சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகிய ஆண்டாள் நாச்சியார் பாடிக்கொடுத்த பாசுரங்கள் தமிழிசைக்குக் கிடைத்த சிறந்த படைப்புக்களாகும். இளமைப் பருவத்திலேயே இறைவனிடம் பக்தி கொண்ட ஆண்டாள், "மானிடவர்க்குப் பேச்சுப்படில் வாழகிலேன்" என்னும் உறுதி பூண்டிருந்தாள். இம்மனவுறுதியும் உணர்வுகளும் இன்னிசைப் பாடல்களாகவே வெளிப்பட்டன. இவ்வெளிப்பாடுகளே திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் ஆகும். இறைவனின் அருள்பெறப் பாடிய இவ்விரண்டும் இனிய இசை வடிவங்களாகும். இவற்றில் பொருந்தியுள்ள இசைக்கூறுகளைக் காண்பது இக்கட்டுரையின் நேக்கமாகும்.
நாலாயிரத்திவ்வியப் பிரபந்தப் பாடல்களை ஒவ்வொரு ஆயிரமாக வகைப்படுத்தியுள்ளனர். இவற்றுள் மூன்றாவது ஆயிரம் மட்டும் இயற்பா என்று அழைக்கப்படுகிறது. இதனால் மற்றைய மூன்று ஆயிரங்களும் இசையோடு பாடுவதற்குரிய பாடல்களே என்பது விளங்கும். இவற்றுள் ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவையும் நூற்றி நாற்பத்து மூன்று பாடல்களைக் கொண்ட நாச்சியார் திருமொழியும் இசைப்பாக்களாலான முதலாயிரத்தில் மூன்று நான்கு பிரபந்தங்களாக உள்ளன. எனவே திவ்வியப்பிரபந்தப் பாடல்களின் வகைப்பாட்டிலேயே ஆண்டாள் பாசுரங்கள் இன்னிசைப் பாடல்கள் என்பது புலனாகின்றது. மேலும்,
“பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும்
பதுவையார் கோன் விட்டு சித்தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை,
யேத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே" (திருமொழி12)
என்று கூறுகின்ற போதும் ஆண்டாள் பாடல்கள் இன்னிசைப் பாடல்கள் என்பது விளங்கும்.
“மாதங்களில் மார்கழி நானே" என்றான் கண்ணன். சிறப்புக்கு உரிய இம்மாதத்தில் ஆண்டாள் நாச்சியார் பாவை நோன்பியற்றி பரந்தாமனை அடைய வேண்டுமென விழைகின்றாள். இதற்காக ஆயர்பாடிப் பெண்களையெல்லாம் ஒருசேர அழைத்து பாவை நோன்புப் பாடல்களை இன்னிசையோடு பாடிப்பாடிக்களித்திருக்கின்ற சிறப்பைத் திருப்பாவைப் பாடல்களிலேயே காணலாம். பாவை நோன்பும் அதற்கு அடிப்படையாக இசையும் ஒன்றாக இணையும் போது தன் மனத்திற்கு இனியவனை எளிதில் அடையலாம் என்று எண்ணினாள். எனவேதான்,
"வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினுள் தூசாகும்” (திருப்-5)
என்று பாடியிருக்கிறாள்.
நோன்பு நோற்பதற்குத் தம் தோழியரை அழைக்கிறபோது “மதிகெட்டபெண்ணே! கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் பறவைகள் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? ஆய்ச்சியர் தயிரின் ஒலியும் கேட்டிலையோ? இதற்கும் மேலாக நாராயண மூர்த்தி கேசவனை நாங்கள் பாடிக்கொண்டேயிருக்கின்றோம். அதையும் நீ கேட்டுக்கொண்டே கிடக்கின்றாயே!” என்று சற்றுக் கோபமாகக் கேட்கின்றாள்.
“புள்ளின் வாய் கீண்டானை பொல்லா வரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளை களெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று” (திருப்13)
இன்னும் கிடந்து உறங்குகின்றாயே என்று எழுப்புகிற போதும் அதிகாலைப் பொழுதில் இசைப்பாடல்களைப் பாடிக்களித்தமையை அறிய முடிகின்றது.
இவ்வாறு பாடிக் களிக்கின்றபோது இசையோடு நீராடியும் களித்திருக்கின்றனர் என்று அறியலாம். இதனால்தான் ஆண்டாள் ஆழிமழைக் கண்ணனை அழைத்து,
“ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கருத்து
பாழியந் தோளுடைய பற்பநாபன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பவாய்!”
என்று மழையை வேண்டிப் பாடியிருக்கிறாள். அதோடு
“மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்”
என்று தோழியரை நீராட அழைத்துள்ள பெருமையையும் அறிகிறோம். பண்டைத் தமிழகத்தில் கடலிலும் ஆற்றிலும் அருவியிலும் தடாகங்களிலும் ஆடவரும் பெண்டிரும் நீராடி மகிழ்ந்துள்ளனர் என்பதைப் பரிபாடல் வையைப் பாடலிலிருந்து அறிகின்றோம். நீராடுகிற போது இசைக்கருவிகளின் ஓசையைத் தம் கைகளாலும் விரல்களாலும் உருவாக்கி உளம் மகிழ்ந்தனர் என்பதை சீவகசிந்தாமணி செய்யுளின் மூலமும் அறிகின்றோம்.
“தண்ணுமை முழவ மொந்தை தகுணிச்சம் பிறவுமோசை
எண்ணிய விரலோ டங்கை புறங்கையினிசைவாக்கித்
திண்ணிதிற் தெறித்து மோவார் கொட்டியுங் குடைந்துமாடி
ஒண்ணுதல் மகளிர் தம்மோடுயர் மிசையவர்கள் ஒத்தார்”
(குணமாலையார் இலம்பகம் 115)
என்னும் பாடல் தண்ணுமை, முழவம், மொந்தை, தகுணிச்சம் போன்ற தோற்கருவிகளின் ஓசையைக் கைகளால் உருவாக்கி இன்புற்றனர் என்று உணர்த்தும் கருத்து ஒப்புநோக்கத்தக்கது.
ஆண்டாள் நாச்சியார் பண்ணோடு இசைத்துப்பாடக்கூடிய பாடல்களுக்குப் பொருத்தமான துணைக்கருவியாக "பறை" என்னும் தாள இசைக் கருவியே பயன்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பறை என்பதைப் பேரிவாத்தியம் என்பர். நிலப்பாகுபாட்டை வகைப்படுத்தியுள்ள தொல்காப்பியர் "பறை" க்கு சிறப்பான இடத்தைக் கொடுத்துள்ளமை கருதத்தக்கது. வேள்வி செய்கிறபோதும் இக்கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். ஆண்டாளும் நோன்பு என்கிற யாகத்தைச் செய்கிற போது அதற்கு இசைந்த இசைக்கருவியாகப் பறையைக் கொள்கிறாள். இதனை,
“நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்” (திருப் 25)
“பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப்பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே” (திருப் 26)
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் வண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் (திருப்.16)
என்ற பாடல்கள் வாயிலாக அறியலாம். The Drum symbol in Thiruppavai என்று பறை பற்றித் தனியாகவே ஓர் ஆய்வு நிகழ்ந்துள்ளதாகக் கூறுவர். பறையோடு சங்குகளும் முழங்கியிருக்கின்றன. இத்தகைய இசைக்கருவிகளோடு பாவைப் பாடல்களைக் காலைப்பொழுதில் பாடியுள்ளனர்.
பண்பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே என்று பாடுகின்ற ஆண்டாள் நாச்சியார் பாஞ்ச சன்னியத்தில் பல்வேறு வகையான பண்களைக் கேட்டு இன்புற்றவர் எனத் தெரிகின்றது. ஆண்டாள் மன்னும் பெரும்புகழ் மாதவனிடம் மணிவண்ணனிடம் தன் மனதைப் பறிகொடுக்கிறாள். தன் விரக வேதனையை யாரிடம் சொல்லி அந்த வேங்கடவனிடம் தூது அனுப்புவது என்று சிந்தித்த போது அதற்குரிய பாத்திரமாகக் குயிலைத் தேர்ந்தெடுக்கின்றாள். இசைபாடும் குயிலால் எம்பெருமானை அழைத்தால் என் கருமாணிக்கம் உறுதியாக வருவான் என்று கருதுகிறாள். குயிலைத் தூதனுப்புகிற ஆண்டாள் பாடல்கள் அனைத்தும் இசைநயம் பொருந்தியவை.
"கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசைபாடும் குயிலே"
"போதலர் காவில் புதுமணம் நாறப் பொறிவண்டின்
காமரங் கேட்டு உன்காதலியோடு வாழ்கிற குயிலே"
என்று அழைக்கிறபோது ஆண்டாள் நாச்சியாரின் இசைப்புலமை வெளிப்படுகிறது. இப்பாடலில் சோலையில் உள்ள வண்டுகள் சீகாமரப் பண்ணை இசைக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் பண்ணைக் கேட்டுக் கொண்டேயிருக்கின்ற சோலைக்குயிலுக்கும் சீகாமரப் பண்ணை இசைக்கும் ஆற்றல் உண்டு என்று ஆண்டாள் கருதுகின்றாள்.
சீகாமரம் என்பது நாத நாமக்கிரியை என்னும் இராகத்தைக் குறிக்கும். “நாதோர்மயம் பரப்ருஹ்மம்” என்று கூறுவர். அந்த பரப்பிரம்மம் என்று சொல்லப்படுகின்ற இறைவன் நாமத்தை உள்ளம் உருகிப் பாடச்செய்யும் ராகமிது. அதனால்தான் இந்த ராகத்திற்கு நாத நாமக்கிரியை என்று பெயர் வந்தது. நாதம் + நாமம் + கிரியை என்று பிரிப்பர். இந்த இராகம் அதிகாலைப்பொழுது இராகமாகும். பக்தி உணர்வு மேலிட கருணாரஸம் வெளிப்பட மனதினை மயக்கும் இசையாகும். எனவேதான் இந்த இசையைப் பாடவல்ல குயிலைத் தூதாக அனுப்புவது மிகப் பொருத்தம் என்று கருதியிருக்கின்றாள். ஆண்டாள் நாச்சியார் பொருத்தமான இசையைப் பொருத்தமான இடத்தில் பயன்படுத்தியிருப்பது புலனாகின்றது. மேலும் இன்று இசையரங்குகளிலும் நாட்டிய அரங்குகளிலும் "பதம்" என்று அழைக்கப்படுகின்ற சிருங்கார ரசப்பாடல்கள் அதாவது தெய்வத்தின் மீது மையல் கொண்டு பாடப்படுகின்ற பாடல்களை இசைக்கின்றார்கள். தலைவன் தலைவியின் உணர்வு வெளிப்பாட்டுப் பாடல்களை நாயகன் நாயகிப்பாடல்கள் என்று குறிப்பிடுவர். ஆண்டாள் வேங்கடவனிடம் காதல் கொண்டு குயிலிடம் தூது சொல்லி அனுப்புகிற பாடல் பின்னால் பதங்களை இயற்றுவதற்கு அடிப்படையாக இருந்தது. (பழந்தமிழர் ஆடலில் இசை.ப.67)
இசையோடு பாடக்கூடிய பாடல்களுக்குத் தாளநடையும் சந்தங்களும் இயல்பாகப் பொருந்தியிருக்க வேண்டும். ஆண்டாள் பாடல்களின் இந்த இசைப் பண்பினைக் காணமுடிகின்றது. "தாளம்" என்பது பாட்டின் நடையை ஓர் கட்டுப்பாட்டுக்குள் உள்ளடக்கி நிலை நிறுத்தும் தன்மை வாய்ந்தது. தாளங்களின் எண்ணிக்கை அளவற்றது. இதை,
“தென்றல் வடிவுஞ் சிவனார் திருவடிவும்
மன்றல் வடிவு மதன் வடிவுங் - குன்றாத
வேயனிசை வடிவும் வேதவடீவுங்காணில்
ஆயதாளங் காணலாம்”
என்ற செய்யுள் உணர்த்துகின்றது.
தாளங்களின் நடையை மும்மை நடை, (தகிட) நான்மை நடை (தகதிமி), ஐம்மை நடை (தகதகட), எழுமைநடை, (தகிடததிமி) ஒன்பான்மை நடை (தகதிமிதகதகிட) என்று வகைப்படுத்துவர்.
தகதகிட தகதகிட தகதகிட தகத்திட
மத்தளம் / கொட்ட / வரிசங்கம் / நின்றூத!
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னை
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழிநான்
என்ற பாடல் எழுமை நடையில் (தகதகிட) அமைந்துள்ளது.
ஆண்டாள் பாடல்களில் தாளம் தனி ஆய்விற்குரியது.
பாடல்களை இசையோடு பாடுகிறபோது தாளத்திற்கு ஏற்ற வகையில் "எடுப்பு" என்ற இசையணி அமைந்திருக்கும். ஏனெனில் சீர்கள் தாளத்திற்குக் கட்டுப்பட்டவை.
மாலேமணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவனக் கேட்டியேல்
என்ற பாடல் அரை இடத்திற்கு எடுத்து
ஆதித்தாளத்தில் பாடுவது இசை இனிமையைக் கொடுக்கும்.
“தெள்ளியார் பலர்" எனத் தொடங்கும் நாச்சியாரின் நான்காவது திருமொழியில்,
“அற்றவன் மருதம் முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையிற்
செற்றவன் திகழும் மதுரைப்பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே"
என்று கூடலிழைத்துப்பாடும் பாடல் “முடுகு" என்னும் இசைநயம் பொருந்தியது. முடுகு என்பது ஒருவகை சந்தம். தொல்காப்பியர் குறிப்பிடும் 20 வண்ணங்களில் “முடுகு" என்பதும் ஒன்று இது "அராகம்” என்னும் ஓர் உறுப்பாகக் கலிப்பாடலில் இடம்பெறுவதைக் காணலாம். குற்றெழுத்துக்கள் ஒன்றிவரத் தொகுக்கப்படுவது அராகமாகும். இந்தச் சந்தங்கள் இசைப்பாடலுக்கு இனிமையைக் கொடுக்கும். ஆண்டாள் பாடல்கள் பலவற்றில் சந்த வகைகளைக் காணலாம்.
"தையொரு திங்கள் என்று தொடங்கும் முதல் திருமொழியில் பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா என்று மன்மதனை அழைத்து,
"கருவுடை முகில் வண்ணன் காயாவண்ணன்
கருவினை போல் வண்ணன் கமலவண்ணன்"
என்று பாடும் பாடல் இசைப்பாட்டுக்குரிய சிறந்த சொற் கட்டுக்களையுடையது. இதுபோலவே,
கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?
என்ற பாடலும் இசைநயம் பொருந்தியது.
ஆண்டாள் பாசுரங்கள் அனைத்தும் இசைப்பாடல்களாக இருப்பினும் அக்காலத்தில் எத்தகைய பண்களில் பாடியுள்ளனர் என்பதற்கான சான்றுகளை இசைக்குறிமானங்களோடு (Notation) நாம் பேணி பாதுகாக்கவில்லை. தற்போது ஆண்டாள் பாசுரங்களைப் பலரும் தங்கள் கற்பனை வளத்திற்கு ஏற்றவாறு பலரும் பல பண்களில் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இசையரங்குகளிலும் ஆடலரங்குகளிலும் திருப்பாவைக்கும் நாச்சியார் திருமொழிக்கும் தனியானதொரு இடம் உண்டு. இருப்பினும் தற்போது தேவார திருவாசக நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்களின் பண்கள் தாளங்கள் பற்றிய ஆராய்ச்சிகளை இசையறிஞர் பலர் மேற்கொண்டிருக்கின்றனர்.
இவ்வகையில் முனைவர். எச். இராமநாதன் இசையரசு தண்டபாணி தேசிகர் முதலியோர் சுரதாளக் குறிப்புக்களோடு சில பாசுரங்களை வெளியிட்டிருப்பதாக அறிகிறோம். சங்கீத வித்வான் வி. அனந்தராமன் புதிய புதிய மெட்டுக்களோடு பாசுரப்பாடல்களை "தமிழ்மறை இசைமாலை" என்றும் தொகுப்பை வெளியிட்டுள்ளார். (பரத நாட்டியத்தில் தமிழிசைப் பாடல்கள் ப.158.)
இசையணிகள் நிறைந்த ஆண்டாளின் பாசுரங்கள் தமிழிசைக்குச் சிறப்புச் சேர்ப்பவை மார்கழி நோன்பிற்கு இசைப்பாடல் இனிமை சேர்த்திருக்கின்றது. பாவை நோன்பிற்கு இசைப்பாடல் மட்டுமின்றி பறையென்ற தாளக்கருவியும் பயன்பட்டிருக்கிறது. பல்வேறு பண்களோடு பெண்கள் பாவைநோன்புப் பாடல்களை இசைத்து நீராடி இறைவனின் புகழை வாயாரப்பாடி மகிழ்ந்திருக்கிறார்கள் என்பது இசைக்கு மேன்மை சேர்ப்பதோடு மட்டுமின்றி தமிழ்ப்பண்பாட்டின் மரபைப் பாற சாற்றுவதாகவும் அமைகின்றது.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
(ஆண்டாள் அருந்தமிழ் என்ற நூலிலிருந்து)
(ஆண்டாள் அருந்தமிழ் என்ற நூலிலிருந்து)