திங்கள், 26 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 214

ஒன்பதாவது ஸ்கந்தம் – இருபத்து இரண்டாவது அத்தியாயம்

(திவோதாஸனுடைய வம்சத்தையும், ருக்ஷனுடைய வம்சத்தையும் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- முத்கலனுடைய பிள்ளையாகிய திவோதாஸனுக்கு மித்ராயுவென்பவன் பிறந்தான். அவனுக்கு, சயவனன், ஸுதாஸன், ஸஹதேவன், ஸோமகன் என்று நான்கு பிள்ளைகள். அவர்களில், ஸோமகனுக்கு நூறு பிள்ளைகள். அவர்களில், ஜந்து என்பவன் எல்லார்க்கும் ஜ்யேஷ்டன் (மூத்தவன்). ப்ருஷதனென்பவன், எல்லார்க்கும் கனிஷ்டன் (இளையவன்). ப்ருஷதனுடைய பிள்ளை த்ருபதன். த்ருபதனுக்கு, த்ரௌபதியென்னும் புதல்வியும், த்ருஷ்டத்யும்னன் முதலிய புதல்வர்களும் பிறந்தார்கள். த்ருஷ்டத்யும்னனுடைய பிள்ளை, த்ருஷ்டகேது. பர்ம்யாச்வனுடைய வம்சத்தில் பிறந்த இந்த த்ருஷ்டத்யும்னாதிகள், பாஞ்சாலரென்னும் பெயருடைய முத்கல வம்சத்தில் பிறந்தவர்களாகையால், பாஞ்சாலகர்களென்று கூறப்படுகிறார்கள்.

அஜமீடனுக்கு ருக்ஷனென்று மற்றொரு புதல்வன் இருந்தான். அவன் பிள்ளை ஸம்வரணன். அவன், ஸூர்யனுடைய பெண்ணாகிய தபதியென்பவளிடத்தில், குருவென்னும் புதல்வனைப் பெற்றான். அவன் குருக்ஷேத்ரத்திற்கு ப்ரபு. அந்தக் குருவுக்குப் பரீக்ஷித்து, ஸுதனு, ஜஹ்னு, நிஷதன் என்று நான்கு பிள்ளைகள். அவர்களில் ஸுதனுவின் பிள்ளை ஸுஹோத்ரன். அவன் பிள்ளை ச்யவனன். அவன் பிள்ளை க்ருதி. அவன் பிள்ளை உபரிசரவஸு. அவனுக்கு, ப்ருஹத்ரதன், குஸும்பன், மத்ஸ்யன், ப்ரத்யக்ரன், சேதிபன் முதலிய இவர்கள் பிள்ளைகள். அவர்கள் சேதி தேசங்களை ஆண்டு வந்தார்கள். அவர்களில், ப்ருஹத்ரதனுடைய பிள்ளை குசாக்ரன். அவன் பிள்ளை ருஷபன். அவன் பிள்ளை புஷ்பவான். அவன் பிள்ளை ஹிதன் (ஸத்யஹிதன்). அவன் பிள்ளை ஜஹு (ஜகு).

ப்ருஹத்ரனுக்கு மற்றொரு பார்யையிடத்தில் (மனைவியிடத்தில்), இரண்டு துண்டங்கள் பிறந்தன. அவற்றை அவள் வெளியில் போட்டாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஜரை என்னும் ராக்ஷஸி, “ஜீவிப்பாயாக. ஜீவிப்பாயாக.” என்று சொல்லிக்கொண்டு, அவ்விரண்டு துண்டங்களையும் ஒன்று சேர்த்தாள். ஜரை ஸந்தானம் செய்ததனால் (சேர்த்ததால்), அப்புதல்வன் ஜராஸந்தனென்று பெயர்பெற்றான். ஜராஸந்தனுக்கு, ஸஹதேவன் பிறந்தான். ஸஹதேவனுக்கு ஸோமாபியென்றும், ஸ்ருதஸ்ரவனென்றும் இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். குருவின் பிள்ளைகளில், பரீக்ஷித்துக்கு ஸந்ததி இல்லை. ஜஹ்னுவுக்கு ஸுரதனென்பவன் பிறந்தான். அவன் பிள்ளை விதூரதன். அவன் பிள்ளை ஸார்வபௌமன். அவன் பிள்ளை ஜயஸேனன். அவன் பிள்ளை ராதிகன். அவன் பிள்ளை த்யுமான். அவன் பிள்ளை க்ரோதனன். அவன் பிள்ளை தேவாதிதி. அவன் பிள்ளை ருக்ஷன். அவன் பிள்ளை திலீபன். அவன் பிள்ளை ப்ரதீபன். அவனுக்கு, தேவாபி, சந்தனு, பாஹ்லீகன் என்று மூன்று பிள்ளைகள். அவர்களில் தேவாபி, தந்தை கொடுத்த ராஜ்யத்தைத் துறந்து, வனத்திற்குச் சென்றான். பிறகு, சந்தனு ராஜ்யத்தை ஆண்டு வந்தான். அவன் பூர்வ ஜன்மத்தில், மஹாபிஷனென்று பெயர் பெற்றிருந்தான். அவன் இந்த ஜன்மத்தில் எவரெவரைக் கைகளால் தொடுகிறானோ, அவர்கள் அனைவரும் கிழவர்களாயினும், யௌவன (இளம்) வயதைப் பெற்று, மேலான சாந்தி குணத்தையும் அடைந்து கொண்டிருந்தார்கள். அதனால், அவன் ஜனங்களுக்கு ஸுகத்தை விளைத்துக் கொண்டிருந்தானாகையால், சந்தனுவென்று பெயர் பெற்றான். 

ஒரு கால், அவனுடைய ராஜ்யத்தில் பன்னிரண்டு வர்ஷங்கள் வரையில் மேகம் மழை பெய்யாமலேயிருந்தது. அப்பொழுது, அம்மன்னவன் ப்ராஹ்மணர்களை அழைத்து இதற்கென்ன காரணமென்று வினவ, அவர்கள் அம்மன்னவனை நோக்கி “உன் தமையன் தேவாபி இருக்க, அவனுக்கு முன்னே நீ ராஜ்யத்தை அனுபவிக்கிறாயாகையால், தமையன் விவாஹம் செய்துகொள்ளாதிருக்கையில் விவாஹம் செய்து கொண்ட தம்பியின் தோஷத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றாய். ஆகையால், அந்தத் தோஷம் தீரும்பொருட்டு, ராஜ்யத்தைத் தமையனுக்குக் கொடுப்பாயாக. அப்பால் மழை பெய்யும்” என்றார்கள். 

அம்மன்னவனும், மழை பெய்து நாடுகளும், நகரங்களும் க்ஷேமப்பட வேண்டுமென்று விரும்பி, வனத்திற்குச் சென்று “க்ஷத்ரியனுக்கு ப்ரஜைகளைப் (மக்களைப்) பாதுகாக்கை முதலியவை முக்யமான தர்மம். ஆகையால், நீ ராஜ்யத்தை அங்கீகரிக்க வேண்டும்” என்று தமையனான தேவாபியை நல்வார்த்தை சொல்லி வேண்டினான். அதற்கு முன்னமே அவனுடைய மந்த்ரியாகிய அச்மராதனென்பவன், தேவாபியை ராஜ்யத்திற்குத் தகாதவனாகச் செய்யும் பொருட்டு, அந்தணர்களை அனுப்பி, பாஷண்ட மதத்தைச் (வேதத்தில் சொல்லப்பட்ட வழிமுறைகளுக்குப் புறம்பான மதத்தைச்) சார்ந்த உரைகளை கூறச்செய்து, தேவாபியை வேத மார்க்கத்தினின்றும் நழுவச் செய்தான். அதனால், அவன் தன்னை வேண்டுகின்ற சந்தனுவைப் பார்த்து, வேத வாதங்களைப் பழித்து, வீண் பேச்சுக்களைப் பேசினான். அவ்வாறு அந்தத் தேவாபி வேத மார்க்கத்தினின்று நழுவி, ராஜ்யத்திற்குத் தகாதவனாகிவிட்டபடியால், சந்தனுவினுடைய தோஷம் நீங்கி, அவனுடைய ராஜ்யத்தில் மேகம் மழை பெய்தது. தேவாபி யோகிகள் வசிக்கும் கலாப கிராமத்திற்குச் சென்று, யோகத்தை அனுஷ்டித்துக் கொண்டிருந்து, கலியுகத்தில் ஸோமவம்சம் அடியோடு அழிந்து போகையில், அதை மீளவும் புத்ர, பௌத்ர, பாரம்பர்யமாய் வளர்த்து நிலைநிறுத்தப்போகிறான். ப்ரதீபனுடைய பிள்ளையாகிய பாஹ்லீகனுக்கு, ஸோமதத்தன் பிறந்தான். அவனுக்குப் பூரி, பூரிச்ரவன், சலன் என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். 

கங்கை ப்ரஹ்ம சாபத்தினால், மனுஷ்ய பெண்ணாய்ப் பிறந்து, சந்தனுவை மணந்தாள். அவனுக்கு அந்தக் கங்கையிடத்தில், ஆத்ம ஜ்ஞானியான பீஷ்மர் பிறந்தார். மற்றும், அவர் தர்மத்தை அறிந்தவர்களில் சிறந்தவர்; மஹாபாகவதர்; வித்வான்; வீர ஸைன்யத்திற்கு நாயகராகி, முன்னின்று நிர்வஹிக்கும் திறமையுடையவர். அவர், தன் குருவான பரசுராமரையும் யுத்தத்தில் வென்று, ஸந்தோஷப்படுத்தினார். (முன்பு உபரிசரவஸுவின் வீர்யத்தை மீன் உண்ண, அதன் வயிற்றில், அவ்வீர்யம் ஒரு பெண்ணாகி வளர்ந்தது. செம்படவர்கள் அந்த மீனைப் பிடித்து, அதன் வயிற்றிலிருந்த பெண்ணை எடுத்து, வளர்த்தார்கள். அவள் மதஸ்யகந்தியென்றும், யோஜனகந்தியென்றும், ஸத்யவதியென்றும் பல பெயர்களைப் பெற்றாள். சந்தனு, தன் மனைவியான கங்கை மறைகையில், அந்தச் செம்படவர்கள் வளர்த்த ஸத்யவதியை மணம் புரிந்தான்). அவனுக்கு, அந்த மத்ஸயகந்தியென்னும் செம்படவப் பெண்ணிடத்தில், சித்ராங்கதனென்றும், விசித்ரவீர்யனென்றும் இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் சித்ராங்கதன், தன்னோடொத்த பெயருடைய (சித்ராங்கதனென்கிற) கந்தர்வனால் யுத்தத்தில் முடிக்கப்பட்டான். இந்தச் செம்படவப்பெண்ணைச் சந்தனு மணம் புரிவதற்கு முன்பே, இவளுக்குப் பராசரரிடத்தினின்று பகவானுடைய அம்சாவதாரமான, வ்யாஸர் பிறந்தார். அவர் வேதங்களையெல்லாம் பாதுகாத்தார். க்ருஷணத்வைபாயனர் என்றும் அவரை வழங்குவதுண்டு. 

சுகரென்று ப்ரஸித்திபெற்ற நான், அவரிடத்தினின்று பிறந்தவன். நானோருவனே, இந்த ஸ்ரீபாகவதத்தை அவரிடத்தில் அத்யயனம் செய்தேன். பாதராயணரென்று ப்ரஸித்தரும், மஹானுபாவருமாகிய அந்த வ்யாஸர், பைலர் முதலிய தன் சிஷ்யர்களை உபேக்ஷித்து (விட்டு விட்டு), தம் புதல்வனும் மிகுந்த சாந்த குணமுடையவனுமாகிய எனக்கு மாத்ரமே பரம ரஹஸ்யமான இந்த ஸ்ரீபாகவதமென்னும் புராணத்தை உபதேசித்தார். சந்தனுவின் பிள்ளையாகிய விசித்ரவீர்யன், பீஷ்மர் ஸ்வயம்வரத்தினின்று பலாத்காரமாகக் கொண்டு வந்த அம்பிகை, அம்பாலிகையென்கிற காசி ராஜன் புதல்விகளிருவரையும் மணம் புரிந்தான். அவர்களிடத்தில் மனதைப் பறிகொடுத்த அந்த விசித்ரவீர்யன், க்ஷயரோகத்தினால் (காச நோய்) மரணம் அடைந்தான். 

மஹானுபாவராகிய பாதராயணர், தன் தாயான ஸத்யவதியினால் சொல்லப்பட்டு, ஸந்ததியற்ற தன் ப்ராதாவான (ஸகோதரனான) விசித்ரவீர்யனுடைய க்ஷேத்ரமாகிய அம்பிகையிடத்தில், திருதராஷ்ட்ரனையும், அம்பாலிகையிடத்தில் பாண்டுவையும், அவனுடைய தாஸியிடத்தில், விதுரனையும் பிறப்பித்தார். திருதராஷ்ட்ரனுக்கு, அவன் மனைவியான காந்தாரியிடத்தில், நூறு பிள்ளைகளும் துச்சலையென்னும் ஒரு பெண்ணும் பிறந்தார்கள். பிள்ளைகளில் மூத்தவன் துர்யோதனன். பாண்டுவுக்குக் குந்தியென்றும், மாத்ரியென்றும் இரண்டு மனைவிகள். அவன், வனத்தில் மானுருவம் பூண்டு க்ரீடித்துக் (விளையாடிக்) கொண்டிருந்த ரிஷி தம்பதிகளின் சாபத்தினால், தன் மனைவிகளிடத்தில் சேர்க்கை தடைபெற்றிருந்தான். அவன் மனைவியான குந்தியிடத்தில், எமதர்மன், வாயு, இந்திரன் இவர்களிடத்தினின்று யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் முதலிய மூன்று பிள்ளைகளும், மற்றொரு மனைவியான மாத்ரியிடத்தில் அஸ்வினி தேவதைகளிடத்தினின்று, நகுலன், ஸஹதேவன் என்று இரண்டு பிள்ளைகளும் பிறந்தார்கள். யுதிஷ்டிரன் முதலிய ஐவர்களுக்கும் ஒரே மனைவியான த்ரௌபதியிடத்தில் ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் ஐவரும், ஸந்ததியில்லாமலே முடிந்தார்கள். த்ரௌபதியிடத்தில் யுதிஷ்டிரனுக்கு ப்ரதிவிந்தனும், பீமஸேனனுக்கு ஸ்ருதஸேனனும், அர்ஜுனனுக்கு ச்ருதகீர்த்தியும், நகுலனுக்குச் சதானீகனும், ஸஹதேவனுக்கு ஸ்ருதகர்மாவும் பிறந்தார்கள். மற்றும் யுதிஷ்டிராதிகளுக்கு, வேறு மனைவிகளிடத்தில் வேறு பிள்ளைகளும் பிறந்திருந்தார்கள். 

யுதிஷ்டிரனுக்குப் பௌரவியிடத்தில் தேவகனும், பீமஸேனனுக்கு ஹிடிம்பையிடத்தில் கடோத்கஜனும், அவனுக்கே காளியிடத்தில் ஸர்வகதனும், ஸஹதேவனுக்குப் பர்வத புத்ரியாகிய விஜயையிடத்தில் ஸுஹோத்ரனும், நகுலனுக்குக் கரேணுமதியிடத்தில் வீரமித்ரனும் (நிரமித்ரனும்) பிறந்தார்கள். அர்ஜுனன், இராவதியிடத்தில் இராவானையும், மணலூருபதியின் புதல்வியாகிய உலூபியிடத்தில், பப்ருவாஹனனையும் பெற்றான். மணலூரு மன்னவன் தன் புதல்வியை அர்ஜுனனுக்குக் கொடுக்கும்பொழுது, “ப்ராதாவில்லாத (சகோதரன் இல்லாத) இக்கன்னிகையை அலங்கரித்து, உனக்குக் கொடுக்கிறேன். இவளிடத்தில் பிறக்கும் பிள்ளையை, எனக்குப் பிள்ளையாகக் கொடுக்க வேண்டும்” என்னும் ஏற்பாட்டுடன் கொடுத்தானாகையால், பப்ருவாஹனன் அர்ஜுனன் பிள்ளையாயினும் தன் பாட்டனாகிய மணலூருபதியின் புதல்வனாயினான். அவ்வர்ஜுனனுக்கு, ஸுபத்ரையிடத்தில் உன் தந்தையாகிய அபிமன்யு பிறந்தான். அவன் அதிரதர்களான (பலருடன் ஒருவனாகப் போரிடும் திறமை உடைய) ஸமஸ்த வீரர்களையும் ஜயித்தவன்; மஹாவீரன். 

அந்த அபிமன்யுவுக்கு உத்தரையிடத்தில் நீ பிறந்தாய். துர்யோதனன் முதலிய கௌரவர்கள் அனைவரும் பாழாகையில், கோபமுற்ற, அஸ்வத்தாமாவின் ப்ரஹ்மாஸ்த்ர தேஜஸ்ஸினால், நீ கர்ப்பத்திலிருக்கும் பொழுதே கொளுத்தப்பட்டாய். பிறகு, ஸ்ரீக்ருஷ்ணனுடைய மஹிமையினால் நீ, ம்ருத்யுவிடத்தினின்று (மரணத்திலிருந்து) விடுபட்டுப் பிழைத்தாய். 

அப்பா! மன்னவனே! ஜனமேஜயன், ருதஸேனன், பீமஸேனன், உக்ரஸேனன் என்கிற இந்நால்வரும் உன் பிள்ளைகள். இவர்களில், ஜனமேஜயன், நீ தக்ஷகனால் மரணமடைந்ததை அறிந்து, பெருங்கோபமுற்று, ஸர்ப்ப யாகம் செய்து, ஸர்ப்பங்களையெல்லாம் ஹோமம் செய்து அழிக்கப் போகிறான். அவன் கவஷா தேவியின் புத்ரனான துரர் என்பவரைப் புரோஹிதராக ஏற்படுத்திக்கொண்டு, பூமண்டலத்திலுள்ள ஸமஸ்த ராஜாக்களையும் ஜயித்து, அச்வமேத யாகங்கள் செய்யப்போகிறான். அவனுக்குச் சதானீகனென்னும் புதல்வன் பிறக்கப்போகிறான். அவன் யாஜ்ஞ்யவல்க்யரிடத்தில், வேதங்களை ஓதி, க்ருபரிடத்தில் அஸ்த்ர ஜ்ஞானத்தையும், ஸௌனகரிடத்தில் ஆத்ம, பரமாத்ம ஜ்ஞானத்தையும், பெறப்போகிறான். 

அந்தச் சதானீகனுக்கு, ஸஹச்ரானீகனும், அவனுக்கு அச்வமேதஜனும், அவனுக்கு அஸீமக்ருஷ்ணனும், அவனுக்கு நேமிசக்ரனும் பிறக்கப் போகிறார்கள். ஹஸ்தினாபுரம், கங்காப்ரவாஹத்தில் அமிழ்ந்து பாழாகையில், அவன் அதினின்று புறப்பட்டுக் கௌசாம்பி என்னும் பட்டணத்தில் வஸிக்கப்போகிறான். அவனுக்கு உக்தனும், அவனுக்குச் சித்ராதனும், அவனுக்கு சுசிரதனும், அவனுக்கு வ்ருஷ்டிமானும், அவனுக்கு ஸுஷேணனும், அவனுக்கு ஸுநீதனும், அவனுக்கு ந்ருசக்ஷுவும், அவனுக்கு ஸுகீநலனும், அவனுக்குப் பாரிப்லவனும், அவனுக்கு மேதாவியும், அவனுக்கு ஸுநயனும், அவனுக்கு ந்ருபஞ்சயனும், அவனுக்குத் தூர்வனும், அவனுக்கு திமியும், அவனுக்கு ப்ருஹத்ரதனும், அவனுக்கு ஸுதாஸனும், அவனுக்குச் சதானீகனும், அவனுக்குத் துர்த்தமனனும், அவனுக்கு பஹீனரனும், அவனுக்குத் தண்டபாணியும், அவனுக்கு நிமியும், அவனுக்கு க்ஷேமகனும் பிறக்கப்போகிறார்கள். 

இவ்வாறு ப்ராஹ்மண குலத்திற்கும், க்ஷத்ரிய குலத்திற்கும் காரணமான ஸோமவம்சம், தேவதைகளாலும் அருள் புரியப் பெற்றது. இவ்வம்சம், கலியுகத்தில் க்ஷேமகராஜன் வரையில் தொடர்ந்து வந்து அவனோடு முடியப்போகின்றது.

(அஜமீடனுடைய பேரனாகிய ஸம்வரணன் பிள்ளை குரு. அவனுக்குப் பரீக்ஷித்து, ஸுதனு, ஜன்ஹு, நிஷதாச்வன் முதலிய நான்கு புதல்வர்கள். அவர்களில் பரீக்ஷித்துக்குப் பிள்ளையில்லையென்று முன்னமே மொழியப்பட்டது. ஸுதனு, ஜஹ்னு இவர்களின் வம்சம் கூறப்பட்டது. நிஷதாச்வனுடைய வம்சம் சொல்லவில்லை. ஸுதனுவின் வம்சத்தில் ஒருவனான ப்ருஹத்ரதனுடைய வம்சம் ஜஹு வரையில் சொல்லப்பட்டது. ப்ருஹத்ரதனுடைய மற்றொரு மனைவிக்குப் பிறந்தவன் ஜராஸந்தன். ஜராஸந்தன் மகன் ஸஹதேவன். இப்போழுது மகத தேச மன்னனான ஸஹதேவனுடைய வம்சத்தில் வரப்போகிற மன்னவர்களைச் சொல்லத் தொடங்குகிறார்). 

இனி, மகத தேசாதிபதிகளாக வரப்போகிற மன்னவர்களைச் சொல்லுகிறேன், கேட்பாயாக. 

ஜராஸந்தனுடைய பிள்ளையான ஸஹதேவனுக்கு, மார்ஜாரியும், அவனுக்கு ச்ருதச்ரவனும், அவனுக்கு அயுதாயுவும், அவனுக்கு நிரமித்ரனும், அவனுக்கு ஸுநக்ஷத்ரனும், அவனுக்கு ப்ருஹத்ஸேனனும், அவனுக்குக் கர்மஜித்தும், அவனுக்கு ச்ருதஞ்ஜயனும், அவனுக்கு விப்ரனும், அவனுக்கு சுசியென்னும் ப்ராஹ்மணனும், அவனுக்கு க்ஷேமனென்னும் க்ஷத்ரியனும், அவனுக்கு ஸுவ்ரதனும், அவனுக்குத் தர்மஸூத்ரனும், அவனுக்கு சமனும், அவனுக்கு த்யுமத்ஸேனனும், அவனுக்கு ஸுமதியும், அவனுக்கு ஸுபலனும், அவனுக்கு ஸுநீதனும், அவனுக்கு ஸத்யஜித்தும், அவனுக்கு விச்வஜித்தும், அவனுக்குப் ரிபுஞ்சயனும் பிறக்கப்போகிறார்கள். இவர்கள் அனைவரும், ப்ருஹத்ரதனுடைய வம்சத்தில் வரப்போகிறவர்கள். இவ்வம்சம் ஆயிரமாண்டுகள் வரையில் தொடர்ந்து வந்து, அப்பால் முடியப் போகின்றது. 

இருபத்திரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக