வெள்ளி, 23 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 212

 ஒன்பதாவது ஸ்கந்தம் - இருபதாவது அத்தியாயம்

(பூருவின் வம்சமும், சகுந்தலோபாக்யானமும், பரதனுடைய வ்ருத்தாந்தமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- “பரீக்ஷித்து மன்னவனே! நீ எந்த வம்சத்தில் பிறந்தனையோ, அப்படிப்பட்ட பூருவின் வம்சத்தைச் சொல்லுகிறேன்.” மற்றும், இவ்வம்சத்தில், வம்சத்தை மேன்மேலும் வளர்ப்பவர்களான, ராஜர்ஷிகளும், அத்தகைய ப்ராஹ்மணர்களும், பிறந்தார்கள். பூருவின் பிள்ளை ஜனமேஜயன். அவன் பிள்ளை ப்ரதன்வான். அவன் பிள்ளை ப்ரவிரோதன். அவன் பிள்ளை நமஸ்யு. அவன் பிள்ளை சாரு. அவன் பிள்ளை ஸுத்யு. அவன் பிள்ளை பஹூகவன். அவன் பிள்ளை சர்யாதி (ஸம்யாதி). அவன் பிள்ளை அஹம்யாதி. அவன் பிள்ளை ரௌத்ராதி. (ரௌத்ராஸ்வன்). ஸர்வஸ்மாத்பரனும் (எல்லாவற்றையும் விட மேலானவனும்), ஜகத்ஸ்வரூபனுமாகிய பகவானிடத்தினின்று, பத்து இந்த்ரியங்கள் உண்டானாற்போல, அந்த ரௌத்ராதிக்கு, க்ருதாசியென்னும் அப்ஸரமடந்தையிடத்தில், ருதேபு, கக்ஷேபு, ஸ்தலேபு, க்ருதேபு, ஜலேபு, ஸந்ததேபு, தர்மேபு, ஸத்யேபு, வரதேபு, வனேபு என்று பத்துப் பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில், ருதேபுவின் பிள்ளை ரந்திஸாரன். அவனுக்கு, ஸுமதி, த்ருவன், அப்ரதிரதனென்று மூன்று பிள்ளைகள். அவர்களில், அப்ரதிரதனுடைய பிள்ளை கண்வன். அவன் பிள்ளை மேதாதிதி. அவனுக்கு ப்ரஸ்கணவர் முதலிய ப்ராஹ்மணர்கள் பிறந்தார்கள். ரந்திஸாரனுடைய பிள்ளையாகிய ஸுமதிக்கு, ரைப்யனென்பவன் பிறந்தான். அவன் பிள்ளை துஷ்யந்தன். அவன் ப்ரஸித்தன்.  

துஷ்யந்தன் ஒருகால் வேட்டைக்காகத் திரிந்து கொண்டு, தெய்வாதீனமாய்க் கண்வ மஹர்ஷியின் ஆச்ரமத்திற்குச் சென்றான். அம்மன்னவன், அங்கு ஸ்ரீமஹாலக்ஷ்மியைப் போன்று தன் தேஹகாந்தியாலேயே தன்னையும், ஆச்ரமத்தையும், அலங்கரிப்பவளும், தேவமாயை போன்றவளுமான, ஒரு மடந்தையைக் கண்டு அப்பொழுதே மோஹித்தான் (மயங்கினான்). அவன் அவளைக் கண்ட மாத்ரத்தில், மிகவும் ஸந்தோஷம் அடைந்து, வேட்டையாடின வருத்தமும் தீர்ந்து, மன்மத பாதையால் (காதல் ஆசை தாக்கத்தால்) பரிதபித்து, சில படர்களுடன் (சேவகர்களுடன்) சென்று, புன்னகை செய்து கொண்டே, அம்மடந்தையர் மணியை நோக்கி, இனிய உரையுடன் மொழிந்தான்.

துஷ்யந்தன் சொல்லுகிறான்:- “மாதரசீ! நீ யார்? உன்னுடைய ஒளி தாமரைப்பூவினுடைய உட்புறத்தின் ஒளி போன்றிருக்கின்றது. மனத்திற்கு இனியவளாயிருக்கின்றாய். நீ யாருடையவள்? ஜன ஸஞ்சாரமில்லாத (மக்கள் நடமாட்டம் இல்லாத) இவ்வனத்தில் நீ என்ன செய்ய விரும்புகின்றாய்? அழகிய இடையுடையவளே! நீ ராஜகுமாரத்தியாயிருக்க வேண்டுமென்று நான் நிச்சயமாக நினைக்கிறேன். பூருவின் வம்சத்தில் பிறந்தவர்களின் மனம், ஒருகாலும் அதர்மத்தில் விருப்பம் கொள்ளாது. (என் மனம் உன்னிடத்தில் விருப்பமுற்றிருக்கையால், நீ க்ஷத்ரிய கன்னிகையாயிருக்க வேண்டுமென்று நிச்சயிக்கிறேன்).

சகுந்தலை சொல்லுகிறாள்:- “நான் விச்வாமித்ரருக்கு மேனகையிடத்தில் பிறந்தவள். (ஆகையால் க்ஷத்ரிய கன்னிகை என்பது உண்மையே). என் தாயான மேனகை, ஸ்வர்க்கம் போகும் பொழுது, என்னை இவ்வனத்தில் விட்டுப்போனாள். இவ்விஷயம் மஹானுபாவரான கண்வருக்குத் தெரியும். வீரனே! உனக்குப் பணிவிடை செய்ய ஸித்தமாயிருக்கின்றேன். உனக்கு நான் என்ன செய்ய வேண்டுமோ, அதைச் சொல்வாயாக. தாமரைக் கண்ணனே! உட்காருவாயாக. நான் செய்யும் பூஜையை அங்கீகரிக்க வேண்டும். இங்குச் செந்நெல் தான்யங்கள் இருக்கின்றன. அவற்றைப் புசிப்பாயாக. மனத்திற்கு ருசிக்குமாயின், இங்கு வஸித்திருப்பாயாக”.

துஷ்யந்தன் சொல்லுகிறான்:- அழகிய புருவங்களுடையவளே! குசிக வம்சத்தில் பிறந்த நீ இவ்வாறு சொல்லுவது யுக்தமே (ஸரியே). ராஜகன்னிகைகள், தாமே தங்களுக்கு அனுரூபனான (தகுந்த) மணவாளனைத் தேடி வரிப்பார்கள் (தேர்ந்தெடுப்பார்கள்) அல்லவா?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு அம்மாதரசி, துஷ்யந்தன் சொன்னபடி அங்கீகரிக்கையில், தேச காலங்களுக்கு உரியபடி நடத்த வேண்டிய செயல்களை அறிந்த அம்மன்னவனும், காந்தர்வ விவாஹ (ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பி, தாங்களாகவே மணம் புரிதல்) விதியின்படி, தர்மம் தவறாமல், சகுந்தலையென்னும் பெயருடைய அம்மடந்தையர் மணியை மணம் புரிந்தான். வீணாகாத வீர்யமுடைய அந்த ராஜர்ஷி, தன் மஹிஷியான (மஹராணியான) சகுந்தலையிடத்தில் வீர்யத்தை (விந்தை) ஆதானம் செய்தான் (வைத்தான்). பிறகு, மற்றை நாள் விடியற்காலையில், தன் பட்டணத்திற்குச் சென்றான். அப்பால், சகுந்தலை ப்ரஸவ காலம் நேரப்பெற்று, புதல்வனைப் பெற்றாள். அந்தப் புதல்வனுக்கு, செய்ய வேண்டிய ஜாதகரணம் முதலிய ஸம்ஸ்காரங்களையெல்லாம் கண்வ மஹர்ஷி வனத்திலேயே நடத்தினார். அப்பாலகன், மிகுந்த பலமுடையவனாகையால், ஸிம்ஹத்தைப் பிடித்துக்கட்டி, விளையாடிக் கொண்டிருந்தான். சகுந்தலை, அளவற்ற பராக்ரமமுடையவனும், பகவானுடைய அம்சாம்சத்தினால் (ஒரு பகுதியால்) பிறந்தவனுமாகிய, அப்புதல்வனை எடுத்துக்கொண்டு, கணவனான துஷ்யந்த மன்னவனிடம் வந்தாள். 

நிந்தைக்கிடமல்லாத பார்யையும் (மனைவியும்), புதல்வனுமாகிய, அவ்விருவரும் வந்திருக்கையில், துஷ்யந்த மன்னவன் தன்னுடைய மனைவி-புத்ரர்களென்று அங்கீகரியாது இருந்தான். அப்பொழுது, ஸமஸ்த பூதங்களும் கேட்டுக்கொண்டிருக்கையில், ஆகாயத்தில் அசரீரி வாக்கு அம்மன்னவனுக்குச் செவிப்பட்டது. “தாய் தோல் பை போல கர்ப்பத்திற்கு ஆதாரமாயிருப்பவள். பிள்ளை தந்தையினுடையவனே. பிள்ளை, தந்தையிடத்தினின்று பிறந்தவனாகையால், அவன் அந்தத் தந்தையேயன்றி, அவனைக் காட்டிலும் வேறுபட்டவனல்லன். ஆகையால், துஷ்யந்தனே! உன் பிள்ளையாகிய இவனை நீ அங்கீகரித்துப் போஷிப்பாயாக (வளர்ப்பாயாக). சகுந்தலையை அவமதிக்க வேண்டாம். ஸந்ததியை மேன்மேலும் வளரச் செய்ய வல்ல புதல்வன், தந்தையை யமலோகத்தினின்றும் மீட்டு ஸ்வர்க்க லோகம் சேரும்படி செய்வான். புருஷன் தன்னுடைய ரேதஸ்ஸுக்குப் (விந்துக்குப்) பிறந்த பிள்ளையைத் தான் அங்கீகரிப்பது அவச்யமே. இப்புதல்வனைப் பிறப்பித்தவன் நீயேயென்று சகுந்தலை சொல்லுவது ஸத்யமே”. 

அம்மன்னவனும், அந்த அசரீரி வாக்கைக் கேட்ட பின்பு, பார்யையையும் (மனைவியையும்), பிள்ளையையும், அங்கீகரித்தான். தந்தையாகிய துஷ்யந்தன் மரணம் அடைகையில், பிள்ளையாகிய அந்தப் பரதனும், சக்ரவர்த்தியாகி, பெரும் புகழனாயிருந்தான். பூமியில் பகவானுடைய அம்சத்தினால் பிறந்த அப்பரதனுடைய மஹிமையைப் பாடுகிறார்கள். அந்தப் பரதனுடைய வலக்கையில் சக்ரரேகையும், பாதங்களில் பத்மரேகையும் விளங்கின. அவன், மஹாபிஷேக விதியின்படி அபிஷேகம் செய்யப்பெற்று, பூமண்டலத்திற்கெல்லாம் ப்ரபுவாயிருந்தான். ஸமர்த்தனாகிய அப்பரதன், கங்கையின் கரையில் இருநூற்றைம்பது அச்வமேத யாகங்கள் செய்து, பகவானை ஆராதித்தான். மற்றும், அவன் யமுனையின் கரையில் தீர்க்க தமஸ்ஸென்னும் ரிஷியைப் புரோஹிதராக ஏற்படுத்திக் கொண்டு, எழுபத்தெட்டு அச்வமேத யாகங்கள் செய்தான். அந்த யாகங்களில் ஒவ்வொன்றிலும், பணத்தை அபாரமாகக் கொடுத்தான். துஷ்யந்தனுடைய பிள்ளையான அப்பரதன், மிகுந்த குணமுடைய தேசத்தில் யாகத்திற்கான அக்னியை உண்டாக்கினான். அதில், அம்மன்னவன் ஆயிரம் ப்ராஹ்மணர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் 13084 பசுக்களை தானமாகக் கொடுத்தான். அந்த யாகங்களில் 133 குதிரைகளைக் கட்டி 133 அச்வமேத யாகங்களைச் செய்து ராஜாக்களையெல்லாம் வியப்புறச் செய்தான். மற்றும், அம்மன்னவன், அந்த யாகங்களில் செய்யப்படும் மஷ்ணாரம் என்னும் கர்மாவில் நல்ல கறுப்பு நிறமுடைய, வெண்மையான தந்தங்களை உடைய, தங்கத்தால் நன்கு அலங்கரிக்கப்பட்ட சிறந்த 14 லட்சம் யானைகளை தக்ஷிணை தானமாகக் கொடுத்தான். பின்னர், உலகியல் மாயைகளையும், தேவர்களது மாயைகளையெல்லாம் கடந்தான். (தேவதைகள் யாகக்குதிரையைப் பறிப்பது முதலிய பல மாயைகளைச் செய்து யாகங்களை நிறைவேறவொட்டார்கள். ராஜாக்களும், தங்களால் கூடுமான வரையில், விக்னங்களைச் (தடைகளைச்) செய்வார்கள். அம்மன்னவன், அவ்விருவர்களுடைய விக்னங்களை (தடைகளை) எல்லாம் தடுத்து, யாகம் செய்தான்). பரதனுடைய செயல்கள் மிகவும் அற்புதமாயிருப்பவை. அத்தகைய செயல்களை, அவனுக்கு முன்பட்ட ராஜாக்களாவது, பின்பட்ட ராஜாக்களாவது, எவரும் செய்யவில்லை. இனிமேல் வரப்போகிறவர்களும், செய்யமாட்டார்கள். எப்படி கைகளால் ஸ்வர்க்கத்தைத் தொட்டவர்கள் இல்லையோ, அது போல். (ஸ்வர்க்கத்தை அடைவதற்கு, ஜ்யோதிஷ்டோமம் முதலிய புண்ய கர்மங்கள் ஸாதனமேயன்றி, அவரவர்களுடைய புஜங்கள், ஸாதனமாவது எங்கேனுமுண்டோ? அவ்வாறே, பரதனுடைய செயல்கள் அவனையொழிய மற்றவர்களால் செய்யமுடியாது). 

அம்மன்னவன், திக்விஜயத்தில் (வெற்றியுடன் பல திசைகளில் சென்றபோது) தன் பலத்தினால் ப்ராஹ்மண த்வேஷிகளான (வெறுப்பவர்களான), கிராதர், ஹூணர், யவனர், அந்த்ரர், வங்கர், சகர், கஷர், ம்லேச்சர் முதலிய துஷ்ட (கெட்ட) ராஜாக்களையெல்லாம் கொன்றான். முன்பு, தேவதைகளை வென்று, அவர்களுடைய மடந்தையர்களைப் பறித்துக்கொண்டு, பாதாளலோகம் சேர்ந்து, வஸித்திருந்த பலிஷ்டர்களான (பலம் மிக்க) அஸுரர்களையும், ராக்ஷஸர்களையும், வதித்து அம்மடந்தையர்களை மீட்டுக்கொண்டு வந்து, அவரவர்களுக்குச் சேர்ப்பித்தான். மற்றும், பரதன் ராஜனாயிருக்கும் பொழுது, ஆகாயம், பூமி இரண்டும் அவன் ப்ரஜைகள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் அபாரமாகக் கறந்தன. இவ்வாறு அம்மன்னவன், இருபத்தேழாயிரம் ஆண்டுகள் எல்லா திசைகளிலும் தன் கட்டளையை நடத்தி வந்தான். இவ்வாறு பூமண்டலத்தையெல்லாம் பரிபாலித்துக் கொண்டு வந்த அந்தப் பரத மன்னவன், லோகபாலர்களின் ஐச்வர்யம், நிகரற்றதான தன் செல்வம், எங்கும் தடைபடாத தன் கட்டளை, ப்ராணன்கள் ஆகிய இவையெல்லாம் நிலையற்றவையென்று நிச்சயித்து, அவையெல்லாவற்றினின்றும் மனப்பற்றை மாற்றிக்கொண்டான். அந்தப் பரதமன்னவனுக்கு மிகவும் ப்ரியமான மூன்று பார்யைகள் இருந்தார்கள். அவர்கள் மூவரும் விதர்ப்பராஜன் புதல்விகள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிறந்த பிள்ளைகளை மன்னவன் பார்த்துத் தனக்கு அனுரூபமாயில்லை (நிகரானவர்களாக இல்லை) என்று சொல்லுகையில், கணவன் நம்மை ஒதுக்கி விடுவான் என்று பயந்து, அவர்களைக் கொன்று விட்டார்கள். 

இவ்வாறு, அவனுடைய வம்சம் பாழாகையில், அதற்காக மருத்ஸோமமென்னும் யாகம் செய்கின்ற அம்மன்னவனுக்கு, தேவதைகள் அருள்புரிந்து, பரத்வாஜனென்னும் பிள்ளையைக் கொடுத்தார்கள். ஒருகால், ப்ருஹஸ்பதி தம் ப்ராதாவான (ஸகோதரனான) உசத்யருடைய பார்யையான (மனைவியான) மமதையென்பவளிடத்தில் மைதுனத்திற்காகத் (சேர்வதற்காக) தொடங்குகையில், கர்ப்பத்திலுள்ள சிசு இரண்டாம் கர்ப்பத்திற்கு இடமில்லாமையால் முறையிட்டுத் தடுக்க, ப்ருஹஸ்பதி கோபித்து “நீ தீர்க்கமான தமஸ்ஸை (நீண்ட இருட்டை) அடைவாய். அந்தனுமாவாய் (குருடனாவாய்)” என்று சபித்துப் பலாத்காரமாக வீர்யத்தை சேர்த்தான். முன்பே கர்ப்பத்திலுள்ள சிசு, ப்ருஹஸ்பதியின் சாபத்தினால் தீர்க்கதமஸ்ஸென்னும் பெயர்பெற்றது. அச்சிசு, அவ்வீர்யத்தைத் தன் புறங்காலால் உதைத்து வெளித்தள்ள, வீர்யம் பூமியில் விழுந்தவுடன், ஒரு குமாரனாயிற்று. கணவன் கைவிடுவான் என்னும் பயத்தினால், பிறனுடைய வீர்யத்திற்குப் பிறந்த அப்புதல்வனை துறக்க விரும்புகின்ற மமதையை, நோக்கித் தேவதைகள், ப்ருஹஸ்பதிக்கும், அவளுக்குமான விவாதத்தை உட்கொண்டதும், அப்புதல்வனுடைய நாமத்தை நிரூபிப்பதுமாகிய இம்மொழியைக் கூறினார்கள். 

மமதையைப் பார்த்து, ப்ருஹஸ்பதி சொல்லுகிறார்:- “அடி மதி கேடீ (புத்தி கெட்டவளே)! இப்புதல்வனைப் போஷிப்பாயாக (வளர்ப்பாயாக). ஒருவனுடைய க்ஷேத்ரத்தில் மற்றொருவனுடைய பீஜத்திற்குப் (விந்துவிற்குப்) பிறந்தவனாகையால் இப்புதல்வன் இருவர்களால் உண்டானவன். ஆதலால், இவன் உன் கணவனுக்கும் புதல்வனே. ஆகையால், உன் கணவரிடம் நீ பயப்பட வேண்டாம்”. 

இவ்வாறு ப்ருஹஸ்பதியால் சொல்லப்பட்ட மமதை ப்ருஹஸ்பதியைக் குறித்துச் சொல்லுகிறாள்:- “ப்ருஹஸ்பதீ!  நம் இருவர்க்குப் பிறந்தவனாகிய இப்புதல்வனை, நீயே போஷிப்பாயாக (வளர்ப்பாயாக). நான் போஷிக்கமாட்டேன்” என்று தாய் தந்தைகளான, மமதையும், ப்ருஹஸ்பதியும் விவாதப்பட்டு, அப்புதல்வனைத் துறந்து போனார்களாகையால், அவன் பரத்வாஜனென்று பெயர்பெற்றான். ( நீ வளர்ப்பாயாக (பர) என்று ப்ருஹஸ்பதியும், நம் இருவரின் புதல்வன் (த்வஜ) என்று மமதையும் கூறி இருவரும் விவாதித்ததால்  அவன் பரத்வாஜன் என்று பெயர் பெற்றான்.) மமதை இவ்வாறு மொழிகின்ற தேவதைகளால் தூண்டப்பட்டும், வேறு புருஷனால் பிறந்தவனாகையால் இவன் நமக்கு உபயோகப்படமாட்டான் என்று துறந்து போனாள். பிறகு, அப்புதல்வனை, மருத்துக்கள் போஷித்தார்கள். பரதனுடைய வம்சம் பாழாயிருக்கையில், அம்ருத்துக்கள் அப்புதல்வனைப் பரதனுக்குக் கொடுத்தார்கள். அதனால், அவன் விததனென்றும் பெயர் பெற்றான். வம்சம் அழிந்திருக்கையில், அதை மேன்மேலும் வளரச்செய்தான் ஆகையால் விததனானான். (விதனோதி இதி விதத: விததனென்றால் பரவச் செய்தவன்) 

இருபதாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக