வியாழன், 1 ஜூலை, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 317

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – பதினோறாவது அத்தியாயம்

(பத்தர், முத்தர், ஸாதுக்கள் இவர்களின் லக்ஷணத்தையும், பக்தியின் ஸ்வரூபத்தையும், பகவான் உத்தவனுக்குக் கூறுதல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஸத்வாதி (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற) குணங்கள், அவற்றின் மூலமாய் விளையும் புண்ய, பாப கர்மங்கள் ஆகிய இவைகளால் கட்டுண்டவன் என்றும், அவற்றினின்று விடுபட்டவன் என்றும், வழங்கி வருதல் எனக்கு வாஸ்தவமாகவே (உண்மையாகவே) கிடையாது. புண்ய, பாப கர்மங்கள் ப்ரக்ருதியின் மூலமாய் விளைபவையாகையாலும், அந்த ப்ரக்ருதி எனக்கு உட்பட்டதாகையாலும், அதற்கு நியாமகனான (நியமிப்பவனான) எனக்குக் குண மூலமான கர்ம பந்தமும், அதினின்று விடுபடுகையாகிற மோக்ஷமும் கிடையாது. குண, கர்ம வச்யனான (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற குணங்களுக்கும், முன் வினைகளுக்கும் உட்பட்டவனான) ஜீவனுக்கே அவை உள்ளவை. எனக்கு உட்பட்டிருப்பதாகிய மாயையினால் ஜீவனுக்குச் சோகம் (துயரம்), மோஹம் (மயக்கம்), ஸுகம் (இன்பம்), துக்கம் (துன்பம்), தேஹ ஸம்பந்தம் (உடல் தொடர்பு) ஆகிய இவை உண்டாகின்றன. 

ஜீவனுக்கு ஸ்வப்னத்தில் (கனவில்) சரீர (உடல்) ஸம்பந்தமும் (தொடர்பும்), அதைப்பற்றி வருகிற ஸுக, துக்காதிகளும் அநித்யமாய் (நிலையற்றவையாய்) இருப்பது போல், அவனுக்குள்ள ஸம்ஸார பந்தமும் (உலகியல் வாழ்வாகிற கட்டும்) அநித்யமே (நிலையற்றவையே) அன்றி நித்யம் (நிலையானது) அன்று. (ஆத்ம ஸ்வரூபம் (ஜீவாத்மா) நித்யமாயினும் (அழிவற்றதாயினும்), அதைத் தொடர்ந்த ஸம்ஸாரமும் (உலகியல் வாழ்வும்) நித்யம் (அழிவற்றது) என்று ப்ரமிக்கலாகாது. நித்யனான (அழிவற்றவனான) இவ்வாத்மாவுக்கே ஸ்வப்னத்தில் (கனவில்) விளைகிற தேஹ ஸம்பந்தமும் (உடல் தொடர்பும்), அதைப்பற்றி வருகிற ஸுக, துக்காதிகளும் அநித்யம் (நிலையற்றவை) என்பது வெளிச்சமே அல்லவா? அவ்வாறே, ஸம்ஸார பந்தமும் (உலகியல் வாழ்வும்) அநித்யமே (அழியக்கூடியதே) அன்றி நித்யம் (நிலையானது) அன்று. 

ஸம்ஸாரம் (உலகியல் வாழ்வு) அனாதி (ஆரம்பம் அற்றது) என்றும், அது அநித்யம் (நிலையற்றது) என்றும் சொல்லுவது எவ்வாறு பொருந்துமென்றால், ஆதி (முதல்), அந்தம் (முடிவு) இல்லாத வஸ்துவே நித்யமாமன்றி, ஆதி (முதல்) இல்லாமல் அந்தம் (முடிவு) உடைய வஸ்து நித்யம் (நிலையானது) ஆகாது. ஆதி (ஆரம்பம்) இல்லாமை மாத்ரமே நித்யமாயிருக்கைக்கு ஹேது (கரணம்) ஆகாது. “ஸ்வப்னத்தில் (கனவில்) விளைகிற தேஹ (உடல்) ஸம்பந்தமும் (தொடர்பும்), அதைப்பற்றி வருகிற ஸுக, துக்காதிகளும் பொய்யல்லவா? அவ்வாறே, ஸம்ஸாரமும் பொய்யே” என்று ப்ரமிக்கலாகாது. ஸ்வப்னத்தில் (கனவில்) விளைகிற தேஹ ஸம்பந்தாதிகள் பொய்யன்று. அவையும் ஜீவனுடைய புண்ய பாப கர்மங்களுக்குத் தகுந்தபடி ஈச்வரனால் படைக்கப்பட்டவைகளே. அவ்வாறே ஸம்ஸாரமும் உண்மையே அன்றி பொய்யன்று. 

“ஆத்மாவுக்கு அது இயற்கையில் ஏற்பட்டதன்று; வந்தேறி (வந்து சேர்ந்தது)” என்பதைப்பற்றி அதை உண்மையன்று என்று சொல்லுவது மாத்ரமே ஒழிய, அது பொய்யன்று. அநித்யம் என்பதற்கே ஸ்வப்னத்தை (கனவை) நிதர்சனமாக (உதாரணமாகக்) காட்டினோமன்றிப் பொய் என்பதற்கு நிதர்சனமாக (உதாரணமாகக்) காட்டவில்லை. ஸ்வப்ன (கனவு) அனுபவமும் உண்மையே என்று நிரூபித்தோமாகையால், அதைப்போல் இதுவும் பொய் என்பதற்கு இடமேயில்லை). “ஆனால் அந்த ஸம்ஸார பந்தத்திற்குக் காரணமென்ன? அது நிவர்த்திப்பதற்கு (விலகுவதற்குக்) காரணமென்” என்றால், சொல்லுகிறேன்; கேள். 

உத்தவனே! ப்ராணிகள் ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து, பரமாத்மாவான என்னை உபாஸிக்கையாகிற வித்யையும் (அறிவும்), ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையை அறியாமையாகிற அவித்யையும் (அறியாமையும்), ஆகிய இவ்விரண்டும் என்னுடைய சரீரம் போல் என் அதீனமாய் (உட்பட்டு) இருப்பவை. வித்யை, அவித்யை ஆகிய அவ்விரண்டும் ஸம்ஸார மோக்ஷங்களை விளைப்பவை. வித்யையினால் (பரமாத்மாவை த்யானம் செய்து, த்யானத்தில் நேராகப் பார்த்து அறிவதால்) ஸம்ஸார (உலகியல் வாழ்வாகிற கட்டிலிருந்து) மோக்ஷமும் (விடுதலையும்), அவித்யையினால் (அறியாமையால்) ஸம்ஸார பந்தமும் (உலகியல் வாழ்வாகிற கட்டும்) உண்டாகின்றன. மற்றும், அவை என்னுடைய ஸங்கல்பத்தினால் ஏற்பட்டவை. 

ஆழ்ந்த மதியுடையவனே! தேவ, மனுஷ்யாதி சரீரங்களைப் பெற்று, அவற்றை நியமித்துக்கொண்டு, அவற்றில் முக்யனாயிருப்பவனும், எனக்குச் சரீரமாகி என்னுடைய அம்சமாயிருப்பவனுமாகிய ஜீவனுக்கே, ஸம்ஸார பந்த மோக்ஷங்கள் உள்ளவை. அவற்றில் ஸம்ஸார பந்தம் (உலகியல் வாழ்வாகிற கட்டு அவித்யையினால் (அறியாமையினால்) உண்டாகின்றது. அது அனாதி (ஆரம்பம் அற்றது). (என்று முதல் அது ஜீவனுக்கு உண்டாயிற்று என்று நிரூபித்துச் சொல்ல முடியாது. அது அனாதி (ஆரம்பம் அற்றது) ஆயினும், அதற்கு வித்யையினால் (பரமாத்ம அறிவினால்) முடிவு உண்டாகின்றது). ஸம்ஸார பந்தத்தில் (உலகியல் வாழ்வாகிற கட்டில்) அகப்பட்ட ஜீவனுக்கும், நித்ய நிர்தோஷனான (குறை அற்றவனான) பரமாத்மாவுக்கும் உள்ள பேதத்தைச் (வேற்றுமையைச்) சொல்லுகிறேன்; கேள். 

அப்பனே! அவ்விருவரும் ஒரே சரீரத்தில் இருப்பவர்; ஆயினும், ஒரே காலத்தில் கர்ம பலன்களான ஸுக, துக்காதிகளை அனுபவிக்கையும், அவற்றை அனுபவிக்காமையும், அறிவும், அறிவின்மையும் ஆகிய இவை முதலிய பலவகையான விருத்த (எதிர் தட்டான) தர்மங்களுக்கு இடமாயிருப்பவர்கள். (ஜீவன், தேவ, மனுஷ்யாதி சரீரங்களில் இருந்து கொண்டு தான் செய்த புண்ய பாப கர்மங்களின் பலனான ஸுக, துக்கங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். இயற்கையில் ஜ்ஞான ஸ்வரூபனாகையால், எல்லாவற்றை அறியவல்லனாயினும், கர்ம பந்தத்தினால் மலர்வதும், குவிவதுமான அறிவுடையவனாகி, எல்லாவற்றையும் அறியும் திறமையற்றிருப்பான். 

ஜீவன், கண்ணால் கண்டதையும், காதால் கேட்டதையும், மூக்கால் மோந்ததையும், நாக்கால் நக்கினதையும், உடலால் ஊர்ந்ததையும் அறிவானன்றி, மற்றதை அறியமாட்டான். கண்ணால் கண்டது முதலியவற்றிலும் நேற்றுக் கண்டது, கேட்டது முதலியவற்றை இன்று மறந்து நினைக்க முடியாதிருப்பதும் உண்டு. கண் முதலிய இந்திரியங்களின் திறமை குறையுமாயின், அவற்றாலும் அறியவல்லனாக மாட்டான். ஈச்வரனோவென்றால், எக்காலத்திலும், எவ்விடத்திலும், எதையும் எதிர்பாராமல் எல்லாவற்றையும் அறியும் திறமையுடையவன். 

ஜீவனோடு கூட ஒரே சரீரத்தில் இருந்தும், அவனைப்போல் கர்ம பலனான ஸுக, துக்கங்களை அனுபவிக்கும் தன்மையனல்லன். அவை அவனைத் தீண்டவும் வல்லவையாக மாட்டாது. ஜீவாத்ம, பரமாத்மாக்களாகிய இவ்விருவரும், இரண்டு பக்ஷிகள் போன்றவர்; அழகிய சிறகுகள் அமைந்தவர்கள். ஜீவாத்மாவுக்குத் தர்ம, அதர்மங்கள் இரண்டுமே இரண்டு சிறகுகள். பரமாத்மாவுக்குத் தோஷங்கள் என்றும் தீண்டப்பெறாமையாகிற அபஹதபாப்மத்வமும் (பாப ஸம்பந்தம் அற்றமையும்), ஸமஸ்த கல்யாண குணங்களும் நிறைந்திருக்கையாகிற கல்யாண குணாகரத்வமும் (நற்குணங்கள் அமையப்பெற்றிருப்பதும்) ஆகிய இவையிரண்டுமே சிறகுகள். 

இவ்விரண்டு பக்ஷிகளும், ஒன்றோடொன்று ஒத்திருப்பவை (ப்ரயத்னம் (முயற்சி) முதலிய அழகிய குணங்களால் ஒத்திருப்பவை). ஒன்று உபகாரம் செய்வதும், மற்றொன்று உபகாரம் பெறுவதுமாகி, ஸ்னேஹம் உடையவைகளாயிருக்கும்; சரீரமாகிற ஒரு வ்ருக்ஷத்தில் (மரத்தில்) ஹ்ருதய கமலமாகிற கூண்டை வாஸஸ்தானமாக உடையவை. 

அவ்வாறு அவ்விரண்டு பக்ஷிகளும் ஓரிடத்தில் சேர்ந்திருப்பதற்கு உலகத்தில் புலப்படும் காரணங்கள் எவையுமின்றி, கேவலம் தற்செயலாயிருக்கும். அவ்விரண்டில், ஜீவாத்மாவாகிற ஒரு பக்ஷி, ப்ரக்ருதியின் பரிணாமங்களான சப்தாதி விஷயங்களாகிற ஆஹாரத்தைப் புசித்துக் கொண்டிருக்கும். பரமாத்மாவாகிற மற்றொரு பக்ஷியோவென்றால், அத்தகைய ஆஹாரம் எதுவுமின்றி ஸர்வஜ்ஞத்வம் (எல்லாவற்றையும் அறியும் தன்மை), ஸர்வ சக்தித்வம் (படைத்தல், காத்தல், அழித்தல் முதலியவற்றைச் செய்யும் திறமை) முதலிய தன் பலத்தில் சிறிதும் குறையாமை மாத்ரமே அல்லாமல், அப்பலம் மேன்மேலும் வளரப்பெற்று, மிகவும் விளக்கமுற்றிருக்கும். 

ஸர்வஜ்ஞனும் (எல்லாவற்றையும் அறிபவனும்), கர்மபலனான ஸுக, துக்கங்கள் தீண்டப் பெறாதவனுமாகிய பரமாத்மா, தன்னையும் தன்னைக் காட்டிலும் வேறுபட்ட ப்ரக்ருதி புருஷர்களையும், உள்ளபடி ஸாக்ஷாத்கரிக்கின்றான் (அறிகிறான்). கர்ம பலன்களை அனுபவிக்கின்ற ஜீவனோவென்றால், தன்னையாவது, தன்னைக் காட்டிலும் விலக்ஷணனும் (வேறானவனும்), தன்னை என்றும் பிரியாமல் தனக்கு நண்பனுமாயிருக்கின்ற பரமாத்மாவையாவது அறிகிறதில்லை. 

பின்னையோவென்றால், தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமித்துத் திரிகின்றான். ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையை அறியாத ஜீவனை, நித்ய பத்தன் (எப்பொழுதும் உலகியல் வாழ்வில் கட்டுண்டவன்) என்றும், இயற்கையாகவே என்றும் மாறாமல் ஜ்ஞான ஸ்வரூபனாயிருக்கின்ற பரமாத்மாவை நித்ய முக்தன் (எப்பொழுதும் உலகியல் வாழ்விலிருந்து விலகியவன்) என்றும் அறிவாயாக. 

ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையை அறிந்த ஜீவன், தேவ, மனுஷ்யாதி தேஹங்களில் இருப்பினும், அவற்றில் ஆத்மாபிமானம் கொள்ளாமல் (உடலை ஆத்மா என்று எண்ணாமல்), அத்தேஹங்களில் இராதவன் போலவே இருப்பான். தேஹாத்மாபிமானம் (உடலையே ஆத்மா என்ற மனக்கலக்கம்) உடைய ஜீவனோவென்றால், கர்ப்ப வாஸம், மஹாப்ரளயம் முதலிய ஸமயங்களில் தேஹம் (உடல்) நிறைவேறாதிருக்கும் பொழுது, தேஹத்தில் (உடலில்) இராதிருப்பினும் தேஹங்களில் இருப்பது போலவே பத்தனாயிருப்பான். 

ஸ்வப்னம் (கனவு) காண்கிறவன், ஸ்வப்னத்தில் (கனவில்) அனுபவிக்கிற தேஹங்களில் ஆத்மாபிமானம் (அந்த உடலே ஆத்மா என்ற எண்ணம்) கொண்டு, அவற்றில் அமைந்திருப்பது போல, தேஹாத்மாபிமானம் (உடலையே ஆத்மா என்ற மனக்கலக்கம்) உள்ள ஜீவன், தேஹத்தில் இல்லாத சில ஸமயங்களிலும் தேஹத்தில் இருப்பது போலவே பத்தனாய் (கட்டுண்டு) இருப்பான். 

தேஹத்தையும் (உடலையும்), தேஹத்தை (உடலைக்) காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) ஆத்மாவையும், அவ்வாத்மாவைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) பரமாத்மாவையும் எவன் உள்ளபடி அறிவானோ, அவன் ப்ரக்ருதியின் பரிணாமங்களான இந்த்ரியங்களால் அனுகூலங்களும் (ஸாதகமானவைகளும், இசைந்தவைகளும்), ப்ரதிகூலங்களுமாகி (எதிரிடையானவைகளும்) ப்ரக்ருதியின் பரிணாமங்களுமான சப்தாதி விஷயங்களை அனுபவிக்கினும், “நான் செய்கிறேன். நான் அனுபவிக்கிறேன்” என்னும் அஹங்காரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டான். 

பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ய, பாப கர்மத்தின்படி ஏற்படுகின்ற தேவ, மனுஷ்யாதி சரீரங்களில் ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களென்கிற ப்ராக்ருத குணங்களுக்கு உட்பட்ட இந்திரியங்களால் ஸம்பவிக்கின்ற அத்தகைய புண்ய, பாப கர்மத்தில் பலனை அனுபவிக்கும் பொருட்டு இருப்பினும், அந்த தேஹம் பூர்வ ஜன்ம கர்மத்தினால் ஏற்பட்டது என்பதையும், தான் அதில் இருப்பதையும் அறியாமல், தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) ஆத்மாவை அறியாமல், தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமித்து, நான் செய்கிறேனென்றும், நான் அனுபவிக்கிறேனென்றும், தன்னைக் கர்த்தாவாகவும் (செயல் புரிபவனாகவும்), போக்தாவாகவும் ( செயலின் பலனை அனுபவிப்பவனாகவும்)  நினைத்து, மேன்மேலும் தேஹ ஸம்பந்தத்தைப் பெறுகின்றான்; (ஆனது பற்றியே அவன் நித்ய பத்தன் (எப்பொழுதும் உலகியல் வாழ்வில் கட்டுண்டவன்) என்று கூறப்படுகின்றான்.) 

இவ்வாறு தேஹாத்மாபிமானமுள்ள (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம் உடைய) ஜீவனுடைய நடத்தையையும், அதனால் அவன் அனுபவிக்கும் பலனையும் ஆராய்ந்து, தேஹத்திலும், தேஹானுபந்திகளிடத்திலும் (உடலோடு தொடர்பு உடையவர்களிடத்திலும்) விரக்தி உண்டாகப் பெற்று, படுத்தல், இருத்தல், வியாபித்தல், தரித்தல், ஸ்னானம் செய்தல், பார்த்தல், தொடுதல், மோருதல், புசித்தல், கேட்டல் முதலிய எல்லாச் செயல்களையும் உரியபடி நடத்திக் கொண்டிருந்த போதிலும், ஸத்வாதி (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற குணங்களின் பரிணாமங்களான இந்திரியங்களால் சப்தம் முதலிய அந்தந்த விஷயங்களை அனுபவித்துக் கொண்டு வருகிற இந்திரியங்கள் ஈச்வர ஆயத்தமான (பகவானுக்கு உட்பட்ட) ஸத்தையையும் (இருப்பையும்), ப்ரவ்ருத்தியையும் (செயலையும்) உடையவை. செயலும், போகமும் அவைகளைச் சேர்ந்தவைகளே என்னும் நினைவுடையவனாகிய அறிஞன், அவ்வாறு ஸம்ஸார பந்தத்தை அடைய மாட்டான். 

எங்கும் வியாபித்திருக்கிற (பரவி இருக்கிற) ஆகாயமும், தன் கிரணங்களால் எங்கும் வியாபிக்கிற (பரவி இருக்கிற) ஸூர்யனும், எங்கும் வீசுகிற காற்றும், ஆங்காங்குள்ள தோஷங்கள் தீண்டப் பெறாதிருப்பது போல், ஜீவன் தேவ, மனுஷ்யாதி தேஹங்களில் (உடல்களில்) இருப்பினும், அந்த தேஹங்களை (உடல்களைப்) பற்றி வரும் ஸுக, துக்காதிகளால் மனக்கலக்கம் இல்லாதிருப்பானாயின், அந்த தேஹங்களில் இல்லாதவன் போலவே ஆவான். (அவனுக்கு மேன்மேலும் ஸம்ஸார பந்தம் உண்டாகாது.) மற்றும், இவ்வறிஞன், தேஹாதிகளில் பற்றில்லாமையால், கூரான நிபுண புத்தியினால் (தேர்ந்த, நுட்பமான அறிவினால்) ஸம்சயங்களை (ஸந்தேஹங்களை) எல்லாம் அறுத்து (ஆத்மா தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனா (வேறானவனா)? அன்றா? – வேறானவனே. ஆத்மா ஸ்வதந்தரனா (பகவானது கட்டளைக்கு உட்படாது, தன்னிச்சையாகச் செயல்படும் வல்லமை உடையவனா)? அல்லது ஈச்வரனுக்குப் பரதந்தரனா (உட்பட்டவனா)? – பகவானுடைய கட்டளைக்கு உட்பட்டவனே. ஜீவனே ஈச்வரனா? அல்லது வேறுபட்டவனா? - பகவானுக்கு உட்பட்ட, பகவானை விட வேறானவன். என்னும் இவை முதலிய ஸம்சயங்களை (ஸந்தேஹங்களை) எல்லாம் விவேக புத்தியினால் அறுத்து, ஸ்வப்னத்தினின்று (கனவிலிருந்து) எழுந்தவன் ஸ்வப்னத்தில் (கனவில்) அனுபவித்த வஸ்துகளின் அறிவுகளைத் துறப்பது போல, “நான் தேவன். நான் மனுஷ்யன்” என்னும் இவை முதலிய பேத புத்திகளைத் துறக்கின்றான். 

எவன் ப்ராணாதிகளின் வியாபாரங்களில் “இதைப் புசிக்கவேண்டும். இதைப் பார்க்க வேண்டும். இதைச் சம்பாதிக்க வேண்டும். இதைத் துறக்க வேண்டும்” என்னும் இவை முதலிய ஸங்கல்பங்கள் அற்றிருக்கிறானோ, அவன் தேஹத்தில் இருப்பினும், அத்தேஹ குணங்களால் விடுபட்டவன் என்று தெரிந்து கொள்ளலாம். 

கொடுந்தன்மையுடைய துஷ்டர்கள், தேஹத்தைப் பீடிக்கினும், எவனேனும் ஒருவன் ஒருகால் ப்ரீதியோடு ஸத்காரம் (நன்மை) செய்யினும், எவன் அவற்றால் அதிகமாய் மனம் கலங்காது இருக்கிறானோ, அவனே அறிஞன் என்று தெரிந்து கொள்ளலாம். ஒருவன் நல்லது செய்யினும், நல்லது சொல்லினும், அவனைப் புகழாமலும், ஒருவன் கெட்டது செய்யினும், கெட்டது சொல்லினும், அவனைப் பழிக்காமலும், மான அவமானங்களின்றி அவ்விரண்டையும் துல்யமாகப் (ஸமமாகப்) பார்க்கும் தன்மையன் முனிவனாவான். மற்றும், ஆத்மானுபவத்தினால் ஸந்தோஷமுற்று, நல்லதும், கெட்டதுமான லௌகிக (உலக) வியாபாரத்தைச் செய்வதும், நல்லதும் கெட்டதுமான லௌகிக (உலக) வார்த்தைகளைப் பேசுவதும், அவற்றை நெஞ்சில் நினைப்பதும் செய்யமாட்டான். 

பின்னையோ என்றால், பரம புருஷனை த்யானித்துக் கொண்டு, இந்த நிலைமையுடன் (தேஹத்திலிருப்பினும் தேஹத்தில் இல்லாதவன் போலவே இருக்கை முதலிய கீழ்ச்சொன்ன நிலைமையுடன்) மூடன்போல் திரிந்து கொண்டிருப்பான். ப்ரக்ருதி பரிணாமமான தேஹத்தில் இருப்பினும், அந்த தேஹத்திலிருப்பைக் கடந்திருக்கையாவது, படுத்தல், இருத்தல், புசித்தல், முதலிய வியாபாரங்களற்றிருக்கை என்றால், அதுவன்று. 

பின்னையோ என்றால், அஹங்காரம் (கர்வம்), ராகம் (விருப்பு), த்வேஷம் (வெறுப்பு) முதலியன அற்றிருக்கையும், உபகாரம் (உதவி, நன்மை), அபகாரம் (தீங்கு) முதலியவற்றில் துல்யமாய் (ஸமமாய்) இருக்கையும், பொன் கட்டி, மண்கட்டி முதலியவற்றில் “இது இஷ்டம் (விரும்புவது). இது அனிஷ்டம் (வேண்டாதது)” என்னும் புத்தி அற்று இருக்கையும், ஆகிய இவையேயாமென்று இவ்வளவால் நிரூபிக்கப்பட்டது. வேதங்களை ஓதுவது, ஓதுவிப்பது முதலியன செய்து, அவற்றின் கரையை அறிந்தவனாயினும், பரப்ரஹ்ம விஷயமான ஸமாதி வரையிலுமுள்ள ஜ்ஞானத்தில் நிலைபெறானாயின், அவனுடைய ச்ரமமெல்லாம் நிஷ்ப்பலமேயாம் (பலன் அற்றவையே). 

கன்று போட்டு வெகு நாளானமையால் கறக்காத பசுவைப் பாதுகாப்பவனுடைய ப்ரமம் (மனக்கலக்கம்) எப்படி நிஷ்ப்பலமோ (பலனற்றதோ), அப்படியே ப்ரஹ்ம உபாஸன (பரம்பொருளை த்யானித்து உண்டான) ஜ்ஞானமில்லாமல் கேவல சாஸ்த்ர ஜ்ஞானம் (புத்தக அறிவு) உடையவன் பட்ட பரிச்ரமங்கள் (உழைப்பு) எல்லாம் நிஷ்ப்பலமேயாம் (பலனற்றவையே). 

ஓ உத்தவனே! மற்றும், பால் கறந்து மரத்த பசுவையும், காமமில்லாத பார்யையையும் (மனைவியையும்), காமம் இருப்பினும் பரபுருஷனைப் புணரும் துர்ப்புத்தியுடைய (கெட்ட எண்ணம் உடைய) பார்யையையும் (மனைவியையும்), கர்மாதீனமாய் (புண்ய, பாப வினைகட்கு உட்பட்ட), க்ஷணந்தோறும் (ஒவ்வொரு நொடியும்) துக்கத்திற்கிடமான தேஹத்தையும், இஹத்திலாவது (இந்த உலகத்திலாவது), பரத்திலாவது (வேறு உலகத்திலாவது) ஒரு ப்ரயோஜனமுமில்லாமல் கேவலம் துர்ப்புத்தியனான புதல்வனையும், ஸத்பாத்ரங்களில் (தானம் பெறுவதற்குத் தகுதியானவர்களுக்கு) தானம் செய்யாத பணத்தையும், என்னை (பகவானை) எடுத்துரைக்காத வாக்கையும், எவன் பாதுகாத்துக் கொண்டிருக்கிறானோ, அவன் மேன்மேலும் துக்கத்தை அனுபவிப்பானன்றி, ஒருகாலும் ஸுகத்தை அனுபவிக்கமாட்டான். 

உத்தவனே! இந்த ஜகத்தைப் படைப்பதும், பாதுகாப்பதும், அழிப்பதுமாகிய பரிசுத்தமான என் சரித்ரத்தை, எந்த வாக்கு உரையாதோ, மற்றும், என்னுடைய லீலாவதாரங்களில் ஜகத்திற்கு மிகவும் ப்ரியமான ராம, க்ருஷ்ணாதி அவதாரங்களின் ஜன்மாதி சரித்ரங்களை எந்த வாக்கு உட்கொள்ளாதிருக்குமோ, மற்றும் ராம, க்ருஷ்ணாதி லீலாவதாரங்களில் என்னால் ஆதரிக்கப்பட்டவர்களும், எனக்கு மிகவும் அன்பர்களுமாகிய என் பக்தர்களின் ஜன்ம கர்மங்களை எந்த வாக்கு நிரூபித்துச் சொல்லாதோ, அத்தகைய நிஷ்ப்பலமான (பலனற்ற) வாக்கை மதியுடையவன் தரித்துக் கொண்டிருக்கலாகாது. 

இவ்வாறு ஆராய்ந்து ஜீவாத்மாவினிடத்தில் தேவ, மனுஷ்யாதி பேதங்கள் உண்டென்னும் ப்ரமத்தைத் (மனக்கலக்கத்தைத்) துறந்து (ஜீவாத்மா தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்) என்று தெரிந்து கொண்டு) ரஜஸ், தமோ குணங்கள் அற்று, ஸாத்விகமான ஆஹாரம் முதலியவற்றால் ஸத்வ குணம் தலையெடுக்கப்பெற்ற மனத்தை, ஸமஸ்த சேதனாசேதனங்களுக்கும் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களுக்கும்) அந்தராத்மாவாகிய என்னிடத்தில் நிலை நிறுத்தி லௌகிக (உலக) வியாபாரங்களினின்று மீள வேண்டும். 

பரப்ரஹ்மமென்று கூறப்படுகிற என்னிடத்தில் நிலைநிறுத்த முடியாது போமாயின், அப்பொழுது வர்ணாச்ரமங்களுக்கு ஏற்பட்ட கர்மங்களை எல்லாம் ஸர்வாந்தராத்மாவான பரமாத்மாவினால் தூண்டப்பட்ட தேஹமும், இந்திரியங்களும் நடத்துகின்றன அன்றி இதில் எனக்கு ஸம்பந்தமில்லை என்னும் புத்தியுடன் அவற்றின் பலன்களை விரும்பாமல் நடத்திக்கொண்டு வரவேண்டும். மற்றும், ஜகத்திற்கெல்லாம் மிகுந்த மங்களத்தை விளைப்பவைகளும், கேட்பவர்களுக்கும், சொல்லுபவர்களுக்கும் சுத்தியை விளைப்பவைகளுமாகிய என் கதைகளை ச்ரத்தையுடன் கேட்பதும், பாடுவதும், என்னுடைய ராம, க்ருஷ்ணாதி லீலாவதாரங்களை நினைப்பதும், அந்த அவதாரங்களில் நான் செய்த செயல்களை அனுகரிப்பதும், தர்மம், காமம், அர்த்தம் ஆகிய இவைகளை எனக்காகவே அனுஸரிப்பதும் செய்து கொண்டு, என்னையே ப்ராப்யனும் (அடையப்பட வேண்டியவனும்), ப்ராபகனுமாக (அடைவதற்கு வழியாகவும்) நினைத்திருப்பானாயின், உத்தவனே! அவன் ஸர்வ காரணனான என்னிடத்தில் நிலை நின்ற பக்தியைப் பெறுவான். 

(தர்மத்தைப் பரமபுருஷனுக்காகவே அனுஷ்டிக்கையாவது, அவனுடைய முகமலர்த்தியின் மூலமாய் மோக்ஷத்தில் போய் முடிய வேண்டும் என்னும் எண்ணத்துடன் அனுஷ்டிக்கையே. காமத்தைப் பரமபுருஷனுக்காகவே அனுஷ்டிக்கையாவது, அவன் சூடிக் களைந்த பூ மாலை, பூசி மிகுந்த சந்தனம், உடுத்துக் களைந்த பீதக வாடை அணிந்து, களைந்த ஆபரணம், அமுது செய்த ப்ரஸாதம் முதலியவற்றை உபயோகிக்கையே. அர்த்தத்தைப் பரம புருஷனுக்காகவே அனுஷ்டிக்கையாவது, அவனுடைய ஆராதனத்திற்காகவே உபயோகிக்கை)

ஸத் புருஷர்களோடு ஸஹவாஸம் (தொடர்பு) செய்வானாயின், கீழ்ச் சொன்ன வழிகளெல்லாம் தானே குதிரும் (ஏற்படும்). அவ்வழியால் என்னிடத்தில் பக்தியைப் பெறுவான். அத்தகைய பக்தியுடன் என்னையே பணிந்து வருவானாயின், என்னுடைய ஸ்தானத்தை அனாயாஸமாகப் (எளிதாகப்) பெறுவான். இவ்வாறு பெரியோர்கள் நிச்சயித்திருக்கிறார்கள்.

உத்தவன் சொல்லுகிறான்:- உத்தமச்லோகனே! ப்ரபூ! ஸாது எத்தகையனென்று நீ அபிப்ராயப்பட்டிருக்கின்றய்? ஸத் புருஷர்கள் ப்ரீதியுடன் அனுஷ்டிக்கிற பக்தி எத்தகையதாயின் உன்னிடத்தில் உபயோகப்படும்? (உலகத்தில் அவரவர் அபிப்ராயத்தின் படி ஸாதுக்கள் பலவாறாக ஏற்பட்டிருக்கிறார்கள். ஆகையால் ஸாது எப்படிப்பட்டவனென்று உன்னுடைய அபிப்ராயம். அவ்வாறே பக்தியும் பலவாறாயிருக்கின்றது. ஆகையால் பக்தி எத்தகையதென்று உன்னுடைய அபிப்ராயம். நான் உன்னையே சரணம் அடைந்திருக்கின்றேன். உன்னை வணங்கி வேண்டுகிறேன். நான் உன்னிடத்தில் மிகுந்த அனுராகம் (அன்பு) உடையவன். 

நீ ப்ரக்ருதி புருஷர்களுக்கு நியாமகன் (நியமிப்பவன்). ஆகையால் ஜ்ஞானமாவது, கர்மமாவது ஏதேது உளதோ, அதெல்லாம் உன் அதீனமே (உனக்கு உட்பட்டதே). ஜ்ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் ஆகிய இவ்விரண்டு மார்க்கங்களும் உனக்கே தெரியுமன்றி, உன்னை ஒழிய மற்றெவனும் அவற்றை உபதேசிக்க வல்லனல்லன். நீ உலகங்களுக்கெல்லாம் நியாமகன் (நியமிப்பவன்). அவற்றைப் பாதுகாப்பவனும் நீயே. ஆகையால் என்னை அனுக்ரஹித்து, இதை எனக்குச் சொல்லுவாயாக. 

நீ ஸ்வரூபத்தினாலும், குணங்களாலும் அளவற்ற மஹிமையுடையவன்; சேதனா சேதனங்களில் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களில்) வியாபித்திருப்பினும், அவற்றின் தோஷங்கள் தன் மேல் தீண்டப்பெறாமல் ஆகாயம் போல் மிகவும் நிர்மலனாய் (அழுக்கற்று) இருப்பவன். நீ அளவில்லாமல் கொடுக்கும் தன்மையனாகையாலும், சரீரத்தில் ஆத்மாவுடன் அமைந்திருக்கையாலும், இந்த ப்ரபஞ்சம் உண்டாவதற்கு முன்னமே ஸித்தனாய் இருக்கையாலும், உன்னை ஒழிந்த மற்றதெல்லாம் பெண்டிர்கள் என்னலாம்படி பரதந்தரமாய் (உனக்கு உட்பட்டவையாய்) நீ ஒருவனே ஆண் பிள்ளையாய் இருக்கின்றாய் ஆகையாலும், புருஷனென்று கூறப்படுகின்றாய். 

நீ சேதனா சேதனங்கள் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்கள்) என்கிற இருவகைப்பட்ட ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டு, அதைக் காட்டிலும் மேலாயிருப்பவன். ஷாட்குண்ய பூர்ணனே (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனே)! நீ ஸாதுக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, கேவலம் உன்னுடைய இச்சையினால் பலவிதமான ராம, க்ருஷ்ணாதி உருவங்களையும், ப்ரத்யும்னன், அநிருத்தாதி உருவங்களையும் ஏற்றுக் கொண்டு, அவதரித்திருக்கின்றாய். ஆகையால், நீ இதைச் சொல்லுவது யுக்தமே (ஸரியே).

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தன்னுடைய ப்ரயோஜனத்தை எதிர்பாராமல் பிறனுடைய துக்கத்தைப் பொறாதிருக்கை, அதைப் போக்க வேண்டுமென்னும் விருப்பம், எந்த ப்ராணிக்கும் த்ரோஹம் செய்யாமை, சீத (குளிர்), உஷ்ண (சூடு), ஸுக, துக்காதிகளைப் பொறுக்கும் தன்மை, ஸத்யம் தவறாமை, த்வேஷம் (பகைமை), அஸூயை (பொறாமை) முதலிய தோஷங்கள் தீண்டப் பெறாத மனமுடையனாயிருக்கை, ஸர்வர்க்கும் (எல்லோருக்கும்) உபகாரம் (உதவி) செய்கை, காமங்களால் மனம் கலங்காமை, இந்திரியங்களின் அடக்கம், சித்தம் மெதுவாயிருக்கை, உள்ளும், புறமும் பரிசுத்தனாயிருக்கை, வேறு ப்ரயோஜனங்களை விரும்பாமை, லௌகிக (உலக) வியாபாரங்கள் எவற்றையும் செய்யாமை, த்ருஷ்ட (நாம் பார்த்து அனுபவிக்கக்கூடிய), அத்ருஷ்ட (நம் கண்ணுக்குப் புலப்படாத, ஸ்வர்க்கம் முதலிய) பலன்களில் விருப்பமில்லாமை, மிதமாகப் புசிக்கை, மன அடக்கம், சித்தம் நிலை நின்றிருக்கை, என்னையே ரக்ஷகனாகவும் (காப்பாற்றுபவனாகவும்), உபாயமாகவும் (அடைவதற்கு வழியாகவும்) பற்றியிருக்கை, சுபாச்ரயம் (நன்மை அளிப்பதும், த்யானத்திற்கு ஏற்றதும்) என்று கூறப்படுகிற என் திவ்ய மங்கள விக்ரஹத்தை த்யானம் செய்கை, மனவூக்கமற்றிராமை, தன்னுடைய அபிப்ராயம் பிறர்க்குத் தெரியாதபடி கம்பீரனாயிருக்கை, ஆபத்காலங்களில் தைர்யம் சோராது (குன்றாது) இருக்கை, பசி, தாஹம், சோகம் (துக்கம்), மோஹம் (மயக்கம்), ஜரை (கிழத்தனம்), ம்ருத்யு (மரணம்) என்னும் ஆறு விகாரங்களையும் வென்றிருக்கை, தன் தேஹத்தினுடைய ஸத்காரத்தை (உடலை வளர்ப்பதை) ஆசைப்படாமை, பிறர்க்கு ஸத்காரம் (நன்மை) செய்கை, பிறர்க்கு ஹித (நன்மையை) உபதேசம் செய்யும் (போதிக்கும்) திறமை, வஞ்சனை செய்யாமை, எப்பொழுதும் தன் ப்ரயோஜனத்தை எதிர்பாராமல் மன இரக்கத்துடனே நடக்கும் தன்மை, சேதன, அசேதன, ஈச்வரன் என்கிற மூன்று தத்வங்களின் உண்மையை உணர்கை ஆகிய இக்குணங்களெல்லாம் அமைந்து, வேதங்களின் மூலமாய் நான் உபதேசித்த இத்தகைய குணங்களையும், இவற்றிற்கு நேரே விருத்தங்களான (எதிர்தட்டான) தோஷங்களையும் நன்றாக ஆராய்ந்தறிந்து, தன் வர்ணாச்ரமங்களுக்கு ஏற்பட்டிருக்கிற தர்மங்களை எல்லாம் துறந்து, எவன் என்னையே உபாயமாகவும் (அடைவதற்கு வழியாகவும்), உபேயமாகவும் (அடையப்படவேண்டிய பொருளாகவும்) உறுதியாக நினைத்துப் பணிகிறானோ, அவன் ஸாதுக்களில் சிறந்தவனாவான். 

மற்றும், நான் எத்தகைய ஸ்வரூபம் (இயற்கைத் தன்மை) உடையவனோ, எத்தகைய ஸ்வபாவம் (குணங்கள்) உடையவனோ, எத்தகைய விபூதி (ஆளுமை, சொத்து) உடையவனோ, அதை எல்லாம் அடிக்கடி விசாரித்து நன்றாகத் தெரிந்து கொண்டு, ப்ரயோஜனாந்தரம் (பகவானைத் தவிர வேறு பலன்),  உபாயாந்தரம் (பகவானை அடைய, அவனைத் தவிர வேறு வழி), தேவதாந்தரம் (பகவானைத் தவிர வேறு தேவதைகள்) இவை முதலியவற்றில் விருப்பமின்றி, எவர்கள் என்னையே பணிகின்றார்களோ, அவர்கள் என் பக்தர்களில் சிறந்தவர்களென்று என்னால் கொண்டாடப்பட்டவர்கள். இவ்வாறு ஸத்புருஷர்களின் லக்ஷணத்தை மொழிந்தேன். இனி, அந்த ஸத்புருஷர்களுடைய ஸஹவாஸத்தினால் (தொடர்பினால்) அப்யஸிக்க வேண்டிய சில குணங்களைச் சொல்லுகிறேன்; கேள். அவை பக்தியோகத்தை மேன்மேலும் வளர்ப்பவை.) 

என்னுடைய அர்ச்சா விக்ரஹங்களையும், என் பக்தர்களையும் காண்கை, ஸ்பர்சிக்கை, ஆராதிக்கை, கால் பிடித்தல் முதலிய சுச்ரூஷை (பணிவிடை) செய்கை, ஸ்தோத்ரம் செய்கை, நமஸ்கரிக்கை, அர்ச்சாரூபியான என்னுடைய குணங்களையும், என் செயல்களையும், என் பக்தர் குணங்களையும், அவரது செயல்களையும் கீர்த்தனம் செய்கை, என் கதைகளைக் கேட்பதிலும், என்னை த்யானம் செய்வதிலும் ஈடுபாடு உற்று இருக்கை, தான் ஸம்பாதித்ததை எல்லாம் எனக்கும், என் பக்தர்களுக்கும் உபயோகப்படுத்துகை, ஸ்வபாவ ஸித்தமான தாஸ்யத்தை (நாம் பகவானுக்கே அடிமை என்பதை) அனுஸந்தித்து (உணர்ந்து) ஆத்ம ஸமர்ப்பணம் (பகவானான ஸ்ரீமந்நாராயணனின் திருவடிகளில் தன்னையும் (ஆத்மாவையும்), ஆத்மாவைக் காக்கும் பொறுப்பையும், அதன் பலனான பகவத் கைங்கர்யத்தையும் அர்ப்பணிக்கை) செய்கை, கேட்கிறவர்களுக்கு என்னுடைய அவதார சரித்ரங்களைக் கூறுதல், ஸ்ரீஜயந்தி முதலிய என்னுடைய அவதார தினங்களில் உத்ஸவம் செய்து அவற்றைக் கொண்டாடுகை, பாட்டு, கூத்து, வாத்யம், கோஷ்டி இவைகளுடன் எனது ஆலயங்களில் உத்ஸவம் செய்கை, திவ்ய தேசங்களுக்குப் போகை, வர்ஷா காலமாகிய நான்கு மாதங்களைச் சேர்ந்த ஏகாதசி முதலிய தினங்களில் விசேஷமாகப் பூஜை செய்கை, பஞ்சராத்ர சாஸ்தரங்களில் விதிக்கப்பட்ட சிறப்புடைய பஞ்ச ஸம்ஸ்காரங்களை (சங்கு சக்ர இலச்சினை, ஊர்த்வ புண்ட்ரம், தாச நாமம், மந்த்ர உபதேசம், பகவானை திருவராதனம் செய்யும் முறை என்கிற ஐந்து புனிதப்படுத்தும் சடங்கினைப்) பெறுகை, ஏகாதசி உபவாஸம் (உண்ணா நோன்பு) முதலிய எனக்கு இஷ்டமான வ்ரதங்களை அனுஷ்டிக்கை, என்னுடைய அர்ச்சா விக்ரஹங்களை ஸ்தாபிப்பதில் ப்ரீதி, சக்தி உளதாயின் தானே என்னுடைய அர்ச்சா விக்ரஹங்களை ஸ்தாபித்தல், தனக்குச் சக்தியில்லாத பக்ஷத்தில், பிறருடன் கலந்தாவது ஸ்தாபிக்க முயற்சி செய்தல், தேவாலயங்களில் உள்ளடங்கிய உத்யானங்களையும் (தோட்டங்களையும்), அவற்றிற்கு ஸமீபங்களில் இருக்க வேண்டிய உத்யானங்களையும், பூப்பறிக்கை முதலிய விளையாடல்களுக்குரிய ஆக்ரீடங்கள் (விளையாட்டிற்கான) என்கிற பூந்தோட்டங்களையும், தேவாலயங்களைச் சுற்றியிருக்க வேண்டிய புரங்களையும், அவற்றில் இருக்க வேண்டிய வீடுகளையும், நிர்மாணம் செய்வதில் முயற்சி செய்தல், தூசி போக விளக்குதல், கோமயம் முதலியவற்றால் மெழுகுதல், ஜலந்தெளித்தல், பலவாறாகக் கோலமிடுதல், இவ்வாறு தாஸன் போல் கபடமில்லாமல் என்னுடைய ஆலயங்களுக்கு அலங்காரம் செய்தல், துரஹங்காரம் (வீண் கர்வம்) இல்லாமை, வஞ்சனை செய்யாமை, தான் செய்த தர்மத்தைச் சொல்லாமை, தானாவது, பிறராவது எனக்காக ஏற்றின திருவிளக்கைத் தன் கார்யத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளாமை ஆகிய இவை எல்லாம் ஸத்புருஷர்களுடைய ஸஹவாஸத்தினால் விளைய வேண்டிய குணங்கள். 

இவை மேன்மேலும் பக்தியை வளர்க்கும். உலகத்தில் ஏதேது அழகிய வஸ்துவோ, ஏதேது தனக்கு மிகவும் ப்ரியமான வஸ்துவோ, அவற்றை எல்லாம் எனக்கு நிவேதனம் செய்ய (அர்ப்பணிக்க) வேண்டும். இப்படி செய்வானாயின், அது அழிவில்லாத பலனை விளைப்பதாம்.

மங்கள ஸ்வபாவமுடையவனே! ஸூர்யன், அக்னி, ப்ராஹ்மணன், பசுக்கள், வைஷ்ணவன், ஆகாயம், காற்று, ஜலம், பூமி, ஆத்மா, ஸமஸ்த பூதங்கள் ஆகிய இந்தப் பதினொன்றும் என்னைப் பூஜிப்பதற்குரிய இடங்களாம். 

ஸூர்ய மண்டலத்தில் வேத மந்திரங்களாலும், அக்னியில் சரு (அக்னியில் ஹோமம் செய்யும் அன்னம்), புரோடாசம் (அக்னியில் ஹோமம் செய்யும் வெந்த மாவினாலான பண்டம்) முதலிய ஹவிஸ்ஸாலும் (யாகத்தில் தேவதைகளுக்காக அக்னியில் கொடுக்கப்படும் பொருள்), ப்ராஹ்மண ச்ரேஷ்டனிடத்தில் அதிதி ஸத்காரத்தினாலும் (விருந்தோம்பலாலும்), பசுக்களிடத்தில் புல் முதலியன கொடுப்பதனாலும், வைஷ்ணவனிடத்தில் பந்துவுக்குச் செய்யும் ஸத்காரங்களைச் செய்வதனாலும், ஹ்ருதயாகாசத்தில் நிலைநின்ற த்யானத்தினாலும், வாயுவிடத்தில் முக்ய ப்ராணனென்னும் புத்தியினாலும், ஜலத்தில் ஜலம், கந்தம், புஷ்பம் முதலிய த்ரவ்யங்களாலும், சக்ரம், பத்மம் முதலிய ரேகைகள் இடப்பெற்ற பூமியில் மூலமந்திரத்தினால் அங்க ந்யாஸம் செய்வதனாலும், ஆத்மாவினிடத்தில் அந்தராத்மாவான என்னைச் சாஸ்த்ரங்களில் நிஷேதிக்கப்படாத (விலக்கப்படாத) காமபோகங்களாலும் (இன்ப அனுபவங்களாலும்), ஸமஸ்த பூதங்களிலும் ஜீவாத்மாவைச் சரீரமாகவுடைய என்னை ராக (விருப்பு), த்வேஷாதிகள் (வெறுப்பு) இல்லாமையாகிற ஸாம்ய (ஸமமான) புத்தியினாலும் ஆராதிக்க வேண்டும். 

ஸூர்யன் முதலிய இந்தப் பதினொரு ஸ்தானங்களிலும் சங்கம், சக்ரம், கதை, தாமரை மலர் இவற்றோடு கூடியதும், நான்கு புஜங்களுடையதும், ராக (விருப்பு), த்வேஷாதி (வெறுப்பு) தோஷங்கள் எவையுமின்றிச் சாந்தமாயிருப்பதுமாகிய என்னுருவத்தை த்யானித்துக்கொண்டே, மனவூக்கத்துடன் என்னை ஆராதிக்க வேண்டும். வேதங்களில் விதிக்கப்பட்ட யாகாதி கர்மத்தினாலும், ஸ்ம்ருதிகளில் விதிக்கப்பட்ட பூர்த்தாதி (கிணறு, குளம் வெட்டுதல் முதலிய) கர்மத்தினாலும் எவன் மனவூக்கத்துடன் என்னையே ஆராதிக்கிறானோ, அவன் கீழ்ச்சொன்ன உபாயங்களை அனுஷ்டிக்கிறவன் போல், என்னிடத்தில் நிலை நின்ற பக்தியைப் பெறுவான். என்னிடத்தில் நிலை நின்ற பக்தி உண்டாக வேண்டுமென்றால், ஸத்புருஷர்களுடைய ஸஹவாஸத்தினால் (தொடர்பினால்) தான் உண்டாகுமேயன்றி, மற்ற எதனாலும் உண்டாகாது. 

உத்தவனே! இவ்வாறு ஸத்புருஷர்களுடைய ஸஹவாஸத்தினால் (தொடர்பினால்) விளையக்கூடியதாகிய பக்தியோகம் தவிரப் பெரும்பாலும் என்னைப் பெறுவதற்குரிய நல்ல உபாயம் மற்றொன்றுமில்லை. ஸத்புருஷர்களுக்கு நான் ப்ராப்யனும் (அடையப்படுபவனாயும்), ப்ராபகனுமாய் (அடைவதற்கு வழியாகவும்) இருப்பவன். அவர்கள் என்னையே ப்ராப்யனாகவும் (அடையப்படுபவனாயும்), ப்ராபகனாகவும் (அடைவதற்கு வழியாகவும்) பற்றுகிறார்களாகையால், நான் அவர்கள் இட்ட வழக்காயிருப்பவன். ஆகையால், அவர்களுடைய ஸஹவாஸத்தினால் (தொடர்பினால்) என்னை வசப்படுத்த வேண்டுமன்றி, வேறு வழி கிடையாது. 

யது குலத்தைக் களிக்கச் செய்யும் தன்மையனே! உத்தவா! இவ்வாறு நிரூபிக்கப்பட்ட பக்தியோகம், பல அங்கங்களோடு கூடியதாகையால், இதை அநுஷ்டிக்க முடியாது என்று வருந்துவாயாயின், இதைக் காட்டிலும் மேலாயிருப்பதும், பரம ரஹஸ்யமுமாகிய மற்றொரு உபாயம் சொல்லுகிறேன்; கேட்பாயாக. அது ஒருவர்க்கும் வெளியிடாமல் மிகவும் மறைத்துப் பாதுகாக்கத் தக்கது. ஆயினும், அதை உனக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், நீ எனக்கு ப்ருத்யனும் (சேவகனும்), ஸகாவுமாய் (நண்பனுமாய்) இருப்பவனல்லவா? 

பதினொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக