ஒன்பதாவது ஸ்கந்தம் - பதினான்காவது அத்தியாயம்
(ஸோம வம்சத்தின் வரலாறு. ப்ருஹஸ்பதியின் பத்னியான தாரையிடத்தில் பிறந்த புதனுக்குப் புரூரவன் பிறத்தலும், அவன் ஊர்வசியிடத்தில் ஆறு பிள்ளைகளைப் பெறுதலும்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! இனிமேல் ஸோம வம்சத்தைச் சொல்லுகிறேன், கேட்பாயாக. அது மிகவும் பரிசுத்தமானது. இந்த வம்சத்தில் புண்யமான புகழுடைய “ஐலன் (புரூரவன்) முதலிய மன்னவர்கள் பிறந்தார்களென்று சொல்லுகிறார்கள். ஆயிரம் தலைகள் கொண்ட, விராட் புருஷனான (ப்ரபஞ்ச வடிவானவனான) பரமபுருஷனான ஸ்ரீமந்நாராயணனுடைய நாபியாகிற மடுவினின்றும் ஒரு தாமரை மலர் உண்டாயிற்று. அதினின்று, ப்ரஹ்மதேவன் உண்டானான். அந்த ப்ரஹ்மதேவனுக்கு, அத்ரி மஹர்ஷி பிள்ளையாகப் பிறந்தார். அவர் குணங்களில் தந்தையோடொத்தவர். அவருடைய ஆனந்தக் கண்ணீரினின்று ஸோமன் பிறந்தான். அவன் அம்ருத மயனாயிருந்தான். ப்ரஹ்ம தேவன் அவனை ப்ராஹ்மணர்களுக்கும், ஓஷதிகளுக்கும், ஆம்பல் முதலியவற்றிற்கும், ப்ரபுவாக ஏற்படுத்தினான். அவன் மூன்று லோகங்களையும் ஜயித்து, ராஜஸூய யாகம் செய்தான். அவன் ப்ருஹஸ்பதியின் பத்னியாகிய தாரையென்பவளை தனது கர்வத்தினால் பலாத்காரமாக அபகரித்தான். தேவதைகளுக்குக் குருவான ப்ருஹஸ்பதி, தன் பத்னியான தாரையை விடும்படி அடிக்கடி வேண்டியும், ஸோமன் கர்வத்தினால் விடாமலேயிருந்தான். அப்பொழுது, அதைப்பற்றித் தேவதைகளுக்கும், தானவர்களுக்கும் சண்டை உண்டாயிற்று. சுக்ரன், ப்ருஹஸ்பதியிடத்தில் த்வேஷத்தினால் (பகைமையினால்) அஸுரர்களுடன் சேர்ந்து, ஸோமனைத் தன் பக்ஷத்தில் உட்படுத்திக்கொண்டான். ருத்ரன், பூதகணங்களோடு கூடி ப்ருஹஸ்பதியை ஸ்நேஹத்தினால் அங்கீகரித்தான். இந்திரன், ஸமஸ்த தேவகணங்களோடும்கூடி, ப்ருஹஸ்பதியை அநுஸரித்தான்.
இப்படியிருக்கையில், தாரையைப் பற்றித் தேவதைகளுக்கும், அஸுரர்களுக்கும், பெரிய யுத்தம் உண்டாயிற்று. அதில், பல தேவதைகளும், பல அஸுரர்களும் அழிந்து போனார்கள். அப்பொழுது, அங்கிரஸ்ஸு ஸோமனை விரட்டி ப்ரஹ்ம தேவனிடம் விண்ணப்பம் செய்தார். பிறகு, ஸோமன் அதற்குப் பயந்து, தாரையை அவளுடைய பர்த்தாவுக்குக் கொடுத்து விட்டான். அப்பொழுது பர்த்தாவாகிய ப்ருஹஸ்பதி, தன் பார்யை கர்ப்பிணியாயிருப்பதை அறிந்து, “அடி மதி (புத்தி) கேடீ! என் க்ஷேத்ரமாகிய உன்னிடத்தில், பிறர் ஆதானம் செய்த (வைத்த) கர்ப்பத்தைச் சீக்ரத்தில் விடுவாயாக. நீ இந்தக் கர்ப்பத்தை விட்டால் தான், உன்னை நான் பஸ்மம் செய்யாது (சாம்பலாக்காது) இருப்பேன்; இல்லாத பக்ஷத்தில் ஸ்த்ரீ (பெண்) என்பதையும் பாராமல் உன்னை நான் பஸ்மம் செய்து (சாம்பலாக்கி) விடுவேன்” என்றார்.
அப்பால், தாரை வெட்கித்து, தந்தையின் ஒளிபோன்ற ஒளியுடைய பிள்ளையை ப்ரஸவித்தாள். அப்புதல்வனிடத்தில், ப்ருஹஸ்பதி ஸோமன் இருவரும் மனவிருப்பமுற்று, “இவன் என்னுடையவன். உன்னுடையவனன்று” என்று ஒருவரோடொருவர் விவாதப்பட்டுக் கொண்டிருக்கையில், தேவதைகளும், ரிஷிகளும், தாரையைக் கேட்டார்கள். அவள் வெட்கத்தினால் ஒன்றும் சொல்லவேயில்லை. அப்பால், அப்புதல்வன் கோபித்துத் தாரையை நோக்கிக் “கெட்ட நடத்தையுடையவளே! வீண் வெட்கத்தை ஏற்றுக்கொண்டு, ஏன் உண்மையைச் சொல்லாதிருக்கின்றாய்? இப்பொழுது, நான் யாருடைய பிள்ளை? அதை எனக்குச் சொல்வாயாக. உன் தோஷத்தை மறைக்காமல் வெளியிடுவாயாக” என்றான். இவ்வாறு அப்புதல்வன் தாயை விரட்டி வைவதைக் (திட்டுவதைக்) கண்டு ப்ரஹ்மதேவன், அந்தத் தாரையை ஏகாந்தத்தில் (தனிமையில்) அழைத்து, நல்வார்த்தை சொல்லி, “இவன் யாருடைய புதல்வன்” என்று வினாவினான். அவளும் மெல்ல மெல்லச் சந்த்ரனுடையவன் என்றாள். பிறகு, ஸோமன் ப்ரஹ்மாவின் அனுமதியினால் அப்புதல்வனை அங்கீகரித்தான்.
மன்னவனே! சந்த்ரன் அப்புதல்வனுடைய ஆழ்ந்த மதியைக் கண்டு, களித்தானாகையால், அவனுக்கு ப்ரஹ்மதேவன் புதனென்று பெயரிட்டான். அந்தப் புதனிடத்தினின்று புரூரவஸ்ஸு பிறந்தான். ஸுத்யும்னன் ஒரு வனத்தில் புகுந்து, பெண்ணுருவம் பெற்று இளையென்று பெயர் பூண்டிருந்தானென்றும், அவளைக் கண்டு புதன் காமவிகாரம் (காதல்) கொண்டு புணர்ந்து, ஒரு புதல்வனைப் பெற்றானென்றும், முன்னமே மொழிந்தேனல்லவா? அவனே இந்தப் புரூரவஸ்ஸு. இந்த்ர பவனத்தில் ஊர்வசி அந்தப் புரூரவஸ்ஸினுடைய ஸௌந்தர்யம், ஒளதார்யம், சீலம், செல்வம், பராக்ரமம், இக்குணங்களையும், மற்றுமுள்ள காம்பீர்யம் முதலிய பல குணங்களையும், நாரதர் மூலமாய்க் கேட்டுத் தெய்வ மடந்தையாகிய அந்த ஊர்வசி, மித்ரா வருணர்களின் சாபத்தினால் மனுஷ்யப் பெண்ணாய்ப் பிறக்க வேண்டியவளாதலால், மன்மத பாணங்களால் அடியுண்டு வருந்தி, அந்தப் புரூரவஸ்ஸின் அருகாமைக்கு வந்தாள். மடந்தையர் மணியான அந்த ஊர்வசி, உருவம்கொண்ட மன்மதன் போல மிக்க ஸுந்த்ரனும் புருஷர்களில் சிறந்தவனுமாகிய புரூரவஸ்ஸைக் கண்டு, தைர்யத்தை அவலம்பித்து அவனைக் கிட்டினாள். பிறகு அம்மன்னவன், அம்மடந்தையை நோக்கி ஸந்தோஷத்தினால் கண்கள் மலர்ந்து, மயிர்க் கூச்சம் உண்டாகப்பெற்று, இனிய உரைகளுடன் அந்தத் தெய்வ மடந்தையைக் குறித்து மொழிந்தான்.
புரூரவஸ்ஸு சொல்லுகிறான்:- சிறந்த அழகுடையவளே! உனக்கு நல்வரவாகுக? உட்காருவாயாக. நான் நீ சொன்னபடி செய்ய ஸித்தமாயிருக்கிறேன். உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்? நீ என்னுடன் கலந்திருப்பாயாக. நமக்குப் பலவாண்டுகள் ப்ரீதி மாறாது நடந்து வருமாக.
ஊர்வசி சொல்லுகிறாள்:- அழகனே! உன்னிடத்தில் எந்த மடந்தையின் மனமும், கண்ணும், பற்றாது? எல்லாருடைய மனமும், கண்ணும் உன்னிடத்திலிருந்து மீண்டு போகமுடியாது. மதி (புத்தி) உடைய மாது, உன் மார்பைப் புணர விரும்பிப் பெறுவாளாயின், அதினின்று என்றும் மீளமாட்டாள். ஸௌந்தர்ய லக்ஷ்மி விருப்பத்துடன் உன் சரீரத்தை அடைந்து, நழுவாதிருக்கிறாள். வெகுமதியளிக்கவல்ல மன்னவனே! இந்த ஆடுகளை, உன்னிடத்தில் வைக்கிறேன். இவற்றை, நீ என் பிள்ளைகளைப்போலப் பாதுகாத்து வர வேண்டும். இதுவே நீ எனக்குச் செய்யும் வெகுமதி. நான் உன்னுடன் கலந்து விளையாடலுற்றிருப்பேன். எவன் புகழத்தகுந்தவனோ, அவனே மடந்தையர்களுக்கு விரும்பத்தகுந்த மணவாளனாவான். ஓ வீரனே! நான் அம்ருதத்தைப் பக்ஷிப்பேனேயன்றி (உண்பேனே அன்றி), மற்றவற்றைப் பக்ஷிக்க (உண்ண) மாட்டேன். மைதுன (உன்னுடன் தனிமையில் சேரும்) காலம் தவிர, மற்ற எக்காலத்திலாயினும், நீ ஆடையின்றி எனக்குப் புலப்படுவாயாயின், அப்பொழுதே நான் புறப்பட்டுப் போய்விடுவேன்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஆழ்ந்த மதி (புத்தி) உடைய புரூரவ மன்னவன், அதற்கு அப்படியே என்று ஒப்புக்கொண்டான். மற்றும், அவன் அத்தெய்வ மடந்தையை நோக்கி “உன்னுடைய அழகை என்னென்று சொல்லுவேன்? ஆ! இக்தென்ன ஆச்சர்யம்! உன் கருத்தும் அப்படியே ஆச்சர்யமாயிருக்கின்றது. உன் அழகு, கருத்து ஆகிய இவையிரண்டும் மனுஷ்யலோகத்தை எல்லாம் மதி (புத்தி) மயங்கச் செய்கின்றன. இத்தகைய தெய்வமடந்தையான நீ, தானே வந்திருக்கையில், எவன்தான் உன்னைப் பணியமாட்டான்?” என்று புகழ்ந்தான்.
அப்பால், உரியபடி விளையாடல்களை விளைக்கின்ற அந்த ஊர்வசியுடன் புருஷ ச்ரேஷ்டனாகிய புரூரவ மன்னவன், தேவதைகள் விளையாடுகின்ற சைத்ரரதம் முதலிய உத்யான வனங்களில் (தோட்டங்களில்) இஷ்டப்படி விளையாடிக் கொண்டிருந்தான். தாமரைத்தாதின் பரிமளம் போன்ற பரிமளமுடைய அந்த ஊர்வசியுடன் ஓயாது விளையாடிக் கொண்டிருக்கிற அம்மன்னவன், அவளுடைய முகத்தின் வாஸனையால் வஞ்சிக்கப்பட்டு, பலவர்ஷங்கள் அதிலேயே ஸந்தோஷமுற்றிருந்தான். பிறகு ஒருகால் தேவேந்தரன் “என்கொலு மண்டபம் ஊர்வசி இல்லாமையால் எனக்கு அழகாகத் தோன்றவில்லை. ஆகையால், நான் அவளை வரவழைக்க வேண்டும்” என்று தனக்குள் விசாரித்து, அவளை அழைத்துக்கொண்டு வருவதற்காகக் கந்தர்வர்களை அனுப்பினான். அந்தக் கந்தர்வர்கள், நடுராத்ரியில் இருள் மூடி எல்லோரும் உறக்கம் தலைக் கொண்டிருக்கையில், தெரியாமல் வந்து ஊர்வசி புரூரவ மன்னவனிடத்தில் பாதுகாக்கும்படி வைத்திருந்த ஆடுகளை மாயையினால் பறித்துக் கொண்டு போனார்கள். ஊர்வசி தன் பிள்ளைகளைப்போல அபிமானித்திருந்த அந்த ஆடுகள், கந்தர்வர்களால் பறியுண்டு கதறுகையில், ஊர்வசி அதைக் கேட்டு “ஐயோ! பாழானேனே! திறமையற்றவனும், நபும்ஸகனும் (அலியும்) தன்னை வீணாக வீரனென்று அபிமானித்திருப்பவனுமாகிய இந்தக் கணவனால், நான் பாழானேன்.
நாதனென்று வீண்பெயர் பூண்ட இம்மன்னவனை நான் நம்பியிருக்கையில், என் குழந்தைகளைத் திருடர் பறித்துக்கொண்டு போனார்களே! நான் இந்தத் திறமையற்ற புருஷனை நம்பிப் புதல்வர்களை இழக்கலானேனே. பெண்பிள்ளை வெளிப்படப் பயந்து, இரவும், பகலும், படுத்திருப்பது போல, இப்புருஷனும் படுத்திருக்கிறானே. (என்னைச் சீக்ரம் விடு. விடு. அப்புறம் போ. என்னுடம்பில் சுற்றியிருக்கின்ற உன் கைகளை எடுப்பாயாக. இவன் என்னை விட முடியாமல் பயந்து பெரு விருப்பத்துடன் தொடர்ந்து வருகிறான். இவன் என்ன புருஷனோ?)” என்றாள்.
இவ்வாறு வாக்குக்களாகிற பாணங்களால் அடியுண்டு மா வெட்டிகளால் அடியுண்ட யானை போன்ற அந்தப் புரூரவ மன்னவன் கோபமுற்று, அரையில் ஆடையின்றிக் கத்தியை எடுத்துக்கொண்டு, ராத்ரியில் புறப்பட்டோடினான். அப்பொழுது அக்கந்தர்வர்கள், ஆடுகளை விட்டு, மின்னல்கள் போல மின்னிப் போனார்கள். பிறகு அம்மன்னவன், ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகையில், ஊர்வசி அவன் அரையில் ஆடையின்றியிருக்கக் கண்டு, தான் செய்த ஏற்பாட்டிற்கு விபரீதமாக நடந்தான் என்று புறப்பட்டுப் போனாள். பிறகு ஐலனென்னும் பேருடைய புரூரவன், படுக்கையில் பத்னியைக் காணாமல் வருந்தி அவளிடத்திலேயே மனம் செல்லப்பெற்றுத் தைர்யமின்றிச் சோகித்துக்கொண்டு, பித்தம் பிடித்தவன் போலப் பூமியெல்லாம் சுற்றினான்.
இவ்வாறு சுற்றிக்கொண்டிருக்கின்ற அம்மன்னவன், குருக்ஷேத்ரத்தில் ஸரஸ்வதி நதிக்கரையில், ஏகாந்தத்தில் அந்த ஊர்வசியையும் மற்றும் அவள் ஸகிகள் ஐந்து பேர்களையும் கண்டு களிப்புற்று முகம் மலரப்பெற்று இவ்வாறு அழகாக மொழிந்தான்.
புரூரவ மன்னவன் சொல்லுகிறான்:- அடி! அன்பிற்கிடமான என் மனைவி! நில் நில். என்னைப் பயங்கரமான துக்க ஸாகரத்தில் (துயரக் கடலில்) தள்ள வேண்டாம். இது உனக்குத் தகாது. இன்னும் நம்முடைய ரஹஸ்யப் பேச்சுக்கள் முடியவில்லையே. நாம் கூடியிருந்து வேடிக்கையாகப் போவோம். ஓ தெய்வ மடந்தையே! உனக்காக அழகிய என் தேஹத்தை இவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டு வந்தேன். இஃது இவ்விடத்தில் விழுந்து போகின்றது. இனி இதைச் செந்நாய்களும், கழுகுகளும், பக்ஷிக்கப் (உண்ணப்) போகின்றன. நீ அருள் புரியாது போவாயாயின், இப்படியே நடக்கும். இது நிச்சயம்.
ஊர்வசி சொல்லுகிறாள்:- நீ வீண் ப்ரதிஜ்ஞை (தேவையற்ற சபதம்) செய்தவனாகாதே. தீரனாயிரு (வலிய மனம் படைத்தவனாய் இரு). மரணம் அடையாதே. இச்செந்நாய் முதலியன உன் சரீரத்தைப் பக்ஷிக்க (உண்ண) வேண்டாம். எங்கும் ஸ்த்ரீகளுக்கு (பெண்களுக்கு) ஸ்நேஹம் (அன்பு, பரிவு) நிலை நின்றிராது. ஸ்த்ரீகளின் (பெண்களின்) ஹ்ருதயம், செந்நாய்களின் ஹ்ருதயம் போன்றதே. அவர்களுக்குச் சிறிதும் மன இரக்கம் கிடையாது. அவர்கள் கொடுந்தன்மையுடையவர்கள்; பொறுமையற்றவர்கள். ஸாஹஸமென்றால் (அதீதமான வீரச்செயல்) அவர்களுக்கு மிகவும் ப்ரியமாயிருக்கும். தங்கள் மனத்திற்கு இஷ்டமான கார்யத்தை நிறைவேற்றுவதற்காக எப்படிப்பட்ட ஸாஹஸ கார்யத்தையும் (அதீதமான வீரச்செயலையும்) செய்வார்கள். ஸ்வல்ப (சிறு) ப்ரயோஜனத்திற்காகத் (பலனிற்காக) தம்மை நம்பியிருக்கின்ற கணவனையும், ப்ராதாவையும் கூட வதிப்பார்கள். தங்கள் அபிப்ராயத்தை அறியாத மூடர்களிடத்தில், தமக்குப் பெரிய விச்வாஸம் (நம்பிக்கை) உள்ளது போல அபிநயித்து (நடித்து), ஸ்நேஹத்தைத் துறந்து, மணவாளனைப் புதிது புதிதாகத் தேடுவார்கள்; கள்ள புருஷனை விரும்பும் தன்மையுடையவர்கள். தங்கள் நெஞ்சில் தோன்றினபடியே செய்வார்களன்றி, ஒருவர்க்கும் அடங்கமாட்டார்கள். ஆகையால், நீ என் ஸ்நேஹத்தைத் (நட்பைத், காதலைத்) துறப்பாயாக காதலனே! ஒரு ஸம்வத்ஸரம் கழிந்தபின்பு, நீ என்னுடன் ஒரு ராத்ரி கூடியிருப்பாய். அப்பொழுது நமக்கு இன்னம் சில பிள்ளைகள் பிறக்கப் போகின்றன.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அம்மன்னவன், அவளுடைய வார்த்தையைக் கேட்டு, அவள் கர்ப்பிணியென்பதை அறிந்து, தன் பட்டணத்திற்குப் போனான். மீளவும் ஓராண்டு கழிந்த பின்பு, ஊர்வசி அம்மன்னவனிடம் வந்தாள். பிறகு புரூரவ மன்னவன், வீரனான புத்ரனுடன் வந்திருக்கின்ற ஊர்வசியைக் கண்டு, ஸந்தோஷம் அடைந்து, அவளுடன் ஓரிரவு கலந்திருந்தான். மீளவும் தன்னை விட்டுப் பிரியமுடியாமல் வருந்துகின்ற அம்மன்னவனை நோக்கி, ஊர்வசி மொழிந்தாள்.
ஊர்வசி சொல்லுகிறாள்:- மன்னவனே! நீ இந்தக் கந்தர்வர்களைத் துதித்து அருள்புரியச் செய்வாயாக. அவர்கள், நீ என் லோகத்திற்கு வரும்படியான உபாயத்தை உனக்குத் தெரிவிப்பார்கள்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அவ்வாறே அம்மன்னவன் கந்தர்வர்களை ஸ்தோத்ரம் செய்தான். அவர்களும், அதற்கு ஸந்தோஷம் அடைந்து, அக்னி ஸ்தாலியை (அக்னியை வைத்து ஹோமம் செய்வதற்குரிய ஒரு பாத்ரத்தைக்) கொடுத்தார்கள். அவன் ஊர்வசியைப் பெறுதற்கு ஸாதனமாகக் கொடுத்த அந்த அக்னிஸ்தாலியை (அக்னியை வைத்து ஹோமம் செய்வதற்குரிய ஒரு பாத்ரத்தைக்), ஊர்வசியாகவே நினைத்து வனத்தில் திரிந்து கொண்டிருந்து, மறந்து அந்தப் பாத்ரத்தை அவ்விடத்திலேயே வைத்துவிட்டு வீட்டிற்குப்போய், இரவில் தினந்தோறும் அந்த ஸ்தாலியை (பாத்ரத்தை) நினைத்துக் கொண்டு, அங்கு வஸித்திருந்தான்.
பிறகு த்ரேதாயுகம் ஆரம்பித்தது. அப்பொழுது அப்புரூரவனுடைய மனத்தில், யஜ்ஞாதி (யாகம் முதலிய) கர்மங்களை அறிவிக்கின்ற வேதங்கள் தோற்றின. அப்பால் அம்மன்னவன் ஸ்தாலியை (பாத்திரத்தை) வைத்த இடத்திற்குப் போய், அங்கு வன்னி மரத்தினிடையில் அரசமரம் முளைத்திருக்கக் கண்டு, தன் மனத்தில் தோன்றின வேதவாக்யத்தில் வன்னி மரத்தினின்று அக்னியைக் கடைந்தெடுப்பதென்னும் பொருள் தெரியப்பெற்று, அந்த வன்னிமரத்தினிடையில் முளைத்திருக்கின்ற அரசமரத்தை, அக்னியைக் கடைந்தெடுப்பதற்கு உரிய கருவியாகவும் ஆராய்ந்து, அந்த அரசமரத்தினால் அக்னியைக் கடைவதற்குரிய இரண்டு கட்டைகளை ஏற்படுத்திக்கொண்டு, ஊர்வசியின் லோகத்தைப் பெறவேண்டும் என்னும் விருப்பத்தினால் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு, கீழரணிக்கட்டையை ஊர்வசியாகவும், மேலரணிக்கட்டையைத் தானாகவும் இரண்டிற்கும் இடையிலுள்ள கட்டையைப் பிள்ளையாகவும், த்யானித்துக்கொண்டு கடைந்தான். அவன் கடைந்ததனால் அக்னி உண்டாயிற்று. அது போக்ய வஸ்துக்களையெல்லாம் விளைவிக்க வல்லது. அந்த அக்னி வேதத்தில் விதிக்கப்பட்ட ஆதானம் என்னும் ஸம்ஸ்காரம் செய்யப் பெற்று, ஆஹவனீயம், கார்ஹபத்யம், தக்ஷிணம் (இல்லறத்தில் இருப்பவன் வேதத்தில் விதிக்கப்பட்ட ஹோமம் முதலிய அக்னி கார்யங்களைச் செய்வதற்கு மூன்று அக்னிகளை எப்பொழுதும் இல்லத்தில் வைத்து வளர்த்து பூஜிக்க வேண்டும்.
1.கார்ஹபத்ய அக்னி என்பது மேற்கு திசையில் இருக்கும் அக்னி; ஹோமம் செய்யும் போது மனைவி கார்ஹபத்ய அக்னியின் அருகில் அமர்ந்து கொள்ள வேண்டும்;
2.ஆஹவனீய அக்னி என்பது கார்ஹபத்ய அக்னியிலிருந்து எடுக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்ட, ப்ரதான ஹோமம் செய்வதற்கான, கிழக்கு திசையில் இருக்கும் அக்னி;
3.தக்ஷிணாக்னி என்பது தெற்கு திசையில் இருக்கும் அக்னி) என்று மூன்று வகையாகப் பிரிந்தது.
அதை, அம்மன்னவன் தனக்குப் புண்ய லோகத்தை விளைக்கும் பிள்ளையாக ஏற்படுத்திக்கொண்டான். அவன் ஊர்வசி லோகத்தைப் பெற விரும்பி, அவ்வக்னியினால் யாக பலன்களைக் கொடுப்பவனும், ஸமஸ்த தேவதாஸ்வரூபனும், தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்குந்தன்மையனும், இந்திரியங்களுக்கு விஷயமாகாதவனுமாகிய, பகவானை ஆராதித்தான்.
முன்பு க்ருதயுகத்தில், ஸமஸ்த வர்ணங்களுக்கும் மூலகாரணமான ப்ரணவம் ஒன்றே வேதமாயிருந்தது. நாராயணனொருவனே தெய்வமாயிருந்தான். மற்றொருவனும் தெய்வமாயிருந்ததில்லை. லௌகிகமான (உலக வழக்கான) அக்னியொன்றே இருந்தது. ஹம்ஸர்கள் என்கிற ஒரு வர்ணமே (ஜாதியே) இருந்தது.
மன்னவனே! த்ரேதா யுகத்தின் ஆரம்பத்தில் புரூரவனிடத்தினின்று மூன்று வேதங்கள் உண்டாயின. (க்ருதயுகத்தில் அனைவரும் ஸத்வகுணம் தலையெடுத்திருந்தார்கள். த்ரேதாயுகத்தில், பெரும்பாலும் ரஜோகுணம் தலையெடுத்திருந்தமையால், வேதங்கள் முதலியன பலவாறு பிரிந்து, புரூரவன் மூலமாய்க் கர்ம மார்க்கம் வெளியாயிற்று). பிறகு அந்தப் புரூரவமன்னவன், தான் பிள்ளையாக அபிமானித்த அக்னியின் மூலமாக கந்தர்வலோகத்தை அடைந்தான்.
பதினான்காவது அத்தியாயம் முற்றிற்று.