ஒன்பதாவது ஸ்கந்தம் - பத்தாவது அத்தியாயம்
(ஸ்ரீராமாவதார வ்ருத்தாந்தத்தினைக் கூறுதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கட்வாங்கனுடைய பிள்ளை தீர்க்கபாஹு. தீர்க்கபாஹுவின் பிள்ளை ரகு. அவன் பிள்ளை தசரதன். ஸாக்ஷாத் பரப்ரஹ்மமென்று சொல்லப்படுகிற பரமபுருஷன் அவனுக்குப் பிள்ளையாகப் பிறந்தான். அவன், ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்களென்று பெயர் பூண்டு, தன் ஸங்கல்பத்தினால் நான்கு வகையாகப் பிறந்தான். மன்னவனே ! “ஸீதையின் மணவாளனாகிய அந்த ஸ்ரீராமபிரானுடைய சரித்ரத்தை, தத்வதர்சிகளான (ஆத்ம, பரமாத்ம தத்வங்களை அறிந்த) வால்மீகி முதலிய மஹர்ஷிகள், விஸ்தாரமாக வர்ணித்திருக்கிறார்கள். நீயும் அதைப் பலவாறு கேட்டிருப்பாய். ஆகையால், நான் அதை விரித்துச் சொல்ல வேண்டிய அவச்யமில்லை. ஆயினும், சுருக்கமாகச் சொல்லுகிறேன்” கேட்பாயாக.
அந்த ஸ்ரீராமபிரான், தந்தையின் வார்த்தையைப் பாதுகாக்கும் பொருட்டு, ராஜ்யத்தைத் துறந்து, தன் காதலியான ஸீதையின் கை படுவதையும் பொறுக்கமாட்டாதவைகளும், தாமரை மலர்போல மிக்க ஸுகுமாரங்களுமான (மென்மையான) தன் பாதங்களால் நடந்து, வனத்திற்குச் சென்று; ஸுக்ரீவ, லக்ஷ்மணர்களால் வழி நடந்து வந்த ச்ரமங்களெல்லாம் தீரப்பெற்று; லக்ஷ்மணனால் காது, மூக்குகள் அறுப்புண்டு கோபமுற்ற சூர்ப்பணகையால் ஆசை மூட்டப்பெற்ற ராவணன், தன் மனைவியான ஸீதையைப் பறித்துக்கொண்டு போக; அவளைப் பிரிந்த வருத்தம் பொறுக்கமாட்டாமையால், புருவத்தை நெரிக்க, அதைக்கண்டு பயந்த ஸமுத்ர ராஜனுடைய வசனத்தினால் ஸமுத்ரத்தில் அணை கட்டி; லங்கையைச் சேர்ந்து; துஷ்டர்களான (கொடியவர்களான) ராவணாதிகளாகிற வ்ருக்ஷங்களைக் (மரங்களைக்) காட்டுத்தீபோல் கொளுத்தி, பஸ்மம் செய்து (சாம்பலாக்கி); மீண்டும் ஸீதையுடன் கோஸல தேசத்திற்கு வந்து, பட்டாபிஷேகம் பெற்று, பூமியை ஆண்டு வந்தானல்லவா? இந்த மஹானுபாவன், நம்மைப் பாதுகாப்பானாக. விச்வாமித்ர மஹர்ஷியின் யாகத்தில், தம்பி லக்ஷ்மணன் பார்த்துக்கொண்டிருக்கையில், மாரீசன் முதலிய ராக்ஷஸ ச்ரேஷ்டர்களை வதித்த ஸ்ரீராமபிரான் நம்மைப் பாதுகாப்பானாக.
மன்னவனே! ஸீதையின் ஸ்வயம்வர மண்டபத்தில், உலகத்திலுள்ள வீரர்கள் அனைவரும் சேர்ந்திருக்கிற ஸபையில், உறுதியுடையதும், பளுவாயிருப்பதும் (அதிக எடை உடையதும்), முன்னூறு பேர்களால் எடுத்துக் கொண்டு வரப்பட்டதுமாகிய, ருத்ர தனுஸ்ஸை எடுத்து, நாணேற்றி இழுத்து, இளம் யானை கரும்புத்தடியை முறிப்பது போல முரித்துவிட்ட, இந்த ஸ்ரீராமபிரான், நம்மைப் பாதுகாப்பானாக. தனக்குத் தகுந்த குணம், சீலம், வயது, உருவம், அழகு, இவையுடையவளும், ஸீதையென்னும் பெயர் பூண்டு ஜனக வம்சத்தில் தோன்றினவளும், முன்பு தன் மார்பில் இடம் கொடுத்து வெகுமதிக்கப் பெற்றவளுமாகிய, ஸ்ரீமஹாலக்ஷ்மியை, வில்லை நாணேறிடுகையாகிற பந்தயத்தினால் ஜயித்து, மீண்டு தன் பட்டணத்திற்குப் போகும் பொழுது வழியில், வில்லை முறித்த கோஷம் (ஒலி) கேட்டு, மனம் கலங்கப்பெற்றவரும், இருபத்தோரு தடவைகள் பூமியில் க்ஷத்ரியப் பூண்டுகளே (பயனற்ற செடிகளே) இல்லாமல் அழிந்து போகும்படி செய்தவருமான, பரசுராமருடைய பெரும் கர்வத்தைப் போக்கின அந்த ஸ்ரீராமபிரான், நம்மைப் பாதுகாப்பானாக.
அவன் ஸத்யமாகிற பாசத்தினால் கட்டுண்டவனும், பெண்டிர்க்கு உட்பட்டவனுமாகிய, தந்தையின் ஆஜ்ஞையைச் சிரத்தில் வஹித்துப் பற்றற்ற ப்ராணன்களைத் துறப்பது போல, ராஜ்யத்தையும், செல்வத்தையும், ப்ரீதியுள்ள நண்பர்களையும், வீடு, வாசல்களையும் துறந்து, மனைவியோடும், தம்பியோடும் கூடி வனத்திற்குச் சென்றான். ராவணனுடைய உடன் பிறந்தவளாகிய சூர்ப்பணகை மதி (புத்தி) கெட்டு, ஸீதையை எடுத்துக்கொண்டு போக விரும்ப, அவளுடைய காது, மூக்குகளைக் அறுத்து, அவளுடைய உருவத்தை விரூபமாக்கி (அழகற்றதாக்கி), கரன், தூஷணன், த்ரிசிரன் முதலிய அவன் பந்துக்களைக் கொன்று, ஒருவர்க்கும் தடுக்க முடியாத வில்லைக் கையில் ஏந்தி, அவ்வனத்தில் வருந்தினாற்போல் வாஸம் செய்துகொண்டிருந்தான். பிறகு, சூர்ப்பணகை ராவணனிடம் சென்று, ஸீதையின் அழகையும், அவள் ராமனுடன் வனத்திற்கு வந்திருக்கும் வ்ருத்தாந்தத்தையும் அறிவிக்க, அவன் அவள்மேல் காமவிகாரம் (காதல்) கொண்டு, அவளைப் பறிக்க விரும்பித் தான் நேரில் அவ்விடம் போகப் பயந்து, மாரீசனை அனுப்ப, அவனும் ராவணனுடைய நியோகத்தினால் (கட்டளையினால்) அற்புதமான ஒரு மானுருவம் பூண்டு, ராமனுடைய ஆச்ரமத்திற்கு அருகாமையில் உலாவ, ஸீதையும் அதைக் கண்டு விரும்ப, ராமன் அதைத் தொடர்ந்து செல்ல, மானுருவம் பூண்ட மாரீசனும் ராமனை வஞ்சித்து (ஏமாற்றி) ஆச்ரமத்தினின்று நெடுந்தூரம் இழுத்துக்கொண்டு போகையில், ருத்ரன் தக்ஷரை அடித்தாற்போல, மாயமறிந்த ராமன், விரைவாக அம்மாரீசனைப் பாணத்தினால் அடித்தான்.
அப்பொழுது, லக்ஷ்மணனும் ராமனைத் தொடர்ந்து செல்ல, அவ்விருவரும் இல்லாத ஸமயம் பார்த்து, ராக்ஷஸ அதமனாகிய ராவணன், வனத்தில் செந்நாய் போல வந்து, ஸீதையைப் பறித்துக்கொண்டு போகையில், ராமன் காதலியைப் பிரிந்து லக்ஷ்மணனுடன் கூடித் துக்கித்தவன் போன்று, ஸ்த்ரீகளிடத்தில் மனப்பற்று செய்பவர்களின் கதி இத்தகையதென்பதை வெளியிட்டுக் கொண்டு, வனத்தில் ஸஞ்சரித்தான். ராவணன் ஸீதையை எடுத்துக்கொண்டு போகும்பொழுது, வழியில் அவனைத் தடுத்து ஸீதையை விடுவிக்க முயன்று, அவனால் அடியுண்ட ஜடாயுவுக்கு, தஹன (இறுதிக்கடன்) ஸம்ஸ்காரம் செய்து, கபந்தனைக் கொன்று, வானரர்களோடு ஸ்னேஹம் செய்து, வாலியைக் கொன்று, அவ்வானரர்களால் தன் காதலியான ஸீதையின் கதியை அறிந்து, ப்ரஹ்ம ருத்ரர்களால் பூஜிக்கப்பட்ட பாதார விந்தங்கள் உடையவனாயினும், மனுஷ்யனாக அவதரித்திருக்கிறானாகையால், தன் மஹிமையை வெளியிடாமல், தான் வல்லமை (சக்தி) அற்றவன் போல வானர ச்ரேஷ்டர்களுடைய (முக்யர்களுடைய) ஸைன்யங்களோடு (படைகளுடன்) ஸமுத்ரக்கரைக்குச் சென்றான். அங்கு, ஸமுத்ரராஜனைச் சரணம் அடைந்து, மூன்று இரவுகள் உபவாஸமிருந்து, எதிர்பார்த்தும் அவன் தோன்றாமையால், கோபித்து, கண்கலங்கி, கடைக்கண்ணோக்கத்தை விழவிட, அவ்வளவில் சரமாரி பொழிந்தாற் போல முதலைகளும், மகரமீன்களும் பயந்து, பயத்தினால் கோஷம் அடங்கவும் பெற்று நிற்க, ஸமுத்ரராஜன் பூஜைக்கு வேண்டிய வஸ்துக்களைச் சிரத்தின்மேல் எடுத்துக்கொண்டு உருவத்துடன் வந்து தோன்றி, பாதார விந்தங்களில் விழுந்து இவ்வாறு மொழிந்தான்.
ஸமுத்ரராஜன் சொல்லுகிறான்:- பெருமையமைந்தவனே! எங்கும் நிறைந்த பரமபுருஷனே! நீ ப்ராயோபவேசம் (மரணம் அடையும் வரை உண்ணா நோன்பு) செய்திருக்கையில், உன்னை மூடபுத்தியர்களாகிய (அறிவிலிகளாகிய) நாங்கள், இதுவரையில் நிர்விகாரனும் (எந்த மாற்றமும் அடையாதவனும்), ஜகத்திற்கெல்லாம் ப்ரபுவுமாகிய ஆதிபுருஷன் என்று அறியாதிருந்தோம். இப்பொழுது தெரிந்தது. உன் ஸங்கல்பத்தின்படி நடப்பதாகிய ஸத்வ குணத்தினின்று தேவ கணங்களும், அத்தகைய ரஜோ குணத்தினின்று ப்ரஜாபதிகளும், தமோ குணத்தினின்று ருத்ராதிகளும் உண்டானார்கள். ஸத்வாதி குணங்களுக்கு நியாமகனான (நியமிப்பவனான) அந்தப் பகவான் நீயே என்று இப்பொழுது நான் நினைக்கின்றேன். நீ இஷ்டப்படி ஜலத்தைக் (நீரைக்) கடந்து சென்று, விஸ்ரவஸ் என்னும் ப்ரஜாபதியின் மலம் (அழுக்குப்) போன்றவனும், மூன்று லோகங்களையும் அழப்படுத்துகிறவனுமாகிய ராவணனை வதித்து, உன் பத்னியைப் பெறுவாயாக. வீரனே! உனக்கு என் ஜலம் (நீர்) தடையன்று. ஆயினும், உன் புகழ் பரவும் பொருட்டு என் ஜலத்தின் (நீரின்) மேல் அணை கட்டுவாயாக. திசைகளையெல்லாம் ஜயித்த மன்னவர்கள், நீ அணை கட்டினதைக் கண்டு, இது ஒருவராலும் செய்யமுடியாத செயலென்று, உன் புகழைப் பாடுவார்கள்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீராமன் ஸமுத்ர ராஜனுடைய வசனத்தை அவ்வாறே அபிநந்தித்து (வரவேற்று, மகிழ்ந்து), வானர வீரர்களால் அடிக்கப்பட்ட வ்ருக்ஷங்களின் (மரங்களின்) நுனிகளையுடைய பற்பல பர்வத (மலை) சிகரங்களால் ஸமுத்ரத்தில் அணை கட்டி, ஸுக்ரீவன், நீலன், ஹனுமான் முதலிய பல வானரர்களுடன் முன்னமே ஹனுமானால் கொளுத்தப்பட்ட லங்கா பட்டணத்திற்குள் விபீஷணன் காட்டின வழியின்படி நுழைந்தான். வானர வீரர்களின் ஸைன்யம் (படை) அப்பட்டணத்தில் நுழைந்து, விளையாடுமிடங்களையும், உணவுக்கிடங்கு முதலிய இடங்களையும், கருவூலங்களையும், வீட்டு வாசல்களையும், பட்டணத்து வாசல்களையும், ஸபைகளையும், உப்பரிகை (மாடக்கள்) முதலிய இடங்களின் முன் கட்டடங்களையும், கொடுங்கைகளையும், திண்ணை முதலிய இடங்களையும், த்வஜங்களையும், பொன்குடங்களையும், நாற்சந்தி வீதிகளையும், இடித்துப் பாழ்செய்தது.
அவ்வாறு வானர வீரர்களால் அழிக்கப்பட்ட அந்நகரம் யானைக் கூட்டங்களால் கலக்கப்பட்ட தாமரையோடை போன்றிருந்தது. ராக்ஷஸர்களுக்கு ப்ரபுவான ராவணன், வானர வீரர்கள் தன் பட்டணத்தை அழிப்பதைக் கண்டு, நிகும்பன், கும்பன், தூம்ராக்ஷன், துர்முகன், ஸுராந்தகன், நராந்தகன் முதலியவர்களில் ஒவ்வொருவனையும் அவனவனுக்கு ஏற்பட்ட ஸைன்யத்துடன் அனுப்ப, அவர்கள் மாண்டு போகையில், தன் பிள்ளையான இந்திரஜித்தையும், ப்ரஹஸ்தன், அதிகாயன், அகம்பனன் முதலிய ஸமஸ்தமான ப்ருத்யர்களையும் (சேவகர்களையும்) அவரவர் ஸைன்யங்களுடன் அனுப்ப, அவர்களும் மாண்டு போனமையால், பிறகு கும்பகர்ணனையும் பெரிய ஸைன்யத்துடன் அனுப்பினான். ஸ்ரீராமன், சிறு கத்தி, சூலம், தனுஸ்ஸு, ஈட்டி, தடி, சக்தி, பாணம், தோமரம், பெருங்கத்தி முதலிய ஆயுதங்களால் நுழைய முடியாதிருக்கின்ற அவ்வரக்கர் ஸைன்யத்தை, ஸுக்ரீவன், லக்ஷ்மணன், ஹனுமான், கந்தமாதனன், நீலன், அங்கதன், ஜாம்பவான், பனஸன் முதலியவர்களோடு கூடி எரித்தான். ஸ்ரீராமனுடைய ஸேனாதிபதிகளான அங்கதன் முதலிய அவ்வானர வீரர்கள் அனைவரும், யானை, காலாள், தேர், குதிரை, யுத்த வீரர்கள் ஆகிய இவர்கள் அமைந்திருக்கின்ற அந்த ராக்ஷஸப் படையுடன் இரண்டிரண்டு பேர்களாகச் சேர்ந்து ஸீதையைத் தொட்ட பாபத்தினால் மங்களம் அழியப்பெற்ற ராவணனை ப்ரபுவாகச் சார்ந்திருக்கின்ற ராக்ஷஸ வீரர்களை, பர்வதங்களாலும் (மலைகளாலும்), கதைகளாலும், பாணங்களாலும் அடித்து முடித்தார்கள்.
அப்பால், தன் பலம் அழிந்ததைக் கண்டு கோபித்து, ரதத்தின் மேல் ஏறிக்கொண்டு ஸ்ரீராமனை எதிர்த்து, மாதலியால் கொண்டு வரப்பட்டதும் ஒளிப்பெருக்குடன் திகழ்வதுமாகிய இந்த்ரனுடைய ரதத்தின் மேல் ஏறிக்கொண்டு விளங்குகின்ற அந்த ஸ்ரீராமனை, கத்தியின் நுனி போன்ற நுனியுடைய பாணங்களால் அடித்தான். அவ்வாறு அடிக்கின்ற ராவணனைப்பார்த்து, ஸ்ரீராமன் “அடா! ராக்ஷஸ அதம! நாய் ஒருவரும் இல்லாத ஸமயம் பார்த்து வீட்டில் நுழைந்து பக்ஷ்யங்களைக் (உணவைக்) கொண்டு போவது போல, துர்புத்தியாகிய நீ, நானில்லாத ஸமயம் பார்த்து, என் (மனைவியைப்) பறித்துக் கொண்டு போனாயல்லவா? இவ்வாறு நிந்தைக்கிடமான கார்யத்தைச் செய்தும் வெட்கமின்றித் திரிகிற உனக்கு, இப்பொழுது ம்ருத்யுவைப் (மரணத்தைப்) போல், கடக்க முடியாத வீர்யமுடைய நான் அதன் பலனைக் கொடுக்கின்றேன்” என்றான்.
அவ்வாறு நிந்தித்துக் (பழித்துக்) கொண்டே தனுஸ்ஸில் தொடுத்த பாணத்தை ப்ரயோகித்தான். அந்தப் பாணம் வஜ்ராயுதம்போல் அவனுடைய ஹ்ருதயத்தைப் பிளந்தது. அந்த ராவணன் பத்து முகங்களாலும் குருதியைக் கக்கிக்கொண்டு, பார்க்க வந்த ஜனங்கள் “ஆ! ஆ!” என்று சொல்லிக்கொண்டிருக்கையில், புண்யம் க்ஷணிக்கப் (குறையப்) பெற்றவன் ஸ்வர்க்க லோகத்தினின்று விழுவது போல, வாஹனத்தினின்று கீழே விழுந்தான். பிறகு ராக்ஷஸிகள் மந்தோதரியுடன் லங்கையினின்று புறப்பட்டு அழுது கொண்டே, ராவணனுடைய அருகாமைக்கு ஓடி வந்தார்கள். அவர்கள் அவ்விடம் சேர்ந்து, அங்கு லக்ஷ்மணனுடைய பாணங்களால் அடியுண்டு விழுந்திருக்கிற தங்கள் தங்கள் பந்துக்களை அணைத்து, தங்களைத் தாங்களே அடித்துக் கொண்டு, வருந்தி அழுதார்கள்.
ராக்ஷஸிகள் சொல்லுகிறார்கள்:- ஆ! நாதா! உலகங்களையெல்லாம் அழச்செய்பவனே! ராவணா! நாங்கள் பாழானோம். இப்பொழுது சத்ருக்களால் (எதிரிகளால்) பீடிக்கப்பட்டு, உன்னையும் பிரிந்திருக்கின்ற லங்காபுரம் யாரைச் சரணம் அடையும்? மஹாபாக்யமுடையவனே! நீ காம விகாரத்தினால் (காதல் ஆசையால்) மதி (புத்தி) மயங்கி, ஸீதையினுடைய தேஜஸ்ஸின் ப்ரபாவத்தை அறியவில்லை. ஆகையால்தான் நீ இந்த நிலையை அடைந்தாய். குலத்தையெல்லாம் களிக்கச் செய்பவனே! எங்களையும், இந்த லங்கையையும், விதவைகளாக்கினாய். இதோ படுத்திருக்கின்ற உன் தேஹத்தைக் கழுகுகளுக்கு இறையாக்கினாய். உன்னை நரக போகத்திற்கு இலக்காக்கினாய்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:– பிறகு, விபீஷணன் ஸ்ரீராமனால் அபிநந்திக்கப்பட்டுப் (வரவேற்கப்பட்டு) பித்ருமேத விதியில் (இறந்தவர்களுக்குச் செய்யும் கர்மங்களை விதிக்கும் சாஸ்த்ரத்தில்) சொன்னபடி ராவணன் முதலிய பந்துக்களுக்கு ப்ரேத கார்யத்தை நடத்தினான். அப்பால், ஸ்ரீராமபிரான் அசோக வனத்தில் சிம்சுபா வ்ருக்ஷத்தின் (மரத்தின்) அடியில் இருந்துகொண்டு, தன்னைப் பிரிந்தமையாகிற நோயால் இளைத்திருக்கின்ற, ஸீதையைக் கண்டான். ஸ்ரீராமன் மிகவும் அன்பிற்கிடமான தன் காதலி அவ்வாறு வருத்தமுற்றிருப்பதைக் கண்டு, மன இரக்கமுற்றான். ஸீதையும், ஸ்ரீராமனைக் கண்டுகளித்துத் தாமரை மலர் போன்ற தன் முகம் மலரப்பெற்றாள். ஸ்ரீராமன் அவளைப் புஷ்பக விமானத்தில் ஏற்றி ஸுக்ரீவன், விபீஷணன், ஹனுமான் இவர்களோடு தானும் அவ்விமானத்தில் ஏறிக்கொண்டான். அந்தப் பகவான், விபீஷணனுக்கு ராக்ஷஸ கணங்களுக்கு ப்ரபுவாயிருக்கையையும், லங்கா ராஜ்யத்தையும் கல்பம் முடியும் வரையில் ஜீவித்திருக்கும்படியான ஆயுளையும் கொடுத்து, தந்தையின் கட்டளையை நிறைவேற்றி விபீஷணனோடு கூடவே அயோத்யாபுரத்திற்குச் சென்றான். வழியில் இந்த்ரன் முதலிய லோகபாலர்கள் அவன் மேல் பூ மழை பொழிந்தார்கள். ப்ரஹ்மதேவன் முதலிய தேவதைகள் மனக்களிப்புடன் அவன் சரித்ரத்தைப் பாடினார்கள். பேரருளாளனான அந்த ஸ்ரீராமபிரான், தன் ப்ராதாவான (ஸகோதரனான) பரதன் யவை என்கிற தான்யத்தை பசுவின் மூத்ரத்தில் சமைத்து, அந்த அன்னத்தைப் புசித்துக்கொண்டு, மரவுரி உடுத்து, ஜடைதரித்துத் தர்ப்பம் பரப்பின வெறுந்தரையில் படுத்து, காலம் கழிப்பதைக் கேட்டுப் பரிதபித்தான்.
பரதனும் ஸ்ரீராமபிரான் பட்டணத்திற்குத் திரும்பி வரும் செய்தியைக் கேட்டு, ஸ்ரீராம பாதுகைகளைத் தன் சிரஸ்ஸில் தரித்து, பட்டணத்து ஜனங்களும், மந்திரிகளும், புரோஹிதர்களும் தொடரப்பெற்று, பாட்டுக்களோடும், வாத்ய கோஷங்களோடும், தான் தங்கியிருந்த நந்திக்ராமத்தினின்று புறப்பட்டு, தமையனாகிய ஸ்ரீராமனை எதிர்கொண்டான். அப்பொழுது, ப்ரஹ்ம வித்துக்களான ப்ராஹ்மணர்கள், வேதத்தை உரக்க ஓதிக்கொண்டு, அவனுடன் சென்றார்கள். நுனியில் பொன் வேலை செய்த பதாகைகளும் (தோரணங்களும்), விசித்ரமான கொடிகள் கட்டப்பெற்று ஸ்வர்ண (தங்கத்தால்) அலங்காரம் செய்யப்பெற்ற ரதங்களும், பொன்னலங்காரம் செய்யப்பெற்ற மேலான குதிரைகளும், ஸ்வர்ண மயமான கவசங்கள் தரித்த போர் வீரர்களும், தாம்பூலம் கொடுப்பவர் முதலிய பணிக்காரர்களும், சிறப்புடைய தேவதாஸிகளும், உபஹாரங்களை ஏந்திக்கொண்டிருக்கிற ப்ருத்யர்களும், பரதனைத் தொடர்ந்து சென்றார்கள். மற்றும், மஹாராஜனுக்குரிய குடை, சாமரம் முதலிய பலவகையான வரிசைகளையும் எடுப்பித்துக் கொண்டு சென்ற அந்தப் பரதன், ராமன் அருகில் சென்று, ப்ரேமத்தினால் (அன்பினால்) நெஞ்சுருகி, கண்பனித்து (கண்கள் மறைக்கப் பெற்று), பாதுகைகளை முன்னே வைத்து, பாதார விந்தங்களில் விழுந்து எழுந்து, கைகளைக் குவித்துக் கொண்டு, கண்ணும் கண்ணீருமாக நின்றான்.
அப்பால், ஸ்ரீராமன் அந்தப் பரதனைக் கைகளால் நெருக்கி அணைத்து, கண்ணீர்களால் நனைத்து, லக்ஷ்மணனும், ஸீதையும் தானுமாய், ப்ராஹ்மணர்களுக்கும், மற்றுமுள்ள பூஜ்யர்களான (பூஜிக்கத்தக்க) குலவ்ருத்தர்களுக்கும் (பெரியோர்களுக்கும்) நமஸ்காரம் செய்து, தானும் ப்ரஜைகளால் நமஸ்காரம் செய்யப்பெற்றான். உத்தர கோஸல தேசத்திலுள்ள ஜனங்கள், நெடுநாள் கழித்துத் திரும்பி வந்திருக்கின்ற தங்கள் ப்ரபுவான ஸ்ரீராமனைக் கண்டு, ஸந்தோஷத்தினால் அவன்மேல் புஷ்பங்களை இறைத்துக் கூத்தாடினார்கள். ஸ்ரீராமன் பட்டணத்தில் நுழையும் பொழுது, பரதன் பாதுகைகளையும், விபீஷண ஸுக்ரீவர்கள் சிறந்த சாமரங்களையும், ஹனுமான் வெண்கொற்றக் குடையையும், சத்ருக்னன் தனுஸ்ஸு அம்புறாத்தூணி இவைகளையும், சீதை தீர்த்த கமண்டலுவையும், அங்கதன் பொற்கத்தியையும், ஜாம்பவான் பொன் கேடயத்தையும், எடுத்துக் கொண்டு சென்றார்கள்.
ஸ்ரீராமன் புஷ்பக விமானத்தில் வீற்றிருந்து, ஸ்த்ரீகளாலும் ஸ்துதி பாடகர்களாலும் துதிக்கப்பெற்று, நக்ஷத்ரங்களுடன் ஆகாயத்தில் உதித்த சந்தரன் போல விளங்கினான். அவன் பரதன் முதலிய ப்ராதாக்களால் அபிநந்தனம் செய்யப்பெற்று (மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பெற்று), மஹோத்ஸவத்துடன் பட்டணத்திற்குள் ப்ரவேசித்தான். அப்பால், ராஜக்ருஹத்தில் ப்ரவேசித்துக் கைகேயி முதலியவர்களையும், தன் தாயான கௌஸல்யையையும், வஸிஷ்டர் முதலிய குருக்களையும், ஸ்நேஹிதர்களையும், நல்ல குலத்தில் பிறந்த பின்தோன்றல்களையும், பூஜித்தான்; தானும் அவர்களால் பூஜிக்கப்பட்டான். ஸீதையும், லக்ஷ்மணனும் அவ்வாறே பூஜிக்க வேண்டியவர்களைப் பூஜித்து, தாமும் பூஜிக்கப்பெற்று, ராஜக்ருஹத்திற்குள் (அரண்மனைக்குள்) ப்ரவேசித்தார்கள் (நுழைந்தார்கள்). கௌஸல்யை முதலிய தாய்மார்கள், தங்கள் புதல்வர்களைப் பெற்றுத் தேஹங்கள் (சரீரம்), ப்ராணன்களைப் (உயிர்) பெற்று எழுந்திருப்பது போல எழுந்து, அவர்களை மடியில் வைத்துக்கொண்டு, ஆனந்த நீர்களால் நனைத்து, சோகங்களைத் துறந்தார்கள். அப்பால், குருவாகிய வஸிஷ்டர், குல வ்ருத்தர்களுடன் விதிப்படி ஜடைகளை விடுவித்து, நான்கு ஸமுத்ரங்களினின்றும், கங்கை முதலிய புண்ய தீர்த்தங்களினின்றும் கொண்டு வந்த ஜலங்களால், இந்திரனுக்கு அபிஷேகம் செய்வது போல, ஸ்ரீராமனுக்கு அபிஷேகம் செய்தார்.
ஸ்ரீராமன் இவ்வாறு சிரஸ்நானம் செய்து (தலைக் குளித்து), அழகான வஸ்த்ரங்களை உடுத்து, நன்றாக அலங்கரித்து, தன்னைப் போலவே நன்றாக அலங்கரித்துக் கொண்டு நல்ல வஸ்த்ரங்களை உடுத்திருக்கின்ற ஸஹோதரர்களோடும், மனைவியோடும், கூடி விளங்கினான். பிறகு உடன்தோன்றலாகிய பரதன் பாதங்களில் விழுந்து வேண்ட, ஸ்ரீராமன் ஸிம்ஹாஸனத்தை அங்கீகரித்தான். அப்பொழுது, அத்தேசத்திலுள்ள ப்ரஜைகள் அனைவரும், தங்கள் தங்கள் தர்மத்தில் நிலைநின்று வர்ணாச்ரமங்களுக்கு ஏற்பட்ட பஞ்சமஹா யஜ்ஞாதி கர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டு வந்தார்கள். தன் தந்தையான தசரத சக்ரவர்த்தி ஆண்டு வந்தாற்போலவே ஸ்ரீராமனும் ப்ரஜைகளை ஆண்டு வந்தான். ப்ரஜைகளும் அவனைத் தந்தையாகவே நினைத்திருந்தார்கள். அப்பொழுது தர்மம், மூன்று கால்களுடன் இருக்கப்பெற்ற த்ரேதா யுகம் நடந்து கொண்டிருப்பினும், அக்காலம் தர்மம் நான்கு கால்களுடன் இருக்கப்பெற்ற க்ருதயுகம் போன்றிருந்தது.
பரத வம்சாலங்காரனே! ஸமஸ்த பூதங்களுக்கும் ஸுகம் விளைப்பவனும், தர்மங்களை உணர்ந்தவனுமாகிய ஸ்ரீராமன், ராஜனாயிருக்கும் பொழுது, வனங்கள், நதிகள், பர்வதங்கள், ரம்யகம் முதலிய வர்ஷங்கள் ஸிம்ஹலம் முதலிய த்வீபங்கள் ஸமுத்ரங்கள் இவையெல்லாம் ப்ரஜைகளுக்கு விரும்பினவற்றையெல்லாம் கறந்தன. ஸர்வஸ்மாத்பரனும் (எல்லாவற்றையும் விட மேலானவனும்), ஸர்வேச்வரனுமாகிய (எல்லோருக்கும் ஈச்வரனுமாகிய) ஸ்ரீராமன் ராஜனாயிருக்கும்பொழுது, மனோவ்யாதி, சரீரவ்யாதி, கிழத்தனம், பசி, தாஹம், துக்கம், சோகம், பயம், இளைப்பு, விரும்பாதவர்களுக்கு மரணம் ஆகிய இவற்றில் எவையும் உண்டாகவில்லை. ஏக பத்னீ வ்ரதம் (ஒரே மனைவியுடன் இருத்தல் என்கிற விரதத்தை) தவறாதவனும், ராஜர்ஷியின் சரித்ரமுடையவனும், ராகம் (விருப்பு) முதலிய ப்ராக்ருத (ப்ரக்ருதியின்) குணங்கள் அற்றவனுமாகிய அந்த ஸ்ரீராமன், க்ருஹஸ்தனுக்கு விதிக்கப்பட்டவைகளும் தன் வர்ணத்திற்கு ஒத்தவைகளுமான தர்மங்களை உலகத்தவர்களுக்குக் கற்பிக்க முயன்று, தான் அநுஷ்டித்தான். வணக்கமுடையவளும், கருத்தறிந்தவளும், பதிவ்ரதையுமாகிய ஸீதை, ப்ரீதியினாலும் அனுஸரணத்தினாலும் (கணவனைப் பின்பற்றி நடத்தலாலும்), நல்லொழுக்கத்தினாலும், பயத்தினாலும், வெட்கத்தினாலும் மற்றும் பல குணங்களாலும் ஸ்ரீராமனுடைய மனத்தைப் பறித்தாள்.
பத்தாவது அத்தியாயம் முற்றிற்று.