வியாழன், 6 மே, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 306

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – தொண்ணூறாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் தன் பத்னிகளோடு க்ரீடித்த விதமும், அவர்களுக்கு அவனிடத்திலுள்ள ப்ரேமாதிசயமும் (அதிகமானஅன்பும்), அவனுடைய புத்ர - பெளத்ராதி ஸந்ததியும், இந்த ஸ்கந்தத்தின் ச்ரவணாதி (கேட்பது முதலியவற்றின்) பலமும் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு வல்லபனான அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான், ஸமஸ்த ஸம்பத்துக்களும் நிறைந்து, மேன்மையுடைய வ்ருஷ்ணிகளால் சூழப்பெற்றதும், சிறந்த அலங்காரங்களை அணிந்து புதிய யௌவன (இளம்) வயதினால் மிகுந்த ஒளியுடையவர்களும், உப்பரிகைகளில் பந்து முதலியவற்றைக் கொண்டு விளையாடலுற்று மின்னல்கள் போல் விளங்குபவர்களுமாகிய பெண்மணிகள் மனக்களிப்புடன் வாஸம் செய்யப் பெற்றதும், மதஜலத்தைப் பெருக்குகின்ற யானைகளாலும், நன்கு அலங்கரித்துக் கொண்டிருக்கிற போர் வீரர்களாலும், ஸ்வர்ணாலங்காரம் செய்யப்பெற்று விளங்குகின்ற குதிரைகளாலும், அத்தகைய தேர்களாலும், என்றும் நிரம்பின ராஜமார்க்கங்களையுடையதும், உத்யானங்கள், உபவனங்கள் இவை நிறைந்திருப்பதும், புஷ்பித்திருக்கின்ற வ்ருக்ஷங்களின் (மரங்களின்) வரிசைகளில் நுழைந்து மதுபானம்செய்து (தேன் அருந்தி) களித்திருக்கின்ற வண்டுகளின் ஸமூஹங்களால் முழுவதும் த்வனி உண்டாயிருக்கப் பெற்றதுமாகிய த்வாரகையென்னும் தன் பட்டணத்தில் பதினாறாயிரம் பத்னிகளுக்கும் தானொருவனே வல்லபனாகி (கணவனாகி), அத்தனை அற்புத உருவங்களை ஏற்றுக்கொண்டு, போக்ய (அனுபவிக்கப்படும் பொருட்கள்) போகோபகரணாதி (அனுபவிப்பதற்கான கருவிகள்) ஸம்ருத்திகளெல்லாம் (நிறைவு, செல்வச்செழிப்பு) நிறைந்திருப்பவைகளும், மலர்ந்த நெய்தல், செங்கழுநீர், ஆம்பல், தாமரை ஆகிய இப்புஷ்பங்களின் தூள்கள் படிந்து வாஸனையமைந்த நிர்மலமான ஜலமுடையவைகளும், பக்ஷிகள் இனமினமாய்க் கூவப்பெற்றவைகளுமாகிய அப்பெண்மணிகளின் க்ருஹங்களில் விளையாடிக் கொண்டிருந்தான். 

அளவற்ற வைபவமுடைய அப்பரமன், மடந்தையர்கள் ஆலிங்கனம் செய்யவும், அவர்களது கொங்கையின் குங்குமக் குழம்பு தன் அங்கமெல்லாம் படியவும் பெற்று, அவர்களுடன் தாமரை மடுக்களில் இழிந்து ம்ருதங்கம், பணவம், ஆனகம், வீணை முதலிய வாத்யங்களை வாசிக்கிற கந்தர்வர்களாலும், புராணாதிகள் படிக்கிற ஸுதர்களாலும், வம்சாவளி படிக்கிற மாகதர்களாலும், ஸ்துதி பாடகர்களான வந்திகளாலும், பாடப்பெற்று விளையாடினான். 

தன்னை அடைந்தவர்களைக் கைவிடாது காக்கும் தன்மையுள்ள அம்மஹானுபாவன், அம்மடந்தையர்மணிகள் சிரித்துக்கொண்டு ஜலமிறைக்கும் பாத்ரங்களால் ஜலத்தை எடுத்திறைக்க, தானும் அவர்கள் மேல் ஜலத்தை எடுத்திறைத்துக் கொண்டு யக்ஷராஜன் (குபேரன்) யக்ஷ ஸ்த்ரீகளோடு விளையாடுவது போல் அவர்களோடு விளையாடினான். 

வஸ்த்ரங்கள் நனைந்து, ஸ்தன (முலை) ப்ரதேசங்கள் (பகுதிகள்) வெளித்தோன்றவும், பெரிய தலைச் சொருக்கினின்று புஷ்பங்கள் உதிரவும் பெற்ற அம்மாதரசிகள், தம் காதலன் தங்கள் மேல் ஜலம் இறைப்பதைப் பரிஹரிக்க (தவிர்க்க) வேண்டுமென்னும் எண்ணத்தினால் அவனையே ஆலிங்கனம் செய்து, அதனால் விளைந்த மன்மத விகாரத்தினால் திகழ்கின்ற அழகிய முகமுடையவர்களாகி விளங்கினார்கள். 

ஸ்ரீக்ருஷ்ணனோவென்றால், தான் அணிந்த பூமாலையில் அப்பெண்மணிகளுடைய கொங்கை மேலுள்ள குங்குமக் குழம்பு படியவும், விளையாட்டிலுள்ள மனவூக்கத்தின் மிகுதியால் தலைமயிர் முடி அவிழ்ந்தலையும் தான் அடிக்கடி அப்பெண்மணிகளின் மேல் ஜலத்தை வாரி இறைத்துக்கொண்டு, அவர்கள் தன் மேல் ஜலம் இறைக்கவும் பெற்று, யானைப் பேடுகளால் சூழப்பட்ட தலைமையுள்ள ஆண் யானை போல் விளங்கினான். 

ஸ்ரீக்ருஷ்ணன், பாட்டுக்களாலும் வாத்யங்களாலும் பிழைக்கும் தன்மையுள்ள நடர்களுக்கும், நர்த்தர்களுக்கும் மனக்களிப்புடன் அணியத் தகுந்த ஆபரணங்களையும் ஆடைகளையும் கொடுத்தான். அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பத்னிகளும் அவ்வாறே ஆடையாபரணங்களைக் கொடுத்தார்கள். இவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கிற அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய நடை, உரை, பார்வை, புன்னகை, விளையாட்டு, பரிஹாஸம், ஆலிங்கனம், இவைகளால் அம்மடந்தையர்களின் மதிகள் பறியுண்டன, ஆகையால், போக (இங்கு அனுபவிப்பதற்கான பொருட்கள்) மோட்சங்களைக் (வீடுபேறு) கொடுக்கும் திறமையுள்ள ஸ்ரீக்ருஷ்ணன் ஒருவனிடத்திலேயே நிலைநின்ற மதியுடைய அம்மடந்தையர் மணிகள், அவன் இல்லாத பொழுது தாமரைக் கண்ணனாகிய அம்மஹானுபாவனைச் சிந்தித்துக் கொண்டு, க்ஷணகாலம் ஒன்றும் பேசாமல் மௌனமாயிருந்து, அதன் பிறகு பல வாக்யங்களை மொழிந்தார்கள். அவற்றைச் சொல்லுகிறேன். என்னிடத்தினின்று அவைகளைக் கேட்பாயாக.

ஸ்ரீக்ருஷ்ண மஹிஷிகளில் ஒருத்தி சொல்லுகிறாள்:- பெண் அன்றில் பறவையே! இவ்வுலகில் ராத்ரியில் ஜகதீச்வரனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், வெளி விஷயங்களைப்பற்றின அறிவுகள் எவையுமின்றிச் சயனித்துக்கொண்டிருக்கிறான். நீயோவென்றால், தூக்கமில்லாமல் புலம்புகின்றாய்; சயனிக்காமலே இருக்கின்றாய். (இப்படி ஸ்ரீ க்ருஷ்ணனுடைய நித்ரைக்கு நீ பங்கம் செய்வது யுக்தமா (சரியா)? யுக்தமன்றே (சரியன்று). ஆனால், தோழி! நீயும் எங்களைப்போல் தாமரைக் கண்ணனான அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய புன்னகையோடு கூடின கம்பீரமான லீலாவலோகனத்தினால் (மனம் ஈர்க்கும் கடைக்கண் பார்வையால்) நன்கு மனம் பிளவுண்டாயாயென்ன?

மற்றொருத்தி சொல்லுகிறாள்:- சக்ரவாகப்பறவையின் பேடையே (பெண் பறவை)! ராத்ரியில் உன் பந்துவாகிய காதலனைக் காணாமல் கண்களை மூடிக்கொண்டிருக்கின்றாயே, என்ன? ஏன் மன இரக்கம் உண்டாகும்படி அடிக்கடி மிகவும் புலம்புகின்றாய்? ஆ! இது என்ன கஷ்டம்! எங்களைப்போல் நீயும் ஸ்ரீக்ருஷ்ணனுக்குத் தாஸ்யத்தை (அடிமையை) அடைந்து, தலைச் சொருக்கினால் அவன் சூடிக் களைந்த பூமாலையைத் தரிக்க விரும்புகின்றாயா என்ன?

மற்றொருத்தி சொல்லுகிறாள்:- ஸமுத்ரமே! தூக்கம் பிடிக்காமல் கண் விழித்துக்கொண்டு, ஸர்வ காலமும் ஓயாமல் உரக்க முறையிடுகின்றாயே. ஸ்ரீக்ருஷ்ணன் விஷயத்தில் எங்களைப்போல் நீயும் கடக்கமுடியாத அவஸ்தையை அடைந்தாயா, என்ன? ஆ! என்ன கஷ்டம்! நாங்கள் கொங்கை மேல் அணிந்த குங்குமக்குழம்பு முதலிய அடையாளங்களெல்லாம் ஸ்ரீக்ருஷ்ணனுடைய ஸம்போகத்தினால் (சேர்த்தியினால்) பறியுண்டிருப்பது போல், நீயும் கௌஸ்துபம் (ஸ்ரீமந்நாராயணனின் மார்பில் ஒளி வீசும் மணி – கடலிலிருந்து தோன்றியது) முதலிய உன் அடையாளங்களெல்லாம் ஸ்ரீக்ருஷ்ணனால் பறியுண்டு புலப்படுகின்றாயே!

மற்றொருத்தி சொல்லுகிறாள்:- சந்த்ரனே! நீ வலிவுள்ளதான க்ஷயரோகத்தினால் (உடல் இளைக்கும் காசநோயால்) மிகவும் பீடிக்கப்பட்டு இளைத்திருக்கின்றாய். ஆகையால், உன் கிரணங்களைக்கொண்டு அந்தகாரத்தைப் (இருட்டைப்) போக்க வல்லமையற்றிருக்கின்றாயே என்ன? நீயும் எங்களைப்போல் ஸ்ரீக்ருஷ்ணன் மொழிந்த ரஹஸ்ய வார்த்தைகளை நினைத்துக்கொண்டு, அவனிடத்தில் ஆழ்ந்த மதியுடையவனாகி, பேசமுடியாமல் வாய் தடைபட்டவனாக எங்களுக்குப் புலப்படுகின்றாய்.

மற்றொருத்தி சொல்லுகிறாள்:- மலயமாருதமே! (தென்றலே!) உனக்கு நாங்கள் என்ன அப்ரியம் (தீமை) செய்தோம்? ஸ்ரீக்ருஷ்ணனுடைய கடைக் கண்ணோக்கங்களால் மிகவும் பிளவுண்ட எங்கள் ஹ்ருதயத்தில் மன்மத வேதனையை விளைக்கின்றாயே. (நாங்கள் உனக்கு ஒருவித அனிஷ்டமும் (தீங்கும்) (செய்யாதிருக்கையில், மன்மத பாதையை விளைத்து, எங்களை வருத்துவது உனக்குத் தகுதியன்று.)

ஒருத்தி, காதலனைத் தேடுகின்ற மற்றொருத்தியைப் பார்த்து, அவளைப் புஷ்பங்களைத் தேடுவது போல் பாவித்துச் சொல்லுகிறாள்:- ஒன்றுமறியாத பேதையே! என்ன த்யானம் செய்கின்றாய்? எதிரில் மலர முயன்றிருக்கிற இந்தக் குந்த புஷ்பத்தைப் (மலரைப்) பறித்துக் கொள்வாயாக. 

மற்றொருத்தி சொல்லுகிறாள்:- இந்த (மு என்னும் அக்ஷரமில்லாத வெறும்) குந்தத்தினால் எனக்கு என்ன ப்ரயோஜனம்? ஒருத்தி சொல்லுகிறாள் ஆனால், உனக்கு எத்தகைய புஷ்பங்கள் ப்ரியமானவை? 

மற்றொருத்தி சொல்லுகிறாள்:- ச்ருதிசிரோவிசேஷபூஷணமான (வேதத்தின் உச்சியான உபநிஷத்துக்களில் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்ட) புன்னாகத்தையன்றோ நான் தேடுகிறேன். பசுக்களும் கூட இந்தப் புந்நாகத்தினுடைய வாஸனையின் மிகுதியைக் கண்டு அதற்கெதிர்முகமாக ஓடிச் சென்று தேடிக் கொண்டிருந்தனவல்லவா? (இவ்விஷயத்தில் அசேதனமான (அறிவற்ற) பசுக்களின் கதி இதுவானால், சேதனர்களின் (அறிவுடைய ஜீவாத்மாக்களின்) கதியைச் சொல்ல வேண்டுமோ?) 

மற்றொருத்தி சொல்லுகிறாள்:- மேகமே! யாதவ ச்ரேஷ்டனாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கு நீ நண்பனாயிருக்கின்றாய். நிச்சயம். அதனால் நீ எங்களைப்போல் ஸ்ரீவத்ஸமென்னும் திருமறுவுடைய அந்த ஸ்ரீக்ருஷ்ணனிடத்திலுள்ள ப்ரேமத்தினால் கட்டுண்டு, அசையாமல் அவனை த்யானித்துக் கொண்டிருக்கிறாயா என்ன? எங்களைப் போன்றவன் போல் நீயும் பேராவலுற்று, ஹ்ருதயத்தில் ஈரமுடையவனாகி, நீர்த்தாரைகளைப் பெய்கின்றாய். (இது யுக்தமே (ஸரியே). அவனிடத்தில் மனப்பற்று செய்தால், அது வருத்தத்தை விளைவிக்கும்.

மற்றொருத்தி சொல்லுகிறாள்:- அழகிய குரலுடைய குயிலே! இனிதாகப் பேசும் தன்மையுள்ள ஸ்ரீக்ருஷ்ணனுடைய உரைகள் போன்ற உரைகளை உரைக்கின்றாய். மரணம் அடைந்தவர்களையும் நன்கு பிழைப்பிக்கவல்ல இக்குரலுடன் எனக்குச் சொல்வாயாக. நான், உனக்கு என்ன ப்ரியம் (நன்மை) செய்யவேண்டும்?

மற்றொருத்தி சொல்லுகிறாள்:- இனத்தில் தலைமையுள்ள கிளியே! யாதவ ச்ரேஷ்டனான ஸ்ரீக்ருஷ்ணனுடைய அழகான கதையைப் பாடுவாயாக. நாங்கள், உனக்குப் பாலால் அபிஷேகம் செய்கிறோம். நீ விரஹ அக்னியால் (பிரிவுத் தீயால்) தபிக்கப்பட்ட எங்கள் ஹ்ருதயத்தில் பூ மங்கையின் கேள்வனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய கதையாகிற அம்ருதத்தை நன்கு பெய்வாயாக.

மற்றொருத்தி சொல்லுகிறாள்:- ஆழ்ந்த மதியுடைய பர்வதமே (மலையே)! நீ அசையாதிருக்கின்றாய்; மற்றும், பேசாதிருக்கின்றாய். பின்னையோவென்றால், நீ ஏதோ ஒரு பெரிய பொருளைச் சிந்திக்கிறாப்போல் தோற்றுகிறது. நாங்கள் வஸுதேவகுமாரனான ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதத்தை ஸ்தனங்களால் தரிக்க விரும்புவது போல், நீயும் ஸ்தனங்கள் போன்ற கொடு முடிகளால் அவனுடைய பாதத்தைத் தரிக்க விரும்புகின்றாயா என்ன? ஆ! என்ன கஷ்டம்?

மற்றொருத்தி சொல்லுகிறாள்:- ஸமுத்ர ராஜனுடைய பத்னிகளாகிய நதிகளே! நாங்கள், யதுபதியினுடைய அனுராகம் (பரிவு, அன்பு) அமைந்த கடைக்கண்ணோக்கம் நேரப் பெறாமல், அதனால் மனம் பறியுண்டு, உடம்பு மிகவும் இளைத்திருப்பது போல், நீங்களும் இப்பொழுது (க்ரீஷ்ம ருதுவில் – கோடைக் காலத்தில்)) மடுக்களெல்லாம் உலர்ந்து, தாமரை மலர்களின் சோபையும் அழிந்து, அன்பிற்கிடமான கணவனாகிய ஸமுத்ரராஜனுடைய அனுராகம் (பரிவு, அன்பு) அமைந்த கண்ணோக்கம் நேரப்பெறாமல், இளைத்திருக்கிறீர்களா என்ன? ஆ! என்ன வருத்தம்?

மற்றொருத்தி சொல்லுகிறாள்:- ஹம்ஸப்பறவையே! உனக்கு நல்வரவாகுக? உட்காருவாயாக. பாலைப் பருகுவாயாக. ஓ ஹம்ஸமே! ஸ்ரீக்ருஷ்ணனுடைய கதையைச் சொல்லுவாயாக. உன்னை ஸ்ரீக்ருஷ்ணனுடைய தூதனென்று நாங்கள் எண்ணுகிறோம். ஒருவராலும் வெல்ல முடியாத மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் க்ஷேமமாயிருக்கிறானா? நட்பு நிலைநிற்கப் பெறாத அப்பரமன், எங்களுக்கு முன்பு ஏகாந்தத்தில் சொன்னதையெல்லாம் மறவாதிருக்கிறானா? (“அதையெல்லாம் நினைத்துத்தான் என்னை அனுப்பினான்” என்கிறாயா?) க்ஷத்ர தூதனே! (அற்பத்தன்மையுள்ள அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய தூதனே!) எதுக்காக நாங்கள் அவனைப் பணியவேண்டும்? (“காமத்திற்காக உங்களை அவன் அழைக்கிறான்” என்கிறாயா?) ஆனால், அவனையே இங்கு வரவழைப்பாயாக. (அப்படியே ஆகட்டுமென்று போகத் தொடங்கின அவ்வன்னத்தைக் குறித்து, மீளவும் சொல்லுகிறாள்:-) எங்களெல்லோரையும் வஞ்சித்து, தானொருத்தியேயாகக் கூடிக் களிக்கின்ற ஸ்ரீமஹாலக்ஷ்மியைத் தவிர அவனை மாத்ரமே அழைப்பீர்களாக. (“அவள் அவனை விட்டு எப்பொழுதும் பிரியமாட்டாளே. அவளை எப்படி பரிஹரிக்க (தவிர்க்க) முடியும்” என்கிறாயா?) அவளொருத்தி மாத்ரம்தான் அவனிடத்தில் நிலைநின்ற அன்புடையவளோ? நாங்களெல்லாரும் அத்தகையரல்லோமோ?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:– ஸ்ரீக்ருஷ்ண பத்னிகள் யோகீச்வரர்களுக்கும் ஈச்வரனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் இவ்வாறு மனோபாவத்தைச் செய்து, அதனால் வைஷ்ணவ கதியான (விஷ்ணுவின் இடமான) முக்தியைப் பெற்றார்கள். 

பெரும் புகழுடையவனும், பெரியோர்களால் பாடப்பட்டவனுமாகிய அப்பரமபுருஷன், பல பாட்டுக்களால் பாடின மாத்ரத்திலும், எவ்விதத்திலாவது காதால் கேட்ட மாத்ரத்திலும், ஸ்த்ரீகளின் மனத்தைப் பலாத்காரமாகப் பறிக்கும் தன்மையன். அவன் தன்னை நேரே பார்க்கிற மடந்தையர்களின் மனத்தைப் பறிப்பானென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

எவர்கள் ஜகத்குருவான அந்த ஸ்ரீக்ருஷ்ணனைத் தங்கள் கணவனென்னும் புத்தியால் பாத ஸம்வாஹனம் (திருவடிகளைத் தாங்குவது) முதலியன செய்து, ப்ரேமத்துடன் சுச்ரூஷித்தார்களோ பணிவிடை செய்தார்களோ), அத்தகைய மடந்தையர்களின் தவத்தை என்னென்று வர்ணிப்பேன்? ஸத்புருஷர்களுக்குக் கதியும், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், க்ருஹஸ்தாச்ரமமே (இல்லறமே) தர்ம, அர்த்த, காமங்களுக்கு விளை நிலமென்பதை நன்றாக அறிவிக்கும் பொருட்டு, வேதங்களில் விதிக்கப்பட்ட வர்ணாச்ரம தர்மங்களைப் பரக்க (நன்றாக) அனுஷ்டித்துக் காட்டினான். க்ருஹஸ்தாச்ரமத்தை (இல்லறத்தைக்) குறைவற அனுஷ்டித்துக் கொண்டிருக்கிற அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்குப் பதினாறாயிரம் பத்னிகள் இருந்தார்கள். அப்பெண்மணிகளுக்குள், ருக்மிணி முதலிய எட்டுப் பேர்கள் முக்யமானவர்களென்று முன்னமே மொழிந்தேன். அவர்களெல்லோரும் பிள்ளையுடையவர்களே. (பிள்ளை இல்லாதவள் ஒருத்தியும் இல்லை.) 

எங்கும் தடைபடாத ஸங்கல்பமுடைய அப்பரமபுருஷன், தன் பார்யைகள் எத்தனைபேர்கள் உண்டோ, அவர்களுக்குள் ஒவ்வொருத்தியிடத்திலும் பத்து பத்து பிள்ளைகளைப் பெற்றான். அளவற்ற வீர்யமுடைய அப்பிள்ளைகளுக்குள், பதினெட்டுப் பேர்கள் மஹாரதர்களும் (10000 வில்லாளிகளுடன் தனித்து நின்று போர் செய்யும் திறமை உடையவன் மஹாரதன்), பெரும்புகழர்களுமாயிருந்தார்கள். அவர்களுடைய நாமங்களைச் சொல்லுகிறேன், கேள். 

ப்ரத்யும்னன், அநிருத்தன், தீப்திமான், பானு, ஸாம்பன், மது, ப்ருஹத்பானு, சித்ரபானு, வ்ருகன், அருணன், புஷ்கரன், தேவபாஹு, ச்ருததேவன், ஸுநந்தனன், சித்ரபாஹு, விரூபன், கவி, ந்யக்ரோதன் என்னுமிவர்கள் பதினெண்மர். 

த்ரிவக்ரையின் புதல்வன் உபக்ரோசனென்பவன். அவன் ஸ்ரீக்ருஷ்ணனைத் தொடர்ந்து நாரத மஹர்ஷிக்குச் சிஷ்யனாகிப் பகவானிடத்தில் மனம் மாறப்பெறாதிருக்கையாகிற வ்ரதத்தை ஓயாமல் அனுஷ்டித்து வந்தான். அவன், பஞ்சராத்ர சாஸ்த்ரத்தின் பொருள்களை அனைவரும் எளிதில் அறிந்து உய்யுமாறு அதிஸங்கரஹமும் (மிகவும் சுருக்கமாயும்), அதிவிஸ்தாரமும் (மிகவும் விரிவாகவும்) இன்றி நடுத்தரமான ஒரு ப்ரபந்தத்தை இயற்றினான். அதை அறிகிறவன் முக்தியை அடைவான். 

அதில், ஸ்த்ரீகள், சூத்ரர்கள், தாஸர்கள் இவர்கள் அனைவரும் ஸ்ரீமஹாவிஷ்ணுவை அடைவதற்கிடமான தாபம், புண்ட்ரம் முதலிய வைஷ்ணவ (விஷ்ணுவை ஆராதிப்பவர்களின்) ஸம்ஸ்காரம் (தூய்மைப்படுத்தும் செயல்கள்) எல்லாம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. ஸ்ரீக்ருஷ்ணனுடைய பிள்ளைகளாகிய இந்தப் பதினெண்மர்களுக்குள் ருக்மிணியின் பிள்ளையாகிய ப்ரத்யும்னனென்பவனே முதல்வன். அவன், உருவத்திலும், குணங்களிலும் தந்தையோடொத்தவன். 

மஹாரதனாகிய அந்த ப்ரத்யும்னன், தன்னுடைய அம்மானாகிய ருக்மியின் புதல்வியை மணம் புரிந்தான். அவனுக்கு அவளிடத்தில் பதினாயிரம் யானை பலமுடைய அநிருத்தனென்னும் புதல்வன் பிறந்தான். ருக்மியின் பெண் வயிற்றுப் பேரனாகிய அவ்வநிருத்தன், அந்த ருக்மின் பிள்ளை வயிற்றுப் பேத்தியை மணம் புரிந்தான். அவனுக்கு அவளிடத்தில் வஜ்ரனென்னும் பிள்ளை பிறந்தான். மௌஸல சாபத்தினால் ஏற்பட்ட யாதவ குலக்ஷயத்தினின்று (அந்தணர் சாபத்தினால் உலக்கையைக் கரணமாகக் கொண்டு அழிந்த யாதவ குலத்தில்) அவனொருவனே மிகுந்தான். 

அவ்வஜ்ரனிடத்தினின்று, ப்ரதிபாஹூ என்பவன் பிறந்தான். அவன் பிள்ளை ஸுபாஹு. அவன் பிள்ளை தர்மஸேனன். அவன் பிள்ளை ச்ருதஸேனன். இந்த வம்சத்தில் பிறந்தவர்கள் பணமில்லாதவர்களாகவாவது, பல புதல்வர்களைப் பெறாதவர்களாகவாவது, ஆயுள் அற்பமாயிருக்கப் பெற்றவர்களாகவாவது, அற்பவீர்யர்களாகவாவது, ப்ராஹ்மண குலத்திற்கு வேண்டியவற்றை நிறைவேற்றாதவர்களாகவாவது பிறக்கவில்லை. யது வம்சத்தில் பிறந்தவர்களெல்லோரும் புகழ்பெற்ற செயலுடையவர்கள். அனேகமாயிரமாண்டுகள் எண்ணிலும் அவர்களை எண்ணி முடியாது. 

யது குல குமாரர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசார்யர்கள் மூன்று கோடியே எண்பத்தெண்ணாயிரத்து முன்னூறு பேர்களென்று கேள்வி. (ஆசார்யர்களே இத்தனை பேர்களாயின், படித்த பிள்ளைகள் எத்தனை பேர்களாயிருப்பார்களென்று நீயே ஊஹித்துப் பார்). யதுவம்சத்தில் அடங்கிய வஸுதேவனொருவனே பதினாயிரம் பதினாயிரலக்ஷம் பிள்ளைகளுடையவன். மஹானுபாவர்களான யாதவர்களெல்லோரையும் எவன் தான் எண்ணவல்லவன்? 

தேவாஸுரயுத்தத்தில் மிகவும் பயங்கரர்களான அஸுரர்கள், எவரெவர் அடியுண்டு மாண்டார்களோ; அவர்களெல்லாரும் மனுஷ்ய ஜாதியில் சிசுபாலன், ஜராஸந்தன் முதலியவர்களாகப் பிறந்து, கொழுத்து, ப்ரஜைகளைப் பீடித்துக்கொண்டிருந்தார்கள். 

தேவதைகள் அவர்களை நிக்ரஹிக்கும் (தண்டிக்கும்) பொருட்டு, ஸ்ரீமஹாவிஷ்ணுவால் நியமிக்கப்பட்டு, யது குலத்தில் பிறந்தார்கள். இவர்கள் வ்ருஷ்ணிகள், அந்தகர், தாசார்ஹர் என்னுமிவை முதலாக நூற்றொரு வம்சங்கள். பகவான் அந்த யாதவ குலங்களுக்கு ப்ரபுவாக ஸ்ரீக்ருஷ்ண ரூபியாய் அவதரித்தான். யாதவர்கள் எவரெவர் உண்டோ, அவர்கள் எல்லோரும் ஸ்ரீக்ருஷ்ணனைத் தொடர்ந்து வளர்ந்து வந்தார்கள். அந்த யாதவர்கள், படுத்தல், உட்காருதல், உலாவுதல், பேசுதல், விளையாடுதல், நீராடுதல், புசித்தல் முதலிய எல்லாச் செயல்களிலும் ஸ்ரீக்ருஷ்ணனிடத்திலேயே நிலைநின்ற மனமுடையவர்களாயினும், அவன் தங்களுக்கு அந்தராத்மாவான பரமாத்மாவென்று அறியாமல் தங்களைப்போல் யாதவர்களில் ஒருவனென்றே நினைத்திருந்தார்கள். 

மன்னவனே! இதற்கு முன்பு பகவானுடைய ஸ்ரீபாததீர்த்தமும் தேவ நதியுமாகிய கங்கையே புண்ய தீர்த்தங்களெல்லாவற்றிலும் மேலாயிருந்தது. இப்பொழுதோவென்றால், அப்பகவான் யதுகுலத்தில் ஸ்ரீக்ருஷ்ணனாய் அவதரித்து, தன் புகழாகிற புண்ய தீர்த்தத்தை எங்கும் வெள்ளமிடச் செய்து, அக்கங்கையை அற்பமாக்கினான். அந்த ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் ஓயாமல் த்வேஷம் (பகைமை) செய்த சத்ருக்களும், அனுராகஞ் (அன்பு) செய்த நண்பர்களும், அவனோடு ஸாரூப்யத்தை (ஒத்த உருவத்தை) அடைந்தார்கள். 

எவளுடைய கடாக்ஷத்தின் சிறுதுளி தங்கள் மேல் விழவேண்டுமென்று ப்ரஹ்ம, ருத்ராதிகளான மற்றவர்களெல்லாரும் ப்ரயத்னம் செய்கிறார்களோ, அத்தகையளும் ஒருவராலும் வெல்லப்படாத பாதார விந்தங்களுடையவளுமாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மி இந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்கே அனன்யார்ஹ சேஷமாயிருப்பவள் (மற்றொருவர்க்கும் உரியளாகாதபடி அவனுக்கே சேஷமாயிருப்பவள்) மற்றும், இந்த ஸ்ரீக்ருஷ்ண பகவானுடைய பெயரைக் கேட்கிலும், சொல்லிலும், அதன் பொருள் தெரியாமற் போயினும், அது அவர்களுடைய அமங்களங்களை (தீமைகளை) எல்லாம் போக்கும். மற்றும், இவன் அந்தந்த யாதவ குலங்களில் தர்மங்களையெல்லாம் நடத்தினான். மற்றும், அவன் காலத்திற்கு அபிமானியாகிய (தேவதை உருவமான) ஸுதர்சன சக்ரத்தை ஆயுதமாகவுடையவன். அத்தகையனாகிய இந்த ஸ்ரீக்ருஷ்ணன், இப்பூமியின் பாரத்தை நீக்கினது ஓராச்சர்யமன்று. 

இம்மஹானுபாவன், தேவகியிடத்தில் பிறந்தானென்பது வெறும் பேச்சு மாத்ரமேயன்றி, உண்மையன்று. இவன் ஜனங்களுக்கெல்லாம் தான் ஆதாரமும், ஜனங்களைத் தனக்கு ஆதாரமாக உடையவனுமாயிருப்பவன். இவன் யாதவக் கூட்டங்களாகிற தன் புஜங்களால் அதர்மத்தை நீக்கும் பொருட்டே அவதரித்தான். (இவன் பூமியில் அவதரித்தமைக்கு அதர்மத்தைப் போக்குவது மாத்ரமே முக்ய ப்ரயோஜனமன்று. அதை, அவன் கேவலம் தன் ஸங்கல்பத்தினால் நடத்த வல்லவன். ஆனால், பின்னை எது முக்ய ப்ரயோஜனமென்றால்,) இவன் ப்ருந்தாவனாதி இடங்களிலுள்ள மரம், செடி, கொடி முதலிய ஸ்தாவரங்கள், பசு, பக்ஷி முதலிய ஜங்கமங்கள் ஆகிய இவற்றின் பாபங்களைத் தன் ஸம்பந்தத்தினால் போக்கும் பொருட்டே அவதரித்தான். 

இவன் அழகிய புன்னகை அமைந்த தன் திருமுகத்தினால் இடைச்சேரியிலுள்ள மடந்தையர்களுக்கும், பட்டணத்து மடந்தையர்களுக்கும், காம விகாரத்தை (காதல் கிளர்ச்சியை) வளரச் செய்து, அவ்வழியில் அவர்களை அங்கீகரித்தான். இத்தகையனாகிய ஸ்ரீக்ருஷ்ண பகவான், மிகுந்த மேன்மையுடன் விளக்கமுற்றிருக்கின்றான். இந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதார விந்தங்களில் தனக்குப் பக்தி விளைய வேண்டுமென்று விரும்புகிறவன், தன்னுடைய ஆஜ்ஞா (கட்டளை) ரூபமான வேதத்தில் விதிக்கப்பட்ட தர்ம மர்யாதையைக் காக்கும் பொருட்டு, லீலைக்காகத் திருவுருவத்தை ஏற்றுக் கொண்ட யாதவ ச்ரேஷ்டனாகிய பரமபுருஷன் இவ்வாறு மனுஷ்ய சேஷ்டைகளை அனுஸரித்துச் செய்தவைகளும், கேட்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் பாபங்களைப் போக்கி, நிரம்பவும் பக்தியோகத்தை விளைக்க வல்லவைகளுமான அவனுடைய திவ்யாவதார சரித்ரங்களைக் கேட்க வேண்டும். 

மனுஷ்யன், ஸந்திகள் (காலை, மாலையில் பகலுக்கும் இரவுக்கும் இடைப்பட்ட நேரம்) தோறும் ஸ்ரீக்ருஷ்ணனுடைய அழகான கதையைக் கேட்பதும், சொல்லுவதும் செய்து கொண்டு, அவன் விஷயமான சிந்தையை மேன்மேலும் வளர்த்திக் கொண்டு வருவானாயின், கடக்க முடியாத யமனிடம் அகப்பட்டு வருந்தும், ப்ராணிகளின் துக்கங்களை முடிப்பதாகிய அப்பகவானுடைய ஸ்தானத்தை அடைவான். இந்த ஸ்தானத்தைப் பெற விரும்பியே பற்பல மன்னவர்களும் தவம் செய்யும் பொருட்டு க்ராமத்தினின்று வனம் சென்றார்கள். (அப்படிப்பட்ட விஷ்ணுவின் ஸ்தானத்தை அவனுடைய குண சரித்ரங்களைக் கேட்டு, அதில் சிந்தனை வளரப்பெற்றவன், அனாயாஸமாகப் பெறுவான்). 

தொண்ணூறாவது அத்தியாயம் முற்றிற்று.

தசம (பத்தாவது) ஸ்கந்தமும் முற்றுப்பெற்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக