வியாழன், 6 மே, 2021

குரு பரம்பரை வைபவம் - 7 - கோமடம் மாதவாச்சார்யார்

அற்புதம் புரிந்த ஆழ்வார்


பரம பாகவதர்களை, பகவானின் அடியார்களை, பிரம்மாவாலும் ஏன் பரமசிவனாலும்கூட ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு திருமழிசையாழ்வாரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவமே மிகச் சிறந்த சான்றாகும். ஒரு சமயம் திருமழிசையாழ்வார் கந்தைத் துணியொன்றை தைத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ரிஷப வாகனத்தில் ஈசனும் பார்வதியும் ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்தனர். அச்சமயம் தேவி, ‘‘யார் இவர்?’’ என்று வினவினாள். ஈசனும் ‘‘இவர் மகா தேஜஸை உடையவர். மிகச் சிறந்த வைஷ்ணவர்’’ என்று வாயாரப் புகழ்ந்தார். அம்பிகை ஆச்சரியப்பட்டாள். ‘‘அப்படியானால் வேண்டும் வரத்தை அளித்துவிட்டுச் செல்லலாம் வாருங்கள்’’ என்றாள். இருவரும் திருமழிசையாழ்வாரின் இருப்பிடம் நோக்கி வந்தார்கள்.


திருமழிசையாரோ துணியை தைப்பதிலேயே கவனமாக இருந்தார். ‘‘நாங்கள் வரம் கொடுக்கவே வந்திருக்கிறோம். நீங்கள் இப்படி பாராமுகமாக இருக்கிறீர்களே!’’ என்று சிவ-பார்வதி கேட்டனர். 

ஆனால், திருமழிசையாரோ, ‘‘எமக்கு ஒன்றும் வேண்டாம்’’ என்று திண்ணமாகக் கூறினார். 

‘‘இப்படி நாங்களே வரம் தர முன்வரும்போது மறுக்கிறீர்களே,’’ என்று தொடர்ந்து கேட்டனர். 

‘‘சரி, மோட்ச லோகமான பரமபதத்தை அருள முடியுமா?’’ என்று கேட்டார் திருமழிசையாழ்வார்.

‘‘மோக்ஷமிச்சேத் ஜனார்த்தனாத். மோட்சம் தரவல்லவன் முகுந்தனே, அது எம்மாலாகாது. வேறு ஏதாவது கேளும்’’ என்றார், மகாதேவர். 


‘‘சரி, அந்த முக்தியைப் பெறுவதற்கும் அதற்கான ஆன்மிக சாதனங்களை அனுஷ்டிக்கவும் நீண்ட ஆயுளைத் தரவேண்டும்’’ என்று கேட்டார். 


‘‘உமது ஆயுள் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட ஒன்று. என்னால் அதை நீட்டிக்க முடியாது’’ என்று ஈசன் பதில் கூறினார். 


கடைசியாக திருமழிசையாழ்வார், ‘‘இந்த நூல் ஊசியின் துளையின் வழியே சுலபமாக வரும்படி செய்யுங்கள்’’ என்று பரிகாசமாகக் கூறினார். இதனைக் கேட்ட பரமசிவம் கடும் சினம் கொண்டார். ‘‘செருக்குடைய உன்னை அனங்கனைப்போல (மன்மதன் போல) சரீரம் இல்லாதபடி இப்போதே பொசுக்கி விடுகிறேன் பார்’’  என்று கூறி நெற்றிக் கண்ணை திறந்தார். அதிலிருந்து அக்னி ஜுவாலை கிளர்ந்தெழுந்தது. 


இதைக் கண்ட திருமழிசைப்பிரான், ‘‘இந்திரன் போல் உடல் முழுதும் கண் காட்டினாலும் அஞ்சுவேனல்லன்’’ என்று சொல்லி தமது வலது திருவடியின் பெருவிரலில் உள்ளதொரு கண்ணைத் திறந்தார். அதிலிருந்து பெருந் தீ எழுந்து ஊழிகால நெருப்பினும் பன்மடங்கு பெரியதாகி நெற்றிக் கண்ணிலிருந்து கிளர்ந்த நெருப்பை அடக்கி, முக்கண்ணனாரையே சுடத் தொடங்கிற்று. கங்காதரரான ஈசன் அந்தத் தீயை சாந்தப்படுத்துவதற்காக தன் சடையிலிருந்த பல மேகங்களை ஏவி ஊழிக் கால மழைபோல பொழியச் செய்தார். அந்த மேகங்களும் மழை பொழிந்ததனால் பெரு வெள்ளம் ஏற்படவும் பரம பாகவதரான திருமழிசையாழ்வார் சிறிதும் அசையாமல் எம்பெருமானை தியானித்தபடியே இருந்தார். இறுதியில் திரிபுராந்தகரான சிவபெருமான் ஆழ்வாருக்கு ‘பக்தி ஸாரர்’ என்று விருதை அளித்து கயிலாயம் சேர்ந்தார். இந்த விஷயத்தை ஆழ்வாரே தமது பாசுரத்தில் தெரிவிக்கிறார்.


‘‘பிதிருமனமிலேன் பிஞ்சுகன் 

தன்னொடெதிர்வன்

அவன் எனக்கு நேரான்’’

என்றும்,

‘‘மற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை

கற்றைச் சடையானும் கரிக்கண்டாய்’’ (நான்முகன் திருவந்தாதி பாசுரம் எண் 84, 26)

என்றும் உணர்த்தியிருக்கிறார்.


இதன் பிறகு ஆழ்வார் முன்பு போலவே யோகத்தில் எழுந்தருளினார். ஸுக்திஹாரன் எனும் சித்த புருஷன் அஷ்ட மகாசித்தியின் வலிமையினால் ஒரு புலியை அடக்கி அதையே வாகனமாக்கிக் கொண்டு ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தான். இவரின் தலைக்குமேல் சென்றபோது இவரின் யோக மகிமையினால் அந்த வாகனம் தடைப்பட்டு நின்றது. அது நின்றதன் காரணத்தை ஆராய்ந்த சித்த புருஷன், கீழே ஒரு யோகி இருப்பதைப் பார்த்து வியப்புற்றான். அவருடைய சக்தியை சோதிப்பதற்காக கீழே இறங்கினான். 


‘‘முனிவரே! நீர் உடுத்தியிருக்கும் கந்தைத் துணியை எறிந்துவிட்டு இந்த பீதாம்பரத்தை உடுத்திக்கொள்ளும்’’ என்று பொன்னாடையை வரவழைத்து ஆழ்வாரிடம் நீட்டினான். அதைக் கண்ட ஆழ்வார், தன் சங்கல்ப மாத்திரத்தாலேயே மாணிக்கமயமான கவசத்தை உண்டாக்கி அவனிடம் காட்டினார். சூரியன்போல ஒளி வீசும் அதைக்கண்டு வெட்கத்தோடு தலை கவிழ்ந்தான், சித்தபுருஷன். தன் கழுத்தில் இருந்ததொரு மணிமாலையை எடுத்து, ‘‘இதனை ஜப மாலையாக தரித்துக் கொள்ளும்’’ என்று மீண்டும் கொடுக்க முற்பட, ஆழ்வார் தம் கழுத்திலிருந்த துளசி மணிமாலைகளையும், தாமரை மணி மாலைகளையும் எடுத்துக் காட்டினார். அவை, மிகச் சிறந்த நவரத்ன மாலையாக விளங்குவதை கண்ட சித்தன் பிரமித்தான். 


‘‘எல்லா சித்தர்களையும் வென்று வந்த என்னை நீர் வென்றதால் உம்மைக் காட்டிலும் சிறப்புடைய சித்த புருஷன் உலகெங்கிலும் இல்லை’’ என்று சொல்லித் துதித்து, ஆழ்வாரை நமஸ்கரித்து விடைபெற்றான். 


அதேபோல ஒருமுறை யோகத்தில் ஆழ்ந்திருக்கையில், கொங்கண சித்தன் எனும் ரசவாதி இவர் பெருமையைக் கேள்வியுற்று இரும்பைப் பொன்னாக்கும் ரச குளிகையை காட்டி (குளிகை என்றால் பொதுவாக மாத்திரை என்று பொருள்) ‘‘இதைப் பெற்று மகிழ்வீர்’’ என்றான். 


திருமழிசைப்பிரானோ அதை விலக்கி, தமது பொன்னொத்த மேனியின் புழுதியை எடுத்துத் திரட்டி ‘‘இந்தக் குளிகை பலகோடி கற்களைப் பொன்னாக்கவல்லது. இதைக் கொண்டு நீ பிழைத்துக் கொள்’’ என்று கொடுத்தார். அதை உடனே அந்தச் சித்தன் பரிசோதித்துப் பார்த்து பெரும் வியப்புற்று ஆழ்வாரை வணங்கி விடைபெற்றான். 


இதுபோன்ற பல சம்பவங்கள், எம்பெருமான் அருளால், ஆழ்வாருக்கு எல்லா சித்திகளும் கை வந்திருந்ததை நிரூபிக்கின்றன. ஆனால், ஆழ்வார் அவற்றை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. பகவானின் கருணையை மட்டுமே எதிர்நோக்கியிருந்தார்.    


காலங்கள் கடந்தன. பலராலும் தனக்குத் தீங்கு நேர்வதை எண்ணி வருந்தி, திருமழிசையை விட்டு ஒரு மலைக் குகையில் தங்கினார். அப்போது திவ்யதேச யாத்திரை செய்து வந்த முதலாழ்வார்களான பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் மூவரும், திருமழிசை ஆழ்வாரின் இருப்பிடத்தை அறிந்து குகைக்குச் சென்றனர். வாயிலில் இருந்து பார்க்க, அவரின் திருமேனி முழுதும் பொன்னொளி பரவியிருந்ததை பிரமிப்புடன் கன்டனர். முதலாழ்வார்களை கண்ட திருமழிசையாழ்வார் தண்டனிட்டு நமஸ்கரித்தார்; பேருவகை அடைந்தார். 


இவர்கள் நால்வரும் சில காலங்கள் அங்கேயே தங்கியிருந்தனர். எம்பெருமானுடைய குணங்களை ஒருவருக்கொருவர் கூறியும் கேட்டும் சிந்தித்தும் துதித்தும் அனுபவித்தபடி பேரானந்தத்தில் திளைத்தனர். பிறகு பேயாழ்வாரின் அவதாரத் தலமான திருமயிலைக்கு வந்து, பேயாழ்வார் அவதரித்த அல்லிக் குளக்கரையில் (இப்போதைய திருவல்லிக்கேணி) சில ஆண்டுகள் யோகம் இயற்றினர். பின்னர், முதலாழ்வார்கள் மூவரும் மீண்டும் திவ்யதேச யாத்திரைக்கு புறப்பட்டனர். 


இந்த மகிழ்வான சந்திப்பிற்குப் பிறகு திருமழிசையாழ்வார் மீண்டும் திருமழிசைக்கு வந்தார். திருமண்காப்பு சாத்திக் கொள்வதற்காக திருமண் வேண்டி வழக்கமான இடத்தில் தேடினார். ஆனால் திருமண் கிடைக்கவில்லை. பெருங்கவலையுற்றார். அப்போது திருவேங்கடமுடையான் இவரது கனவிலே தோன்றி ‘‘கச்சிவெக்காவை அடுத்த பொற்றாமரைப் பொய்கையில் திருமண் உள்ளது’’ என்று தீர்வு கூறினார்.  


திருமழிசையார் உடனே காஞ்சிபுரம் விரைந்தார். திருமண்ணைக் கண்டு மகிழ்ந்தார். திருமழிசைக்குத் திரும்பிய அவர், சிலகாலம் பிறகு, மீண்டும் காஞ்சியை அடைந்தார். அங்கு திருவெஃகாவில் அரவணைமேல் பள்ளிகொண்ட பெருமாளுக்கு தொண்டு செய்தபடி கிடந்தார்.


அப்போதுதான் கணிகண்ணன் என்பவன் இவரை குருவாகக் கொண்டு தொண்டு புரிந்து வந்தான். அக்காலத்தில் தலை நரைத்து உடல் தளர்ந்து முதிர்ந்த கிழவி ஒருத்தி, திருமழிசையாழ்வார் உள்ள இடத்தில் திருவலகிடுதல், மெழுகுதல், கோலமிடுதல் முதலான பல கைங்கரியங்களை தினமும் செய்து கொண்டிருந்தாள். ஒருநாள் ஆழ்வார் திருக்கண் விழித்த காலத்திலே அவரை நமஸ்கரித்தாள். ‘தேவப் பெண்போல மாறாத இளமை வேண்டும்’ என்கிற வரத்தையும் கேட்டாள். அவ்வாறே ஆழ்வார் அருள அவள் பேரழகியாக மாறினாள். 


அந்த நகரத்து அரசனான பல்லவராயன், அவளைப் பார்த்து இப்படியொரு அழகியா என்று வியந்து, காதலுற்று, ஏராளமான ஆடை ஆபரணம் பரிசாகக் கொடுத்து அவளை மணந்தான். அப்படி அவளோடு வாழ்ந்து வருகையில், தனது இளமை நாளுக்கு நாள் குறைவதையும் அவளது பருவம் மட்டும் மாறாமலிருப்பதையும் கண்டு வியப்புற்றான். ‘‘நீ மட்டும் இப்படி இளமையோடு இருப்பதற்கு என்ன காரணம்?’’ என்று கேட்டான்.


‘‘ஆழ்வாருடைய அருளே காரணம்’’ என்று அவள் பதில் அளித்தாள்.


‘‘ஓஹோ! அவரின் அருளைப் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டான். 


‘‘நீங்கள் தினந்தோறும் நமது அரண்மனைக்கு உஞ்சவிருத்திக்கு வருகிற கணிகண்ணனை கொண்டு திருமழிசை ஆழ்வாரின் அன்புக்கு பாத்திரமாகுங்கள். ஏனெனில், கணிகண்ணன்தான் அந்த ஆழ்வாரின் அந்தரங்க சிஷ்யராவார்’’ என்று யோசனை சொன்னாள்.


மறுநாள் கணிகண்ணன் வந்தபோது, அவரை உபசரித்து, ‘‘உமது ஆசார்யரை நான் சேவிப்பதற்காக இங்கு அழைத்து வரவேண்டும்’’ என்று பிரார்த்தித்தார். 


‘‘மன்னா... எம் ஆசார்யர் எங்கும் எழுந்தருள மாட்டார்’’ என்று உடனே கூறினான், கணிகண்ணன்.


‘‘சரி, என்னையாவது அங்கு அழைத்துச் சென்று, அவருடைய கருணைக்கு இலக்காக்கி அவரருளால் என்னையும் மாறாத இளமைப்பேறு உடையவனாக மாற்ற வேண்டும்’’ என்று மன்னன் வேண்டினான். 


கணிகண்ணன் அதற்கு உடன்படவில்லை. ‘‘உன்னைப்போல இம்மைப் பயனையே வேண்டி நிற்பாரை ஆழ்வார் கண்ணெடுத்தும் காணமாட்டார்’’ என்றும் கூறிவிட்டான். இதைக் கேட்ட அரசன் வருந்தினான். அமைச்சர்கள் வந்து தேற்றினார்கள். ‘‘தெய்வப் புலமை கொண்ட கணிகண்ணன் வாயினால் பாடினாலேயே பல அற்புதங்கள் நிகழ்கின்றன. எனவே, இவன் பாடினாலேயே போதும் விரும்பியது கைகூடும்’’ என்றார்கள். 


மறுநாள் கணிகண்ணன் வந்தபோது, ‘‘எனக்கு மாறாத இளமை வரும்படி கவி பாடவேண்டும்’’ என்று கேட்க, அதற்கு கணிகண்ணன், ‘‘நான் நாராயணனைத் துதிப்பேனேயொழிய இந்த நாக்கொண்டு மானிடம் பாடேன்’’ என்று உறுதியாக மறுத்தான். 


அரசன் மேலும் மேலும் நிர்ப்பந்திக்க கணிகண்ணணும் ‘‘ஆடவர்கள் எங்ஙன கல்லாரருள் சுரந்து, பாடகமுமூரகமும் பாம்பணையும் நீடியமால் நின்றான், இருந்தான், கிடந்தான். இதுவன்றோ மன்றார் பொழிற்கச்சி மாண்பு!’’ என்று கச்சி நகரைப் பாடினான். 


அரசன் கோபத்தில் கண் சிவந்தான். ‘‘என்னைப் பாடு என்றால் நீ நகரைப் பாடுகிறாயே! எனது ராஜ்ஜியத்திலிருந்து உடனே வெளியே போ’’ என்று அதட்டித் துரத்தினான். உடனே கணிகண்ணன் திருமழிசை ஆழ்வாரை அடைந்து நடந்த செய்தியைக் கூறி, அவரது தீர்வை எதிர்நோக்கிக் கைகூப்பி நின்றான்.


அரசனுக்குப் பாடம் புகட்ட விரும்பிய ஆழ்வார், ‘நானும் உன்னுடன் வருகிறேன்; என்னுடன் வருமாறு பெருமாளையும் எழுந்தருளச் செய்கிறேன்’ என்று மனதில் எண்ணியவாறே கோயிலுக்குள் சென்று எம்பெருமானை நமஸ்கரித்து பாடினார்:


‘‘கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி 

மணிவண்ணா நீகிடக்க வேண்டா - துணிவுடைய 

செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்

பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்’’


என்று வேண்டியவுடன், ஆழ்வார் விருப்பப்படி நாகத்தணையை சுருட்டிக்கொண்டு எம்பெருமாள் திருவெஃகாவை விட்டுப் புறப்பட்டார். அத்தலத்திலுள்ள மற்ற ஆலயத்துப் பெருமாள்களும் அவரைப் பின் தொடரவே, கச்சி மாநகரமே ஸ்தம்பித்தது. விஷயம் அறிந்து அரசன் கணிகண்ணனை வேண்ட, கணிகண்ணன் ஆழ்வாரைத் தொழுது விஷயத்தை விவரித்தான். ஆழ்வார் கச்சி மாநகர் பெருமாளை அங்கேயே மீண்டும் எழுந்தருளும்படிச் செய்தார். இதை தனது தேன்தமிழ் பாசுரத்தில் பின்வருமாறு எப்படித் தெரிவிக்கிறார் பாருங்கள்:


‘‘கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி 

மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய 

செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் 

நீயுமுன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்’’


நன்றி - தினகரன் ஆன்மிகம் செப்டம்பர் 2012


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக