சனி, 10 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 203

 ஒன்பதாவது ஸ்கந்தம் - பதினொன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீராமன் அயோத்யையில் இருந்து கொண்டு, யஜ்ஞாதி (யாகம் முதலிய) கர்மங்களை அநுஷ்டித்த விதத்தைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஷாட்குண்ய பூர்ணனான (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸ்ரீராமன், பெரியோர்களான வஸிஷ்டாதி முனிவர்களைக் கொண்டு யஜ்ஞங்களை (யாகங்களை) அனுஷ்டித்து, ஆசார்யனை முன்னிட்டு, ஸமஸ்த (எல்லா) தேவதாஸ்வரூபனும் (தேவதைகளின் வடிவானவனும்), தேவச்ரேஷ்டனுமாகிய (தேவர்களில் சிறந்தவனுமான), தன்னைத் தானே ஆராதித்தான். அவன், அந்த யாகத்தில் ஹோதாவுக்குக் கிழக்குத் திக்கையும், ப்ரஹ்மாவுக்குத் தெற்குத் திக்கையும், அத்வர்யுவுக்கு மேற்குத் திக்கையும், உத்காதாவுக்கு வடக்குத் திக்கையும் ஆசார்யனுக்கு அந்தத் திசைகளுக்கு இடையிலுள்ள பூமியையும் துணையாகக் கொடுத்தான். {யாகத்தில் ருத்விக்குகள் யஜமானனால் நியமிக்கப்பட்டு, யஜமானனுக்காக யாகத்தைச் செய்கிறார்கள்.  “ஹோதா” என்கிற ருத்விக் ரிக் வேத மந்த்ரங்களைக் கூறி, யாகத்தில் குறிக்கப்பட்ட தேவதைகளை அழைக்கிறார். “அத்வர்யு” என்கிற ருத்விக் “ஹோதா”வால் அழைக்கப்பட்ட ஒவ்வொரு தேவதைக்கும் யஜுர் வேத மந்த்ரங்களைச் சொல்லி அந்தந்த தேவதைக்கு யாக குண்டத்தில் ஹோமம் செய்து, அந்தந்த தேவதை, ஹோமம் செய்யப்பட்ட த்ரவ்யத்தை (பொருளை) ஏற்றுக்கொள்ளும்படிச் செய்கிறார். “உத்காதா” என்கிற ருத்விக் ஸாமகானம் செய்து, அந்த தேவதைகள் மகிழ்ச்சி அடையும்படிச் செய்கிறார். “ப்ரஹ்மா” என்கிற ருத்விக் யாகம் ஸரியான முறையில் நடக்கிறதா என்று மேற்பார்வை செய்பவர்.} மற்றும், ப்ராஹ்மணன் இப்பூமண்டலத்தையெல்லாம் பெற்றுக்கொள்ள உரியவனென்று அவன் நினைத்திருந்தானே அன்றித் தான் கொடுத்தவற்றை ஒரு பொருளாக நினைக்கவில்லை. கொடுத்தவற்றில் சிறிதும் மனப்பற்று வைக்கவில்லை. மற்றும், அவர்களுக்குச் சிறந்த ஆடை, ஆபரணம் முதலிய அலங்காரங்களையும் கொடுத்தான். இவ்வாறு எல்லாவற்றையும் கொடுத்து, மேல்துணி, கீழ்துணி ஆகிய இரண்டு வஸ்த்ரங்கள் மாத்ரமே மிகப்பெற்றான். ராஜபத்னியாகிய வைதேஹியும், பர்த்தாவின் (கணவனின்) அபிப்ராயத்தை அறிந்து, எல்லா அலங்காரங்களையும் கொடுத்து, மாங்கல்யம் மாத்ரமே மிகப்பெற்றாள். ஹோதா முதலிய அவ்வந்தணர்கள், ப்ராஹ்மணர்களையே தெய்வமாக நம்பியிருக்கிற அந்த ஸ்ரீராமனுக்கு, பெரியோர்கள் விஷயத்திலுள்ள தான சீலத்தையும் (வள்ளல் தன்மையையும்), வாத்ஸல்யத்தையும் (கன்றிடம் தாய் பசுவிற்கு இருக்கும் ப்ரீதியைப் போன்ற பரிவையும்) கண்டு, ஸந்தோஷம் அடைந்து, “இந்தத் திசைகளை நாங்கள் பெற்றுக்கொள்ள உரியரல்லோம். இவற்றை நீயே ஆண்டு வருவாயாக” என்று விண்ணப்பம் செய்து, மீளவும் இவ்வாறு மொழிந்தார்கள்.

ப்ராஹ்மணர்கள் சொல்லுகிறார்கள்:- பகவானே! நீ எங்களுக்குக் கொடாதது என்ன இருக்கிறது? எல்லாவற்றையும் கொடுக்க நீ ஸித்தமாயிருக்கின்றாய். நீ ஸர்வேச்வரன். உனக்கு மேற்பட்டவன் எவனும் கிடையாது. நீ அவாப்த ஸமஸ்தகாமன் (விரும்பியவை அனைத்தும் அடையப் பெற்றவன்). உனக்கு இவற்றால் ஆகவேண்டிய ப்ரயோஜனம் என்ன இருக்கிறது? மற்றும், பரமபுருஷார்த்தமாகிய மோக்ஷத்தை எங்களுக்குக் கொடுக்கும் பொருட்டு, எங்கள் ஹ்ருதயத்தில் புகுந்து, உன் ப்ரகாசத்தினால், எங்களுடைய அஜ்ஞானத்தைப் (அறியாமையைப்) போக்குகின்றாய். இவ்வாறு தன்னையும் கொடுக்க வழிபார்த்துக் கொண்டிருக்கிற உனக்கு, இந்தத் திசைகளைக் கொடுப்பது ஒரு பொருளோ? நீ ப்ராஹ்மண குலத்திற்கு வேண்டியவற்றையெல்லாம் ஸாதித்துக் கொடுப்பவன்; தன் தேஜஸ்ஸினால் திகழும் தன்மையன்; என்றும் குறையாத அறிவுடையவன்; மிகுந்த புகழுடையவர்களில் முதன்மையானவன். ப்ராணிகளுக்கு த்ரோஹம் செய்கையின்றி, ஸமஸ்த பூதங்களுக்கும் நண்பர்களான முனிவர்கள், உன் பாதார விந்தங்களைத் தமது மனத்தில் கொண்டு த்யானிக்கின்றார்கள். உன் குணங்களை எங்களால் வர்ணிக்க முடியுமோ ? உனக்கு நமஸ்காரம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு ஸ்ரீராமன் ஸீதையோடு கூடி, பதினாயிரமாண்டுகள் ராஜ்யம் ஆண்டு வந்து, ஒரு சமயம் உலக வ்ருத்தாந்தத்தை அறிய விரும்பி, மாறுவேடம் பூண்டு, ஒருவர்க்கும் தெரியாமல் இரவில் பட்டணத்தில் ஆங்காங்கு ஸஞ்சரித்துக் கொண்டு, ஒரு புருஷன் தன் மனைவியைப் பார்த்து மொழியும் வார்த்தையைக் கேட்டான். அவன், தன் மனைவியைக் குறித்துப் “பரமபுருஷனுடைய வீட்டிற்கு அடிக்கடி போகின்றவளும், மதி (புத்தி) கெட்டவளுமாகிய உன்னை, நான் போஷிக்கமாட்டேன் (காப்பாற்ற மாட்டேன்). “நெடுநாள் பிறன் வீட்டிலிருந்த ஸீதையை ராமன் அங்கீகரிக்கவில்லையா? அவனைவிட நீ மேற்பட்டவனோ” என்றால் சொல்லுகிறேன், கேள். ராமன் ஸ்த்ரீலோலன் (பெண்ணிடத்தில் ஆசை உடையவன்). ஆகையால், அவன் நெடுநாள் ராவணன் வீட்டிலிருந்த ஸீதையை அங்கீகரித்தான். நானோவென்றால், அவ்வாறு ஸ்த்ரீகளுக்கு உட்பட்டவனல்லேன். ஆகையால், உன்னை அங்கீகரிக்கமாட்டேன்” என்று மொழிந்தான். 

இவ்வாறு, உண்மையை அறியாததும் தோன்றினபடி பலவற்றை மொழிகின்றதும், ஆராதிக்க முடியாததுமாகிய உலகத்தினின்றும் பயந்து, லோகநாதனாகிய ஸ்ரீராமன் ஸீதையைத் துறக்க, அவளும் கர்ப்பிணியாகவே வால்மீகியின் ஆச்ரமத்திற்குச் சென்றாள். பிறகு, ப்ரஸவகாலம் ஸமீபித்திருக்கையில், இரட்டைப் பிள்ளைகளைப் பெற்றாள். அவர்கள் குசனென்றும், லவனென்றும் ப்ரஸித்தி பெற்றவர்கள். அவர்களுக்கு ஜாதகரணாதி ஸம்ஸ்காரங்களையெல்லாம் வால்மீகி முனிவர் நடத்தினார். அவ்வாறே லக்ஷ்மணனுக்கு, அங்கதன், சந்த்ரகேதுவென்றும், பரதனுக்குத் தக்ஷன், புஷ்கலனென்றும், சத்ருக்னனுக்கு ஸுபாஹு,  ஸ்ருதஸேனனென்றும் இரண்டிரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். பரதன், திக்விஜயம் செய்யும்பொழுது, கந்தர்வர்களைக் கோடி கோடியாக வதித்து, அவர்களுடைய தனத்தையெல்லாம் கொண்டு வந்து, ராஜனான ஸ்ரீராமனுக்குக் கொடுத்தான். 

சத்ருக்னன், மதுவென்னும் அஸுரனுடைய பிள்ளையாகிய லவணனென்னும் ராக்ஷஸனைக் கொன்று, மதுவனத்தில் மதுரையென்னும் பட்டணத்தை நிர்மித்தான். தன் கணவனாகிய ஸ்ரீராமனால் துறக்கப்பட்ட ஸீதை, வால்மீகி முனிவரிடம் தன் பிள்ளைகளை வைத்து, ஸ்ரீராமனுடைய பாதங்களை த்யானித்துக் கொண்டே, பூமியின் அந்தரத்தில் நுழைந்தாள். அதைக்கேட்ட ஸ்ரீராமபிரான், அந்த ஸீதையின் ஒப்பற்றக் குணங்களை நினைத்துப் புத்தியினால் சோகத்தை அடக்கவல்லவனாயினும், அதை அடக்க முடியாதவனாயிருந்தான். திறமையமைந்த பெரியோர்களுக்கும், ஆண் பெண்களாய்க் கலந்திருக்கும் விஷயம் இவ்வளவில் இருக்கின்றது. அது எல்லார்க்கும் பயத்தை விளைக்கும். புத்தியின்றி அற்ப ஸுகத்தை விரும்பி இல்லற வாழ்க்கையில் மனம் தாழப்பெற்ற மற்றவர்களுக்கு, அவ்விஷயம் இருக்கும் விதத்தைப்பற்றிச் சொல்ல வேண்டுமோ?

அதன் பிறகு ஸ்ரீராமன் பதின் மூவாயிரம் வர்ஷங்கள் ப்ரஹ்மசர்யம் தவறாமல் அவிச்சின்னமாக (இடைவிடாது) அக்னிஹோத்ர ஹோமத்தை (வேதத்தில் விதித்துள்ளபடி அக்னியை வளர்த்து) நடத்திக் கொண்டு வந்தான். பிறகு, ஸ்ரீராமன் வனவாஸம் செய்யும் பொழுது தண்டகாரண்யத்திலுள்ள முட்கள் தைக்கப் பெற்றவைகளும், தளிர்போன்றவைகளுமான,  தன் பாதார விந்தங்களை த்யானிக்கும் ஜனங்களுடைய ஹ்ருதயத்தில் வைத்து, பரமபதமென்று கூறப்படுகிற தன்னுடைச் சோதிக்கு (இடத்திற்கு) எழுந்தருளினான். கோதண்டபாணியான ஸ்ரீராமன், ராக்ஷஸர்களை வதித்ததும், ஸமுத்ரத்தில் அணை கட்டினதும், ஒரு புகழாக மாட்டாது. அவன் இணையெதிரில்லாத மஹிமையுடையவன். சத்ருக்களை வதிக்கும் விஷயத்தில் அவனுக்கு வானரர்கள் ஸஹாயமோ (உதவியோ)? அவன் ஸுக்ரீவாதி வானரர்களை ஸஹாயமாகப் (உதவியாகப்) பற்றினமை விளையாட்டேயன்றி, உண்மையன்று. அவ்வாறே அணை கட்டினதும், அவனுக்கு ஒரு லீலையே. அவன் தேவதைகளுடைய வேண்டுகோளின்மேல் விளையாட்டிற்காக மானிட உருவம் பூண்டான்.

மன்னவனே! திக்கஜங்களுக்கு முகப்பட்டம்போல ஆபரணமாயிருப்பதும், பாபங்களைப் போக்குவதுமாகிய, எவனுடைய பாதார விந்தங்களின் புகழை இப்பொழுதும் ஸபைகளில் ரிஷிகள் பாடுகிறார்களோ, இந்த்ரன் முதலிய தேவதைகள், குபேராதிகள், பூமியிலுள்ள ராஜாக்கள் ஆகிய இவர்களின் கிரீடங்களால் வணங்கப்பெற்ற பாதார விந்தங்களையுடைய அந்த ஸ்ரீராமனை நான் சரணம் அடைகின்றேன். கோஸல தேசத்து ஜனங்களில் ஸ்ரீராமனால் தொடப்பட்டவர்களும், பார்க்கப்பட்டவர்களும், அவனுடன் கூட உட்கார்ந்தவர்களும், அவனைப் பின்தொடர்ந்தவர்களும், மஹாயோகிகள் பெறும்படியான பதவியைப் பெற்றார்கள். மன்னவனே! ப்ராணி த்ரோஹமின்றி (உயிரினங்களுக்குத் துன்பம் விளைக்காமல்) இந்திரியங்களை வென்ற புருஷன், ஸ்ரீராமசரித்ரத்தைக் கேட்டு, மனத்தில் தரித்துக்கொண்டிருப்பானாயின், ஸம்ஸாரத்திற்குக் காரணமான புண்யபாப கர்மங்களால் விடுபடுவான்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- அந்த ஸ்ரீராமன் எப்படி இருந்தான்? அவன் தன் ப்ராதாக்களிடத்திலும் (ஸகோதரர்களிடத்திலும்), தேசத்திலுள்ள ஜனங்களிடத்திலும், எப்படி இருந்தான்? அந்த ஜனங்களும், ப்ராதாக்களும் (ஸகோதரர்கள்), அவனிடத்தில் எப்படி இருந்தார்கள்?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த ஸ்ரீராமன், பரதனுடைய வேண்டுகோளின்படி, ஸிம்ஹாஸனத்தை அங்கீகரித்த பின்பு, மூன்று லோகங்களுக்கும் ப்ரபுவான அம்மஹானுபாவன், திசைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, ப்ராதாக்களை (ஸகோதரர்களை) நியமித்து, தான் கௌஸல்யை முதலிய தாய்மார்களுக்கும், மற்ற பந்துக்களுக்கும், மற்றவர்களுக்கும் காட்சி கொடுத்துக்கொண்டு, அயோத்யாபுரியை ஆண்டு வந்தான். பட்டணத்து ஜனங்கள், தங்கள் ப்ரபுவாகிய ஸ்ரீராமன் வனவாஸத்தினின்றும் மீண்டு வருவதைக் கண்டு மிகவும் ஸந்தோஷம் அடைந்து, பட்டணத்தை அலங்கரித்தார்கள். மார்க்கங்கள் சந்தன ஜலங்களாலும், ராமன் பட்டாபிஷேகம் பெற்று ராஜ்யமாளுவதைக் கண்டு மிகவும் மதித்திருக்கின்ற யானைகளின் மதஜலங்களாலும் முழுவதும் நனைக்கப்பட்டு, ரமணீயங்களாயிருந்தன. உப்பரிகைகளும், கோபுரங்களும், ஸபைகளும், துளஸிமாடம் முதலிய இடங்களும், தேவாலயங்களும், பொற்குடங்கள் வைத்துப் பதாகைகள் நாட்டி அலங்காரம் செய்யப்பெற்றிருந்தன. பாக்குமரங்களும், இலைகளாலும், குலைகளாலும், தழைத்து மறைந்திருக்கின்ற வாழைமரங்களும் கட்டி, துணிப்பட்டைகளாலும், கண்ணாடிகளாலும், பூமாலைகளாலும், மங்கள தோரணங்கள் கட்டப்பெற்றிருந்தன.

பிறகு, பட்டணத்து ஜனங்கள், பூஜைக்கு வேண்டிய த்ரவ்யங்களைக் கையில் எடுத்துக்கொண்டு, ஆங்காங்கு ஸ்ரீராமனை அடைந்து “தேவனே! நீ முன்பு வராஹாவதாரம் செய்து, ப்ரளயத்தில் அழுந்தின பூமியை, மேலுக்கெடுத்தாய். அப்படிப்பட்ட நீ,  இப்பூமியைப் பாதுகாத்து வருவாயாக” என்று ஆசீர்வாதங்களைச் செய்தார்கள். தங்கள் ப்ரபுவாகிய ஸ்ரீராமன் நெடுநாள் கழித்து வந்திருப்பதைக் கேட்டு, ஆண், பெண்கள் ஆகிய ப்ரஜைகள் அனைவரும் அவனைப் பார்க்க விரும்பி, வீடு, வாசல்களையெல்லாம் இருந்தபடியே விட்டு, உப்பரிகைகளின் மேல் ஏறி, அவனைக் கண்டும் கண்கள் திருப்தி அடையப்பெறாமல், அவன்மேல் புஷ்பத்தை இறைத்தார்கள். அந்த ஸ்ரீராமபிரான், தன் வம்சத்தில் பிறந்த இக்ஷ்வாகு முதலிய பூர்வ ராஜாக்கள் வாஸம் செய்து வந்ததும், அழிவில்லாத எல்லாக் கருவூலங்களும் அமைந்து ஸம்ருத்தமாய் (வளமுடன்) இருப்பதுமாகிய, தன் க்ருஹத்திற்குள் ஆத்ம அநுபவத்தினால் (ஆத்ம, பரமாத்ம த்யானத்தினால்) த்ருப்தி அடைந்த மஹானுபாவர்களான முனிவர்களுக்கு மிகவும் அன்பனாகி, தன் மனத்திற்கினிய செயலுடையவளும் மிகுந்த அன்புடையவளுமாகிய ஸீதையுடன், க்ரீடித்துக் கொண்டிருந்தான். அவனுடைய க்ருஹத்தில், போகத்திற்கு வேண்டிய கருவிகள் அனைத்தும் ஸித்தம் செய்யப்பட்டிருந்தன. அவையெல்லாம் விலையுயர்ந்து அளவற்றவைகளாயிருந்தன. அவ்விடத்தில், வாசல்களெல்லாம் பவளத்தினால் இயற்றப்பட்ட படிகளுடையனவாகி மிகவும் அழகாயிருந்தன. வைடூர்ய, ரத்னமயமான ஸ்தம்பங்கள் வரிசை வரிசையாயிருந்தன. தரையெல்லாம் இந்த்ர நீலரத்னங்கள் படுக்கப்பெற்று, நிர்மலமாயிருந்தன. சுவர்கள், ஸ்படிக ரத்னங்களால் இயற்றப்பட்டு, தேய்த்துத் துடைப்பதனால் பளபளவென்று ப்ரகாசித்துக்கொண்டிருந்தன. மற்றும், அம்மாளிகை விசித்ரமாகத் தொடுத்த பூமாலைகளாலும், பதாகைகளாலும், வஸ்த்ரங்களாலும், ரத்ன ஸமூஹங்களாலும், சூக்ஷ்ம வஸ்த்ரங்களாலும், சைதன்யம்போல் ஜ்வலித்துக்கொண்டிருக்கிற முத்துக்களாலும், போகத்திற்கு வேண்டிய அழகிய கருவிகளாலும், பரிமளமுடைய தூபங்களாலும், தீபங்களாலும், புஷ்பாலங்காரங்களாலும், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்குள்ள ஸ்த்ரீகளும், புருஷர்களும், புஷ்பங்களைச் சூடி, ஆபரணங்களை அணிந்து, தேவதைகள் போன்று உலாவிக்கொண்டிருந்தார்கள். 

ஸ்ரீராமன், இத்தகையதான அம்மாளிகையில் வஸித்துக்கொண்டிருந்து, பலவாயிரம் வர்ஷங்கள் தன் வர்ணாச்ரம தர்மங்களைத் தவறாமல் மனுஷ்யர்களால் த்யானிக்கப்பட்ட தளிர்போன்ற பாதங்களுடையவனாகி, உரிய காலங்களில் ஸீதையுடன் காமபோகங்களை அனுபவித்துக்கொண்டு வந்தான். 

பதினொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக