திங்கள், 19 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 208

 ஒன்பதாவது ஸ்கந்தம் - பதினாறாவது அத்தியாயம்

(கார்த்தவீர்யார்ஜுனன் பிள்ளைகள் ஜமதக்னியை வதித்தலும், ராமன் அதற்காக க்ஷத்ரியர்களை அழித்தலும், விச்வாமித்ரர் வம்சமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு தந்தையினால் கட்டளையிடப் பெற்ற (பரசு)ராமன், அப்படியே என்று அங்கீகரித்து ஒரு வர்ஷம் தீர்த்த யாத்ரை நடத்தி, மீளவும் ஆச்ரமத்திற்கு வந்தான். இவ்வாறு இருக்கையில் ஒருநாள், ஜமதக்னியின் பார்யையாகிய (மனைவியாகிய) ரேணுகை கங்கைக்குச் சென்று, சித்ரரதனென்னும் கந்தர்வராஜன் அப்ஸர ஸ்த்ரீகளுடன் ஜலக்ரீடையாடிக் (நீரில் விளையாடிக்) கொண்டிருக்கக் கண்டாள். ஜலம் கொண்டு வருவதற்காகக் கங்கைக்குப் போன ரேணுகை, நீர் விளையாடலுற்றிருக்கின்ற சித்ரரதனைப் பார்த்துக் கொண்டே, அவனிடத்தில் சிறிது மனவிருப்பமுற்று, பர்த்தாவின் அக்னிஹோத்ர ஹோம வேளையை மறந்தாள். அப்பால், ரேணுகை வெகுமுயற்சியின் மேல் அவ்வாறு ஹோம வேளை கடந்தது என்பதை நினைத்து, முனிவரான தன் பர்த்தாவினிடத்தினின்று தனக்குச் சாபம் நேருமென்று சங்கித்து (ஸந்தேஹப்பட்டு), விரைவுடன் வந்து, தீர்த்தக்குடத்தைப் பர்த்தாவின் முன்னே வைத்து, கைகளைக் குவித்துக் கொண்டு நின்றாள். 

பிறகு, ஜமதக்னி முனிவர், பத்னியின் வ்யபிசாரத்தை (வேறு ஒரு ஆணிடம் மன விருப்பமுற்றதை) அறிந்து, மிகவும் கோபித்து, பிள்ளைகளைப் பார்த்து “ஓ என் அருமைப் புதல்வர்களே, பாபிஷ்டையான (பாபியாகிய) இவளைக் கொன்று விடுங்கள்” என்றார். அவர்கள், மாத்ரு வதத்திற்குக் கூசி, அவர் கட்டளையைச் செய்யாதிருந்தார்கள். பிறகு, (பரசு)ராமன் தந்தையால் தூண்டப்பட்டு, மாதாவையும், கட்டளையைக் கடந்த ப்ராதாக்களையும் (ஸகோதரர்களையும்) வதித்தான். (பரசு)ராமன், முனிவராகிய தன் தந்தையினுடைய ஸமாதி மஹிமையையும், தவமஹிமையையும் அறிந்தவனாகையால், “நாம் இதைச் செய்யாமற் போவோமாயின், இவர் நம்மையும் சபித்து விடுவார். வதிப்போமாயின், மீளவும் அருள் புரிவிக்கப் பெற்று மரணமடைந்தவர்களையும் பிழைப்பிக்கச் செய்யலாம்” என்று நிச்சயித்து, சிறிதும் அஞ்சாமல், மாதாவையும், ப்ராதாக்களையும் (ஸகோதரர்களையும்), தந்தையின் கட்டளைப்படி வதித்தான். 

பிறகு, ஸத்யவதியின் புதல்வராகிய ஜமதக்னி, ஸந்தோஷம் அடைந்து, (பரசு)ராமனைப் பார்த்து வரம் வேண்டும்படி தூண்டினார். ராமனும், தன்னால் வதிக்கப்பட்ட மாதாவும், ப்ராதாக்களும் (ஸகோதரர்களும்), ஜீவிக்க (உயிர்பெற) வேண்டுமென்றும், அவர்களுக்கு இவன் நம்மை வதித்தான் என்கிற நினைவு மறக்கவேண்டுமென்றும், வரங்களைக் கேட்டான். பிறகு, அந்தப் ப்ராதாக்களும் (ஸகோதரர்களும்), மாதாவும் தூங்கியெழுந்திருப்பவர் போலச் சீக்ரத்தில் க்ஷேமமாகப் பிழைத்தெழுந்திருந்தார்கள். தந்தைக்குள்ள இத்தகைய தவமஹிமையை (பரசு)ராமன் அறிந்தவனாகையால், அவர்களை வதித்தான். ஆகையால், அவன் செய்தது தவறு அன்று. (கார்த்தவீர்ய)அர்ஜூனனுடைய பிள்ளைகள் பதினாயிரம் பேர்களும், (பரசு)ராமனுடைய வீர்யத்திற்குத் தோற்று, ஓடிப்போய் விட்டார்களென்று மொழிந்தேனல்லவா? அவர்கள், தங்கள் தந்தையின் வதத்தை நினைத்து, அவ்வருத்தத்தினால் சிறிதும் சுகத்தை அடையாதிருந்தார்கள். ஒருகால், (பரசு)ராமன் தன் ப்ராதாக்களுடன் (ஸகோதரர்களுடன்) ஆச்ரமத்தினின்றும் வனத்திற்குப் போயிருக்கையில், (கார்த்தவீர்ய)அர்ஜுனன் பிள்ளைகள், ஸமயம் நேரப்பெற்று, பழிக்குப் பழி வாங்க விரும்பி, ஜமதக்னியின் ஆச்ரமத்திற்கு வந்தார்கள். அக்னிஹோத்ர க்ருஹத்தில் உட்கார்ந்து உத்தம ச்லோகனான (உயர்ந்த பெருமை பொருந்திய) பகவானிடத்தில் மனவூக்கமுற்றிருக்கின்ற ஜமதக்னி முனிவரைப் பார்த்து, பாபம் செய்வதில் நிச்சயமுடைய அந்த (கார்த்தவீர்ய)அர்ஜுன குமாரர்கள், அவரை வதித்தார்கள். 

(பரசு)ராமனுடைய மாதாவான ரேணுகை, வேண்டாம் வேண்டாமென்று வேண்டிக் கொண்டிருப்பினும், மிகவும் கொடுமையான தன்மை உடையவர்களாகையால், அந்த க்ஷத்ரிய அதமர்கள் (அடி மட்டமானவர்கள்) பலாத்காரமாகத் தலையை அறுத்துக் கொண்டு போனார்கள். அப்பொழுது ரேணுகை, துக்க சோகங்களால் பீடிக்கப்பட்டு, தன்னைத் தானே புடைத்துக் கொண்டு “ராம ராம” என்று உரக்கக் கதறினாள். தூரத்திலிருந்த அவன் பிள்ளைகள்  “ஆ! ராமா” என்கிற அந்தத் தீன (பயமும் துக்கமும் உடைய) ஸ்வரத்தைக் (குரலைக்) கேட்டு, விரைந்தோடி வந்து, மாண்டிருக்கின்ற தந்தையைக் கண்டார்கள். அவர்கள், துக்கம், கோபம், பொறாமை, தைன்யம் (புகலற்ற தன்மை), சோகம் இவற்றின் வேகத்தினால் மதி மயங்கி, “ஓ அண்ணா! ஸாதூ! தர்மிஷ்டனே! நீ எங்களைத் துறந்து, ஸ்வர்க்கம் போயினை” என்று புலம்பினார்கள். பிறகு (பரசு)ராமன், தந்தையின் சரீரத்தை ப்ராதாக்களிடம் (ஸகோதரர்களிடத்தில்) வைத்து, தான் கோடாலியை எடுத்துக்கொண்டு, க்ஷத்ரிய குலத்தையெல்லாம் அழிக்க  ஸங்கல்பித்தான் (முடிவு செய்தான்). 

அப்பால், அவன் ப்ராஹ்மண வதத்தினால் அழகழிந்து, விளக்கமற்றிருக்கின்ற மாஹிஷ்மதிபுரிக்குச்சென்று, அந்தப் பட்டணத்தினிடையில் ஹைஹய தேசாதிபதிகளான (கார்த்தவீர்ய)அர்ஜுன குமாரர்களின் சிரங்களை அறுத்து, பெரிய மலையாகக் குவித்தான். அவர்களின் ரக்தத்தினால் பாபிஷ்டர்களுக்குப் பயத்தை விளைப்பதும், கோரமுமான ஒரு நதியை உண்டாக்கினான். ஸமர்த்தனாகிய (பரசு)ராமன், க்ஷத்ரியர்கள் ந்யாய மார்க்கத்தைக் கடந்திருக்கையில், பித்ரு வதத்தையே காரணமாக வைத்துக்கொண்டு, இருபத்தோரு தடவைகள் பூமியில் க்ஷத்ரியப் பூண்டே (பயனற்ற செடி) இல்லாதபடி செய்து, ஸமந்த பஞ்சகமென்னும் தேசத்தில் ஐந்து ரக்த மடுக்களை (ரத்தத்தினாலான குளங்களை) உண்டாக்கினான். பிறகு, தந்தையின் சிரஸ்ஸை எடுத்து, அதை அவருடைய உடலொடு ஸந்தானம் செய்து (சேர்த்து), யஜ்ஞத்தில் வைத்து, பல யாகங்களால் ஸமஸ்த தேவதாஸ்வரூபனும், ஸர்வாந்தராத்மாவுமாகிய, பரமபுருஷனை ஆராதித்தான். 

கிழக்குத் திக்கை ஹோதாவுக்கும், தெற்குத்திக்கை ப்ரஹ்மாவுக்கும், மேற்குத் திக்கை அத்வர்யுவுக்கும், வடக்குத் திக்கை உத்காதாவுக்கும், அக்னி திக்கு முதலிய மற்ற திக்குக்களை மற்ற ருத்விக்குக்களுக்கும், இடையிலுள்ள பாகத்தைக் கச்யபருக்கும், ஆர்யாவர்த்த தேசத்தை உபத்ரஷ்டாவுக்கும், அதைச் சுற்றிலுமுள்ள பாகத்தை (ஸதஸ்யர் - ஸபிகர்) ஸதஸ்யர்களுக்கும், தக்ஷிணையாகக் கொடுத்தான். பிறகு, அவப்ருத ஸ்நானம் (யாகம் முடிவில் நீரில் அமிழ்ந்து குளித்தல்) செய்து, பாபங்களெல்லாம் தீரப்பெற்று, மேகங்களற்ற ஸூர்யன் போன்று ஸரஸ்வதியென்னும் ப்ரஹ்ம நதியின் கரையில் விளங்கினான். அந்த ஜமதக்னி முனிவரும், முன் நினைவு மாறப்பெறாமல் தன் தேஹத்தைப் பெற்று, (பரசு)ராமனால் பூஜிக்கப்பட்டு, ஸப்தரிஷிகளின் மண்டலத்தில் ஏழாவதாயிருந்தார். ஜமதக்னியின் குமாரனும், மஹானுபாவனும், தாமரையிதழ் போன்ற கண்களை உடையவனுமாகிய, (பரசு)ராமனும் வரப்போகிற மன்வந்தரத்தில், ஸப்தரிஷிகளில் ஒருவராயிருந்து வேதத்தை வெளியிடப் போகிறான். இப்பொழுது, அந்த (பரசு)ராமன் க்ஷத்ரிய வதம் முதலிய தண்டனையைத் துறந்து, தெளிந்த மதி (புத்தி) உடையவனாகி, மஹேந்த்ர பர்வதத்தில் வஸித்துக் கொண்டிருக்கிறான். ஸித்தர்களும், கந்தர்வர்களும், சாரணர்களும், அவன் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். 

மன்னவனே! ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), ஸர்வாந்தராத்மாவும், ஸர்வேச்வரனும்,  தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையனுமாகிய, பரமபுருஷன் இவ்வாறு ப்ருகுவம்சத்தில் பரசுராமனாய் அவதரித்து, பூமிக்குப் பெரும் பாரமான க்ஷத்ரியர்களையெல்லாம் பல முறை வதித்தான்.

காதி மன்னவனுக்கு, எரிகிற அக்னிபோல் மஹா தேஜஸ்வியாகிய விச்வாமித்ரனென்ற ஒரு புதல்வன் பிறந்தான். அவன், தவத்தினால் க்ஷத்ரிய ஜாதியைத் துறந்து, ப்ரஹ்ம தேஜஸ்ஸைப் பெற்றான். அந்த விச்வாமித்ரருக்கு, நூற்றொரு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் இடையிலுள்ளவன், மதுச்சந்தனென்னும் பெயருடையவன். அதைப்பற்றி அவர்கள் அனைவரும் மதுச்சந்தர்களென்றே வழங்கி வந்தார்கள். அஜீகர்த்தருடைய நடுப்பிள்ளையும், பார்க்கவ கோத்ரத்தில் பிறந்தவனும், தேவதைகளால் கொடுக்கப்பட்ட ப்ராணனை உடையவனாகையால் தேவராதனென்று மற்றொரு பெயருடையவனுமாகிய, சுனச்சேபனை விச்வாமித்ரர் தனக்குப் பிள்ளையாக ஏற்படுத்திக்கொண்டு, தன் பிள்ளைகளை நோக்கி “நீங்கள் சுனச்சேபனை உங்களெல்லோர்க்கும் முன் தோன்றலாக அங்கீகரிக்க வேண்டும்” என்றார். 

சுனச்சேபனென்பவன், தாய் தந்தைகளால் விக்ரயம் செய்யப் பட்டு (விற்கப்பட்டு), ஹரிச்சந்திரனுடைய யாகத்தில் நர பசுவாயிருந்து அவன் விச்வாமித்ரரைச் சரணம் அடைந்து, அவர் உபதேசித்த மந்த்ரங்களால், வருணன் முதலிய தேவதைகளைத் துதித்து, பாச பந்தத்தினின்றும் (யாகத்தில் கட்டுப் பட்டதிலிருந்து) விடுபட்டான்; ஹரிச்சந்திரனுடைய யாகத்தில் வருணாதி தேவதைகளால் ப்ராணன்களைக் கொடுக்கப் பெற்றவனாகையால், காதி வம்சத்தவர்களுக்குள் தேவராதனென்று ப்ரஸித்தனாயிருந்தான். அவனே சுனச்சேபன். 

ப்ருகு வம்சத்தில் பிறந்தவனாகையால், அவனைப் பார்க்கவனென்றும் வழங்குவதுண்டு. அவ்வாறு விசுவாமித்ரர் கேட்டதற்கு, மதுச்சந்தனுடைய தமையன்மார்கள் ஐம்பது பேர்களும் ஒப்புக்கொள்ளவில்லை. அப்பால், விச்வாமித்ர முனிவர் கோபித்து, “ஓ துர்ஜனங்களே (கெட்ட பிள்ளைகளே)! ம்லேச்சர்களாவீர்களாக (நமது பண்பாட்டிலிருந்து விலகியவர்கள் ஆவீர்களாக) என்று சபித்தார். பிறகு மதுச்சந்தனும், அவன் தம்பிகள் ஐம்பதின்மர்களும், தந்தையை நோக்கி “நீர் எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்கள் செய்ய ஸித்தமாயிருக்கிறோம்” என்று மொழிந்து, மந்திரங்களை உணர்ந்தவனாகிய அந்தத் தேவராதனென்கிற சுனச்சேபனை, தங்களெல்லோர்க்கும் தமையனாக ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்கள், சுனச்சேபனைப் பார்த்து, “நாங்கள் எல்லோரும் உனக்குப் பின் பிறந்தவர்களாகிறோம்” என்று மொழியவும் மொழிந்தார்கள். பிறகு, விச்வாமித்ரர் அதற்கு ஸந்தோஷம் அடைந்து, அந்தப் புதல்வர்களை நோக்கி “நீங்கள் என்னை வெகுமதித்து என் கருத்தைத் தொடர்ந்து, நான் வீரனான புதல்வனைப் பெற்று மகிழும்படி செய்தீர்களாகையால், நீங்களும் வீரர்களான புதல்வர்களைப் பெற்று, க்ஷேமமாயிருப்பீர்கள். ஓ, குசிகர்களே! வீரனாகிய இந்தத் தேவராதனும், என் புதல்வனாகையால், உங்களைச் சேர்ந்த கௌசிகனேயாய் விட்டான். நீங்கள், இவனைத் தொடர்ந்திருப்பீர்களாக” என்றார். 

பிறகு, அந்த விச்வாமித்ரருக்கு, உஷ்ணிகன், ஹாரீதன், ஜயந்தன், ஸுமதன் முதலிய மற்றும் சில பிள்ளைகளும் பிறந்தார்கள். இவ்வாறு, சிலரைச் சபித்து, சிலரை அநுக்ரஹித்து, வேறொருவனைப் பிள்ளையாக ஸ்வீகரித்தாராகையால், அந்தக் கௌசிக குலம் விச்வாமித்ர புத்ரர்களால் பலவாறாயிற்று. தேவராதனைத் தமையனாக ஏற்படுத்திக் கொண்டார்களாகையால், வேறு ப்ரவரத்தையும் (பிரிவையும்) பெற்றது. 

பதினாறாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக