ஶ்ரீமத் பாகவதம் - 76

மூன்றாவது ஸ்கந்தம் – முப்பத்தொன்றாவது அத்தியாயம்

ஜீவன் கர்ப்பவாஸத்தினால் ஆக்கங்களை அனுபவித்தலும், கர்ப்பத்திலிருக்கும்பொழுது பரமாத்மாவை ஸ்தோத்ரம்செய்தலும், கர்ப்பத்தினின்று வெளிவந்த பின்பு அஜ்ஞானத்தினால் மீளவும் ஸம்ஸார துக்கங்களை அனுபவித்தலும். 

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- வாராய் மாதாவே! ஜீவன் ஜன்மாந்தரத்தில் தான் செய்த கர்மத்திற்குத் தகுந்தபடி ஈஸ்வரனால் தூண்டப்பட்டவனாகி நரகானுபவம் முடிந்தபின்பு, இவ்வுலகத்தில் மீளவும் தேஹத்தை அடையும்பொருட்டு ஒரு புருஷனுடைய ரேதஸ்ஸின் பிந்துமூலமாய் ஸ்த்ரீயினுடைய வயிற்றில் ப்ரவேசிக்கின்றான். “கர்மங்களையெல்லாம் அனுபவித்துப் பரிசுத்தனாகித் திரும்பி வருகின்றானென்றாய். ஜன்மாந்தரத்தில் தான் செய்த கர்மத்திற்குத் தகுந்தபடி ஈஸ்வரனால் தூண்டப்பட்டு தேஹம் பெறுதற்காக ஸ்த்ரீயுடைய உதரத்தில் ப்ரவேசிக்கிறான் என்கிறாய். கர்மங்கள் கழிந்தனவென்பதும் கர்மத்தினால் மீளவும் தேஹம் பெறுகிறானென்பதும் எப்படி பொருந்தும்?” என்னில், சொல்லுகிறேன், கேட்பாயாக. 




தரகானுபவம் பண்ணவேண்டிய கர்மங்களெல்லாம் க்ஷணித்தனவென்றும், அதனால் பரிசுத்தனாய்த் திரும்பி வருகிறானென்றும் சொன்னேன்றிக் கர்மங்கள் யாவும் க்ஷீணித்தனவென்று சொல்லவில்லை. மீளவும் தேஹத்தை அடைவதற்குவேண்டிய கர்மம் தேஹத்தை அடைவதனால் க்ஷணிக்குமேயன்றி நரகானுபவத்தினால் க்ஷீணிக்காது. ஆகையால் ஒன்றோடொன்று விரோதிக்காது. அங்ஙனம் ஜீவனால் தொடரப்பெற்ற புருஷனுடைய ரேதஸ்ஸானது ஸ்த்ரீயின் வயிற்றில் ப்ரவேசித்து ஒரு ராத்ரியில் ரக்தத்துடன் கலக்கின்றது. ஐந்து ராத்ரிகளில் நீர்க்குமிழ்போல் குண்டாகின்றது. பத்துநாள் கழிகையில் இலந்தம் பழம்போன்ற உருவமுடையதாகின்றது. பிறகு சிலநாள் கடக்கையில் மாம்ஸபிண்டமாகிக் கோழிமுட்டை போன்ற உருவம் பெறுகின்றது. (கோழி முட்டையின் உருவம் பெறுவது திர்யக்ஜாதிகளின் கர்ப்பத்திற்கே யென்றுணர்க). ஒரு மாதத்தில் சிரஸ்ஸும், இரண்டு மாதங்களில் கை கால் முதலிய அங்கங்களின் பிரிவும், மூன்று மாதங்களில் நகம் ரோமம் எலும்பு தோல் இவைகளும் ஆண்குறி பெண்குறிகளும் கண், காது, மூக்கு முதலிய ரந்த்ரங்களும் உண்டாகின்றன. நான்கு மாதங்களில் ஸப்த தாதுக்களும், ஐந்து மாதங்களில் பசி தாஹங்களும் உண்டாகின்றன. ஆறு மாதங்களில் கர்ப்பக்கொடியினால் சுற்றப்பெற்று வயிற்றில் வலது பார்ச்வத்தில் சுழன்று கொண்டிருப்பான். அந்த கர்ப்பத்கிலிருக்கும் ஜீவன் தாய் உட்கொள்ளுகிற அன்ன பானாதிகளால் ரக்தம் மாம்ஸம் முதலிய தாதுக்கள் வளரப் பெற்று பூச்சிப் புழு முதலிய ஜந்துக்கள் உண்டாகக் கூடியதும் தனக்கு ஸம்மதமல்லாததுமாகிய கர்ப்பக்குழியில் விழுந்து கிடப்பான். ஆங்குள்ள புழு முதலிய ஜந்துக்கள் பசி உண்டாகப்பெற்று அந்த ஜீவனுடைய அவயவங்களையெல்லாம் கடித்துத் தின்னும். அவனுடைய அங்கம் மிக்க மென்மையுடையதாய் இருக்குமாகையால் அந்தப் புழு முதலியவை கடிப்பதனால் உண்டாகும் வேதனையைப் பொறுக்க முடியாமல் மிகவும் வருந்தி மூர்ச்சிப்பான். மற்றும், மாதாவினால் உட்கொள்ளப்படுகிற மிளகுகாரம் கடுகுகாரம் சுடுகை உவர்ப்பு க்ஷாரம் புளிப்பு முதலிய ரஸங்கள் அமைந்த அதிக்ரூரமான ஆஹாரங்கள் தன்மேல் படப்பெற்று மிகவும் மென்மையான சரீரமுடையவனாகையாலும் அந்த ரஸங்கள் பொறுக்கமுடியாமையாலும் ஸமஸ்த அவயவங்களிலும் பெரிய வேதனை உண்டாகப் பெற்றிருப்பான். அந்த கர்ப்பக்குழியில் கர்ப்பக் கொடிகளாலும் வெளியில் மாதாவின் குடல் முதலிய நரம்புகளாலும் சுற்றப்பட்டு முதுகும் கழுத்தும் வணங்கப் பெற்றுத் தலையை மாதாவின் குக்ஷியில் வைத்துக் கொண்டு, கூண்டில் அடைப்புண்ட பக்ஷிபோல், தனது அங்கங்களை ஸ்வாதீனமாய் நீட்டவும் மடக்கவும் வல்லமையற்றிருப்பான். அந்த கர்ப்பத்திலிருக்கும் பொழுது தெய்வாதீனமாய் நினைவு நேரப்பெற்று முன்பு தான் பல ஜன்மங்களில் செய்த கர்மத்தை நினைத்து நீட்டி மூச்சு விடவும் முடியாமல் அதில் இருந்துகொண்டு என்ன ஸுகம் பெறுவான்? ஏழாவது மாதம் முதற்கொண்டு ஸுகதுக்கங்களைப் பற்றின அறிவுடையவனாகி ஸூதிவாயுக்களால் மிகவும் வருந்தி அந்த வயிற்றிலுண்டான புழுபோல் ஓரிடத்திலில்லாமல் சுழன்று கொண்டிருப்பான். ஜன்மாந்தரங்களில் தான் செய்த பாபங்களெல்லாம் நினைவுக்கு வருகையால் “ஐயோ! நாம் என் செய்தோம்? புத்திகெட்டுப் போனோமே? ஆ! என்ன வருத்தம்? இனி என்னென்னவோ அனுபவிக்கவேண்டுமே?” என்று மேல்வரும் துக்கங்களெல்லாம் ஸ்பஷ்டமாய்த் தோன்றப்பெற்று பயந்து “அப்பனே! என்னைப் பொறுத்தருள்வாய்” என்று வேண்டிக் கொள்பவனாகி கர்ப்பத்திலுள்ள ஏழு நரம்புகளால் கட்டுண்டும் தழதழத்த உரையுடன் அஞ்சலிஹஸ்தனாகி, எவனால் தான் இந்த கர்ப்பத்தில் அடைப்புண்டானோ அப்படிப்பட்ட பகவானை ஸ்தோத்ரம் செய்வான்.

ஜீவன் சொல்லுகிறான்:- ஸர்வேச்வரன் தான் படைத்த இவ்வுலகத்தை ரக்ஷிக்கும் பொருட்டுத் தன் ஸங்கல்பத்தினால் ராமக்ருஷ்ணாதி பலவகை திவ்யமங்கள விக்ரஹங்களைக் கொள்கின்றான். பூமியில் நடந்து செல்கின்றவையான அந்த பகவானுடைய சரணார விந்தங்களை நான் சரணம் அடைகின்றேன். அவற்றைச் சரணம் அடைந்தவர்கள் எவ்விதத்திலும் பயம் உண்டாகப்பெற மாட்டார்களல்லவா? மற்றும், கீழ்நாள்களெல்லாம் பரமபுருஷனைச் சிறிதும் உணராமல் பற்பல பாபகர்மங்களைச் செய்து பொழுதுபோக்கின அஸத்தாகிய எனக்குத் தகுந்த இந்த துர்க்கதியை எவன் காட்டினானோ அந்த பகவானுடைய பாதாரவிந்தங்களைப் பணிகின்றேன். (ஆனால் இப்படி சரணம் அடைந்தவனை ஏன் பகவான் உபேக்ஷிக்கிறானென்று சங்கிக்கவேண்டாம். ஸதாசார்யானுக்ரஹம் இல்லாமையாலும் புருஷகாரம் செய்பவளான பிராட்டியின் ஸந்நிதியில்லாமையாலும் பகவான் அருள் புரிகிறதில்லை.)

இந்த மாதாவின் தேசத்தில், பஞ்சபூதங்கள் கர்மேந்திரியங்கள் ஜ்ஞானேந்திரியங்கள் மனது ஆகிய இவையாய்ப் பரிணமித்திருக்கும் (தேஹமாய்ப் பரிணமித்திருக்கும்) ப்ரக்ருதியைத் தரித்துக்கொண்டு ஜன்மாந்தர கர்மத்தினால் தன் ஸ்வரூபம் மறைக்கப்பட்ட பந்த ஜீவன் போல் எவன் தானும் அவனுடன் வஸிக்கின்றானோ; இப்படி ஜீவனுடன் தேஹத்திலிருப்பினும் எவன் ப்ரக்ருதியின் தோஷங்களால் தீண்டப்படாமல் பரிசுத்தனும் ஜரை மரணம் சோகம் மோஹம் பசி தாஹம் என்கிற விகாரங்களற்றவனும் ஜ்ஞானம் முதலிய கல்யாணகுணங்கள் சிறிதும் குறையாதவனுமாய் இருக்கின்றானோ; அத்தகையனும் ஜீவனுடன் ஸம்ஸார தாபங்களால் பரிதவிக்கின்ற ஹ்ருதயத்தில் தாபங்கள் எவையுமின்றி ஸுகமாய் இருக்கின்றவனுமாகிய அந்தப் பரமபுருஷனை நான் வணங்குகின்றேன். பஞ்சபூதங்களால் ஏற்பட்ட சரீரத்தில் நான் எப்படி இதனால் மறைக்கப்பட்டிருக்கின்றேனோ, இங்ஙனம் பகவான் தானும் இந்தச் சரீரத்திற்குள் புகுந்து இதனால் மறைந்திருப்பினும் அந்தச் சரீரத்தின் ஸம்பந்தத்தினால் விளையக்கூடிய தோஷங்களால் தீண்டப்பெறாமலே விளங்குகின்றான். அதற்குக் காரணம் என்னென்னில், அவன் ஜ்ஞானேந்த்ரிய கர்மேந்திரியங்களும் ஸத்வாதி குணங்களும் சப்தாதி விஷயங்களும் ஜீவனுமாகிய இவற்றை (சேதன அசேதனங்களை)ச் சரீரமாகவுடையவனும் இவற்றிற்கு நியாமகனுமாயிருப்பவன். என்னைப் போல் கர்மத்தினால் ஜ்ஞான ஸங்கோசம் உண்டாகப் பெறுமவனல்லன். நான் ப்ரக்ருதிக்கு உட்பட்டிருப்பவன். அவன் அதை அடக்கியாள்பவன். ஆகையால் அவனுக்குச் சரீர ஸம்பந்தத்தினால் விளையக் கூடிய தோஷங்கள் எவையும் உண்டாகிறதில்லை. நான் சப்தாதி விஷயங்களில் “இவை போக்யங்கள்” என்னும் புத்தியுடையவன். அவன் சப்தாதி விஷயங்களில் கால் தாழுந் தன்மையனல்லன். (நான் சப்தாதி விஷயங்களை போக்யமாக நினைத்து அவற்றில் கால் தாழ்ந்து பற்பல பாபகர்மங்களைச் செய்தேனாகையால் ஜ்ஞான ஸங்கோசம் அடைந்து ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் விளையும் தோஷங்களை அனுபவிக்கின்றேன். ஈச்வரன் அத்தகையனல்லாமல் பரிசுத்தனாகையால் ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் தோஷங்கள் உண்டாகப் பெறுகிறதில்லை). இப்படி தடைபடாத மஹிமையுடையவனும் (ஜ்ஞான ஸங்கோசம் இல்லாதவனும்) ஆனதுபற்றியே எல்லாமறிந்தவனும் ப்ரக்ருதி புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணமாய் இருப்பவனும் நியாமகனுமாகிய அந்தப் பரமபுருஷனை நான் ஸம்ஸாரம் கழியவேண்டுமென்னும் விருப்பத்தினால் சரணம் அடைகின்றேன். பகவானைச் சரணம் அடைந்தால் ஸம்ஸாரம் எப்படி கழியுமென்று நினைக்கவேண்டாம். கட்டினவனே விடுவிக்க வல்லவனென்கிற ந்யாயத்தின்படி இந்த ஸம்ஸாரத்தில் நம்மைக் கட்டுண்ணப் பண்ணின அப்பெருமாயனே நம்மை இதினின்று விடுவிக்க வல்லவனாவான். இந்த ஜீவன் ஸத்வ ரஜஸ் தமோகுணங்களின் மூலமாய் விளைபவைகளும் ஸம்ஸாரத்தில் மேன்மேலும் அழுந்தக் கட்டுபவைகளுமாகிய பெருப்பெரிய கர்மங்கள் பலவும் நிறைந்த ஸம்ஸார மார்க்கத்தில் (ப்ரவ்ருத்தி மார்க்கத்தில்) திரிந்துகொண்டு அங்ஙனம் திரிவதனால் இளைப்புற்று பகவானுடைய ஸங்கல்பத்தினால் ஜீவாத்ம பரமாத்மாக்களின் உண்மையைப் பற்றின அறிவு தொலையப் பெறுகின்றான். அந்த ஜீவன் மீளவும் அந்த மஹானுபாவனுடைய அனுக்ரஹமில்லாமல் மற்றை எந்த உபாயத்தினால் அந்த ஜீவாத்ம பரமாத்மாக்களின் உண்மையைப் பற்றின அறிவு உண்டாகப் பெறுவான்? (பகவானுடைய மாயையினால் ஸம்ஸாரத்தில் கட்டுண்ட ஜீவன் அவனுடைய அனுக்ரஹத்தினால் அதினின்று விடுபடவேண்டுமன்றி வேறுகதி இல்லை.) 

பூத பவிஷ்யத் வர்த்தமானங்கள் என்கிற மூன்று காலங்களிலும் ஸங்கோசமில்லாமல் ஜீவாத்ம பரமாத்மாக்களின் உண்மையைப் பற்றின அறிவு அந்தப் பரமபுருஷனுடைய அனுக்ரஹமின்றி எந்த ஜீவனுக்குத்தான் உண்டாகும்? எவனுக்கும் உண்டாகாது. மூன்று காலங்களிலும் தடைபடாத அறிவுடையவன் அந்த ஸர்வேஸ்வரன் ஒருவனே. மற்ற ஜீவாத்மாக்களுக்கு அவ்வறிவு அவனுடைய அனுக்ரஹத்தினால் தான் உண்டாகவேண்டும். “உனக்கு அவ்வறிவு நேராமற்போயினும் உன்னைக் காட்டிலும் மேற்பட்ட மற்றொரு ஜீவனுக்கு உண்டாகலாமே” என்னில், அப்படி இல்லை. ப்ராணிகளில் தலைவனான ப்ரஹ்மதேவன் முதலிய நாங்கள் அனைவரும், ஜீவாத்மாக்களுக்கு ஸம்ஸாரத்தை வளர்க்கும்படியான கர்மங்களின் பதவியை அனுஸரித்திருப்பவர்களே. (நாங்களெல்லோரும் கர்மமென்கிற அவித்யையால் ஜ்ஞானம் மறையப் பெற்றவர்களே). ஆகையால் உன்னைத் தவிர மற்றெவனும் இந்த ஸம்ஸாரத்தைப் போக்க வல்லவனல்லன். விலங்கில் அகப்பட்ட ஒருவன் அத்தகைய மற்றொருவனை எங்ஙனம் அந்த விலங்கினின்று விடுவிக்க வல்லனாவான்? ஈச்வரனைத் தவிர மற்ற ப்ரஹ்ம ருத்ராதிகள் அனைவரும் ஸம்ஸாரத்தில் அகப்பட்டவர்களே; அத்தகைய அவர் மற்றவர்களை ஸம்ஸாரத்தினின்று எங்ஙனம் விடுவிக்க வல்லராவார். ஜங்கம ஸ்தாவரரூபமான சரீரங்களில் இருக்கின்ற ஜீவாத்மாக்களிடத்தில் அந்தராத்மாவாய்த் தொடர்ந்திருக்கின்றனை. அந்த ஜீவாத்மாக்கள் உன்னுடைய அம்சங்களே. சரீர ஸம்பந்தத்தினால் ஜ்ஞான ஸங்கோசம் உண்டாகப்பெற்ற ஜீவாத்மாக்களுக்கு அந்தராத்மாவாய் இருப்பினும் நீ ஜ்ஞான ஸ்வரூபமும் ஜ்ஞானகுணமும் என்றும் மாறாதிருக்கப் பெற்றவன். அப்படிப்பட்ட அந்த பகவானை நமஸ்கரிக்கின்றேன். ஜீவாத்மாக்களுக்கு அந்தராத்மாவாயிருந்தும் ஸர்வஜ்ஞத்வம் முதலிய குணங்கள் மாறாதிருக்கப்பெற்று நமக்கு ஜ்ஞானப்ரதானம் செய்து ஸம்ஸாரத்தினின்று விடுவித்து மஹோபகாரம் செய்த ஸர்வேச்வரன் ஒருவனே பணியத் தகுந்தவனன்றி மற்றெவரும் அல்லர். பகவானே! பிறருடைய (மாதாவினுடைய) தேஹத்திலுள்ள உதரமாகிற பள்ளத்தில் ரக்த மல மூத்ரக் குழியில் விழுந்து அங்கு ஜாடராக்னியால் சரீரம் மிகவும் தபிக்கப்பெற்று மனம் கலங்கி இந்த உதரத்தினின்று வெளிப்பட்டு வர விரும்பித் தன் மாதங்களைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிற இந்த ஜீவன் எப்பொழுது வெளிப்படப் போகின்றான்? இந்த ஜீவனை கர்ப்பத்தினின்று எப்பொழுது வெளிப்படுத்தப் போகின்றாய்? ஜகதீசனே! உன்னைப்போன்ற தயாளுவாகிய எவன் கர்ப்பத்தில் புகுந்து பத்து மாதங்கள் சென்ற இந்த ஜீவனுக்கு இப்படிப்பட்ட விவேகத்தைக் கொடுத்தானோ, தீனர்களுக்கு நாதனாகிய அவன் தான்செய்த அந்த உபகாரத்தினாலேயே ஸந்தோஷம் அடைவானாக. அதற்கு அஞ்சலி செய்கை தவிர மற்ற எவ்விதத்திலும் ப்ரத்யுபகாரஞ் செய்ய முடியாது. அதற்கு எவன் தான் பதில் செய்ய வல்லனாவான்? பரமாத்மாவுக்கு வாஸஸ்தான மாசி ப்ரஹ்மபுரமென்று கூறப்படுவதும் ஜீவனுடைய கர்மத்திற்குத் தகுந்தபடி ஏற்பட்டிருப்பதுமான இந்த சரீரத்தில் இதைக் காட்டிலும் வேறுபட்டவனும் கர்ப்பத்திலுள்ள ஏழு நரம்புகளால் கட்டுண்ட சரீரமுடையவனும் சம தமாதி குணங்கள் அமைந்தவனுமாகிய ஜீவன் பரமபுருஷன் கொடுத்த புத்தியால் அவனை ஸாக்ஷாத்கரிக்கின்றான். அந்தப் பரமபுருஷன் யோக பரிசுத்தமான மனத்தினால் அறியக்கூடியவன். அப்படிப்பட்ட அந்தப் பரமபுருஷனை நானும் அவன்கொடுத்த அறிவினால் ஸாக்ஷாத்கரிக்கின்றேன். அவன் ஹ்ருதயத்திலும் வெளியிலும் தோற்றுமவன். வாராய் ப்ரபுவான ஸர்வேச்வரனே! நான் இப்பொழுது பலவகை துக்கங்களுக்கிடமான கர்ப்பத்தில் வாஸஞ்செய்யினும் இந்த கர்ப்பத்தினின்று வெளிப்பட விரும்பமாட்டேன். ஏனென்னில், இந்த கர்ப்பத்திற்கு வெளியிலுள்ள பாழுங்கிணறு போன்ற ஸம்ஸாரத்தில் விழுவேனாயின், உடனே என்னை பகவானுடைய மாயை பிடித்துக்கொள்ளும். அது தேஹாத்மாபிமானத்தையும் ஸ்வதந்த்ராத்மாபிமானத்தையும் விளைக்கும் தன்மையது. அந்த மாயையால் பிடியுண்டவுடனே தேஹாத்மாபிமானம் முதலிய பொய் நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கமும் அதன் மூலமாய் பற்பல துக்கங்களும் மீளவும் கர்ப்பவாஸமும் ஆகிய ஸம்ஸார சக்ரமானது (சக்ரம்போல் மாறி மாறிச் சுழல்கின்ற ஸம்ஸாரமானது) ஜீவனை விடாது. ஆகையால் தைர்யமற்றிருக்கிற நான் ஸமஸ்த ப்ராணிகளுக்கும் நண்பனாகிய உன்னைப் பணிந்து உனது பாதாரவிந்தங்களையே உபாயமாகப் பற்றி உனது அருள் பெற்று, பலவகை துக்கங்களுக்கிடமான இந்த கர்ப்பவாஸமாகிற வ்யஸனம் மீளவும் உண்டாகாதிருக்கும்படி என்னைச் சீக்ரத்தில் கரையேற்றப் போகின்றேன்.

ஸ்ரீகபிலர் சொல்லுகிறார்:- இங்ஙனம் கர்ப்பத்தில் நிச்சயித்துக் கொண்டிருப்பவனும் அப்பொழுதே பத்து மாதங்கள் நிரம்பப் பெற்றவனுமாகிய ஜீவனை அந்த க்ஷணத்திலேயே ஸூதிவாயுவானது தலைகீழாக்கி ப்ரஸவத்தின் பொருட்டு வெளிப்படும்படி தூண்டுகின்றது. அந்த ஸூதிவாயுவினால் தனது இருப்பிடத்தினின்று அசைக்கப்பட்டுத் தலைகீழாகி வருந்தி மூச்சுவிட முடியாமல் கர்ப்பத்திலிருக்கும்பொழுது உண்டாயிருந்த நினைவெல்லாம் மாறி மிகுந்த ஸங்கடத்துடன் வெளிப்படுவான். ரக்தத்தினால் உடம்பு முழுவதும் பூசப்பட்டு பூமியில் விழுந்து புழுபோல் துடிப்பான். கர்ப்பவாஸ காலத்திலிருந்த விவேகம், தலைகீழாய் வெளிப்படும் பொழுதே தொலைந்துபோகும். அதற்கு நேரே விபரீதமான புத்தி உண்டாகப் பெற்று மிகவும் ரோதனம் செய்வான். எவ்விதத்திலும் ஸூசனை செய்யாத பிறருடைய அபிப்ராயத்தை ஜனங்களுக்கு அறிய முடியாததாகையால் சிசுவின் அபிப்ராயத்தை அறியாத மாதா முதலிய ஜனங்களால் போஷிக்கப்படுமவனாகி விபரீதமான உபசாரங்கள் நேரப்பெற்று வருந்துவான். பசியால் அழுகையில் ஜனங்கள் அதன் அபிப்ராயத்தை அறியாமல் வயிற்று நோவால் அழுகிறதென்று வேப்பிலைக் கஷாயம் கொட்டுவார்கள். வயிற்று நோவுக்காக அழுமாயின், பசியால் அழுகிறதென்று முலைப்பால் யூட்டுவார்கள். இப்படி விபரீதங்கள் பலவும் நேரப்பெற்று வருந்துவான். அதை வேண்டாமென்று தடுக்க வல்லமையற்றிருப்பான். கொசு ஈ முதலிய ஜந்துக்களும் பூச்சி புழு முதலியவைகளும் நிறைந்து அசுத்தமான படுக்கையில் படுக்கவிடப்பெற்று தினவெடுக்கில் சொறிந்து போக்கடித்துக் கொள்ளவும் எழுந்து உட்காருவதற்கும் ஸாமர்த்யமின்றி வருந்தி அழுதுகொண்டிருப்பான். உடம்பில் தோல் முத்தாமல் மிகவும் மென்மைக்கிடமாயிருக்கையால் கடிக்கும் தன்மையுள்ள எரும்பு மூட்டைப் பூச்சி முதலியவைகளும் கொசு முதலியவைகளும் ஒரு புழு மற்றொரு புழுவைக் கடிப்பது போல், இவனைக் கடித்து வருந்தச்செய்யும். இவன் அவற்றை ஓட்டமுடியாமல் ரோதனம் செய்வான். கர்ப்ப தசையிலிருந்த விவேகம் இவனுக்குச் சிறிதும் இருக்காது. இங்ஙனம் ஐந்து வயது வரையிலுமுள்ள சைசவப் பருவத்தை மிக்க வருத்தத்துடன் அனுபவித்து, அதன்பிறகு யௌவனத்திற்குக் கீழுள்ள பௌகண்டமென்னும் பருவம் உண்டாகப் பெற்று அதிலும் பலவகை துக்கங்களை அனுபவிப்பான். தான் விரும்பினவை கிடைக்கப்பெறாமல் அஜ்ஞானத்தினால் கோபம் வளர்ந்து வரப்பெற்றுச் சோதிப்பான். பிறகு யௌவனப் பருவம் நேர்ந்து அதிலும் பல வருத்தங்களை அனுபவிப்பான். அந்த யௌவனப் பருவத்தில் இந்த ஜீவனுக்கு தேஹம் வளர்ந்து வருவதுபோல் துரபிமானமும் கோபமும் வளர்ந்து வருகின்றன. யௌவனப் பருவமுடையவன் அழிந்து போவதற்காகவே சப்தாதி விஷயங்களில் மனம் செல்லப்பெற்றுத் தான் காமுகனாகித் தனக்கு விரோதம் செய்கின்ற பிறரோடு கலஹம் செய்வான். ஜீவன் பிறந்தவுடனே கர்ப்பவாஸ காலத்திலுள்ள விவேகம் தொலையப்பெறுவது மாத்ரமேயன்றி துர்ப்புத்தியும் வீண்பிடிவாதமும் உண்டாகப்பெற்றுப் பஞ்ச பூதங்களால் ஏற்பட்டதாகிய தேஹத்தில் “நான்” என்றும் “என்னுடையது” என்றும் விபரீதபுத்தி எப்பொழுதும் மாறாதிருப்பான். அந்த தேஹ போஷணத்திற்காகப் பல கர்மங்களைச் செய்கின்றான். அவற்றால் கட்டுண்டு மீளவும் ஸம்ஸாரத்தை அடைகின்றான். புண்ய பாபரூபமான கர்மங்களைச் செய்தால் அவற்றின் பலனை அனுபவிக்கும் பொருட்டுச் சரீரம் உண்டாகப் பெறுவான். சரீரம் உண்டாகையில் அதைப் போஷணம் செய்வதற்காக மீளவும் கர்மங்களைச் செய்வான். இங்ஙனம் புண்ய பாபரூப கர்மங்கள் ஜீவனுக்குச் சரீரஸம்பந்தத்தை விளைத்து அதில் அவனை பந்திக்கின்றன. (எவன் அவித்யையென்று கூறப்படுவதாகிய கர்மத்திற்கு உட்பட்டு க்லேசத்திற்கிடமான வருத்தங்களை விளைப்பதாகிய) தேஹத்தை அடிக்கடி அனுஸரிக்கின்றானோ, அவன் ஸம்ஸாரத்தினின்று விடுபடமாட்டான். அஸத்துக்களான பார்யை முதலியவர்களால் தொடாப் பெற்றவனாகி அவர்களுக்கு இஷ்டமானவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் பொருட்டுக் கெட்டவழியில் நின்று சிச்ன உதரங்களுக்காக (வயிற்றை நிறைப்பதற்காகவும் ஸ்த்ரீ ஸம்போகத்திற்காகவும்) முயன்று சப்தாதி விஷய ஸுகங்களில் மனக்களிப்புற்றிருப்பானாயின், முன் சொன்னபடி நரகத்தில் போய் விழுவான், அஸத்துக்களோடு ஸஹவாஸம் செய்வானாயின், பொய் பேசாமையும் ஆசாரமும் தயையும் மிதமாகப் போகையாகிற மௌனமும் புத்தியும் வெட்கமும் ஸம்பத்தும் யசஸ்ஸும் பொறுமையும் சம தமங்களும் ஸௌபாக்யமும் ஆகிய இவையெல்லாம் பாழாய் விடும். சப்தாதி விஷயங்களில் விருப்பம் மாறப்பெறாதவர்களும் தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமித்தவர்களும் மூடர்களும் ஸ்த்ரீகளுக்கு விளையாட்டு ம்ருகம்போல் சொன்னபடி கேட்பவர்களும் “ஐயோ! இப்படியும் அழிந்து போவாருண்டோ?” என்று விவேகிகளால் சோகிக்கத் தகுந்தவர்களுமாகிய அஸத்துக்களோடு ஸஹவாஸம் செய்யலாகாது. ஸ்த்ரீகளிடத்தில் மனப்பற்று வைப்பதனாலும், அங்ஙனம் மனப்பற்றுடையவரோடு ஸஹவாஸம் செய்வதனாலும் புருஷனுக்கு மதிமயக்கமும் ஸம்ஸாரபந்தமும் எப்படி உண்டாகுமோ, அப்படி மற்ற எதனாலும் உண்டாகாது, ஸ்த்ரீகளிடத்தில் மனப்பற்று வைப்பது அனர்த்தத்தையே விளைக்குமன்றி ஒருக்காலும் நன்மையை விளைக்காது. எப்படிப்பட்ட மஹா ஜ்ஞானாதிகர்களுக்கும் ஸத்ரீ மோஹத்தைக் கடக்கமுடியாது. நான்முகனைக் காட்டிலும் மேற்பட்ட அறிஞன் மற்றொருவன் இல்லை. அவன் தன் புதல்வியாகிய ஸரஸ்வதியைப் பார்த்து அவளுடைய ஸௌந்தர்யத்திற்கு மோஹித்து அவளைப் புணர விரும்பினான். அவள் மானுருவம் தரித்துப் போகையில், தானும் ஓர் மானுருவம் தரித்து வெட்கமின்றி அவளைப் பின்தொடர்ந்து க்ரீடித்தான். அந்த ப்ரஹ்மாவால் மரீசி முதலியவர்களும், அவர்களால் கச்யப ப்ரஜாபதி முதலியவர்களும், அவர்களால் தேவ மனுஷ்யாதிகளும் ஸ்ருஷ்டிக்கப்பட்டார்கள். அவர்களில் ரிஷியாகிய நாராயணனைத் தவிர மற்ற எந்தப் புருஷன் தான் ஸ்த்ரீரூபமான மாயையால் இழுக்கப்படாத மனமுடையவன்? அவர்கள் எல்லோரும் அம்மாயையால் மதிமயங்கப் பெற்றவர்களே. ஜ்ஞானாதிகனாகிய நாராயணனொருவனே அம்மாயையால் மதி மயங்கப் பெறாதவன். ஸ்த்ரீயென்று சொல்லப்படுகிற என்மாயையின் ப்ரபாவத்தைக் காண்பாயாக. 

இந்த ஸ்த்ரீயானவள் புருவ நெரிப்புமாத்ரத்தினால் திக்குகளையெல்லாம் ஜயித்த சூரர்களையும் ஸ்வாதீனம் பண்ணிக் கொள்கிறாள். ஆகையால் பக்தியோகத்திற்குப் பலனான என் ஸ்தானத்திற்கு வர விரும்புபவன் என்னைப் பணிந்து ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மாவின் உண்மையை அறிந்து ஸ்த்ரீகளிடத்தில் ஒருக்காலும் மனப்பற்று செய்யலாகாது. மோக்ஷத்தில் இச்சையுடையவனுக்கு ஸ்த்ரீகளை நரகத்வாரமென்று சொல்லுகிறார்கள். ஆகையால் ஸ்த்ரீகளிடத்தில் மனப்பற்று செய்யலாகாது. சுச்ரூஷை முதலிய வ்யாஜத்தினால் எல்லோரும் மதிமயங்கும்படி தேவனால் நிர்மிக்கப்பட்ட ஸ்த்ரீயென்னும் மாயை அணுகுமாயின், அதைத் தனக்கு ம்ருத்யுவென்று நினைக்கவேண்டும். ஸ்த்ரீயைப் பார்த்து “இவளால் நாம் சுச்ரூஷை பெறலாம்; ஸம்போகம் பெறலாம்” என்று மதி மயங்கலாகாது. புற்களால் மறைக்கப்பட்ட கிணறுபோல் ஸ்திரீகள் தெரியாமலே அனர்த்தத்தை விளைப்பார்களென்று நினைத்து அவர்களிடத்தில் மனப்பற்று கொள்ளாதிருக்கவேண்டும். கிணறு புல்மூடப் பெற்றிருக்குமாயின், இது கிணறென்று தெரிந்துகொள்ள முடியாமையால் ஸாதாரண பூமியென்று ப்ரமித்து நடந்து செல்வானாயின், அதில் விழுந்து அனர்த்தப்படுவானல்லவா? அங்கனமே ஸ்த்ரீகளைப் பார்க்கும் பொழுது “இவர்களால் அனர்த்தம் விளையும்” என்று தெரியாமல் “நாம் இவர்களை மணம் புரிந்தால் ஸுகப்படலாம்” என்று ப்ரமித்து அவர்களிடத்தில் மனப்பற்று செய்வார்களாயின், கடைசியில் நரகத்தில் விழுந்து அனர்த்தப்படுவார்கள். ஆகையால் ஸ்த்ரீகள் புல்மூடின கிணறுபோல் அனர்த்தம் விளைப்பவரென்று நினைத்து ஜாக்ரதையுடன் பிழைக்கவேண்டும். இங்ஙனம் மோக்ஷத்தில் விருப்பமுடைய புருஷன் ஸ்த்ரீகளிடத்தில் மனப்பற்று செய்யலாகாதென்று மொழிந்தேன். அங்ஙனமே ஸ்த்ரீகளும் மோக்ஷத்தை விரும்புவார்களாயின், புருஷர்களிடத்தில் மனப்பற்று செய்யலாகாதென்பதை விவரித்துச் சொல்லுகிறேன் கேட்பாயாக. இந்த ஜீவாத்மாவானவன் ஸ்த்ரீகளிடத்தில் மனப்பற்றுடையவனாகி மரணகாலத்தில் ஸ்த்ரீகளையே த்யானித்துக் கொண்டிருக்கையால் அடுத்த ஜன்மத்தில் ஸ்த்ரீயாகவே பிறப்பான். தன்னை ஸ்த்ரீயென்று நினைத்துக் கொள்வான். அந்த ஜீவன் புருஷனென்று கூறப்படுவதாகிய என்மாயையைப் பார்த்து மோஹங்கொண்டு “இவனை நாம் மணம்புரிவோமாயின், இவன் நமக்கு பர்த்தாவாகிப் பணங்களையும் ஆடை ஆபரணங்களையும் போகத்தையும் கொடுப்பான்” என்று நினைப்பான். காட்டில் புகுந்து வேட்டையாடுகிறவன் பாடும் பாட்டு மானுக்கு எப்படி அனர்த்தத்தை விளைக்குமோ, அங்ஙனமே அந்தப் புருஷனாகிற மாயையால் தனக்கு அனர்த்தமே விளையுமாகையால், அதை ம்ருத்யுவாகவே நினைக்கவேண்டும். இங்ஙனம் கர்ப்பத்தில் வஸிப்பது ஜன்மிப்பது முதலாக யௌவனம் வரையிலுள்ள வருத்தங்களையெல்லாம் சொன்னேன். கிழத்தனம் மரணம் முதலிய வருத்தங்களை முன்னமே மொழிந்தேன். இனிமேல் சில ஸந்தேஹங்களுக்கு ஸமாதானம் சொல்லுகிறேன் கேட்பாயாக. அந்த ஸந்தேஹங்கள் எவையென்னில், நித்யவஸ்துவாகிய ஆத்மாவுக்கு ஜன்ம மரணங்கள் எப்படி ஸம்பவிக்குமென்றும், ஸம்பவிக்கில், அந்த ஜன்ம மரணங்களின் ஸ்வரூபம் யாதென்றும், ஸர்வகர்மங்களும் அனுபவத்தினாலேயே க்ஷணித்துப் போகின்றனவாகையால் ஜீவன் ஒரு சரீரத்தினின்று மற்றொரு சரீரத்திற்கு எங்ஙனம் போவானென்றும், அப்படி வேறு சரீரத்திற்குப் போகும் பொழுது முன்புள்ள பூதஸூக்ஷ்மங்களோடு கூடவே போகின்றானா? அல்லது அவற்றை விட்டுத் தனியே போகின்றானா? என்றும் சில ஸந்தேஹங்கள் உண்டாகக்கூடும். அவற்றிற்கு ஸமாதானம் கூறுகிறேன். 

முதலில் தேஹத்தைக் காட்டிலும் ஆத்மா வேறுபட்டவனென்பதைப் பற்றி விவரிக்கிறேன் கேட்பாயாக. ஜீவன், இதுவே ஆத்மாவென்று அபிமானித்திருப்பதும் ஐந்து பூதங்கள் இந்த்ரியங்கள் மனது ஆகிய இவை அடங்கினதுமாகிய ஸூக்ஷ்மசரீரத்துடன் ஒரு ஸ்தூலசரீரத்தினின்று மற்றொரு ஸ்தூலசரீரத்தை அடைந்து, முன்புள்ள ஸ்தூல சரீரத்திலிருக்கும்பொழுது செய்த கர்மங்களின் பலனை அனுபவித்துக் கொண்டே மற்றொரு சரீரத்தை விளைவிக்கும்படியான கர்மங்களை இடைவிடாமல் நடத்திக் கொண்டேயிருக்கின்றான்: பஞ்ச பூதங்கள் இந்திரியங்கள் மனது ஆகிய இவை அடங்கின ஸூக்ஷ்ம தேஹத்தோடு கூடவே ஜீவன் இந்தச் சரீரத்தைவிட்டுப் போகின்றான். நித்யனான ஆத்மாவுக்கு ஜன்மமும் மரணமும் எப்படி உண்டாகுமென்பதற்கு ஸமாதானம் சொல்லுகிறேன் கேட்பாயாக. 

ஜீவன் ஸ்தூலசரீரத்தை விட்டு ஸூக்ஷ்மசரீரத்தைப் பெறுகையே மரணமாவது. மீளவும் அந்த ஸுக்ஷ்மசரீரத்தை விட்டு ஸ்தூலசரீரத்தைப் பெறுகையே ஜன்மமாவது. ஜீவனுக்கு ஜன்ம மரணங்கள் தேஹத்தைப் பற்றியேயன்றி இயற்கையில் கிடையாது. ப்ருதிவி முதலிய பூதங்கள் ஸ்பஷ்டமாகத் தோற்றும்படியான ஸ்தூலதேஹம், அவை கண்ணுக்குத் தோற்றாதபடி ஸுக்ஷ்மதசையை அடையுமாயின், அதுவே மரணமென்று கூறப்படும். தேஹத்திற்கு ஸூக்ஷ்மாவஸ்தை உண்டாயின் அதை ஆத்மாவுக்கு மரணமென்று எப்படி சொல்லக்கூடுமென்னில், ஜீவன் அஜ்ஞானத்தினால் அந்த தேஹத்தையே ஆத்மாவென்று அபிமானித்திருக்கிறான் ஆகையால் அதையே ஆத்மாவின் மரணமென்று கூறுகிறார்கள். மீளவும் அந்த ப்ருதிவி முதலிய பூதங்கள் ஸ்தூலதசையை அடைந்து நானென்னும் அபிமானத்துடன் கண்ணுக்குப் புலப்படுமாயின், அதையே ஆத்மாவுக்கு ஜன்மமென்று கூறுகிறார்கள். இங்ஙனம் ஜன்ம மரணங்களின் ஸ்வரூபத்தை விவரித்துச் சொன்னேன். ஜன்ம மரணங்களுக்கு நேரே விஷயமாகிய தேஹத்தைப் பற்றிச் சிறிது சொல்லுகிறேன், கேட்பாயாக, தேஹத்தில் சக்ஷுரிந்த்ரியத்திற்கு ஸ்தானமாகிய ரந்த்ரங்களைக் கண்களென்று சொல்லுகிறோம். அந்தக் கண்களுக்கு வஸ்துக்களைப் பார்க்கும்படியான சக்தி எப்படி இல்லையோ, அப்படியே கேவலமான சக்ஷுரிந்த்ரியத்திற்கும் வஸ்துக்களைப் பார்க்கும்படியான சக்தி இல்லை. ஆத்மாவோடு ஸம்பந்தம் உண்டானால்தான் அவ்விந்த்ரியத்திற்கு அந்த சக்தி உண்டாகும். ஆகையால் பார்க்கிறவன் ஆத்மாவேயன்றி இந்திரியமன்று. இங்ஙனம்தானே ஸ்வதந்த்ரமாய்ப் பார்க்கும் திறமையற்றதாகிய சக்ஷுரிந்த்ரியத்தை ஆத்மாவென்று எப்படி நினைக்கலாகாதோ, அங்ஙனமே அசேதனமான தேஹத்தையும் ஆத்மாவென்று நினைக்கலாகாது. தேஹம் ஸ்தூல ஸுக்ஷ்ம தசைகளை அடைவதாகையால் மாறுந்தன்மையது. ஆத்மா என்றும் மாறாதிருக்கும் தன்மையன். உத்பத்தியும் மரணமும் தேஹத்திற்கு நேராகவே ஸம்பவிக்கின்றன. ஆத்மாவுக்கு தேஹத்தின் மூலமாய் உண்டாகின்றன. ஆகையால் தேஹத்தின் ஜன்ம மரணாதிகளைப் பற்றி பயப்படலாகாது. புத்ர மரணாதிகளைப் பற்றி வருத்தமும் கொள்ளலாகாது. ஆனால் எப்படி இருக்கவேண்டுமென்னில், ஸுகதுக்கங்கள் இரண்டையும் ஸமமாக நினைத்துப் பரப்ரஹ்மத்திற்கு உட்பட்டிருப்பவனும் ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டவனுமாகிய ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்து தேஹத்திலும் பிள்ளை பெண்டிர் முதலிய மற்றவரிடத்திலும் க்ருஹம் க்ஷேத்ரம் முதலியவற்றிலும் பற்றின்றி இவ்வுலகத்தில் தர்மத்தை அனுஷ்டிக்கவேண்டும். ஆத்மாவின் உண்மையைப் பற்றின அறிவும் பரமபுருஷன் தவிர மற்ற எவ்விஷயத்திலும் ப்ரீதியில்லாமையாகிற வைராக்யமும் அமைந்து சாஸ்த்ரங்களை ஆராய்ந்தறிவதால் கலக்கமற்றிருக்கின்ற புத்தியுடன் பகவானுடைய மாயையினால் ஏற்பட்டதாகிய இவ்வுலகத்தில் தேஹத்தில் ஆஸக்தியின்றி நிவ்ருத்தி தர்மத்தை ஆசரிக்கவேண்டும். இவ்வுலகம் பகவானுடைய மாயையினால் ஸ்ருஷ்டிக்கப்பட்டதாகையால் இதிலுள்ள ஒவ்வொரு வஸ்துவும் மதிமயக்கத்தை விளைவித்துக் கெட்டவழியில் மூட்டி ஆத்மாவை அழித்துவிடும். ஆகையால் எதிலும் பற்றின்றி மனவூக்கத்துடன் பகவானுடைய சரணாரவிந்தங்களே நமக்குச் சரணமென்று பாவித்திருக்கவேண்டும். தேஹத்திலும் மனப்பற்று செய்யலாகாதென்னில், மற்ற பிள்ளைபெண்டிர் முதலியவரிடத்திலும் க்ருஹ க்ஷேத்ராதி விஷயத்திலும் மனப்பற்று கூடாதென்று தனியே சொல்லவேண்டுமோ? ஆகையால் எதிலும் பற்றின்றி பகவானுடைய பாதாரவிந்தங்களையே த்யானித்துக்கொண்டு என்று சரீரம் கழியுமோவென்று மரணகாலத்தையே எதிர்பார்த்துக் கொண்டு நிவ்ருத்தி தர்மத்தினின்று நிலைமாறாதிருக்கவேண்டும். 

முப்பத்தொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை