சனி, 17 ஜூலை, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 320

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – பதினான்காவது அத்தியாயம்

(பக்தி யோகத்தின் சீர்மையையும், த்யானத்தின் ஸ்வரூபத்தையும், அதன் ஸாதனங்களையும் கூறுதல்)

உத்தவன் சொல்லுகிறான்:- ஸ்ரீக்ருஷ்ணா! வேதங்களை ஓதியுணர்ந்து, பிறர்க்கு உபதேசிக்கும் தன்மையரான பெரியோர்கள், தர்மம், அர்த்தம், காமம் முதலிய புருஷார்த்தங்கள் (ஜீவாத்மாவால் விரும்பி அடையப்படக்கூடியவை) பலவும், அவற்றிற்கு ஸாதனங்கள் பலவும் உளவென்று சொல்லுகிறார்கள். நீயோ, மோக்ஷம் ஒன்றே புருஷார்த்தமென்றும், பலன்களை அபேக்ஷியாமல் (விரும்பாமல்) செய்கிற பக்தி யோகமே அதற்கு ஸாதனம் என்றும் மொழிந்தாய். நீ சொன்ன மோக்ஷம் என்னும் புருஷார்த்தம் மற்றவர் சொல்லுகிற தர்மாதி புருஷார்த்தங்களில் அடங்கியிருக்குமாயின், அவர்கள் சொல்லுகிற ஸாதனங்களோடு நீ சொல்லுகிற பக்தி யோகமென்னும் ஸாதனத்திற்கு விகல்பமாம். (அதாவது அவர்கள் சொல்லுகிற ஸாதனங்களையாவது, நீ சொல்லுகிற ஸாதனத்தையாவது ஏதேனும் ஒன்றை அனுஷ்டிக்கலாமென்று கருத்தாகும்.)

தர்மாதி புருஷார்த்தங்களைக் காட்டிலும் மோக்ஷ புருஷார்த்தம் விஜாதீயமாய் (வேறாய்) இருக்குமாயின், அவை எல்லாவற்றிற்கும் ஸம ப்ராதான்யமாம் (ஒரே மாதிரியான முக்யத்வமே). அதாவது, அந்தந்த புருஷார்த்தத்திற்கு அந்தந்த ஸாதனம் உபாயமாம் (வழி). அல்லது இவற்றில் ஏதேனுமொன்றே சிறந்ததாயின், அதுவே முக்யமாம். ஆகையால், எல்லா ஸாதனங்களுக்கும் பலன் ஒன்றேயாகையால், ஏதேனுமொரு ஸாதனத்தை அனுஷ்டிக்கலாம் என்று திருவுள்ளமா (உனது மேலான கருத்தா)? 

பலன் வெவ்வேறாகையால், அந்தந்த பலனை விரும்பினவன் அந்தந்த ஸாதனத்தை அனுஷ்டிக்கலாமென்று திருவுள்ளமா (உனது மேலான கருத்தா)? இவற்றில் ஒன்றே சிறந்த பலனாகையால், அதன் ஸாதனத்தையே முக்யமாக அனுஷ்டிக்க வேண்டுமென்று திருவுள்ளமா (உனது மேலான கருத்தா)? இதை விவரித்துச் சொல்ல வேண்டும்.  

பக்தி யோகம் செய்வானாயின், எல்லா விஷயங்களிலும் பற்றற்று, மனம் உன்னிடத்திலேயே நிலை நிற்குமென்று நீ சொன்ன பக்தியோகத்தின் மேன்மையை ஆராய்ந்தால், பக்தியோகம் தர்மாதிகளைக் காட்டிலும் விலக்ஷணமான (வேறான) புருஷார்த்தத்தை ஸாதித்துக்கொடுக்கும் உபாயம் (வழி, ஸாதனம்) என்று தெரிகிறது. ஆகையால், ஸந்தேஹிக்க இடமில்லாமல் அதுவே முக்யமென்று நிச்சயிக்கலாம். ஆயினும், பக்தி யோகத்தினால் ஸாதிக்கப்படுகிற மோக்ஷம், தர்மாதிகளில் அடங்கினதா? அல்லது அவற்றைக் காட்டிலும் வேறா? வேறாயிருக்குமாயின், அவற்றோடு ஒத்ததா; அன்றா? தாரதம்யம் (ஏற்றத்தாழ்வுகள்) உண்டாயினும் ஒன்றுக்கொன்று உதவியாயிருக்குமா? இராதா? இவை முதலிய ஸந்தேஹங்கள் பலவும் உண்டாகின்றன. ஆகையால் விவரித்துச் சொல்லி அந்த ஸந்தேஹங்களை எல்லாம் தீர்ப்பாயாக.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ப்ராக்ருத ப்ரளயத்தில் (சதுர்முக ப்ரஹ்மாவின் ஆயுள் முடியும்போது ஏற்படும் அழிவில்) வேதமென்னும் பெயருடைய இந்த வாக்கு அத்யயனம் செய்பவர் (வேதம் கற்பவர்) இல்லாமையால் நஷ்டமாயிற்று. ஸர்வஜ்ஞனும் (எல்லாம் அறிந்தவனும்), ஜகத்தைப் படைக்க விரும்புகின்றவனுமாகிய நான் கல்பாதியில் (ஸ்ருஷ்டியின் ஆரம்பத்தில்) அந்த வாக்கையே ப்ரஹ்ம தேவனுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே உபதேசித்தேன். அந்த வேதம் முழுவதும் தர்ம ஸ்வரூபனாகிய என்னையே நிரூபித்துச் சொல்லுகின்றது. அந்த ப்ரஹ்மதேவன் அவ்வேதத்தைத் தனது முதற் பிள்ளையாகிய ஸ்வாயம்புவ மனுவுக்கு உபதேசித்தான். அந்த ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில் ப்ருகு முதலிய மஹர்ஷிகள் அவ்வேதத்தை ப்ரஹ்மாவினிடத்தினின்று அத்யயனம் செய்தார்கள் (கற்றார்கள்). அந்த ரிஷிகளின் புதல்வர்களான தேவர், தானவர், குஹ்யகர், மனுஷ்யர், ஸித்தர், கந்தர்வர், வித்யாதரர், சாரணர், கிந்தேவர், கின்னரர், நாகர், ராக்ஷஸர், கிம்புருஷர் முதலியவர்கள் தம் தந்தைகளான அம்மஹர்ஷிகளிடத்தினின்று வேதத்தை அத்யயனம் செய்தார்கள். 

ப்ரஹ்மதேவன் முதல் கிம்புருஷாதிகள் வரையிலுள்ள அவர்களுடைய ப்ரக்ருதிகள் (ஸ்வபாவம், தன்மை), ரஜஸ்ஸு, ஸத்வம், தமஸ்ஸு என்னும் குணங்களினின்று உண்டானவை. அந்த ப்ரக்ருதிகளைப் பற்றியே ப்ராணிகள் ஜாதி முதலிய பல பேதங்களை (வேறுபாடுகளை) அடைகின்றன. அவற்றைப் பற்றியே அந்த ப்ராணிகளின் புத்திகளும் மாறுகின்றன. ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அவ்வவற்றின் ப்ரக்ருதிகளுக்குத் தகுந்தபடி வாக்குகள் (சொல்) விசித்ரமாகப் புறப்படுகின்றன. இவ்வாறு ப்ராணிகளின் ப்ரக்ருதிகள் பலவாறாயிருக்கையால், அவற்றின் புத்திகளும் பலவாறாயிருக்கின்றன. 

தமோ குணத்தினின்றுண்டான ப்ரக்ருதியுடைய சிலர், ஆதி (முதல்), அந்தம் (முடிவு) இல்லாத வேதத்தையும் கூடப் புருஷனால் இயற்றப்பட்டது என்றும், அதைப்பற்றியே அந்த வேதத்தில் ப்ரமம் (மயக்கம், மனக்கலக்கம்), வஞ்சனை முதலியன இருக்கக் கூடுமாகையால் அது ப்ரமாணம் (ஏற்றுக்கொள்ளத்தக்க ஆதாரம்) அன்று என்றும் நினைத்து, தங்கள் ப்ரக்ருதியைத் தொடர்ந்த தம் புத்தியால் வேதார்த்தங்களுக்கு விருத்தமான சில பொருள்களை ஊஹித்து, அவற்றை ப்ரபந்தமாக்கி (நூலாக்கி) வெளியிட, இப்பொழுதும் கூடச் சில புருஷர்கள் அந்தப் பரம்பரையில் சேர்ந்து வேத விருத்தமான அப்பொருள்களையே உண்மையென்று நினைத்து, பாஷண்டிகளாய்த் (வேத தர்மத்தில் நம்பிக்கை இல்லாதவர்களாய்த்) திரிகின்றார்களல்லவா? 

புருஷச்ரேஷ்டனே! புருஷர்கள் என்னுடைய மாயையினால் மதிமயங்கி, தங்கள் கர்மத்திற்கும், ருசிக்கும் தகுந்தபடி புருஷார்த்தங்களை (ஜீவாத்மாவால் விரும்பி அடையப்படக்கூடியவை) பலவாறு கூறுகிறார்கள். சிலர், ஸ்வர்க்காதி ஸுகங்களை அனுபவிக்கையே புருஷார்த்தமென்றும், யாக, தான, ஹோமாதி ரூபமான தர்மமே அதற்கு உபாயமென்றும் சொல்லுகிறார்கள். வேறு சிலர், ஸ்வர்க்காதி ஸுகத்தையே புருஷார்த்தமாக ஒப்புக்கொண்டு, காவ்ய (கவிதை), நாடக அலங்காரங்களை இயற்றுவதால் உண்டான புகழே அதற்கு ஸாதனமென்று சொல்லுகிறார்கள்.  

காம (ஆண், பெண் சேர்த்தி இன்ப) சாஸ்த்ரங்களை இயற்றினவர்கள், காமமே புருஷார்த்தமென்றும் அதற்குப் பல உபாயங்கள் (வழிகள், ஸாதனங்கள்) உண்டென்றும் சொல்லுகிறார்கள். சிலர் ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்கையாகிற கைவல்யமே புருஷார்த்தமென்றும், அதற்கு ஸத்யம், தமம் (வெளி இந்த்ரியங்களை அடக்குதல்), சமம் (உள் இந்த்ரியமான மனதை அடக்குதல்) இவை உபாயமென்றும் சொல்லுகிறார்கள். 

நீதி சாஸ்த்ரமறிந்தவர்கள், ஐச்வர்யமே (ஆளுமை, சொத்து) புருஷார்த்தமென்றும், ஸாம, தானாதிகள் (ஸாம – ஸமாதானம்; பேத – பிரிவினை ஏற்படுத்துதல்; தான – சில வசதிகளை அளித்தல்; தண்ட – எதிர்த்துப் போரிட்டு ஒடுக்குதல்) அதற்கு உபாயம் (வழி, ஸாதனம்) என்றும் சொல்லுகிறார்கள். சிலர் விபவத்துடன் (பெருமையுடன்) புஜிக்கையே (அனுபவிக்கையே) புருஷார்த்தமென்றும், அதற்குப் பணமே உபாயமென்றும் சொல்லுகிறார்கள். சிலர் யஜ்ஞம், தவம், தானம், ஏகாதசி உபவாஸம் முதலிய வ்ரதங்கள், சௌசம் (தூய்மை), ஆசமனம் முதலிய நியமங்கள், இந்த்ரிய நிக்ரஹம் (புலன் அடக்கம்) முதலிய யமங்கள் ஆகிய இவை புருஷார்த்த ஸாதனமென்று சொல்லுகிறார்கள். 

இந்த தர்மம் முதலிய உபாயங்களால் ஸாதிக்கப்படும் பலன்கள் கர்மத்தினால் ஸம்பாதிக்கப்படுபவை; ஆகையால், அநித்யங்கள் (நிலையற்றவை); துக்கத்தை மேல்வரும் பலனாகவுடையவை; அஜ்ஞானத்தையே (அறியாமையையே) முடிவாகவுடையவை; அற்பமான ஆநந்தத்திற்கிடமாய் இருப்பவை; அந்த ஆநந்த அனுபவ தசையிலும் (அந்த இன்பத்தை நுகரும் நிலையிலும்) துக்கத்துடன் கலந்திருப்பவை. 

க்ருஷி (வேளாண்மை) முதலிய கர்மங்களால் ஸம்பாதிக்கப்படும் பலன்கள் அநித்யங்களாய் (நிலையற்றவையாய்) இருப்பது போல், தர்மாதி கர்மங்களால் ஸாதிக்கப்படுகிற ஸ்வர்க்காதி பலன்களும் அநித்யங்களே (நிலையற்றவையே); மோக்ஷ ஸுகம் போல் நிலை நின்றிருப்பவை அன்று. தர்மாதி உபாயங்கள் க்ஷீணிக்கையில் (தீர்ந்து போகையில்), ஸ்வர்க்காதி பலன்களை இழந்து வரவேண்டுமாகையால், கடைசியில் துக்கத்திற்கே இடமாயிருக்கும். அனுபவிக்கும் தசையிலும் நம்முடைய புண்ய கர்மம் க்ஷீணிக்கையில் (முடியும் போது) நாம் இதினின்று விழவேண்டுமல்லவா? என்பதை நினைத்து பயப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டுமாகையால்,  துக்கம் கலந்தேயிருக்கும். 

ஸபைக்குத் தகுந்தவனே! அளவற்ற நித்ய ஆநந்த ஸ்வரூபனாகிய (நிலைநின்ற இன்ப வடிவானவனாகிய) என்னிடத்தில் நிலைநின்ற மனமுடையவனும், அற்பமான விஷய ஸுகங்கள் எல்லாவற்றிலும் விருப்பமற்றவனுமாகிய புருஷனுக்கு, என்னை அனுபவிப்பதால் உண்டாகும் ஸுகம், அற்பமான விஷய ஸுகங்களை விரும்புகிறவர்களுக்கு எங்கிருந்து உண்டாகும்? (மோக்ஷமாகிற புருஷார்த்தமும் அதற்கு ஸாதனமான பக்தி யோகமும் மிகவும் ஸுகமாய் இருக்குமாகையால், தர்மாதி உபாயங்கள் அவற்றின் பலன்கள் ஆகிய அவற்றைக் காட்டிலும் மிகவும் சிறந்தவை. இவற்றிற்குள்ள தாரதம்யம் (ஏற்றத்தாழ்வுகள்) அளவற்றது. ஸாதனமான பக்தி யோகமே மஹாநந்தமயமாய் இருக்குமாயின், அதன் பலனான மோக்ஷம் மஹாநந்தமாயிருக்கும் என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?) 

நிரதிசய ஆநந்த ஸ்வரூபனான (எல்லையற்ற இன்ப வடிவான) என்னுடைய த்யானத்தினால் ஸந்தோஷமுற்ற மனமுடையவனும், எல்லாவற்றிலும் என்னுடைய பாவனை நடையாடப் பெறுகையால் எல்லாவற்றையும் ஸமமாகப் பார்ப்பவனும், என்னைத் தவிர ஆசைப்படத்தகுந்த வஸ்து மற்றொன்றும்  இல்லாதவனும், வெளி இந்த்ரியங்களை வெல்லுகையாகிற தமம், உள் இந்தரியத்தை வெல்லுகையாகிற சமம் இவையுடையவனுமாகிய புருஷனுக்கு, எல்லாத் திசைகளும், எல்லாக் காலங்களும், ஸுகமயமாயிருக்கும். 

என்னிடத்தில் மனம் செல்லப்பெற்றவன், என்னைத் தவிர மற்ற ப்ரஹ்ம ஆதிபத்யத்தையாவது (சதுர் ப்ரஹ்மாவின் தலைமைத் தன்மையையாவது), இந்திர பதவியையாவது, பூமண்டலத்திற்கெல்லாம் ப்ரபுவாயிருக்கையாகிற ஸார்வபௌம (பேரரசன்) பதத்தையாவது, பாதாள ஐச்வர்யத்தையாவது, அணிமாதி யோகஸித்திகளையாவது (அணிமா முதலிய எட்டு பலன்கள் - அவையாவன- 

  1. அணிமா - சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல் 

  2. மஹிமா - பெரிதாக்கிக்கொள்ளுதல் 

  3. லகிமா - லேசாகச் செய்தல் 

  4. கரிமா - கனமாக்கிக்கொள்ளுதல் 

  5. வசித்வம் - எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல் 

  6. ஈசத்வம் - எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல் 

  7. ப்ராப்தி - நினைத்த பொருளைப் பெறுதல் 

  8. ப்ராகாம்யம் - நினைத்தவிடம் செல்லும் வல்லமை), 

ஆயிரம் சொல்லியென்? மோக்ஷத்தையாவது விரும்ப மாட்டான். (அவனுக்கு நான் ப்ரியனாயிருக்கிறேன் என்பது மாத்ரமே அன்று; அவனும் எனக்கு மிகவும் அன்பனாயிருப்பான்) உன்னைப் போன்ற ஞானிகள் எனக்கு அன்பிற்கிடமாயிருப்பது போல், ப்ரஹ்ம தேவனாவது, ருத்ரனாவது, ஸங்கர்ஷணனாவது, ஸ்ரீமஹாலக்ஷ்மியாவது என்னுடைய திவ்யமங்கள விக்ரஹமாவது எனக்கு அன்பிற்கிடமன்று. 

என்னையொழிந்த மற்ற விஷயங்களில் அபேக்ஷை (விருப்பம்) அற்றவனும், பரிசுத்தனும் இந்த்ரியங்களை அடக்கியாள்பவனும், எதிலும் வைரம் (பகைமை) இல்லாதவனும், என்னுடைய பாவனையால் எல்லாவற்றையும் ஸமமாகப் பார்க்கும் தன்மையனுமாகிய என் பக்தனை, நான் அவனுடைய பாததூளிகளால் புனிதனாக வேண்டுமென்னும் எண்ணத்துடன் எப்பொழுதும் தொடர்ந்து கொண்டேயிருப்பேன். என்னைத் தவிர ஆசைப்படத் தகுந்த வஸ்து மற்றொன்றில்லாதவர்களும், என்னிடத்திலேயே அனுராகம் (அன்பு) உற்ற மனமுடையவர்களும், அந்தக்கரணத்தை (மனதை) அடக்கியாள்கையாகிற சாந்தியுடையவர்களும், ஸமஸ்த ஜீவாத்மாக்களிடத்திலும் என்னுடைய பாவனையால் வாத்ஸல்யம் (தாய் பசுவிற்குக் கன்றிடத்தில், தாய்க்குத் தன் குழந்தையிடத்தில் உள்ள பரிவு) உடையவர்களுமாகிய பெரியோர்கள், காமங்களால் (சிற்றின்பமாகிய காதல் ஆசை) தீண்டப்படாத மதியுடை உடையவர்களாகி என்னை அனுபவிக்கையால் உண்டான ஸுகத்தை அனுபவிக்கின்றார்கள். 

நிஷ்காமர்களுக்கு (எதிலும் விருப்பமில்லாத மஹாயோகிகளுக்கு ) நேரக்கூடிய மோக்ஷ ஸுகத்தையும் கூட அவர்கள் அந்த ஸுகத்திற்கு ஈடாக நினைக்க மாட்டார்கள். என்னிடத்தில் பக்தியோகம் செய்யத் தொடங்கினவன், இந்த்ரியங்களெல்லாம் சப்தாதி விஷயங்களால் (உலக விஷயங்களால்) பாதிக்கப்படினும், தினந்தோறும் என்னிடத்தில் வளர்ந்து வருகின்ற பக்தியால் க்ரமத்தில் அவ்விஷயங்களை மறப்பானாகையால், அவற்றால் பரிபவிக்கப்பட (அவமானப்படுத்தப்பட) மாட்டான்.

பக்தி வளர்ந்து வருமாயின், சப்தாதி விஷயங்களைப் பற்றின நினைவு தலையெடுக்க ஒட்டாதபடி அதை அடக்கி விடும். இந்த பக்தியோகம் வளர்ந்து வருவதற்குத் தடையான பாபம் இருக்குமாயின், அது எப்படி வளர்ந்து வருமென்றால், சொல்லுகிறேன்; கேள். 

உத்தவனே! அக்னி சிறிதாயினும் கட்டைகளில் பற்ற விடப் பெற்று க்ரமமாக வளர்ந்து, ஜ்வாலைகளுடன் கூடி, கட்டைகளை எரித்து, பஸ்மம் செய்வதுபோல், என்னிடத்தில் விளையும் பக்தியும் தான் வளர்வதற்குத் தடையான பாபங்களை எல்லாம் போக்கி, நாள் தோறும் வளர்ந்து வரும். 

உத்தவனே! வளர்ந்த பக்தியோகம் என்னை வசீகரிப்பது (கவருவது) போல், தர்மம், ஜ்ஞானயோகம், கர்மயோகம், வேதாத்யயனம், தவம், தானம் ஆகிய இவற்றில் எதுவும் என்னை வசீகரிக்க (கவர) வல்லதன்று. அன்றியே இவையெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் பக்தியோகம் போல் என்னை வசீகரிக்க வல்லவையாகமாட்டாது. 

ஸர்வாந்தராத்மாவும் (எல்லாவற்றையும் உள் இருந்து நியமிப்பவனும்), ஸத்புருஷர்களுக்கு (சான்றோர்க்கு) அன்பிற்கிடமுமான நான், ஒரு ப்ரயோஜனத்தையும் விரும்பாமல், இடைவிடாமல் ஒருவாறாகச் செய்கிற பக்தியோகத்தினால் உள்ளபடி அறியத் தகுந்தவனாவேன். (பக்தி யோகம் என்னை வசப்படுத்துவது தவிர என் ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ஸ்வபாவங்களை (குணங்களை) உள்ளபடி அறிவதற்கும் காரணமாம்) என்னிடத்தில் விளையும் பக்தி, சண்டாளர்களையும் ஜாதி தோஷத்தினின்று புனிதமாக்கும். 

தர்மம், ஸத்யம், தயை, வித்யை, தவம் இவை அமைந்திருப்பினும், என்னிடத்தில் பக்தி அற்றிருப்பானாயின், அவன் தன்னை நன்றாகப் புனிதம் செய்து கொள்ள வல்லனாக மாட்டான். பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹ (திருமேனி) த்யானத்தினால் மயிர்க்கூச்சம், மன உருக்கம், கண்களில் ஆநந்தநீர் இவை உண்டாக மாட்டாவாயின், பக்தியோகம் எவ்வாறு கைகூடினதாம்? பக்தியோகம் கைகூடாதாயின், அந்தக்கரணம் (மனது) எப்படி சுத்தமாம்? வாக்கு தழதழக்கை , மனம் உருகுகை, ஒருகால் ரோதனம் செய்கை (அழுதல்), அடிக்கடி சிரிக்கை, ஒருகால் வெட்கமின்றி உரக்கப் பாடுகை, ஒரு கால் கூத்தாடுகை ஆகிய இவை எவனிடத்தில் இருக்கின்றனவோ, அவனே என்னிடத்தில் பக்தியுடையவனாவான். அவன் தன்னுடைய காட்சி முதலியவைகளால் ஜகத்தையெல்லாம் புனிதம் செய்கின்றான். 

நெருப்பில் காய்ச்சின பொன் அழுக்கைத் துறந்து, நிர்மலமாயிருக்கையாகிற தன்னுருவத்தைப் பெறுவது போல், ஜீவாத்மாவும் என்னிடத்தில் பக்தியோகத்தினால் ஜ்ஞானத்தை மறைப்பதாகிய அனுசய கர்மத்தை (பல பிறவிகளாகத் தொடர்ந்து வருகிற புண்ய, பாப வினைகளைத்) துறந்து, அப்பால் என்னை அடைந்து, தன் ஸ்வரூபத்தையும் பெறுகின்றான். 

இந்த ஜீவன், என்னுடைய புண்ய கதைகளை உட்கொண்ட பாட்டுக்களைக் கேட்கக் கேட்கவும், அவற்றைப் பாடப்பாடவும், கர்மங்களை உதறிப் பரிசுத்தனாவான். அவ்வாறு பரிசுத்தனாகவாக, ரோகாதிகளால் (வியாதியால்) தோஷமுற்ற கண் மை இடுவதனால் தோஷம் நீங்கி உருவங்களை அறியவல்லதாவது போல், ப்ரக்ருதியைக் காட்டிலும் ஸூக்ஷ்மனான (நுட்பமான) ஜீவாத்மாவைக் காட்டிலும் ஸூக்ஷ்மமான பரமாத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி அறிவான். சப்தாதி விஷயங்களையே நினைத்துக் கொண்டிருப்பானாயின், மனம் அவற்றிலேயே மழுங்கிப் போவதுபோல், என்னுடைய குணங்களைக் கேட்பது, அவற்றைப் பாடுவது முதலியவற்றால் என்னையே நினைத்துக் கொண்டிருப்பானாயின், மனம் என்னிடத்திலேயே நிலை பெறும். 

ஆகையால், ஸ்வப்னம் (கனவு) போலும், மனோரதம் (மனதின் விருப்பம்) போலும் நிலையற்றதான சப்தாதி விஷயங்களின் (உலக விஷயங்களின்) நினைவைத் துறந்து, என்னையே பாவித்துக்கொண்டு, மனத்தை என்னிடத்திலேயே நன்கு நிலைபெறச் செய்வாயாக. மெல்ல மெல்ல இந்திரியங்களை அடக்கிக் கொண்டு, ஸ்த்ரீகளின் (பெண்களின்) ஸஹவாஸத்தையும் (தொடர்பையும்), அவர்களோடு ஸஹவாஸம் (தொடர்பு) உடையவர்களுடைய ஸஹவாஸத்தையும் (தொடர்பையும்) வெகு தூரத்தில் துறந்து, ஜன ஸஞ்சாரம் (ஆள் நடமாட்டம்) இன்றி நிர்பயமுமான (பயமற்ற) இடத்தில் உட்கார்ந்து, சோம்பலில்லாமல் என்னைச் சிந்திக்கவேண்டும். புருஷனுக்கு ஸ்த்ரீகளிடத்தில் (பெண்களிடத்தில்) பற்று செய்வதனாலும், அவர்களிடத்தில் பற்றுடையவர்களோடு ஸஹவாஸத்தினாலும் (தொடர்பினாலும்), எவ்வளவு பந்தமும், வருத்தமும் உண்டாகுமோ, அவ்வளவு பந்தமும், அவ்வளவு வருத்தமும் மற்ற விஷயங்களில் பற்று செய்வதனால் உண்டாகாது. ஆகையால், அவற்றை அவச்யமாய்த் துறக்க வேண்டும்.

உத்தவர் சொல்லுகிறார்:- தாமரைக் கண்ணனே! உன்னுடைய த்யானத்தின் அங்கங்கள் எவையோ, மோக்ஷத்தில் இச்சையுடையவன் உன்னை எத்தகைய திவ்ய  மங்கள விக்ரஹத்துடன் (திருமேனியுடன்) த்யானிக்க வேண்டுமோ, உன்னுடைய திவ்ய ஆத்ம ஸ்வரூபம் (சிறந்த இயற்கைத் தன்மை) எத்தகையதோ, இவையெல்லாவற்றோடும் கூடிய த்யானத்தை எனக்கு விசதமாய்ச் (விரிவாய்ச்) சொல்ல வேண்டும்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- மேடு பள்ளமில்லாத ஸமமான இடத்தில் பரப்பின ஆஸனத்தில் ஸுகமாக உட்கார்ந்து, சரீரத்தை நேராக நெரித்து, கைகளை மடியில் வைத்து, கண்களை மூக்கு நுனியில் நிறுத்தி, பூரகம் (மூச்சை உள் இழுத்தல்), ரேசகம் (மூச்சை வெளி விடுதல்), கும்பகம் (மூச்சை உள் நிறுத்துதல்) என்னும் க்ரமத்திலாவது “ரேசகம், பூரகம், கும்பகம் என்னும் க்ரமத்திலாவது ப்ராணவாயுவின் ஸஞ்சார மார்க்கமாகிய இடை (இடது) பிங்கலை (வலது) என்னும் நாடிகளின் (தண்டு வடத்தில் உள்ள நரம்புகளின்) த்வாரங்களைச் சுத்தி செய்ய வேண்டும். 

இந்திரியங்களை வேறு விஷயங்களில் போக வொட்டாமல் அடக்கிக்கொண்டு, மெல்ல மெல்ல ப்ராணாயாமங்களை அப்யஸிக்க வேண்டும் (பயிற்சி செய்ய வேண்டும்). ஓம் காரம் ஹ்ருதயத்தில் தாமரைத் தண்டின் நூல்போல் ஸூக்ஷ்மமான ஓயாத நாதத்துடன் இருப்பதாகவும், அந்த ஓம் காரம் ப்ராணவாயுவினால் மேல் கிளம்பினதாகவும், மீளவும் அது ஹ்ருதயத்தில் அடங்கினதாகவும் த்யானிக்க வேண்டும். 

இவ்வாறு ப்ரணவ (ஓம்) அனுஸந்தானத்துடன் (நினைவுடன்) மூன்று ஸந்த்யைகளிலும் (காலை, நடுப்பகல், மாலை) பத்துத் தடவைகள் ப்ராணாயாமங்களை அப்யஸிப்பானாயின் (பயிற்சி செய்வானாயின்), ஒரு மாதத்திற்குள் ப்ராணவாயுவை வென்றவனாவான். சரீரத்திற்குள் (உடலில்) ஹ்ருதய கமலம் காம்பு மேலாக அதோமுகமாய் (முகம் கீழுமாய்) மூடிக்கொண்டு தொங்குகின்றது. அது மலர்ந்து, எட்டு இதழ்களோடும், காயோடும், காம்பு கீழாய், முகம் மேலானதாகவும், அதில் காயின் மேல் ஸூர்யமண்டலம், சந்த்ர மண்டலம், அக்னிமண்டலம் இவைகள் ஒன்றின் மேல் ஒன்றாயிருப்பதாகவும் த்யானிக்க வேண்டும். அந்த அக்னி மண்டலத்தினிடையில் த்யானத்திற்கு அனுகூலமான மேல் சொல்லுகிற என்னுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை (திருமேனியை) த்யானிக்க வேண்டும். 

என்னுடைய திவ்யமங்கள விக்ரஹம், கறுப்பு நிறமுடையது. அனுக்ரஹம் (நன்மை செய்யும்) வடிவில் தோன்றும். ஆகையால், ப்ரஸன்னமாயிருக்கும். மற்றும், அழகிய முகமும், நீண்டழகிய நான்கு புஜங்களும், மிகவும் அழகியவற்றிலும் அழகிய கழுத்தும், அழகிய கபோலங்களும், அழகிய வெண்முறுவலும் அமைந்து, ஒன்றோடொன்று ஒத்திருப்பவைகளான கர்ணபாசங்களில் (காதுகளில்) திகழ்கின்ற மகரகுண்டலங்கள் இடம் பெற்று, பீதாம்பரம் உடுத்து, மேகம் போல் கறுத்து, ஸ்ரீவத்ஸம், ஸ்ரீமஹாலக்ஷ்மி இவைகளுக்கு இருப்பிடமாகி, சங்கம், சக்ரம், கதை, பத்மம், வனமாலை இவைகளால் அலங்காரமுற்று, சிலம்பு தண்டைகளால் திகழ்கின்ற பாதங்களையுடையதும், கௌஸ்துப மணியின் ஒளியோடு கூடியதும், பேரொளியுடன் விளங்குகின்ற கிரீடம், கைவளை, அரைநாண்மாலை, தோள்வளை இவைகள் அணிந்திருப்பதுமாகி, ஸர்வாங்க (எல்லா உருப்புகளும்) ஸுந்தரமும் (அழகாய்), ஹ்ருதயத்திற்கு இனியதுமாயிருக்கும். மற்றும், திருமுகமும், திருக்கண்களும் அருள் வெள்ளமிட்டிருக்கையால், மிகவும் அழகாயிருக்கும்; மற்றும், அதிஸுகுமாரமாய் (மிகவும் மென்மையாய்) இருக்கும்.

இத்தகையதான அந்த திவ்யமங்கள விக்ரஹத்தை (திருமேனியை) பாதம் முதல் சிரஸ்ஸு வரையில் ஸமஸ்த அங்கங்களிலும் மனத்தை ஊன்ற வைத்துக்கொண்டு த்யானம் செய்யவேண்டும். இந்திரியங்களைச் சப்தாதி விஷயங்களினின்றும் (உலக விஷயங்களிலிருந்தும்)  மனத்தினால் இழுத்து, ஸாரதியைப் (தேரோட்டி) போன்ற புத்தியினால் அந்த மனமாகிற குதிரையையும் ஸங்கல்ப விகல்பங்களாகிற (எண்ணங்களாகிற) கெட்ட வழிகளில் போகவொட்டாமல் தடுத்து, தைர்யத்துடன் எப்பொழுதும் என்னிடத்தில் நிலை பெறச் செய்யவேண்டும். 

திருப்பாதம் முதல் திருமுடி வரையிலுள்ள எல்லா அங்கங்களிலும்  நிறைந்திருக்கிற அந்த மனத்தை இழுத்து, ஒரே அங்கத்தில் நிலை பெறச் செய்யவேண்டும். மற்ற அங்கங்களைச் சிந்திக்கலாகாது. அழகிய புன்னகை அமைந்த திருமுக மண்டலத்தையே த்யானிக்க வேண்டும். வேறு விஷயங்களில் போகவொட்டாமல் தடுக்கப்பெற்று, அந்தத் திருமுக மண்டலத்தில் நிலைநின்றிருக்கிற மனத்தை அதினின்றும் இழுத்து, ஆகாயம் போல் நிர்மலமாயிருப்பதும் (அழுக்கற்று இருப்பதும்), அளவற்றதும், தோஷங்கள் தீண்டப் பெறாததும், கல்யாண குணங்களெல்லாம் நிறைந்திருப்பதுமாகிய திவ்யாத்மஸ்வரூபத்தில் (இயற்கைத் தன்மையில்) நிறுத்த வேண்டும்.

என்னுடைய ஸ்வரூப, (இயற்கைத் தன்மை), ரூபங்களை (குணங்களை) அனுஸந்திப்பதில் (நினைப்பதில்) நிலை நின்று, த்யானம் செய்கிற தன்னையாவது, த்யானத்தையாவது, மற்ற எதையும் சிந்திக்கலாகாது. முதலில் என்னுடைய திவ்யாத்மஸ்வரூபத்தை (இயற்கைத் தன்மையை) த்யானிக்கும் பொழுது ஸமஸ்த ஆத்மாக்களுக்கும் அந்தராத்மாவான என்னிடத்தில் ஜீவாத்ம ஸ்வரூபத்தையும், ஸூர்யாதிகளின் ஒளி, தீபம் முதலியவற்றின் ஒளியில் கலந்திருப்பது போல், ஜீவாத்மாவினிடத்தில் கலந்திருக்கிற என்னையும் த்யானிக்கவேண்டும். இவ்வாறு த்யானிப்பானாயின், என்னிடத்தில் மனம் நிலைபெறப் பெறுவான். இவ்வாறு இடையூறுகளால் தடைபடப் பெறாமல் தீவ்ரமாய் வளர்ந்து வருகின்ற த்யானத்தினால், என்னிடத்தில் மனத்தை நிலைப்படுத்துகிற யோகிக்கு, தேஹாத்ம ப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் – மனக்கலக்கம்), ஸ்வதந்த்ராத்ம ப்ரமம் (நாம் பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள் என்ற மனக்கலக்கம்) இவை விரைவில் அழிந்து போகும். 

பதினான்காவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக