சனி, 31 ஜூலை, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 323

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – பதினேழாவது அத்தியாயம்

(வர்ணாச்ரம தர்மங்களை விவரித்துக் கூறுதல்)

உத்தவர் சொல்லுகிறார்:- இவ்வுலகத்திலுள்ள யாவரும், தங்கள் தங்கள் வர்ணங்களுக்கும் (ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர என்பவை வர்ணங்கள் - ஜாதிகள்), ஆச்ரமங்களுக்கும் (ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸ என்பவை ஆச்ரமங்கள்) உரிய தர்மங்களை அனுஷ்டித்துக்கொண்டு, உன்னிடத்தில் பக்தி செய்கையாகிற தர்மத்தை அனுஷ்டிப்பார்களாயின் உன்னைப் பெறுவார்களென்று நீ மொழிந்தாய். தாமரைக் கண்ணனே! வர்ணங்களுக்கும், ஆச்ரமங்களுக்கும் ஏற்பட்ட தர்மங்கள் எவை? அவற்றை எப்படி அனுஷ்டித்தால் உன்னிடத்தில் பக்தி உண்டாகும்? அதையெல்லாம் எனக்குச் சொல்ல வேண்டும்.

மஹாபாஹுவே! (வலிமையான தோள்களை உடையவனே!) ப்ரபூ! முன்பு நீ ஹம்ஸ ரூபியாய் ப்ரஹ்ம தேவனுக்கும், ஸனகாதிகளுக்கும் மேலான தர்மத்தை உபதேசித்தாய். சத்ருக்களை அழிப்பவனே! இப்பொழுதைக்கு நெடுங்காலமானமையால், முன்பு நீ உபதேசித்த அந்த தர்மம் மனுஷ்ய லோகத்தில் பெரும்பாலும் வழங்கி வராமல் விச்சின்னமாய் விட்டது (தடைபட்டு விட்டது). 

அச்சுதனே! ஆகையால், அந்த தர்மத்தை உபதேசிப்பவனும், அதை அனுஷ்டிப்பவனும், பாதுகாப்பவனும் உன்னையொழிய மற்றொருவனும் இல்லை. எவ்விடத்தில் வித்யைகளெல்லாம் மூர்த்தீகரித்து (வடிவு பெற்று) விளங்குகின்றனவோ, அத்தகைய ப்ரஹ்ம ஸபையிலும், இந்த தர்மத்தை உபதேசிப்பவனாவது, அனுஷ்டிப்பவனாவது, காப்பவனாவது கிடையாது. 

மதுஸூதனனே! அனுஷ்டிக்கவும், பாதுகாக்கவும், உபதேசிக்கவும் வல்லவனாகிய நீ, இப்பூமண்டலத்தை விட்டுப் போகையில், விச்சின்னமான (தடைபட்டுப் போன) இந்த தர்மத்தை எவன் உபதேசிக்கப் போகிறான்? எவனும் இல்லை. ஆகையால் நீயே உபதேசிக்க வேண்டும். ஸர்வ தர்மங்களையும் அறிந்தவனே! ப்ரபூ! அவ்வாறு அனுஷ்டிக்கவும், பாதுகாக்கவும், உபதேசிக்கவும் வல்லவனாகிய நீ பக்தியோகமாகிற தர்மம் எவரெவர்க்கு எவ்வெப்படி ஏற்பட்டிருக்கின்றதோ அதை எல்லாம் அப்படியே உபதேசிப்பாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு தன் பக்தர்களில் முக்யராகிய உத்தவரால் வினவப்பெற்ற அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான் ஸந்தோஷம் அடைந்து, மனுஷ்யர்களின் க்ஷேமத்திற்காக ஸனாதன தர்மங்களை உபதேசித்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- உத்தவனே! நீ கேட்ட கேள்வி ப்ராணிகளுக்கு ஹிதம் (நன்மை) செய்கையாகிற தர்மத்தினின்று நழுவாதிருக்கின்றது. இது வர்ணாச்ரம தர்மங்களுக்குட்பட்ட மனுஷ்யர்களுக்கு மோக்ஷத்தை விளைக்க வல்லது. உத்தவனே! பக்தி யோகத்திற்கு உதவி செய்வதும், வர்ணாச்ரமங்களைத் தொடர்ந்திருப்பதுமாகிய அந்த தர்மத்தைச் சொல்லுகிறேன்; கேட்பாயாக. 

முன்பு க்ருத யுகத்தில் ஹம்ஸமென்று ஒரே வர்ணம் உண்டாயிருந்தது (க்ஷத்ரியாதி வர்ணங்கள் இல்லை.) அந்த ஹம்ஸ ஜாதியினால், மனுஷ்யர்களெல்லாரும் ப்ரயோஜனங்கள் (பலன்கள்) எல்லாம் கைகூடப் பெற்றிருந்தார்களாகையால், க்ருதயுகமென்று பேராயிற்று எனக் கூறுகிறார்கள். அப்பொழுது ப்ரணவம் மாத்ரமே வேதமாயிருந்தது. (ருக், யஜுஸ், ஸாமங்கள் என்கிற இம்மூன்று வேதங்களும் அப்பொழுதில்லை). தர்மமும், மனத்திற்கு விஷயமாகிய நானே வ்ருஷபத்தின் (காளையின்) உருவம் தரித்து, நான்கு பாதங்களுடன் இருந்தேன். அப்பொழுதுள்ள மனுஷர்கள், கேவலம் த்யானயோக (த்யானத்தில்) நிஷ்டர்களாகி (ஊன்றியவர்களாய்), எவ்வித தோஷமும் தீண்டப்பெறாமல் பரிசுத்தனாயிருக்கின்ற என்னை உபாஸித்து, என்னைப் போலவே பரிசுத்தர்களாயிருந்தார்கள். ஆனது பற்றியே அவர்களுக்கு ஹம்ஸர்கள் என்று பேராயிற்று. 

மிகுந்த மதியுடையவனே! பிறகு, த்ரேதா யுகம் தொடங்குகையில், என் ஹ்ருதயத்திலுள்ள ப்ரணவத்தினின்றும், ருக், யஜூஸ், ஸாமங்கள் என்கிற மூன்று பிரிவினைகளையுடைய வேத வித்யை உண்டாயிற்று. அவ்வேதத்தினின்று ருக், யஜுஸ், ஸாமங்கள் என்கிற மூன்று வேதங்களின் மந்த்ரங்களும் அடங்கின யஜ்ஞ (யாக) ஸ்வரூபனாகிய (வடிவானவான) நான் உண்டானேன். பிறகு, விராட் புருஷனுடைய முகம், பாஹு (தோள்), துடை, பாதம் இவைகளினின்றும் ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ரர்களென்கிற நான்கு வர்ணத்தவர்களும் உண்டானார்கள். அவர்கள் தத்தமது வர்ண தர்மங்களை அடையாளமாக உடையவர்களாயிருந்தார்கள். 

ப்ரஹ்மதேவனைச் சரீரமாகவுடைய என்னுடைய பின்புறத்தினின்று க்ருஹஸ்த ஆச்ரமமும், ஹ்ருதயத்தினின்று ப்ரஹ்மசர்ய ஆச்ரமமும், வக்ஷ ஸ்தலத்தினின்று (மார்பிலிருந்து) வானப்ரஸ்த ஆச்ரமமும், சிரஸ்ஸினின்று (தலையிலிருந்து) ஸந்நியாஸ ஆச்ரமமும் உண்டாயின. ப்ராஹ்மணாதி வர்ணங்களும், ப்ரஹ்மசர்யாதி ஆச்ரமங்களும் தத்தமது உத்பத்தி ஸ்தானங்களுடைய மேன்மை, தாழ்மைகளுக்குரிய மேன்மை தாழ்மைகளை உடையவைகளாயிருந்தன. உத்தம (உயர்ந்த) ஸ்தானங்களினின்றும் (இடங்களில் இருந்து) உண்டான வர்ணாச்ரமங்கள் உத்தமங்களும் (உயர்ந்தவை), அதம (தாழ்ந்த) ஸ்தானங்களினின்றும் (இடங்களில் இருந்து) உண்டான வர்ணாச்ரமங்கள் அதமங்களும் (தாழ்ந்தவை) ஆயின. 

சமம் (உள் இந்த்ரியமான மனதி அடக்குதல்), தமம் (வெளி இந்த்ரியங்களை அடக்குதல்), தவம், சௌசம் (தூய்மை), ஸந்தோஷம் (த்ருப்தி, மகிழ்ச்சி), பொறுமை, ஆர்ஜவம் (நேர்மை) என்னிடத்தில் பக்தி, தயை, ஸத்யம் ஆகிய இவை ப்ராஹ்மண வர்ணத்திற்கு ஸ்வபாவ ஸித்தமான தர்மங்கள். (சமமாவது அனர்த்தங்களுக்கு (கேட்டிற்கு) இடமான சப்தாதி விஷயங்களினின்று அந்தக்கரணத்தை (மனதை) அடக்குகை. தமமாவது வெளியிந்த்ரியங்களை அடக்குகை. தவமாவது போகங்களில் விருப்பத்தைத் துறந்து சாஸ்த்ரங்களில் சொல்லியபடி உபவாஸாதிகளால் (உண்ணா நோன்புகளால்) சரீரத்தை ஒடுக்குகை. சௌசமாவது சாஸ்த்ரங்களில் விதித்த கர்மங்களை அனுஷ்டிப்பதற்கு உரியனாயிருக்கை. அதாவது ஸ்னானாதிகளால் சுத்தனாயிருக்கை. ஸந்தோஷமாவது தெய்வாதீனமாய்க் கிடைத்ததைக் கொண்டு இது போதுமென்றிருக்கை. பொறுமையாவது பிறரால் பீடிக்கப் படினும் மனம் கலங்காதிருக்கை. ஆர்ஜவமாவது பிறரிடத்தில் மனமும், சொல்லும், செய்கையும் ஒத்திருக்கை. தயையாவது பிறர் துக்கம் கண்டு வருந்துகை; அதைப்போக்க முயற்சிக்கை. ஸத்யமாவது ப்ராணிகளுக்கு ஹிதமாய் உண்மையைப் பேசுகை.) 

தேஜஸ்ஸு, பலம், த்ருதி, சௌர்யம், திதிக்ஷை, ஒளதார்யம், உத்யமம், ஸ்தைர்யம், ப்ராஹ்மண்யம், ஐச்வர்யம் ஆகிய இவை க்ஷத்ரிய வர்ணத்திற்கு ஸ்வபாவ ஸித்தமான தர்மங்கள். 

  1. தேஜஸ்ஸாவது - பிறரால் பரிபவிக்க (அவமானப்படுத்த) முடியாதிருத்தல். 

  2. பலமாவது - பிறரைப் பரிபவிக்கும் (அவமானப்படுத்தும்) திறமை. 

  3. த்ருதியாவது - ஆரம்பித்த கார்யத்தில் எவ்வளவு விக்னங்கள் (தடைகள்) வரினும் அதை முடித்தே தீரும் திறமை. 

  4. சௌர்யமாவது - வீட்டில் நுழைவது போல் பயமின்றி யுத்த பூமியில் நுழையும் திறமை. 

  5. திதிக்ஷையாவது - ஆயுத, அடி முதலியவற்றால் விளையும் வருத்தங்களைப் பொறுக்கும் திறமை. 

  6. ஒளதார்யமாவது - தான சீலனாய் (வள்ளல்) இருக்கை. 

  7. உத்யமமாவது - உள்ளது போதும் என்று த்ருப்தி அடையாமல் மேன்மேலும் முயற்சி செய்கை. 

  8. ஸ்தைர்யமாவது - யுத்தத்தில் தனக்கு மரணம் நேருமென்கிற நிச்சயம் உண்டாயிருப்பினும், ஓடிப்போகை முதலியன இல்லாமை. 

  9. ப்ராஹ்மண்யமாவது - ப்ராஹ்மண குலத்திற்கு ஹிதம் செய்கை. 

  10. ஐச்வர்யமாவது - தன்னை யொழிந்த மற்ற ஜனங்களை யெல்லாம் அடக்கியாளும் திறமை. 

சாஸ்த்ரார்த்தங்கள் உண்மை என்னும் நினைவாகிய ஆஸ்திக்யம், தானசீலனாயிருக்கை, வஞ்சனை செய்யாமை, ப்ராஹ்மணர்களைப் பணிகை, பணம் ஸம்பாதிப்பதில், போதும் என்ற த்ருப்தி இல்லாமை, ஆகிய இவை வைச்ய வர்ணத்திற்கு ஸ்வபாவ ஸித்தமான (இயற்கையான) தர்மங்கள். 

ப்ராஹ்மணர்களுக்கும், பசுக்களுக்கும், தேவதைகளுக்கும், கபடமில்லாமல் சுச்ரூஷை (பணிவிடை) செய்கை, தெய்வாதீனமாய்க் கிடைத்தவற்றைக் கொண்டு ஸந்தோஷமுற்றிருக்கை ஆகிய இவை சூத்ர வர்ணத்திற்கு ஸ்வபாவ ஸித்தமான (இயற்கையான) தர்மங்கள். 

சௌசம் (தூய்மை) இல்லாமை, பொய் பேசுகை, திருட்டுத்தனம், சாஸ்த்ரார்த்தங்களில் விச்வாஸம் (நம்பிக்கை) இல்லாமை, நிஷ்காரணமாக (காரணமின்றி) சண்டை செய்கை, விஷயங்களைக் கண்டால் அவற்றை அனுபவிக்காமல் விடமுடியாமையாகிற காமம் (ஆசை), அதற்கு விரோதம் செய்கையில் அதைப் பொறுக்கமுடியாத மன விகாரமாகிற (மனதின் மாறுபாடு) கோபம் (சினம்), அர்த்த (பொருள்) காமங்களில் (இன்பம்) பேராசை ஆகிய இவை வர்ணாச்ரமங்களுக்கு வெளிப்பட்ட சண்டாளாதிகளுக்கு ஸ்வபாவ ஸித்தமான  (இயற்கையான) தர்மங்கள்.

ஒருவர்க்கும் ஹிம்ஸை (தீங்கு) செய்யாமை, பொய் பேசாமை, திருடாமை, காம (ஆசை) க்ரோத (சினம்),  லோபங்களுக்கு (பேராசை) உட்படாமை, ஸமஸ்த ப்ராணிகளுக்கும் ப்ரியத்தையும் (விருப்பத்தையும்), ஹிதத்தையுமே (நன்மையையுமே) செய்யவேண்டும் என்னும் விருப்பம் ஆகிய இவை ஸமஸ்த வர்ணங்களுக்கும், ஸமஸ்த ஆச்ரமங்களுக்கும் பொதுவான தர்மங்கள். 

குலத்தைக் களிப்புறச் செய்பவனே! சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களை அனுஷ்டிப்பதற்கு உரியனாகும்படி பரிசுத்தனாயிருக்கை, ஆசமனம், ஸ்னானம், ஸந்த்யாவந்தனம், பிறர் விஷயத்தில் உள்ளும் புறமும் ஒத்திருக்கை, புண்ய தீர்த்தங்களையும், பெரியோர்களையும் பணிகை, காயத்ரி முதலிய மந்திரங்களை ஜபிக்கை, தீண்டத் தகாதவர்களைத் தீண்டாமை, பக்ஷிக்கத் (சாப்பிடத்) தகாதவைகளைப் பக்ஷிக்காமை (சாப்பிடாமை), பேசத் தகாதவர்களோடு பேசாமை, ஸமஸ்த பூதங்களையும் பரமாத்மாவான என் ஸ்வரூபங்களாகப் பாவிக்கை, மனம், வாக்கு, காயம் இவைகளை அடக்குகை ஆகிய இவையெல்லாம் ஸமஸ்த ஆச்ரமங்களுக்கும் பொதுவான நியமங்களாம்.

ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யர்களென்கிற மூன்று வர்ணத்தவர்களும் கர்ப்பாதானம் (ஆண் விந்துவை மனைவியிடத்தில் வைத்தல்) முதலிய ஸம்ஸ்காரங்களெல்லாம் (சடங்குகள்) க்ரமமாக நடக்கப் பெற்று, இரண்டாவது ஜன்மமாகிய உபநயன ஸம்ஸ்காரத்தையும் பெற்று, குருகுலத்தில் வாஸம் செய்து கொண்டு, அந்தக்கரணத்தை (மனதை) வென்று, ப்ரஹ்மசாரிகளாய் (அத்யயனத்தினால் வேதங்களைப் பெறுபவராகி) தன்னுடைய ஆச்ரமத்திற்கு ஏற்பட்ட வ்ரதங்களை ஊக்கத்துடன் அனுஷ்டித்துக் கொண்டு, மேகலை (இடுப்பில் கட்டும் கயிறு), அஜினம் (மான் தோல்), தண்டம் (பலாச மரக்குச்சி), அக்ஷமாலை (ஜபமாலை), யஜ்ஜோபவீதம் (பூணூல்), கமண்டலு (நீர் வைக்கும் பாத்திரம்), தர்ப்பம் (புல்) இவைகளை தரித்து, எண்ணெய் தேய்த்து ஸ்னானம் செய்கை முதலிய ஸம்ஸ்காரங்கள் இல்லாமையால் தலைமயிர்கள் ஜடையாகவும், பற்களும் வஸ்த்ரங்களும் வெளுத்துச் சுத்தமாயிருக்கவும் பெற்று, பரிசுத்தராயிருக்க வேண்டும். 

சிவப்பு, பொன்னிறமான வஸ்த்ரங்களையாவது வேடிக்கைக்காகவும் கூட ப்ரஹ்மசாரிகள் தரிக்கலாகாது. ஸ்னானம் (நீராடுதல்), போஜனம் (சாப்பிடுதல்), ஹோமம், ஜபம், மல, மூத்ர விஸர்ஜனம் (மல, ஜலம் கழித்தல்) ஆகிய இந்த ஸமயங்களில் மௌனமாய் இருக்க வேண்டுமன்றிப் பேசலாகாது. நகங்களையாவது, கக்ஷம் (அக்குள்), உபஸ்தம் (பிறப்புக்குறி) இந்த இடங்களிலுள்ள ரோமங்களையாவது (முடிகளையாவது) எடுக்கலாகாது. 

ப்ரஹமசர்ய வ்ரதத்தை நடத்துகிறவன், ஒருகாலும் புத்தி பூர்வகமாக ரேதஸ்ஸை (விந்துவை) விடலாகாது. ஒருகால் வருந்தி அந்த வ்ரதத்தினின்று தவறிப் போவானாயின், ஜலத்தில் இழிந்து ஸ்னானம் செய்து, ப்ராணாயாமம் செய்து, ஸாவித்ரியை ஆயிரத்தெட்டு தடவைகள் ஜபிக்க வேண்டும். (அவ்வளவினால் பரிசுத்தனாவான்). 

இரண்டு ஸந்த்யைகளிலும் (காலை, மாலை) பரிசுத்தனாய் அக்னி, ஸூர்யன், ஆசார்யன், கோக்கள், ப்ராஹ்மணர், குருக்கள், பெரியோர்கள், தேவதைகள் இவர்களை மனவூக்கத்துடன் பணிய வேண்டும். மற்றும், மௌனத்துடன் மனவூக்கமுற்று ஸாவித்ரியை ஜபிக்க வேண்டும். நானே (பகவானே) ஆசார்ய ஸ்வரூபியாய் இருக்கிறேனென்று நினைத்து, ஆசார்யனை மிகுந்த பக்தியுடன் உபாஸிக்கவேண்டும். ஆசார்யனை ஒருகாலும் அவமதிக்கலாகாது. அவனை மனுஷ்யனாக நினைத்து, அவன் மேல் அஸுயை (பொறாமை) செய்யலாகாது. அவனிடத்தில் ஏதேனும் தோஷம் புலப்படினும், அதை வெளியிடலாகாது. ஆசார்யன் ஸர்வ தேவதா ஸ்வரூபனாகையால் (எல்லா தேவதைகளின் வடிவானவனாகையால்), அவனை அவமதிக்கில், ஸமஸ்த தேவதைகளையும் அவமதித்தவனாவான். (ஸமஸ்த தேவதைகளும் எனக்கு அங்கங்களாகையால், நானே ஆசார்யனாய் வந்து அவதரித்து, அவரவர்களை அனுக்ரஹிக்கிறேனாகையால், ஆசார்யன் ஸர்வ தேவதா ஸ்வரூபனென்பதில் ஸந்தேஹம் உண்டோ?) 

காலை, மாலை இரண்டு வேளைகளிலும் ஆசார்யனை உபாஸிக்க வேண்டும். பிச்சையெடுத்த அன்னத்தையும், மற்றும் தனக்கு உபயோகிக்கத் தகுந்தது எதுவெது உண்டோ அதையும், ஆசார்யனுக்கெதிரில் கொண்டு போய் வைத்து, அவனுடைய அனுமதியின் மேல் அதை மௌனத்துடன் உபயோகப்படுத்த வேண்டும். ஸர்வ காலமும் தாஸன் போல் சுச்ரூஷை (பணிவிடை)  செய்துகொண்டு, ஆசார்யனை உபாஸிக்கவேண்டும். 

ஆசார்யன் எங்கேனும் போகும் பொழுது வெகுதூரமும், வெகு ஸமீபமும் ஆகாதபடி நடுத்தரமாக இருந்து, அஞ்சலித்துக் (கைகூப்பிக்) கொண்டு அவனைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டும். அவன் சயனிக்கும் பொழுது மனவூக்கத்துடன் அருகாமையில் படுத்து, பாதுகாக்க வேண்டும். அவன் இளைப்பாரும் பொழுது கால் பிடிப்பது முதலிய உபசாரங்களைச் செய்து கொண்டு, ஸமீபத்தில் உட்கார வேண்டும். அவன் உட்கார்ந்திருக்கும் போது, உத்தரவை எதிர் பார்த்துக் கொண்டு அருகாமையில் நின்றிருக்க வேண்டும். இத்தகைய நிலைமையில் இருந்து கொண்டு, போகங்களையெல்லாம் துறந்து, வித்யா அத்யயனம் (கல்வி கற்றல்) முடியும் வரையில், கீழ்ச் சொன்ன விரதங்களைத் தவறாமல் அனுஷ்டித்துக் கொண்டு, குருகுலத்தில் வாஸம் செய்ய வேண்டும். 

இந்த ப்ரஹ்மசாரி, வேதாத்யயனம் முதலிய கர்மங்களுக்குப் பலனான ப்ரஹ்மலோகத்தை அடைய விரும்புவானாயின், வேதங்களையே அத்யயனம் செய்து கொண்டு (திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு), தேஹத்தை (உடலை)  ஆசார்யனுக்கு அதீனமாக்கி (உட்படுத்தி), ப்ராணன்கள் (உயிர்) உள்ள வரையிலும் ப்ரஹ்மசர்யத்தையே அனுஷ்டித்துக் கொண்டிருக்க வேண்டும். (இவனையே நைஷ்டிக ப்ரஹ்மசாரி என்று சொல்லுகிறார்கள். 

நைஷ்டிக ப்ரஹ்மசாரி, அக்னியிடத்திலும், குருவினிடத்திலும், தன்னிடத்திலும், ஸமஸ்த பூதங்களிடத்திலும் அந்தராத்மாவாயிருக்கிற பரம புருஷனாகிய என்னைப் பேத புத்தியில்லாமல் ப்ரஹ்மசர்ய வ்ரதானுஷ்டானத்தினால் விளையும் தேஜஸ்ஸுடன் சிறிதும் கல்மஷமின்றி (குற்றமின்றி) உபாஸிக்கவேண்டும். மற்றும், அவன் ஸ்த்ரீகளைப் (பெண்களைப்) பார்ப்பது, தொடுவது, பேசுவது, பரிஹாஸம் செய்வது முதலியவற்றையும் துறக்க வேண்டும். ஆணும் பெண்ணுமாய்க் கலந்திருக்கிற பசு, பக்ஷி முதலிய ஜந்துக்களையும் கூடப் பார்க்கலாகாது.

இவ்வாறு ப்ரஹ்மசர்ய வ்ரதத்தை ஊக்கத்துடன் அனுஷ்டிக்கும் ப்ராஹ்மணன், வேதங்களை ஓதி, அதன் பொருள்களையும் உணர்ந்து, இடைவிடாத பெருந்தவத்தினால் அக்னி போல் ஜ்வலித்துக் கொண்டு, என்னிடத்தில் பக்தியோகம் உண்டாகப் பெற்று, அதனால் என்னைப் பெறுதற்குத் தடையான கர்மங்களும், அவற்றின் வாஸனையும் தீரப்பெற்று, தேஹ அவஸானத்தில் (இந்த உடல் முடியும்போது) ப்ரக்ருதி ஸம்பந்தமாகிற அழுக்கும் அடியோடு நீங்கப்பெறுவான்.

இவ்வாறு நைஷ்டிக ப்ரஹம்சர்யத்தை (ப்ரஹ்மசர்ய வ்ரதத்தில் நிலைநின்று இருத்தல்) அனுஷ்டிக்க வல்லமையற்றிருப்பானாயின், வேதாத்யயனம் முடித்து வேதங்களின் பொருள்களையும் அறிந்து, பிறகு எப்பொழுது மேற்பட்ட ஆச்ரமங்களில் ஏதேனுமொன்றைப் பெற விரும்புகிறானோ, அப்பொழுதே ஆசார்யனுக்குத் துணை கொடுத்து, அவனால் அனுமதி கொடுக்கப் பெற்று, ஸமாவர்த்தனம் (ப்ரஹ்மசர்ய வ்ரதத்தை முடித்துக் கொள்வது) என்னும் ஸ்னானத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

வேதாத்யயனம் முடியும் வரையில் குருகுல வாஸம் செய்து முடிந்தவுடன், வ்ரத ஸமாபனம் செய்து கொள்பவனை (ப்ரஹ்மசர்ய வ்ரதத்தை முடித்துக் கொள்பவனை) உபகுர்வாண ப்ரஹ்மசாரி என்று சொல்லுகிறார்கள்). 

பிறகு க்ருஹஸ்த (இல்லறம்) ஆச்ரமத்தையாவது, வானப்ரஸ்த ஆச்ரமத்தையாவது பெற வேண்டும் . ப்ராஹ்மணனாய் இருப்பானாயின், ஸந்நியாஸ ஆச்ரமத்தைப் பெறவேண்டும். ப்ராஹ்மண, க்ஷத்ரிய,  வைச்யர்களுக்குள் என்னிடத்தில் பக்தியுடைய எவனாயினும், ஆச்ரமத்தினின்று மற்றோர் ஆச்ரமத்தைக் கைப்பற்ற வேண்டுமேயன்றி, ஆச்ரமத்தைத் துறந்து, ஓர் ஆச்ரமமுமின்றி வெறுமெனே இருக்கலாகாது. ப்ரஹ்மசர்யத்தின் பின்பு, க்ருஹஸ்தாச்ரமத்தைப் பெறவிரும்புவானாயின், தனக்குத் தகுந்தவளும், நிந்தைக்கிடமில்லாதவளும், வயதில் தனக்குக் குறைந்தவளும், தன் ஜாதியில் பிறந்தவளுமான பார்யையை (மனைவியை) முதலில் மணம் புரிய வேண்டும். பிறகு க்ஷத்ரியாதி வர்ணங்களில் கீழ்ச்சொன்ன குணங்களெல்லாம் அமைந்த பெண்ணாகப் பார்த்து மணம் புரியலாம்.  

இரு பிறப்பினர்களாகிய ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யர்களென்கிற மூன்று வர்ணத்தவர்களுக்கும், யாகம், அத்யயனம், தானம் இவை மூன்றும் பொதுவான தர்மங்கள். தானம் வாங்குதல், வேதமோதுவித்தல், யாகம் செய்வித்தல் ஆகிய இவை மூன்றும் ப்ராஹ்மணனுக்கு மாத்ரமே ஏற்பட்டவை. 

அவற்றில் தானம் வாங்குதல், தவத்திற்கும் ப்ரஹ்ம தேஜஸ்ஸுக்கும் புகழுக்கும் கெடுதியை விளைக்குமென்று நினைப்பானாயின், யாகம் செய்வித்தல், வேதமோதுவித்தல் ஆகிய மற்றவைகளால் ஜீவிக்கவேண்டும். அவற்றிலும் தோஷங்ககள் உண்டென்று பார்ப்பானாயின், கழனிகளில் (வயல்களில்) உதிர்ந்த கதிர்களையாவது, தான்யங்களையாவது பொறுக்கி, அதைக்கொண்டு ஜீவிக்க வேண்டும். மற்றவைகளைக் காட்டிலும் இது வருத்தமே. (ஆயினும் அவை தோஷங்களுக்கிடமாகையால் இதுவே ச்லாக்யம் – சிறந்தது).  ப்ராஹ்மணனுடைய தேஹம் (உடல்), அற்ப போகங்களை அனுபவிப்பதற்காக ஏற்பட்டதன்று; 

பின்னையோவென்றால், இஹத்தில் (இந்த உலகில்) ஜீவித்திருக்கும் வரையில், தேஹ (உடல்) ச்ரமங்களுக்கிடமான தவத்தை அனுஷ்டிப்பதற்காகவும், பரத்தில் (வேறு உலகில்) அளவற்ற ஸுக ரூபமான மோக்ஷத்தை அனுவிப்பதற்காகவும் ஏற்பட்டது. உதிர்ந்த கதிர்களைப் பொறுக்கி ஜீவித்தல், உதிர்ந்த தான்யங்களைப் பொறுக்கி ஜீவித்தல் இவைகளால் மனமகிழ்ச்சியுற்று, மனத்தூய்மைக்கு இடமாயிருப்பதும், மஹத்தான பலனை விளைப்பதுமாகிய வர்ணாச்ரம தர்மத்தை அனுஷ்டித்துக் கொண்டு, என்னிடத்தில் நிறுத்தப்பட்ட மனமுடையவனுமாகி, அதிகமாகப் போகங்களில் விருப்பமுறாது இருப்பானாயின், க்ருஹஸ்தாச்ரமத்திலேயே இருப்பினும், ஸம்ஸார ச்ரமங்களெல்லாம் தீரப்பெறுகையாகிற மோக்ஷத்தைப் பெறுவான். (க்ருஹஸ்தாச்ரமத்தில் இருப்பானாயின், பெண்டிர், பிள்ளை, பெண் முதலிய குடும்பங்கள் பெருகுமாகையால், அவன் உஞ்ச வ்ருத்தியினால் (தானே உதிர்ந்த தான்யங்களைப் பொறுக்குதல் மூலம்) எவ்வாறு ஜீவிக்க முடியுமென்றால், அவ்வாறு குடும்பங்கள் பெருத்தும், உஞ்சவ்ருத்தியிலேயே இருந்து வருந்துவானாயின், அவனுக்குப் பிறர் உபகரிப்பார்கள் (உதவி செய்வார்கள்)). 

என்னையே முக்யமாகப் பற்றின அந்தணன், உஞ்சவ்ருத்தி முதலியவற்றால் குடும்பத்தைப் போஷிக்க முடியாமல் வருந்தும் பொழுது, அவனை அவ்வருத்தத்தினின்று எவர் உத்தரிக்கிறார்களோ (காப்பாற்றுகிறார்களோ), அவர்களை நான் ஸமுத்ரத்தினின்று ஓடம் கரையேற்றுவது போல் ஆபத்துக்களினின்று சீக்ரத்தில் கரையேற்றுவேன். 

இவ்விதமான ஜீவனம் எதுவும் ஏற்படாமல், சில (சிலமாவது - கழனிகளில் உதிர்ந்த கதிர்களைப் பொறுக்குதல்) உஞ்சங்களாலும் (உஞ்சமாவது- கொஞ்சம் கொஞ்சமாக யாசித்துப் பெறுதல்.) ஜீவனம் நடத்த முடியாமல் வருந்துகிற அந்தணன், வர்த்தக வியாபாரத்தில் இழிந்து, அதிலும் தான் விற்பனை செய்யத் தகுந்த புல், கட்டை முதலியவைகளை விற்று, ஜீவனம் கிடைக்காமையாகிற ஆபத்தைக் கடக்க வேண்டும். குடும்பம் பெருத்து, அதிலும் ஜீவனம் நடக்காது போய் வருந்துவானாயின், கத்தியை ஏந்தி க்ஷத்ரிய வ்ருத்தியினாலாவது ஜீவிக்க வேண்டும். ஒருகாலும் கீழ்வர்ணத்தவர்களுக்குப் பணிவிடை செய்து பிழைக்கலாகாது. 

அரசன், தந்தை போல் அருளுடையவனாகி, ப்ரஜைகளை எல்லாம் வருத்தத்தினின்று கரையேற்ற வேண்டும். யானைக் கூட்டங்களில் தலைமையுள்ள யானை, யானைகளை வருத்தத்தினின்று கரையேற்றித் தானும் கரையேறுவது போல், தைர்யத்துடன் ப்ரஜைகளை வியஸனத்தினின்று (கஷ்டத்திலிருந்து)  கரையேற்றி, தனக்கு வியஸனம் (கஷ்டம்) நேரிடில், தன்னையும் தானே கரையேற்ற வேண்டும். இத்தகைய மன்னவன், இங்குப் பாபங்களையெல்லாம் துறந்து, ஸூர்யனோடொத்த ஒளியுடைய விமானத்தில் ஏறிச் சென்று, இந்திரனுடன் கலந்து, ஸந்தோஷமுற்றிருப்பான். 

க்ஷத்ரியன் தன் வ்ருத்தியினால் ஜீவிக்க முடியாதிருப்பானாயின், வைச்ய வ்ருத்தியைக் கைப்பற்றி ஜீவிக்க வேண்டும்; அல்லது, அரண்யத்தில் (காட்டில்) வேட்டையாடி ஜீவிக்கலாம். அல்லது, ப்ராஹ்மண வ்ருத்தியினாலாவது ஜீவிக்கலாமன்றி, ஒருகாலும் கீழ் வர்ணத்தவர்களைப் பணிகையாகிற ச்வ (நாய்) வ்ருத்தியினால் ஜீவிக்கலாகாது. 

வைச்யனுக்குத் தன் வ்ருத்தியினால் ஜீவிக்க முடியாமல் ஆபத்து நேரிடில் சூத்ர வ்ருத்தியினால் ஜீவிக்க வேண்டும். சூத்ரன் ப்ராஹ்மணாதி வர்ணத்தவர்களைப் பணிந்து ஜீவிக்கையாகிற தன் வ்ருத்திக்கு லோபம் (குறை) நேர்ந்து ஜீவிக்க வருந்துவானாயின், துணி நைவது, பாய்மிடைவது முதலிய செயல்களைச் செய்து அதனால் ஜீவிக்க வேண்டும். 

ப்ராஹ்மணாதி வர்ணத்தவர்கள் அனைவரும் தங்கள் தங்களுடைய ஆபத்து நீங்கப் பெறுவார்களாயின், நிந்தைக்கிடமான கார்யங்களைச் செய்து ஜீவிக்கப் பார்க்கலாகாது. (ஒரு வர்ணத்திலிருப்பவன், மற்றொரு வர்ணத்திற்கு ஏற்பட்ட கார்யத்தைச் செய்வானாயின், அவனுக்கு அது நிந்தைக்கிடமான கார்யமே அல்லவா? ஆகையால் அவன் அதைச் செய்யலாகாது.) 

வேதங்களை ஓதுகை, ஸ்வதை (ப்ருத்ருக்களுக்கு அர்ப்பணித்தல்), ஸ்வாஹை (தேவதைகளுக்கு அர்ப்பணித்தல்), பலி, அன்னம் முதலியவைகளால் என்னுடைய உருவங்களாகிய தேவதைகளையும், ரிஷிகளையும், மற்ற ப்ராணிகளையும் தன்னுடைய விபவத்திற்குத் தகுந்தபடி ஆராதிக்கை, தெய்வாதீனமாய்க் கிடைத்த தனத்தினாலாவது, தன் வ்ருத்தியினால் ஸம்பாதித்த பரிசுத்தமான அன்னத்தினாலாவது, தன் போஷ்ய வர்க்கங்களை (காப்பாற்றுவோரை) வருத்தாமல், என்னுடைய ஆராதன ரூபமான யாகங்களைச் செய்கை ஆகிய இவையெல்லாம் மூன்று வர்ணத்தவர்களுக்கும் பரலோகத்தை விளைக்கவல்ல பொதுவான தர்மங்களாம். க்ருஹஸ்தாச்ரமத்திலிருப்பினும், பிள்ளை, பெண்டிர் முதலிய குடும்பங்களில் மிகவும் மனப்பற்று செய்யலாகாது; குடும்பியாயினும் தேஹத்தில் (உடலில்) ஆத்மாபிமானம் (ஆத்மா என்ற எண்ணம்) கொள்ளலாகாது. 

பின்னையோ என்றால், சித்து (ஜீவாத்மா), அசித்து (ஜடப்பொருள்), ஈச்வரன் என்கிற மூன்று தத்வங்களின் உண்மையை ஆராய்ந்தறிந்து, இஹத்தில் (இந்த உலகில்) உண்டான போகங்களைப் போல் ஸ்வர்க்காதி போகங்களும் நச்வரங்கள் (நிலையற்றவை) என்று நினைக்க வேண்டும். 

பிள்ளை, பெண்டிர், நண்பர், பந்துக்கள் ஆகிய இவர்களோடு கலந்திருப்பது, வழிப்போக்கர் பலரும் ஒரு தண்ணீர்ப் பந்தலில் கலந்திருப்பது போல் அநித்யமே (நிலையற்றதே) ஒழிய நித்யமன்று. பிள்ளை, பெண்டிர் முதலியவர்கள் தேஹங்கள் (உடல்) தோறும் மாறுகிறார்கள். தூங்கும் பொழுது நேருகிற ஸ்வப்னம் (கனவு) விழித்துக்கொண்டவுடன் மறைவது போல், ஒரு தேஹத்தைப்பற்றி ஏற்பட்ட புத்ர (பிள்ளை), களத்ராதிகள் (மனைவி) அந்த தேஹ அவஸானத்தில் (உடல் முடிவில்) மாறிவிடுபவரல்லவா? (மற்றும், அவர்கள் தேஹாவஸானம் (உடல் முடிவு) வரையில் தொடருகிறார்களென்பதும் கூட இல்லை. இடையிலும் பிரிந்து போகிறார்கள். ஆகையால், புத்ர (பிள்ளை), களத்ராதிகளுடைய (மனைவிகளுடைய) ஸமாகமம் (சேர்த்தி) தண்ணீர்ப் பந்தலில் வழிப்போக்கர்கள் பலரும் ஒன்று சேருவதுபோல் அநித்யமேயாம்). 

இவ்வாறு த்ருஷ்டத்திலுள்ள (நம் கண்ணுக்குப் புலப்படும்) போகங்கள் அநித்யமாய் (நிலையற்றவையாய்) இருப்பது போல், அத்ருஷ்டமான (நம் கண்ணுக்குப் புலப்படாத) ஸ்வர்க்காதி போகங்களும் அநித்யமே (நிலையற்றதே) என்று ஆராய்ந்தறிந்து, மனவூக்கத்துடன் க்ருஹத்தில் அதிதியைப் (விருந்தாளியைப்) போல் வாஸம் செய்துகொண்டும் அஹங்கார (நான்), மமகாரங்களைத் (எனது) துறந்து, க்ருஹத்தில் ஆஸக்தி (பற்று) அற்றிருக்க வேண்டும். 

க்ருஹஸ்தாச்ரமத்திற்கு (இல்லறத்திற்கு) விதிக்கப்பட்ட யஜ்ஞாதி கர்மங்களால் என்னை ஆராதித்து பக்தியுடையவனாகி, ஆயுள் முழுவதும் க்ருஹஸ்தாச்ரமத்திலேயே இருக்கலாம். ஸந்ததி உடையவனாய் இருப்பானாயின், வான ப்ரஸ்த ஆச்ரமத்தையாவது, ஸந்யாஸ ஆச்ரமத்தையாவது பெறலாம். இல்லற வாழ்க்கையில் மனப்பற்று செய்வானாயின், பிள்ளை, பெண்டிர், பணம் முதலியவற்றில் ஆசையால் வருந்தி, பெண்டிர்களுக்குட்பட்டு, அஹங்கார (நான்), மமகாரங்களால் மதிமயங்கி, விவேகமற்று, மேன்மேலும் ஸம்ஸார பந்தத்தைப் பெறுவான். 

“ஆ! என் தாய்-தந்தைகள் கிழவர்களாய் இருக்கிறார்கள். இளம் பிள்ளைகளையுடைய என் பார்யையும் (மனைவியும்) என் பிள்ளைகளும் என்னைப் பிரிந்து வேறு கதியின்றி வருந்தி எவ்வாறு ஜீவிக்கப் போகிறார்கள்?” என்று இல்லற வாழ்க்கையில் ஆஸக்தியால் (பற்றினால்) மனக்கலக்கமுற்று, மதிமயங்கி, விஷயங்களில் த்ருப்தி உண்டாகப் பெறாதவனாகி, பிள்ளை, பெண்டிர் முதலியவர்களையே சிந்தித்துக் கொண்டு, மரணம் அடைந்து, மிகவும் தாமஸமான (கீழான) யோனியில் (பிறவியில்) பிறப்பான். 

பதினேழாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக