வியாழன், 8 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 201

 ஒன்பதாவது ஸ்கந்தம் - ஒன்பதாவது அத்தியாயம்

(கட்வாங்கன் வரையிலுள்ள அம்சுமானுடைய வம்சத்தைத் கூறுதலும், பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்த வ்ருத்தாந்தமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அம்சுமான், பாட்டனால் (தாத்தாவால்) ராஜ்யம் கொடுக்கப்பெற்றும் பித்ருக்களைக் கரையேற்றுவதற்காகக் கங்கையைக் கொண்டுவர விரும்பி, வெகுகாலம் தவம் செய்தான். ஆயினும், கங்கையைக் கொண்டுவர முடியாமலே மரணம் அடைந்தான். அப்பால், அவன் பிள்ளையாகிய திலீபனும் அவனைப்போலவே தவம் செய்து கொண்டிருந்து, கங்கையைக் கொண்டுவர முடியாமலே மரணம் அடைந்தான். அவன் பிள்ளை பகீரதன். அவன், அதற்காக மிகப்பெருந்தவம் செய்தான். அப்பால், அந்தத் தவத்திற்கு மனம் இரங்கி, கங்கை அவனுக்கு ப்ரத்யக்ஷமாய் வந்து தோன்றி, “உனக்கு வரம் கொடுக்க வந்தேன்” என்று மொழியவும் மொழிந்தாள். இவ்வாறு கங்கையினால் மொழியப்பட்ட அந்த பகீரத மன்னவன், அவளுக்கு நமஸ்காரம் செய்து, தன் அபிப்ராயத்தைச் சொன்னான். மீளவும் அவனை நோக்கிக் கங்கை மொழிந்தாள்.

கங்கை சொல்லுகிறாள்:- நான் பூமியில் விழும்பொழுது, என் வேகத்தைத் தரிப்பவர் யாவர்? ஒருவரும் தரிக்காத பக்ஷத்தில், மன்னவனே! பூமியைப் பிளந்து கொண்டு பாதாளலோகம் போய்ச் சேருவேன். மற்றும், எனக்குப் பூமியில் வந்திருக்க இஷ்டமில்லை. பூமியிலுள்ள மனிதர்கள் என்னிடத்தில் ஸ்னானம் செய்து தங்கள் பாபத்தை விட்டுப்போவார்கள். நான் அதை எங்கு போக்கிக்கொள்வேன்? இதைப்பற்றியும் நீ உபாயம் ஆலோசிப்பாயாக.

மன்னவன் சொல்லுகிறான்:- காம்ய கர்மங்களைத் (ஆசைகளை நிறைவேற்றும் செயல்களை) துறந்தவர்களும், ஜிதேந்த்ரியர்களும் (புலன்களை வென்றவர்களும்), பரப்ரஹ்ம த்யானத்தில் சிறந்த மனவூக்கமுடையவர்களும், உலகங்களையெல்லாம் பாவனம் (புனிதம்) செய்யவல்லவர்களுமான ஸத்புருஷர்கள், தங்கள் சரீர (உடல்) ஸம்பந்தத்தினால், உன் பாபத்தைப் போக்குவார்கள். ஆனால், அவர்கள் அந்தப் பாபத்தை எங்கு போக்குவார்களென்னில், அவர்களிடத்தில் பாபங்களைப் போக்கும் திறமையுடைய பரமபுருஷன் வஸிக்கின்றான். ஆகையால், அவர்களிடத்தில் பாபம் தங்காது. மற்றும், ருத்ரன் உன் வேகத்தைத் தரிப்பான். அவன் பகவத் பக்தனாகையால் அவனுக்கு எல்லா திறமைகளும் உண்டு. பகவானுடைய திறமைகளைப்பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவன், ப்ரஹ்மா முதல், மரம், செடி வரையிலுள்ள, ஸமஸ்த பூதங்களுக்கும் உள்ளே புகுந்து, நியமித்துக்கொண்டிருப்பவன். ஆயிரம் சொல்லியென்ன? நூலில் வஸ்த்ரம் போல, இந்த ப்ரபஞ்சமெல்லாம் அவனிடத்தில் அமைந்திருக்கின்றது. இவ்வாறு ஜகத்தையெல்லாம் அனாயாஸமாகத் தரித்துக் கொண்டிருக்கிற அப்பரமபுருஷனை, ருத்ரன் ஸர்வகாலமும் மனத்தில் தரித்துக் கொண்டிருக்கிறானாகையால், அவனுக்கு உன் வேகத்தைத் தரிப்பது ஒரு பொருளன்று.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு மொழிந்த அம்மன்னவனுடைய வார்த்தையைக் கேட்டு கங்கை, மீளவும் அவனைக் குறித்து, “ஆனால் என் ஜலத்தைத் தரிக்கும்படி அந்த ருத்ரனை வேண்டிக்கொள்வாயாக” என்றாள். அதைக் கேட்ட அம்மன்னவனும், தவத்தினால் சிவனுக்கு அந்தராத்மாவான பரமபுருஷனை ஆராதித்தான். ராஜனே! ருத்ரன் அற்ப காலத்திற்குள்ளாகவே அவனுக்கு ப்ரஸன்னனானான் (தோன்றினான்). அப்பால், அந்த ருத்ரனைப் பகீரதன் கங்கையின் வேகத்தைத் தரிக்கும்படி வேண்டினான். ஸமஸ்த லோகங்களுக்கும் ஹிதம் (நன்மை) செய்பவனாகிய ருத்ரன், அப்படியே தரிக்கிறேனென்று ஒப்புக்கொண்டு, மனவூக்கத்துடன் பகவானுடைய பாதங்களின் ஸம்பந்தத்தினால், பரிசுத்தமான ஜலமுடைய (நீருடைய) கங்கையைத் தரித்தான். அப்பால், ராஜர்ஷியாகிய பகீரதன், ஜகத்தை (உலகை) எல்லாம் பாவனமாக்கவல்ல (புனிதமாக்கவல்ல) கங்கையைத் தன் பித்ருக்களின் தேஹங்கள் (உடல்கள்) பஸ்மமாய் (சாம்பலாய்) இருக்குமிடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தான். வாயுவின் வேகம் போன்ற வேகமுடைய ரதத்தில் ஏறிக்கொண்டு போகிற பகீரதனைத் தொடர்ந்து செல்கின்ற கங்கா நதி, வழியிலுள்ள தேசங்களையும் புனிதம் செய்து கொண்டு சென்று, பஸ்மமாய்க் (சாம்பலாய்க்) கிடக்கிற ஸகர புத்ரர்களையும் நனைத்தது. ப்ரஹ்மர்ஷியாகிய கபிலரிடத்தில் அபராதப்பட்டமையால் சாம்பலான ஸகரபுத்ரர்கள், தங்கள் தேஹ (உடல்) பஸ்மத்தில் (சாம்பலில்) கங்காஜலம் பட்டமாத்ரத்தினால், ஸ்வர்க்கத்தை அடைந்தார்கள். 

இவ்வாறு, பஸ்மமான (சாம்பலான) தேஹத்தில் (உடலில்) கங்காஜலம் பட்ட மாத்ரத்தில், ஸகரபுத்ரர்கள் ஸ்வர்க்கத்தை அடைந்தார்களென்றால், ஸ்னானம் செய்கையாகிற வ்ரதத்தை அனுஷ்டித்துக் கொண்டு, அந்தக் கங்காதேவியைப் பணிகிறவர்கள், ஸ்வர்க்கம் அடைவார்களென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? அளவற்ற மஹிமையுடைய பகவானுடைய பாதார விந்தத்தினின்று உண்டாகி, ஸம்ஸார பந்தத்தைப் போக்கும் திறமையமைந்த கங்கா நதிக்கு, இப்பொழுது சொன்ன மாஹாத்ம்யம் பெரிய ஆச்சர்யமன்று. இஃதெல்லாம் பகவானுடைய பாதார விந்தங்களின் மஹிமை. தூய மனத்தரான முனிவர்கள், இந்தப் பகவானுடைய பாதார விந்தங்களில் ச்ரத்தையுடன் மனத்தை நிலைநிறுத்தி, துறக்க முடியாத ப்ரக்ருதி ஸம்பந்தத்தைத் துறந்து, அப்பொழுதே அவனோடொத்திருக்கையாகிற மோக்ஷத்தைப் பெறுகின்றார்கள். அப்படிப்பட்ட பகவானுடைய பாதார விந்தங்களினின்று உண்டான கங்கைக்கு, இஃது ஒரு பெருமையன்று.  

பிறகு, பகீரதனிடத்தினின்று ச்ருதனென்பவன் பிறந்தான். அவன் பிள்ளை யாயாவரன். அவன் பிள்ளை ஸிந்துத்வீபன். அவன் பிள்ளை, அயுதாயு. அவன் பிள்ளை ருதுபர்ணன். அவன் நள மஹாராஜனுக்கு அக்ஷ ஹ்ருதயம் (சூது, சதுரங்கம் முதலிய ஆட்டங்களின் ரஹஸ்யம்) உபதேசித்து, அவனிடத்தினின்று அச்வ (குதிரை) வித்யையைப் பெற்று, அவனுக்கு நண்பனானான். அவன் பிள்ளை ஸர்வகாமன். அவன் பிள்ளை ஸதாஸன். அவன் பிள்ளை மதயந்தியின் கணவன். அவனை மித்ரஸஹனென்பார்கள். அவனையே கல்மாஷபாதனென்றும் சொல்லுவார்கள். அவன், வஸிஷ்டருடைய சாபத்தினால் ராக்ஷஸனானான். மற்றும், அவன் தன் காமத்தினால் ஔரஸப்பிள்ளை (தன்னிடமிருந்து தோன்றிய ஸந்ததி) அற்றவனானான்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹர்ஷீ! மஹானுபாவனும் ஸுதாஸ குமாரனுமாகிய மித்ரஸஹனுக்கு குருசாபம் எதைப்பற்றி உண்டாயிற்றோ, அது ரஹஸ்யமல்லாதிருக்குமாயின், அதைச் சொல்ல வேண்டும்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- வேட்டையாடும் தன்மையுடைய ஸுதாஸ குமாரனான மித்ரஸஹன், ஒருகால் வேட்டையாடச் சென்று, திரிந்து கொண்டிருக்கையில், ஒரு ராக்ஷஸனைக் கொன்று, அவனுடைய ப்ராதாவைக் (ஸகோதரனைக்) கொல்லாமல் விட்டுவிட்டான். அவன், தன் ப்ராதாவைக் (ஸகோதரனைக்) கொன்ற அபராதத்தை நினைத்து, அதற்கு அபகாரம் செய்ய (பழி வாங்க) விரும்பி, அம்மன்னவனுடைய க்ருஹத்திலுள்ள சமையற்காரனுடைய உருவந்தரித்து, புசிக்க விரும்புகிற வஸிஷ்டருக்கு, பக்வம் செய்த (சமைக்கப்பட்ட) மனுஷ்ய மாம்ஸத்தை எடுத்துக்கொண்டு சென்றான். அப்பால், மஹாஞானியாகிய வஸிஷ்டர், போஜன பாத்ரத்தில் (இலையில்) பரிமாறின மனுஷ்ய மாம்ஸத்தைக்கண்டு, அது மனுஷ்ய மாம்ஸமென்பதையும், புசிக்கத் தகாதது என்பதையும் அறிந்து, கோபித்து, “இவ்வாறு செய்த நீ ராக்ஷஸனாகக் கடவாய்” என்று அம்மன்னவனைச் சபித்தார். 

அப்பால், அந்த நர (மனுஷ்ய) மாம்ஸத்தை, சமையற்காரனுடைய உருவந்தரித்த ராக்ஷஸன் கொண்டு வந்தானேயன்றி மன்னவன் செய்வித்தது அன்று என்று தெரிந்து கொண்டு, தான் கொடுத்த சாபத்தைப் பன்னிரண்டு வர்ஷங்களோடு முடியும்படி செய்தார். அப்பால், அந்த ஸௌதாஸ மன்னவனும் கையில் ஜலத்தை (நீரை) எடுத்துக்கொண்டு குருவான வஸிஷ்டரை சபிக்கத் தொடங்குகையில், அவன் பத்னியான மதயந்தி வேண்டாமென்று அவனைத் தடுக்க, அவனும் திசைகள், ஆகாயம், பூமி, இஃதெல்லாம் ஜீவ ப்ரசுரமாயிருப்பதை (ஜீவாத்மாக்களால் நிறைந்து இருப்பதை) ஆராய்ந்து அந்த சாப ஜலத்தை (நீரைத்), தன் பாதங்களில் கொட்டிக்கொண்டான். அவன், குருவான வஸிஷ்ட மஹர்ஷியின் சாபத்தினால் ராக்ஷஸத் தன்மையை அடைந்தான். சாப ஜலத்தைப் (நீரைப்) பாதத்தில் கொட்டிக் கொண்டபடியால், அதில் விகாரம் உண்டாகப் பெற்று, கல்மாஷபாதனென்று பெயர் பெற்றான். அவன் ஒருகால் வனத்திலேயே வாஸம் செய்பவர்களான ப்ராஹ்மண தம்பதிகள் ஸம்போக ஸுகத்தை (சேர்ந்து இருக்கும் இன்பத்தை) அனுபவித்துக்கொண்டிருக்க, பசியினால் பீடிக்கப்பட்டிருந்தபடியால், பார்யையுடன் (மனைவியுடன்) இணைந்திருக்கின்ற ப்ராஹ்மணனைப் பக்ஷிக்கப் (உண்ணப்) பிடித்துக்கொண்டான். ப்ராஹ்மணனின் மனைவி, தன் பர்த்தாவுக்கு ஸம்போகத்தில் (இணைந்து இருப்பதில்) விருப்பம் முடியாதிருப்பதை அறிந்து, ராக்ஷஸனைப் பார்த்து, இவ்வாறு மொழிந்தாள்.

ப்ராஹ்மணி சொல்லுகிறாள்:- நீ உண்மையில் ராக்ஷஸனல்லை. நீ இக்ஷ்வாகு வம்சத்து அரசர்களில் சிறந்தவன். மதயந்தியின் பர்த்தா (கணவன்). வீரனே! நீ ப்ராஹ்மணனை வதிக்கையாகிற அதர்மத்தைச் செய்வது யுக்தமன்று (ஸரியன்று). நான் ஸந்ததியை விரும்புகின்றேன். என் கணவனும் ப்ராஹ்மணனுமாகிய இவர் ஸம்போக விருப்பம் ஈடேறப் பெறாதவராயிருக்கிறார். இவரை எனக்குக் கொடுப்பாயாக. மன்னவனே! இந்த மனுஷ்ய தேஹம் (உடல்), புருஷனுக்கு ஸமஸ்த புருஷார்த்தங்களையும் ஸாதித்துக்கொடுக்கவல்லது. ஆகையால், மனுஷ்ய தேஹத்தை (உடலை) வதித்தால் ஸமஸ்த புருஷார்த்தங்களையும் வதித்தாற்போலாகுமென்று சொல்லுகிறார்கள். மற்றும், நீ பிடித்துக்கொண்டிருக்கிற என் பர்த்தா (கணவர்) ப்ராஹ்மணர்; வேத சாஸ்த்ரார்த்தங்களை அறிந்தவர்; தவமும், சீலமும், கோபமில்லாமை முதலிய மற்றும் பல குணங்களும் அமைந்தவர்; ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவாய் ஸர்வஜ்ஞத்வம் (எல்லாவற்றையும் அறிதல்) முதலிய குணங்களுடன், தேவ, மனுஷ்யாதி பூதங்களின் ஹ்ருதய குஹையில் மறைந்திருப்பதும் மஹாபுருஷனென்று பெயர் பெற்றதுமாகிய பரப்ரஹ்மத்தை உபாஸித்துக்கொண்டு, அதில் பெரும் விருப்பங்கொண்டிருப்பவர்; ப்ரஹ்மர்ஷிகளில் சிறந்தவர். அப்படிப்பட்ட இவ்வந்தணர், ராஜர்ஷி ச்ரேஷ்டனும், ப்ரபுவுமாகிய உன்னிடத்தினின்று எப்படி வதம் அடையத்தகுந்தவராவார்? 

புதல்வன் தந்தையிடத்தினின்று வதம் பெற உரியவனோ? தர்மஜ்ஞனாகிய உனக்கு இது தெரியாதா? மற்றும், இவர் ஸாது; பாபமற்றவர்; கல்ப ஸுத்ர ப்ரவசனங்களை ஓதியுணர்ந்தவர்; ப்ரஹ்மோபதேசம் செய்யும் திறமையமைந்தவர்; வேதாத்யயனம் செய்விப்பவர். ஸாதுக்களால் புகழப்பட்ட நீ, இத்தகையரான இவ்வந்தணருடைய வதத்தை எப்படி ஸம்மதிக்கின்றாய்? நீ பசுவின் வதத்தை நெஞ்சிலும் நினைக்க மாட்டாதவன். அப்படியே, இவ்வந்தணருடைய வதத்தையும் நீ ஸம்மதிக்கலாகாது. இதையெல்லாம் பொருள் செய்யாமல் எப்படியாவது நீ இவரைப் பக்ஷணம் செய்வாயாயின் (உண்பாயாயின்), அப்பொழுது முதலில் என்னைப் பக்ஷிப்பாயாக. இவரை விட்டு நான் ஒரு க்ஷணமும் ஜீவிக்க மாட்டேன். ஜீவன் போன பின்பு பிணம் ஜீவிக்குமோ?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த ப்ராஹ்மணி இவ்வாறு மன இரக்கம் உண்டாகும்படி, அநாதை போலப் புலம்பிக் கொண்டிருக்கையில், சாபத்தினால் மதி (புத்தி) மயங்கின ஸௌதாஸன், புலி பசுவைப் பக்ஷிப்பது (உண்பது) போல, ப்ராஹ்மணனைப் புசித்தான். அப்பால், ராக்ஷஸனாகிய ஸௌதாஸன் தன் கணவனைப் பக்ஷிக்கக் கண்டு ப்ராஹ்மணி, தன்னைப்பற்றிச் சோகித்துக் கொண்டே, கோபமுற்று அம்மன்னவனைச் சபித்தாள்.

ப்ராஹ்மணி சொல்லுகிறாள்:– நான் காம விகாரத்தினால் (காதல் ஆசையால்) வருந்தியிருக்க, நிரபராதியான (தவறு செய்யாத) என் கணவனைப் புசித்தாயாகையால், விவேகமற்றவனே! உனக்கும் ஸ்த்ரீ ஸம்போகம் செய்யத் தொடங்கும் பொழுது (மனைவியோடு இணையும் போது) மரணம் உண்டாகுமாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த ப்ராஹ்மணி இவ்வாறு மித்ரஸஹனைச் சபித்து, தன் கணவனுடைய லோகத்தைத் தானும் பெற விரும்பி, அக்னியை வளர்த்தி, கிளர்ந்தெரிகின்ற அவ்வக்னியில் தன் கணவனுடைய எலும்புகளைப் பொகட்டு, தானும் குதித்து, பர்த்தாவின் (கணவனின்) கதியை அடைந்தாள். அந்த மித்ரஸஹன் பன்னிரண்டு வர்ஷங்கள் சென்ற பின்பு சாபம் கழியப் பெற்று, தன் பார்யையுடன் (மனைவியுடன்) கலந்து புணரமுயன்று, ப்ராஹ்மணியின் சாபத்தை நினைத்து, அதைத் தன் காதலிக்குத் தெரிவிக்க, அவளும் அது முதலே வேண்டாமென்று தடுத்தாள். அதுமுதல், அந்த மித்ரஸஹன் மரண பயத்தினால் ஸ்த்ரீ ஸம்போககத்தைத் (மனைவியுடன் இணைவதைத்) துறந்தான். இதைப் பற்றியே “அவன் தன் செயலால் ஒளரஸப்பிள்ளை (தன்னிடமிருந்து தோன்றிய ஸந்ததி) அற்றவனானான்” என்று முன்னமே மொழிந்தேன். 

பிறகு அந்த மித்ரஸஹனால் அனுமதி செய்யப் பெற்ற வஸிஷ்ட மஹர்ஷி, மதயந்தியிடத்தில் கர்ப்பாதானம் செய்தார். அப்பால், அவள் ஏழு வர்ஷங்கள் கர்ப்பம் தரித்திருந்தாள். அப்பொழுதும் பிள்ளை பிறக்கவில்லை. அந்த மதயந்தி, தன் வயிற்றைக் கல்லினால் குத்த, அக்கரு உதரத்தினின்று வெளியாயிற்று. அதைப்பற்றியே அக்குழந்தை அச்மகனென்று பெயர் பெற்றது. அவன் பிள்ளை மூலகன். அவன் ஸ்த்ரீகளால் பாதுகாக்கப் பெற்றிருந்தானாகையால், “நாரீகவசனென்றும்”, (நாரிகள் - ஸ்த்ரீகள். அவர்களைக் கவசமாகவுடையவன் கவசமணிந்தாற்போல ஸ்த்ரீகளால் சூழப்பட்டு மறைந்திருப்பவன்) க்ஷத்ரியர்களே இல்லாமல் அழிந்து போகையில், அவர்களுக்கு வேர் போன்றிருந்தானாகையால், மூலகனென்றும் வழங்கி வந்தான். அவன் பிள்ளை தசரதன். அவன் பிள்ளை ஐலபிலன். அவன் பிள்ளை விஸ்வஸஹன். அவன் பிள்ளை கட்வாங்கன். அவன் சக்ரவர்த்தியாயிருந்தான். யுத்தத்தில் ஒருவராலும் வெல்லமுடியாத அம்மன்னவன், தேவதைகளால் வேண்டப் பெற்று, தைத்யர்களை வதித்தான். அப்பால், அவன் தேவதைகளால் வரம் வேண்டும்படி தூண்டப் பெற்று, தன் வாழ்நாள் இன்னம் ஒரு முஹூர்த்த கால மாத்ரமே மிகுந்திருப்பதை அறிந்து, தன் பட்டணத்திற்கு வந்து, மனத்தினால் சிந்தித்து நிச்சயித்துக்கொண்டான். 

“எனக்கு ப்ராஹ்மண குலத்தைக் காட்டிலும் ப்ராணன்கள் (உயிர்) வேறு கிடையாது. ப்ராணன்களைக் (உயிரைக்) காட்டிலும், ப்ராஹ்மண குலமே எனக்கு மிகவும் அன்பிற்கிடமானது. குலதெய்வமான பகவானைக்காட்டிலும் பிள்ளைகள், செல்வம், பூமி, ராஜ்யம், பெண்டிர் இவற்றில் எதுவும் ப்ரியமன்று. இவையெல்லாவற்றைக் காட்டிலும், பகவானே எனக்கு மிகவும் அன்பிற்கிடமானவன். என் புத்தி பால்யத்திலுங்கூட ஒருகாலும் அதர்மத்தில் விருப்பம் கொண்டதில்லை. இவ்வுலகத்தில் ஒரு வஸ்துவையும் நான் பரமபுருஷனைக்காட்டிலும் வேறுபட்டதாகப் பார்த்ததில்லை. மூன்று லோகங்களுக்கும் ப்ரபுக்களாகிய தேவதைகள், எனக்குக் காம போகங்களைப் (ஆசை அனுபவங்களைப்) பற்றி வரங்கொடுத்தார்கள். ஆயினும், பரமபுருஷனையே பணியுந்தன்மையுடைய  நான், அந்தச் சப்தாதி விஷய போகங்களை விரும்ப மாட்டேன். தேவதைகள், தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) உடையவர்களாகையால், ஸர்வ காலத்திலும் தங்கள் ஹ்ருதயத்தில் இருப்பவனும், ஸர்வாந்தராத்மாவும் அன்பனுமாகிய, பரமபுருஷனை அறிகிறதில்லை. இனி, மற்ற ஜனங்கள் எவ்வாறு அறிவார்கள்? ஆகையால், நான் இவ்வுலகத்தில் பகவானுடைய மாயையினால் நிர்மிக்கப்பட்டவைகளும் (உண்டாக்கப்பட்டவைகளும்), கந்தர்வ நகரம் போல நிலையற்றவைகளுமான சப்தாதி விஷயங்களிலும், ப்ரக்ருதியின் பரிணாமமான (மாற்றமான) சரீரத்திலும், நெடுநாளாய் வேரூன்றியிருக்கிற மனப்பற்றைத் துறந்து, ஜகத்திற்கெல்லாம் ரக்ஷகனான பகவானிடத்தில் பக்தி செய்து, அதனால் அவனை அடையப் போகிறேன்” என்று ஸ்ரீமந்நாராயணனிடத்தில் நிலை நின்ற புத்தியினால் இவ்வாறு நிச்சயித்துக்கொண்டு, தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) முதலிய அஜ்ஞானத்தைத் (அறியாமையைத்) துறந்து, சரீர ஸம்பந்தமற்று, அபஹதபாப்மத்வம் (பாப ஸம்பந்தம் இல்லாமை) முதலிய குணங்கள் தோன்றப் பெறுகையாகிற தன் இயற்கையைப் பெற்று, ப்ரமாணங்களால் நிரூபிக்கப்படுவதும், அளவற்ற கல்யாண குணங்களுடையதும், ப்ரபஞ்சத்திலுள்ள ஜாதி, குணாதி கல்பனைகளற்றதும், பாகவதர்களால் வாஸுதேவனென்று கூறப்படுவதுமாகிய பரப்ரஹ்மத்தை அடைந்தான். 

ஒன்பதாவது அத்யாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக