அங்கதனுடைய தேற்றுதலினால் வானரர்கள் தைரியம் கொண்டு ஒன்று சேர்ந்து கும்பகர்ணனைத் தாக்கினார்கள். பெரிய மரங்களையும் பாறைகளையும் பறித்தெடுத்து அவன் மேல் வீசி எறிந்தும் அடித்தும் நொறுக்கியும் பார்த்தார்கள். அவனோ இவற்றைக் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் சிரித்துக் கொண்டே வானரர்களைத் துவம்சம் செய்தான். கும்பகர்ணனுடைய வீராவேசமும் குரூர யுத்தமும் வானரர்களைச் சிதற அடித்தன. கடலிலும் தாங்கள் கட்டின சேதுவிலும் ஆகாயத்திலும் காட்டிலும் ஓடி மறையப் பார்த்தார்கள். மறுபடியும் அங்கதன் வானர வீரர்களுக்கும் வானரப் படைக்கும் தைரியம் சொல்லி, ஒன்று சேர்த்துக் கும்பகர்ணனைத் தாக்கச் செய்தான். துவிவிதன், ஹனுமான், நீலன், விருஷபன், சரபன் முதலிய வீரர்கள் கும்பகர்ணனைப் பலமாகத் தாக்கினார்கள். அவனோ அதையெல்லாம் லட்சியம் செய்யவில்லை. வானர வீரர்களை ஒருவர் பின் ஒருவராக அடித்து நொறுக்கிக் கீழே தள்ளினான். வானரச் சேனைக்குப் பயங்கர நாசம் விளைவித்தான். அங்கதனே அடிபட்டு நினைவற்றுப் பூமியில் விழுந்தான். சுக்ரீவனும் அடிபட்டுப் பிரக்ஞையற்றுக் கீழே விழுந்தான். நினைவற்றுக் கிடந்த சுக்ரீவனை எடுத்துத் தூக்கிக் கொண்டு கும்பகர்ணன் வெகு மகிழ்ச்சியுடன் லங்கையை நோக்கி ஓடினான். ராக்ஷசச் சேனை பெரு மகிழ்ச்சியடைந்து ஆரவாரித்தது. அண்ணன் ராவணனிடம் வானர ராஜனைக் கொண்டு போய்த் தான் தந்த பரிசாகக் கொடுக்கக் கும்பகர்ணன் சென்றான்.
*
இவ்வண்ணம் பிரக்ஞை இழந்த வானர ராஜனைத் தூக்கிக் கொண்டு லங்கா நகர ராஜ வீதியில் வெற்றிகரமாகச் சென்ற கும்பகர்ணன் மேல் மாட மாளிகையிலிருந்து அரக்கர்களும் அரக்கிகளும் புஷ்பமும் சந்தனக் குழம்பும் ஏராளமாகப் பொழிந்தார்கள். சிறிது நேரம் கழிந்தது. சுக்ரீவன் நினைவு அடைந்தான். "என்ன இது? எங்கே இருக்கிறேன்?" என்று நாற்புறமும் பார்த்து விஷயம் அறிந்து கொண்டான். திடீர் என்று அரக்கனுடைய காதுகளையும் மூக்கையும் பல்லால் கடித்தும் நகங்களால் கிழித்தும் ரணமாக்கித் துன்பப்படுத்தினான். அரக்கன் அந்த வேதனையைப் பொறுக்க மாட்டாமல் சுக்ரீவனைக் கீழே போட்டுக் காலால் துவைக்கப் பார்த்தான். உடனே சுக்ரீவன் குதித்தெழுந்து ஆகாய மார்க்கமாக ராமசந்திரனிருந்த இடத்துக்குப் பாய்ந்து போய்விட்டான்.
இப்படி சுக்ரீவன் செய்வான் என்பதை முன்னமேயே ஹனுமான் உணர்ந்து கொண்டு, கலங்கிப் போன வானர சேனையை வியூகப்படுத்தி அமைதியாகவும் தைரியமாகவும் நிற்கச் செய்து, மறுபடியும் யுத்தத்துக்கு ஆயத்தமாக்கினான். காதுகளும் மூக்கும் அறுபட்டு ரத்த வெள்ளமாகக் கும்பகர்ணன் சாயங்கால மேகத்தைப் போல் செக்கச் சிவந்து ஏமாற்றமடைந்த பெருங்கோபத்தோடு காலாந்தகனைப் போல யுத்த களத்துக்கு, ஒரு ஒரு பெரிய இரும்பு உலக்கையைக் கையில் தூக்கிக் கொண்டு மறுபடியும் திரும்பினான்.
*
யாராலும் கும்பகர்ணனைத் தடுக்க முடியவில்லை. கொன்றும் தின்றும் வானர சேனையை அழித்துக் கொண்டே வந்தான். அவன் மேல் வானரர்கள் ஏறி. மலை போன்ற அவன் தேகத்தைக் குத்தியும் கிழித்தும் பார்த்தார்கள். அவனோ இதை ஒன்றும் லட்சியம் செய்யவில்லை. ஈயை ஓட்டி உதறுவது போல் உதறித் தள்ளினான். வானரத் தலைவர்கள் யாராலும் அவனை அடக்க முடியவில்லை. லக்ஷ்மணனும் அம்புகள் எய்து எதிர்த்தான். ஆனால் அரக்கன் அவனை விட்டு விட்டுத் தாண்டிச் சென்று ராமனை எதிர்க்க ஓடினான்.
ராமசந்திரன் அரக்கனோடு நெடுநேரம் போர் செய்தான். ஏழு மரா மரங்களையும் வாலியின் வஜ்ர தேகத்தையும் துளைத்துச் சென்ற அம்பு கும்பகர்ணனுடைய உடலை ஒன்றும் செய்ய முடியவில்லை. கூரிய வேறு பலமான அம்புகளை எய்து, கைகளை வெட்டியும் கால்களை வெட்டியும் தீர்த்தான். ஆயினும் அரக்கன் யுத்தத்தை நிறுத்தவில்லை. முண்டமான கால்களைக் கொண்டே யுத்தகளத்தில் நான்கு புறமும் சென்று வானரர்களை வாயால் விழுங்கிக் கொண்டு வந்தான்.
கடைசியாக ராமன் தன் வில்லை வளைத்து, ஒரு அம்பு செலுத்தி, அரக்கனுடைய தலையை அறுத்துத் தள்ளினான். அறுக்கப்பட்ட தலை இராமன் செலுத்திய சரத்தின் வேகத்தால் ஆகாயத்தில் கிளம்பி லங்கா நகரத்தில் ஒரு மலை விழுவது போல் ஜ்வாலையுடன் விழுந்தது.
*
"காலாந்தகனைப் போன்ற உமது தம்பி கும்பகர்ணன் உத்தம லோகம் அடைந்து விட்டான். அனேக ஆயிரம் வானரர்களைக் கொன்று தின்று வெகுநேரம் ராமலக்ஷ்மணர்களுடைய வானர சேனையைத் தத்தளிக்கச் செய்தான். பிறகு ராமனுடைய சரத்துக்கு இரையானான். அவனுடைய தேகம், புஜங்களும் கால்களும் அறுபட்டு விகாரமடைந்து, காட்டுத் தீயால் எரிபட்ட ஒரு மகா விருக்ஷத்தைப் போல் கிடக்கிறது. வெட்டுண்ட அவன் தேகத்தின் துண்டுகள் பாதி கடலில் விழுந்தும் பாதி கோட்டை வாசலை ஒரு மலைபோல் அடைத்துக் கொண்டுமிருக்கின்றன. தலை அறுபட்டு ஆகாய மார்க்கமாக லங்கையில் விழுந்தது. தங்களுடைய அன்புக்குரிய சகோதரன் வீர சுவர்க்கம் அடைந்து விட்டான்."
இவ்வாறு ராக்ஷசர்கள் ராவணனிடம் தெரிவித்த போது தன் உயிரே போய்விட்டதாக எண்ணினான் ராவணன். சோகத்தால் நினைவு இழந்தான்.
பிறகு பிரக்ஞை வந்த பின் “ஹா வீரனே! எல்லையற்ற பலவானே ! என்னைத் தனியாக விட்டு விட்டு யமலோகம் சென்றாயே! என் வலது கை வெட்டுண்டது! எந்தச் சத்துருவும் கிட்ட நெருங்க முடியாதிருந்த நீ ராமனால் கொல்லப்பட்டாயா? வானத்தில் தேவர்கள் சந்தோஷப்படுவதைக் காண்கிறேன். வானரர்கள் ஆனந்தக் கூத்து ஆடுகிறார்கள். இனி இந்த ராஜ்யம் எனக்கு என்னத்துக்கு? என் அருமைத் தம்பி போனபின் என் உயிரை நான் எதற்காக வைத்திருக்க வேண்டும்? தம்பியைக் கொன்ற ராமனை நான் சித்திரவதை செய்ய வேண்டும்” என்று துக்கமும் ரோஷமும் மேலிட்டுக் கதறினான். மீண்டும் “ஐயோ! விபீஷணன் வார்த்தையைக் கேளாமற் போனேனே!” என்று பிரலாபித்தான்.
திரிசிரன் முதலிய மக்கள்மார் ராவணனைத் தேற்றினார்கள். “பிரலாபிப்பதில் ஒரு பயனுமில்லை. பிரம்மாவிடம் சக்தியும் கவசமும் வில்லும் பாணங்களும் கிடைத்திருக்க ஏன் மனத் தளர்ச்சி அடைகிறீர்?” என்று சொல்லித் தேற்றினார்கள். திரிசிரன் யுத்தத்துக்குப் புறப்பட்டான், “நான் முந்தி” “நான் முந்தி” என்று வேறு பலரும் யானை மேலும் ரதங்களில் ஏறியும் திரிசிரஸைத் தொடர்ந்து சென்றார்கள்.
*
பெரும் யுத்தம் நடந்தது. நராந்தகன் ஒரு குதிரையின் மீது ஈட்டி எடுத்துக் கொண்டு வானர சேனையைத் திணறச் செய்தான். சுக்ரீவனையே நோக்கிச் சென்ற நராந்தகனை அங்கதன் ஆயுதமின்றி எதிர்த்து, அவன் குதிரையையும் அவனையும் கொன்று வீழ்த்தினான்.
இப்படியே தேவாந்தகனும் திரிசிரஸும் மாருதியாலும், மகோதரன் நீலனாலும் கொல்லப்பட்டார்கள். அதிகாயன் லக்ஷ்மணனுடைய அஸ்திரத்திற்கு இரையானான்.
இந்த நால்வரும் நான்கு யமன்களைப்போல கோர யுத்தம் செய்து வானரப் படைக்குப் பெருஞ்சேதம் இழைத்த பின்னரே மாண்டார்கள்.
அதிகாயனும் மாண்டான் என்று அறிந்ததும் ராவணன் மனம் கலங்கிப் போனான்.
“என்ன ஆச்சரியம்! மலை போன்ற தேகங்களும் கடலைப் போன்ற கலங்கா தைரியமும் கொண்ட என் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக இந்தச் சத்துருக்களால் மாண்டார்கள். இதுவரையில் தோல்வி என்பதை அறியாத என் சூரர்கள் எல்லோரும் இப்போது தோல்வியடைந்து வீழ்த்தப்பட்டார்கள். என் மகன் ஒப்பற்ற இந்திரஜித்து கட்டிய நாகபாசத்தையுங்கூட எப்படியோ தெறித்து விட்டு நிற்கிறார்கள். இந்த ராமனுடைய பராக்கிரமம் எனக்கு விளங்காத ஒரு விந்தையாக இருக்கிறது. இவன் நாராயணனே என்று எண்ணுகிறேன்.”
இவ்வாறு ஆச்சரியப்பட்டும் கவலைப்பட்டும் யோசிக்கலானான். மனமுடைந்தான் என்றே சொல்லலாம்.
கோட்டைக்குள் சத்துருப்படை புகுவதற்கில்லாமல், முக்கியமாக அசோக வனத்துக்குள் சத்துருக்கள் நுழையாமலிருப்பதற்குத் தீவிர ஏற்பாடுகள் செய்து விட்டு, அரண்மனைக்குள் தீனனாகப் போய்ச் சேர்ந்தான்!

கருத்துரையிடுக