ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி. வேதமனைத்துக்கும் வித்தான கோதைத் தமிழ் தந்தவள் பிறந்த மாதமும் ஆடியல்லவா?
மாதங்களில் நான் மார்கழி என்றான் மணிவண்ணன், மாதவச்செல்வி கோதைப் பிராட்டியும் மார்கழித் திங்கள் என்றே பாசுரம் தொடங்கினாள். வருஷத்தின் ஆரம்பம்; இளங்காலை வேளை மார்கழி மாதம்; இளங்கிளி ஆண்டாள் இளவாயர் தலைவன் கண்ணன். இன்பமான சூழ்நிலை ; கண்ணன் ஒருத்தி மகனாய் வளர்ந்தது போல் பிராட்டியும் துளஸிக்காட்டில் பிறந்து விஷ்ணுசித்தரிடத்தில் வளர்ந்தாள். செய்த பாசுரங்கள் செந்தமிழின்பம் மிகுவிப்பது.
பாமாலையாலும் பூமாலையாலும் பகவானை உகப்பித்தவள் பிராட்டி. அடியார்களையும் எழுப்பி அவர்களை உய்விக்க வேண்டி பையத்துயின்ற பரமனையும் எழுப்பினாள். எம்பெருமானைப் பலவாறு பெயரிட்டழைத்தாள். நாராயணா என்றாள். அவனே வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்து என்றாள். ஓங்கி வளர்ந்தவனே என்றாள். மழைக் கண்ணனே என்றாள், மாயன் என்றும் மாமாயன் என்றும் வைகுந்தன் என்றும் கோவிந்தன் என்றும் பலவாறு பாடிப்பரவினாள். அது மட்டுமா?
அவனது அடியார்களையும் பாடிக் கொண்டாடினாள். அவனது அன்பிற்கினிய நப்பின்னை, யசோதை, நந்தகோபன் ஆகியோரையும் போற்றினாள். அடியார்களை எழுப்பியபோது கோதை காட்டிய பரிவு வியத்தற்குரியது.
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பொழியவேண்டுமென வேண்டிய பிராட்டி அச்செல்வச் சிறுமியர்களை அழைத்த பாங்கு போற்றுதற்குரியது. பிள்ளாய் என்றாள், பேய்ப்பெண்ணே என்று இறைவனிடம் அவள் கொண்ட அன்பு மிகுதியைக் கூறினாள். நாயகப் பெண் பிள்ளாய் என்கிறாள். கேசவனது புகழைக் கேட்பதிலேயே தேசமுடையாய் என்கிறாள் கோதுகலமுடையபாவாய், மாமான் மகளே, அருங்கலமே, குற்றமில்லாதவளே, மயிலே, நற்செல்வன் தங்காய் (இவளுக்கு அண்ணனாதாலேயே நற்செல்வன் ஆகிறான் போலும்) போதரிக் கண்ணினாய், இளங்கிளியே என ஆயர் சிறுமிகளை அழைப்பது கோதையின் பரிவினையும் பக்தியையும் காட்டுகின்றதல்லவா, பத்துடையடியவர்க்கு! எளியவனான எம்பெருமான் பத்து அவதாரங்கள் எடுத்தான். பிராட்டியும் பத்து விதமான ஆயர் சிறுமிகளை அழைப்பது பொருத்தம் தானே! பிராட்டிக்கு அடியார்கள் மேல் மட்டும் பரிவு பொங்கவில்லை. நாயகனின் கோயில் கதவுகளின் மீதும் பாசம் வெள்ளமிடுகிறது. தூய நிலைக்கதவுகள் நேய நிலைக்கதவங்களாகின்றன. நப்பின்னையின் திருக்கையில் காணப்படும் பந்தின் மேலும் புழக்கடையில் மலரும் ஆம்பலின் மேலும் செந்நெல் மீதும் கூட பரிவு காட்டுபவள் பிராட்டி, பொங்கும் பரிவாலே பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்த பெரியாழ்வாரின் திருமகள் எம்பெருமானின் பரிவாரங்கள் மீதும் பரிவு காட்டிப் பாடும் அழகு நினைத்து மகிழத்தக்கது.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
நன்றி - ஶ்ரீ ரங்கநாத பாதுகா ஆனி 1986