் இல்லை. அவன், பொறுத்துக்கொள்ளவும் தேவையில்லை; சகித்துக்கொள்ளவும் அவசியமில்லை. தவிர, பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சகிப்புத்தன்மைகளுக்கு அப்பாற்பட்டவர். பொறுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிற அளவுக்குப் பொறுமையற்று இருப்பவர். அதனால்தான், அப்பேர்ப்பட்ட மகாபாரத யுத்தத்தின்போதுகூட, ‘அர்ஜுனா… இன்னுமா யுத்தத்தை முடிக்காமல் இருக்கிறாய்? எப்போதுதான் முடிப்பாய் யுத்தத்தை?’ என்று அவசரப்படுத்தியபடியே இருந்தார்.
இத்தனை அவசரமும் வேகமும் இருந்தாலும், பகவான் எப்போதுமே புண்டரிகாக்ஷன்தான்! அதாவது, மிகப்பெரிய தாமரைப் பூக்களைப் போன்ற கண்களை உடையவன். அத்தனை ஒளிர்ந்த, விசாலமான, தீட்சண்யமான, மலர்ந்த கண்களைக் கொண்டவன் என்று அர்த்தம்.
இப்படியெல்லாம் பகவானையும் அவனுடைய கண்ணழகையும் வியந்து போற்றுவோர் யார் தெரியுமா? விண்ணவர்கள்! அவர்களே போற்றிக் கொண்டாடுகிற அளவுக்கு அழகன் என்றால், சாதாரணர்களாகிய நாம் எந்த வார்த்தைகளைச் சொல்லி அவனைப் பாராட்டிப் புகழ்வது?
பகவான் ஸ்ரீகண்ணபரமாத்மாவுக்கு ஆயிரமாயிரம் வேலைகள் உண்டு. மண்ணுலகில் உள்ள நம் அனைவரையும் ரட்சிப்பவனாயிற்றே! நம்முடைய சின்னக் குறையைக்கூடத் தீர்த்து வைக்க முனைந்து செயல்படுபவனாயிற்றே அவன்! அதனால்தான் அவனுக்கு ஜகத்கரணபூதன் என்றொரு திருநாமம் அமைந்தது.
இங்கே… மூன்று விஷயங்களில் உயர்ந்து நிற்கிறான் கமலக்கண்ணன். முதலாவது… எந்தக் காரணங்களையும் காரியங்களையும் வைத்துக்கொண்டு அவன் செயல்படவில்லை.
அடுத்து… எல்லாக் காரியங்களிலும் மிகவும் ஆர்வமாகவும், நாம் ஆச்சரியப்படும் படியாகவும் செயல்படுபவன். மூன்றாவது… முக்கியமாக, தனக்கு என்று எந்தக் காரணமும் வைத்துக்கொண்டு சுயநலமாகச் செயல்படாதவன்!
இங்கே… மனித குல வாழ்க்கையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இங்கு ஒவ்வொருவரும் காரியம் இருக்கிற காரணத்துடன்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தவருக்கு இந்தக் காரியத்தைச் செய்வதால், தனக்கு என்ன பலன் கிடைக்கும் என்று சிந்தித்தே செயல்படுகிறார்கள். மூன்றாவதாக, அப்படி லாபம் கிடைத்தால்தான் ஆர்வத்துடனும் வேகத்துடனும் செயல்படுகிறார்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர், மனிதர்களாகிய நமக்கு உணர்த்துகிற இந்தப் பாடத்தை அறிந்து, உணர்ந்து செயல்படத் துவங்கினால்… இந்த உலகில் போட்டிக்கும் பொறாமைக்கும் வேலையே இருக்காது. கர்வம் தலைதூக்கவும் நம்பிக்கை துரோகம் இழைக்கவும் இங்கு எந்த அவசியமும் இராது! அந்த ஜகத்கரணபூதனை உணர்ந்து, தெளிவதே வாழ்தலின் முதல்படி.
தனக்கென எந்தக் காரணமும் இல்லாமல் செயல்படுபவர் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. ஆனால் ஓர் ஆச்சரியம்… பூமி பிராட்டியின் மீது அளவற்ற ஆசையும் அத்தனை பிரியமும் உண்டு அவனுக்கு.
அதாவது, பூமி பிராட்டிக்காக அத்தனை பாரங்களையும் தவிர்த்தார் ஸ்ரீகிருஷ்ணர். பிரளய காலத்தில், கர்ப்பக்கிரகத்தில் வைத்துக் காத்தருளினார். கம்சனையும் துரியோதனனையும் அழித்து, பூமியையும் பூமியில் உள்ள மனிதர்களையும் காத்தார்.
மறைத்து வைத்ததை மீட்டுக் கொடுக்க, வராக பெருமாளாக அவதரித்து அருளினார். ஹிரண்ய வதத்துக்காக தூணில் மறைந்து இருந்து வெளிப்பட்டார். வாமனனாக, திரிவிக்கிரமனாக உலகை அளந்தார்.
பூமி பிராட்டியார்மீது கொண்ட ஆசையின் விளைவாகவே மண்ணில் பிறந்து, பிறந்து அவதாரக் கோலங்களை எடுத்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர், இந்த பூமியில் உண்டார்; நடந்தார்; கிடந்தார்; அளந்தார். உலக மக்கள் அனைவரையுமே அரவணைத்தார். இதனால் அவருக்கு, ‘க்ஷிதிஸஹ:’ எனும் திருநாமம் அமைந்தது. க்ஷிதி என்றால் பூமி என்று அர்த்தம்!
‘ஆதிசேஷனில் இருந்தபடி பூமியைத் தாங்குகிறாய். பிரளயத்தின்போது பூமியையே தூக்கிக் காபந்து செய்தாய். வாயில் விழுங்கி, கருவறையில் வைத்துக் காப்பாற்றினாய். பூமாதேவியை இந்த அளவுக்கு நேசிக்கிறாயே… எப்போதும் உன் மார்பில் வைத்திருக்கும் ஸ்ரீதேவி நாச்சியாள், அதற்காக வருத்தப்படமாட்டாளா? உன் மீது கோபப்படமாட்டாளா?’ என்று கம்பநாட்டான்கூட சூசகமாகக் கேட்டிருக்கிறான்.
ஆனால், அதைப் பற்றி ஸ்ரீதேவி நாச்சியாரே வருத்தப்படாதபோது, நாம் ஏன் வருத்தப்படவேண்டும்?
உண்மையில் எங்கே போனாலும், எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் தன் மார்பிலேயே ஸ்ரீதேவி நாச்சியாரை வைத்திருக்கிறானே பகவான்! அப்படியிருக்க… அவள் ஏன் வருத்தப்படப் போகிறாள்?
இந்த வருத்தங்களும் கோபங்களும் தவிப்புகளும் சோகங்களும் நமக்குத்தான். உள்ளேயும் வெளியேயுமாக நமக்கு இருக்கிற பாபங்கள் பெருகிக்கொண்டே அல்லவா இருக்கின்றன? இந்தப் பாபங்களையெல்லாம் எங்கே, எப்படி, எவரால் போக்கிக் கொள்வது என்று நாம்தான் உழன்று, தவித்து, மருகி, கதறி, கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறோம்!
கவலையேபடாதீர்கள். ‘என் திருவடித் தாமரைகளை எவர் பற்றிக் கொள்கிறாரோ, அவரின் சகல பாபங்களையும், நானாவித அபசாரங்களையும் நான் போக்கித் தருவேன்’ என கீதையில் அருள்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
நமக்குள்ளே இருக்கிற காம- குரோதங்களை, கர்வ- அகங்காரங்களை, மத மாச்சர்யங்களை நம்மிடம் இருந்து போக்கி, அந்தப் பாவங்களில் இருந்து நமக்கு விடுதலையைத் தருபவர் பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.
அதேபோல், நமக்குள் பக்தி எனும் சிந்தனையை வளரவிடாமல் செய்கிற தீமைக் குணங்களைப் போக்கி, சகல பாபங்களில் இருந்தும் நம்மை விடுவித்து அருள்கிறார் பரம்பொருள். இதனால் ஸ்ரீகண்ணபிரானுக்கு, ‘பாபநாசனஹ’ என்கிற திருநாமம் அமைந்தது.
ஆமாம்… பகவானின் திருநாமங்களைச் சொன்னால் போதும்; அல்லது, பகவானின் அவதாரங்களை ஒருகணம் நினைத்தால் போதும்… நம் இடர்கள் அனைத்தையும் நீக்கி அருள்வான் பரந்தாமன் என்பதில் சந்தேகமே இல்லை!
நன்றி - சக்தி விகடன்