ஞாயிறு, 18 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 207

 ஒன்பதாவது ஸ்கந்தம் - பதினைந்தாவது அத்தியாயம்

(புரூரவனுடைய வம்சமும், பரசுராமன் கார்த்தவீர்யார்ஜுனனைக் கொன்ற வ்ருத்தாந்தமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- புரூரவனுக்கு, ஊர்வசியின் கர்ப்பத்தினின்றும், ஆயு, ச்ருதாயு, ஸத்யாயு, ரயன், விஜயன், ஜயன் என்று ஆறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில், ச்ருதாயுவின் பிள்ளை வஸுமான். ஸத்யாயுவின் பிள்ளை ச்ருதஞ்சயன். ரயனுடைய பிள்ளை ஏகன். ஜயனுடைய பிள்ளை அமிதன். விஜயனுடைய பிள்ளை பீமன். அவன் பிள்ளை காஞ்சனன். அவன் பிள்ளை ஹோத்ருகன். அவன் பிள்ளை ஜஹ்னு. அவன் கங்கையை (வாய் கொப்பளித்துக்) குடித்து விட்டானென்று ப்ரஸித்தம். அவன் பிள்ளை பூரு. அவன் பிள்ளை பலாகன். அவன் பிள்ளை அஜகன். அவன் பிள்ளை குசன். குசனுக்குக்கு குசாம்பன், மூர்த்தயன், வஸூ, குசநாபன் என்று நான்கு பிள்ளைகள். அவர்களில், குசாம்பனுடைய பிள்ளை காதி. காதிக்கு ஸத்யவதியென்று ஒரு பெண் பிறந்தாள். அவளை, ப்ராஹ்மண ச்ரேஷ்டரும், பார்க்கவ வம்சத்தில் பிறந்தவருமான, ருசீகர் தனக்குக் கொடுக்கும்படி வேண்டினார். அப்பால், காதி அந்த வரன் தன் புதல்விக்கு அநுரூபனாய் (ஒத்தவனாய்) இல்லாமையை ஆலோசித்து, பார்க்கவரான அந்த ருசீகரைப் பார்த்து மொழிந்தான்.

காதி சொல்லுகிறான்:– ஒரு பக்கத்தில் கறுத்த காதுடையவைகளும், சந்த்ரனோடொத்த ஒளி உடையவைகளுமான, ஆயிரம் குதிரைகளை கன்யா சுல்கமாகக் (மணம் புரியும் பென்ணிற்காகக் கொடுக்கும் சீர்) கொடுக்க வேண்டும். எங்கள் கன்னிகைக்கு இதுவும் போராது. நாங்கள் கௌசிகர்கள். ஆகையால், எங்கள் ஏற்றத்தை ஆராய்ந்து அதற்கு உரியபடி நடப்பீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு சொல்லப்பெற்ற அந்த ருசீகர், காதியின் கருத்தை அறிந்து கொண்டு, வருணனிடம் சென்று, அவன் சொன்ன லக்ஷணங்கள் அமைந்த குதிரைகளை யாசித்து வாங்கிக் கொண்டு வந்து, கொடுத்து, அழகிய முகமுடைய ஸத்யவதியை மணம் புரிந்தார். பிறகு, ஒரு காலத்தில், அந்த ருசீக ரிஷி, பிள்ளை வேண்டுமென்னும் விருப்பத்தினால், பத்னியாலும், மாமியாராலும், வேண்டப்பெற்று, ப்ராஹ்மண, க்ஷத்ரியர்கள் என்கிற இரண்டு வர்ணங்களுக்குரிய இருவகை மந்த்ரங்களாலும், இரண்டு வகையான சருவைப் (அக்னியில் ஹோமம் செய்யப்படும் அன்னம் போன்ற பொருள்) பக்வம் செய்து (சமைத்து வைத்து) வைத்து, ஸ்நானம் செய்யப்போனார். அவர் ஸ்நானம் செய்து வருவதற்குள், ருசீகரின் மாமியார், பார்யையிடத்தில் (மனைவியிடத்தில்) பர்த்தாவுக்கு (கணவனுக்கு) ஸ்நேஹம் (ப்ரியம்) அதிகமாகையால், தன் பெண்ணான ஸத்யவதிக்காகப் பக்வம் செய்த (சமைத்து வைத்த) சரு (அக்னியில் ஹோமம் செய்யப்படும் அன்னம் போன்ற பொருள்) மேலாயிருக்குமென்று பாவித்துத் (நினைத்து) தன் புதல்வியை வேண்ட, அந்த ஸத்யவதியும், ப்ராஹ்மண மந்திரங்களால் மந்தரிக்கப்பட்ட தன் சருவைத் (அக்னியில் ஹோமம் செய்யப்படும் அன்னம் போன்ற பொருள்) தாய்க்குக் கொடுத்து, அவளுக்காக க்ஷத்ரிய மந்திரங்களால் மந்திரிக்கப்பட்ட சருவை (அக்னியில் ஹோமம் செய்யப்படும் அன்னம் போன்ற பொருள்) தான் எடுத்துக்கொண்டு இருவரும் பக்ஷித்து (உண்டு) விட்டார்கள். பிறகு, ருசீக முனிவர் ஸ்நானம் செய்து வந்து நடந்த ஸங்கதியைத் தெரிந்து கொண்டு பத்னியைப்பார்த்து, “நீ தப்புக் கார்யம் செய்தாய். ஆகையால், எல்லோரையும் தண்டிக்கும் படியான கொடும் தன்மையுடைய புதல்வன் உனக்குப்பிறப்பான். உன் ப்ராதாவோ (ஸகோதரனோ), பரப்ரஹ்மத்தை உணர்ந்தவர்களில் சிறந்த ப்ராஹ்மண ச்ரேஷ்டனாயிருப்பான்” என்றார். 

பிறகு, ஸத்யவதி “இவ்வாறு நிக்ரஹிக்க (தண்டிக்க) வேண்டாம்” என்று வேண்டுகையில், அந்த பார்க்கவர், ஆனால் உன் பேரன் கோரனாகப் பிறப்பான். பிள்ளை சாந்தனாகவே இருப்பான்” என்றார். அப்பால், ஸத்யவதிக்கு ஜமதக்னி பிறந்தார். பிறகு அந்த ஸத்யவதி மிகவும் பரிசுத்தமாயிருப்பதும், உலகங்களையெல்லாம் பரிசுத்தமாக்குவதுமான கௌசிகியென்னும் நதியாகப்பெருகினாள். பிறகு, ஜமதக்னி ரேணுவின் புதல்வியான ரேணுகை என்பவளை மணம் புரிந்தார். அந்த ரேணுகையிடத்தில், பார்க்கவ ரிஷிக்கு, வஸுமனன் முதலிய புதல்வர்கள் பிறந்தார்கள். இவர்களில் கடைசிப்பிள்ளை (பரசு)ராமனென்று ப்ரஸித்தி பெற்றிருந்தான். பெரியோர்கள், அந்த ராமனை வாஸுதேவ அம்சமென்று சொல்லுகிறார்கள். மற்றும், அவன் ஹைஹயர்களான (ஹைஹயம் என்ற தேசத்தவர்களான ஒரு வம்சத்தின் பெயர்) கார்த்தவீர்யாதிகளின் குலத்தையெல்லாம் அழித்தான். அன்றியும், அவன் இப்பூமண்டலத்தை இருபத்தோரு தடவை க்ஷத்ரிய பீஜமே (வித்தே) இல்லாதபடி த்வம்ஸம் செய்தான் (அழித்தான்). ப்ராஹ்மணர்களிடத்தில் நன் மனமின்றி விரோதம் செய்வதும், தர்மத்தில் விருப்பமின்றி வீண் கர்வமுற்று பூமிக்கு பாரம் போன்றிருப்பதும், ரஜஸ், தமோ குணங்கள் நிறைந்ததுமாகிய க்ஷத்ரிய குலம் சிறிது அபராதம் செய்யினும் அதற்காக அதை வதித்துக் கொண்டிருந்தான்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- பகவானுடைய அம்சமாகிய (பரசு)ராமன், க்ஷத்ரிய வம்சங்களையெல்லாம் அடிக்கடி அடித்து, த்வம்ஸம் செய்தான் (அழித்தான்) என்றீர். துர்ப்புத்திகளான (கெட்ட புத்தி உடைய) க்ஷத்ரியர்கள், அந்த (பரசு)ராமன் விஷயத்தில் அப்படி என்ன அபராதம் செய்தார்கள்?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:– ஹைஹயம் என்னும் தேசங்களுக்கு ப்ரபுவும், க்ஷத்ரியர்களில் சிறந்தவனுமாகிய கார்த்தவீர்யார்ஜுனன், நாராயணனுடைய அம்சமான தத்தாத்ரேயரைப் பலவாறு சுச்ரூஷைகளால் (பணிவிடைகளால்) ஆராதித்து, ஆயிரம் கைகளையும், சத்ருக்களால் பொறுக்க முடியாத பராக்ரமத்தையும், அழிவில்லாத இந்த்ரிய (புலன்களின்) பலம், புத்தி பலம், செல்வம், தேஹ காந்தி (ஒழுக்கத்தினால் ஏற்படும் சக்தி), வீர்யம், புகழ், தேஹ பலம் (உடல் பலம்), யோகேச்வரத்வம் (யோகிகளுக்குள் சிறந்த நிலை), அணிமாதி ஸித்திகள் (அணிமா முதலிய எட்டு பலன்கள் - அவையாவன- 

1. அணிமா - சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல் 

2. மஹிமா - பெரிதாக்கிக்கொள்ளுதல் 

3. லகிமா - லேசாகச் செய்தல் 

4. கரிமா - கனமாக்கிக்கொள்ளுதல் 

5. வசித்வம் - எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல் 

6. ஈசத்வம் - எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல் 

7 .ப்ராப்தி - நினைத்த பொருளைப் பெறுதல் 

8. ப்ராகாம்யம் - நினைத்தவிடம் செல்லும் வல்லமை) 

அமைந்த ஐச்வர்யம் இவற்றையெல்லாம் பெற்று, காற்றுப்போல உலகங்களில் எங்கும் தடைபடாத கதி (போக்கு) உடையவனாகி, ஸஞ்சரித்துக் கொண்டிருந்தான். அவன், ஒருகால் சிறந்த பெண்மணிகளுடன் கூடி, வைஜயந்தி என்னும் பூமாலையை அணிந்து, ரேவா நதியின் ப்ரவாஹத்தில் விளையாடிக் கொண்டிருந்து, மதம் (கர்வம்) தலையெடுத்து, தன் புஜங்களால் (கைகளால்) ரேவா நதியின் ப்ரவாஹத்தை (ஓட்டத்தை) அணை கட்டினாற் போலத் தகைந்தான் (நிறுத்தினான்). அப்பொழுது, பத்துத் தலையனான ராவணன், திக் விஜயத்திற்காகப் புறப்பட்டு, (கார்த்தவீர்ய)அர்ஜுனனுடைய பட்டணத்திற்கு அருகாமையில் ரேவா நதிக்கரையில் இறங்கி, தன் விடுதியில் தேவ பூஜை செய்துகொண்டிருக்கையில், (கார்த்தவீர்ய)அர்ஜுனன் “ப்ரவாஹத்தைத் (நதியின் பெருக்கைத்) தடுத்ததனால் மேல்நோக்கிப் பாய்கின்ற ரேவா நதியின் ஜலத்தினால் தன் விடுதியெல்லாம் வெள்ளம் பாய்ந்து முழுகக்கண்டு, தன்னைப் பெரிய வீரனாக நினைத்துக் கொண்டிருக்கின்ற ராவணன், (கார்த்தவீர்ய)அர்ஜுனன் பராக்ரமத்தைப் பொறாமல், அவனை எதிர்த்தோடினான். ஸ்த்ரீகளோடு (பெண்களோடு) கூடி விளையாடிக் கொண்டிருக்கின்ற அந்த (கார்த்தவீர்ய)அர்ஜுனனை பரிபவிக்க (அவமதிக்க) முயன்று, முதலில் அபராதம் செய்த ராவணன், அவனால் ஸ்த்ரீகளின் எதிரில் அவலீலையாகப் (விளையாட்டாகப்) பிடித்துத் தன் பட்டணத்தில் கொண்டு போய்ச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்து, பிறகு வானரம் போல விடுக்கப்பட்டான். 

அந்த (கார்த்தவீர்ய)அர்ஜுனன், ஒருகால் வனத்தில் வேடிக்கையாக வேட்டையாடித் திரிந்து தெய்வாதீனமாக ஜமதக்னியின் ஆச்ரமத்திற்குச் சென்றான். அரசனாகிய அந்த (கார்த்தவீர்ய) அர்ஜுனன் வந்ததைக்கண்டு ஸைன்யம், மந்த்ரிகள், வாஹனங்கள் இவற்றோடு கூடின அவனுக்கு, தபோதனரான (தபஸ்வியான) அந்த ஜமதக்னி முனிவர் காமதேனுவைக்கொண்டு அதிதி ஸத்காரம் (விருந்தோம்பல்) செய்தார். அப்பொழுது, வீரனாகிய அந்த (கார்த்தவீர்ய)அர்ஜுனன், தன்னுடைய ஐச்வர்யத்தைக்காட்டிலும் மேற்பட்டு அற்புதமாயிருக்கின்ற ஜமதக்னியின் அதிதி ஸத்கார (விருந்தோம்பல்) ஸாமர்த்யத்தைக் (திறமையைக்) கண்டு, அதை ஆதரிக்காமல், அம்முனிவருடைய காமதேனுவிடத்தில் விருப்பமுற்று, தன் படர்களை (சேவகர்களை) நோக்கி ரிஷியின் ஹோம தேனுவாகிய அந்தப் பசுவைப் பறித்துக்கொண்டு போகும்படி ஏவினான். அவர்களும் அப்படியே கன்றுடன் கதறுகின்ற பசுவைப் பலாத்காரமாக மாஹிஷ்மதி என்ற பட்டணத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டார்கள். பிறகு, (கார்த்தவீர்ய)அர்ஜுன மன்னவன் புறப்பட்டுப்போகையில், முன்பு வெளியில் எங்கோ போயிருந்த (பரசு)ராமன், தந்தையின் ஆச்ரமத்திற்கு வந்து, அந்த (கார்த்தவீர்ய)அர்ஜுனன் செய்த துஷ்டத்தனத்தைக் (கொடும் செயலைக்) கேட்டு, அடியுண்ட ஸர்ப்பம் போல் கோபித்து, பயங்கரமான கோடாலியையும், அம்பறாத்தூணிகளையும் (அம்புகள் வைக்கும் குடலை), தநுஸ்ஸையும் (வில்லையும்) எடுத்துக்கொண்டு, கவசத்தையும் அணிந்து, ஸிம்ஹம் கூட்டத்தில் தலைமையுள்ள பெரிய கஜத்தைத் (யானையைத்) தொடர்வதுபோல, ஒருவராலும் எதிர்க்கமுடியாதவனாகி, அந்த (கார்த்தவீர்ய)அர்ஜுனனைப் பின்பற்றினான். 

அந்த (கார்த்தவீர்ய)அர்ஜுனனும், பட்டணத்திற்குள் நுழையும்பொழுது, தனுஸ்ஸு (வில்), பாணம் (அம்பு), கோடாலி இவைகளைத்தரித்து, ஸூர்யனுடைய ஒளிபோன்ற ஒளியுடைய ஜடைகள் விளங்கப்பெற்று, மான் தோலை அரையில் உடுத்து, பேரொளியுடன் திகழ்கின்றவனும், ப்ருகு வம்சத்தவர்களில் சிறந்தவனுமாகிய (பரசு)ராமன் தன்னைப் பின்தொடர்ந்து வரக் கண்டான். பிறகு, அந்த (கார்த்தவீர்ய)அர்ஜுனன் தேர், யானை, குதிரை, காலாட்கள் அமைந்திருப்பவைகளும், கதை, கத்தி, பாணம், ருஷ்டி, சதக்னி, சக்தி முதலிய ஆயுதங்களுடையவைகளும், மிக்கப் பயங்கரங்களுமான பதினேழு அக்ஷௌஹிணி ஸைன்யங்களை (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட் படை 109350 கொண்ட பெரும் படையை) (பரசு)ராமன் மேல் அனுப்பினான். மஹானுபாவனாகிய பார்க்கவராமன், ஸஹாயமின்றித் (வேறு துணையின்றித்) தானொருவனே அந்த ஸைன்யங்களையெல்லாம் அடித்து முடித்தான். 

அக்னியின் ஒளி போன்ற ஒளியுடையவனும், சத்ரு (எதிரி) ஸைன்யங்களை அழிப்பவனுமாகிய அந்த (பரசு)ராமன், சத்ருக்களை (எதிரிகளை) அடிக்கின்ற கோடாலியை ஏந்திக்கொண்டு, பராக்ரமித்த இடங்களெல்லாவற்றிலும், வீரர்கள் புஜங்களும், துடைகளும், கழுத்துக்களும் முரிந்து, தேர்ப்பாகனும் வாஹனமும் அழிந்து பூமியில் விழுந்தார்கள். பிறகு, ஹைஹய தேசாதிபதியான (கார்த்தவீர்ய)அர்ஜுனன், தன் ஸைன்யம் (படை) முழுவதும் (பரசு)ராமனுடைய கோடாலியாலும், பாணங்களாலும், கவசம், த்வஜம், தனுஸ்ஸு, தேஹம் இவை அறுப்புண்டு, ரக்த வெள்ளத்தினால் சேறாயிருக்கின்ற யுத்த  பூமியில் விழுந்திருப்பதைக்கண்டு, கோபத்துடன் எதிர்த்தான். ஐந்நூறு பாணங்களையும் (அம்புகளையும்), ஐந்நூறு தனுஸ்ஸுக்களையும் (வில்லையும்) ஏந்திக்கொண்டிருக்கிற ஆயிரம் புஜங்களோடு கூடின அந்த (கார்த்தவீர்ய)அர்ஜுனன், ஒரே தடவையில் ஐந்நூறு தனுஸ்ஸுக்களில் (வில்லில்) ஐந்நூறு பாணங்களைத் (அம்புகளைத்) தொடுத்து (பரசு)ராமன்மேல் விடுத்தான். 

வில்லாளிகளில் தனக்கெதிரில்லாத (பரசு)ராமனும், அந்தப் பாணங்களையெல்லாம் ஒரே தடவையில் தன் பாணங்களால் அறுத்தான். மீளவும், தன் புஜங்களால் பர்வதங்களையும் (மலைகளையும்), வ்ருக்ஷங்களையும் (மரங்களையும்) பிடுங்கிக்கொண்டு வேகத்துடன் தன்மேல் எதிர்த்து வருகின்ற அந்த (கார்த்தவீர்ய)அர்ஜுனனுடைய புஜங்களைக் கூரிய நுனியுடைய கோடாலியால் சிரித்துக்கொண்டே வேகமாக (பரசு)ராமன் அறுத்துத் தள்ளினான். புஜங்கள் அறுப்புண்ட (கார்த்தவீர்ய)அர்ஜுனனுடைய சிரத்தையும் (தலையையும்), பர்வதத்தினின்று (மலையிலிருந்து) சிகரத்தைப்பறிப்பது போலப் பறித்துத்தள்ளினான். பிறகு, பதினாயிரம் பேர்களான அந்த (கார்த்தவீர்ய)அர்ஜூனனுடைய பிள்ளைகள், இவ்வாறு தந்தை முடிந்து போகையில் பயந்து, ஹோமதேனுவைக்கன்றுடன் கொண்டு வந்து (பரசு)ராமனிடம் கொடுத்து, ஓடிப்போனார்கள். சத்ரு (எதிரி) வீரர்களை அழிக்கவல்ல அப்பார்க்கவராமன், ஆச்ரமத்திற்கு வந்து, வருந்தியிருக்கின்ற பசுவையும், கன்றையும் தந்தையான ஜமதக்னியிடம் ஸமர்ப்பித்து, தான் செய்த கார்யத்தைத் தந்தைக்கும் ப்ராதாக்களுக்கும் (ஸகோதரர்களுக்கும்) வர்ணித்தான். அதைக்கேட்டு ஜமதக்னி மொழிந்தார்.

ஜமதக்னி சொல்லுகிறார்:– “ராம! ராம! மிகுந்த புஜபலமுடையவனே! நீபாபம்செய்தாய். ஸமஸ்த தேவதா ஸ்வரூபனான (கார்த்தவீர்ய)அர்ஜுன மன்னவனை வீணாக வதித்தாயல்லவா? நாம் ப்ராஹ்மணர்களல்லவா? அடித்தவர்களையும், அடிக்காதிருக்கையன்றோ ப்ராஹ்மணர்களின் தன்மை? ப்ராஹ்மணர்கள், பொறுமையினால் பூஜிக்கத்தகுந்த பெருமையைப் பெற்றவர்கள். உலகங்களுக்கெல்லாம் தந்தையாகிய ப்ரஹ்மதேவன் இந்தப் பொறுமையினால் தான் ப்ரஹ்மலோகத்தைப் பெற்றான். ப்ராஹ்மண குலத்திற்குச் செல்வமாகிய சம-தமாதி குணங்கள் (மனது, புலன்களை அடக்குதல்), பொறுமையினால் தான் ஸூர்யகிரணம் போல் விளங்குகின்றன. ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய), ஸர்வேச்வரனுமாகிய ஸ்ரீஹரியும், பொறுமையுடையவர்களுக்கே சீக்ரத்தில் அருள் புரிகின்றான். மற்றும், ஸார்வபௌமனான (சக்ரவர்த்தியான) மன்னவனை வதிப்பது ப்ராஹ்மண வதத்தைக் காட்டிலும் மேற்பட்ட பாபமேயாம். ஆகையால், நீ தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாத பகவானிடத்தில் நிலை நின்ற மனமுடையவனாகி, கங்கை முதலிய புண்ய தீர்த்தங்களைப்  பணிந்து, பாபத்தைப்போக்கிக் கொள்வாயாக. 

பதினைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக