சனி, 10 ஜூலை, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 319

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – பதிமூன்றாவது அத்தியாயம்

(ஸத்வ குணமே தலையெடுக்கில் ஜ்ஞானம் உண்டாகுமென்பதையும், ஸத்வாதி குணங்கள் கழியும் விதத்தையும் கூறுதல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஸத்வம், ரஜஸ்ஸு, தமஸ்ஸு என்னும் இவை ப்ரக்ருதியின் பரிணாமமான (மாற்றமாகிற) மனத்தின் குணங்களேயன்றி, ஜீவாத்மாவிற்கு இயற்கையில் ஏற்பட்ட குணங்களல்ல. (ப்ராக்ருதமான மனத்தின் ஸம்பந்தத்தினால் ஏற்பட்டவையாகையால், ஸத்வாதி குணங்கள், ஒளபாதிகங்கள் (ஒரு காரணத்தை முன்னிட்டு ஏற்பட்டவை) ஆகையால், அவற்றை ஸுகமாக வெல்ல முடியும்). முதலில் ஸத்வகுணத்தை வளரச்செய்து கொண்டு, அதனால் ரஜஸ், தமோ குணங்களைப் போக்க வேண்டும். அந்த ஸத்வ குணத்தினாலேயே அதைப் போக்க வேண்டும். (ஸத்வ குணத்தினால் ஜ்ஞானம் உண்டாகச் செய்து கொண்டு, அந்த ஜ்ஞானத்தினால் ஸத்வாதி குணங்கள் தீண்டப் பெறாமையாகிற மோக்ஷத்தைப் பெறுகையில், ஸத்வ குணமும் தானே கழிந்து போகும்). 

ஸத்வ குணத்தை வளர்த்திக் கொண்டால், அதனால் என்னிடத்தில் ப்ரீதியாகிற பக்தியென்னும் தர்மம் வளர்ந்து வரும். ஸாத்விகமான (மிதமானதும், சுவை உடையதுமான) ஆஹாரங்களைப் (உணவைப்) புசித்துக் கொண்டு வருவானாயின், ஸத்வ குணம் வளரும். அதனால் என்னிடத்தில் ப்ரீதியாகிற பக்தி என்னும் தர்மம் தினந்தோறும் அப்யாஸம் (பயிற்சி) செய்ய இடம் கொடுக்கும். ஸத்வ குணம் தலையெடுத்தாலும், அது நேரே ரஜஸ், தமோ குணங்களைப் போக்க மாட்டாது. பின்னையோ என்றால், ஸத்வ குணம் என்னிடத்தில் பக்தி வளரச் செய்ய அந்த பக்தியென்னும் தர்மம், ரஜஸ், தமோ குணங்களைப் போக்கும். இவ்வாறு பக்தியை வளர்க்கும் படியான ஸத்வ குணத்தைக் காட்டிலும் மோக்ஷத்தை விளைப்பதற்குரிய மேலான உபாயம் மற்றொன்றும் இல்லை. 

ரஜஸ், தமோ குணங்கள் போயினும், அவற்றிற்கு மூல காரணமான அனாதி புண்ய, பாபங்கள் அப்படியே இருந்து கொண்டு, மோக்ஷத்திற்குத் தடை செய்யுமாகையால், ஸத்வ குணத்தை மோக்ஷத்திற்கு மேலான உபாயமென்று எவ்வாறு சொல்ல முடியுமென்றால், சொல்லுகிறேன். 

ரஜஸ், தமோ குணங்கள் போகையில், அவற்றிற்கு மூல காரணமான புண்ய, பாப ரூபமான அதர்மமும் உடனே தொலைந்து போகும். ஆகையால், ஸத்வ குணம் தடையின்றி மோக்ஷத்தை விளைக்குமென்பதில் ஸந்தேஹம் இல்லை. (பாபம் போல் புண்யமும் பலனை விளைத்து, மோக்ஷத்திற்குத் தடை செய்யுமாகையால், புண்ய, பாபங்களிரண்டையும் அதர்மமென்று சொல்லத் தட்டில்லை.) (ஸத்வ குணத்தை வளர்ப்பதற்கு ஸாத்விக ஆஹாரங்கள் மாத்ரமே காரணமென்பதில்லை. பின்னையோவென்றால்) 

  1. வேதங்கள், பாஞ்சராத்ரம், இறைவனின் மகிமையை விளக்கும் புராணங்கள், ராமாயண, மகாபாரத இதிகாசங்கள், ஆகமங்கள் ஆகியவற்றைப் படித்து கேட்டு உணர்தல்

  2. சாது ஜனங்களுடனான தொடர்பு

  3. கங்கை முதலிய புண்ய தீர்த்தங்களுக்குச் செல்லுதல்

  4. ஏகாந்தமாய் (தனிமையில்) வாசம் செய்வது

  5. பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் (விடியற்காலை 4.30 – 5.15 மணி) அதிகாலை நேரத்தில் எழுந்திருப்பது

  6. பல அபிஸந்தியில்லாமல் (பலனை எதிர்பார்க்காமல் செய்யும் கர்மம்)

  7. சௌக்லம், ஸாவித்ரம் யாஜ்ஞிகம் என்னும் மூவகைப்பட்ட ஜன்மத்தை அதாவது ஞான ஜன்மத்தைப் பெறுதல்

  8. பகவானை தியானித்தல்

  9. பகவானின் மந்திரத்தைச் சொல்லுதல்

  10. தாபம் (சங்கு, சக்ர இலட்சினை), புண்ட்ரம் (திருமண், ஸ்ரீசூர்ண குறியீடு) உள்ளிட்ட ஐந்து ஸம்ஸ்காரங்களைச் செய்தல்

ஆகிய இவை பத்தும் ஸத்வ குணத்தை வளர்ப்பதற்குக் காரணங்களாம். 

(ஸாத்விகமான ஆகமங்களையே அப்யஸிக்க (பயில) வேண்டுமன்றி, ராஜஸங்களும், தாமஸங்களுமான ஆகமங்களை அப்யஸிக்கல் (பயிலுதல்) ஆகாது. ஆத்மாக்களுக்கு ஸத்வ குணம் விளைவது பகவானுடைய கடாக்ஷ (கடைக்கண் பார்வைக்கு) அதீனம் (உட்பட்டது) ஆகையாலும், அப்பகவான் அப்ராக்ருதமான சுத்த ஸத்வத்திற்கு இடமாகையாலும், அவனை அறிவிக்கும் புராணாதிகள் ஸாத்விகங்கள். மற்றவை ராஜஸங்களும், தாமஸங்களும் என்று அறிக. ஆகையால், ஸாத்விக புராணாதிகளை அப்யஸித்தால், ஸத்வ குணம் தலையெடுக்கும். ராஜஸ, தாமஸாதி புராணங்களை அப்யஸித்தால், ரஜஸ், தமோ குணங்களே தலையெடுத்து அழிந்து போவானாகையால், அவற்றை ஆதரிக்கலாகாது.

ஸத்புருஷர்களோடு ஸஹவாஸம் (தொடர்பு) செய்ய வேண்டும். சப்தாதி விஷயங்களில் (உலக விஷயங்களில்) மனம் சென்ற மூடர்களோடு இணங்கலாகாது. கங்கை முதலிய புண்ய தீர்த்தங்களைப் பணிய வேண்டுமன்றி, கந்தோதகம், ஸுரோதகம் முதலியவற்றை அணுகலாகாது. ஏகாந்தமான ப்ரதேசத்தில் (தனிமையான இடத்தில்) வாஸம் செய்ய வேண்டுமன்றி, மத்யபானம், ஸ்த்ரீ ஸம்போகம் (பெண்ணுடன் சேர்க்கை), சூதாட்டம் முதலியவை நடையாடும்படியான ப்ரதேசங்களில் வஸிக்கலாகாது. ப்ராஹ்ம முஹூர்த்தம் (விடியற்காலை 4.30 – 5.15 மணி) முதலிய காலங்களே ஸத்வ குணத்தை வளர்ப்பவைகளன்றி, அர்த்தராத்தம் (நள்ளிரவு) முதலிய காலங்கள் அன்று. ஒரு பலனையும் உத்தேசிக்காமல் கேவலம் பகவானுடைய முக மலர்த்தியையே எதிர்பார்த்துச் செய்யும் கர்மங்களே ஸத்வ குணத்தை வளர்க்குமன்றி, பலன்களை விரும்பிச் செய்யும் கர்மங்கள் அத்தகையவையாக மாட்டாது. 

சௌக்ல ஸாவித்ராதி ஜன்மமே ஸத்வகுணத்தின் அபிவ்ருத்திக்கு (வளர்ச்சிக்கு) ஹேதுவாம் (காரணமாம்) அன்றி, சைவ தீக்ஷை முதலிய ஜன்மம் அத்தகையதாகாது. ஷாட்குண்ய பூர்ணனான (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸ்ரீமஹா விஷ்ணுவின் த்யானமே ஸத்வ குணம் தலையெடுப்பதற்குக் காரணமாமன்றித் தேவதாந்தரங்களின் (மற்ற தேவதைகளின்) த்யானம் அத்தகையதாகாது. ஸ்ரீமஹாவிஷ்ணுவை நினைவு மூட்டும் மந்த்ரமே ஸத்வ குணம் விளைவதற்கு ஹேதுவாம் (காரணமாம்) அன்றித் தேவதாந்தரங்களை நினைவு மூட்டும் மந்த்ரம் அதற்கு ஹேதுவாகாது. 

தாபம், புண்ட்ரம் முதலிய பஞ்ச ஸம்ஸ்காரமே ஸத்வ குணத்திற்கு ஹேதுவாம் (காரணமாம்) அன்றி, சைவ ஆகமங்களில் ப்ரஸித்தமான முத்ரிகா ஷட்கம், ருத்ராக்ஷ கங்கணம் முதலியவற்றைத் தரிக்கையாகிற ஸம்ஸ்காரம் அதற்கு ஹேது (காரணம்) ஆகாது. 

இங்குச் சொன்ன ஆகமம் முதலியவை தவிர மற்றவை எல்லாம் ரஜஸ், தமோ குணங்களை வளர்க்குமேயன்றி, ஸத்வ குணத்தைச் சிறிதும் விளைக்கமாட்டாது. ஆகையால், அவற்றை ஆதரிக்கலாகாது. பகவானுடைய பக்தியோகத்தில் நிலை நின்ற பெரியோர்கள் எதெதைப் புகழ்ந்து சொல்லுகிறார்களோ, அதுவெல்லாம் ஸாத்விகம் என்றுணர்க. அவர்கள் எதெதைப் பழித்துச் சொல்லுகிறார்களோ, அதுவெல்லாம் தாமஸமென்றுணர்க. அவர்கள் எதெதைப் புகழாமலும், பழிக்காமலும், உபேக்ஷித்து (பொருட்படுத்தாமல்) இருக்கிறார்களோ, அதுவெல்லாம் ராஜஸம் என்றுணர்க. 

புருஷன் ஸத்வ குணம் தலையெடுப்பதற்காக ஸாத்விகமான ஆஹாரம் முதலியவற்றையே அப்யஸித்துக் (பழக்கிக்) கொண்டு வரவேண்டும். அவ்வாறு ஸத்வ குணம் வளர்ந்து வருமாயின், அதனால் பகவத் பக்தி ரூபமான தர்மமும், அதனால் பகவானுடைய ஸ்வரூப (இயற்கையான தன்மை), ஸ்வபாவங்களின் (குணங்களின்) உண்மையைப் பற்றின அறிவும், அவனைப் பற்றின நிலை நின்ற நினைவும், சப்தாதி விஷயங்களை (உலகியல் இன்ப விஷயங்களைப்) பற்றின நினைவுகள் நீங்கப் பெறுகையும் உண்டாம். மூங்கிற் புதரில் மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்வதனால் உண்டான அக்னி, தான் எதினின்று உண்டாயிற்றோ அந்த மூங்கிற் புதரையே தன் ஜ்வாலைகளால் தஹித்து (எரித்து), தானும் அணைந்து போகின்றது. 

இவ்வாறே ஸத்வாதி குணங்களின் ஏற்றக் குறைவினால் உண்டான தேஹமும், அந்த மூங்கிற் புதரில் உண்டான அக்னியின் செயலைப் போன்ற செயலுடையதாகி, தனக்கு ஹேதுவான (காரணமான) ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களைப் போக்கித் தன்னைப் போன்ற மற்றொரு தேஹம் விளைவதற்கு ஹேதுவான (காரணமான) செயல்கள் எவையுமின்றித் தானும் முடிந்து போகின்றது.

உத்தவர் சொல்லுகிறார்:- மனுஷ்யர்கள் பெரும்பாலும் சப்தாதி விஷயங்களே (உலகியல் இன்ப விஷயங்களே) ஆபத்துக்களுக்குக் காரணமென்பதை அறிகின்றார்கள். ஸ்ரீகிருஷ்ணனே! ஆயினும், நாய், கழுதை, ஆடு இவைகளைப் போல் அந்த சப்தாதி விஷயங்களேயே (உலகியல் இன்ப விஷயங்களையே) மீளவும் ஏன் அனுபவிக்கின்றார்கள்? (பள்ளத்தில் விழுவது, அனர்த்தத்திற்கு (கெடுதிக்குக்) ஹேது (காரணம்) என்று தெரிந்தவன் எவனேனும் அப்பள்ளத்தில் விழுவானோ?) ஆண் நாய்கள் விரட்டப் பெறினும், பெண் நாய்களைத் தொடர்கின்றன. ஆண் கழுதைகள், பெண் கழுதைகள் கால்களால் உதைக்கினும், அவற்றைத் தொடர்கின்றன. ஆடுகள், கொலையிடத்திற்குக் கொண்டு போகும் பொழுதும், பெண்ணாட்டைப் பார்த்து அதைத் தொடர்ந்தோடுகின்றன. அவ்வாறே ப்ராணிகள் அனர்த்தத்தை (தீமையை) அறிந்தும், சப்தாதி விஷயங்களையே (உலகியல் இன்ப விஷயங்களையே) மேன்மேலும் அனுபவிக்கின்றார்களே. இதற்குக் காரணம் என்னவோ அதை எனக்குச் சொல்லுவாயாக)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஆத்ம ஸ்வரூபத்தின் உண்மையை உணர்வதில் ஊக்கமற்றவனுக்கு, ஹ்ருதயத்தில் தேஹத்தை நானென்று நினைக்கும்படியான (ஆத்மாவென்று ப்ரமிக்கும்படியான) அன்யதா (நேர் எதிர் தட்டான) ஜ்ஞானம் (அறிவு) உண்டாகிறது. (ஜலத்திற்கு அக்னி ஸம்பந்தத்தினால் சுடுகை உண்டாவது போல், தேஹத்திற்கும், ஆத்மாவுக்கும் ஸம்பந்தத்தினால், “நான் இளைத்திருக்கிறேன். நான் பருத்திருக்கிறேன்” என்னும் அஹங்காரம் (நான் என்ற எண்ணம்) தேஹத்தில் உண்டாகிறது). அந்த அன்யதா ஜ்ஞானத்தினால், ஸாத்விக அஹங்கார கார்யமான மனம், கோரமாயிருப்பதும், ரஜோ குணத்தின் கார்யமுமாகிய காமத்தை ஏற்றுக்கொள்கின்றது. (அந்தக் காமத்திற்கு விரோதம் நேரிடில், விரோதம் செய்கிறவர்களிடத்தில் கோபத்தையும் ஏற்றுக் கொள்கின்றது.) 

ரஜோ குணம் அலையச் செய்யும் தன்மையதாகையால், அதன் ஸம்பந்தமுடைய மனத்திற்கு ஸங்கல்ப, விகல்பங்கள் என்கிற வியாபாரங்கள் உண்டாகின்றன. (ரஜோ குணம் செயல்களில் மூட்டி விடும் தன்மையது. தமோ குணம் அச்செயல்களிலுள்ள தோஷங்களைத் தெரியவொட்டாமல், மறைக்கும் தன்மையது. ஸங்கல்பமாவது “நான் மனுஷ்யன், நான் பசு” என்னும் ஆத்ம அபிமானத்திற்கு அனுகுணங்களான (ஏற்ற) ஹேய (தீய) வஸ்துக்களில் போக்யமென்னும் புத்தி. விகல்பமாவது பூமாலை, சந்தனம், தாம்பூலம், பெண்டிர் முதலியவற்றின் உருவங்களிலுள்ள வேறுபாட்டை ஆராய்கை.) 

போக்யம் (இனிமையானது) என்னும் புத்தியாகிற அந்த ஸங்கல்பத்தினால் போகங்களில் விருப்பமாகிற காமம் உண்டாகிறது. தேஹத்தையே (உடலையே) ஆத்மாவாக ப்ரமித்து, போக்ய வஸ்துக்களிலுள்ள ஸௌந்தர்ய (அழகு), மாதுர்யாதி (இனிமை) குணங்களை த்யானித்துக் கொண்டிருக்கும் மூடனுக்கு, அந்த த்யானத்தினால் அந்தக் காமம் பொறுக்க முடியாததாய் இருக்கும். (அது “இதை அனுபவித்தே தீரவேண்டும்” என்னும் படியான நிலையை விளைக்கும். அவ்வாறு பொறுக்க முடியாத காமத்திற்கு வசப்பட்ட ஜீவன், “நாம் போக்ய (அனுபவிக்கும்) வஸ்துக்களை (பொருட்களைப்) பெறவேண்டும் என்று முயற்சி செய்யினும், அது மேன்மேலும் துக்கத்தையே விளைக்கும்” என்று தெரிந்தும், இந்திரியங்களை அடக்கியாள முடியாமல் ரஜோ குண வேகத்தினால் மதிமயங்கி, போக்ய (அனுபவிக்கும்) வஸ்துக்களை (பொருட்களைப்) பெற வேண்டுமென்று புண்ய, பாப கர்மங்களைச் செய்கின்றான்.) 

(அனர்த்த ஹேது (கெடுதிக்குக் காரணம்) என்று தெரிந்தும், சப்தாதி விஷயங்களை (உலகியல் இன்ப விஷயங்களை) அனுபவிக்க வேண்டுமென்று மேன்மேலும் முயற்சி செய்வதற்குக் காரணம் ரஜோ குண வேகத்தினால் மதிமயங்கி, இந்திரியங்களை அடக்கியாள முடியாமையே). (இப்படியாயின், விஷயங்கள் அனர்த்த ஹேது (கெடுதிக்குக் காரணம்) என்று தெரிந்தும், அவற்றில் வெறுப்புற்று மோக்ஷ உபாயங்களை (மோட்சத்திற்கான வழிகளை) அனுஷ்டிப்பதற்கு எவனுக்கும் அதிகாரம் உண்டாகாதே என்றால், சொல்லுகிறேன்; கேள்). 

ஜீவன் ரஜஸ், தமோ குணங்களால் மனம் கலங்கி, மதி மயங்குகிறான் என்பது வாஸ்தவமே (உண்மையே). ஆயினும், விவேகமுடையவன் ஸங்கல்ப, விகல்பங்களுக்கு உட்படாதபடி மனத்தைத் தடுத்து, சப்தாதி விஷயங்கள் அனர்த்த ஹேதுக்கள் (கெடுதிக்குக் காரணம்) என்பதை எப்பொழுதும் ஆராயும் தன்மையனாகி, சோம்பலின்றிச் சப்தாதி விஷயங்களில் கால் தாழலாகாது என்கிற ஊக்கத்துடன் இருப்பானாயின், அவன் அவ்விஷயங்களில் அழுந்த மாட்டான். (இவ்வாறு ரஜஸ், தமோ குணங்களுக்கு உட்பட்டு, விஷயங்களில் கால் தாழும் தன்மையனாயிருக்கச் செய்தேயும், அவற்றிற்கு உட்படாமையாகிற அதிகாரத்தை ப்ரயத்னப்பட்டு (முயற்சி செய்து) ஸம்பாதிக்க வேண்டும்) (தனக்கு அனுகுணமான (ஏற்ற) விஷயங்களில் இவை போக்யங்கள் என்னும் புத்தியே ஸங்கல்பம். அந்த ஸங்கல்பத்தினால் அவ்விஷயங்களில் இவற்றை அனுபவித்தே தீரவேண்டும் என்னும் விருப்பமாகிற காமம் உண்டாகிறது. 

விஷயங்களின் ஸௌந்தர்ய (அழகு), மாதுர்யாதி (இனிமை) குணங்களைச் சிந்திக்கையால், இவை போக்யங்கள் (அனுபவிக்கத் தக்கவை, இனிமையானவை) என்னும் புத்தி உண்டாகிறது. அவ்விஷயங்களின் தோஷங்களை ஆராய்ந்தால், அந்த போக்யதா (அனுபவிக்கத் தக்கவை என்ற) புத்தி (எண்ணம்) தானே நிவர்த்திக்கும் (விலகும்). பால் மதுரமாயினும், விஷம் கலந்திருக்கிறதென்று தெரியுமாயின், அதில் போக்யதா புத்தி மாறிப் போய்விடுமல்லவா? அவ்வாறே சப்தாதி விஷயங்கள் அனர்த்த ஹேது (கெடுதிக்குக் காரணம்) என்பதை நன்குணர்வானாயின், அவை போக்யங்கள் (அனுபவிக்கத் தக்கவை, இனிமையானவை) என்னும் புத்தி மாறிப்போகும்.) 

இவ்வாறு தோஷ தர்சனத்தினால் (குறைகளைக் காண்பதால்) சப்தாதி விஷய போகத்தில் விருப்பமற்றவன், மனவூக்கம் தவறுதலின்றி, காலை, மாலை முதலிய காலங்கள் கடந்தாலும், நெடுநேரம் உட்கார்ந்திருக்கினும் ச்ரமம் உண்டாகாதிருக்குமாறு அப்யாஸம் (பயிற்சி) செய்து, ஆஸனத்தை வென்று, ரேசகம் (மூச்சை உள் இழுத்தல்), பூரகம் (நிறுத்துதல்), கும்பகம் (வெளி விடுதல்) - (ப்ராணாயாமம்) முதலிய உபாயங்களால் ப்ராணவாயுவையும் வசப்படுத்திக் கொண்டு, சோம்பல் இல்லாமல் சுபாச்ரயமாகிய (நன்மை அளிக்கக்கூடியதும், த்யானத்திற்கு ஏற்றதுமான) என்னிடத்தில் மனத்தை மெல்ல மெல்ல நிலை நிறுத்தி த்யானிக்க வேண்டும். 

இடையில் விக்னங்கள் (தடைகள்) வரினும், அதற்காக வருந்தலாகாது. என் சிஷ்யர்களான ஸனகாதிகள், என்னிடத்தினின்று உபதேசம் பெற்று, ஸமஸ்த விஷயங்களினின்றும் மனத்தை இழுத்து, என்னிடத்திலேயே நன்றாக நிலை பெறும்படி செய்கையாகிற இவ்வளவே யோகமாமென்று பிறர்க்கும் உபதேசித்தார்கள்.

உத்தவர் சொல்லுகிறார்:- கேசவனே! (ப்ரஹ்ம, ருத்ரர்களுக்கும் நிர்வாஹகனே (நியமிப்பவனே)!) நீ ஸனகாதிகளுக்கு யோகத்தை எப்படி உபதேசித்தாயோ, அந்த ப்ரகாரத்தையும் (முறையையும்), எந்த உருவத்துடன் உபதேசித்தாயோ அந்த உருவத்தையும் அறிய விரும்புகிறேன். இதையெல்லாம் எனக்குச் சொல்லுவாயாக.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ப்ரஹ்மாவின் மனத்தினின்றும் உண்டான அவன் பிள்ளைகளாகிய ஸனகாதிகள் (சனகர், சனாநந்தர், சனத்குமாரர் மற்றும் சனத்சுஜாதியர் ஆகிய நால்வரும் ஸனகாதிகள்), தங்கள் தந்தையாகிய ப்ரஹ்மதேவனைப் பார்த்து ஒருவராலும் உள்ளபடி அறிய முடியாததும், அஸாதாரணமுமாகிய (சிறப்பானதுமான) யோக மார்க்கத்தைக் குறித்து வினவினார்கள்.

ஸனகாதிகள் சொல்லுகிறார்கள்:- ப்ரபூ! மனம் சப்தாதி விஷயங்களில் போக்யங்கள் (அனுபவிக்கத் தக்கவை, இனிமையானவை) என்னும் புத்தியினால் அழுந்துகிறது. அவ்விஷயங்களும் நினைவுக்கு விஷயங்களாகி மனத்தில் நிலை நின்றிருக்கின்றன. மோக்ஷத்தை விரும்புகிறவனுக்கு மனமும், சப்தாதி விஷயங்களுமாகிற (உலகியல் இன்ப விஷயங்களாகிற) இவை ஒன்றையொன்று பிரிந்திருக்கும் நிலை எப்படி நேரும்? இவ்விஷயத்தில் ஸம்சயமாய் (ஸந்தேஹம்) இருக்கிறது. இதை விவரித்துச் சொல்வீராக.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- பூதங்களைப் படைப்பவனும், ருத்ராதி தேவதைகளுக்கும் மேற்பட்ட தேவனுமாகிய ப்ரஹ்மதேவன், ஸனகாதிகளால் இவ்வாறு வினவப்பெற்று, அதற்கு உத்தரம் (பதில்) சொல்ல ஆலோசித்தும், கர்மத்தினால் குறுகின அறிவுடையவனாகையால், அதை அறிய முடியாதிருந்தான். அந்த ப்ரஹ்மதேவன், அந்தக் கேள்விக்கு உத்தரம் (பதில்) சொல்லி, அதினின்று கரையேற விரும்பி, என்னை தியானித்தான். அப்பொழுது தான் ஹம்ஸத்தின் (அன்னத்தின்) உருவம் கொண்டு, அந்த ப்ரஹ்மாவின் அருகில் சென்றேன். (ஹம்ஸம், ஜலத்தையும் பாலையும் தனியே பிரிக்க வல்லதாயிருப்பது போல், நானும் தகுந்த உபாயங்களை உபதேசித்துச் சப்தாதி விஷயங்களையும், மனத்தையும், தனியே பிரிக்க ஹம்ஸ ரூபியாய் அவ்விடம் சென்றேன்.) 

அப்பொழுது, அந்த ஸனகாதிகள் ப்ரஹ்மதேவனை முன்னிட்டுக்கொண்டு என்னிடம் வந்து, என் பாதங்களில் விழுந்து வணங்கி, நீ யாரென்று வினவினார்கள். அப்பொழுது என்னுடைய உண்மையை அறிய விரும்புகிற அம்முனிவர்களால் இவ்வாறு வினவப்பெற்ற நான், அவர்களுக்கு யாது மொழிந்தேனோ அதைச் சொல்லுகிறேன். உத்தவனே! ஊக்கத்துடன் கேட்டுணர்வாயாக. 

சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களாகிற) ஸமஸ்த வஸ்துக்களும் என்னால் படைக்கப்பட்டு, என்னையே அந்தராத்மாவாக உடையவையாகி, தங்கள் ஸத்தா (இருப்பு), ஸ்திதி (நீடிப்பு), ப்ரவ்ருத்திகள் (செயல்கள்) எல்லாம் என் அதீனமாய் (உட்பட்டு) இருக்கப் பெற்றவையாகையால், நானேயன்றி என்னைக்காட்டிலும் வேறுபட்டவையன்று. இது உங்களுக்குத் தெரியுமாயின், அப்பொழுது நீங்கள் என்னைக் குறித்து யாரென்று வினவினது, அந்தணர்களே! எவ்வாறு பொருந்தும்? (ஜகத்திலுள்ள சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களாகிற) வஸ்துக்களில் எதுவாயினும், என்னைக்காட்டிலும் வேறுபட்டிருக்குமாயின், அப்பொழுது நீங்கள் கேட்ட கேள்வி பொருந்தும். கேட்கிற நீங்களும் கூட என்னைக் காட்டிலும் வேறுபட்டவர்கள் அன்று. 

நான் எல்லாவற்றையும் சரீரமாகவுடையவனல்லவா? உங்களைச் சரீரமாகவுடைய நானே வினவினவன். கேவல சரீரத்திற்குப் பேசுந்திறமை உண்டோ? மறுமொழி கூறுபவனாக அபிமானிக்கப்பட்ட (எண்ணப்பட்ட) நானே சொல்ல வேண்டிய விஷயமாயிருக்கின்றேன். ஆகையால், வினவினவன், விடை கொடுப்பவன், விடைக்கு விஷயம் ஆகிய இவை எல்லாம் ஒன்றேயாகையால், வினா, விடைகள் சேரமாட்டாது.) அப்படியன்றிக் கேவலம் அசேதனமான (அறிவற்ற, ஜடப்பொருளான) சரீர (உடலை) மாத்ரத்தையே (மட்டுமே) அறிந்தவர்களாயின், அப்பொழுதும் இவ்வாறு வினவுவது சரியன்று. 

ஏனென்றால், நான் ஹம்ஸம் என்பது உங்களுக்கு ப்ரத்யக்ஷமாய்த் (நேராய் கண்களுக்குத்) தெரிகின்றது. ஆகையால், ஜாதியைப் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. என் ஜாதியில் பிறந்த ஸமஸ்த பூதங்களும், பஞ்ச பூதங்களால் ஏற்பட்டவைகளேயன்றி, வேறன்று. அவையெல்லாம் அவ்விஷயத்தில் ஸமானங்களே (ஸமமானவையே). ஆகையால், காரணத்தைப் பற்றியும் கேட்க இடமில்லை. மறுமொழி பெறுதற்காக வந்த உங்கள் கேள்விக்கு எவ்விதத்திலும் மறுமொழி கூற வேண்டிய அவச்யமில்லாமையால், அது வீண் கேள்வியே. 

யோக பரிசுத்தமான மனத்தினால் தேவ, மனுஷ்யாதி தேஹங்களைக் (உடல்களைக்) காட்டிலும், விலக்ஷணமே (வேறானதே) என்று அறியக்கூடிய ஆத்ம வஸ்துவும், அபரிசுத்தமான (தூய்மையற்ற) மனத்தினாலும் வாக்கு, கண் இவைகளாலும், மற்றுமுள்ள இந்திரியங்களாலும், அறியக்கூடிய அசேதன வஸ்துவும் (அறிவற்ற ஜடப்பொருளும்) ஆகிய இவையெல்லாம் எனக்குச் சரீரமாகையால் நானேயன்றி, என்னைக் காட்டிலும் வேறுபட்டு ஸ்வதந்தரமாய் (தன் இச்சைப்படி செயல்பட வல்லவையாய்) இருப்பதன்று. ஆகையால், ஸர்வாந்தராத்மாவான (எல்லாவற்றையும் உள் இருந்து நியமிக்கும்) நானே ஸமஸ்த சப்தங்களுக்கும், அந்த சப்தங்களால் உண்டாகும் அறிவுகளுக்கும், விஷயமாயிருப்பவன் என்று நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். 

பிள்ளைகளே! என்னை அந்தராத்மாவாகவுடைய ஜீவனுக்கு, தேஹ ஸம்பந்தம் (உடல் தொடர்பு) இருக்கும் பொழுது, மனம் ஸத்வாதி குணங்களின் பரிணாமமான சப்தாதி விஷயங்களில் நுழைகின்றது. அந்தச் சப்தாதி விஷயங்களும் (உலகியல் விஷயங்களும்), அம்மனத்தில் நுழைந்திருக்கின்றன. ஆகையால், சப்தாதி விஷயங்களும் (உலகியல் விஷயங்களும்) மனமும் ஆகிய இவ்விரண்டும் ஒன்றையொன்று விட்டுப் பிரிந்திருக்கமாட்டாது.

தேஹ ஸம்பந்தம் (உடல் தொடர்பு) இருக்கும் பொழுது, அடிக்கடி சப்தாதி விஷயங்களை (உலகியல் விஷயங்களை) அனுபவித்துக் கொண்டிருக்கையால் மனம், அவற்றில் நுழைகின்றது. அவ்விஷயங்களும் மனத்தை விடாமல் அதில் நுழைகின்றன. பூர்வ ஜன்ம ஸம்ஸ்கார (முன் பிறவிகளில் செய்த வினைகளின் ஆழ்ந்த மனப்பதிவுகள்) வசத்தினால், அவ்விஷயங்கள் தானே மனத்தில் ஸ்பஷ்டமாகத் (தெளிவாகத்) தோன்றுகின்றன. அந்த ஸம்ஸ்காரத்தைப் (மனப்பதிவுகள்) பற்றியே மனமும் அவற்றை மறவாமல் நினைத்துக் கொண்டே இருக்கின்றது. 

என்னுடைய உருவத்தை த்யானித்துக் கொண்டு வருவானாயின், ஒன்றையொன்று விட்டு நீங்கிப் போகும். (மனமும் சப்தாதி விஷயங்களை விடும். சப்தாதி விஷயங்களும் மனத்தை விடும்.) (ஜீவன் தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்) என்பதை ஆராய்கையும், மனம் சப்தாதி விஷயங்களை விட்டுப் பிரிகைக்குக் காரணமாம். ஆகையால், ஜீவனுடைய உண்மையை ஆராய்ந்தறிய வேண்டும். அந்த ஜீவ ஸ்வரூபத்தைச் (இயற்கைத் தன்மையைச்) சொல்லுகிறேன்; கேட்பீர்களாக.)

ஜாகரம் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) என்னும் இம்மூன்று அவஸ்தைகளும் (நிலைகளும்) ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற ப்ரக்ருதியின் குணங்களால் விளையும் மனோ வியாபாரங்கள். ஜீவன் அந்த அவஸ்தைகளைக் (நிலைகளைக்) காட்டிலும் விலக்ஷணனாகி (வேறானவனாகி), அவைகளுக்கு ஸாக்ஷியாய் (அவற்றில் ஈடுபடாமல் வெறுமனே பார்ப்பவனாய்) இருப்பவன். இவ்வாறு பெரியோர்கள் ஜீவ ஸ்வரூபத்தை (ஜீவாத்மாவின் இயற்கைத் தன்மையை) நிச்சயித்துச் சொல்லுகிறார்கள். 

தேஹ ஸம்பந்தம் (உடல் தொடர்பு), மனத்திற்கும், சப்தாதி விஷயங்களுக்கும் (உலகியல் விஷயங்களுக்கும்) அறுக்க முடியாத தொடர்ச்சியை விளைத்து, மனத்திற்கு ஸங்கல்ப விகல்பங்களை விளைக்குமாகையால், ஜாகரத ஆதியான (விழிப்பு முதலான) மூன்று அவஸ்தைகளையும் (நிலைகளையும்) இயற்கையில் கடந்திருக்கும் ஜீவனைச் சரீரமாகவுடைய என்னிடத்தில் மனத்தை நிலை நிறுத்துவானாயின், அம்மனம் சப்தாதி விஷயங்களில் போக்யதா புத்தியைத் துறக்கும். சப்தாதி விஷயங்கள் போக்யங்கள் (அனுபவிக்கக்கூடியவை) என்னும் புத்தி நீங்கினவுடனே மனத்திற்கும் சப்தாதி விஷயங்களுக்கும் உண்டான தொடர்ச்சியும் நீங்கி, மனம் பரிசுத்தமாம். 

ஜ்ஞானத்தையே வடிவாகவுடைய ஆத்மாவினிடத்தில் தேவ, மனுஷ்யாதி பேதங்கள் இருப்பதாக நினைக்கையும், ஈச்வரனுக்குப் பரதந்த்ரமான (உட்பட்ட) ஆத்மாக்களை ஸ்வதந்த்ரமென்று (தன் இச்சையாகச் செயல்பட வல்லவை என்று) நினைக்கையுமாகிற அஹங்காரம், பரம புருஷார்த்தமான மோக்ஷத்தைத் தடுக்கும்படியான தேஹ (உடல்) பந்தத்தை (கட்டை) விளைக்கின்றது. ஜீவன் இதை அறிந்து, ஸம்ஸார (உலகியல்) பந்தத்தினின்று (கட்டிலிருந்து) வெறுப்புற்று, ஜாகரம் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) என்கிற மூன்று அவஸ்தைகளைக் (நிலைகளைக்) கடந்து, ப்ரக்ருதி விலக்ஷணமும் (அறிவற்ற ஜடப்பொருட்களை விட வேறானதும்), பரமாத்ம ஸ்வரூபமுமாகிய ஆத்ம ஸ்வரூபத்தை ஆராய்வானாயின், “ஸம்ஸார பந்தத்தினின்று (உலகியல் கட்டிலிருந்து) நான் எப்படி விடுபடுவேன்” என்னும் சிந்தையைத் துறப்பான். 

தேஹத்தைக் (உடலைக்) காட்டிலும் ஆத்மா வேறுபட்டவனென்பதை வெளியிடவல்ல யுத்திகளால் (ஆராய்ந்து அறிந்த காரணங்களால்) தேவ, மனுஷ்யாதி பேதங்கள் ஆத்மாவினிடத்தில் உண்டு என்கிற நினைவாகிற தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற எண்ணம்) எதுவரையில் நீங்காதிருக்குமோ, அதுவரையில் ஜீவன் விழித்துக் கொண்டிருப்பானாயினும், உண்மையை அறியானாகையால், அவன் தூங்குகிறானென்றே சொல்லவேண்டும். 

ஸ்வப்னம் (கனவு) காண்கிறவன், அது ஸ்வப்னம் (கனவு) என்று அறிய மாட்டான். ஜாகரத் அவஸ்தை (விழிப்பு நிலை) என்றே நினைப்பான். அவ்வாறே அஜ்ஞானத்தினால் (அறியாமையினால்) தேஹத்தையே (உடலையே) ஆத்மாவாக ப்ரமிக்கிறவன், அந்நினைவு ப்ரமம் (மனக்கலக்கம்) என்று தெரிந்து கொள்ள மாட்டான்; யதார்த்தம் (உண்மை) என்றே நினைப்பான். 

ஆகையால், தேஹ விலக்ஷணனான (உடலை விட வேறான) ஆத்மாவை எதுவரையில் உள்ளபடி அறிய மாட்டானோ, அதுவரையில் அவன் நிபுணனாயினும், அறியாத மூடனே ஆவான். ஆகையால், தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற எண்ணம்) அனர்த்தங்களுக்கு (கெடுதிக்கு) எல்லாம் இடமாயிருக்கும். எப்பொழுதும் ஜ்ஞானத்தையே வடிவாக உடைய ஆத்மாவுக்கு, தேவ, மனுஷ்யாதி தேஹ ஸம்பந்தம் (உடல் தொடர்பு) ஸ்வபாவ ஸித்தமாகாமல் (இயற்கையானதன்றி) வந்தேறி (வந்து சேர்ந்த ஒன்று) ஆகையாலே நித்யமாய் (நிலையானதாய்) இருப்பதன்று. அப்படி நித்யமாயிருக்குமாயின், முக்தாத்மாக்களுக்கும் அந்த தேவ, மனுஷ்யாதி தேஹ ஸம்பந்தம் (உடல் தொடர்பு) இருக்க வேண்டும். அவர்களுக்கோ அது கிடையாது. 

ஆகையால், அந்த தேவ, மனுஷ்யாதி தேஹங்களைப் பற்றி வருகிற பால்யம் (குழந்தை), யௌவனம் (இளமை), மனுஷ்யத்வம், ப்ராஹ்மணத்வம் முதலிய பேதங்களும், அவற்றைப் பற்றின அறிவுகளும், அவற்றிற்கு ஹேதுவான (காரணமான) மற்ற தோஷங்களும் பொய்யே. (ஒருவன் முத்துச் சிப்பியைப் பார்த்து வெள்ளி என்று ப்ரமிப்பானாயின், அது சிப்பியென்று அறிந்த பின்பு வெள்ளி என்னும் ப்ரமம் (மயக்கம்) நீங்கிப்போய்விடுமல்லவா. 

அவ்வாறே தேஹத்தை ஆத்மா என்று ப்ரமிக்கையாகிற அஹங்காரத்தினால் (நான் என்ற எண்ணத்தினால்) உண்டான தேவ, மனுஷ்யாதி ஆகார (உருவ) பேதமும் (வேறுபாடும்), அவற்றைப் பற்றின அறிவுகளும், அவற்றிற்கு ஹேதுவான (காரணமான) தோஷங்களும் (அறியாமை முதலிய குறைகளும்) அனாதி (ஆரம்பம் அற்றவை) ஆயினும், தேஹாத்ம ப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) நீங்கி ஆத்ம ஸ்வரூபம் தெளிவாக ஏற்படுமாயின், தானே நீங்கிப்போகும். ஆகையால், ஆத்ம ஸ்வரூபத்தை ஆராய்ந்த மாத்ரத்தில் அனாதியான அஹங்காராதிகள் எவ்வாறு நீங்குமென்று சங்கிக்கலாகாது. மற்றும், தேவ, மனுஷ்யாதி ஆகாரங்கள் (உருவங்கள்) ஆத்மாக்களிடத்தில் கிடையாது. அவை ப்ரக்ருதியின் பரிணாமங்கள் (மாற்றங்கள்). அவற்றைப் பற்றிய பேதங்கள் ஆத்மாக்களிடத்தில் இருப்பதாகத் தோன்றுவது பொய்யே.

ஆத்மாவிடத்தில் இருப்பனவாகத் தோன்றுகிற அவை, அவ்வாறு தோன்றுவதற்குக் காரணமான அஹங்காரம் முதலிய தோஷங்கள் நீங்குமாயின், தானே நீங்கும். பித்தத்தினால் கண் கலங்கினவனுக்கு, வெண்மையான சங்கு மஞ்சள் நிறமுள்ளதாகத் தோற்றினும், அவன் நல்ல சிகிட்சை செய்து பித்தம் தெளியப் பெறுவானாயின், அவனுக்குச் சங்கத்தில் இருப்பதாகத் தோற்றின மஞ்சள் நிறம் நீங்குமல்லவா? அவ்வாறே ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) என்கிற மூன்று அவஸ்தைகளையும் (நிலைகளையும்) கடந்த ஆத்மாவின் ஸ்வரூபத்தை ஆராய்ந்துணர்கையாகிற நல்ல உபாயத்தினால் நிச்சேஷமாக (முழுமையாக) அஹங்காரம் நிவ்ருத்திக்கையில், அதைப்பற்றி வருகிற தேவாதி ஆகாரங்களும் (உருவங்களும்), அவற்றைப் பற்றின பேதபுத்திகளும் (வேற்றுமை எண்ணங்களும்) நிவர்த்திக்கும் (நீங்கும்). 

எந்த ஜீவன் ஜாகரத் அவஸ்தையில் (விழித்துக்கொண்டிருக்கும் பொழுது) ஸமஸ்த இந்திரியங்களாலும், க்ஷணந்தோறும் மாறும் தன்மையுடைய சப்தாதி விஷயங்களை (உலகியல் விஷயங்களை) வெளியில் அனுபவிக்கிறானோ, அந்த ஜீவனே ஸ்வப்னத்தில் (கனவில்) ஜாகரத் அவஸ்தையில் (விழித்துக் கொண்டிருக்கும் பொழுது) அனுபவித்த விஷயங்களைப் போன்ற சப்தாதி விஷயங்களை அனுபவிக்கிறான். 

எந்த ஜீவன் ஸுஷுப்தியில் (ஆழ்ந்த உறக்கத்தில்) சப்தாதி விஷயங்களைப் (உலகியல் விஷயங்ளைப்) பற்றின அனுபவம் சிறிதுமின்றி வெறுமனே இருக்கிறானோ, அவ்வாறு ஜாகரம் (விழிப்பு) முதலிய மூன்று அவஸ்தைகளையுடைய (நிலைகளை உடைய) அந்த ஜீவன், ஜ்ஞானத்தையே வடிவாக உடையவனாகையால், எல்லா அவஸ்தைகளிலும் (நிலைகளிலும்) ஒருவாறாகவே இருப்பவன். அவன் ஜ்ஞானத்தையே ஸ்வரூபமும் (இயர்கைத் தன்மையாகவும்), ஸ்வபாவமுமாக (குணமாகவும்) உடையவன்.

படுத்து உறங்கின ஜீவனே எழுந்திருக்கிறானா? அல்லது வேறொரு ஜீவனா என்று ஸம்சயித்துப் (ஸந்தேஹப்பட்டு), படுத்துக்கொண்டு உறங்கினவன் சப்தாதி விஷயங்களும், மற்ற எல்லா உபாதிகளும் (சரீரம், இந்த்ரியம் முதலியன) விடுபட்டு, ப்ரஹ்மத்தினிடத்தில் சேர்ந்து விடுகிறானாகையால், அவனுக்கும், முக்தனுக்கும் (மோட்சத்தை அடைந்தவனுக்கும்) பேதம் (வேறுபாடு) இல்லை. அவனுக்கு முன் சரீர, இந்த்ரியாதி ஸம்பந்தமும் கிடையாது. ஆகையால், வேறொரு ஜீவனே எழுந்திருக்கிறான் என்று சிலர் ஸ்தாபிப்பது (உறுதிப்படுத்துதல்) சரியன்று.

எவன் படுத்துறங்கினானோ, அவனே மீளவும் எழுந்திருக்கிறான் என்றே கொள்ள வேண்டும். வேறொருவனென்று கொள்கையில், எழுந்திருக்கிறவனுக்கு முன் நினைவுகள் எவ்வாறு கூடும். தூங்கியெழுந்திருக்கிறவன், “நான் அப்பொழுது படுத்தேன். இப்பொழுது எழுந்தேன். நான் நேற்று இது செய்தேன். இது புசித்தேன். இப்படி இருந்தேன்” என்று நினைக்கிறானல்லவா. உறங்கினவனைக் காட்டிலும், எழுந்திருக்கிறவன் வேறொருவனாய் இருப்பானாயின், அவனுக்கு அந்நினைவுகள் எவ்வாறு ஸம்பவிக்கும்? 

மற்றும், படுத்துக் கொண்டுறங்கினவனை எந்தப் பெயரினால் அழைத்தார்களோ, அந்தப் பெயரைச் சொல்லியே தூங்கியெழுந்தவனையும் அழைக்கின்றான். அவனும் அந்தப் பெயரைத் தன்னுடையதென்று முன் போலவே ஏற்றுக் கொள்ளுகிறான். படுத்துறங்குகிறவன் அவ்வளவில் மோக்ஷம் பெறுவானாயின், சாஸ்திரங்களில் மோக்ஷத்திற்காக ஏற்பட்ட விதிகளெல்லாம் வீணாய் விடும். ஆகையால், எவன் படுத்துறங்குகிறானோ, அவனே எழுந்திருக்கிறானென்பது ஸித்தமாகின்றது (நிச்சயம் ஆகிறது). 

அந்த ஜீவன், ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களின் கார்யமான ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) என்கிற மூன்று அவஸ்தைகளுக்கும் (நிலைகளுக்கும்) ஸாக்ஷியாயிருப்பவன்; கர்ம நிமித்தமாக ப்ராக்ருதமான இந்திரியங்களைத் தூண்டும் தன்மையன். “இவ்வாறு மனத்திற்கு உண்டாகிற ஜாக்ரத், ஸ்வப்ன, ஸுஷுப்திகளென்கிற மூன்று அவஸ்தைகளும் அவரவர் கர்மானு குணமான என்னுடைய ஸங்கல்ப ரூப ஜ்ஞானத்தினால் சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) ஸமஸ்த ப்ரபஞ்சத்திற்கும் உபாதான காரணமாகிய மண் குடத்திற்கு மண் போல் material cause ஆகிய) என்னிடத்தில் உண்டாகின்றன. 

ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற மனோ குணங்களே அவற்றிற்கு நிமித்தம் (காரணம்)” என்று நன்றாக ஆராய்ந்து, ஸமஸ்த அனர்த்தங்களையும் (தீமைகளையும்) போக்குவதும், என்னைப் பெறுதற்கு ஸாதனமும், ஸமஸ்த ப்ரயோஜனங்களிலும் சிறந்ததுமாகிய என்னுடைய உபாஸனமாகிற (த்யானமாகிற) புருஷார்த்தத்தை நிச்சயித்துக்கொண்டு, “ஆத்மா, தேஹமா? அல்லது அதைக் காட்டிலும் விலக்ஷணமா (வேறானதா)? ஆத்மா ஸ்வதந்த்ரனா (தன் இச்சையாகச் செயல்பட வல்லவனா)? அல்லது பரதந்த்ரனா (பகவானுக்கு உட்பட்டவனா)” என்னும் இவை முதலாக மனத்தில் உதிக்கும் ஸம்சயங்களை (ஸந்தேஹங்களை) எல்லாம் அனுமானம் (ஊஹித்து அறிதல்), பெரியோர்களின் உரை இவைகளால் விளைந்த கூரிய அறிவாகிற கத்தியினால் அறுத்து, என்னைப் பணியவேண்டும். 

(தேஹங்கள், இந்திரியங்கள், சப்தாதி விஷயங்கள் இவை முதலில் ஸுக ரூபமாகத் தோன்றிலும், கடைசியில் துக்கத்தையே விளைப்பவைகளும், அநித்யங்களும் (நிலையற்றவைகளும்), ஹேயங்களுமாய் (தீயவைகளுமாய்) இருப்பவை என்னும் நியதியை (வழக்கை) ஆராய்ந்து, சாரீரக ஸூத்ரம் (ப்ரஹ்ம ஸூத்ரம்) முதலிய பெரியோர்களின் உரைகளால் வேதாந்தங்களின் பொருளை உள்ளபடி அறிந்து, தேஹாதிகளில் (சரீரம், இந்த்ரியம் முதலியவற்றில்) வைராக்யம் (பற்றின்மை) உண்டாகப் பெற்று, அந்த வேதாந்த விசாரத்தாலும் (உபநிஷத் முதலியவற்றில் கூறப்பட்டவற்றை ஆராய்ந்து அறிவதாலும்), வைராக்யத்தாலும் (பற்றின்மையாலும்) உண்டான அறிவினால், மனத்தில் உண்டாகிற ஸம்சயங்களை (ஸந்தேஹங்களை) எல்லாம் அறுத்து, “ஆத்மா தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்); ஈச்வரனுக்குப் பரதந்த்ரனே (உட்பட்டவனே) அன்றி, ஸ்வதந்த்ரன் (தன் இச்சைப்படி செயல்பட வல்லவன்) அன்று. அவனுடைய திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே, இவனுக்குப் புருஷார்த்தம் (அடையப்பட வேண்டியது). அதைப் பெறுதற்கு அவனே உபாயம்” என்று நன்றாக உணர்ந்து, அவனைப் பணிய வேண்டும்.) 

ஆத்மாவென்னும் ப்ரமத்திற்கும் (மனக்கலக்கத்திற்கும்), போக்யம் (அனுபவிக்க உரியது) என்னும் ப்ரமத்திற்கும், மனத்தின் வியாபாரங்களான ஸங்கல்ப விகல்பங்களுக்கும் இடமான தேவ, மனுஷ்யாதி தேஹங்கள், அவற்றிற்கு போக்யங்களான (இனியவைகளான) சப்தாதிவிஷயங்கள் (உலகியல் விஷயங்கள்) இவை முதலியவையெல்லாம் மிகவும் நிலையற்றவை; ஸ்வப்னத்தில் (கனவில்) காண்கிற வஸ்துக்கள் போல் நச்வரமாய் (நிலையற்றவையாய்) இருப்பவை. இவ்வாறே நமக்குப் புலப்படுகிறதாகையால், இதற்கு நாம் வேறொரு ப்ரமாணம் தேட வேண்டியதில்லை. அதைக் கொண்டு ப்ரபஞ்சமெல்லாம் இத்தகையதே என்று நிச்சயிக்கலாம்.

ஜீவாத்மாவின் ஸ்வரூபம் (இயற்கைத் தன்மை), கேவலம் ஜ்ஞான மயமாயிருப்பது. (ஜீவாத்மா ஜ்ஞானத்தையே ஸ்வரூபமாகவுடையவன். அவனுடைய குணமும் ஜ்ஞானமே.) அவன் அந்த ஸ்வரூப, ஸ்வபாவங்கள் (குணங்கள்) என்றும் மாறாமல் ஒருவாறாகவே இருக்கப் பெற்றவன். அத்தகையதான அந்த ஜீவாத்ம ஸ்வரூபம், தேவ, மனுஷ்யாதி ரூபமாய்ப் பலவாறாகத் தோன்றுகிறதேயன்றி, ஜீவாத்ம ஸ்வரூபத்தில் தேவ, மனுஷ்யாதி பேதம் (வேற்றுமை) கிடையாது. அந்த பேதம், ஸத்வ, ரஜஸ், தமஸ் என்று மூன்று வகைப்பட்ட ப்ரக்ருதியின் குணங்களுடைய பரிணாமத்தினால் (மாற்றத்தினால்) ஏற்பட்டது; ஸர்வஜ்ஞனும் (எல்லாம் அறிந்தவனும்), ஸர்வ சக்தியுமாகிய என்னுடைய ஸங்கல்ப ரூப ஜ்ஞானத்தினால் ஏற்படுகிற ஸ்வப்னம் (கனவு) போன்றது. 

ஸங்கல்ப விகல்பங்களுக்கிடமான மனமுடையவன் உறங்கும் பொழுது அந்த ஸங்கல்ப விகல்பங்களுக்குத் தகுந்தபடி ஸ்வப்னம் (கனவு) காண்கிறான். விழித்துக் கொண்ட பின்பு, அது மறைகின்றது. அவ்வாறே ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையை உணர்ந்தவனுக்கு, ஆத்மாவினிடத்தில் தோற்றுகிற தேவ, மனுஷ்யாதி பேதம் (வேறுபாடு) மறையும். “ஸ்வப்னம் காண்கிறவனுக்கு விழித்துக் கொண்டவுடனே அது மறைகின்றது. ஜீவன், ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையை உணரிலும், தேவ, மனுஷ்யாதி பேதம் மறையக் காணோமே” என்றால், அது மோக்ஷம் வரையில் தொடர்ந்து வருகின்ற பரமாத்ம உபாஸனத்தினால் (த்யானத்தினால்) மறையும். 

உண்மையை உணர்ந்தவனுக்கு அந்த பேதம் ஆத்மாவினிடத்தில் இருப்பதாகத் தோன்றாது. பரமாத்ம ஸங்கல்பத்தினால் ஏற்பட்ட காலம் வரும் பொழுது அது அடியோடு மறைந்து போகும். ஆகையால், சப்தாதி விஷயங்களினின்று கண்ணைத் திருப்பி, அவற்றில் விருப்பத்தையும் தொலைத்து, எவ்வித வ்யாபாரமுமின்றி த்யான யோகத்தில் இழிந்து, நித்யாநந்த ஸ்வரூபனான பரமாத்மாவை அனுபவித்துக்கொண்டு, தேஹத்தைப் (உடலைப்) பற்றின சிந்தையே இன்றி வெறுமனே இருக்க வேண்டும். 

இத்தகைய புருஷனுக்கு, முன்பு இது ஆத்மாவன்று என்னும் புத்தியுடன் துறக்கப்பட்ட தேஹம் (உடல்) முதலியது த்யான யோக ஸமயம் தவிர, படுத்தல், இருத்தல், புசித்தல் முதலிய சில ஸமயங்களில் அனுஸந்தானத்திற்கு (நினைவிற்கு) விஷயமாயினும், அந்த அனுஸந்தானம் (எண்ணம்) த்யான யோகத்தினின்று சலிப்பிக்கவும் (விலகவும்), மீளவும் தேஹ ஸம்பந்தத்திற்கு (உடல் தொடர்புக்கு) ஹேதுவான (காரணமான) தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம்) முதலிய ப்ரமத்தை விளைவிக்கவும் வல்லதாகாது. சிலர் கேவல வேதாந்த வாக்யார்த்த ஞானத்தினால் மோக்ஷமென்று சொல்லுகிறார்களே; அது பொருளன்றோ என்றால், அது பொருளன்று.

கேவலமான வாக்யார்த்த ஜ்ஞானத்தினால் மோக்ஷம் உண்டாகாது. த்யானமென்றும், உபாஸனமென்றும் சொல்லப்படுகிற விலக்ஷண (சிறந்த) ஜ்ஞானத்தினால் தான் மோக்ஷம் உண்டாகும். அந்த ஜ்ஞானமும் இரண்டு மூன்று தரம் ஆவ்ருத்தியானால் (மீண்டும் மீண்டும் செய்தால்) போதாது. சரீரம் உள்ளவரையில் அந்த ஜ்ஞானம் ஆவ்ருத்தியாக (மீண்டும் மீண்டும் தொடர) வேண்டும். (சரீரம் நீங்கும் வரையில் பகவானை த்யானித்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லையாயின், “மனம் கலங்கி, த்யான யோகமே நிறைவேறாமல் கெட்டுப்போகும்.) த்யான யோகம் கை கூடினவன், தேஹம் உட்கார்ந்திருப்பினும், எழுந்திருப்பினும் நச்வரம் (நிலையற்றது) ஆகையால் ஹேயம் (தீயது, விடத்தக்கது) என்று நினைத்து, அதை அனுஸந்திக்கவே (நினைக்கவே) மாட்டான். அவன் ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தவனாகையால், தேஹத்தைப்பற்றி நினைக்க இடமில்லை. 

மத்யபானம் செய்து (மது அருந்தி) அந்த மதத்தினால் (மயக்கத்தால்) விவேகமற்றவன், அரையில் உடுத்தின ஆடை தெய்வாதீனமாய் அவிழ்ந்து நழுவாதிருப்பினும், தெய்வ வசத்தினால் அவிழ்ந்து நழுவிப்போயினும், அதை நினையாதிருப்பது போல், த்யானயோகத்தில் ஆழ்ந்தவன், தேஹம் உட்கார்ந்திருப்பதையாவது, நின்றிருப்பதையாவது நினைக்க மாட்டான். “த்யானயோகம் எப்பொழுது நிறைவேறுமோ, அப்பொழுது செய்ய வேண்டிய கார்யம் மற்றொன்றும் இல்லாமையால், சரீரம் அப்பொழுதே நசித்துப் போகின்றதா? அல்லது, சில காலம் தொடர்ந்து வருமா?” என்று ஸம்சயம் (ஸந்தேஹம்) உண்டாகக்கூடும். அதைப்பற்றிச் சொல்லுகிறேன்; கேட்பாயாக. 

அந்தராத்மாவான என்னுடைய ஸங்கல்பத்தின் படி நடக்கிற ஸத்தா (இருப்பு), ஸ்திதி (நீடிப்பு), ப்ரவ்ருத்திகளை (செயல்பாடுகளை) உடைய தேஹம் தனக்கு ஹேதுவான ப்ராப்த கர்மம் (பலன் கொடுக்க ஆரம்பித்த முன் வினை) எதுவரையில் இருக்குமோ, அதுவரையில் ப்ராணனோடிருக்கும். “ஜ்ஞானிக்கும் மற்றவனுக்கும் சரீரம் கர்ம அவஸானத்தில் (முன் வினை முடியும்போது) கழியும்” என்பது துல்யமே (ஸமமே) அல்லவா? ஆயின் ஜ்ஞானிக்கு என்ன விசேஷம்? என்றால், சொல்லுகிறேன்; கேள் . 

த்யான யோகம் கைகூடப்பெற்று, ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி ஸாக்ஷாத்கரித்தவன் (த்யானத்தில் நேராகப் பார்த்தவன்), அந்த தேஹம் (உடல்) கழிந்த பின்பு, ஸ்வப்னத்தில் (கனவில்) காண்கிற வஸ்துக்களைப்போல் நச்வரமும் (நிலையற்றதும்), அனுபந்திகளோடு (உடன் சேர்ந்தவைகளோடு) கூடியதுமாகிய தேஹத்தை (உடலை) மீளவும் பெறமாட்டான். மற்றவனோ என்றால், மீளவும் தேஹத்தைப் பெறுவான். 

அந்தணர்களே! ஆத்ம உபாஸனம், பரமாத்ம உபாஸனம் இவற்றின் (ஜீவாத்மா, பரமாத்மா இவற்றை த்யானம் செய்வதன்) ரஹஸ்யத்தை உங்களுக்கு மொழிந்தேன். ஆயினும், இந்த ஆத்ம, பரமாத்ம உபாஸனங்கள் அனுஷ்டிக்க முடியாதவைகளாய் இருக்கின்றனவே என்று நினைக்கக் கூடும். ஆயினும், அப்படி நினைக்க வேண்டாம். என்னைச் சரணம் அடைவானாயின், அவனுக்கு என்னுடைய அனுக்ரஹத்தினால் இவை ஸுகமாகவே அனுஷ்டிக்கக் கூடியவைகளாயிருக்கும். நான் யஜ்ஞங்களுக்கு நிர்வாஹகனான (நியமிப்பவனான) ஸ்ரீமஹாவிஷ்ணுவே. அத்தகைய நான் மோக்ஷ தர்மத்தை உங்களுக்கு உபதேசிக்கும் பொருட்டு வந்தேனென்று தெரிந்து கொள்வீர்களாக.

ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களே! ஆத்மோபாஸனம், பரமாத்மோபாஸனம் ப்ராணிகளுக்கு ஹிதம் செய்கையாகிற ஸத்யம், புண்ய கர்மம், வெளியிந்திரியங்களை அடக்கியாளும் திறமை, வைராக்யம் முதலிய ஸம்பத்து, புகழ், உள்ளிந்திரியத்தை அடக்குகை ஆகிய இவற்றிற்கெல்லாம் நானே நிர்வாஹகன் (நியமிப்பவன்). ஹேய (தீய) குணங்கள் தீண்டப் பெறாதவனும், என் ப்ரயோஜனத்தை எதிர்பாராமல், பிறர் துக்கத்தைப் போக்கும் தன்மையனும், அந்தராத்மாவும், அன்பனும், ஹிதத்தையே செய்பவனுமாகிய என்னை வைஷம்யம் (வேறுபாடு) இல்லாமையாகிற ஸாம்யம், ஆநந்தம் முதலிய ஸமஸ்த கல்யாண குணங்களும் அடைகின்றன. 

இவ்வாறு ஹம்ஸரூபியான என்னுடைய உபதேசத்தினால் ஸனகாதி முனிவர்கள் ஸந்தேஹமெல்லாம் தீர்ந்து, மிகுந்த பக்தியுடன் என்னை ஆராதித்து, ஸ்தோத்ரங்களால் துதித்தார்கள். அந்த மஹார்ஷிகளால் நன்கு பூஜித்து நன்கு துதிக்கவும் பெற்ற நான், ப்ரஹ்மதேவன் பார்த்துக் கொண்டிருக்கையில் என் ஸ்தானத்திற்கு வந்து சேர்ந்தேன்.

பதின்மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக