ஶ்ரீமத் பாகவதம் - 209

 ஒன்பதாவது ஸ்கந்தம் - பதினேழாவது அத்தியாயம்

(புரூரவன் பிள்ளைகளில் ஆயுவின் வம்சத்தைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- புரூரவனுடைய பிள்ளைகளில் ஆயுவென்பவன் ஒருவன் உண்டென்று மொழிந்தேனல்லவா? அவனுக்கு நஹுஷன், க்ஷத்ரவ்ருத்தன், ரஜி, ரம்பன், அனேனன் என்று ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள். எல்லோரும் மிகுந்த வீர்யமுடையவர்கள். அவர்களில், க்ஷத்ரவ்ருத்தனுடைய வம்சத்தைச் சொல்லுகிறேன்; கேட்பாயாக. 

ராஜச்ரேஷ்டனே! க்ஷத்ரவ்ருத்தனுடைய பிள்ளை ஸுஹோத்ரனென்பவன். அவனுக்கு காச்யன், குசன், க்ருத்ஸ்னமதனென்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில், க்ருத்ஸ்னமதனுடைய பிள்ளை சுனகன். அவனுக்குச் சௌனகர் பிறந்தார். அவர் பஹ்வ்ருசர்களில் (ரிக் வேத மந்த்ரங்களில்) சிறந்தவர்; முனிவராயிருந்தார். காச்யனுடைய பிள்ளை காசிராஜன். அவன் பிள்ளை தீர்க்கதபன். அவன் பிள்ளை தன்வந்தரி. அவனே ஆயுர்வேதமென்கிற வைத்ய சாஸ்தரத்தை வெளியிட்டான். அவன் யஜ்ஞத்தில் ஹவிர்ப்பாகம் (யாகத்தில் தேவதைகளுக்காக அக்னியில் ஹோமம் செய்யப்படும் பொருள்) பெற்றவன்; வாஸுதேவனுடைய அம்சாவதாரம். நினைத்த மாத்ரத்தில், ரோகத்தைப் (வியாதியை) போக்கவல்லவன். (இவன் ஸமுத்ரம் கடையும் பொழுது உண்டான தன்வந்தரியைக் காட்டிலும் வேறுபட்டவன்). அவன் பிள்ளை கேதுமான். அவன் பிள்ளை பீமரதன். அந்தக் கேதுமானுக்கு த்யுமானென்று மற்றொரு பிள்ளை உண்டு. அவன் திவோதாஸனென்றும், ப்ரதர்த்தனனென்றும், சத்ருஜித்தென்றும், வத்ஸனென்றும், ருதத்வஜனென்றும், குவலயாச்வனென்றும் பல நாமங்களைப் பெற்றான். அவனுக்கு அலர்க்கன் முதலிய பல பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் அலர்க்கனொருவனே யௌவனத்துடன் (இளமையுடன்) அறுபத்தாறாயிரம் வர்ஷங்கள் பூமியை ஆண்டு வந்தான். 

அக்காலத்தில், அவனைத்தவிர மற்றெவனும் யௌவனத்துடன் (இளமையுடன்) பூமியை ஆளவில்லை. அலர்க்கன் பிள்ளை ஸந்நதி. அவன் பிள்ளை ஸுகேதன். அவன் பிள்ளை ஸுகேதனன். அவன் பிள்ளை தர்மகேது. அவன் பிள்ளை ஸத்யகேது. அவன் பிள்ளை திருஷ்டகேது. அவன் பிள்ளை ஸுகுமாரன். அவன் மன்னவனாயிருந்தான். அவன் பிள்ளை வீதிஹோத்ரன். அவன் பிள்ளை பர்க்கன். அவன் பிள்ளை பர்க்கபூமி. இவ்வாறு சொல்லப்பட்ட இம்மன்னவர்கள், காச்யனுடைய வம்சத்தில் பிறந்தவர்கள். காச்யனுடைய கொள்பாட்டனாகிய (தாத்தாவின் தகப்பனார்) க்ஷத்ரவருத்தனுடைய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். (ஆயுவின் பிள்ளைகளில் ஒருவனான க்ஷத்ரவருத்தனுடைய வம்சத்தை மொழிந்தேன். இனி அவர்களில் மற்றொருவனான ரம்பனுடைய வம்சத்தைச் சொல்லுகிறேன், கேட்பாயாக).

ரம்பனுக்கு ரபஸனென்றும், கம்பீரனென்றும் இரண்டு பிள்ளைகள். அவர்களில் ரபஸன் பிள்ளை க்ரது. க்ரதுவின் பார்யையிடத்தில் (மனைவியிடத்தில்) ப்ராஹ்மணகுலம் உண்டாயிற்று. இனி ஆயுவின் பிள்ளைகளில் மற்றொருவனான அனேனனுடைய வம்சத்தைச் சொல்லுகிறேன், கேட்பாயாக. 

அனேனனுடைய பிள்ளை சுத்தன். அவன் பிள்ளை சுசி. அவன் பிள்ளை த்ரிககுத்து. அவனுக்குத் தர்மஸாரதியென்று (ப்ரஹ்மஸாரதி என்று சிலர்) மற்றொரு பெயரும் உண்டு. அவன் பிள்ளை சாந்தரயன். அவன், ஜ்ஞானயோகத்தில் இழிந்து, மோக்ஷ ஸாதனமான கார்யத்தை அநுஷ்டித்து வந்தான். ஆகையால், அவனுக்கு ஸந்ததி கிடையாது. ஆயுவின் பிள்ளைகளில் மற்றொருவனான ரஜிக்கு ஐந்நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களெல்லாரும் மஹா தேஜஸ்விகள். 

ரஜி, தேவதைகளால் வேண்டப்பெற்று, தைத்யர்களை வதித்து, அவர்களால் பறிக்கப்பட்ட ஸ்வர்க்கத்தை, இந்த்ரனுக்கு மீட்டுக்கொடுத்தான். இந்திரன் மீளவும் ப்ரஹ்லாதனிடம் பயந்து, ஸ்வர்க்கத்தை அந்த ரஜிக்கே கொடுத்து, அவன் பாதங்களைப் பிடித்துக்கொண்டு, தன்னையும் அவனிடத்தில் அர்ப்பணம் செய்தான். ரஜியின் பிள்ளைகள் ஐந்நூறு பேர்களும் தங்கள் தந்தை மரணம் அடைந்த பின்பு, ஸ்வர்க்கத்தைத் தனக்குக் கொடுக்கும்படி வேண்டுகிற தேவேந்திரனுக்கு அதைக்கொடுக்காமல், யாகத்தில் கொடுக்கப்படும் பொருட்களையும் பெற்றுக்கொண்டு வந்தார்கள். பிறகு ப்ருஹஸ்பதி, அபிசார (மந்த்ர, தந்த்ரங்கள் மூலம் கெடுதி செய்யும்) விதியின்படி, அவர்களுக்கு மதி (புத்தி) கேடு நேரும்படி அக்னியில் ஹோமம் செய்தமையால், இந்த பதவியை ஆளும்படியான நல்வழியினின்று தவறியிருக்கின்ற, அந்த ரஜியின் புத்ரர்கள் அனைவரையும் இந்தரன் வதித்தான், ஒருவனும் மிகவில்லை. 

க்ஷத்ரவ்ருத்தனுடைய பேரனாகிய குசன் பிள்ளை ப்ரீதியென்பவன் (ப்ரதியென்று சிலர்). அவன் பிள்ளை ஸஞ்சயன். அவன் பிள்ளை ஜயன். அவன் பிள்ளை க்ருதன். அவன் பிள்ளை ஹர்யச்வகன். அவன் பிள்ளை ஸஹதேவன். அவன் பிள்ளை பீமன். அவன் பிள்ளை ஜாஸேனன். அவன் பிள்ளை ஸங்க்ருதி. அவன் மஹாசூரனும், மஹாரதனுமாயிருந்தான். இப்பொழுது சொல்லப்பட்ட இம்மன்னவர்கள் அனைவரும், க்ஷத்ரவருத்தனுடைய வம்சத்தில் பிறந்தவர்கள். இனி, நஹுஷனுடைய வம்சத்து மன்னவர்களைச் சொல்லுகிறேன், கேட்பாயாக. 

பதினேழாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை