மயக்கும் தமிழ் - 32 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

தாயனைய தெய்வம் ஆண்டாள்!

ஆண்டாளை நினைத்தாலே நெஞ்சமெல்லாம் இனிக்கிறது. சிந்தை சிலிர்க்கிறது! மானுடம் தழைக்க வந்த மண் மகள்! நதிமூலம் ரிஷிமூலத்திற்கு அப்பாற்பட்ட தெய்வப்பிறவி அவள்! பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் உள்ள உறவை, நட்பை, அன்பை, பாசத்தை, பண்பை இவளைவிட எளிமையாக, இனிமையாக யார் இந்த பூவுலகில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்? ஆண்டாள் நாச்சியாரின் சங்கத்தமிழ் மாலையான திருப்பாவையாக இருந்தாலும் தேன் தமிழில் உருவான நாச்சியார் திருமொழியானாலும், இரண்டு பிரம்மாண்ட படைப்புகளிலும் முழுவதுமாக அவள் நேர்மறைச் சிந்தனைகளையே முன்வைத்திருக்கிறாள். மழையைப் பற்றிச் சொல்கிற போது ‘வாழ உலகினில் பெய்திடாய்’ என்கிறாள்! மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய் என்கிறாள்.

கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் என்கிறாள் மனத்துக்கு இனியானை பாடவும் நீ, வாய் திறவாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணாகப் பாடேலோர் எம்பாவாய் இப்படி திருப்பாவையில் சொல்லிக் கொண்டே போகலாம். 



திருப்பாவையின் கடைசி பாசுரத்தில் பெரியாழ்வாரின் அன்பு மகள் தான் என்பதை ஆசையோடு, வாஞ்சை உணர்வோடு சொல்கிறாள். நாச்சியார் திருமொழியில் தான் எம்பெருமான் மீது அவளுக்கு எத்துணை பெரிய காதல்! நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா என்று சந்தோஷத்தில் குதுகூலிக்கிறாள்! நாச்சியார் திருமொழியில் ஓர் அற்புத பாசுரம்:

சீதை வாயமுதம் உண்டாய்! எங்கள்
சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர்
மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலாளர்கள் வாழ்
வில்லிபுத்தூர்மன் விட்டுச் சித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர்
குறைவு இன்றி
வைகுந்தம் சேர்வரே!

பாசுரத்தின் விளக்கம் இதுதான். ‘‘சீதையின் வாய் அமுதத்தைப் பருகியவனே! நீ எங்கள் சிற்றில் சிதையேல்’’ என்று வீதியில் விளையாடும் இடைப் பெண்களுடைய மழலைச் சொல்லை, எப்போதும் மறை ஓதுபவர்கள் வாழும் வில்லிப்புத்தூர் பெரியாழ்வாருடைய திருமகள் ஆண்டாளுடைய திருவாக்கை ஓதவல்லவர்கள் குறைவில்லாமல் இறையுலகம் சேர்வர். அதாவது இவர்கள் இறைவனுடைய திருவடியை அடைவது சத்தியம் என்கிறாள் ஆண்டாள் நாச்சியார்!

‘‘கன்னியரோடு எங்கள் நம்பி
கரிய பிரான் விளையாட்டைப்
பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த
புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசையால் சொன்ன மாலை
ஈரைந்தும் வல்லவர்தாம் போய்
மன்னிய மாதவனோடு
வைகுந்தம் புக்கு இருப்பாரே!’’

நாச்சியார் திருமொழி

கரிய நிறத்தினான கண்ணன் ஆயர் சிறுமியரோடு செய்த திருவிளையாடல்களைக் குறித்து தங்கமய மாடங்களால் சூழப்பட்ட வில்லிபுத்தூர் தலைவர் பெரியாழ்வாருக்குத் திருமகளான ஆண்டாள் இனிய இசையாலே அருளிய சொல் மாலை பாட்டுக்களை கற்க வல்லவர்கள் திருமாலோடு சேர்ந்து பெருவாழ்வு வாழ்வார்கள். இப்படி அவள் தன்னுடைய பாசுரங்களில் ஸ்ரீவில்லிபுத்தூரையும், தன் தந்தை பெரியாழ்வாரையும் அந்த மண்ணையும், மனிதர்களையும் மனதாற நினைத்து நெஞ்சம் நெகிழ்கிறாள். ஆண்டாள் சாதாரணமானவளா? ‘‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’’ என்பதை ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று ஆண்டாள் வலியுறுத்தி விட்டாள். கடைசியில் அவள் சொன்னதை ஆண்டாள் முதலிலேயே சொல்லி விட்டாள்!

நமக்கு தெரிய வேண்டியதும் அதுதானே! முக்கியமாகத் தெரிய வேண்டிய விஷயத்தை முதல் பாசுரத்திலேயே விளக்கி விட்டதால் கிருஷ்ணனுடைய வாக்கைக் காட்டிலும் ஆண்டாளின் வாக்கிற்கு ஏற்றம் அதிகம். அந்த நாச்சியார் திருமகளை நானிலம் தழைக்க வந்தவளை உயர் அரங்கர்கே கன்னி உகந்து அளித்தவளை பெருமை பொங்கப் போற்றிக்கொண்டாடுவோம். ஆண்டாள் காட்டிய உயர்ந்த வழி சரணாகதி! நம்மைப் போன்றவர்களுக்கு சரணாகதியைத் தவிர வேறு உயர்ந்த உபாயம் இல்லை. இறை திருப்பாவையின் முப்பது பாசுரங்களில் மிகவும் ஆணித்தரமாக ஆண்டாள் நாச்சியார் எடுத்துச் சொல்லியிருக்கிறாள்! சுவாமி வேதாந்த தேசிகர் மிகப்பெரிய ஆசார்யர்! அவர் தன்னுடைய கோதா ஸ்துதியில், ‘விலஸது ஷ்ருதி கோதா விஷ்ணு சித்தாத்மஜாந: (ஸ்லோகம் 28)’ என்கிறார்.

‘விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வாரின் திருமகளான கோதாப்பிராட்டி என்ற ஆண்டாள் என்னுடைய மனதில் எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவள் நினைக்க நினைக்க மனதிற்கு இனியவள்’ என்று பூரிப்பு அடைகிறார் வேதாந்ததேசிகர்!

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி மல்லி நாடாண்ட மட மயில்  மெல்லியலாள் ‘ஆயர்குலவேந்தன் ஆகத்தாள் தென் புதுவை வேயர் பயந்த விளக்கு’  இப்படிச் சொன்னவர் திருக்கண்ண மங்கையாண்டான். வைணவ குருமார்களில் மிக முக்கியமானவர் திருக்கண்ணமங்கையில் பிறந்த தீர்க்கதரிசி. ஆண்டாள் யார் தெரியுமா? ‘ஆயர்குலவேந்தன் அகத்தாள். ஆயர்குலவேந்தன் சாட்சாத் கிருஷ்ணன்தான். எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றாள். அவள் யார் மகள் தெரியுமா? தென்புதுவை வேயர் பயந்த விளக்கு! தென்புதுவை வேயர் யார்? சாட்சாத் பெரியாழ்வார்தான்! வேதாந்த தேசிகரையும், திருக்கண்ணமங்கை ஆண்டாளைவிட அப்பழுக்கற்ற மகா யோகிகள் யாராவது உண்டா? பகவானுக்கும் பக்தர்களுக்கும் உள்ள தொடர்பை ஆண்டாள் போல் எளிமையாக விவரித்துச் சொன்னவர்கள் யார்? பகவான் நம்மை ரட்சிக்கவில்லை என்றால் அவனுக்குப் பெருமை இல்லை. பகவானை நாம் சேவிக்கவில்லை என்றால் நமக்குப் பெருமை இல்லை. இதையே ‘ஜலமத்ஸ்ய ந்யாயம்’ என்பார்கள்.

தண்ணீரிலிருந்து எடுத்தால் மீன் மாண்டு போகும்! தண்ணீரும் கெட்டுப் போகும். பகவானை இறுகப் பற்றினால்தான் நமக்கும் வாழ்வு, தண்ணீர் போன்ற பரமாத்மாவிற்கும் மகிழ்ச்சி. எனவே பகவானோடு அந்த சிந்தனையிலேயே சதா இருக்க வேண்டும் என்கிறாள். இதைத்தான் ‘வாயினால் பாடி மனதினால் சிந்திக்க’ என்று சொல்கிறாள் ஆண்டாள் நாச்சியார். ஆண்டாளைப் புரிந்து கொள்ளுவதற்கு ஒரு புரிதல் வேண்டும். பூமாதேவியின் மறு அவதாரமான அந்தத் தாயாரை நெஞ்சாற வணங்குவோம். நம் அடிமனதின் கசடுகள் ஒழியவும், நற்சிந்தனைப் பெருகவும், அவளின் பாதாரவிந்தங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்வோம். ஸ்ரீஆண்டாள் நாச்சியாரின் திவ்ய திருவடிகளே சரணம், சரணம், சரணம்!

நன்றி - தினகரன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை