ஒன்பதாவது ஸ்கந்தம் - பதிமூன்றாவது அத்தியாயம்
(இக்ஷ்வாகுவின் பிள்ளையாகிய நிமியின் வம்சத்தைக் கூறுதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இக்ஷ்வாகுவின் பிள்ளையாகிய நிமி, ஒரு சமயம் யாகம் செய்யத்தொடங்கி, வஸிஷ்டரை ருத்விக்காய் (யாகம் செய்விக்கும் உபாத்யாயராய்) இருக்கும்படி வேண்டினான். அம்முனிவர், நிமியைப்பார்த்து, “ஓ மன்னவனே! நான் முன்னமே இந்த்ரனால் யாகம் செய்விக்கும் படி வரிக்கப்பட்டேன் (பொறுக்கியெடுக்கப்பட்டேன்). ஆகையால், இந்திரனுடைய அந்த யாகத்தை முடித்து விட்டு, வருகின்றேன். அதுவரையில் என்னை எதிர்பார்ப்பாயாக” என்றார். பிறகு, நிமி ஒன்றும் பேசாதிருந்தான். அவ்வஸிஷ்ட முனிவரும், இந்த்ரனுக்கு யாகம் செய்விக்கப்போனார். அப்பொழுது நிமி, ப்ரக்ருதி (அறிவற்ற ஜடப்பொருட்களின் மூலமான முலப்ரக்ருதி), புருஷ (ஜீவாத்மாக்கள்), ஈச்வரன் (பரமாத்மாவான ஸ்ரீமந்நாராயனன்) என்கிற தத்வங்களின் உண்மையை அறிந்தவனாகையால், மனுஷ்ய சரீரம் (உடல்) நிலையற்றதென்பதை ஆராய்ந்து, அம்முனிவர் வருவதற்கு முன்னமே வேறு ருத்விக்குக்களை (யாகம் செய்விக்கும் உபாத்யாயர்களை) ஏற்படுத்திக்கொண்டு யாகம் செய்யத் தொடங்கினான். இக்ஷ்வாகு வம்சத்து அரசர்களுக்கு ஆசார்யராகிய வஸிஷ்ட முனிவர், இந்த்ரனுடைய யாகத்தை நிறைவேற்றி வந்து சிஷ்யனாகிய நிமி மன்னவன் செய்த அக்ரமத்தைக் (முறையற்ற தன்மையைக்) கண்டு, தன்னைத்தானே பண்டிதனாகப் பாவித்துக் கொண்டிருக்கிற நிமியின் சரீரம் (உடல்) அவனை விட்டுப் போகக்கடவது என்று சபித்தார். அதைக்கேட்டு நிமியும், தர்மத்தை அநுஸரித்திருக்கின்ற குருவாகிய வஸிஷ்டருக்குப் “பணத்தாசையால் தர்மத்தை அறியாதிருக்கின்ற உம்முடைய தேஹமும் உம்மை விட்டுப் போகட்டும்” என்று பதில் சாபம் கொடுத்தான்.
இவ்வாறு சொல்லி யோக மார்க்கத்தில் ஸமர்த்தனாகிய நிமி தன் தேஹத்தைத் (உடலைத்) துறந்தான். அவ்வாறே எங்கள் பாட்டனாராகிய வஸிஷ்டரும் தேஹத்தைத் (உடலைத்) துறந்து மித்ரா, வருணர்களுக்கு ஊர்வசியிடத்தில் பிள்ளையாகப் பிறந்தார். பிறகு, சிறப்புடைய முனிவர்கள், துறக்கப்பட்ட நிமியின் தேஹத்தைப் (உடலைப்) பரிமளவஸ்துக்கள் சேர்த்த ஸுகந்த தைலத்தில் வைத்து, ஸத்ரயாகத்தை முடித்துக்கடைசியில் அவ்விடம் வந்திருக்கின்ற தேவதைகளைப்பார்த்து, “ஸமர்த்தர்களான நீங்கள் அருள்புரிவீர்களாயின், இந்த நிமி மன்னவனுடைய தேஹம் (உடல்) ஜீவிக்குமாக” என்று வேண்டினார்கள். தேவதைகள் அப்படியே ஆகட்டுமென்றார்கள். அதற்கு நிமி “எனக்கு மீளவும் தேஹ (உடல்) ஸம்பந்தம் (தொடர்பு) வேண்டியதில்லை. தேஹ ஸம்பந்தம் (உடல் தொடர்பு) நேர்ந்தால், அதை மீளவும் விட வேண்டியதாயிருக்கின்றது. அதில் பல வருத்தங்கள் உண்டு. ஆனதுபற்றியே முனிவர்கள் இந்தச் சரீர பந்தத்தை (உடலுடன் கட்டுண்டு இருப்பதை) விரும்புகிறதில்லை. ஸம்ஸாரத்தினின்றும் விடுபட விரும்பிப் பரமபுருஷனுடைய பாதார விந்தங்களையே பணிகின்றார்கள். ஆகையால், நான் துக்கங்களுக்கிடமான சரீரத்தைப் (உடலைப்) பெற விரும்பமாட்டேன். ஜலத்தில் மத்ஸ்யங்களுக்கு ம்ருத்யு (மரணம்) ஸர்வகாலமும் தொடர்ந்திருப்பது போலச் சரீர ஸம்பந்தமுடைய ஜீவனுக்கு, ம்ருதயு (மரணம்) ஸர்வகாலமும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. ஆகையால், நான் சரீரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்றான். அதைக் கேட்ட தேவதைகள், “நிமி தேஹமில்லாமலே ஸூக்ஷ்ம (உருவம் அற்ற, பார்க்க முடியாத, நுட்பமான) தேஹத்துடன் (உடலுடன்), இஷ்டப்படி ப்ராணிகளின் கண்களில் மூடுவது, திறப்பது இவைகளை நடத்திக் கொண்டிருப்பானாக. இதனால் நீங்கள் விரும்பினபடி நிமியும் பிழைத்திருப்பான். அவனுக்கும், இஷ்டப்படி ஸ்தூல சரீர (உருவத்துடன் கூடிய உடல்) ஸம்பந்தமும் நேராதிருக்கும்” என்றார்கள். அதைக்கேட்டு மஹர்ஷிகள், ஜனங்களுக்கு அரசனில்லாமையால் நேரும் பயத்தை ஆலோசித்து, நிமியின் சரீரத்தைக் (உடலைக்) கடைந்தார்கள். அதினின்றும் ஒரு குமாரன் பிறந்தான். அற்புதமாகப் பிறந்தானாகையால், அவன் ஜனகனென்று பெயர் பெற்றான். ஜீவனில்லாத தேஹத்தினின்றும் பிறந்தானாகையால், விதேஹனென்றும், கடைந்ததனால் பிறந்தானாகையால், மிதிலனென்றும், அவன் வழங்கி வந்தான். அவனால் நிர்மிக்கப்பட்ட பட்டணமும், மிதிலையென்று பெயர் பெற்றது.
அந்த மிதிலனிடத்தினின்றும், உதாவஸு பிறந்தான். அவன் பிள்ளை நந்திவர்த்தனன். அவன் பிள்ளை ஸுகேசன். அவன் பிள்ளை தேவராதன். அவன் பிள்ளை ப்ருஹத்ரதன். அவன் பிள்ளை மஹாவீர்யன். அவன் பிள்ளை ஸுஹ்ருத்து. அவன் பிள்ளை த்ருஷ்டகேது. அவன் பிள்ளை ஹர்யன்வன். அவன் பிள்ளை மரு. அவன் பிள்ளை ப்ரதிந்தகன். அவன் பிள்ளை க்ருதரதன். அவன் பிள்ளை தேவமீடன். அவன் பிள்ளை வித்ருதன். அவன் பிள்ளை மஹாத்ருதி. அவன் பிள்ளை க்ருதிராதன். அவன் பிள்ளை மஹாரோமன். அவன் பிள்ளை ஸ்வர்ணரோமன். அவன் பிள்ளை ஹாஸ்வரோமன். அவன் பிள்ளை ஸீரத்வஜன். அவன் யாகம் செய்யும்பொருட்டு, யாகபூமியைக் கலப்பையினால் உழுது கொண்டிருக்கையில், கலப்பையின் நுனியினின்றும், ஸீதை உண்டானாள். அதைப்பற்றி அவன் ஸீரத்வஜனென்று பெயர்பெற்றான். அவன் பிள்ளை குசத்வஜன். அவன் பிள்ளை தர்மத்வஜன். மன்னவனே! தர்மத்வஜனுக்கு, க்ருதத்வஜனென்றும், மிதத்வஜனென்றும் இரண்டு பிள்ளைகள். அவர்களில், க்ருதத்வஜனுடைய பிள்ளை கேசித்வஜன். மிதத்வஜனுடைய பிள்ளை காண்டிக்யன்.
மன்னவனே! க்ருதத்வஜனுடைய பிள்ளையாகிய கேசித்வஜன், ப்ரஹ்ம வித்யையில் நிபுணனாயிருந்தான். மிதத்வஜனுடைய பிள்ளையாகிய காண்டிக்யன், கர்மயோகத்தின் உண்மையறிந்தவன். அவன், கேசித்வஜனிடத்தினின்றும் பயந்து ஓடிப்போனான். கேசித்வஜனுடைய பிள்ளை பானுமான். அவன் பிள்ளை சதத்யும்னன். அவன் பிள்ளை சுசி. அவன் பிள்ளை ஸனத்வாஜன். அவன் பிள்ளை ஊர்த்வகேது. அவன் பிள்ளை அஜன். அவன் பிள்ளை புருஜித்து. அவன் பிள்ளை அரிஷ்டநேமி. அவன் பிள்ளை ருதாயு. அவன் பிள்ளை பார்ச்வகன். அவன் பிள்ளை சித்ரரதன். அவன் பிள்ளை க்ஷேமதி. அவன், மிதிலா பட்டணத்தைச் செழிப்பாக ஆண்டு வந்தான். அவன் பிள்ளை ஹேமரதன். அவன் பிள்ளை க்ருத்யரதன். அவன் பிள்ளை உபகுரு. அவன் பிள்ளை உபகுப்தன். அவன் அக்னியின் அம்சத்தினால் பிறந்தவன். அவன் பிள்ளை வஸனன். அவன் பிள்ளை ஸுவர்ச்சஸ்ஸு. அவன் பிள்ளை ஸுபூஷணன். அவன் பிள்ளை ச்ருதன். அவன் பிள்ளை ஜயன். அவன் பிள்ளை விஜயன். அவன் பிள்ளை த்ருதன். அவன் பிள்ளை சுனகன். அவன் பிள்ளை வீதிஹவ்யன். அவன் பிள்ளை த்ருதி. அவன் பிள்ளை விபுலாச்வன். அவன் பிள்ளை க்ருதி. அவன் பிள்ளை மஹாவாரி. “ராஜனே! இவர்களெல்லோரும், மிதிலனுடைய வம்சத்தில் பிறந்தவர்கள்; மிதிலா பட்டணத்தை ஆண்டுவந்தவர்கள்: ஆத்ம வித்யையில் (ஜீவாத்மா, பரமாத்மா பற்றிய அறிவில்) ஸமர்த்தர்கள் (நன்கு ஊன்றிய அறிவுடையவர்கள்). இவர்கள், இல்லற வாழ்க்கையில் இருப்பினும், யோகேச்வரனான பகவானுடைய அநுக்ரஹத்தினால், ஸுக, துக்காதிகளினின்றும் விடுபட்டு, ஆத்மானந்தத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.
பதின்மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.