ஶ்ரீமத் பாகவதம் - 211

 ஒன்பதாவது ஸ்கந்தம் - பத்தொன்பதாவது அத்தியாயம்

(யயாதி விரக்தியினால் தேவயானிக்குத் தன் நிலைமையைக் கூறி மோக்ஷம் பெறுதலும், தேவயானியும் யயாதியின் உபதேசத்தினால் விவேகம் உண்டாகப்பெற்று, ஸ்ரீக்ருஷ்ண த்யானத்தினால், சரீரத்தைத் துறத்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த யயாதி மன்னவன், இவ்வாறு ஸ்த்ரீலோலனாகி (பெண்ஆசை பிடித்து), காம ஸுகங்களை (காதல் ஆசை இன்பங்களை) அனுபவித்துக் கொண்டிருக்கையில், ஒருகால் தன் புத்தி வழி தப்பி மயங்கினதை அறிந்து, வெறுப்புற்று, தன் காதலியான தேவயானிக்கு ஒரு பழைய கதையைக் கூறினான்.

யயாதி சொல்லுகிறான்:- “பார்க்கவருடைய புதல்வியே! என்னைப்போன்ற மூடனுடைய வ்ருத்தாந்தத்தை (கதையை) உட்கொண்டிருப்பதாகிய ஒரு பழைய இதிஹாஸத்தைச் சொல்லுகிறேன், கேட்பாயாக. பார்க்கவீ! என்னைப் போன்ற மூடனான க்ருஹஸ்தனுடைய வ்ருத்தாந்தத்தை வனத்திலுள்ள ஜிதேந்திரியர்கள் (புலனை வென்றவர்கள்) மன இரக்கத்தினால் சோகிக்கிறார்கள். அரண்யத்தில் (காட்டில்) தனியே திரிந்து கொண்டிருக்கின்ற ஒரு ஆடு, தனக்கு இன்பத்தைத் தேடிக்கொண்டு, தன் கர்மத்திற்கு உட்பட்டு, கிணற்றில் விழுந்திருக்கின்ற ஒரு பெண் ஆட்டைக் கண்டது. அது காம ஸுகத்தை அனுபவிக்க வேண்டுமென்னும் விருப்பமுடையதாகையால், அந்தப் பெண் ஆட்டைக் கிணற்றினின்று கறையேற்றுவதற்கு உபாயத்தை ஆலோசித்துக் கரையில் கொம்பின் நுனியால் மண் முதலியவற்றை எடுத்து, கரையேறும் வழியை உண்டாக்கிற்று. பிறகு அழகிய இடையின் பின்புறமுடைய அந்தப் பெண் ஆடு, கிணற்றினின்று கரையேறி, அந்த ஆண் ஆட்டையே தனக்குக் கணவனாகும்படி விரும்பிற்று. அப்பால், அந்தப் பெண் ஆடு விரும்பினதைக் கண்டு, மற்றும் பல பெண் ஆடுகளும் அங்கங்களெல்லாம் பருத்து தாடி, மீசைகள் அமைந்து, மிகுந்த ரேதஸ் (விந்து) உடையதும், மைதுன (பெண்ணுடன் சேரும்) வ்யாபாரத்தில் திறமையுடையதுமாகிய, அந்த ஆண் ஆட்டையே மிகுந்த மனவிருப்பத்துடன் மேல்விழுந்து, விரும்பின. 

அந்த ஒரு ஆண் ஆடே பல பெண் ஆடுகளால் சூழப்பட்டு, அவையனைத்திற்கும் ஸம்போக ஸுகத்தை (சேர்த்தியின் இன்பத்தை) மேன்மேலும் விளைத்துக்கொண்டு, காமாவேசமாகிற பிசாசத்தினால் (காதல் ஆசை என்கிற பேயால்) பிடியுண்டு, விளையாடிக் கொண்டு இருந்ததேயன்றி, தனக்கு மேல் வரும் கெடுதியைச் சிறிதும் சிந்திக்கவேயில்லை. அந்த ஆண் ஆடு, இவ்வாறு வேறு சில பெண் ஆடுகளுடன் கலந்து, காமஸுகத்தை (காதல் ஆசை இன்பத்தை) அனுபவித்துக் கொண்டிருக்கையில், முதலில் கிணற்றினின்று எடுக்கப்பட்ட பெண் ஆடு, இது நம்மைக்காட்டிலும் அழகான வேறு பெண் ஆட்டை அங்கீகரித்து நம்மைத் துறக்கப் பார்க்கின்றது என்று பயந்து, அந்த ஆண் ஆடு வேறு பெண் ஆட்டுடன் கலந்திருக்கையாகிற அந்தச் செயலை பொறுக்க முடியாதிருந்தது. உண்மையில், அந்த ஆண் ஆடு கெட்ட எண்ணமுடையது; மேலுக்கு மாத்ரம் நல்ல எண்ணமுடையது போல நடித்துக் கொண்டிருந்தது. 

அதன் ஸ்நேஹம் (பரிவு, அன்பு) எல்லாம் க்ஷணகாலத்திற்கு (குறுகிய காலத்திற்கு) மேல் நிலை நிற்காது. அது, காமக்கலவியில் (காதல் ஆசையால் பெண்ணுடன் சேர்வதில்) மிகுந்த சபலமுடையது  (ஆசை உடையது). இந்த்ரிய (புலன்களின்) ஸுகங்களால் (இன்பங்களால்) ஸந்தோஷமடையும் தன்மையுடையதேயன்றி,  தர்மத்தைச் சிறிதும் ஆராய்ந்ததன்று. அந்தப் பெண் ஆடு, தன் கணவன் அவ்வாறு வேறு பெண் ஆடுகளுடன் கலந்திருப்பதை அறிந்து, அதைத் துறந்து, மனவருத்தத்துடன் போய்விட்டது. பிறகு, ஸ்த்ரீ சபலமுடைய (பெண் ஆசை உடைய) அந்த ஆண் ஆடு அதைப் பிரிந்திருக்க முடியாமல் வருந்தி, அதை அருள்புரிவிக்கும் பொருட்டுத் தொடர்ந்து சென்று, பெண் பூனையைத் தொடர்ந்த ஆண் பூனை போல, பல நல்வார்த்தைகளால் நடுவழியில் ஸமாதானப்படுத்த முயன்றும், அதை அருள் புரிவிக்க முடியாதிருந்தது. தொங்கிக்கொண்டிருந்த அந்த ஆட்டின் வ்ருஷணத்தை (ஆண் உறுப்பை), ஒரு ப்ராஹ்மணன் கோபத்தினால் அறுத்தான். உபாயமறிந்த அந்த ப்ராஹ்மணனே, மீளவும் ப்ரயோஜனத்தை ஆராய்ந்து, வ்ருஷணத்தை (ஆண் உறுப்பை) முன் போலவே தொங்கும்படி ஒட்டவைத்தான். 

நல்லியற்கையுடையவளே! அறுந்த வ்ருஷணத்தைப் (ஆண் உறுப்பை) பெற்ற அந்த ஆண் ஆடு, கிணற்றில் கிடைத்த பெண் ஆட்டுடன் வெகு காலம் பலவாறு காம ஸுகங்களை அனுபவித்துக்கொண்டிருப்பினும், த்ருப்தி உண்டாகப்பெறவில்லை. அழகிய புருவங்களுடையவளே! அந்த ஆடு போலவே நானும் உன் ப்ரீதியினால் கட்டுண்டு, உன் மாயையினால் மோஹித்து, இப்பொழுதும் என்னை அறியாதிருக்கிறேன். பூமியிலுள்ள நெல், யவை முதலிய தான்யங்களும் பொன், வெள்ளி முதலியவைகளும், பசுக்களும், ஸ்த்ரீகளும் (பெண்களும்) ஆகிய இவையெல்லாம் எவ்வளவு நிறைந்திருப்பினும், சப்தாதி விஷயங்களை அனுபவிக்க வேண்டுமென்னும் விருப்பமுடையவனுக்கு, மனக்களிப்பை நிறைவேற்ற வல்லவை ஆகமாட்டா. சப்தாதி விஷயங்களை (உலக விஷயங்களை) அனுபவிக்க வேண்டுமென்னும் ப்ரீதி, ஒருகாலும் அவற்றை அனுபவிக்கையால் அடங்காது. அக்னி, நெய்த்தாரைகளால் மேன்மேலும் வளர்ந்தெரிவது போல, அவ்விருப்பம் காம போகங்களை (காதல் ஆசை இன்பங்களை) அனுபவிக்கையால் மேன்மேலும் வளர்ந்து வருமன்றி, ஒருகாலும் குறையாது. 

எத்தகைய ப்ராணிகளிடத்திலும், ராகம் (விருப்பு), த்வேஷம் (வெறுப்பு) முதலிய கெட்ட எண்ணங்களைச் செய்யாமல், எல்லாவற்றையும் தன்னைப் போலவே பார்க்கும் தன்மையுள்ள புருஷனுக்கு, எல்லா திசைகளும் ஸந்தோஷ மயமாயிருக்குமன்றி, ராக த்வேஷாதிகளால் (விருப்பு, வெறுப்பு முதலியவற்றால்) மனக்கலக்கமுற்றவனுக்கு, ஒருகாலும் பூர்ணமான ஸந்தோஷம் உண்டாகாது. சப்தாதி விஷயங்களில் விருப்பம் துர்ப்புத்தி (கெட்ட புத்தி) உடையவர்களால் துறக்க முடியாது. புருஷன் கிழத்தன்மையை அடையினும், காம போகங்களை அனுபவிக்க வேண்டுமென்கிற ஆவலுடைய விருப்பம், கிழத்தன்மையை அடையாது. அவ்விருப்பம் புருஷனுக்கு, பற்பல துக்கங்களை விளைக்கும். சிறிதும் துக்கமின்றிக் கேவல ஸுகத்தையே (இன்பம் ஒன்றையே) அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகின்றவன், அவ்விருப்பத்தை அடியோடு நிச்சயமாய்த் துறக்க வேண்டும். தாயோடாயினும், உடன் பிறந்தவளோடாயினும், புதல்வியோடாயினும் ஏகாந்தத்தில் கலந்து உட்காரலாகாது. இந்த்ரியங்கள் மிகுந்த வலிவுடையவை. அவை, விவேகமுடையவனையும் இழுத்துக் கொண்டு போய்விடும். ஸர்வ காலமும் தவறாமல் சப்தாதி விஷயங்களை (உலக விஷயங்களை) அனுபவித்துக்கொண்டிருக்கிற எனக்கு, இப்பொழுது ஆயிரமாண்டுகள் சென்றன. ஆயினும், இப்பொழுதும் அந்தந்த விஷயங்களை அனுபவிப்பதற்குரிய காலங்களில் அவற்றை அனுபவிக்க வேண்டுமென்னும் விருப்பம் அபாரமாக உண்டாகின்றதேயன்றி, சிறிதும் குறையவில்லை. 

காமபோகங்களை அனுபவிக்க வேண்டுமென்னும் விருப்பம், அவற்றை எவ்வளவு அனுபவிப்பினும் அடங்காதாகையால், நான் இவ்விருப்பத்தைத் துறந்து, பரப்ரஹ்மத்தினிடத்தில் மனத்தை நிலை நிறுத்தி, குளிர், வெய்யில் முதலிய த்வந்தவங்களால் (இரட்டைகளால்) விளையும் வருத்தங்களின்றி, தேஹாத்ம ப்ரமத்தையும் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கத்தையும்) வென்று, ம்ருகங்களுடன் ஸஞ்சரிக்கப் போகிறேன். அறிவுள்ள புருஷன், இஹலோக (இந்த உலக) ஸுகம், பரலோக (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலக) ஸுகம் ஆகிய இரண்டும் புருஷார்த்தம் அன்று என்றும், அவற்றால் மேன்மேலும் ஸம்ஸாரம் வளர்ந்து வருமென்றும், கடைசியில் ஆத்ம நாசமே (ஆத்மாவிற்கு கெடுதியே) நேரும் என்றும் ஆராய்ந்தறிந்து, இஹ (இந்த உலக) பரலோக (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலக) ஸுகங்களை நெஞ்சிலும் நினைக்கமாட்டான். ஆதலால், இனி அனுபவிக்கலாகாது என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

இவ்வாறு அறிந்து அவற்றை நெஞ்சிலும் நினையாதிருப்பானாயின், மஹானந்த ஸ்வரூபனான ஆத்மாவின் ஸ்வரூபத்தை உள்ளபடி அறியப் பெறுவான். அத்தன்மையுள்ள புருஷனுக்குக் காமபோகங்களை அனுபவிக்க வேண்டுமென்னும் விருப்பம் தானே பறந்து போகும்”.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- நஹுஷன் பிள்ளையான யயாதி இவ்வாறு தன் பத்னியான தேவயானிக்கு மொழிந்து, தன் புதல்வனான பூருவுக்கு, அவனுடைய யௌவன (இள) வயதைக் கொடுத்து, சப்தாதி விஷயங்களை அனுபவிக்க வேண்டுமென்னும் விருப்பம் தொலையப் பெற்று, அந்தப் பூருவினிடத்தினின்று தன் கிழத்தனத்தை வாங்கிக்கொண்டான். பிறகு அம்மன்னவன், அக்னி திக்கில் த்ருஹ்யுவையும், தென் திக்கில் யதுவையும், மேற்கு திக்கில் துர்வஸுவையும், வடக்கு திக்கில் அனுவையும் பாதுகாக்கும்படி ஏற்படுத்தினான். வெகுமதிக்கத் தகுந்த மஹாகுணசாலியான “பூருவை அத்திசைகளினிடையிலுள்ள பூமண்டலத்திற்கெல்லாம் அரசனாக அபிஷேகம் செய்து, அவன் தமையன்மார்களான யது முதலியவர்களை அவனுக்கு உட்பட்டு நடக்கும்படி ஏற்படுத்தி,  தான் வனத்திற்குச் சென்றான். 

இறகு முளைக்கப்பெற்ற பறவை கூட்டைத் துறப்பது போல, அந்த யயாதி மன்னவன், பல வர்ஷங்களாக ஆறு இந்திரியங்களாலும் தான் தடையின்றி அனுபவித்துக்கொண்டு வந்த சப்தாதி விஷய (உலக விஷய) ஸுகங்களை எல்லாம் ஒரு க்ஷணகாலத்தில் துறந்தான். ப்ரஸித்தனாகிய அம்மன்னவன், வனத்திற்குச் சென்று, அங்குத் தேஹத்திலும் (உடலிலும்) அதைத் தொடர்ந்த மற்றவைகளிலும், மனப்பற்றைத் துறந்து, ப்ரஹ்ம உபாஸனத்தினால் (பகவானை த்யானம் செய்வதால்) ஸத்வாதி குணங்களின் கார்யமான ராக-த்வேஷாதிகள் (விருப்பு, வெறுப்பு முதலியன) எல்லாம் தொலையப்பெற்று, பெரியோர்களுக்கு ப்ராப்யமும் (அடையப்படக்கூடிய பொருளும்), வாஸுதேவனென்னும் பெயருடையதுமான, பரப்ரஹ்மத்தில் மனத்தை நிலை நிறுத்தி, அந்தப் பகவானுடைய பக்தர்கள் பெறும்படியான கதி கிட்டப் பெற்றான். 

தேவயானியோவென்றால், தன் கணவன் சொன்ன கதையைக் கேட்டு, ஆண்களும், பெண்களும் ஒருவர்க்கொருவர் ஸ்நேஹத்தை ஏறிட்டுக் கொண்டு, ஒருவரையொருவர் பிரிந்திருக்க முடியாமல் வருந்துவதை, இவ்வாறு ஒரு கதை போல மொழிந்து, தன்னைப் பரிஹாஸம் (கேலி) செய்தாற்போல நினைத்தாள். அப்பால், அந்தத் தேவயானி, வழிப்போக்கர்கள் தண்ணீர்ப்பந்தலில் ஒன்று சேருவது போல, ஈச்வரனுக்கு உட்பட்டவர்களான, பிள்ளை, பெண்டிர், கணவன் முதலியவர்கள் தத்தம் பந்துக்களோடு சேருவது நிலையற்றதென்றும், ப்ரபுவான ஈச்வரனுடைய மாயையினால் ஏற்பட்டதென்றும், நன்றாகத் தெரிந்து கொண்டு, எல்லாவற்றையும் ஸ்வப்னம் (கனவு) போல நினைத்து, தேஹம், அதைத் தொடர்ந்தவை முதலிய அனைத்திலும் மனப்பற்றைத் துறந்து, ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மனத்தை நிறுத்தி, தன் சரீரத்தைத் (உடலைத்) துறந்தாள். (ஸ்ரீசுகர், காமக்கலவியில் (காதல் ஆசை சேர்த்தி இன்பத்தில்) தாழ்ந்த யயாதியும், தேவயானியும், பகவானுடைய அனுக்ரஹத்தினால், மோக்ஷம் அடைந்தார்களென்று மொழிந்து, அந்த பகவானுடைய குணங்களை நினைத்து, மனமகிழ்ந்து, அவனுக்கு நமஸ்காரம் செய்கிறார்). உலகங்களையெல்லாம் படைப்பவனும், ஸமஸ்த பூதங்களுக்கும் ஆதாரமாயிருப்பவனும், பசி, தாஹம் முதலிய ஊர்மிகள் (சோக (துன்பம்), மோஹ (மயக்கம், கலக்கம்), ஜரா (மூப்பு), மரண (இறப்பு), க்ஷுத் (பசி), பிபாஸா (தாஹம்) என்கிற மீண்டும் மீண்டும் வரும் ஆறு துன்ப அலைகள்) அற்றவனும், குணங்களாலும், ஸ்வரூபத்தினாலும், அளவற்றவனும், ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), வாஸுதேவனென்று ப்ரஸித்தி பெற்றவனுமாகிய, உனக்கு நமஸ்காரம். 

பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை