சனி, 7 ஆகஸ்ட், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 324

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – பதினெட்டாவது அத்தியாயம்

(வானப்ரஸ்த  ஆச்ரம தர்மங்களையும், ஸந்யாஸ ஆச்ரம தர்மங்களையும் கூறுதல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- வானப்ரஸ்த ஆச்ரமத்தைப் பெற விரும்புவானாயின், பார்யையை (மனைவியை) பிள்ளைகளிடம் ஒப்புவித்து விட்டு, அல்லது பார்யையோடு கூடவாவது சென்று, இந்திரியங்களை எல்லாம் வென்று, ஆயுளுடைய மூன்றாம் பாகம் முழுவதும் வனத்திலேயே வாஸம் செய்யவேண்டும். (பிறகு இந்திரியங்களெல்லாம் தளர்ந்து போய்விடுமாகையால், சிறிது வைராக்யம் உண்டாயினும், ஸந்யாஸாச்ரமத்தைப் பெறலாம். வானப்ரஸ்த ஆச்ரமத்தை அனுஷ்டிப்பவன் வனத்தில் விளையக் கூடியவைகளும், சாஸ்த்ரங்களில் புசிக்கலாமென்று அனுமதிக்கப்பட்டவை ஆகையால் பரிசுத்தங்களுமான கிழங்கு, வேர், காய், பழம் முதலியவைகளால் ஜீவனத்தை நடத்திக் கொள்ள வேண்டும். மரவுரியை வஸ்த்ரமாக உடுத்திக் கொள்ள வேண்டும். அது கிடைக்காத பக்ஷத்தில், புல், இலை, தோல் இவைகளையாவது உடுத்திக்கொள்ள வேண்டும். தலைமயிர், உடம்பு மயிர், நகங்கள், தாடி, மீசை ஆகிய இவைகளை அப்படியே தரித்துக் கொண்டிருக்க வேண்டுமன்றி, நீக்கக்கூடாது. பல் தேய்க்கலாகாது. மூன்று காலங்களிலும் ஸ்னானம் செய்யவேண்டும். வெறும் பூமியில் புல் முதலியவைகளைப் பரப்பி, அதன் மேல் படுத்துக் கொள்ள வேண்டும். க்ரீஷ்ம ருதுவில் (கோடை காலத்தில்) பஞ்சாக்னி (ஐந்து நெருப்புகளுக்கு) மத்யத்தில் (இடையில்) இருந்து கொண்டு தன்னை அவ்வக்னி ஜ்வாலைகளால் தபிக்கச் செய்ய வேண்டும். வர்ஷருதுவில் (மழைக்காலத்தில்) விடா மழை பெய்து கொண்டிருப்பினும், அதைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும். சிசிர ருதுவில் (குளிர் காலத்தில்) கழுத்தளவு ஜலத்தில் அமிழ்ந்திருக்க வேண்டும். இத்தகைய நிலைமையுடன் தவம் செய்யவேண்டும்.

கிழங்குகளையும், வேர்களையும் அக்னியில் பக்வம் செய்து புசிக்க வேண்டும். பழங்களையோ என்றால், காலத்தினால் தானே பழுத்தவைகளைப் புசிக்க வேண்டும். செந்நெல் முதலியவைகளை உரலினாலாவது, கல்லினாலாவது குத்தி, உபயோகப்படுத்த வேண்டும். அல்லது பற்களையே உரலாகக் கொண்டு, கார்யத்தை நடத்திக் கொள்ளலாம். தன்னுடைய ஜீவனத்திற்கு ஸாதனமான கிழங்கு, வேர் முதலியவைகளைத் தானே கொண்டு வர வேண்டுமன்றி, பிறரால் வரவழைக்கலாகாது. 

தேச, காலங்களின் பல அபலங்களை ஆராய்ந்து, காலாந்தரத்தில் (முன்பே) கொண்டு வந்த காய், கிழங்கு முதலியவைகளைப் புசிக்கலாகாது. வனத்தில் கிடைக்கக் கூடிய செந்நெல் முதலியவைகளால் அந்தந்த காலங்களில் விதிக்கப்பட்ட ஆக்ரயணம் முதலிய சரு, புரோடாசாதிகளைச் (அக்னியியில் ஹோமம் செய்யப்படும் அன்னம் / மாவினால் ஆன பண்டம்) செய்து, அவைகளால் என்னை ஆராதிக்க வேண்டுமன்றி, வானப்ரஸ்த ஆச்ரமத்தில் இருப்பவன் வேதங்களில் விதிக்கப்பட்ட பசுக்களைக் கொன்று, அவைகளால் என்னை ஆராதிக்கலாகாது. வேதங்களால் முனிவர்களுக்கு விதிக்கப்பட்ட அக்னி ஹோத்ரம், தர்சம், பூர்ணமாஸம் முதலிய கர்மங்களாலும், என்னை வானப்ரஸ்தன் ஆராதிக்க வேண்டும். இவ்வாறு ஆயுள் வரையிலும் அனுஷ்டித்த தவத்தினால், ரக்த மாம்ஸங்களெல்லாம் உலர்ந்து, உடம்பு முழுவதும் நரம்புகளே நிறைந்தவனாகி, தவத்திற்கு நிர்வாஹகனாகையால் (நியமிப்பவனாகையால்) தபோமயனாகிய (தபஸ் வடிவனாகிய) என்னை ஆராதித்து, ரிஷிலோகமாகிய மஹர் லோகத்தைக் கடந்து, தேஹ அவஸானத்தில் (உடல் முடியும்போது) என்னைப் பெறுவான். (இந்தத் தவத்தையே பல அபிஸந்தியுடன் (பலனில் விருப்பத்துடன்) செய்வானாயின், அவனுக்கு ரிஷிலோகந்தான் நேரும். பல அபிஸந்தியில்லாமல் (பலனில் விருப்பமில்லாமல்) செய்வானாயின், அவனுக்கு என்னுடைய ப்ராப்தியே உண்டாகும்). 

மோக்ஷத்தை நிறைவேற்றிக் கொடுக்கவல்ல இத்தகைய தவத்தை, மிக்க வருத்தத்துடன் நடத்தி, அதை அற்பமான (தாழ்ந்ததான) காமத்திற்காக (ஆசைக்காக) எவன் உபயோகப்படுத்துகிறானோ, அவனை விட எவன் தான் மூர்க்கனாவான்? அவனைப் போன்ற அறிவு கேடன் (முட்டாள்) எவனுமே இல்லை. இந்த வானப்ரஸ்தன் கிழத்தனத்தினால் உடம்மெல்லாம் நடுக்கமுற்று, தன்னுடைய ஆச்ரமத்திற்கு ஏற்பட்ட இத்தகைய தர்ம நியமத்தை (வழிமுறையை) அனுஷ்டிக்க வல்லமை அற்றிருப்பானாயின், ஆஹவனீயம் முதலிய அக்னிகளை (இல்லறத்தில் இருப்பவன் வேதத்தில் விதிக்கப்பட்ட ஹோமம் முதலிய அக்னி கார்யங்களைச் செய்வதற்கு மூன்று அக்னிகளை எப்பொழுதும் இல்லத்தில் வைத்து வளர்த்து பூஜிக்க வேண்டும். 

கார்ஹபத்ய அக்னி என்பது மேற்கு திசையில் இருக்கும் அக்னி; ஹோமம் செய்யும் போது மனைவி கார்ஹபத்ய அக்னியின் அருகில் அமர்ந்து கொள்ள வேண்டும்; 

ஆஹவனீய அக்னி என்பது கார்ஹபத்ய அக்னியிலிருந்து எடுக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்ட, ப்ரதான ஹோமம் செய்வதற்கான, கிழக்கு திசையில் இருக்கும் அக்னி; 

தக்ஷிணாக்னி என்பது தெற்கு திசையில் இருக்கும் அக்னி) ஹ்ருதயத்தில் ஆரோபணம் செய்து (இருப்பதாக வைத்து) என்னிடத்திலேயே நிலைநின்ற மனமுடையவனாகி, அக்னி ப்ரவேசம் செய்ய வேண்டும். 

யஜ்ஞாதி கர்மங்களுக்குப் பலனாக ஏற்படுபவைகளும், நரகம் போன்றவைகளுமான ஸ்வர்க்காதி லோகங்களில் நன்கு வைராக்யம் உண்டாகுமாயின், அப்பொழுது அக்னிகளை ஆரோபணம் செய்து (தன்னிடத்தில் இருப்பதாக வைத்து) ஸந்யாஸ ஆச்ரமத்தைப் பெறவேண்டும். ஸந்யாஸ ஆச்ரமத்தைப் பெற விரும்புகிறவன், முதலில் சாஸ்த்ரங்களில் சொல்லியபடி ப்ராஜாபத்ய இஷ்டியினால் என்னை ஆராதித்து, தன்னுடைய ஸொத்துக்களை எல்லாம் ருத்விக்குக்குக் (யாகம் செய்விப்பவருக்குக்) கொடுத்து, அக்னிகளைத் தன்னிடத்தில் ஆரோபணம் செய்து  (தன்னிடத்தில் இருப்பதாக வைத்து), என்னை ஒழிய மற்ற எதிலும் விருப்பமின்றி, எல்லாவற்றையும் துறந்து போக வேண்டும். 

தேவதைகள் ஸந்யாஸாச்ரமத்தைப் பெற விரும்புகிற அந்தணனிடத்தில் “இவன் ஸந்யாஸம் செய்து நம்மை எல்லாம் கடந்து, பரமபதத்தைப் பெறப்போகிறான். நாம் பார்த்துக் கொண்டிருக்கையில் நமக்குக் கிடைக்க அரிதான பதவியை இவன் பெறப்போகிறானல்லவா? இதை நாம் எவ்வாறு பொறுத்திருக்க முடியும்?” என்னும் பொறாமை கொண்டு, பெண்டிர், பிள்ளை, பந்துக்கள் இவர்கள் மூலமாய் அவனுக்கு விக்னம் (தடை, இடையூறு) செய்கிறார்கள். ஆகையால், இவ்வாச்ரமத்தைப் பெறுவது மிகவும் அரிதான விஷயம். 

பல விக்னங்கள் (தடை, இடையூறு)  நேரிலும் அவற்றையெல்லாம் உதறிவிட்டு, தைர்யத்துடன் ஸந்யாஸாச்ரமத்தைக் கைப்பற்ற வேண்டும். இவ்வாறு ஸந்யாஸாச்ரமத்தைக் கைப்பற்றின யதி (ஸன்யாஸி), கௌபீனம் (கோவணம்), அரை வஸ்த்ரம் இவைகளையே தரிக்க வேண்டும். இதற்கு மேல் தலைப்பாகை, போர்வை முதலியவை எவற்றையும் எடுத்துக் கொள்ளலாகாது. இந்த யதி (ஸன்யாஸி), தண்டம், பாத்ரம் இவைகளைத் தவிர ஸந்த்யஸிக்கும் பொழுது (எல்லாவற்றையும் துறந்து ஸன்யாஸ ஆச்ரமத்தை ஏற்றுக்கொள்ளும்போது) விட்டவைகளை எவற்றையும் மீண்டும் கைப்பற்றலாகாது. மற்றும், இவன் கண்ணால் பார்த்து ஜந்துக்கள் (உயிரினங்கள்) முதலியவை எவையும் இல்லையா என்று தெரிந்து கொண்டு, பரிசுத்தமான இடத்தில் பாதத்தை வைக்க வேண்டும். 

வஸ்த்ரத்தினால் வடிகட்டி, ஜந்துக்கள் (புழு, பூச்சிகள்) முதலியவையில்லாமல் பரிசுத்தமான ஜலத்தை பானம் செய்ய வேண்டும். பொய் முதலியவையில்லாமல் பரிசுத்தமான வாக்கைப் பேசவேண்டும். மனத்தினால் குண தோஷங்களை நன்றாக ஆராய்ந்து, பரிசுத்தமான கார்யத்தைச் செய்ய வேண்டும். பேசாதிருக்கை, வாக்குக்கு தண்டனை. காம்ய கர்மங்களைச் (ஒரு பலனைக் கருதி செய்யும் செயல்களை) செய்யாமை தேஹத்திற்கு (உடலிற்கு) தண்டனை. ப்ராணாயாமம் செய்தல் மனத்திற்கு தண்டனை. 

உத்தவரே! இம்மூன்று தண்டங்களும் (தண்டனை, குச்சி) எந்த யதிக்கு (ஸன்யாஸி) இல்லையோ, அவன் வெறுமெனே மூங்கில் கொம்புகளை ஏந்திக்கொண்ட மாத்ரத்தினால் யதியாக மாட்டான். நிந்தைக்கு (பழிக்கு) இடமான பதிதர் (தம் நெறியிலிருந்து தவறியவர்) முதலியவர்களைத் தவிர மற்ற நான்கு வர்ணத்தவர்களிடத்திலும் பிக்ஷை (பிச்சை) எடுக்கலாம். இந்த இடத்தில் இன்ன லாபம் கிடைக்குமென்னும் எண்ணத்துடன் முன்னதாக உத்தேசித்துக் கொண்டு போகலாகாது. அவ்வளவில் கிடைத்ததைக் கொண்டு ஸந்தோஷம் அடைய வேண்டும். (பூர்வ பூர்வ வர்ணங்களில் பிக்ஷை கிடைக்காது போமாயின், உத்தரோத்தர வர்ணங்களில் (ப்ராஹ்மணர், க்ஷத்ரியர், வைச்யர், சூத்ரர் என்ற வரிசையில்) பிக்ஷையெடுக்கலாமென்று  சிலர் சொல்லுகிறார்கள். ப்ராண (உயிருக்கு) ஆபத்தான ஸமயத்தில் தான் வேறு வர்ணங்களில் பிக்ஷையெடுப்பது சாஸ்த்ர ஸம்மதமேயன்றி, மற்ற ஸமயங்களில் ப்ராஹ்மண வர்ணந்தவிர மற்ற வர்ணங்களில் பிக்ஷை கூடாதென்றே சிலர் சொல்லுகிறார்கள்). 

க்ராமத்திற்கு வெளியில் ஜலாசயத்திற்கு (நீர்நிலைக்குச்) சென்று, அங்கு ஆசமனம் செய்து, மௌனியாய் எவனேனும் கேட்பானாயின் அவனுக்குப் பங்கிட்டுக் கொடுத்து, மிகுந்த அன்னத்தை மிகுத்தாமல் புசிக்க வேண்டும். வெளி இந்த்ரியங்களையும், உள் இந்த்ரியத்தையும் அடக்கிக் கொண்டு, எங்கும் பற்றில்லாமல் தனியனாகவே இப்பூமி முழுவதும் ஸஞ்சரிக்க வேண்டும். பரமாத்மாவினிடத்திலேயே குதூஹலமும் (மகிழ்ச்சி), ஸந்தோஷமுற்று எல்லாம் பரப்ரஹ்மரூபமே என்னும் பாவனையுடையவனாகி, எப்பொழுதும் தீரனாயிருக்க வேண்டும். ஜன ஸங்கமில்லாமல் (மனித ஸம்பந்தம் இல்லாமல்) நிர்ப்பயமுமாயிருக்கிற (பயமும் இல்லாத) இடத்தில் வாஸம் செய்து கொண்டு, என்னிடத்தில் பக்தியினால் நிர்மலமான (அழுக்கற்ற) மனமுடையவனுமாகி, ஜ்ஞானத்தையே வடிவாகவுடைய ஆத்மா எனக்கு நியாம்யமும் (நியமிக்கப்படுவதும்), தார்யமும் (தாங்கப்படுவதும்), சேஷமுமாய் (உடைமை, அடிமையாயும்) இருப்பதாகையால், என்னைக் காட்டிலும் பேதப்பட்டது (வேறானது) அன்று என்று அபேதமாக (என்னுடைய சரீரம் என்று) த்யானிக்க வேண்டும். 

இந்திரியங்களை அந்தந்த விஷயங்களில் போக விடுதல், ஸம்ஸார பந்தத்திற்குக் காரணமென்றும், இவைகளை அவ்விஷயங்களில் போக வொட்டாமல் அடக்குதல் மோக்ஷ ஹேது (காரணம்) என்றும் தத்வ த்ரயத்தினுடைய (அசேதனமான மூலப்ரக்ருதி, ஜீவாத்மா, ஈச்வரன் என்கிற மூன்று தத்வங்களின்) உண்மையின் ஆராய்ச்சியால் தன்னுடைய ஸம்ஸார பந்தத்திற்கும், அதினின்று தான் விடுபடுதற்கும் காரணத்தை ஆராய்ந்தறிய வேண்டும். ஆகையால், மனத்தோடு கூடிய ஜ்ஞானேந்திரியங்கள் ஐந்தையும் (மெய், வாய், கண், மூக்கு, செவி) அடக்கிக் கொண்டு, என்னிடத்திலேயே பக்தியுடையவனாகி, அற்பங்களான (தாழ்ந்தவைகளான) சப்தாதி விஷயங்களில் (உலக விஷயங்களில்) வைராக்யமுற்று, ஆத்மானுபவத்தினால் ஸுகத்தை அடைந்து, ஸஞ்சரிக்க வேண்டும். 

பட்டணங்கள், க்ராமங்கள், பசுக்கள் கட்டுமிடம், ஸாத்விகர்களின் ஸமூஹங்கள் இவ்விடங்களில் பிக்ஷை எடுத்துப் புசித்துக்கொண்டு, புண்ய தேசங்கள், புண்ய நதிகள், புண்யமான பர்வதங்கள், புண்யமான வனங்கள், புண்ய ஆச்ரமங்கள் இவைகள் அமைந்த பூமியில் ஸஞ்சரிக்க வேண்டும். பெரும்பாலும் வான ப்ரஸ்தர்களுடைய ஆச்ரமங்களில் பிக்ஷையெடுத்துப் புசிக்க வேண்டும். அவர்கள் சிலவ்ருத்தியினால் (உதிர்ந்த கதிர்களைப் பொருக்கி ஜீவிக்கையாகிற வ்ருத்தியினால்) ஜீவிப்பவர்களாகையால் அவர்களுடைய ஆஹாரம் பரிசுத்தமாயிருக்கும். அங்குச் சென்று, பிச்சையெடுத்துப் புசிப்பானாயின், அந்த ஆஹாரத்தினால் சீக்ரத்தில் மனத்தெளிவு உண்டாகப் பெற்று, மதிமயக்கம் தீர்ந்து, மோக்ஷஸித்தியைப் பெறுவான். (சப்தாதி விஷயங்களினின்று (உலக விஷயங்களிலிருந்து) எப்படி விரக்தனாக (ஈடுபாடற்றவனாக) முடியுமென்றால், சொல்லுகிறேன்; கேள்).

இதோ புலப்படுகிற சப்தாதி விஷயங்களை (உலக விஷயங்களை) எல்லாம், இது ஒரு வஸ்து என்றும் கூட நினைத்துப் பார்க்கலாகாது. ஏனென்றால், அவையெல்லாம் நச்வரங்கள் (அழியக்கூடியவை) அல்லவா? இவ்வாறே பரலோகங்களிலுள்ள சப்தாதி விஷயங்களில் மனப்பற்றை மாற்றிக் கொள்ள வேண்டும். இஹ (இந்த உலகத்தில்), பரலோகங்களிலுள்ள (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலகங்களில் உள்ள) விஷய ஸுகங்களைப் பெறுதற்காகச் செய்ய விரும்புகிற செயல்களினின்றும் மீளவேண்டும். இவ்வாறு விவேகத்தினால் சப்தாதி விஷயங்களில் விரக்தனாவான் (ஈடுபாடு அற்றவன்), கர்மேந்திரியங்கள், ஜ்ஞானேந்திரியங்கள், மனம், பஞ்சபூதங்கள் இவற்றின் ஸமுதாய ரூபமாயிருப்பதாகிய இந்த சரீரம் முழுவதும் ப்ரக்ருதியின் கார்யமாகையால், அசித்தே அன்றி சேதனனான ஆத்மாவாக மாட்டாது. 

ஆத்மா இதைக்காட்டிலும் விலக்ஷணன் (வேறுபட்டவன்). வேறுபட்டவனென்று நன்றாக ஊஹித்து நிச்சயித்துக்கொண்டு, பரமாத்மாவுக்கு உட்பட்ட அந்த ஆத்மாவின் ஸ்வரூபத்தை ஆராய்வதில் ஊக்கமுற்று, சரீரத்தில் ஆத்மாபிமானத்தைத் (இந்த உடலே ஆத்மா என்ற தவறான எண்ணத்தைத்) துறந்து, மீளவும் அதை ஆத்மாவென்று அபிமானிக்கலாகாது. ப்ரஹ்மசர்யம் முதலிய நான்கு ஆச்ரமங்களுக்குள் எந்த ஆச்ரமத்தில் இருப்பவர்களாயினும், வைராக்யம் அமைந்த ஜ்ஞான நிஷ்டையிலாவது, ஒரு ப்ரயோஜனத்தையும் எதிர்பாராத பக்தி நிஷ்டையிலாவது, நிலை நின்றிருப்பார்களாயின், அந்தந்த அடையாளங்களோடு கூடின ஆச்ரமங்களைத் துறந்து, விதி, நிஷேதங்களுக்கு (செய், செய்யாதே என்கிற கட்டளைகளுக்கு) உட்படாமல் நடக்கலாம். (ஸித்தோபாயமான பரமபுருஷனைப் பற்றினவனுக்குத் தான் செய்ய வேண்டுவதொன்றும் இல்லாமையால், அவன் விதி, நிஷேதங்களுக்கு (செய், செய்யாதே என்கிற கட்டளைகளுக்கு) உட்பட்டு ஒன்றும் செய்ய வேண்டிய அவச்யமில்லை.  

ஆயினும், சேஷபூதனான ஆத்மாவுக்கு, கைங்கர்யமே ஸ்வரூபமாகையால், பகவானுக்கு முகோல்லாஸ (திருவுள்ள உகப்புக்கு) ஹேதுவான (காரணமான) ஏதேனும் ஒன்றைச் செய்து கொண்டேயிருப்பான். விவேகம் உடையவனாயினும், ஒன்றுமறியாத சிறுவன் போல் மான, அவமானங்களைத் துறந்து விளையாடுபவன் போல் அபிநயித்துக் கொண்டிருக்க வேண்டும். எல்லாம் தெரிந்தவனாயிருந்தும், பித்தம் பிடித்தவன் போல் பேச வேண்டும். வேதாந்தங்களில் நன்கு நிலை நின்றவனாயினும், பசுவைப் போல் ஆஹார (உணவு), நித்ரா (உறக்கம்), பயங்களை ஒழிய மற்றொன்றையும் அறியாதவன் போல் நடக்க வேண்டும். 

வேதத்தின் பூர்வ பாகத்தில் மனம் செலுத்தலாகாது. வேதமார்க்கத்திற்கு இணங்காத ஆசாரங்களை விரும்பலாகாது. கேவல தர்க்கங்களால் (வேதத்திற்குப் புறம்பான ஆராய்ச்சி வாதங்களால்), வேதார்த்தங்களை அழிக்கலாகாது. நிஷ்ப்ரயோஜனமாய் (பலனின்றி) வாதம் செய்யும் கோஷ்டியில் நுழைந்து விவாதம் செய்யத் தொடங்கி, ஏதேனும் ஒரு பக்ஷதைப் பிடித்துக்கொண்டு வழக்காடலாகாது. தீரனாகி எந்த ஜனத்தினின்றும் பயப்படலாகாது. எந்த ஜனமும் பயமுறும்படி நடக்கலாகாது. எவனேனும் துர்ப்பாஷணங்களை (கெட்ட சொற்களைப்) பேசுவானாயின், அவற்றை எல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். எதையும் அவமதிக்கலாகாது. “ப்ருதிவி முதலிய பஞ்ச பூதங்களின் பரிணாமமான தேவ, மனுஷ்யாதி தேஹங்களிலுள்ள ஆத்மாக்களுக்கு அந்தராத்மாவாகி, அவர்களைக் காட்டிலும் விலக்ஷணனுமான (வேறானவனான) பரமபுருஷன் ஒருவனே. சந்த்ரன் ஒருவனே பலகுட நீர்களில் ப்ரதிபலிப்பது போல், அவனொருவனே பல ஆத்மாக்களுக்கும் அந்தராத்மாவாய் இருக்கிறான். ஸமஸ்த பூதங்களும் அவனொருவனையே ஆத்மாவாக உடையவை. ஆகையால், எந்த ப்ராணிக்கு அபகாரம் (தீங்கு) செய்யினும், அது அந்த ப்ராணியைச் சரீரமாகவுடைய பரமாத்மாவுக்கே அபகாரம் செய்ததாகும்” என்று நிச்சயித்துக்கொண்டு தன் தேஹ ஸௌக்யத்திற்காகப் பசுவைப் போல எந்த ப்ராணியிடத்திலும் வைரம் (பகைமை) வைத்துக் கொள்ளலாகாது. 

பசி எடுக்கும் காலங்களில், ஆஹாரம் கிடைக்காமற் போயினும் வருந்தலாகாது. தீரனாயிருக்க வேண்டும். ஒரு கால் ஆஹாரம் கிடைக்கினும், ஸந்தோஷப்படலாகாது. ஏனென்றால், ஆஹாரம் கிடைப்பதும், கிடையாததுமாகிய அவ்விரண்டும் தெய்வாதீனமல்லவா. ஆகையால், ஆஹாரம் கிடைக்கிலும், கிடைக்காமற் போயினும், தீரனாயிருக்கவேண்டும். (ஆனால் பிக்ஷையெடுக்கிற ப்ரயாஸமே (முயற்சியே) இல்லாதிருக்கலாமோ என்றால்; சொல்லுகிறேன்). 

ஆஹாரத்திற்காக யத்னம் (முயற்சி) செய்ய வேண்டியது ஆவச்யகம் (தேவை). ப்ராணன்களை (உயிரைத்) தரித்துக் கொண்டிருக்க வேண்டுமல்லவா? அதற்கு என்ன ப்ரயோஜனமென்றால், சரீரத்தில் (உடலில்)  ப்ராணன்கள் (உயிர்) இருந்தாலல்லவோ, தத்வங்களை ஆராய்ந்தறியலாம். தத்வங்களை அறிந்தாலல்லவோ, ஸம்ஸார பந்தத்தினின்று விடுபடலாம். ஆகையால், தத்வங்களை ஆராய்ந்து அறிவதற்காக ப்ராணன்களைத் தரித்துக் கொண்டிருக்க வேண்டும். ப்ராண தாரணத்திற்காக (உயிர் தரிப்பதற்காக) ஆஹாரம் தேடவேண்டும். ஒருகால், தான் ப்ரயத்னம் (முயற்சி) செய்யாமலே அன்னம் கிடைக்கில், அது நன்றாயிருப்பினும், நன்றாயிராமற் போயினும், அதின் குணாகுணங்களைப் பாராமல் புசிக்கவேண்டும். அவ்வாறே வஸ்த்ரம், படுக்கை இவைகளிலும் குணாகுணங்களைப் பாராமல் கிடைத்ததைக் கிடைத்தபடியே அனுபவிக்க வேண்டும்.

ஜ்ஞானியாயிருப்பவன், சௌசம் (தூய்மை), ஆசமனம், ஸ்னானம் (நீராடல்) இவைகளையும் மற்ற நியமங்களையும் சாஸ்த்ர சோதனைக்கு உட்பட்டுச் செய்யலாகாது. நிறைவாளனாகிய நான் சாஸ்த்ர விதிகளை லீலையினால் அனுஷ்டிப்பது போல், கைங்கர்யம் ஸ்வரூப அனுரூபம் (இயற்கையானது) என்னும் புத்தியுடன் செய்ய வேண்டும். இத்தகைய ஆசாரத்துடன் இருப்பானாயின், அவனுக்கு தேஹாத்ம ப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் – மனக்கலக்கம்), ஸ்வதந்தராத்மப்ரமம் (நாம் பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள் என்ற மனக்கலக்கம்) முதலிய விபரீத எண்ணங்கள் உண்டாகமாட்டாது. 

அவன் ஸர்வ காலமும் எல்லாவற்றையும், என்னைக் காட்டிலும் வேறுபட்டவை அன்று என்று பாவித்துக் கொண்டிருக்கிறானாகையால், அவனுக்கு அந்த விபரீத எண்ணங்கள் பறந்து போகின்றன. ஒருகால், அவை தொடர்ந்து வருமாயினும் தேஹாவஸானத்தில் (இந்த சரீர முடிவில்) ஜகத்தையெல்லாம் என்னுடைய உருவங்களாகவே பார்த்துக் கொண்டிருந்த அந்த பாவனை உண்டாகப் பெற்று, அதன் மஹிமையால் என்னை அடைகின்றான். (ஜகத்தெல்லாம் என்னுடைய உருவங்களேயென்னும், பாவனையுடையவனுக்கு தேஹாவஸானத்தில் (இந்த சரீர முடிவில்) தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் – மனக்கலக்கம்) முதலியவை எல்லாம் நிவர்த்திக்கின்றன. ஜீவ தசையில் (உயிருடன் இருக்கும்போது) ஒருகால் தொடர்ந்து வரினும், அவை என்னுடைய ப்ராப்திக்குத் தடை செய்பவையாகிறதில்லை). (இதுவரையில் உபாய அனுஷ்டானம் கை புகுந்தவன் (மோட்சத்திற்காக சரணாகதி செய்தவன்), தேஹாவஸானம் (இந்த சரீர முடிவு) வரையில் இருக்கவேண்டிய நிலைமையைச் சொன்னேன். இனி ஸ்வதர்மநிஷ்டன் (தன் தர்மத்தில் நிலை நின்றவன்), உபேயம் (அடையப்படும் பொருளான பரமாத்மா), உபாயம் (அவனை அடைய வழி) முதலியவற்றை அறிய விரும்புவானாயின், அவன் நடக்க வேண்டிய நிலைமையைச் சொல்லுகிறேன்; கேட்பாயாக). 

விவேகமுடையவன், துக்கத்தையே மேல் வரும் பலனாகவுடைய சப்தாதி விஷயங்களில் வெறுப்புற்று, என்னைப் பெறுதற்கு ஸாதனமான தர்மத்தை அறிய விரும்புவானாயின், பரப்ரஹ்மத்தின் ஸ்வரூப (இயற்கைத்தன்மை), ரூப (திவ்ய மங்கள விக்ரஹம்), குண, விபூதிகளை (ஆளுமை, சொத்து)  நன்றாக ஆராய்ந்தறிந்து, அவற்றையே மனனம் செய்து கொண்டிருக்கும் குருவை அடைய வேண்டும். பரப்ரஹ்ம ஸ்வரூபத்தையும், அதன் ப்ராப்திக்கு ஸாதனம் முதலியவற்றின் ஸ்வரூபங்களையும் அறியும் வரையில், ஈச்வரனே இவ்வாறு குருவாக உருவம் கொண்டு வந்திருக்கிறான் என்று குருவை என்னைக் காட்டிலும் வேறுபட்டவன் என்றே பாவித்து, இவனொரு மனுஷ்யனே என்னும் புத்தியால் வரும் அஸுயையை (பொறாமையைத்) துறந்து, அவன் உபதேசிக்கும் அர்த்தங்களெல்லாம் உண்மையே என்னும் ச்ரத்தையும், பக்தியும், ஆதரவும் உடையவனாகி, அக்குருவுக்குச் சுச்ரூஷை (பணிவிடை) செய்யவேண்டும். (இவ்வாறு ஸதாசார்ய (நற்குருவிற்கு) சுச்ரூஷையினால் (பணிவிடையால்)  ஜ்ஞான பக்தி வைராக்யங்களைப் பெறவேண்டும்.) 

மனம், செவி, வாய், கண், மூக்கு, உடல் என்னும் இவ்விந்த்ரியங்கள் ஆறையும் வெல்லாமல், சப்தாதி விஷயங்களில் (உலக விஷயங்களில்) மிகவும் அழுந்தின புத்தியுடையவனாகிச் சாஸ்த்ர அப்யாஸ, யோக அப்யாஸங்களால் (சாஸ்த்ரங்களைக் கற்றல், யோகப் பயிற்சி) விளையும் அறிவின்றி, கேவலமான தண்டம் (குச்சி) முதலிய ஆச்ரம லிங்கங்களால் (அடையாளங்களால்) எவன் ஜீவிக்கப் பார்க்கிறானோ, அவன் ஆத்மாவையும், ஆத்மாவுக்கு அந்தராத்மாவான என்னையும் வஞ்சித்தவனாவான். (ஆத்மா ஈச்வரனுக்குச் சேஷப்பட்டவன் (அடிமைப் பட்டவன்) என்னும் சேஷத்வ (அடிமை என்கிற) ஜ்ஞானம் இல்லாமையால், ஆத்மாவையும் தன்னை ஸ்வதந்த்ரனாக நினைக்கையால், என்னையும் அவன் வஞ்சித்தவனே). ஆனது பற்றியே அவன் பகவத் பக்தியாகிற தர்மத்தை அழித்தவன் ஆவான். மற்றும், பகவத் பக்தியில்லாமையால், பாபங்களெல்லாம் கழியப் பெறாமல், இஹலோக (இந்த உலக) ஸுகம், பரலோக (வேறு உலக) ஸுகம் ஆகிய இரண்டினின்றும் ப்ரஷ்டனாகிறான் (இழந்தவனாகிறான்). 

ஸந்யாஸ ஆச்ரமத்தில் இருப்பவனுக்கு, இந்த்ரிய நிக்ரஹம் (புலனடக்கம்), ப்ராணிகளுக்கு த்ரோஹம் (தீங்கு) செய்யாமை ஆகிய இவை இரண்டும் முக்யமான தர்மங்களாம். வான ப்ரஸ்தனுக்கு, சாஸ்த்ரங்களில் சொல்லியபடி சரீரத்தை ஒடுக்குகையாகிற தவமும், ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையை ஆராய்ந்தறிகையும் ஆகிய இவை இரண்டும், முக்யமான தர்மங்களாம். க்ருஹஸ்தனுக்கு (இல்லறத்தில் இருப்பவனுக்கு), ப்ராணிகளைப் பாதுகாக்கையும், பஞ்ச மஹாயஜ்ஞங்களை {(ப்ரஹ்ம யஜ்ஞ (வேதம் சொல்லுதல்), பித்ரு யஜ்ஞ (தர்ப்பணம்), தேவ யஜ்ஞ (ஹோமம்), பூத யஜ்ஞ (பறவை, விலங்குகளுக்கு பலியிடுதல்), நர யஜ்ஞ (விருந்தோம்பல்) என்பவை பஞ்சமஹாயஜ்ஞங்கள்} அனுஷ்டிக்கையும் ஆகிய இவை இரண்டும் முக்யமான தர்மங்களாம். ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்திலிருப்பவனுக்கு, ஆசார்யனைப் பணிகையே முக்யமான தர்மமாம். 

ப்ரஹ்மசர்யம் (ஆசைகளில் கட்டுப்பாடு), தவம், சௌசம் (தூய்மை), ஸந்தோஷம் (த்ருப்தி), ப்ராணிகளிடத்தில் நட்பு ஆகிய இவை முக்யமாயிருக்க வேண்டியவை. க்ருஹஸ்தனுக்கு, ப்ரஹ்மசர்யம் எப்படி ஸம்பவிக்குமென்று நினைக்க வேண்டாம். ருதுகாலம் தவிர மற்ற காலங்களில் ஸ்த்ரீகளைப் புணராதிருப்பானாயின், அதுவே க்ருஹஸ்தனுக்கு ப்ரஹ்மசர்யமாம். என்னைப் பணிவது, ஸமஸ்த (எல்லா) ஆச்ரமஸ்தர்களுக்கும் முக்யமான தர்மம். இவ்வாறு தத்தமக்கு ஏற்பட்ட வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டு, தேவதாந்த்ரங்களைப் பணிகையும், என்னிடத்தில் ப்ரயோஜனாந்தரங்களை (என்னைத் தவிர மற்ற பலன்களை) அபேக்ஷிக்கையும் (வேண்டுகையையும்) தவிர்த்து, ஸமஸ்த பூதங்களும் நானேயென்னும் பாவனையுடையவனாகி, எவன் என்னை என்றும் பணிகிறானோ, அவன் சீக்ரத்திலேயே என்னிடத்தில் பக்தியைப் பெறுவான். 

உத்தவரே! அவன் அந்த பக்தி வளர்ந்து, நிலை நிற்கப் பெற்று, அதனால் ஸமஸ்த பூதங்களுடைய ஸ்ருஷ்டி (படைப்பு), ப்ரளயங்களுக்கும் (அழிவு) காரணனும், ஸர்வ (எல்லாவற்றிற்கும்) காரணனும், மஹேச்வரனும் (எல்லோருக்கும் தலைவனும்), ஸ்வரூபத்தினாலும், குணங்களாலும் அளவிறந்தவனாகையால் பரப்ரஹ்மமென்று கூறப்படுபவனுமாகிய என்னை அடைகின்றான். இவ்வாறு தன்னுடைய வர்ணாச்ரமங்களுக்கு ஏற்பட்ட தர்மங்களை அனுஷ்டித்துக்கொண்டு வருவானாயின், மனம் பரிசுத்தமாகப் பெற்று, என்னுடைய ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ஸ்வபாவாதிகளை (குணங்களை) நன்றாக அறிந்து, சாஸ்த்ர ஜ்ஞானம், உபாஸன (த்யானம்) ஜ்ஞானம் இவை இரண்டும் அமைந்து, விரக்தனாகி (உலக விஷயங்களில் பற்று அற்றவனாகி) என்னை அடைகின்றான். 

வர்ணாச்ரமங்களிலிருப்பவர் அனுஷ்டிக்க வேண்டுமென்று நிரூபிக்கப்பட்ட ஆசாரம் (நடத்தை) என்னும் பெயருடைய இந்த தர்மம், என் விஷயமான பக்திக்கு அங்கமாயிருக்குமாயின், மோக்ஷத்தை நிறைவேற்றிக் கொடுப்பதாகி மேன்மை பெற்றிருக்கும். (வர்ணாச்ரம தர்மானுஷ்டானத்தினால் பக்தியோகத்தை வளர்த்திக்கொண்டு, அப்பக்தியினால் என்னைப் பெறுவான்). 

நல்லியற்கையுடையவரே! என்னுடைய பக்தன், தனக்கு ஏற்பட்ட வர்ணாச்ரமதர்மங்களால் எப்படி என்னைப் பெறுவானோ அதைச் சொல்லவேண்டுமென்று என்னைக் கேட்டீரல்லவா. அதைப்பற்றி விசதமாக (விரிவாக) மொழிந்தேன். 

பதினெட்டாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக