வெள்ளி, 6 டிசம்பர், 2019

மயக்கும் தமிழ் - 31 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

சிந்தை தன்னுள் நீங்காதிருந்த திருவே!

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே

பெரிய திருமொழி திருமங்கையாழ்வாருக்கு என்று எப்படித்தான் இப்படி வார்த்தைகள் வந்து விழுகின்றன. பாசுரத்தில் கையாண்டு இருக்கக்கூடிய எல்லாம் தெய்வத்தன்மை வாய்ந்தவை. எளிய இனிய தமிழ் காலவெள்ளத்தில் எவ்வளவோ அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. ஆனால், காலத்தையும் கடந்து நிற்பது ஆழ்வார்களின் தெய்வீகத் தமிழ் இப்படி ஆழ்வாராலேயே மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் எந்த ஊரில் இருக்கிறார் தெரியுமா? திருஇந்தளூர். மயிலாடுதுறைக்கு அருகேயே இருக்கிறது. பெருமாளின் பெயர் என்ன தெரியுமா? சுகந்தவன நாதன், பரிமளரங்கநாதன், மருவினிய மைந்தன். இந்தத் தமிழ்ப் பெயர் எல்லாவற்றையும் நாம் இனி எங்கே காணப்போகிறோம். நாம் நம் குடும்பத்து பிள்ளைகளுக்கே மார்டனாக பெயர் வைக்க வேண்டுமென்று வாயில் உச்சரிக்க முடியாத பெயரை வைத்துக்கொண்டு திண்டாடி வருகிறோம். 

ஆனால், பெருமாளுக்கு பரிமளரங்கன் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? 



முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி சுகந்தவனம் என்று அழைக்கப்பட்டதாகவும் அதனால், இந்தப் பெருமாளுக்கு சுகந்தவன நாதன் என்று பெயர் ஏற்பட்டதாகவும் வடமொழி நூல்கள் சொல்கின்றன. சுகந்தவனநாதன் என்ற பெயர்தான் தமிழில் பரிமளரங்கன். அதாவது, பக்தர்களின் மீது அதீத வாஞ்சையோடு இருப்பவன். அவன் எப்போதும் நறுமணத் தென்றலோடு வாசத்தோடு இருப்பவன். பெருமாள் எப்படி இருக்கிறான் தெரியுமா? நான்கு புஜங்களுடன் ஆதிசேஷன் மீது வீர சயனம் கிழக்கு நோக்கி திருக்கோலம் கொண்டிருக்கிறான். திருத்தாயார் பெயர் பரிமளரங்க நாயகி. சந்திரசாப விமோசன வல்லி. அது என்ன சந்திரசாப விமோசன வல்லி என்கிறீர்களா? நவகிரகங்களில் ஒருவனான சந்திரனுக்கு ஏற்பட்ட தோஷத்தை தீர்த்து வைத்ததால் இந்த தாயாருக்கு இந்தப் பெயர் உண்டானதாம். 

சந்திரனால் ஏற்படும் பிரச்னைகளுக்கு இந்தப் பெருமாளையும் தாயாரையும் வணங்கினால் கைமேல் பலன் உண்டு, என்கிறார்கள். பெருமாளும், தாயாரும் சந்திரனுக்கு காட்சி கொடுத்திருக்கிறார்கள். மன அமைதி, பெற்ற தாயாரின் பரிவு, குடும்ப ஒற்றுமை போன்றவை எல்லாம் இந்தக் கோயிலுக்கு வந்தால் நிச்சயம் கைகூடும் என்கிறார்கள். பாசுரத்திற்கு வருவோம் எப்போதும் என் சிந்தனையில் இருக்கும் தாயாரோடு சேர்ந்த பெருமாளே! என்கிறார் ஆழ்வார். வைணவ சித்தாந்தத்தில் தாயாருக்குத்தான் முதலில் ஏற்றம். பேயாழ்வார் எடுத்த எடுப்பிலேயே தன் முதல் பாசுரத்தில் முதல் வரியில் திருக்கண்டேன் என்கிறார். அதைப்போல் ஆழ்வார்களின் தலைமகனான நம்மாழ்வார் அகலகில்லேன் இறையுமென்று அவர்மேல் மங்கை உறை மார்பா என்று சொல்கிறார். 

திருமங்கையாழ்வாரும் அதேபாணியில் சிந்தை தன்னுள் நீங்காதிருந்த திருவே! என்கிறார். எப்போதும் என்னை ஆண்டு கொண்டிருக்கும் விஷ்ணுவின் பத்தினியே!  மகாலட்சுமித் தாயாரே என்னைக் காப்பாற்று என்று அர்த்தம். அவர் எந்தப் பாசுரத்திலும், எந்தப் பெருமாளை பரவசத்துடன் பாடித் துதித்தாலும் அவரின் சொந்த மண்ணையும், மனிதர்களையும் மறப்பதே இல்லை. பாசுரத்தில் திருஇந்தளூர் பெருமாளின் ஏற்றத்தை சொல்லிக்கொண்டு வருகையில் அந்தணாலிமாலே என்கிறார். திருவாலி நாடன் என்றும் ஆழ்வாருக்கு ஒரு பெயர் உண்டு. அதேபோல திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமடலில் பல ஊர்களின் பெருமாளையும் ஏற்றிப் போற்றுகிற திருமங்கை ஆழ்வார்

‘‘அன்னம் துயிலும் அணிநீர் வயல்ஆலி என்னுடைய இன்னமுதை’’என்கிறார், ஆச்சர்யமாக! அது மட்டுமா? தனக்குக் குருவாக இருந்து வழிகாட்டி வைணவனாக்கிய எம்பெருமான் அருள்பாலிக்கும் இடமான நாச்சியார் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாளை நறையூர் நின்ற நம்பி என்கிறார். அவர் தன்னுடைய ஆடல் மா குதிரையில் எங்கெங்கு பயணப்பட்டாலும் பழைய பாசத்தையும், நிகழ்வுகளையும் மறக்காதவராக இருந்திருக்கிறார். திருஇந்தளூர் பரிமளரங்கனுக்கு வருவோம்! மற்ற திவ்ய தேசங்களை தரிசித்துவிட்டு பரிமளரங்கன் கோயிலுக்கு வரும்போது நேரமாகி விட்டதால் கோயில் கதவு மூடப்பட்டு விட்டது. ஆழ்வாருக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. எவ்வளவு ஆசையோடு வந்தோம். பெருமாளை நம்மால் தரிசிக்க முடியவில்லை என்ற ஏக்கம் வருவதற்குள் இவன் கதவடைத்துக் கொண்டானே என்று பெருமாள்மீது ஆழ்வாருக்கு செல்லக் கோபம்! திருமங்கையாழ்வார் அர்ச்சாவதாரத்தின் மீது அதீத பிரியம் கொண்டவர். பெருமாள், தாயாரின் உருவ அழகில் தன்னை இழப்பவர். அப்படி இருக்கும்போது இந்தளூர் பரிமளரங்கனை தரிசிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தை காலத்தால் அழிக்க முடியாத பாசுரம் ஒன்றை படைத்திருக்கிறார்.

ஆசைவழுவாதேத்தும் எமக்கிங்கிழுக்காய்த்து
அடியோர்க்குத் தேசமறிய உமக்கே
ஆளாய்த்திரிகின் றோமக்கு!
காசினொலியில் திகழும் வண்ணம்
காட்டில் எம்பெருமான்!
வாசி வல்லீர்! இந்தளூர்
வாழ்ந்தே போம் நீரே!

பரிமளரங்கன் மீது எவ்வளவு நெருக்கமும் உருக்கமும் இருந்தால் இந்தப் பாசுரத்தை கலியன் கற்கண்டு படையலாக படைத்திருப்பார். நமக்கு மிகவும் வேண்டிய ஒருவர் நம்மை பாராமுகமாக நடத்துகிறார் என்றால் ‘‘சரி சரி நீயே நல்லா இரு’’ என்று சொல்லி விட்டு வருவதுபோல் ஆழ்வாருக்கும் ஆண்டவனுக்கும் அமைந்திருக்கிறது. பொங்கும் பரிவு, எல்லையற்ற கருணை. அழிக்க முடியாத அன்பு. அளவிடமுடியாத காதல். இப்படியெல்லாம் அமைந்தால்தானே இப்படி சொல்லியிருப்பார். ‘வாழ்ந்தேபோம் நீரே’ என்று இதைவிட நெருக்கத்தையும் வாஞ்சையையும் நாம் வேறு எங்காவது பார்க்க முடியுமா? 

இந்தப் பெருமாளை திருமங்கை ஆழ்வார் எம்பெருமானார், வேதாந்தாச்சாரியார், மணவாளமாமுனிகள், பிரதிவாதி பயங்கரம் அண்ணா, ஆகியோரும் நெக்குருக பாடியிருக்கிறார்கள். மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் இத்தல இறைவன் மீது கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார். இப்படிப்பட்ட சிறப்புக்களையும் பெருமைகளையும் நாம் எங்கே காண முடியும்? திருமங்கையாழ்வாருக்காக காட்சி தராமல் இருப்பார். பெருமாள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் அற்புதமான முத்து போன்று பத்து பாசுரங்கள் கிடைப்பதற்கு பரிமளரங்கனுக்கு விளையாடிய திருவிளையாடல்தானே இந்த நிகழ்வு. ஒரு ஏகாதசி விரதமிருந்து அடுத்த நாள் மயிலாடுதுறை பரிமளரங்கனை தரிசியுங்கள்.

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக