புதன், 28 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 216

 ஒன்பதாவது ஸ்கந்தம் – இருபத்து நான்காவது அத்தியாயம்

(விதர்ப்பனுடைய பிள்ளைகளின் வம்சங்களைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- சைப்யை மணம்புரிவித்த அப்பெண்மணியிடத்தில் விதர்ப்பன், குசனென்றும், க்ரதனென்றும் இரண்டு பிள்ளைகளைப் பெற்றான். அப்பால், அவளிடத்திலேயே அவ்விதர்ப்பன், ரோமபாதனென்கிற மூன்றாம் பிள்ளையையும் பெற்றான். அவன் வைதர்ப்ப குலத்தை மேன்மேலும் வளரச் செய்தான். ரோமபாதன் பிள்ளை பாரு. அவன் பிள்ளை க்ரது. அவன் பிள்ளை குசிகன். அவன் பிள்ளை சேதி. அவனுக்குச் சைத்யன் முதலியவர்கள் பிறந்தார்கள். அவர்களெல்லோரும் அரசர்களாயிருந்தார்கள். விதர்ப்பனுடைய பிள்ளையாகிய க்ரதனுக்குக் குந்தியென்பவன் பிறந்தான். அவன் பிள்ளை வ்ருஷ்ணி. அவன் பிள்ளை நிர்வ்ருதி (வித்ருதி). அவன் பிள்ளை தசார்ஹன். அவன் பிள்ளை வ்யோமன். அவன் பிள்ளை ஜீமூதன். அவன் பிள்ளை விக்ருதி. அவன் பிள்ளை தீவ்ரரதன். அவன் பிள்ளை நவரதன். அவன் பிள்ளை தசரதன். அவன் பிள்ளை சகுனி. அவன் பிள்ளை கரம்பன். அவன் பிள்ளை தேவராதன். அவன் பிள்ளை தேவக்ஷத்ரன். அவன் பிள்ளை மது. அவன் பிள்ளை குகுரகன். அவன் பிள்ளை புருஹோத்ரன். அவன் பிள்ளை ஸாத்வதன். அவனுக்குப் பஜமானன், பஜி, தீப்தன், வ்ருஷ்ணி, தேவாப்ருதன், அந்தகன், மஹாபோஜன் என்று ஏழு பிள்ளைகள். அவர்களில் பஜமானனுக்கு, ஒரு மனைவியிடத்தில், நிம்ரோசி, கங்கணன், வ்ருஷ்ணி என்று மூன்று பிள்ளைகளும், மற்றொரு மனைவியிடத்தில் சதஜித்து, ஸஹஸ்ரஜித்து, அயுதஜித்து என்று மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். ஸாத்வதனுடைய பிள்ளைகளில் தேவாப்ருதனுடைய பிள்ளை பருவென்பவன். தந்தையும் புதல்வனுமாகிய தேவாப்ருதன், பப்ரு இவர்களின் மஹிமையைப் பற்றிப் பெரியோர்கள் இவ்வாறு பாடுகிறார்கள். 

“தேவாப்ருதன், பப்ரு இவர்களிருவரையும் தூரத்தில் எப்படிப்பட்ட குணமுடையவர்களென்று கேட்கிறோமோ, ஸமீபத்திலும் அவர்களை அப்படிப்பட்ட குணமுடையவர்களாகவே காண்கின்றோம். பப்ரு, மனுஷ்யர்களில் சிறந்தவன். தேவாப்ருதன் தேவதைகளோடொத்தவன். பப்ருவுக்கும், தேவாப்ருதனுக்கும் பின்பு அவர்களுடைய வம்சத்தில் பதினாலாயிரத்து அறுபத்தைந்து புருஷர்கள் உண்டானார்கள். அவர்கள் எல்லோரும் இவர்களின் ப்ரபாவத்தினால் முக்தியை அடைந்தார்கள்” என பெரியோர்கள் பாடுகிறார்கள். ஸாத்வதனுடைய பிள்ளையாகிய மஹாபோஜன் மஹா தர்மிஷ்டன் (அறநெறியைப் பின்பற்றுபவன்). அவனுடைய வம்சத்தில், போஜர்களென்னும் அரசர்கள் பிறந்தார்கள். ஸாத்வதன் பிள்ளைகளில் மற்றொருவனாகிய விருஷ்ணிக்கு, ஸுமித்ரனென்றும், யுதாஜித்தென்றும் இரண்டு பிள்ளைகள். அவர்களில் யுதாஜித்துக்குச் சினியென்றும், அனமித்ரனென்றும் இரண்டு பிள்ளைகள். 

அவர்களில் அனமித்ரன் பிள்ளை நிமனன். அவனுக்கு ஸத்ராஜிதனென்றும், ப்ரஸேனனென்றும் இரண்டு பிள்ளைகள். அந்த அனமித்ரனுக்கே மற்றொரு மனைவியிடத்தில், சினியென்பவன் பிறந்தான். அவன் பிள்ளை ஸத்யகன். அவன் பிள்ளை யுயுதானன். (அவனை ஸாத்யகியென்றும் வழங்குவார்கள்) அவன் பிள்ளை ஜயன். அவன் பிள்ளை குணி. அவன் பிள்ளை யுகந்தரன். அனமித்ரனுக்கே மற்றொரு மனைவியிடத்தில் ப்ருச்னியென்பவன் பிறந்தான். அவனுக்கு ச்வபல்கனென்றும், சித்ரகனென்றும் இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் ச்வபல்கனுக்கு, காந்தினியிடத்தில் அக்ரூரனும், மற்றும் ப்ரஸித்தர்களான பன்னிரண்டு பிள்ளைகளும், பிறந்தார்கள். அவர்கள் அஸங்கன், ஸாரமேயன், ம்ருதுகன், ம்ருதுவித், சிவன், வர்மத்ருக்கு, த்ருஷ்டவர்மன், க்ஷத்ரோபேக்ஷன், அரிமர்த்தனன், சத்ருக்னன், கந்தமாதன், ப்ரதிபாஹு என்னும் பெயருடையவர்கள். அவர்களுக்கு உடன் பிறந்தவள் ஸுஸீரா என்பவள். அவர்களில் அக்ரூரனுக்குத் தேவவான், உபதேவன் என்று இரண்டு பிள்ளைகள். சித்ரரதனுக்கு ப்ருதுவென்பவனும், விதூரதன் முதலிய மற்றும் பல பிள்ளைகளும் பிறந்தார்கள். வ்ருஷ்ணிக்கு, குகுரன், பஜமானன், சுசி, கம்பலபர்ஹிஷன் இவர்கள் பிறந்தார்கள். அவர்களில் குகுரன் பிள்ளை விலோமன். அவன் பிள்ளை கபோதரோமன். அவனுக்கு  தும்புரு ஸ்னேஹிதராயிருந்தார். அவன் பிள்ளை துந்துபி. அவன் பிள்ளை தரித்யோதன். அவன் பின்ளை புனர்வஸு. அவனுக்கு ஆஹுகனென்னும் பிள்ளையும், ஆஹுகியென்னும் புதல்வியும் பிறந்தார்கள். ஆஹுகனுக்கு, தேவகன், உக்ரஸேனன் என்று இரண்டு பிள்ளைகள். அவர்களில் தேவகனுக்கு, தேவவான், உபதேவன், ஸுதேவன், தேவார்த்தனன் என்று நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களுக்கு உடன் பிறந்த பெண்கள் த்ருததேவை, சாந்திதேவை. உபதேவை, ஸ்ரீதேவை, தேவரக்ஷிதை, ஸஹதேவை, தேவகி என்று ஏழு பெயர்கள். அவர்களை வஸுதேவன் மணம் புரிந்தான். 

உக்ரஸேனனுக்குக் கம்ஸன், ஸுநாமன், ந்யக்ரோதன், கஹவன், சங்கு, ஸுபு, ராஷ்ட்ரபாலன், விஸ்ருஷ்டன், துஷ்டிமான் என்னும் பிள்ளைகளும், கம்ஸை, கம்ஸவதி, கங்கை, சூரபூ, ராஷ்ட்ரபாலிகை என்னும் பெண்களும் பிறந்தார்கள். அப்பெண்களை வஸுதேவனுடைய தம்பிகள் மணம் புரிந்தார்கள். விதூரதன் பிள்ளை சூரன். அவன் பிள்ளை த்வஜமானன். அவன் பிள்ளை சிமி. அவன் பிள்ளை ஸ்வயம்போஜன். அவன் பிள்ளை ஹ்ருதிகன். அவனுக்குத் தேவபாஹு, சதகனு, க்ருதவர்மன் முதலியவர்கள் பிறந்தார்கள். தேவமீடனுடைய பிள்ளையாகிய சூரனுடைய பத்னி மாரிஷையென்பவள். அவன் அவளிடத்தில் பரிசுத்தமான பத்துப் பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் வஸுதேவன். தேவபாகன், தேவச்ரவஸ்ஸு, ஆனகன், ஸ்ருஞ்ஜயன், ச்யாமகன்; கங்கன், அனீகன், வத்ஸகன், வ்ருகன் என்னும் பெயருடையவர்கள். வஸுதேவன் பிறந்த பொழுது, தேவதைகள் துந்துபி, ஆனகம் என்ற வாத்யங்களை  முழக்கினார்கள். ஆகையால், அந்த வஸுதேவனை, ஆனக துந்துபியென்று சொல்லுகிறார்கள். 

அந்த வஸுதேவனிடத்தினின்றே, பகவான் ஸ்ரீக்ருஷ்ணனாக அவதரித்தான். இந்த வஸுதேவன் முதலியவர்களுக்கு ப்ருதை, ச்ருததேவை, ச்ருதகீர்த்தி, ச்ருதச்ரவை, ராஜாதிதேவி என்னும் இப்பெண்கள் உடன் பிறந்தவர்கள். வஸுதேவாதிகளின் தந்தையாகிய சூரன், தன் புதல்வியான ப்ருதையென்பவளைத் தன் ஸ்நேஹிதனும், ஸந்ததியற்றவனுமாகிய குந்திபோஜனுக்குப் பெண்ணாகக் கொடுத்தான். (அதைப் பற்றியே அவள் குந்தியென்றும் பெயர் பெற்றாள்) ஒருகால் அவள் துர்வாஸமுனிவரைச் சுச்ரூஷைகளால் (பணிவிடைகளால்) அருள்புரியச் செய்து, அவரிடத்தினின்றும் தேவதைகளை வரவழைக்கும்படியான வித்யையைப் பெற்றாள். அவள், அவ்வித்யையின் திறமையைப் பரீக்ஷித்துப் பார்க்கும் பொருட்டு, ஸூர்யனைப் பூமியில் வரும்படி அழைத்தாள். அப்பொழுதே வந்திருக்கின்ற தேவனாகிய ஸூர்யனைக் கண்டு, மனத்தில் வியப்புற்று, அந்த ஸூர்யனை நோக்கித் தேவனே! “நான், வீர்யத்தைப் பரீக்ஷிக்கும் பொருட்டு இந்த வித்யையை உபயோகப்படுத்திப் பார்த்தேனன்றி, வேறில்லை. ஆகையால், நீ திரும்பிப் போவாயாக. நான் செய்த இந்த அபராதத்தைப் பொறுப்பாயாக” என்றாள். 

அதைக் கேட்ட ஸூர்யனும் “பெண்ணே! தேவதைகளின் காட்சி வீணாகாது. ஆகையால், உன்னிடத்தில் தேவதை போன்றவனும், வீணாகாத வீர்யமுடையவனுமாகிய, ஒரு புதல்வனைப் பிறப்பிக்க விரும்புகிறேன். நான் திருமணம் ஆகாதவள் என்று நீ ஸந்தேஹப்பட வேண்டாம். அழகிய இடையுடையவளே! உன்னுடைய கற்பு கெடாதிருக்குமாறு நான் செய்கிறேன்” என்று மொழிந்து, அந்த ப்ருதையிடத்தில் கர்ப்பத்தை வைத்து விட்டு, ஸூர்யன் ஸ்வர்க்கலோகம் சென்றான். பிறகு, உடனே குமரன் (கர்ணன்) பிறந்தான். அவன் இரண்டாவது ஸூர்யன் போன்றிருந்தான். அவள், உலகத்திற்குப் பயந்து, மனவருத்தத்துடன் அக்குமாரனை நதியின் நீரோட்டத்தில் விட்டாள். அந்த ப்ருதையை, உன் கொள்ளுத் தாத்தாவும், ஸத்யபராக்ரமனுமாகிய பாண்டு மன்னவன், விவாஹம் செய்து கொண்டான். 

ப்ருதையின் தங்கையாகிய, ச்ருததேவையை, கரூஷனுடைய பிள்ளையாகிய த்ருடவர்மன் மணம் புரிந்தான். ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் த்வாரபாலகனாகிய விஜயன், ஸனகாதி மஹர்ஷிகளின் சாபத்தினால், திதியிடத்தில் ஹிரண்யனென்னும் பெயர் பூண்டு பிறந்தான். அவனே, இப்பொழுது இந்த ச்ருததேவையிடத்தில் தந்தவக்த்ரனாகப் பிறந்தான். 

கேகயனும், த்ருஷ்டகேதுவும், ச்ருதகீர்த்தியை வேறு ஆணுடன் தொடர்பு கொண்டாள் என்று வெறுத்தார்கள். அவளிடத்தில் கேகயனுக்கு ஸந்தர்த்தனன் முதலிய ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள். ராஜாதி தேவியிடத்தில் அவந்தியின் பிள்ளைக்கு ஜயத்ஸேனன் பிறந்தான். சேதிராஜனாகிய தமகோஷன் ச்ருதச்ரவஸ்ஸை மணம் புரிந்தான். அவளுக்குச் சிசுபாலன் பிறந்தான். அவன் பிறந்த விதத்தை முன்னமே மொழிந்தேன். 

தேவபாகனுக்குக் கம்ஸையென்னும் மனைவியிடத்தில், சித்ரகேது, ப்ருஹத்பலன் என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். தேவச்ரவஸ்ஸுக்கு கம்ஸவதியென்னும் மனைவியிடத்தில் ஸுவீரன், இஷுமான் என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். கங்கனுக்கு, அவனுடைய மனைவியான கங்கையிடத்தில், பகன், ஸத்யஜித்து, புருஜித்து என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். ஸ்ருஞ்சயன் தன் மனைவியான ராஷ்ட்ரபாலையிடத்தில் வ்ருஷன், துர்மர்ஷணன் முதலிய பிள்ளைகளைப் பெற்றான். ச்யாமகன் தன் மனைவியான சூரபூமியிடத்தில், ஹிரிகேசன், ஹிரண்யாக்ஷன் என்னும் பிள்ளைகளைப் பெற்றான். வத்ஸகனும் மிச்ரகேசியென்னும் அப்ஸரமடந்தையிடத்தில், பகன் முதலிய ஒன்பது பிள்ளைகளைப் பெற்றான். வ்ருகன் தூர்வாக்ஷியென்னும் தன் மனைவியிடத்தில், தக்ஷன், புஷ்கரன், ஸால்வன் முதலிய பிள்ளைகளைப் பெற்றான். 

சமீகன் ஸுதாமையென்னும் தன் மனைவியிடத்தில், ஸுமித்ரன், அனீகபாலன், முதலிய பிள்ளைகளைப் பெற்றான். ஆனகன் காணிகையென்னும் மனைவியிடத்தில், ருததாமன், ஜயன் என்னும் பிள்ளைகளைப் பெற்றான். பௌரவி, ரோஹிணி, பத்ரை, மதிரை, ரோசனை, இலை இவர்களும் தேவகி முதலியவர்களும் வஸுதேவனுடைய பத்னிகள். வஸுதேவன், அவர்களுக்குள் ரோஹிணியிடத்தில், பலன், கதன், ஸாரணன், துர்மதன், விபுலன், த்ருவன் இவர்களையும் க்ருபன் முதலியவர்களையும் பெற்றான். பௌரவியிடத்தில், ஸுபத்ரன், பத்ரபாஹு, துர்மதன், பத்ரன், பூதன் முதலிய பன்னிரண்டு பிள்ளைகளைப் பெற்றான். நந்தன், உபநந்தன், க்ருதகன், சூரன் முதலியவர்கள் மதிரையின் பிள்ளைகள்.

கௌஸல்யையான பத்ரை, குலத்தை வளரச்செய்பவனான கேசியென்னும் ஒரு புதல்வனைப் பெற்றாள். ரோசனையிடத்தில், ஹஸ்தன், ஹேமாங்கதன் முதலியவர்கள் பிறந்தார்கள். அவன் இலையிடத்தில் உருவல்கன் முதலிய யாதவ ச்ரேஷ்டர்களைப் பெற்றான். அவ்வஸுதேவனுக்கு, த்ருததேவையென்னும் மனைவியிடத்தில், த்ரிப்ருஷ்டனென்னும் ஒரு புதல்வன் பிறந்தான். அவனுக்குச் சாந்திதேவையிடத்தில் ப்ரச்ரமன், ப்ரச்ரிதன் முதலியவர்கள் பிறந்தார்கள். அவனுக்கு உபதேவையிடத்தில், கல்பவர்ஷன் முதலிய பத்துப்பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களெல்லோரும் ராஜாக்களாயிருந்தார்கள். 

அவனுக்கு ஸ்ரீதேவையிடத்தில், வஸுஹம்ஸன், ஸுவம்சன் முதலிய ஆறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவனிடத்தினின்று தேவரக்ஷிதை, கதன் முதலிய ஒன்பது பிள்ளைகளைப் பெற்றாள். தர்மன் அஷ்டவஸுக்களைப் பெற்றாற் போல, அவ்வஸுதேவன், ஸஹதேவையால் பௌரவன், ச்ருதன் முதலிய எட்டுப்பிள்ளைகளைப் பெற்றான். ஆழ்ந்த மதியுடைய அவ்வஸுதேவன், தேவகியிடத்திலும் எட்டுப் பிள்ளைகளைப் பெற்றான். கீர்த்திமான், ஸுஷேணன், பத்ரஸேனன், ருஜு, ஸமதனன், பத்ரன் என்று ஆறு பேர்கள். ஏழாவது பிள்ளை நாகேந்த்ரனாகிய ஸங்கர்ஷணன். அந்தத் தேவகீ வஸுதேவர்களுக்கு, ஸ்ரீபகவான் தானே எட்டாவது பிள்ளையாகப் பிறந்தான். அவர்களுக்கு ஸுபத்ரையென்று ஒரு பெண்ணும் பிறந்தாள். அவள், உன் பாட்டனாகிய (தாத்தாவாகிய) அர்ஜுனனை மணம் புரிந்தாள். 

மன்னவனே! எவ்வெப்பொழுது தர்மம் குறைந்து, அதர்மம் தலையெடுக்கின்றதோ, அவ்வப்பொழுதெல்லாம் தன் பக்தர்களின் மனவருத்தங்களைப் போக்கும் தன்மையுடைய பகவான், தன்னைப் படைக்கின்றான். (தான் அவதரிக்கின்றான்). மன்னா! இவனுடைய பிறவிக்கும், செயலுக்கும், இவனுடைய ஸங்கல்பமொழிய, மற்றொரு காரணம் கிடையாது. இவன், புண்ய பாப கர்மங்களைச் செய்கின்ற ஜீவாத்மாக்களை ஸாக்ஷாத்கரிக்கிறவனேயன்றி, தான் கர்மங்களைச் செய்கிறவனன்று; சேதனாசேதன ரூபமான (அறிவற்ற ஜடப்பொருட்கள் மற்றும் ஜீவாத்மாக்களைக் கொண்ட) ஜகத்திற்கெல்லாம், அந்தராத்மாவாயிருந்து, அதை தரித்துக்கொண்டிருப்பவன். இவனுடைய மாயா சேஷ்டிதம் (ஆச்சர்யமான செயல்கள்), ஜீவாத்மாக்களின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்காகவே (அழித்தல்) அன்றித் தனக்காகவன்று. இவன் அவற்றை நடத்துவதும், அவர்களை அனுக்ரஹிப்பதற்காகவே. இவன் ராம, க்ருஷ்ணாதி அவதாரங்களைச் செய்து, சிலரைப் படைப்பதும், சிலரைப் பாதுகாப்பதும், சிலரை அழிப்பதும் செய்து, தன் திவ்யமங்கள விக்ரஹ ஸம்பந்தம் சேர படுப்பது, உட்காருவது, புஜிப்பது, காட்சி கொடுப்பது முதலியவற்றால் அவர்களெல்லோரையும் தேஹாவஸானத்தில் (இந்த பிறவியின் முடிவில்) முக்தி அடையும்படி செய்கிறான்.  

“என்னுடைய ஸ்ருஷ்டி (படைப்பு) முதலிய செயல்களைக் கண்டு, என் பெருமையை அறிந்து, என்னை அடைவதற்கு ஸாதனமான பக்தியோகத்தை அனுஷ்டித்து, மோக்ஷத்தைப் பெறவேண்டும்” என்று இவன் அவதாரங்களைச் செய்து, ஆச்சர்யமான சேஷ்டிதங்களை (செயல்களை) நடத்திக் காட்டுகிறான். ஆகையால், இவனுடைய பிறவியும், செயலும், ஜீவாத்மாக்களுடைய அனுக்ரஹத்திற்காகவே. மன்னவர்கள் போலத் தோற்றுகின்ற அஸுரர்கள், பல அக்ஷெளஹிணி ஸைன்யங்களோடு (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட் படை 109350 கொண்ட பெரும் படைகளோடு) பூமிக்குப் பெரும் பாரமாயிருக்கின்றார்களென்று அதை நீக்கும் பொருட்டு, பகவான் ஸ்ரீக்ருஷ்ணனாக அவதாரம் செய்தான். 

அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான், பலராமனுடன், தேவச்ரேஷ்டர்களான ப்ரஹ்மாதிகள் மனத்தினாலும் நினைக்க முடியாத பல செயல்களை நடத்தினான். கலியுகத்தில் பிறக்கப்போகிற தன் பக்தர்களை அனுக்ரஹிக்கும் பொருட்டு அவர்களுடைய துக்கம், சோகம், அஜ்ஞானம் இவைகளைப் போக்குவதும் புண்யத்தை விளைப்பதுமாகிய தன் புகழைப் பரவச் செய்தான். ஸத்புருஷர்களின் காதுகளுக்கு அம்ருதம் போன்ற அந்தப் புகழாகிற சிறந்த புண்ய தீர்த்தத்தில் எவனேனும் ஒருகால் காது மடல்களாகிற கிண்ணத்திலிட்டு, சிறிது பருகுவானாயின், அவன் கர்ம வாஸனைகளை (முன் வினைகளின் ஆழ்ந்த மனப்பதிவுகளை) உதறி, முக்தியை அடைவான். 

போஜர், வ்ருஷ்ணிகள், அந்தகர், மதுக்கள், சூரஸேனர், தசார்ஹர் இவர்களாலும், குருக்கள், ஸ்ருஞ்சயர், பாண்டவர் இவர்களாலும் புகழப்பட்ட சேஷ்டிதங்களை (செயல்களை) உடையவனாகி, ஸ்நேஹம் (அன்பு, பரிவு) நிறைந்த கண்ணோக்கங்களாலும், கம்பீரமான வாக்யங்களாலும், நடையழகினாலும், ஸர்வாங்க ஸுந்தரமான (எல்லா உறுப்புக்களும் அழகுடன் அமைந்த) தன் திவ்யமங்கள விக்ரஹத்தினாலும், மனுஷ்ய லோகத்தையெல்லாம் மனக்களிப்புறச் செய்தான். மகரகுண்டலங்களை அணிந்து அழகிய காதுகள் தொங்கப்பெற்று விளங்குகின்ற கபோலங்களால் (கன்னங்களால்) ரமணீயமாயிருப்பதும், விலாஸங்களோடு (அழகிய பார்வையோடு) கூடின புன்னகை அமைந்திருப்பதும், அழியாத சோபையுடையதும், காண்போர்களுக்கு நித்யோத்ஸவத்தைக் (தினமும் திருவிழா இன்பத்தைக்) கொடுப்பதுமாகிய, இந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய முகத்தைக் கண்களால் கண்டு, பெண்களும், புருஷர்களும், த்ருப்தி அடையாமல் இமைகளைக் கொட்டும்படி செய்து, கண்பார்வையை மறைக்கின்ற, இமையின் மேல் பெருங்கோபமுற்றிருந்தார்கள். 

முதலில், ஆதியஞ்சோதியுருவுடன் அவதரித்த ஸ்ரீக்ருஷ்ண பகவான், பிறகு மனுஷ்யர்களோடொத்த உருவத்தை ஏற்றுக் கொண்டு, தந்தையினிடத்தினின்று கோகுலத்திற்குச் சென்று, அங்குள்ள நந்தாதிகளின் மன விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றி, பூதனை, சகடாஸுரன் முதலிய சத்ருக்களைக் கொன்று, ருக்மிணி முதலிய பதினாறாயிரம் மனைவிகளை மணம் புரிந்து, அவர்களிடத்தில் பற்பல புதல்வர்களையும் பெற்று, தன் கட்டளையான வேதத்தின் கருத்தை ஜனங்களுக்கு விளங்கச்செய்து கொண்டு, யாகங்களால் தன்னையே ஆராதித்தான். பின்பு குருக்களுக்குள் ஒருவரோடொருவர்க்குக் கலஹத்தை உண்டாக்கிப் பூமியின் பெரும்பாரத்தை நீக்க முயன்று, யுத்தத்தில் ராஜ ஸைன்யத்தையெல்லாம் (படைகளை எல்லாம்) கண்ணோக்கத்தினாலேயே பரிபவித்து (அழித்து), அர்ஜுனன் எல்லோரையும் ஜயித்தானென்னும் பெருங்கோஷத்தை விளைவித்து, உத்தவருக்குப் பரதத்வத்தை உபதேசித்து, தன் ஸ்தானமாகிய வைகுண்டலோகத்தை அடைந்தான். 

இருபத்து நான்காவது அத்தியாயம் முற்றிற்று.

நவம (ஒன்பதாவது) ஸ்கந்தமும் முற்றுப்பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக