திங்கள், 8 அக்டோபர், 2012

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 1


அறிமுகம் (1) – எது ஆனந்தம்?

அனைவரும் ஆனந்தமாக இருக்க வேண்டும்; துன்பம் அத்தனையும் அகல வேண்டும்; இன்பம் பெருக வேண்டும் – இது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். நம் ஒவ்வொருவருக்கும் விருப்பும், வெறுப்பும் வேறுபடும். அது அந்தந்த மனிதனைப் பொறுத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் விருப்பும், வெறுப்பும் வேறுபட்டாலும், அனைவருக்கும் விருப்பமெல்லாம் நிறைவேற வேண்டும்; வெறுப்பானவை எல்லாம் ஒழிந்துவிட வேண்டும் என்பதில் மட்டும் சந்தேகம் இருக்க முடியாது.

நாம் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதற்கு என்ன செய்ய வேண்டும்? துன்பம் எல்லாம் விலகுவதற்கு எப்படி வழி தேடுவது? ஆனந்தமானதை நினைத்தோமானால், ஆனந்தப்படுகிறோம். துன்பமயமானதை நினைத்தால், துன்பப்படுவோம். ஒரு பொருளினுடைய வாசம் நம் மூக்கை வந்து அடைகிறது. காற்றுதான் அந்தப் பொருளின் மணத்தை கிரஹித்து, நம்மிடத்தில் கொண்டு வரும். பொருள், மணமுள்ள பொருளாக இருந்தால், நல்ல மணம் மூக்கை வந்து அடையும். பொருள், துர்நாற்றம் உடைய பொருளாக இருந்தால், துர்நாற்றம்தான் மூக்கை வந்து அடையும். அப்போது, காற்றிலோ, மூக்கிலோ ஏதும் இல்லை. எந்தப் பொருளிலிருந்து வாசம் வருகிறதோ, அந்தப் பொருளைப் பொறுத்துதான், இந்த மணமோ, துர்நாற்றமோ நம்மை வந்து அடையும்.

இந்த உதாரணத்திலிருந்து நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனந்தமானதைப் பற்றி நினைத்தோமானால், நாமும் இன்பப்படுவோம். துன்பமயமானதை நினைத்தோமானால், நமக்கும் துன்பமே மிஞ்சும். உலகத்தில் எது ஆனந்தமானது? எதைப் பற்றி நாம் யோசித்துப் பார்த்தாலும், அதில் ஏதோ ஒரு விதத்தில் துன்பம் கலந்திருக்கிறது. நிலையற்ற தன்மை கலந்திருக்கிறது. அப்போது, நிலையான இன்பம் பெற வேண்டுமானால், நிலையுள்ள ஒரு பொருளை, ஆனந்தமான பொருளை, அதாவது பரப்ரஹ்மத்தை நினைக்க வேண்டும். பரப்ரஹ்மமே பகவான்!

ஆனந்தம் ப்ரஹ்ம்மேதி வ்யஜானாத்

– என்று உபநிஷத்துக்கள் கூறுகின்றன. ப்ரஹ்மத்தை ஆனந்த வடிவானது என்று தெரிந்து கொள். இதை யார் ஒருவன் தெரிந்து கொள்கிறானோ, அவன் மீளாத இன்பத்தை இவ்வுலகத்திலும் அடைகிறான்; அவ்வுலகத்திலும் பெறுகிறான்.

இவ்வுலகத்தில் சாந்தி; அவ்வுலகத்தை அடைவதற்கு உண்டான உறுதி. இதை நமக்கு ப்ரஹ்மம்தான் கொடுக்க முடியும். ஆனால், அந்த ப்ரஹ்மத்தை அறிவதற்கு வழி என்ன? அறிந்தால் அன்றோ நினைக்க...? நினைத்தால் அன்றோ இன்பப்பட...?

எந்த ஒரு பொருளையும் அறிவதற்கு மூன்று ப்ரமாணங்கள் உள்ளன. ப்ரமாணம் என்று சொன்னால், ப்ரமா கரணம் – ப்ரமாணம். ப்ரமா என்றால் புத்தி; அறிவு. கரணம் என்றால் கருவி.

ப்ரமாகரணம் என்றால், நல்ல அறிவையும், உண்மையான அறிவையும் கொடுக்கக் கூடிய கருவி. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால், Tool for authentic knowledge. உண்மையான அறிவுக்கு ஒரு கருவியே ப்ரமாணம்.

உலகில் மூன்று வகைப்பட்ட ப்ரமாணங்கள் உண்டு. (1) ப்ரத்யக்ஷம், நாம் கண்ணால் நேரே பார்த்து அறிவு பெறுவது; காதால் கேட்டு அறிவு பெறுவது; மூக்கால் முகர்ந்து அறிவு பெறுவது; நாக்கால் சுவைத்து அறிவு பெறுவது; கையால் தொட்டு அறிவு பெறுவது – இது அனைத்தும் ப்ரத்யக்ஷம்.

அடுத்தது, அனுமானம். நேரே காண முடியாவிட்டாலும், ஒரு மலைக்கு மேலே புகை இருந்தால், உள்ளுக்குள்ளே நெருப்பு இருக்க வேண்டும் என்று அனுமானம் செய்து அறிந்து கொள்கிறோம். இது இரண்டாவது வகைக் கருவி.

ஆனால், பகவான், கண்ணுக்கும் புலப்படப் போவதில்லை, அவனை அனுமானித்தும் தெரிந்து கொள்ள இயலாது. அப்போது, ப்ரஹ்மத்தை அறிவதற்கு ப்ரமாணம்தான் எது? சப்தம்...!

அதாவது வேதங்களே ப்ரமாணங்கள். வேதத்தைக் கொண்டே இறைவனை இன்னாரென்றும், இப்படிப்பட்டவன் என்றும் நாம் தெரிந்து கொள்ள இயலும். இனி அந்த வேதங்களின் சிறப்பைப் பார்ப்போம்.

வேதங்கள் அனந்த கோடி காலமாக, அநாதி காலமாக உள்ளவை; இன்ன தேதியில் வந்தவை என்று குறிப்பிட்டு சொல்ல முடியாதவை. ஒரு மனிதனுடைய வாயால் அவை பேசப்பட்டவையே அல்ல.

வேதங்கள் அநாதியானதாலும், ஒரு மனிதனோ, தேவனோ யாரும் இயற்றாததாலும், அது குற்றமே இல்லாததாக இருக்கும்.

நாம் ஒரு எழுத்து எழுதினாலோ, வாயால் பேசினாலோ நமக்கு இருக்கும் அறிவின் அளவுக்குத்தான் அந்தக் கட்டுரையோ, பேச்சோ இருக்கும். நம் திறமையால் அந்தப் பேச்சு கட்டுப்படுகிறது, குறைபடுகிறது. ஆனால் வேதங்களை யாரும் சொல்லாதபடியாலும், ஒரு தேதி குறிப்பிடப்படாதபடியாலும் – அவை அனைத்துமே குற்றமே இல்லாதவை.

குற்றம் இல்லாத வேதங்கள்தான் பகவானை நமக்குக் காட்டும். கண்ணன், கீதையில் கூறுகிறார்:

வேதைஸ்ச ஸர்வை: அஹமேவ வேத்ய: வேதாந்தக்ருத் வேதவிதேவ சாஹம்

– ‘அனைத்து வேதங்களாலும் நானே கூறப்படுகிறேன். வேதங்கள் ஒன்றே என்னைக் கூறும் வல்லமை படைத்தவை... என்று கூறுகிறார்.

வேதங்களை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முன் பகுதி பூர்வ பாகம். அதைக் கர்ம பாகம் என்று சொல்வார்கள். பின் பகுதி உத்தர பாகம். அதை ப்ரஹ்ம பாகம் என்று சொல்வார்கள். முன் பகுதி வேதம்; பின் பகுதி வேதாந்தம். வேதாந்தத்தைத்தான் ‘உபநிஷத்துக்கள் என்று கூறுகிறோம்.

இந்த இரண்டினாலும் என்ன விஷயம் கூறப்படுகிறது? வேதங்கள் எல்லாம் நாம் செய்யும் கர்மங்களைப் பற்றிச் சொல்லும். பூஜை, சந்தியாவந்தனம், தர்ப்பணம், சிராத்தம், அக்னி ஹோத்ரம், ஔபாஸனம் – இது முதலான எத்தனையோ கர்மங்களைச் செய்கிறோம். இதையெல்லாம் எப்படிச் செய்ய வேண்டும் என்று வேதம் கூறும்.

அது போதுமா? இந்த கர்மங்களால் எவன் பூஜிக்கப்படுகிறானோ, அந்த ப்ரஹ்மத்தைப் பற்றியும், அவன் அருமை, பெருமை, குணங்கள், பண்புகள், சேஷ்டிதங்கள், அவனுடைய சிறப்புகள் – இவை அனைத்தையும் சொல்ல வந்தவைதான் வேதாந்தம். அதாவது, உபநிஷத்துக்கள்.

வேதமும், வேதாந்தமும் சேர்த்து, ஒன்று பூஜை முறையையும், மற்றொன்று பூஜிக்கப்படும் பகவானைப் பற்றியும் சொல்லும். ஆனால், வேதங்களை மட்டும் படித்தோ, வேதாந்தத்தை மட்டும் படித்தோ நாம் பொருளின் எல்லையைக் கண்டுவிட முடியாது.

இதிஹாஸ புராணாப்யாம்
வேதம் ஸமுபப்ரும்ஹயேத்
பிபேதி அல்பச்ருதாத் வேத:
மாமயம் ப்ரதரிஷ்யதி

இது ஒரு புராண ச்லோகம். வேதமே இப்படி நினைக்குமாம் –

நம்மை மட்டும் ஒருவன் படித்தால், அவனால் உண்மை அறிவு பெற முடியாதே! நம் கூடவே இருக்கும் இதிஹாஸ, புராணங்களையும் படித்தால்தான் நம் பொருளை சரிவரத் தெரிந்து கொள்ள முடியும்!

வேதங்களுக்கு உப ப்ரும்ஹணங்கள் என்று சில உயர்ந்த கிரந்தங்கள், ப்ரமாணங்கள் உண்டு. Supplementary text அல்லது Ancillary study என்று சொல்வது போலத்தான் இதிஹாஸங்களும், புராணங்களும்.

வேதத்தினுடைய கருத்து என்பது Theory படிப்பது போலாகும். ஆனால், இதிஹாஸ, புராணங்களைப் பற்றி படித்தோமானால், அது Practical session. வெறுமனே வேதத்தைப் படித்து மட்டும் பொருள் தெரிந்து கொள்ள இயலாது. இதிஹாஸ, புராணங்களின் உதவி கொண்டே வேதம், வேதாந்தத்தின் பொருள் அறிய முடியும்.

‘இதிஹாஸ, புராணங்கள் என்னத்துக்குப் பிரயோஜனம்? அவற்றால் நமக்கு என்ன லாபம்? என்று சிலருக்குத் தோன்றலாம்.

இதிஹாஸங்கள் இரண்டு. புராணங்கள் பதினெட்டு.

இரண்டு இதிஹாஸங்களும் அனைவரும் அறிந்ததே. ஒன்று, மஹாபாரதம். மற்றொன்று ராமாயணம்.

அதே போல் புராணங்கள் பதினெட்டு. இதிஹாஸங்கள், புராணங்கள் பகவானுடைய பிறப்பு, வளர்ப்பு, அவன் செய்த திருவிளையாடல்கள், அவன் தர்மத்தை நிலைநிறுத்த எடுத்துக் கொண்ட முயற்சிகள், நாம் செய்ய வேண்டிய பக்தி, நாம சங்கீர்த்தனம் – இப்படி பல விஷயங்களைப் பற்றியும் கூறும்.

(தொடரும்)

நன்றி - துக்ளக்

4 கருத்துகள்:

  1. ரொம்ப பாக்கியம் பகவானுடைய லீலைகளை மஹாத்மியங்களை எவ்வளவு கேட்டாலும் அலுக்காது

    பதிலளிநீக்கு
  2. வேத வேதாஙகளை பற்றிய சுருக்கமான ஆனால் சிறந்த விளக்கம்.

    பதிலளிநீக்கு