வெள்ளி, 8 அக்டோபர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 346

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - ஒன்பதாவது அத்தியாயம்

(மார்க்கண்டேயர் பகவானுடைய மாயையைக் காண வேண்டுமென்று விரும்ப, அவ்விருப்பத்தைப் பகவான் நிறைவேற்றுதல்)

ஸுதர் சொல்லுகிறார்:– ப்ருகு வம்சத்தை மேன்மைப்படுத்தும் மஹானுபாவரே! நரனை நண்பனாகவுடைய நாராயணன், மிகுந்த மதியுடைய மார்க்கண்டேயரால் இவ்வாறு நன்கு துதிக்கப் பெற்று, ஸந்தோஷம் அடைந்து, அவரைக் குறித்து மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:– ஓ, ஓ! மார்க்கண்டேயரே! நீர் மனவூக்கத்துடன் தவம், வேதமோதுதல், இந்த்ரிய நிக்ரஹம் (புலனடக்கம்) இவற்றைக் குறைவற அனுஷ்டித்து, என்னிடத்தில் அழிவில்லாத பக்தியைச் செய்ததனால் ஸித்தி பெற்றீர் (முழுமை அடைந்தீர்); ப்ரஹ்ம ரிஷிகளில் சிறந்தவரும், ஆகிவிட்டீர். நீர் ஒரு ப்ரயோஜனத்தையும் (பயனையும்) விரும்பாமல், நைஷ்டிக ப்ரஹ்மசர்ய (ப்ரஹ்மசர்யத்திலிருந்து வழுவாமல் நிலை நிற்கும்) வ்ரதத்தை அனுஷ்டித்ததற்கு நாங்கள் அனைவரும் ஸந்தோஷம் அடைந்தோம். உமக்கு நன்மை உண்டாகுக. வரம் கொடுக்கிறவர்களில் சிறந்த என்னிடத்தினின்று உமக்கிஷ்டமான வரத்தை வேண்டிக் கொள்வீராக.

மார்க்கண்டேய ரிஷி சொல்லுகிறார்:– தேவதைகளுக்கெல்லாம் தேவர்களான ப்ரஹ்மாதிகளுக்கும் நியாமகனே (நியமிப்பவனே)! தன்னையே சரணமாக அடைந்தவர்களின் வருத்தங்களைப் போக்கும் தன்மையனே! ஆச்ரிதர்களை (அடியார்களைக்) கைவிடாதவனே! உனக்கு ஜயம் உண்டாகுக. நீ எனக்குப் புலப்பட்டாயே (தெரிந்தாயே) இந்த வரமே எனக்குப் போதும். (இதற்கு மேல் நான் விரும்ப வேண்டியது ஒன்றும் இல்லை. ப்ரஹ்மதேவன் முதலியவர்களும் கூட மனத்தை யோகத்தினால் பரிசுத்தம் செய்து எவனுடைய அழகான பாதார விந்தங்களைக் காண வேண்டுமென்று விரும்புகிறார்களோ, அத்தகைய நீ என் கண்களுக்குப் புலப்படாய். இதற்கு மேற்பட்ட வரம் என்ன இருக்கின்றது?) ஆயினும், உன்னுடைய ஆச்சர்ய சக்தியைக் காண விரும்புகிறேன். ப்ரஹ்மாதி லோக பாலர்களோடு கூடிய இவ்வுலகமெல்லாம் உன்னுடைய ஆச்சர்ய சக்தி ரூபமான மாயையினால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட (படைக்கப்பட்ட) தேவர், திர்யக்கு (விலங்கு), மனுஷ்யர், ஸ்தாவரம் (மரம்,செடி) என்னும் பேதத்தை (வேற்றுமையைக்) காண்கின்றது. அத்தகைய மாயையைக் காண விரும்புகிறேன். அதை எனக்குக் காட்டுவாயாக.

ஸுதர் சொல்லுகிறார்:- முனிவரே! இவ்வாறு மார்க்கண்டேய மஹர்ஷியால் மொழிந்து பூஜிக்கப் பெற்ற பகவான், மந்தஹாஸத்துடன் (புன்சிரிப்புடன்), “அப்படியே ஆகட்டும்” என்று அனுக்ரஹித்து (அருள் புரிந்து, அந்த ஸர்வேச்வரன் பதரிகாச்ரமத்திற்குச் சென்றான். பிறகு, அம்மார்க்கண்டேய மஹர்ஷி, பகவானுடைய மாயையைக் காண்கையாகிற அவ்விஷயத்தையே நினைத்துக் கொண்டு, தன்னுடைய ஆச்ரமத்திலேயே முன் போல் வஸித்துக் கொண்டு, அக்னி, ஸூர்யன், சந்த்ரன், ஜலம், பூமி, வாயு, ஆகாசம், ஹ்ருதயம் இவற்றிலும், பசு, ப்ராஹ்மணன் முதலிய மற்ற எல்லா பொருள்களிலும் ஸ்ரீஹரியை த்யானித்து, கேவலம் மனோமயமான பூஜா த்ரவ்யங்களால் (மானஸ உபசாரங்களால்) அவனைப் பூஜித்துக் கொண்டிருந்தார்; ஒருகால், பக்தியின் பெருக்கு மேலிடப் பெற்று, அந்தப் பூஜையையும் மறந்திருந்தார். 

ப்ருகு ச்ரேஷ்டரே! இவ்வாறு புஷ்யபத்ரா நதியின் கரையில் அம்முனிவர் பரமபுருஷனை உபாஸித்துக் கொண்டிருக்கையில், ப்ரஹ்ம ரிஷியே! ஒருகால் ஸந்த்யா ஸமயத்தில் பெருங்காற்று உண்டாயிற்று. பயங்கரமான சப்தத்தை விளைத்துக் கொண்டு வீசுகின்ற அந்தக் காற்றைத் தொடர்ந்து, பயங்கரமான மேகங்கள் உண்டாயின. அவை மின்னல்களோடு கூடி, உரக்கக் கர்ஜனைகள் (சப்தம்) செய்து கொண்டு, வண்டியின் இருசு (அச்சு) அளவு பருத்த மழைத் தாரைகளை முழுவதும் பெய்தன. 

பிறகு, நான்கு திசைகளிலிருக்கின்ற நான்கு ஸமுத்ரங்களும் பயங்கரமான முதலைகளோடு கூடி, காற்று வேகத்தினால் மேன்மேலும் கிளம்பி வருகின்ற அலைகளால் பூமண்டலத்தை நாற்புறத்திலும் விழுங்குபவை போல் வியாபித்துக் கொண்டு, மிகவும் பயங்கரமான நீர்ச்சுழிகளும், கம்பீரமான கோஷங்களும் உடையவைகளாகிப் புலப்பட்டன. பொறுக்க முடியாதபடி மிகவும் உஷ்ணமான ஸூர்ய கிரணங்களாலும், மின்னல்களாலும், ஆகாயத்தைக் கடந்து வளர்ந்து வருகின்ற ஜல ப்ரவாஹங்களாலும் (வெள்ளங்களாலும்), தேவர், திர்யக்கு (விலங்கு), மனுஷ்யர், ஸ்தாவரம் (மரம், செடி) என்று நான்குவிதமான ஜகத்தெல்லாம் உள்ளும் புறமும் வருத்தமுற்றிருப்பதையும், பூமியெல்லாம் ஜலத்தில் மூழ்கியிருப்பதையும் கண்டு, அம்முனிவர் மனந்தளர்ந்து பயந்தார். 

மேகங்கள் ஓயாமல் மழையைப் பெய்து, ஸமுத்ரத்தை நிறைத்துக் கரைபுரண்டு வெள்ளமோடச் செய்தன. காற்று ஜலத்தைச் சுழற்றி வேகமாக முழுவதும் நிரம்பியோடச் செய்தது. அக்காற்று வேகத்தினால் பெருப்பெரிய அலைகள் கிளம்பின. இவ்வாறு பயங்கரமான ஸமுத்ரம், அம்முனிவர் பார்த்துக் கொண்டேயிருக்கையில், த்வீபங்களோடும் (தீவு), வர்ஷங்களோடும் (பெரும் நிலம்), பர்வதங்களோடும் (மலைகள்) கூடிய பூமண்டலத்தையெல்லாம் மறைத்து விட்டது. 

பூமி, அந்தரிக்ஷம் (வாயு மண்டலம்), ஸ்வர்க்கம், நக்ஷத்ர கணம் இவைகளோடு கூடிய மூன்று லோகங்களும், திசைகளுடன் ஜலத்தினால் மூடப்பட்டதாயிற்று. அப்பொழுது அம்முனிவர், ஒருவர் மாத்ரமே மிகுந்திருந்தார். அவர், ஜடைகள் (முடி) அவிழ்ந்து அலையப் பெற்று, மூடன் போலவும், குருடன் போலவும், ஒன்றும் தெரியாமல் திரிந்து கொண்டிருந்தார். பசி, தாஹங்கள் தலையெடுக்கப் பெற்ற அம்முனிவர், அத்தகைய மகரங்களாலும் (முதலை, கடல் மீன்), திமிங்கிலங்களாலும் பீடிக்கப்பட்டு, அலைகளாலும், காற்றாலும் அடியுண்டு, ச்ரமப்பட்டு வருத்தமுற்று, கரையில்லாத பெரிய அந்தகாரத்தில் (இருட்டில்) அகப்பட்டு, ஆகாயம், பூமி இவைகளை அறிய முடியாதிருந்தார். 

அவர், ஓரிடத்தில் பெரிய பள்ளத்தில் விழுவதும், ஓரிடத்தில் பெருப்பெரிய அலைகளால் மோதப்படுவதும், ஓரிடத்தில் ஒன்றோடொன்று அடித்துக் கொள்கின்ற ஜலஜந்துக்களால் (நீர் வாழ் பிராணிகளால்) பக்ஷிக்கப்படுவதுமாய் (உண்ணப்படுவதுமாய்) இருந்தார். மற்றும், அவர் ஓரிடத்தில் மோஹத்தையும் (மயக்கத்தையும்), ஓரிடத்தில் சோகத்தையும், ஓரிடத்தில் துக்கத்தையும், ஓரிடத்தில் பயத்தையும் அடைந்து கொண்டு, ஓரிடத்தில் வியாதி முதலியவைகளால் பீடிக்கப்பட்டு, மரணம் அடைவது போலவும் இருந்தார். 

ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மாயையினால் பறியுண்ட மனமுடைய அம்முனிவர், இவ்வாறு ஜலப்ரவாஹத்தில் (நீர் வெள்ளத்தில்) சுழன்று கொண்டிருக்கையில், பற்பல பதினாயிரம் பதினாயிரம் பல கோடி நூறாயிரம் வர்ஷங்கள் கடந்தன. (நெடுங்காலம் கடந்தது) இவ்வாறு அந்த வெள்ளத்தில் சுற்றிக் கொண்டேயிருக்கிற அம்முனிவர், ஒருகால் பூமியின் முசுப்பு (மேடு) போல் உன்னதமாயிருக்கின்ற ஓரிடத்தில் காய்களோடும், தளிர்களோடும் கூடி அழகியதான ஓர் சிறிய ஆலமரத்தைக் கண்டார். 

அந்த மரத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள கிளையில் ஒரு தளிரில் சயனித்துக் கொண்டு, தன்னொளியால் இருட்டையெல்லாம் விழுங்குவது போன்ற ஓர் சிசுவை (குழந்தையைக்) கண்டார். அக்குழந்தை, சிறந்த மரகத ரத்னம் போல் கறுத்து, தாமரை மலர் போல் அழகிய முகமும், சங்கம் போன்ற கண்டமும் (கழுத்தும்), அகன்ற மார்பும், அழகிய மூக்கும், அழகான புருவங்களும் அமைந்து, மூச்சுக் காற்றினால் அசைகின்ற முன்னெற்றி மயிர்களால் விளக்கமுற்று, சங்கத்தின் உட்புறம் போன்ற சோபை அமைந்த காதுகளில் மாதுளம்பூ போன்ற ஆபரணங்களை அணிந்து, பவழம் போன்ற அதரத்தின் (உதட்டின்) காந்தியால் சிறிது சில பரிசுத்தமான மந்தஸ்மிதமும் (புன்சிரிப்பும்), பத்மகர்ப்பம் (தாமரை) போல் சிவந்த கடைக்கண்களும், மனத்திற்கினிய சிரிப்போடு கூடிய கண்ணோக்கமும், மூச்சுக்காற்றுக்களால் சலிக்கின்ற திரிவலிகளால் (மூன்று கோடுகள்) சஞ்சலமாயிருக்கின்ற ஆழ்ந்த கொப்பூழுடன் (தொப்புள்) கூடி விளங்குகின்ற அரசிலை போன்ற திருவுதரமும் (வயிறு) உடையதாகி, அழகிய விரல்கள் அமைந்த கை, கால் தாமரை மலர் போன்ற பாதத்தை இழுத்து, அதன் கட்டை விரலை வாயில் வைத்துச் சும்பனம் செய்து கொண்டிருந்தது (சுவைத்துக் கொண்டிருந்தது).

ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! அதைக் கண்டு, அம்முனிவர் வியப்புற்றார். அவர், அந்தக் குழந்தையைக் கண்ட மாத்ரத்தினால் ச்ரமமெல்லாம் தீர்ந்து, ஹ்ருதய கமலமும் (இதயத் தாமரையும்), தாமரைக் கண்களும் மலரப் பெற்று, அக்குழந்தையின் அற்புதமான உருவத்தினால், “இப்படியும் கூட ஒன்றுண்டோ?” என்று சங்கித்து (ஸந்தேஹப்பட்டு), உடம்பெல்லாம் மயிர்க் கூச்சம் உண்டாகப் பெற்று, அதை நன்றாகப் பார்க்க வேண்டும் என்று அதன் அருகாமையில் சென்றார். 

பார்க்கவரே! அப்பொழுது, அம்முனிவர் அக்குழந்தையின் மூச்சுக்காற்றினால் இழுக்கப்பட்டு, மசகம் (கொசு) போல் அதன் வாயில் பிரவேசித்தார். அதற்குள் நுழைந்த அம்முனிவர், அங்கும் முன்பு தான் வெளியிற் கண்ட பிரபஞ்சம் (உலகம்) போலவே இருக்கின்ற பிரபஞ்சத்தை எல்லாம் கண்டு, மிகவும் வியப்புற்று மயங்கினார்; அந்தரிக்ஷம் (வாயு மண்டலம்), த்யாவா (ஆகாசம்), பூமி, நக்ஷத்ர கணங்கள், பர்வதங்கள், ஸமுத்ரங்கள், த்வீபங்கள், பாரதாதி வர்ஷங்கள், திசைகள், அஸுரர்கள், வனங்கள், தேசங்கள், நதிகள், புரங்கள், ரத்னம் முதலியன விளையுமிடங்கள், க்ருஷி (விவசாயம்) செய்து ஜீவிக்கிறவர் வஸிக்கும் க்ராமங்கள், இடைச்சேரிகள், ஆச்ரமங்கள், ப்ராஹ்மணாதி வர்ணங்கள், அவற்றின் வ்ருத்திகள் ஆகிய இவையெல்லாவற்றையும் கண்டார். மற்றும், ஆகாசம் முதலிய பஞ்சமஹா பூதங்களையும், அப்பஞ்சபூதங்களின் பரிணாமங்களான (மாறுபாடுகளான) தேவ, மனுஷ்யாதி தேஹங்களையும், நானா(பல) விதமான யுகங்கள், கல்பங்கள் இவைகளை விளைக்கின்ற காலத்தையும் கண்டார். 

பலபடச் சொல்லியென்? அது, இது என்று வியவஹாரங்களுக்கு (வழக்கிற்குக்) காரணமாகி, அறியாத மூடர்களுக்கு நித்யம் போல் தோற்றுகிற வஸ்து எதுவெதுஉண்டோ, அதையெல்லாம் கண்டார். அன்றியும், ஹிமவத் பர்வதம் (இமாலய மலை), அங்குள்ள புஷ்பவஹை என்னும் அந்நதி, எங்கு தான் நரநாராயண ரிஷிகளைக் கண்டாரோ, அத்தகைய தன்னுடைய ஆச்ரமம் ஆகிய இவற்றையும் கண்டார். 

இவ்வாறு ப்ரபஞ்சத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிற அம்முனிவர், திடீரென்று அச்சிசுவின் மூச்சுக் காற்றினால் வெளியில் இழுக்கப்பட்டு, முன் போலவே ப்ரளய ஆர்ணவத்தில் (ஊழிக்கடலில்) வந்து விழுந்தார். அவர், முன் போலவே பூமியின் முசுப்பு (மேடு) போல் உன்னதமான ஓரிடத்தில் முளைத்திருக்கின்ற ஆலமரத்தையும், அதன் தளிரில் சயனித்துக் கொண்டிருக்கின்ற சிசுவையும் கண்டு, ப்ரேமமும் (அன்பும்), அம்ருதம் போன்ற புன்னகையும் அமைந்த அந்தச் சிசுவின் கடைக்கண்ணால் கடாக்ஷிக்கப்பட்டார். 

அவர், பாலக ஸ்வரூபனான அந்த அதோக்ஷஜனைக் கண்களால் கண்டு, ஹ்ருதயத்தினால் அணைத்து, மீளவும் பாஹ்யமாக (வெளியில்) அணைக்க விரும்பி, மிகுந்த ஸந்தோஷத்துடன் அருகாமையில் சென்றார். சிந்திக்க முடியாத பலவகையான ஜ்ஞான சக்த்யாதி குணகணங்களுடையவனும், ஆச்சர்ய சக்தியோக நிர்வாஹகனும் (நியமிப்பவனும்), யோகிகளுடைய ஹ்ருதய குஹைகளில் அமைந்திருப்பவனும், ஸர்வாந்தராத்மாவுமாகிய ஒன்றான அப்பரமபுருஷன் அவ்வளவில் அந்தர்தானம் அடைந்தான் (மறைந்தான்). ரிஷியின் விருப்பம் (அணைக்க வேண்டுமென்னும்) விருப்பம் ஏழையின் விருப்பம் போல் பயனற்றதாயிற்று.

ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! அவன் மறைந்தவுடனே, ஜகத்தையெல்லாம் வியாபித்திருந்த மஹாஜலமும் மறைந்தது. அந்த க்ஷணமே, அம்முனிவருடைய அருகாமையிலிருந்த ஆலமரமும் மறைந்தது. அம்முனிவரோவென்றால், முன்போலவே தன்னுடைய ஆச்ரமத்தில் இருந்தார்.

ஒன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக