ஶ்ரீமத் பாகவதம் - 210

ஒன்பதாவது ஸ்கந்தம் - பதினெட்டாவது அத்தியாயம்

(யயாதியின் வ்ருத்தாந்தம்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ப்ராணிகளுக்கு ஆறு இந்த்ரியங்கள் போல, நஹுஷனுக்கு யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, விக்ருதி, க்ருதி என்னும் ஆறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில், மூத்தவனான யதியென்பவன், தந்தை தனக்கு ராஜ்யம் கொடுக்கினும், அதில் கடைசியாக விளையும் துக்கங்களை அறிந்தவனாகையால், அதை அங்கீகரிக்கவில்லை. ராஜ்யத்தில் இழிந்தவன், தன்னை அறியமாட்டானல்லவா? பிறகு நஹுஷன், இந்த்ர பதவியைப் பெற்று, இந்திராணியைப் புணர (சேர) விரும்புகையில், அவள் அகஸ்த்யர் முதலிய ப்ராஹ்மணர்களிடம் விண்ணப்பம் செய்ய, அவர்களும் அவனை வாஹனத்தில் ஏற்றிக்கொண்டு ஊர்கோலம் வர, நஹுஷன் இந்த்ராணியைப் புணர (சேர) வேண்டும் என்னும் விருப்பத்தினால் விரைந்து, சீக்ரம் போகும்படி அம்முனிவர்களைக் கால் கட்டை விரலால் குற்றித் தூண்ட, அவர்கள் அவனுடைய துர்ப்புத்தியைக் (கெட்ட புத்தியைக்) கண்டு, கோபித்து,  “ஸர்ப்பமாய் விடுவாயாக” என்று சபித்து, வாஹனத்தினின்றும் கீழே விழத் தள்ள, அவன் அப்படியே ஸ்வர்க்கத்தினின்று நழுவி, மலைப்பாம்பாகப் பிறந்தான். யயாதி, தன் தந்தை அவ்வாறு இந்த்ரப் பதவியினின்று நழுவின பின்பு, ராஜ்யத்தைக் கைப்பற்றி ஆண்டு வந்தான். அவன், தன் தம்பிகளான ஸம்யாதி முதலிய நால்வரையும், நான்கு திசைகளில் ஏற்பாடு செய்து, தான் சுக்ரனுடைய பெண்ணான தேவயானியையும், வ்ருஷபர்வனுடைய பெண்ணான சர்மிஷ்டையையும் மணம் புரிந்து, பூமியைப் பாதுகாத்து வந்தான்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹானுபாவனாகிய சுக்ரன் ப்ரஹ்மர்ஷி. யயாதி க்ஷத்ரியர்களிலும் தாழ்ந்தவன். ஆகையால் க்ஷத்ரியனுக்கும், ப்ராஹ்மணனுக்கும் ப்ரதிலோமமான (உயர்ந்த ஜாதிப் பெண்ணை தாழ்ந்த ஜாதி ஆண் மணக்கும்) ஸம்பந்தம் எப்படி நேர்ந்தது?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தானவர்களுக்கு ப்ரபுவான வ்ருஷபர்வனுடைய பெண் சர்மிஷ்டையென்பவள். அவள் மிகுந்த அழகுடையவள். அப்பெண்மணி, ஒருகால் ஆயிரம் ஸகிகளுடனும் ஆசார்யனான சுக்ரனுடைய பெண்ணாகிய தேவயானியுடனும் கூடி, புஷ்பித்த (மலர்ந்த) வ்ருக்ஷங்கள் (மரங்கள்) அடர்ந்திருப்பதும், வண்டுகளின் மதுரமான கானத்தினால் ரமணீயமான தாமரையோடைகளின் மணற்குன்றுகள் அமைந்து அழகியதுமான, பட்டணத்து உத்யானத்தில் (தோட்டத்தில்) புகுந்து உலாவினாள். பிறகு, தாமரைக்கண்ணிகளான அப்பெண்மணிகள், தாமரைத் தடாகத்திற்குச் சென்று, பட்டு வஸ்த்ரங்களைக் கரையில் அவிழ்த்து வைத்து, தடாகத்தில் இறங்கி, ஒருவர் மேல் ஒருவர் ஜலத்தை இறைத்துக்கொண்டு, விளையாடினார்கள். அப்பொழுது, ருத்ரன் பார்வதியோடு வ்ருஷப வாஹனத்தின் மேலேறி அவ்வழியே போகக் கண்டு, அப்பெண்கள் அனைவரும் வெட்கி, வேகமாகக் கரையேறி, வஸ்த்ரங்களை எடுத்து உடுத்திக் கொண்டார்கள். சர்மிஷ்டை வேகத்தில் தெரியாமல், குருபுத்திரியான தேவயானியின் வஸ்த்ரத்தைத் தன்னுடையதென்று ப்ரமித்து, உடுத்திக்கொண்டாள். பிறகு, தேவயானி அதற்குக் கோபித்து, சர்மிஷ்டையை  நோக்கி இவ்வாறு மொழிந்தாள்.

தேவயானி சொல்லுகிறாள்:- ஆ! எங்கள் தாதி செய்யத்தகாத கார்யம் செய்தாள். கண்டீர்களா? நாய் யாகத்தின் ஹவிஸ்ஸைத் தீண்டுவது போல, நான் உடுத்திக்கொள்ள வேண்டிய வஸ்த்ரத்தை எடுத்து, தான் உடுத்திக்கொண்டாளல்லவா? ப்ராஹ்மணர்களல்லவோ தவத்தினால் இவ்வுலகத்தைப் படைத்தார்கள். ப்ராஹ்மணர்களே பரமபுருஷனுடைய முகமென்று வேதங்கள் முறையிடுகின்றன. பரஞ்சோதியான பரப்ரஹ்மத்தை இவர்கள் உபாஸிக்கிறார்கள். இவர்களே நன்மைக்கிடமான வைதிக மார்க்கத்தை வெளியிட்டார்கள். உலகங்களுக்கெல்லாம் ப்ரபுக்களான தேவ ச்ரேஷ்டர்களும், இவர்களை எழுந்து எதிர்கொண்டு வணங்குகிறார்கள். ஸர்வ அந்தராத்மாவும் (எல்லோரையும் உள் இருந்து நியமிப்பவனும்), எல்லோர்க்கும் சுத்தியை (நன்மையை) விளைப்பவனும், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வாஸஸ்தானமுமாகிய, பகவானும்கூட இவர்களை எதிர்கொண்டு வணங்குகிறான். இவ்வாறு பலவகையில் சிறந்த அந்தணர்களிலும் நாங்கள் ப்ருகு வம்சத்தில் பிறந்தவர்கள். இந்தச் சர்மிஷ்டையின் தந்தையாகிய வ்ருஷபர்வனென்பவன் அஸுரன்; எங்கள் தந்தையின் சிஷ்யன். இப்படியிருக்க, இவ்வாறு செய்யத்தகாத இவள் நான் உடுத்திக்கொள்ள வேண்டிய வஸ்த்ரத்தை உடுத்திக்கொண்டாள்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு துர்ப்பாஷைகளால் அவமதிக்கப்பட்ட சர்மிஷ்டை, கோபத்தினால் பெண் ஸர்ப்பம் போல் பெருமூச்செறிந்து, உதட்டைக் கடித்துக்கொண்டு, வைகின்ற (திட்டுகின்ற) குருபுத்ரியான தேவயானியைப் பார்த்து மொழிந்தாள்.

சர்மிஷ்டை சொல்லுகிறாள்:- அடி பிச்சைக்காரப் பெண்ணே! நீ, உன் நிலைமையை அறியாமல், பலவாறு பிதற்றுகின்றாய். காக்கை போலவும், நாய் போலவும் நீ, உன் ஜீவனத்திற்காக எங்கள் வீட்டை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது உனக்குத் தெரியவில்லையா?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- சர்மிஷ்டை இப்படிப்பட்ட, இன்னும் பல கொடிய மொழிகளால் ஆசார்ய புத்ரியான தேவயானியை திரஸ்கரித்து (புறக்கணித்து), கோபத்தினால் வஸ்த்ரத்தையும் எடுத்துக்கொண்டு, அவளைக் கிணற்றில் தள்ளினாள். பிறகு, சர்மிஷ்டை புறப்பட்டுப் போகையில், யயாதி மன்னவன், வேட்டையாடிக் கொண்டே தெய்வாதீனமாய்த் தண்ணீர் விரும்பி, அக்கிணற்றின் அருகாமைக்கு வந்து, அங்கு ஒரு பெண்மணி அரையில் ஆடையின்றி விழுந்திருக்கக் கண்டான். பிறகு, ஆடையில்லாதிருக்கின்ற அந்தத் தேவயானிக்கு, அம்மன்னவன் தன் மேல் உத்தரீயத்தைக் கொடுத்து, மன இரக்கத்துடன் தன் கையால் அவள் கையைப் பிடித்து, அவளைக் கரையேற்றினான். சுக்ரனுடைய பெண்ணாகிய தேவயானி தன்னைக் கரையேற்றின வீரனான யயாதியைப் பார்த்து, ப்ரேமம் (அன்பு) நிறைந்த உரையுடன் கூறினாள்.

தேவயானி சொல்லுகிறாள்:- மன்னவனே! சத்ரு (எதிரி) பட்டணங்களை அழிக்க வல்லவனே! நீ, என் கையைப் பிடித்தாய். இவ்வாறு உன்னால் பிடிக்கப்பட்ட என்னை, மற்றொருவன் கைப்பிடிக்கலாகாது. ஆகையால், நீயே என்னை மணம் புரிய வேண்டும். “நீ ப்ராஹ்மணப்பெண். நான் க்ஷத்ரியன். நமக்கு விவாஹம் எப்படிக் கூடும்? என்று சங்கிக்க (ஸந்தேஹிக்க) வேண்டாம். மன்னவனே! நமக்கு இந்த விவாஹ ஸம்பந்தம் தெய்வாதீனமாய் நேரிட்டிருக்கின்றதேயன்றி, புருஷ யத்னத்தால் (முயற்சியால்) நேர்ந்ததன்று; ஆகையால், அவ்விஷயத்தில் தோஷமில்லை. கிணற்றில் விழுந்திருந்த எனக்கு, உன் காட்சி நேரிட்டதே; இது தெய்வத்தின் செயலென்பதில் ஸந்தேஹம் உண்டோ? அவ்வாறே, நம்முடைய ஸம்பந்தமும் தெய்வச் செயலால் நேரிட்டது. நீண்ட புஜ, தண்டங்களுடையவனே! மற்றும், நான் ப்ராஹ்மணப் பெண்ணாயினும், ப்ராஹ்மணன் என் கையைப் பிடிக்க இடமில்லை. முன்பு ப்ருஹஸ்பதியின் புதல்வனாகிய கசன், என்னால் சபிக்கப்பெற்று, எனக்கு அவ்வாறு மறு சாபம் கொடுத்திருக்கிறான். ஆதலால், நீ இவ்விஷயத்தில் சங்கிக்க (ஸந்தேஹிக்க) வேண்டாம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு, யயாதி மன்னவன் இதற்குச் சாஸ்த்ரம் இடங்கொடாமையால், தனக்கு அநிஷ்டமாயினும் (விருப்பம் இல்லையாயினும்), அது தெய்வாதீனமாய் நேர்ந்திருப்பதையும், அதர்மத்தில் செல்லும் தன்மையற்ற தன் மனம் அவளிடத்தில் விருப்பமுற்றிருப்பதையும் ஆராய்ந்து, அவள் சொன்னதை அப்படியே அங்கீகரித்தான். வீரனான யயாதி மன்னவன் புறப்பட்டுப் போகையில், தேவயானி தந்தையிடம் சென்று, அழுதுகொண்டே சர்மிஷ்டை செய்தது, சொன்னது, எல்லாவற்றையும் அறிவித்தாள். ஜ்ஞானாதி (அறிவு முதலிய) குணங்கள் நிறைந்த சுக்ராசார்யன் அதைக் கேட்டு, மன வருத்தமுற்று, புரோஹிதத் தொழிலை நிந்தித்து, உஞ்சவிருத்தியைப் புகழ்ந்துகொண்டு, பெண்ணுடன் கூடி, வ்ருஷபர்வனுடைய பட்டணத்தினின்று புறப்பட்டுப் போனான். பிறகு வ்ருஷபர்வன், தன் குருவான சுக்ராசார்யன் தன் மேல் கோபித்து, தன் சத்ருக்களான (எதிரிகளான) தேவதைகளுக்கு ஜயத்தை (வெற்றியை) விளைக்க வேண்டுமென்று அபிப்ராயப்பட்டிருப்பதை (நினைத்திருப்பதை) அறிந்து, ஓடிச்சென்று, வழியில் பாதங்களில் விழுந்து, குருவை அருள்புரியும்படி வேண்டினான். அரைக்ஷணத்திற்குமேல் கோபம் தங்கப் பெறாத மஹானுபாவனான அந்தப் பார்க்கவனும், சிஷ்யனான வ்ருஷபர்வனைப் பார்த்து “ராஜனே! இவளுடைய விருப்பத்தை நீ நிறைவேற்ற வேண்டும். என்னால் இவளைத் துறக்க முடியாது. எனக்கு இவளிடத்தில் ஸ்நேஹம் அளவற்றிருக்கின்றது” என்றான். வ்ருஷபர்வன் அப்படியே ஆகட்டுமென்று ஒப்புக்கொண்டு நிற்கையில், தேவயானி நான் என் தந்தையால் கொடுக்கப்பெற்று எவ்விடம் போகிறேனோ, அவ்விடத்தில் இந்தச் சர்மிஷ்டை தன் தாஸிகளுடன் (வேலைக்காரிகளுடன்) என்னைத் தொடர்ந்து வந்து, எனக்குத் தாஸியாயிருக்க (வேலைக்காரியாய் இருக்க) வேண்டும்” என்று தன் மனக்கருத்தைச் சொன்னாள். 

பிறகு சர்மிஷ்டை, அந்தச் சுக்ரன் ப்ரதிகூலித்தால் (எதிர்த்தால்) தன் தந்தை முதலியவர்க்கு ஸங்கடம் (கஷ்டம்) நேருவதையும், அநுகூலித்தால் (ஆதரித்தால்) பெரிய ப்ரயோஜனம் கை கூடுவதையும் ஆலோசித்து, தன் ஸகிகளான ஆயிரம் பெண்களுடன், தானும் தாஸி (வேலைக்காரி) போல தேவயானிக்குப் பணிவிடை செய்து வந்தாள். அப்பால், சுக்ராசார்யன் தன் புதல்வியான தேவயானியை, சர்மிஷ்டையுடன் நஹுஷன் பிள்ளையான யயாதிக்குக் கொடுத்து, அவனைப் பார்த்து,  “மன்னவனே! சர்மிஷ்டையை ஒருகாலும் படுக்கையில் ஏற்றுக்கொள்ளலாகாது” என்று மொழிந்தான். பிறகு ஒரு காலத்தில் சர்மிஷ்டை, யயாதி மன்னவனுடைய பார்யையும் (மனைவியும்), சுக்ரனுடைய பெண்ணுமாகிய தேவயானி, அழகான பிள்ளைகளைப் பெற்று வாழ்வதைக் கண்டு, தானும் ருதுகாலத்தில் இருப்பது பற்றித் தன் ஸகியான தேவயானியின் பர்த்தாவான (கணவனான) அந்த யயாதி மன்னவனையே தனக்கு ஸந்ததியின் பொருட்டு வேண்டினாள். தர்மஜ்ஞனாகிய (தர்மத்தை அறிந்தவனான) யயாதி மன்னவன், அப்பொழுது சர்மிஷ்டையால் ஸந்ததியின் பொருட்டு வேண்டப்பெற்று, தர்ம ஸூக்ஷ்மத்தை ஆராய்ந்து, சுக்ரனுடைய வார்த்தை நினைவுக்கு வந்திருப்பினும், அக்காலம் தெய்வாதீனமாய் நேர்ந்திருப்பதைப்பற்றி, அவளைப் புணர்ந்தான். தேவயானி, யதுவென்றும், துர்வஸுவென்றும் இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள். வ்ருஷபர்வனுடைய புதல்வியான சர்மிஷ்டை, த்ருஹ்யுவென்றும், அநுவென்றும், பூருவென்றும் மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். 

அப்பால், பெரும் செருக்குடைய (கர்வமுடைய) தேவயானி, அஸுரனுடைய குமாரத்தியான சர்மிஷ்டையும் தன் கணவனிடமிருந்தே கர்ப்பம் தரித்த செய்தியை அறிந்து, பெருங்கோபமுற்று, தந்தையின் க்ருஹத்திற்குப் போனாள். காமக் கலவியில் மனம் தாழ்ந்த யயாதி, அன்பிற்கிடமான தேவயானியைத் தொடர்ந்து, பாதங்களைப் பிடித்துக்கொள்வது முதலிய பல உபசாரங்களைச் செய்து, பல நல்வார்த்தைகளைச் சொல்லி வேண்டியும், அவளை அருள் புரிவிக்க வல்லவனாகவில்லை. அப்பொழுது சுக்ரன் கோபித்து, அந்த யயாதியை நோக்கிப் “பெண்ணாசை பிடித்தவனே! பொய்யே ஒரு புருஷ உருவங்கொண்டாற் போலிருப்பவனே! துர்ப்புத்தி! ப்ராணிகளின் அழகைக் குலைக்கவல்ல கிழத்தனம் உன்னைப் பிடித்துக்கொள்ளுமாக” என்று சபித்தான். 

சபிக்கப்பட்ட அம்மன்னவன் சுக்ரனைப் பார்த்து, “ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! உமது புதல்வியிடத்தில் காம போகங்களால் (காதல் ஆசை அனுபவங்களால்)  நான் இன்னும் திருப்தி உண்டாகப்  பெறாது இருக்கின்றேன். ஆகையால், என்னைப் பொறுத்தருள வேண்டும்” என்றான். அதைக் கேட்ட சுக்ரனும், “உன் கிழத்தனத்தை எவன் வாங்கிக்கொள்கிறேனென்று ஒப்புக்கொள்கிறானோ, அவனுடைய யௌவன (இளம்) வயதை நீ பெற்றுக்கொண்டு, உன் கிழத்தனத்தை அவனுக்குக் கொடுப்பாயாக. காம போகங்களை (காதல் ஆசை அனுபவங்களை) அனுபவிக்க வேண்டுமென்னும் விருப்பம் எதுவரையில் மாறாதிருக்குமோ, அது வரையில் நீ உன் கிழத்தனத்தைக் கொடுத்து, யௌவனத்தை மாற்றிக்கொள்வாயாக” என்றான். 

அந்த யயாதி மன்னவன், இவ்வாறு கிழத்தனத்திற்கு ஒரு எல்லை ஏற்படுத்திக்கொண்டு வந்து, தன் பிள்ளைகளில் ஜ்யேஷ்டனான (மூத்தவனான) யதுவைப் பார்த்து “அப்பா! யதூ! உன் பாட்டனாரால் (தாத்தாவால்) ஏற்பட்ட இந்த என் கிழத்தனத்தை, நீ பெற்றுக் கொண்டு, உன் யௌவன வயதை எனக்குக் கொடுப்பாயாக. நான் இன்னும் சப்தாதி விஷய போகங்களில் த்ருப்தி உண்டாகப் பெறாதிருக்கிறேன். ஆகையால், உன்னுடைய யௌவன வயதைப் பெற்று, நான் இன்னும் சில வர்ஷங்கள் ஸுகத்தை அனுபவிக்க விரும்புகிறேன்” என்றான். அதைக் கேட்ட, தந்தையை நோக்கி “உனக்கு வயதின் நடுவில் நேரிட்ட கிழத்தனத்தை வாங்கிக்கொள்ள எனக்கு இஷ்டமில்லை. விஷய ஸுகங்களை அனுபவிக்காமல் எவனும் வைராக்யத்தை (பற்று இல்லாது இருப்பதை) அடையமாட்டான். அந்த ஸுகங்களை அனுபவித்த நீயே இன்னும் வைராக்யம் (பற்றற்ற தன்மை) உண்டாகப் பெறவில்லை. முதலே விஷய ஸுகத்தை அனுபவிக்காத நான் எப்படி வைராக்யத்தைப் (பற்றற்ற தன்மையைப்) பெறுவேன்? என்றான். துர்வஸ், த்ருஹ்யு, அனு இவர்களும் அவ்வாறே தந்தையால் வேண்டப்பெற்றும், அநித்யமான தேஹத்தை நித்யமாக ப்ரமித்து, தர்மத்தை அறியாதவர்களாகையால், யதுவைப் போலவே கிழத்தனத்தை வாங்கிக்கொள்ள மாட்டோமென்று அம்மன்னவனைத் திரஸ்கரித்தார்கள் (புறக்கணித்தார்கள்). 

யது, தந்தை யயாதியின் வேண்டுகோளை மறுக்கவே, யயாதி தனது மூத்த மகன் யதுவுக்கு, இனி உனக்கும் உன் தலைமுறையினரும் அத்தினாபுரத்து அரச மணிமகுடம் சூட்டிக்கொள்ளத் தகுதி இல்லாமல் போகக்கடவது என்றும், நீங்கள் கால்நடை செல்வங்களுக்கே சொந்தக்காரர்களாக இருக்கக் கடவது என்றும் சாபம் இட்டார்.

யயாதி மன்னன் கோபத்தின் காரணமாக, தன் மூத்த மகன் யதுவும், அவனது வழித்தோன்றல்களும், இனி நாட்டை அரசாளும் உரிமையில்லாது போகக்கடவது எனக் கொடுத்த சாபத்தால், யதுவின் வழித்தோன்றல்கள் நாட்டை ஆள இயலாது ஆடு, மாடுகள் மேய்த்து, பால், தயிர்,வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உற்பத்தி செய்யும் யாதவர் குலம் தோன்றியது.

பிறகு, யயாதி மூன்று பிள்ளைகளைக்காட்டிலும் வயதில் குறைந்தவனும், குணங்களால் மேம்பட்டவனுமாகிய, பூருவென்னும் புதல்வனைப் பார்த்துக் “குழந்தாய்! நீயும் உன் தமையன்மார்களைப் போல என்னைத் திரஸ்கரிக்கலாகாது (புறக்கணிக்கலாகாது)” என்றான். அதைக்கேட்ட பூரு, தந்தையை நோக்கி “ஓ மன்னவனே! இவ்வுலகத்தில் எந்தப் புருஷன்தான் தனக்குத் தேஹத்தை (உடலை) விளைத்துக் கொடுத்த மஹோபகாரகனான (பெரும் உதவி செய்த) தந்தைக்குப் பதில் உபகாரம் செய்யவல்லனாவான்? புருஷன், தந்தையின் அனுக்ரஹத்தினாலல்லவோ, மேலான இஹலோக (இந்த உலக) ஸுகத்தையும், பரலோக (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலக) ஸுகத்தையும் பெறுகின்றான்? ஆகையால், அவனுக்குப் பதில் உபகாரம் செய்ய முடியாது. ஆயினும், அவன் நெஞ்சில் நினைப்பதை அவர் சொல்லாமலே தெரிந்து கொண்டு, அதை செயல் படுத்துபவன் உத்தமன் (சிறந்தவன்). அவன் சொன்னபடி செய்கின்றவன் மத்யமன் (இடைப்பட்டவன்). அதை அச்ரத்தையோடு (ஈடுபாடின்றிச்) செய்கின்றவன் அதமன் (தாழ்ந்தவன்). அச்ரத்தையோடும் (ஈடுபாடின்றியும்) செய்யாதவன், அத்தந்தையின் மல, மூத்ரங்கள் போன்றவனேயன்றி, அவன் புதல்வனேயாகமாட்டான்” என்று இவ்வாறு மொழிந்து கொண்டே, ப்ரீதியுடன் தந்தையின் கிழத்தனத்தைப் பெற்றுக் கொண்டு, தன் யௌவனத்தை (இளமையை) அவனுக்குக் கொடுத்தான். 

பிறகு, அந்த யயாதி மன்னவனும், பிள்ளை கொடுத்த யௌவன (இள) வயதைப் பெற்று, காம ஸுகங்களை இஷ்டப்படி அனுபவித்து வந்தான். அவன், ஏழு த்வீபங்களுக்கும் ப்ரபுவாகி, ப்ரஜைகளைத் (மக்களைத்) தந்தை போலப் பாதுகாத்துக் கொண்டு, இந்திரியங்களெல்லாம் திடமாயிருக்கப்பெற்று, மன விருப்பத்தின்படி விஷயங்களை அனுபவித்தான். அன்பிற்கிடமான தேவயானி, மிகவும் அன்பனாகிய தன் பர்த்தாவுக்கு ஏகாந்தத்தில் மிகுந்த ப்ரீதியை விளைத்தாள். யயாதி, மிகப்பெரிய தக்ஷிணைகளையுடைய பல யாகங்களால், ஸமஸ்த தேவஸ்வரூபனும், ஸமஸ்த யஜ்ஞங்களாலும் ஆராதிக்கத் தகுந்தவனும், அவற்றிற்குப் பலன் கொடுப்பவனும், அவற்றின் ஹவிர்ப்பாகங்களைப் புசிப்பவனும், தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்குகின்றவனுமாகிய, பரமபுருஷனை ஆராதித்தான். சேதனாசேதன ரூபமான (அறிவுடைய ஜீவத்மாக்கள், அறிவற்ற ஜடப்பொருட்கள் கொண்ட) இந்த ப்ரபஞ்சமெல்லாம் எவனால் தன்னிடத்தில் படைக்கப்பெற்று, ஆகாயத்தில் மேகங்களின் வரிசை போலவும், ஸ்வப்னம் (கனவு) போலவும், மாயை போலவும், மனோரதம் (மனதின் ஓட்டம்) போலவும், பலவாறு தோற்றுவதும், மறைவதுமாயிருக்கின்றனவோ, அப்படிப்பட்ட பெருமையுடையவனும், வாஸுதேவனென்று ஓதப்படுகின்றவனும், ஸமஸ்த ப்ராணிகளின் ஹ்ருதய குஹைகளில் வஸிப்பவனும், அணுவான ஜீவனைக் காட்டிலும் மிகவும் அணுவாயிருப்பவனுமாகிய,  ஸ்ரீமந்நாராயணனை மனத்தில் த்யானித்துக்கொண்டு, ஒரு பலனையும் விரும்பாமல் ஸமர்த்தனாகிய அம்மன்னவன், பல யாகங்கள் செய்தான். பூமண்டலத்திற்கெல்லாம் ப்ரபுவாகிய அந்த யயாதி, இவ்வாறு அடங்காமல், நிந்திக்கத் தகுந்தவைகளான மனம் முதலிய ஆறு இந்திரியங்களால் அனேகமாயிரமாண்டுகள் காமபோகங்களை அனுபவித்தும், திருப்தி அடையவில்லை. 

பதினெட்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை