ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – பதினைந்தாவது அத்தியாயம்
(பக்தியோகம் செய்யும் யோகிக்கு, பகவத் ப்ராப்தி விரோதிகளான அணிமாதி சித்திகள் ஸித்திக்கும் விதத்தைக் கூறுதல்)
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ப்ராண வாயுவை வென்று, இந்திரியங்களை அடக்கி, நிலை நின்ற மனமுடையவனாகி என்னிடத்தில் மனத்தை நிலைநிறுத்துகின்ற யோகிக்கு, அணிமாதி ஸித்திகள் (அணிமா முதலிய எட்டு பலன்கள் - அவையாவன-
அணிமா - சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல்
மஹிமா - பெரிதாக்கிக்கொள்ளுதல்
லகிமா - லேசாகச் செய்தல்
கரிமா - கனமாக்கிக்கொள்ளுதல்
வசித்வம் - எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல்
ஈசத்வம் - எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல்
ப்ராப்தி - நினைத்த பொருளைப் பெறுதல்
ப்ராகாம்யம் - நினைத்தவிடம் செல்லும் வல்லமை) உண்டாகின்றன.
(ஆயினும் அவற்றில் மனப்பற்று செய்யலாகாது. அவை பகவத் ப்ராப்திக்கு விக்னங்களாம் (இடையூறுகளாம், தடைகளாம்.)
உத்தவர் சொல்லுகிறார்:- அச்சுதனே! எத்தகைய தாரணையினால் (ஆழ்ந்த உள் உணர்வினால்) ஸித்திகள் (பலன்) உண்டாகின்றன? அந்த ஸித்திகள் (பலன்) யாவை? அவை உண்டாகும் விதம் யாது? நீ யோகிகளுக்கு ஸித்திகளைக் (பலன்) கொடுப்பவனாகையால், அவற்றின் ஸ்வரூபம் எத்தகையதோ அதெல்லாம் உனக்கு நன்றாகத் தெரியுமல்லவா? ஆகையால் அதை எல்லாம் எனக்கு விசதமாகச் (விரிவாகச்) சொல்லவேண்டும்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- என்னிடத்தில் மனத்தை நிலை நிறுத்துகையாகிற தாரணை (ஆழ்ந்த உள் உணர்வு) என்னும் யோகத்தின் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்த பெரியோர்கள், ஸித்திகள் பதினெட்டு என்று சொல்லுகிறார்கள். அவற்றில் எட்டு ஸித்திகள் என்னையே முக்ய ப்ரயோஜனமாகவுடையவை. மற்ற பத்து ஸித்திகளும், சப்தாதி விஷயங்களின் (உலக விஷயங்களின்) அனுபவத்தையே முக்ய ப்ரயோஜனமாகவுடையவை. ஆகையால் மீளவும் ஸம்ஸாரத்தில் மூட்டி விடும்.
சரீரம் அணுவாயிருக்கப் பெறுகை, அணிமையென்னும் ஸித்தி; ஸூக்ஷ்ம (நுட்பமான) வஸ்துக்களில் (பொருட்களில்) ப்ரவேசிக்கும் திறமையாம்.
சரீரம் பெரிதாயிருக்கப் பெறுகை மஹிமையென்னும் ஸித்தி.
சரீரம் லேசான வஸ்துக்களைக் காட்டிலும் லேசாயிருக்கை, லகிமையென்னும் ஸித்தி
ஸமஸ்த ப்ராணிகளுடைய இந்திரியங்களிலும் நுழைந்து அவரவர் அனுபவிக்கும் விஷயங்களோடு ஸம்பந்திக்கை (சேர்ந்திருக்கை) ப்ராப்தியென்னும் ஸித்தி. (அந்தந்த இந்த்ரியங்களின் அதிஷ்ட்டான (நியமிக்கும்) தேவதா (தேவதை) ரூபத்தினால் (வடிவினால்) அந்தந்த விஷயங்களோடு ஸம்பந்திக்கை (சேர்ந்திருக்கை) ப்ராப்தியென்னும் ஸித்தியாமென்று சிலர் சொல்லுவார்கள்.)
இஹலோகத்திலுள்ளவைகளும், பரலோகத்திலுள்ளவைகளுமான விஷயங்களைப் பற்றின வ்யாபாரங்களில் மேன்மையுற்றிருக்கை ப்ராகாம்யமென்னும் ஸித்தியாம்.
தனக்கும், பிறர்க்கும் எல்லா விஷயங்களிலும் திறமையை உண்டாக்குகை ஈசத்வமென்னும் ஸித்தியாம்.
சப்தாதி விஷயங்களை (உலகியல் இன்பங்களை) அனுபவிக்கிலும் அவற்றில் பற்றில்லாமை (ஆசையில்லாமை) வசித்வமென்னும் ஸித்தியாம்.
எந்த ஸுகத்தில் விருப்பமெல்லாம் ஸமுத்ரத்தில் திவலை (நீர்த்துளி) போல் ஸ்வல்பமாய் (சிறிதாய்) முடிந்து விடுகிறதோ, அத்தகைய ஆநந்தத்தை அனுபவிக்கை பரமாநந்தம் என்னும் ஸித்தியாம்.
நல்லியற்கை உடையவனே! இவ்வெட்டு ஸித்திகளும் என்னுடையவை; த்யான யோகம் கைகூடின யோகிக்கு ஸ்வபாவ (இயற்கையாக) ஸித்தங்களாய் (ஏற்படக்கூடியவையாய்) இருக்கும். எந்த தேஹத்தோடு யோகத்தை அப்யஸிக்கிறானோ (பயிற்சி செய்கின்றானோ), அந்த தேஹத்தில் சதை, மடிப்பு, நரை,மயிர், பசி,தாஹம் முதலியவையில்லாமை, தூரத்திலுள்ள ஸமஸ்த ப்ராணிகளுடைய சப்தங்களையும் கேட்கை , தூரத்திலுள்ள ஸமஸ்த வஸ்துக்களையும் ஸாக்ஷாத்கரிக்கை (நேரில் பார்ப்பது), எங்குப் போக வேண்டுமென்று மனத்தில் நினைக்கிறானோ, அவ்விடத்தில் அந்த க்ஷணமே தேஹத்தினால் (உடலோடு) போயிருக்கை, நினைத்தபடி உருவங்களை ஏற்றுக் கொள்கை, மரணமடைந்த பிறருடைய சரீரங்களில் ப்ரவேசிக்கை, நினைத்தபொழுது மரணம் அடைகை, அப்ஸர ஸ்த்ரீகளோடு தேவதைகள் அனுபவிக்கும் போகங்களைப் பெறுகை, நினைத்தவை எல்லாம் ஸித்திக்கை (கைகூடுகை), தன்னுடைய ஆஜ்ஞை (கட்டளை) எங்கும் தடைபடாதிருக்கை ஆகிய இவை பத்தும் குணஸித்திகளென்று கூறப்படும்.
மற்றும், வருங்காலம், நிகழ்காலம், கழிகாலம் (இறந்த காலம்) ஆகிய மூன்று கால கதிகளையும் அறிகை, குளிர், வெயில் முதலிய த்வந்த்வங்களால் (இரட்டைகளால்) வருந்தாமை, பிறருடைய சித்தம் (எண்ணம்), சேஷ்டை (செயல்) முதலியவற்றை நன்றாக அறிகை, அக்னி, ஸூர்யன், ஜலம், விஷம் இவை முதலியவற்றை ஸ்தம்பனம் செய்கை (நிறுத்துதல்), எங்கும் தோல்வியடையாமை இவைகளும் யோக தாரணத்தினால் (ஆழ்ந்த உள் உணர்வினால்) விளையும் ஸித்திகளென்று சொல்லுகிறார்கள். எந்த தாரணையால் (ஆழ்ந்த உள் உணர்வினால்) எந்த ஸித்தி (பலன்) எப்படி உண்டாகுமோ அதையெல்லாம் விவரித்துச் சொல்லுகிறேன்: தெரிந்து கொள்வாயாக.
பூத ஸூக்ஷ்மங்களைச் (பஞ்ச பூதங்களின் நுட்பமான நிலையை) சரீரமாகவுடைய என்னிடத்தில் வேறு விஷயங்களைக் கணிசியாமல் (பொருட்படுத்தாமல்) அவ்வளவு மாத்ரத்தையே விஷயமாகக் கொண்டு மனத்தை நிலை நிறுத்துவானாயின், என்னுடைய சரீரமாகிய பூத ஸூக்ஷ்மங்களை உபாஸிக்கிற அவன் அணிமை என்னும் ஸித்தியைப் பெறுவான்.
மஹத்தத்வத்தைச் சரீரமாகவுடைய பரமாத்மாவான என்னிடத்தில் வேறு விஷயங்களில் செல்லாதபடி மனத்தை நிலைநிறுத்துவானாயின், அவன் ஆகாசம் முதலிய பூதங்களுக்குத் தனித்தனியே உள்ள மஹிமையைப் பெறுவான்.
பூதங்களின் ஸூக்ஷ்ம (நுட்பமான) அவயவங்களில் வியாபித்திருக்கிற என்னிடத்தில் மனத்தை நிலைநிறுத்தி நான் ஸுக்ஷ்ம (நுட்பமான) கால ஸ்வரூபனாய் (கால வடிவாய்) இருக்கும் நிலைமையை தியானிப்பானாயின், அவன் லேசான வஸ்துக்களைக் காட்டிலும் லேசாயிருக்கையாகிற அணிமை என்னும் ஸித்தியைப் பெறுவான்.
வைகாரிகமென்னும் அஹங்காரத்தைச் சரீரமாகவுடைய என்னிடத்தில் மனத்தை நன்கு நிலை நிறுத்தவானாயின், ஸமஸ்த பிராணிகளுடைய இந்திரியங்களிலும் அதிஷ்டானம் செய்து, அவரவர் அனுபவிக்கும் விஷயங்களை அனுபவிக்கையாகிற ப்ராப்தியென்னும் ஸித்தியைப் பெறுவான்.
மணிகளுக்குச் சரடு (நூல்)ஆதாரமாயிருப்பது போல், ஸமஸ்த கார்யங்களுக்கும் ஆதாரமாயிருப்பதும், ப்ரக்ருதியின் (அறிவற்ற ஜடப்பொருட்களுக்கு மூலமான மூலப்ரக்ருதியின்) கார்யமுமாகிய (அதிலிருந்து உண்டான) மஹத் தத்வத்தைச் சரீரமாகவுடைய என்னிடத்தில் மனத்தை நிலைநிறுத்துவானாயின், ஸமஸ்த வியாபாரங்களுக்கும் உரிய அறிவும், அவற்றிற்குரிய திறமையும் அமைந்திருக்கையாகிற ப்ராகாம்யம் என்னும் ஸித்தியைப் பெறுவான்.
ஸர்வ வியாபகனும் (எல்லாவற்றிலும் ஊடுருவி இருப்பவனும், ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (நீடிப்பு), ஸம்ஹாரங்கள் (அழிவு) என்கிற மூன்று வியாபாரங்களுக்கு நிர்வாஹகனும் (நியமிப்ப்பவனும்), காலத்தைச் சரீரமாக உடையவனுமாகிய என்னிடத்தில் மனத்தை நிலை நிறுத்துவானாயின், ஸமஸ்த தேஹங்களையும் ஸமஸ்த ஆத்மாக்களையும் தூண்டும் திறமையாகிற ஈசத்வமென்னும் ஸித்தியைப் பெறுவான்.
ஜாகர (விழிப்பு), ஸ்வப்ன (கனவு), ஸுஷூப்திகள் (ஆழ்ந்த உறக்கம்) என்னும் மூன்று அவஸ்தைகளைக் (நிலைகளைக்) கடந்திருக்கையால் துரீயம் (நான்காவது) என்று கூறப்படுகிற பரிசுத்த ஜீவாத்ம ஸ்வரூபத்தைச் சரீரமாகவுடையவனும், ஜீவாத்மாக்களுக்கு பராப்யனும் (அடையப்படக் கூடியவனும்), ப்ராபகனும் (அடைவதற்கு வழியும்), ஆதாரனுமாகையால் நாராயணனென்று பேர்பெற்றவனும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) என்னிடத்தில் மனத்தை நிலைநிறுத்துவானாயின், என்னோடொத்த தர்மமுடையவனாகி, சப்தாதி விஷயங்களை அனுபவிக்கினும், அவற்றில் மனம் பற்றாமையாகிற வசித்வமென்னும் ஸித்தியைப் பெறுவான்.
கெட்ட குணங்கள் எவையும் தீண்டப் பெறாதவனும், கல்யாண குணங்களின் பெருமையால் ப்ரஹ்மமென்று பேர் பெற்றவனுமாகிய என்னிடத்தில் பரிசுத்தமான மனத்தை நிலை நிறுத்துவானாயின், விருப்பங்களெல்லாம் முடியும்படியான பரமாநந்தமென்னும் ஸித்தியைப் பெறுவான்.
(சப்தாதி விஷயங்களையே (உலக விஷயங்களையே) முக்ய ப்ரயோஜனமாகவுடைய குணஸித்திகளையும் அவற்றிற்கு ஸாதனமான யோக தாரணைகளையும் (ஆழ்ந்த உள் உணர்வுகளையும்) சொல்லுகிறேன்; கேட்பாயாக.)
சுத்த ஸத்வ ஸ்வரூபனும் (ரஜஸ், தமஸ் கலப்பில்லாத ஸத்வம் மட்டுமே வடிவானவனும்), தர்ம நிர்வாஹகனாகையால் (நியமிப்பவனாகையால்) தர்மமயனும் (தர்ம வடிவானவனும்), ச்வேத த்வீபத்திற்கு (பகவானைத்தவிர வேறு எதிலும் மனம் செல்லாத யோகிகள் இருக்கும் இடம்) ப்ரபுவுமாகிய என்னிடத்தில் மனத்தை நிலைநிறுத்துவானாயின், பசி, தாஹம் முதலிய அறுவகையான ஊர்மிகளினின்று (துன்ப அலைகளிலிருந்து) விடுபட்டு வேத ரூபத்தைப் பெறுவான். ஆகாசம் போல் நிர்மலமும் (அழுக்கற்றதும்), எங்கும் நிறைந்திருப்பதுமான ஸ்வரூபத்தை உடையவனும், ப்ராணவாயுவைச் சரீரமாகவுடையவனுமாகிய என்னிடத்தில் மனத்தினால் ப்ராண கோஷத்தைச் (மூச்சின் ஒலியை) சிந்திப்பானாயின், வெகு தூரத்திலுள்ள ப்ராணிகளுடைய பேச்சுக்களும், ஸ்பஷ்டமாகச் செவிப்படப் பெறுவான். (இது தூர ச்ரவணமென்னும் ஸித்தியாம்).
சக்ஷுரிந்தரியத்திற்கு (கண்ணிற்கு) அதிஷ்டாதாவான (நியமிக்கும்) ஸூர்யனிடத்தில் சக்ஷுஸ்ஸையும் (கண்ணையும்), சக்ஷுஸ்ஸில் (கண்ணில்) ஸூர்யனையும் ஸம்பந்தித்திருப்பதாக (தொடர்பு உடையதாக) த்யானித்து அவ்விரண்டு ஸம்யோகத்திலும் (சேர்த்தியிலும்) என்னை மனத்தினால் த்யானிப்பானாயின், ஸுக்ஷ்ம (நுட்பமான) தர்சனம் (பார்வை) உடையவனாகி தூரத்திலுள்ள எல்லாவற்றையும் எதிரில் இருப்பது போல் காண்பான். (இது தூரதர்சனமென்னும் ஸித்தியாம்.)
மனஸ்ஸு என்னிடத்தில் ஸம்பந்தித்திருப்பதாகவும், பிறகு தேஹம் ப்ராணவாயுவோடு ஸம்பந்தித்திருப்பதாகவும் த்யானிப்பானாயின், இவனுடைய மனம் எங்குச் செல்லுகிறதோ, அவ்வளவில் அங்கு இவனுடைய தேஹமும் அதிவேகத்தினால் செல்லும். (இது மனோ வேகமென்னும் ஸித்தியாம்)
மனத்தை என்னிடத்தில் நிலை நிறுத்தி என்னையே த்யானித்துக்கொண்டு வருவானாயின், அந்த யோக பலத்தினால் இவன் எந்தெந்த உருவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறானோ, அந்தந்த உருவத்தைப் பெறுவான். (இது காமரூபம் (விரும்பிய உருவைப் பெறுதல்) என்னும் ஸித்தியாம்).
யோக ஸித்தியுடையவன் பிறனுடைய சரீரத்தில் (உடலில்) ப்ரவேசிக்க வேண்டுமென்று விரும்புவானாயின், அந்தச் சரீரத்தில் (உடலில்) தானிருப்பதாக த்யானிக்க வேண்டும். பிறகு தன் தேஹத்தை (உடலை) விட்டு இந்திரியங்களோடும், முக்ய ப்ராணவாயுவோடும் கிளம்பி, வாயு மூக்கு ரந்த்ரத்தினால் (த்வாரத்தினால்) உள்ளே நுழைவது போலவும், வண்டு ஒரு புஷ்பத்தினின்று மற்றொரு புஷ்பத்திற்குப் போவது போலவும், பிறனுடைய சரீரத்தில் (உடலில்) அனாயாஸமாக ப்ரவேசிப்பான். (இது பரகாய ப்ரவேசமென்னும் ஸித்தி).
யோக ஸித்தியுடையவன் மரணம் அடைய விரும்புவானாயின், குதி காலால் மூலாதாரத்தை அழுத்தி ப்ராணவாயுவை ஹ்ருதயம், மார்பு, கண்டம், சிரஸ்ஸு ஆகிய இந்த ஸ்தானங்களில் க்ரமமாக மேலேறச் செய்து, ப்ரஹ்மரந்த்ரத்தினால் பரப்ரஹ்மத்தை அடைந்து, தேஹத்தைத் துறப்பான். (இது ஸ்வச்சந்த மரணம் என்னும் ஸித்தி.)
தேவ உத்யானம் (தோட்டம்) முதலிய இடத்தில் விளையாட விரும்புவானாயின், என்னுடைய சரீரமாகையால், என்னிடத்தில் இருக்கின்ற ஸத்வத்தை (ஸத்வ குணத்தை) த்யானிக்கவேண்டும். அவ்வாறு சுத்த ஸத்வத்தில் நிலை நின்ற மனமுடைய அன்னவனுக்கு, எதிரில் தெய்வ மடந்தையர்கள் விமானத்துடன் வந்து நிற்பார்கள். (இது க்ரீடானு தர்சனமென்னும் ஸித்தியாம்).
யோக ஸித்தன் எப்பொழுது எவ்விதமாகப் புத்தியினால் ஸங்கல்பிக்கிறானோ, அப்பொழுது ஸத்ய ஸங்கல்பனாகிய என்னிடத்தில் மனத்தை நிலை நிறுத்துவானாயின், அப்பொழுது அவ்விதமாகவே தான் ஸங்கல்பித்தது நிறைவேறப் பெறுவான். ஸர்வநியாமகனும் (எல்லாவற்றையும் நியமிப்பவனும்), ஸ்வதந்த்ரனுமாகிய (வேறொருவர் கட்டளைக்கும் உட்படாது, தன்னிச்சையாக செயல்பட வல்லவனுமான) என்னுடைய தன்மையாகிய வசித்வாதி (பிறரை வசப்படுத்தும்) குணங்களை அடைந்த யோகஸித்தன், அந்த வசித்வாதி குணங்களையுடைய என்னை த்யானிப்பானாயின், எங்கும் தடைபட மாட்டான். அவனுடைய ஆஜ்ஞையும், கதியும், என்னுடைய ஆஜ்ஞை போலவும், கதி போலவும், எங்கும் தடைபடாது.
என்னிடத்தில் பக்தி விளையப்பெறுகையால் பரிசுத்தமான மனமுடையவனும், என்னிடத்தில் மனத்தை நிலைநிறுத்துகையாகிற தாரணையை (ஆழ்ந்த உள் உணர்வை) அறிந்தவனுமாகிய யோகஸித்தனுக்கு, என்னிடத்தில் விளையும் பக்தியினுடைய மஹிமையினால், மூன்று காலங்களிலுமுள்ள வஸ்துக்களைப் பற்றின அறிவும், அவற்றின் ஜன்ம (பிறப்பு) மரணங்களைப் (இறப்பு) பற்றின அறிவும் உண்டாகின்றன.
என்னையே த்யானிக்கும் தன்மையனான யோக ஸித்தனுடைய சரீரம் (உடல்), பக்தி யோக மயமாகையால் அது அக்னி முதலியவைகளால் எவ்விதமான கெடுதியையும் அடையாது. பின்னையோ வென்றால், அவ்வக்னி முதலியவைகளே அவனுடைய சரீர ஸம்பந்தத்தினால் (உடல் தொடர்பால்) தம்முடைய சக்திகள் தடைபடப் பெறும். ஏனென்றால், அவன் என்னிடத்தில் பக்தியோகம் செய்கையால், சாந்தமான மனமுடையவன். ஆகையால், அவனுக்கு அவை எவ்விதமான கெடுதியையும் செய்யவல்லவையாக மாட்டாது. ஜல ஜந்துக்களுக்கு (நீரில் வாழும் பிராணிகளுக்கு) ஜலத்தினால் ஏதேனும் கெடுதி உண்டாகுமோ? அவ்வாறே இதுவும் என்றுணர்க.
ஸ்ரீவத்ஸம், அஸ்த்ரம் இவைகளால் அலங்கரிக்கப்பட்டவைகளும், த்வஜம், குடை, விசிறி முதலிய அடையாளங்கள் உடையவைகளுமாகிய என்னுடைய அவதாரங்களையும், மற்றுமுள்ள முக்யமான விபூதிகளையும் த்யானம் செய்வானாயின், அவன் எங்கும் தோல்வி அடையாதிருப்பான்.
இவ்வாறு சொல்லப்பட்ட யோக தாரணையால் (ஆழ்ந்த உள் உணர்வால்) என்னை உபாஸிக்கும் யோகிக்கு, முன் சொன்ன ஸமஸ்த ஸித்திகளும் தானே உண்டாகும். அந்தர் இந்த்ரியமான (உள் இந்த்ரியமான) மனத்தை வென்றவனும், வெளி இந்த்ரியங்களை அடக்கியாள்பவனும், ப்ராணவாயுவை ஜயித்தவனும், இடைவிடாமல் என்னிடத்தில் மனத்தை நிலைநிறுத்துபவனுமாகிய முனிவனுக்கு எந்த ஸித்திதான் கிடைக்க அரிதாகும்? என்னை உபாஸிக்கையாகிற உத்தமமான யோகத்தை அனுஷ்டிக்கின்ற யோகிக்கு, ஸித்திகளெல்லாம் தானே உண்டாகின்றனவாயினும், அவற்றில் மனப்பற்று செய்யலாகாது.ஏனென்றால், இந்த ஸித்திகளெல்லாம் யோகத்தைத் தடுத்து, மீளவும் ஸம்ஸாரத்தில் மூட்டுமாகையால், விக்னங்கள் (இடையூறுகள்) என்று சொல்லுகிறார்கள்.
எந்த உபாஸனையால் (த்யானத்தால்) என்னை அடைய முயற்சி செய்கிறானோ, அத்தகைய உபாஸனத்திற்கு (த்யானத்திற்கு) இவை கால விலம்பத்தை (தாமதத்தை) விளைக்கும். சில ப்ராணிகளுக்குச் சில ஸித்திகள் பிறவியோடு கூடவே உண்டாகின்றன. தேவதைகளுக்குச் சில ஸித்திகள் தானே உண்டாகின்றனவல்லவா. மற்றும், மீன்களுக்கு, ஜல ஸ்தம்பனமும் (நீரில் நிற்றலும்), பக்ஷிகளுக்கு ஆகாயத்தில் திரியும் தன்மையும் உண்டாயிருக்கின்றனவல்லவா. சில ஸித்திகள், ஓஷதிகளாலும் (மூலிகைகளாலும்), சில ஸித்திகள் தவத்தினாலும், சில ஸித்திகள் மந்த்ரத்தினாலும் உண்டாகின்றன. இவ்வாறு மந்த்ராதிகளால் உண்டாகக்கூடிய ஸித்திகள் எவ்வளவு உண்டோ, அவ்வளவு ஸித்திகளையும் யோகத்தினால் அடைகின்றான். ஆகையால், ஜன்மம், ஓஷதி, தவம், மந்திரம் முதலிய மற்றவைகளால் யோக ஸித்தியைக் கைவிடலாகாது.
தேவாதி ஜன்மம் முதலியவை நேருமாயின், அப்பொழுது அந்தந்த ஸித்திகள் ஸுகமாக நேரக்கூடியவைகளே என்று அந்த தேவாதி ஜன்மம் முதலியவற்றைப் பெறுவதற்கு யோகத்தை உபயோகிக்கலாகாது. ஸமர்த்தனாகிய நான் ஸமஸ்த ஸித்திகளையும் கொடுப்பவனும், அவற்றிற்கு நிர்வாஹகனுமாய் (நியமிப்பவனுமாய்) இருப்பவன். நான் ஸித்திகளுக்கு மாத்ரமே இத்தகையன் என்பதில்லை.
பின்னையோவென்றால், கைவல்யம் என்று சொல்லப்படுகிற ஆத்ம அனுபவத்திற்கு ஸாதனமான ஆத்ம உபாஸனமாகிற (த்யானமாகிற) ஸாங்க்யத்திற்கும் (அறிவிற்கும்) என்னை அடைவதற்குக் காரணமான என்னுடைய உபாஸனமாகிற (த்யானமாகிற) யோகத்திற்கும், ப்ரஹ்மவாதிகள் அனுஷ்டிக்கிற யஜ்ஞாதி ரூபமான தர்மத்திற்கும், நானே ஹேதுவும் (காரணமும்), ப்ரவர்த்தகனும் (நடத்துபவனும்), சேஷியுமாய் (உடையவனாய், பலனைப் பெறுபவனுமாய்) இருப்பவன். நான் ஸமஸ்த ஜீவாத்மாக்களுக்கும் அந்தராத்மாவும், அந்தர்யாமியுமாய் (உள் இருந்து நியமிப்பவன்) இருப்பவன். ஆத்மாக்களுக்கு அந்தராத்மாவாய் இருக்கையினால், அளவுடையவனாவேன் என்று சங்கிக்கல் (ஸந்தேஹப்படல்) ஆகாது. உள்ளே வியாபித்திருப்பது போல், வெளியிலும் வியாபித்திருப்பவன். ஆகையால் எனக்கு எங்கும் மறைவு கிடையாது. ஆகாசம் முதலிய பூதங்கள் தேவ, மனுஷ்யாதி பூதங்களில் உள்ளும் புறமும் வியாபித்திருப்பது போல், நானும் ஸமஸ்த பூதங்களிலும் உள்ளும் புறமும் வியாபித்திருப்பவன்.
பதினைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.