சனி, 24 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 213

 ஒன்பதாவது ஸ்கந்தம் - இருபத்தொன்றாவது அத்தியாயம்

(பரதனுடைய ஸந்ததியையும் (பரம்பரையையும்), ரந்தி தேவனுடைய வ்ருத்தாந்தத்தையும் (கதையையும்) கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- விததனுடைய பிள்ளை மன்யு. அவனுக்கு, ப்ருஹத்க்ஷத்ரன், ஜயன், மஹாவீர்யன், நரன், கர்க்கனென்று ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில், நரனுடைய பிள்ளை ஸங்க்ருதி. பரீக்ஷித்து மன்னவனே! ஸங்க்ருதிக்குக் குருவென்றும், ரந்திதேவனென்றும் இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். ரந்திதேவனுடைய கீர்த்தியை (புகழை), இஹ (இந்த) லோகத்திலும், பர (வேறு) லோகத்திலும் பாடுகிறார்கள். அவன் தான் ஒரு முயற்சியும் செய்யாமல், தெய்வாதீனமாய்க் கிடைத்தவைகளைக் கொண்டு ஸந்தோஷமுற்றிருப்பவன்; அவ்வப்பொழுது, தெய்வாதீனமாய்க் கிடைத்தவற்றையெல்லாம் புசிக்க விரும்புகின்றவர்களுக்குக் கொடுத்துவிடும் தன்மையன். ஸாயங்காலத்திற்கென்றாவது, நாளைக்கென்றாவது சிறிதும் மிகுத்து வைத்துக்கொள்வது அவனுக்கு வழக்கமில்லை. அவன் குடும்பத்துடன் இளைத்திருப்பினும், ஜிதேந்தரியனாகையால் (புலன்களை வென்றவனாகையால்), அதைப்பற்றி வருத்தமுறாமலேயிருப்பான். அவன் ஒருகால் ஆஹாரமின்றி, ஜலத்தையும் கூடப் பருகாமல், நாற்பத்தெட்டு நாள் வெறுமனே இருந்தான். அவனுடைய குடும்பம் வருத்தமுற்றிருந்தது. பசி, தாஹங்களால் நடுக்கமுற்றிருக்கின்ற அம்மன்னவன், ஒருநாள் காலையில் தெய்வாதீனமாய்க் கிடைத்த நெய், பாயஸம், அப்பம் இவைகளையும், ஜலத்தையும் புசிக்க விரும்பித் தொடங்குகையில், அப்பொழுது ஒரு ப்ராஹ்மணன் அதிதியாக அவ்விடம் வந்தான். அந்த ரந்தி தேவன், ப்ரீதியுடனும், சிரத்தையுடனும் கூடி, ஸமஸ்த பூதங்களிலும் பரமபுருஷன் வஸிக்கிறானாகையால், எல்லாம் பகவத் ஸ்வரூபமென்று பாவித்து, தான் புசிக்க வைத்திருந்த நெய், பாயஸம் முதலியவற்றை அந்த அதிதிக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அந்த ப்ராஹ்மணன், அதைப் புசித்துப் போனான். பிறகு, அம்மன்னவன் மிகுந்த அன்னத்தை, தன் குடும்பத்திற்குப் பங்கிட்டுக்கொடுத்துத் தானும் புசிக்க விரும்புகையில், ஒரு கீழ் குலத்தவன் மற்றொரு அதிதியாய் வந்து சேர்ந்தான். அம்மன்னவன், பகவானை நினைத்துக்கொண்டு, தனக்காக வைத்துக் கொண்டிருப்பதில், அவனுக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அவன் போனபின்பு, மற்றொருவன் நாய்களால் சூழப்பெற்று, அதிதியாய் வந்து, அம்மன்னவனைப் பார்த்து “ராஜனே! என் கூட்டத்துடன் பசியினால் வருந்துகின்ற எனக்கு அன்னம் கொடுப்பாயாக” என்றான். அம்மன்னவன், அதிதிகளுக்குக் கொடுத்து, மிகுந்திருக்கின்ற அவ்வன்னத்தை வெகுமதியுடன் நாய்களுக்கும், அவற்றையோட்டிக்கொண்டு வந்தவனுக்கும், கொடுத்துப் பரமபுருஷ பாவனையால் அவனுக்கு நமஸ்காரம் செய்தான். பிறகு, ஜலம் மாத்ரமே மிகுந்திருந்தது. அதுவும் ஒருவனுக்கு மாத்ரமே த்ருப்தியை விளைக்கக்கூடிய அளவுள்ளதாயிருந்தது. அம்மன்னவன், அந்த ஜலத்தைப் பானஞ் செய்யத் தொடங்குகையில், ஒரு புலையன் வந்து,  “மன்னவனே ! நீசனாகிய (தாழ்ந்தவனாகிய) எனக்கு ஜலம் கொடுப்பாயாக” என்றான். அந்தப் புலையன் மொழிந்த வார்த்தை மிகவும் தீனமாகி, அவனுடைய வருத்தத்தையெல்லாம் வெளியிடக்கூடியதாயிருந்தது. ரந்திதேவன் அவ்வசனத்தைக் கேட்டு, மன இரக்கத்தினால் மிகவும் பரிதபித்து, அவனைக் குறித்து இவ்வாறு அம்ருதம் போன்ற வசனத்தை மொழிந்தான்.

ரந்திதேவன் சொல்லுகிறான்:- அணிமாதி அஷ்டைச்வர்யங்களோடு (அணிமா முதலிய எட்டு பலன்கள்) - அவையாவன- 

1. அணிமா - சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல் 

2. மஹிமா - பெரிதாக்கிக்கொள்ளுதல் 

3. லகிமா - லேசாகச் செய்தல் 

4. கரிமா - கனமாக்கிக்கொள்ளுதல் 

5. வசித்வம் - எல்லாவற்றையும் தன் வசமாக்கிக் கொள்ளுதல் 

6. ஈசத்வம் - எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல் 

7 .ப்ராப்தி - நினைத்த பொருளைப் பெறுதல் 

8. ப்ராகாம்யம் - நினைத்தவிடம் செல்லும் வல்லமை)

கூடின ப்ரஹ்மாதிகளின் கதியையாவது, மோக்ஷத்தையாவது நான் விரும்பவில்லை. பசி, தாஹங்களால் வருந்துகிற ப்ராணிகளின் மனத்தில் உண்டாகிற வருத்தத்தையெல்லாம், நானொருவனே அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஏனென்றால், அப்பொழுது எல்லோரும் துக்கமற்றிருப்பார்களல்லவா? மன இரக்கத்திற்கிடமாகி ஜீவிக்க வேண்டுமென்று விரும்புகின்றவனுக்கு, ப்ராணன்களைத் தரிக்கச் செய்யவல்ல ஜலத்தைக் கொடுப்பதனாலேயே, பசி, தாஹங்களால் விளையும் வருத்தம் சரீர ஆயாஸம் (உடற் களைப்பு), தைன்யம் (வலிவற்ற நிலை), ச்ரமம், சோகம், வ்யஸனம் (துக்கம்) மோஹம் (மயக்கம்) ஆகிய இவையெல்லாம் பறந்து போகும்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இயற்கையாகவே மன இரக்கமுடைய ரந்திதேவ மன்னவன், தான் தாஹத்தினால் மரணம் அடையும் தசையில் இருப்பினும், தைர்யத்துடன் இவ்வாறு மொழிந்து தான் வைத்துக்கொண்டிருந்த ஜலத்தையும், அந்தப் புலையனுக்குக் கொடுத்தான். அர்த்தம், காமம் முதலிய பலனை விரும்புகின்றவர்களுக்கு, அப்பலன்களைக் கொடுப்பவர்களும், மூன்று லோகங்களுக்கும் ப்ரபுக்களுமாகிய, ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ரர்கள் அம்மன்னவனிடம் அருள் புரிந்து, அவனுக்குத் தேஹாத்ம விவேகத்தையும் (உடலிற்கும் ஆத்மாவிற்கும் உள்ள வேற்றுமையைத் தெளிவித்து) விளைவித்து, தாங்கள் அவனைப் பரீக்ஷிப்பதற்காக அதிதிகளாய் (விருந்தினர்களாய்) வந்த மாயையையும் அறிவித்தார்கள். அப்பால், அந்த ரந்திதேவன், அந்த ப்ரஹ்மாதிகளுக்கு நமஸ்கரித்து, தேஹத்திலும், அதைத் தொடர்ந்த மற்றவைகளிடத்திலும், மனப்பற்றைத் துறந்து, இஹ (இந்த உலக), பரலோக (மற்ற உலக) ஸுகங்களில் ஆசையற்றவனாகி, ஷாட்குண்யபூர்ணனான (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) வாஸுதேவனிடத்தில் பக்தியுடன் மனத்தை நிலைநிறுத்தினான். ஒரு ப்ரயோஜனத்தையும் விரும்பாமல் வாஸுதேவனிடத்தில் நிலை நின்ற மனமுடைய அம்மன்னவனுக்கு, ஸத்வ, ரஜஸ், தமோகுணமயமான மாயை ஸ்வப்னம் (கனவு) போல மறைந்தது (ப்ரக்ருதி ஸம்பந்தத்தினின்று விடுபட்டான்). அந்த ரந்திதேவனை அனுஸரித்திருந்தவர்கள் அனைவரும், அவனோடு ஸஹவாஸம் செய்த (தொடர்பு கொண்டிருந்த) மஹிமையால், தேஹாத்ம ப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) முதலிய அஜ்ஞானம் (அறியாமை) நீங்கி, ஆத்மஜ்ஞானம் (ஆத்ம, பரமாத்ம அறிவு) உண்டாகப் பெற்று, ஸ்ரீமந் நாராயணனையே பரமகதியாகப் பற்றினார்கள். 

கர்க்கனுடைய பிள்ளை சினி. அவன் பிள்ளை கார்க்யன். அவனிடத்தினின்று ப்ராஹ்மண குலம் உண்டாயிற்று. மஹாவீர்யனுடைய பிள்ளை துரிதக்ஷயன் அவனுக்கு த்ரய்யாருணி,  கவி, புஷ்கராருணி என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அம்மூவரும் க்ஷத்ரிய குலத்தினின்று ப்ராஹ்மணத் தன்மையைப் பெற்றார்கள். ப்ருஹத்க்ஷத்ரனுடைய பிள்ளை ஹஸ்தி. இவனே ஹஸ்தினாபுரத்தை உண்டாக்கினான். ஹஸ்திக்கு அஜமீடன், தவிமீடன், புருமீடன் என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அஜமீடனுடைய வம்சத்தில் பிறந்த ப்ரியமீடன் முதலியவர்கள் ப்ராஹ்மணர்களானார்கள். அந்த அஜமீடனுக்கே ப்ருஹதிஷுவென்று மற்றொரு புதல்வன் உண்டு. அவன் பிள்ளை ப்ருஹத்தனு. அவன் பிள்ளை ப்ருஹத்காயன். அவன் பிள்ளை ப்ருஹத்ரதன். அவன் பிள்ளை விசதன். அவன் பிள்ளை பேனஜித்து. அவனுக்கு ருசிராச்வன், த்ருடஹனு, காச்யன், வத்ஸன் என்று நான்கு பிள்ளைகள். அவர்களில், ருசிராச்வன் பிள்ளை ப்ராஜ்ஞன். அவன் பிள்ளை ப்ருதுஸேனன். அவன் பிள்ளை பாரன். அவன் பிள்ளை நீபன். அவனுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அந்த நீபனே ஸ்ரீசுகருடைய புதல்வியான க்ருதி என்பவளிடத்தில் ப்ரஹ்மதத்தனென்னும் புதல்வனைப் பெற்றான். 

“அவன் மஹா யோகியாயிருந்தான். அவன் தன் மனைவியான ஸாஸ்வதியிடத்தில் விஷ்வக்ஸேனனென்னும் புதல்வனைப் பெற்றான். அவன் ஜைகீஷவ்யருடைய உபதேசத்தினால் யோகசாஸ்த்ரத்தை இயற்றினான். அந்த விஷ்வக்ஸேனனுடைய பிள்ளை உதக்ஸேனன். அவன் பிள்ளை பல்லாதன். இவர்கள் எல்லாரும் அஜமீடனுடைய பிள்ளையாகிய ப்ருஹதிஷுவின் வம்சத்தில் பிறந்தவர்கள். த்விமீடன் பிள்ளை யவீநரன். அவன் பிள்ளை த்ருகிமான் அவன் பிள்ளை ஸத்யத்ருதி. அவன் பிள்ளை த்ருடநேமி. அவன் பிள்ளை ஸுபார்ச்வன். அவன் பிள்ளை ஸுமதி. அவன் பிள்ளை ஸந்திமான். அவன் பிள்ளை க்ருதி. அவன் ஹிரண்யநாபரிடத்தினின்று யோகத்தையும், ஸாமவேதத்தின் ஆறு ஸம்ஹிதைகளையும் பெற்று, பிறர்க்கு கற்பித்தான். அவன் பிள்ளை உக்ராயுதன், அவன் பிள்ளை க்ஷேம்யன். அவன் பிள்ளை ஸுவீரன். அவன் பிள்ளை ரிபுஞ்சயன். அவன் பிள்ளை பஹுரதன். புருமீடனுக்கு ஸந்ததி கிடையாது. அஜமீடனுக்கு நளினியென்னும் மனைவியிடத்தில் நீலனென்று மற்றொரு புதல்வன் பிறந்தான். அவன் பிள்ளை சாந்தி. அவன் பிள்ளை ஸுசாந்தி. அவன் பிள்ளை புருஜ்ஞன். அவன் பிள்ளை அரக்கன். அவன் பிள்ளை பர்ம்யாச்வன். அவனுக்கு முத்கலன், யவீனரன், ப்ருஹதிஸூ, காம்பில்யன், ஸஞ்சயன் என்று ஐந்து பிள்ளைகள். பர்ம்யாச்வன் தன் பிள்ளைகள் ஐவரையும் பார்த்து “பிள்ளைகளே! நீங்கள் என்னுடைய ஐந்து விஷயங்களையும் பாதுகாக்கவல்லவர்கள்” என்றான். ஆகையால், அவர்கள் பஞ்சாலர்களென்று பெயர் பெற்றார்கள். 

அவர்களில் முத்கலனிடத்தினின்று மௌத்கல்யமென்று ப்ரஸித்தி பெற்ற ப்ராஹ்மண குலம் உண்டாயிற்று. பர்ம்யாச்வனுடைய பிள்ளையாகிய முத்கலனிடத்தினின்று பிள்ளையும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. அவற்றில் பிள்ளை திவோதாஸனென்பவன். பெண் அஹல்யையென்பவள். அவளே கௌதமரை மணம் புரிந்து, அவரிடத்தினின்று சதாநந்தரைப் பெற்றாள். 

[குறிப்பு - படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு ஒரு பேரழகியைப் படைக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றிற்று. அதனால் தன் கற்பனை நயங்களை எல்லாம் திரட்டி ஒரு பேரழகியை உருவாக்கிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு பொறாமை கொண்ட சரஸ்வதி, தன் மகனான நாரதரை அழைத்து, “உன் தந்தை ஒரு பேரழகியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். குற்றமில்லாத பெண்ணாக அவளை உருவாக்கப் போவதாகப் பெருமிதம் கொண்டிருக்கிறார். எப்படியாவது அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஒரு குறை ஏற்படும்படி செய்துவிடு!” என்றாள். பிரம்மா அந்தப் பெண்ணைப் படைத்து முடித்துவிட்டார். அவளுக்குப் என்ன பெயர் சூட்டலாம் என்று யோசித்தார். ‘ஹல்யம்’ என்றால் குற்றம் என்று அர்த்தம். எந்தக் குற்றமுமில்லாத பேரழகியாதலால் ‘அஹல்யா’ என்று பெயர் வைத்தார். அவளது தலையெழுத்திலும் அஹல்யா என்று எழுதினார் பிரம்மா. அந்நேரம் பார்த்து அங்கே வந்த நாரதர் பிரம்மாவிடம் பேச்சு கொடுத்து அவரது கவனத்தைத் திசை திருப்பி விட்டு, அப்பெண்ணின் தலையெழுத்தில் இருந்த ‘அ’ என்னும் எழுத்தை மட்டும் அழித்து விட்டார். ‘ஹல்யா’ என்று ஆகிவிட்டது. ஹல்யா என்றால் குற்றமுள்ளவள் என்று பொருள். சரஸ்வதி சொன்னபடி நாரதர் அப்பெண்ணுக்குக் குறையை உண்டாக்கிவிட்டார். பெயர்தான் அஹல்யா (குற்றமற்றவள்), ஆனால், தலையெழுத்தில் ஹல்யா (குற்றமுள்ளவள்) என்று உள்ளது. பிரம்மாவும் இதைக் கவனிக்கவில்லை.

அஹல்யாவுக்குத் திருமண வயது வரவே, பல தேவர்கள் அவளை மணந்து கொள்ள விரும்பினார்கள். நாரதரின் ஆலோசனைப் படி பிரம்மா, “யார் மூவுலகையும் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத் தான் பெண் கொடுப்பேன்!” என்று கூறிவிட்டார். இந்திரன் ஐராவதத்தின் மேல் ஏறினான், அக்னி பகவான் ஆட்டின்மேலும், வருண பகவான் முதலையின் மீதும், வாயு பகவான் மானின் மீதும் ஏறி மூவுலகைச் சுற்றினார்கள். அதற்குள் மிகவும் முதியவரான கௌதம மகரிஷியைப் பிரம்மாவிடம் அழைத்து வந்தார் நாரதர். கன்றை ஈன்று கொண்டிருக்கும் பசுவைப் பிரதட்சிணம் செய்யுமாறு கௌதமரிடம் நாரதர் வேண்டினார். அவரும் பிரதட்சிணம் செய்தார். பிரம்மாவிடம், “கன்றை ஈன்று கொண்டிருக்கும் பசுவைச் சுற்றினால் மூவுலகங்களையும் சுற்றியதற்குச் சமம். இதோ கௌதமர் சுற்றி விட்டார். அஹல்யாவை இவருக்கு மணமுடித்துத் தாருங்கள்!” என்றார் நாரதர். அதை ஏற்றுக் கொண்டு அஹல்யாவைக் கௌதமருக்கு மணமுடித்துத் தந்தார் பிரம்மா. மூவுலகங்களையும் சுற்றிவிட்டு வந்த இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். எப்படியாவது அஹல்யாவை அடைந்தே தீரவேண்டும் என்று இந்திரன் முடிவு செய்தான். அதன்படியே அவன் செயல்பட, அஹல்யாவைக் கல்லாகப் போகும்படி கௌதமர் சபித்தார். கல்லாக இருந்த அஹல்யாவின் மீது ராமபிரானுடைய திருவடித்துகள் பட்டபோதே அவள் மீண்டும் பெண் ஆனாள்.  ராமனின் திருவடித் துகள் அவள் மேல் பட்டபோது அவளது தலையெழுத்தில் இருந்த ‘ஹல்யா’ என்பது ‘அஹல்யா’ என்று மாறிவிட்டது. அதனால் தான் அவள் இப்போது குற்றமற்றவள் ஆனாள். இவ்வாறு பிரம்மா எழுதும் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை எம்பெருமானுடைய திருவடிகளுக்கும் பாதுகைகளுக்கும் உள்ளது.]

சதாநந்தருடைய பிள்ளை ஸத்யத்ருதி. அவர் தனுர்வேதத்தில் (வில்வித்யையில்) ஸமர்த்தர். அவர் பிள்ளை சரத்வான். ஊர்வசியைக் கண்டதனால், அவருடைய ரேதஸ்ஸூ (விந்து) நழுவிச் சரமென்கிற நாணற்புல்லின் அடியில் விழுந்தது. அதனால் அவர் சரத்வானென்று பெயர் பெற்றார். அந்த ரேதஸ்ஸு பரிசுத்தமான ஆசாரமுடைய ஆணும் பெண்ணுமான இரண்டு குழந்தைகளாயிற்று, சந்தனு மன்னவன் வேட்டைக்குப் போகும் பொழுது தெய்வாதீனமாய் அந்த ஆண்-பெண் குழந்தைகளைக் கண்டு, மன இரக்கத்துடன் கொண்டு போய் வளர்த்தான். அந்த ஆண்-பெண் குழந்தைகளில், ஆண் குழந்தை க்ருபாசார்யர். பெண் குழந்தை க்ருபி யென்பவள். அவள் த்ரோணாசார்யருக்குப் பார்யையானாள். 

இருபத்தொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக