ஒன்பதாவது ஸ்கந்தம் – இருபத்து மூன்றாவது அத்தியாயம்
(யயாதியின் பிள்ளைகளான அனு, த்ருஹ்யு, துர்வஸு, யது இவர்களின் வம்சத்தைக் கூறுதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- யயாதியின் நான்காம் பிள்ளையாகிய அனுவுக்கு, ஸபாநரன், சக்ஷு, பரோக்ஷன் என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் ஸபாநரன் பிள்ளை காலநாபன். அவன் பிள்ளை ஸ்ருஞ்சயன். அவன் பிள்ளை ஜனமேஜயன். அவன் பிள்ளை மஹாசாலன். அவன் பிள்ளை மஹாமனஸ்ஸு. அவனுக்கு உசீனரனென்றும், திதிக்ஷுவென்றும் இரண்டு பிள்ளைகள். அவர்களில் உசீனரனுக்கு, சிபி, வனன், க்ரிமி, தர்ப்பன் என்று நான்கு பிள்ளைகள். அவர்களில் சிபிக்கு, வ்ருஷதர்ப்பன், ஸுவீரன், மத்ரன், கேகயன் என்று நான்கு பிள்ளைகள். உசீனரனுடைய தம்பியாகிய திதிக்ஷுவின் பிள்ளை வ்ருஷத்ரதன். அவன் பிள்ளை ஹேமன். அவன் பிள்ளை ஸுதபஸ்ஸு. அவன் பிள்ளை பலி (பிலன்). அந்தப் பலியின் மனைவியிடத்தில், தீர்க்கதமஸ்ஸென்னும் மஹர்ஷியால், அங்கன், வங்கன், கலிங்கன், ஸிம்ஹன் புண்ட்ரன், அந்த்ரன் என்பவர்கள் பிறந்தார்கள். அவர்களெல்லோரும், மன்னவர்களாயிருந்தார்கள். அவர்கள், கிழக்குத் திக்கில், தங்கள் தங்கள் பெயரால் ஆறு தேசங்களை உண்டாக்கினார்கள்.
அவர்களில், அங்கன் பிள்ளை கனபானன். அவன் பிள்ளை ஹவிரதன். அவன் பிள்ளை தர்மரதன். அவன் பிள்ளை சித்ரரதன். அவனுக்குப் பிள்ளையில்லை. அவனே ரோமபாதனென்று ப்ரஸித்தனாயிருந்தான். அவனுக்கு ஸ்நேஹிதனான தசரதன், தன் புதல்வியான சாந்தை என்பவளைக் கொடுத்தான். அப்பெண்மணியை ருச்யச்ருங்கர் மணம் புரிந்தார். அவர், விபண்டக முனிவர்க்கு பெண்மானிடத்தில் பிறந்தவர். ரோமபாதனுடைய ராஜ்யத்தில் மழை பெய்யாதிருக்கையில், மழைக்காக அம்மன்னவனால் அனுப்பப்பட்ட விலைமாதர்கள் சென்று, நாட்யம், ஸங்கீதம், வாத்யம், இவைகளாலும், விலாஸங்களாலும் (பார்வை, விளையாட்டு முதலியவற்றாலும்), ஆலிங்கனம் (கட்டிப்பிடித்தல்) முதலியவைகளாலும் அவரை வசப்படுத்தி, பட்டணத்திற்கு வரவழைத்தார்கள். அந்த ருச்யச்ருங்க முனிவர், ஸந்ததியற்ற தசரத மன்னவனைக் கொண்டு மருத்வானைக் குறித்து ஒரு யாகம் செய்வித்து, அவனுக்கு ஸந்ததி உண்டாகும்படி செய்தார். பிள்ளையில்லாதிருந்த அம்மன்னவனும், அதனால் பிள்ளைகளைப் பெற்றான். ரோமபாதன் பிள்ளை சதுரங்கன். அவன் பிள்ளை ப்ருதுலாக்ஷன். அவனுக்கு ப்ருஹத்ரதன், ப்ருஹத்கர்மன், ப்ருஹத்பானு என்று மூன்று பிள்ளைகள். அவர்களில் ப்ருஹத்ரதன் பிள்ளை ப்ருஹன்மனஸ்ஸு. அவன் பிள்ளை ஜயத்ரதன். அவனுக்கு, ஸம்பூதியென்னும் மனைவியிடத்தில் விஜயன் பிறந்தான். அவன் பிள்ளை த்ருதி. அவன் பிள்ளை த்ருதவ்ரதன். அவன் பிள்ளை ஸத்யகர்மன். அவன் பிள்ளை அதிரதன். இவன் கங்கையின் கரையில் விளையாடிக் கொண்டிருக்கையில், குந்தி, தனக்குத் திருமணம் ஆவதற்கு முன்பு, ஸூர்ய பகவானது அருளால் பிறந்த பிள்ளையை ஒரு பெட்டியில் வைத்து மூடிக் கங்கையின் வெள்ளத்தில் விட, அதில் அடித்துக்கொண்டு வருகின்ற அந்தப் பெட்டியை, ஸந்ததியற்ற அம்மன்னவன் கண்டெடுத்து, அதற்குள்ளிருந்த குழந்தையைத் தனக்குப் பிள்ளையாக வைத்துக்கொண்டான். அந்த பிள்ளை கர்ணனென்னும் பெயருடையவன். அங்க தேசத்து மன்னனான கர்ணனின் மகன் வ்ருஷஸேனன்.
(இனி யயாதியின் மூன்றாம் பிள்ளையான த்ருஹ்யுவின் வம்சத்தைச் சொல்லுகிறேன்)
த்ருஹ்யுவின் பிள்ளை பப்ரு. அவன் பிள்ளை ஸேது. அவன் பிள்ளை ஆரப்தன். அவன் பிள்ளை காந்தாரன். அவன் பிள்ளை கர்மன். அவன் பிள்ளை க்ருதன். அவன் பிள்ளை துர்மதன். அவன் பிள்ளை ப்ரசேதஸ்ஸு. அவனுக்கு நூறு பிள்ளைகள். அவர்கள், வடதிசையில் சென்று ம்லேச்ச தேசங்களுக்கு ப்ரபுக்களாயிருந்தார்கள்.
(இனி யயாதியினுடைய இரண்டாம் பிள்ளையான துர்வஸுவின் வம்சத்தைச் சொல்லுகிறேன்)
துர்வஸுவின் பிள்ளை வஹ்னி. அவன் பிள்ளை பர்க்கன். அவன் பிள்ளை வஹ்னிமான் (பானுமான்). அவன் பிள்ளை ஸுபானு. அவன் பிள்ளை கர்த்தமன். அவன் கம்பீரமான மதி (புத்தி) உடையவன். அவன் பிள்ளை மருத்தன். அவனுக்கு ஸந்ததி கிடையாது. அவர் பூருவின் வம்சத்தில் பிறந்த துஷ்யந்தனைப் பிள்ளையாக வளர்த்துக் கொண்டான். அவன் ராஜ்யத்தை விரும்பி, தன் ஜனக வம்சத்தையே அடைந்தான்.
(இனி, யயாதியின் ஜ்யேஷ்ட புத்ரனாகிய யதுவின் வம்சத்தைச் சொல்லுகிறேன்.)
அது மிகவும் பரிசுத்தமானது; ப்ராணிகளின் ஸமஸ்த பாபங்களையும் போக்கும். ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பரமபுருஷன், இந்த யது வம்சத்தில் மானிட உருவம் பூண்டு அவதரித்தானாகையால், இவ்வம்சத்தைக் கேட்கிற மனிதன், ஸமஸ்த பாபங்களாலும் விடுபடுவான்.
யதுவுக்கு ஸஹஸ்ரஜித்து, க்ரோஷ்டு, நலன், ரிபு என்று நான்கு பிள்ளைகள். அவர்களில் முதல்வனாகிய ஸஹஸ்ரஜித்தின் பிள்ளை சதஜித்து. அவனுக்கு மஹாஹயன், வேணுஹயன், ஹேஹயன் என்று மூன்று பிள்ளைகள். அவர்களில் ஹேஹயன் பிள்ளை தர்மன். அவன் பிள்ளை நேத்ரன். அவன் பிள்ளை குந்தி. அவன் பிள்ளை ஸோஹஞ்சி. அவன் பிள்ளை மஹிஷ்மான். அவன் பிள்ளை பத்ரஸேனகன். அவனுக்குத் துர்மதன், தனகன் என்று இரண்டு பிள்ளைகள். அவர்களில் தனகனுக்கு, க்ருதவீர்யன், க்ருதாக்னி, க்ருதவர்மன், க்ருதௌஜஸ்ஸு என்று நான்கு பிள்ளைகள். அவர்களில் க்ருதவீர்யன் பிள்ளை, அர்ஜுனன். அவன் கார்த்தவீர்யனென்று ப்ரஸித்தனாயிருந்தான். அவன் ஏழு த்வீபங்களுக்கும் ப்ரபுவாயிருந்தான். மற்றும், அவன் பகவானுடைய அம்சாவதாரமாகிய தத்தாத்ரேயரிடத்தினின்று, யோகத்தையும், அணிமாதி ஸித்திகளையும் (அணிமா முதலிய எட்டு பலன்கள் – அவையாவன) –
1. அணிமா - சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல்
2. மஹிமா - பெரிதாக்கிக்கொள்ளுதல்
3. லகிமா - லேசாகச் செய்தல்
4. கரிமா - கனமாக்கிக்கொள்ளுதல்
5. வசித்வம் - எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல்
6. ஈசத்வம் - எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல்
7. ப்ராப்தி - நினைத்த பொருளைப் பெறுதல்
8. ப்ராகாம்யம் - நினைத்தவிடம் செல்லும் வல்லமை)
பெற்றான். ஆயிரம் சொல்லி என்? உலகத்திலுள்ள மன்னவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும், யஜ்ஞம், தானம், தவம், யோகம் இவைகளாலும், சாஸ்த்ர ஜ்ஞானம், வீர்யம், ஜயம் இவை முதலியவைகளாலும் கார்த்தவீர்யார்ஜுனனுடைய கதியை அநுஸரிக்கமாட்டார்கள். இது நிச்சயம். மற்றும் எங்கும் தடைபடாத பலமுடைய அவ்வர்ஜுனன், பகவானுடைய அம்சமாகிய தத்தாத்ரேயரைத் தினந்தோறும் நினைத்துக்கொண்டே, எண்பத்தையாயிரம் வர்ஷங்கள் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தான். அவனை நினைத்த மாத்ரத்தில் கெட்டுப்போன வஸ்துக்களும் தானே அகப்படும். அவன், ஆறு இந்திரியங்களாலும் அழிவற்ற ஸுகத்தை அநுபவித்தான். அவனுக்கு, ஆயிரம் பிள்ளைகள். அவர்களில் ஜயத்வஜன், சூரஸேனன், வ்ருஷணன், மது, ஊர்ஜிதன் என்று ஐந்து பெயர்கள் மாத்ரமே மிகுந்தார்கள். மற்றவர்கள் எல்லோரும், பார்க்கவ ராமனால் (பரசுராமனால்) யுத்தத்தில் மாண்டு போனார்கள்.
மிகுந்த அவர்களில், ஜயத்வஜனுடைய பிள்ளை தாலத்வஜன். அவனுக்கு நூறு பிள்ளைகள்; தாலஜங்கர்களென்னும் பெயருடையவர்கள்; க்ஷத்ரியர்கள். அவர்கள், ஒளர்வ மஹர்ஷியின் தேஜஸ்ஸினால் உதவி செய்யப்பெற்ற ஸகரனால், அழிக்கப்பட்டார்கள். அவர்களில் மூத்தவன் வீதிஹோத்ரன். அவன் பிள்ளை மது. அவனுக்கு நூறு பிள்ளைகள். அவர்களில் வ்ருஷ்ணி என்பவன் மூத்தவன். அவர்கள் மதுவின் பேரன்மார்களாகையால், மாதவர்களென்றும், அவர்களில் வ்ருஷ்ணியே முக்யனாயிருந்தானாகையால், வ்ருக்ஷ்ணிகர்களென்றும், யதுவின் வம்சத்தில் பிறந்தவர்களாகையால் யாதவர்களென்றும், ப்ரஸித்திபெற்றிருந்தார்கள்.
(இவ்வாறு யதுவின் பிள்ளைகளில் முதல்வனுடைய வம்சம் சொல்லப்பட்டது. இனி இரண்டாவனுடைய வம்சத்தைச் சொல்லுகிறேன்).
யதுவின் பிள்ளையாகிய க்ரோஷ்டுவின் பிள்ளை வ்ருஜினவான். அவன் பிள்ளை ச்வாஹிதன். அவன் பிள்ளை ருசேகு. அவன் பிள்ளை சித்ரரதன். அவன் பிள்ளை சசபிந்து. அவன் மஹாயோகி. மிகுந்த பாக்யமுடையவன்; குணங்களால் சிறப்புற்றிருந்தான். அவனிடத்தில், பதினான்கு மஹாரத்னங்கள் இருந்தன. (யானை, குதிரை, தேர், அஸ்த்ரம், பாணம், நிதி, பூமாலை, வஸ்த்ரம், வ்ருக்ஷம், சக்தி, பாசம், ரத்னம், குடை, விமானம் ஆகிய இவையெல்லாம் அவனிடத்தில் சிறந்தவைகளாயிருந்தமையால், பதினான்கு மஹாரத்னங்களென்று வழங்கி வந்தன). அவன் ஏழு த்வீபங்களுக்கும் ப்ரபுவாகி, ஒருவராலும் வெல்லப்படாமல், ஜயசீலனாயிருந்தான். அவனுக்குப் பத்தாயிரம் மனைவிகள் இருந்தார்கள். பெரும்புகழனான அம்மன்னவன், ஒவ்வொருத்தியிடத்திலும் லக்ஷம் பிள்ளைகள் வீதம், அந்தப் மனைவிகளிடத்தில் பத்தாயிர லக்ஷம் பிள்ளைகளைப் பெற்றான். அவர்களில் ஆறு பேர்கள், ப்ரதானர்களாய் (முக்யமானவர்களாய்) இருந்தார்கள். அவர்களில், ப்ருதுச்ரவனென்பவன் ப்ரதானன் (முக்யமானவன்). அவன் பிள்ளை தர்மன். அவன் பிள்ளை உசனன். அவன் நூறு அச்வமேத யாகங்கள் செய்தான். அவன் பிள்ளை ருசகன். அவனுக்கு, புருஜித்து, ருக்மன், ருக்மேஷு, ப்ருது, ஜ்யாமகன் என்று ஐந்து பிள்ளைகள். அவர்களில் ஜ்யாமகன் சைப்யை என்பவளை மணம் புரிந்தான். அவன் அவளிடத்தில் ஸந்ததி உண்டாகப் பெறாதிருந்தும், அவளிடத்தில் பயந்து, மற்றொரு பெண்ணை மணம் புரியவில்லை.
இப்படி இருக்கையில், அவன் சத்ருக்களை ஜயித்து, அவர்களுடைய க்ருஹத்தினின்று, தன்னுடைய போகத்திற்காக ஒரு கன்னிகையைக் கொண்டு வந்தான். அம்மன்னவனுடன் ரதத்தில் இருக்கின்ற அந்தக் கன்னிகையை பார்த்து சைப்யை கோபமுற்றுக் கணவனை நோக்கி “வஞ்சகனே! நான் உட்கார வேண்டிய இடத்தில், ஒரு பெண்ணை உட்கார வைத்துக் கொண்டு வந்திருக்கின்றாயே; இவள் யார்? நான் உட்கார வேண்டிய இடத்தில் மற்றொருத்தியை எப்படி உட்கார வைத்துக்கொண்டாய்?” என்றாள். அப்பால் அம்மன்னவன், அவளிடத்தில் பயந்து, “இவள் உன்னுடைய நாட்டுப் பெண்ணென்று கொண்டு வந்தேன்” என்றான். சைப்யை அதைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே, “நான் மலடி. எனக்குச் சக்களத்தியும் கிடையாது. ஆகையால், இவள் எவ்வாறு எனக்கு நாட்டுப்பெண்ணாவாள்?” என்றாள். அம்மன்னவனும் அதைக் கேட்டு “ராஜபத்னீ ! நீ பெறப்போகிற பிள்ளைக்கு, இவள் மனைவியாகி, உனக்கு நாட்டுப் பெண்ணாவாள்” என்றான். அப்பால், அந்தச் சைப்யை அப்படியேயென்று அங்கீகரித்தாள்.
அப்பொழுது, மனைவியிடத்தில் பயத்தினால் உடம்பெல்லாம் நடுங்கி, வேர்த்திருக்கின்ற அம்மன்னவனுடைய ப்ராண ஸங்கடத்தைப் (மிகுந்த கஷ்டத்தைப்) பார்த்து, முன்பு அவனால் வெகுகாலம் ஆராதிக்கப்பட்ட விச்வதேவதைகளும், பித்ரு தேவதைகளும், அப்படியே ஆகட்டுமென்று அநுமோதனம் செய்தார்கள் (ஆமோதித்தார்கள்). பிறகு சைப்யை கர்ப்பம் தரித்து, காலத்தில் சுபலக்ஷணங்கள் அமைந்த புதல்வனைப் பெற்றாள். அவன் விதர்ப்பனென்று ப்ரஸித்தனாயிருந்தான். பிறகு, சைப்யை தன் பிள்ளைக்குப் பதிவ்ரதையான அந்த நாட்டுப் பெண்ணை, மணம் புரிவித்தாள்.
இருபத்து மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.