வெள்ளி, 30 அக்டோபர், 2020

கூவத்தின் சிறுபுனலும் அளப்பரும் ஆழ்கடலும் - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

அளத்தற்கரிய ஆழங்காண முடியாத, பெரும் கடல். அதை எடுத்துக் கையாளாத இலக்கியக் கர்த்தாக்களே கிடையாதென்று சொல்லலாம். அந்த அலை கடலிலே காணும் அரும் பெரும் குணங்களை ஆண்டவனோடு ஒப்பிட்டு கூறுவார்கள் பெரியோர். “கருமேக நெடுங்கடல் காரனையான்” என்று இராமனை தான் இயற்றிய இராமகாதையில் கம்பன் குறிப்பிடுகிறான். கடல் வண்ணனென்றும், ஆழிவண்ணனென்றும் பல பெரியோர்கள் ஆண்டவனை வருணித்து உள்ளார்கள். கடல் தன் நிறத்தினால் மட்டும் ஆண்டவனை ஒத்ததாக இருந்தால் அதற்கு அத்தனை சிறப்பு ஏற்பட்டிருக்க நியாயமில்லை. ஆண்டவன் எங்கும் நிறைந்தவன். எல்லாவிடங்களிலும் பரந்து இருக்கிறான். அவனில்லாமல் அணுவும் அசைய முடியாது. இத்தனை சிறந்த குணங்களிருந்தாலும் அவன் பக்தர்களுக்கு மிகவும் எளியவனாக ஆகிறான். எளியவன் மட்டுமென்ன. சில சமயம் அவர்களுக்கு அடிமையாகவும் ஆகிவிடுகிறான். அத்தன்மை அவனுடைய சிறந்த குணத்தைக் காட்டுகிறது.


அதே போன்று, உலகத்தில் பூமிப்பரப்பைக் காட்டிலும் கடற்பரப்பு அதிகமென்பது நாம் கண்டும், கேட்டும் அறிந்த உண்மையாகும். அதில் வசிக்கும் ஜீவராசிகள் எத்தனை? அதிலே மறைந்து கிடக்கும் அரும் பெரும் பொருள்கள் எத்தனை? இத்தனையிருந்தும் கடலானது தன்னைத்தானே அடக்கிக் கொண்டு பெருந்தன்மையாக இருக்கிறது என்றால் அதன் பெருமையை நாம் எவ்வாறு எடுத்துக்கூறுவது?


கடவுட் தன்மையைக் கடலிலே கண்டார்கள் சான்றோர்கள். அது கரையின்றி நிற்கும் அதிசயத்தை “ஆழாழி கரையின்றி நிற்கவில்லையோ” என்று தாயுமானவப் பெருந்தகை வியந்து பாராட்டினார். அதே கடல் தன் அலைக்கரங்களை வீசியும், அவ்வலைக்கரங்களைத் தனக்குள் தானே அடக்கிக் கொண்டும் நிலைத்து நிற்குந்தன்மையைக் கண்டு அதிசயித்த பன்னிரு வைணவப் பெரியோர்களில் ஒருவராகிய திருமழிசையாழ்வார்.


“தன்னுளே திரைத் தெழுந் தரங்கவெண்றரங்கடல்,

 தன்னுளே திரைத் தெழுந் தடங்குகின்ற தன்மை போல்” 


என்று கடலின் தன்மையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றார். நாமும் அதைக் கண்டு அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை.

உலகத்தைக் கடலானது எச்சமயத்திலும் அழிக்கும் சக்தி வாய்ந்ததாகத்தான் இருக்கிறது. ஆனால் அது தன்னுள் அடங்கியிருக்கும் வலிமையை வெளியேக் காட்டிக் கொள்வதில்லை. அதற்கு வேண்டிய உரிய காலம் வரும் வரை காத்திருக்கத்தான் செய்கிறது. “அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்” என்ற பழமொழியில் அடங்கியுள்ள கருத்தைத்தான் நாம் கடலின் தன்மையிலும் காண்கிறோம். அப்படிப்பட்ட அளத்தற்கரிய அலை கடல் ஒருசமயம் கடற்கரையின் அருகேயுள்ள ஒரு கிணற்றைக் காண நேரிட்டு விடுகிறது. அந்தக் கிணற்றினால் தனக்கு ஆபத்து ஏதாவது நேர்ந்து விடுமோ என்று கடல் பயந்தால் அது நகைப்பிற்குரிய ஒரு சம்பவமாகத்தானே நமக்குப்படும்.


அவ்விதம் அதிசயிக்கத்தக்க ஒரு சம்பவத்தை தான் இயற்றிய இராமகாதையிலே நாம் தெள்ளத் தெளியக்காணும்படி  நமக்குக் காட்டி நம்மை மகிழ்விக்கிறான் கவிச்சக்கரவர்த்தி.


அடைக்கலம் அருளுவதையே தன் வாழ் நாள் முழுவதும் விரதமாகக் கொண்ட அயோத்தி அண்ணல் இராமபிரானின் சரிதத்திலேயுள்ள அந்த நயத்தை அனுபவித்துப் பார்க்க நாமும் இங்கு அந்த இராமகாதையிலே சரண் புகுவோம்.


அன்னை சானகியை சிறையினின்றும் நீக்கும்பொருட்டு அண்ணல், அயோத்தி மன்னன் கடற்கரையிலே வானரச்சேனையுடன் வந்து சேர்ந்து விட்டான் என்பதை அறிந்த இலங்காதிபதி தனது மந்திரிகளுடன் ஆலோசனை செய்தான். அவர்கள் யாவரும் போர்செய்வது ஒன்றையே பெரிதென மதித்து கூறினார்கள். அந்த அவைக்கண் இருந்த வீடணனோ போரிட வந்திருப்பவன் சாதாரண மனிதனல்ல. கருணையங்கடலே காகுத்தனாக வந்திருக்கிறான். அவனது கருணையை வேண்டி  அவனது கால்களில் விழுந்து, அவனிடம் மன்னிப்பு கேட்டு சனககுமாரியையும் அவன்பால் கொண்டு சேர்த்து விடுவதுதான் செயற்குரிய செயலாகும் என்று எத்தனையோ உதாரணங்களோடும் எடுத்துக் கூறினான். “கேடுவரும் பின்னே, மதிகெட்டு வரும் முன்னே” என்ற பழமொழிக்கு இலக்காகி விட்ட இராவணனுக்கு வீடணின் நீதிகள் ஒன்றும் செவியிற் புகவில்லை. இலங்கையை விட்டே வீடணனை வெளியேறும் படி கட்டளையிட்டான்.


தான் இனி என்ன சொல்லியும் தன் அண்ணன் அதை ஏற்க மாட்டான் என்பதை தெளிவாக உணர்ந்த வீடணன் ஆகாய மார்க்கமாக இராமனை காணும் பொருட்டு இலங்கையை விட்டு கிளம்பி விட்டான், அவனது நற்றுணையோன்கள் நால்வருடன்.


அவன் நெஞ்சம் இராமனைக் காணத் துடித்தது. தான் இராவணனுடன் பிறந்திருந்த காரணத்தினால் தன்னை இராமன் ஏற்பானோ மாட்டானோ என்ற ஐயப்பாடும் அவன் மனதில் கணத்திற்கு கணம் தோன்றி மறைந்தது.


கடற்கரையின் வெள்ளிய மணற்பரப்பிலே கடல் போன்ற கவிசேனையின் நடுவிலே இராமனின் பாடிவீட்டைக் கண்டான் வீடணன். அவன் அங்கு சென்ற நேரமோ இரவு. பொழுது புலர்ந்த பிறகு இராமனைச் சென்று காண்பது தான் நலமான செய்கையாகும் என்று காலை வேளையை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.


பொழுதும் புலர்ந்தது. அவனுடன் வந்திருந்த அவனது துணைவர்கள் நால்வருடனும் வீடணன் இராமபிரானைக் காணும் பொருட்டு வானர சேனையின் பக்கமாக வந்து சேர்ந்தான். அவனுடைய உருவத்தைக் கண்ட வானரர்கள் அவனை இராவணனோ என்று சந்தேகித்து அடித்து துன்புறுத்தப் போகும் சமயம் ஏதோ கலவரமாயிருப்பதை தொலைவிலிருந்தே கண்ட இராமன் அனுமனைக் கூப்பிட்டு அதுபற்றி அறியும் பொருட்டு தூதர்களை அனுப்பச் சொன்னான்.


வானரதூதர் இருவர் விரைந்தனர். வீடணன் அங்கு வந்து சேர்ந்திருக்கும் காரணத்தை அறிந்து கொண்ட அவர்கள், வானர வீரர்கள் வீடணனை ஒன்றும் செய்யாதிருக்குமாறு கட்டளையிட்டு, இராமனிடம் திரும்பி வந்து நடந்ததை நடந்தவாறே கூறினார்கள்.


இராமன் தன் அருகிலிருந்த சுக்ரீவன், சாம்பன், நீலன் முதலியோரை வீடணன் வரவைப் பற்றியும் அவனிடத்தில் தான் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியும் தனக்கு ஆலோசனை கூறுமாறு கேட்டான். 


மேற்கூறிய யாவருமே வீடணன் வரவை தாங்கள் சந்தேகிப்பதாகவும், பொன் மானாகி வந்த மாரீசனும் இவனைப் போன்ற ஒரு அரக்கன் தான் என்று இராமனுக்கு நினைப்பூட்டி வீடணனை தங்களுடன் சேர்த்துக் கொள்வது தகாது என்று கண்டிப்பாக கூறிவிட்டார்கள். 


ஆனால் இராமன் என்ன செய்தான்? தன் மனதை திறந்து காட்டி தான் அவதரித்ததின் முழுமுதற் காரணமே அடைக்கலம் அருளுவது என்ற நோக்கமாகும் என்று சொல்லி அடைக்கலமும் தந்தான் வீடணனுக்கு. இங்கு இராமனின் மனஉறுதியை அவன் வீடணனுக்கு அடைக்கலம் அளிக்கப்போவது நிச்சயம் என்பதை அவன் வாய்மொழியாகவே நமக்கு கம்பன் காட்டுகிறான்.


“இன்று வந்தானென்றுண்டோ வெந்தையை யாயை முன்னைக்

கொன்று வந்தானென்றுண்டோ வடைக்கலங் கூறுகின்றான்.”


என்ற இந்த இரண்டு அடிகளிலியே தன்னிடம் வந்து அடைக்கலம் புகுபவன் எவ்விதத் தீய செய்கைகளை உடையவனாயிருப்பினும் அடைக்கலம் என்ற மாத்திரத்திலேயே தான் அடைக்கலம் அளிப்பது உறுதி என்ற தனது உறுதியான கொள்கையை நாம் அறியத் தெரியப்படுத்துகிறான். இதுதான் இராமாவதாரத்தில் மட்டுமேயுள்ள ஓர் தனிச்சிறப்பு.


தான் கொண்ட உறுதிக்கு சான்றுகள் பலவும் இராமன் கூறுவதாக கம்பன் சொல்கிறான். அடைக்கலம் என்று வந்து விழுந்த ஓர் புறாவின் பொருட்டு தன் முன்னோனாகிய, சிபிச் சக்கரவர்த்தி என்பவன் துலையேறிய பெருமையையும், தன் பேடையைக் கொல்லும் பொருட்டு விலைவீசி பிடித்து பசியுடன் தான் வாழும் மரத்தடிக்கே வந்து நின்ற அந்த பொல்லாத வேடனுக்குத் தன் உடலையே அர்ப்பணித்த ஒரு புள்ளின் பெருந்தன்மையையும், ஆழ்ந்த மடுவின் கண் முதலை வாய் அகப்பட்டு தன் முயற்சி பலவற்றிலும் தோற்று தன்னால் இனி ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலைமையில் ஆதிமூலமே காத்தருள்வாய் என்று கதறிய கரியரசனுக்கு கருங்கடல் வண்ணன் கடுகி வந்து இடர் தீர்த்த பெருமையையும் இராமன் தன் துணைவர்களுக்கு சுட்டிக் காட்டி, தான் வீடணனுக்கு அடைக்கலம் அருள்வதானது எவ்விதத்திலும் சாலப் பொருந்தும் என்று இராமன் வாயிலாக கம்பன் கூறுவது அவனுடைய திறமைக்கு ஒரு சான்றாகும். 


இராமன் கருணைப் பெருங்கடல் என்றும் மங்காத ஓர் சுடர்விளக்கு என்பதெல்லாம் நாம் அறிந்த உண்மையே, இருப்பினும் ‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டுமென்று’ சொல்லுவார்கள் அல்லவா? இவ்விடத்தில் சுடர் விளக்காகிய இராமனுக்கு தூண்டு கோலாக நின்றான் சொல்லின் செல்வனாகிய அநுமன்.


சுக்ரீவன் முதலானோரை ஆலோசனை கேட்ட இராமன் தன் அருகிலிருந்த அநுமனையும் கேட்கத் தவறவில்லை. மாருதி சொன்ன பதில் அங்குள்ளோர்களை வியப்பூட்ட செய்ததே தவிர்த்து இராமனை வியப்பூட்டவில்லை. ஏனென்றால், அநுமன் என்ன சொல்வான் என்பது இராமனுக்கு நிச்சயமாகத் தெரியும். அநுமன் சொன்னான், “அரசே நான் தேவியைத் தேடி இலங்கைக்குச் சென்று இராவணனிடம் தேவியை தங்களிடம் சேர்த்துவிடும்படி கூறிய சமயம் இராவணன் கோபித்து என்னைக் கொல்லும்படி கட்டளையிட்டான். என்னைக் கொல்லும் பொருட்டு என்னிடம் விரைந்து வந்த அரக்கர்களை “வந்திருப்பவன் தூதன் என்றறிந்த பின்னர், அவரை கொல்லுதல், முழு பாவம் மிகுதலோடு, பெண்களை, ஆநிரைகளை கொல்வது எவ்வளவு பாவமோ அதுபோன்று தூதுவரை கொல்வதும் மிகப்பெரிய பாவம்” என்று நீதியுரை கூறி தடுத்து நிறுத்தியவன் இந்த வீடணன் தான். 


இலங்கையின் மாளிகையில் திரிந்த போதிலும், நான் கண்ட உண்மை இந்த வீடணன் ஒரு தருமமும், தானமும் செய்திடும் ஒரு நன்மகன். இவனது மகளே சானகி அன்னையிடம், இராவணனுக்கு பிரம்மன் அளித்திட்ட சாபத்தினை, அதாவது விருப்பமில்லா பெண்டிரை தீண்டினால் தலை சுக்கு நூறாக வெடித்து சிதறிடும் என்ற இராவணனின் சாபத்தினை தெரிவித்து அன்னையின் ஆருயிரை காத்தவள் என்றெல்லாம் விளக்கமாக எடுத்துரைத்து இறுதியில் முத்தாய்ப்பாக முடிக்கிறான் அனுமன்.


‘ஏ! இராமனே! பரம்பொருளே! தேவர்க்கும், தானவர்களுக்கும் திசை முகன் முதலாய தேவ தேவர்களால் முடித்திட முடியாத ஒரு பெரும் காரியத்தை முடித்து வைத்திடவே இன்று அவதரித்திரிக்கிறாய். ஒரு ஆபத்தில் அடைக்கலம் என்று வேண்டி வருவோனை திருப்பி அனுப்புவதென்றால் அது எதற்கு ஒப்பாகிடும் எனச் சொல்லி இறுதி வரியை இவ்வாறு முடிக்கிறான்.


‘ஓர் பெருங்கடல், அதன் கரையிலே உருவாகி இருக்கும் ஒரு சிறு ஊற்றினை கண்டு, இதனால் தன் பெயருக்கு குந்தகம் வந்து விடுமோ என எண்ணுவதை போன்றல்லவா இந்த செயல் அமைந்துவிடும், எனவே அடைக்கலம் தந்தருள்வீர்’ என்றான். கம்பனின் பாடலை இதோ படித்து இன்புறுவோம். 


“தேவர்க்கும் தானவர்க்குந் திசைமுகனே முதலாய தேவ தேவர் 

மூவர்க்கும் முடிப்பரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றே 

ஆவத்தின் வந்த பயமென்றானை யயிர்தகல விடுதியாயின்

கூவத்தின் சிறுபுனலைக் கடலயிர்த்த தொவ்வாதோ கொற்றவேந்தே” 


மாருதியின் அமுதம் போன்ற வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த இராமன் அதனை ஏற்று மற்றவர்களையும் மகிழ்ச்சியடையுமாறு சொல்கிறான். அனுமன் சொன்ன அமுத வார்த்தைகள் தான், அந்த சுடர்விளக்காகிய இராமனுக்கு தூண்டுகோலாக இருந்து அவனை ஒரு முடிவிற்கு வரச் செய்தது. இந்தக் கவிதையின் மூலம் நம்மை களிப்புறச் செய்யும் கம்பனின் கவித்திறம் நம் எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக