வெள்ளி, 6 டிசம்பர், 2019

சூடிக்கொடுத்த கோதை காட்டிய பாதை - ஜெ.சடகோபன்

“கோதை” என்ற திருநாமம் வட மொழியில் வாக்கு, சொல் வன்மை மற்றும் கவித்திறன் இவற்றைக் குறிக்கும் சொல்லாகும். எம்பெருமானுடைய தயையும், க்ஷமையும்தான் ஜீவர்களான நமக்கு உஜ்ஜீவனத்தைக் கொடுக்கும். இதில் “க்ஷமையின்” முழு உருவம் தான் நமது “கோதா பிராட்டி” ஆகும். 

நந்தவனத்திலே தோன்றி, கண்ணனிடம் தீராத காதல் கொண்டு, ஸ்ரீவில்லிப்புத்தூரையே ப்ருந்தாவனமாக பாவித்து, தன்னையும் ஒரு கோபிகையாக நினைத்து; பெருமாளைக் குறித்து நோன்பும் நோற்று, தான் சூடிக் களைந்த மாலையை வடபத்ரசாயி பெருமாளுக்குக் கொடுத்து இறுதியில் ஸ்ரீரங்கநாதனையே தனது பர்த்தாவாக்கிக் கொண்டாள். இத்தகு பெருமையுடைய கோதையின் திருஅவதார தினம் திருஆடிப்பூரமாகும். விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வாருக்கு வளர்ப்பு மகளானாள். ஆனிச் சோதியில் தோன்றிய ஆழ்வாருக்கு ஆடிப் பூரத்திலே கிடைத்த பெரும்பேறே இவ்வாண்டாள். ஜீவர்களான நமது விஷயத்தில் கிடைத்த பெரும்பேறே இவ்வாண்டாள். ஜீவர்களான நமது விஷயத்தில் அவளின் பங்கு வர்ணிக்க இயலாது. இவள் ஒருவள் தான் முறையே ஆழ்வார்கள் குழுவிலும் மற்றும் எம்பெருமான் பத்தினிமார்களில் ஒருவளாகவும் உள்ளார். பாமாலை சூட்டிய வேறு தேவிமார்களும் இல்லை. அதேபோல், தான் சூடிக்களைந்த பூமாலையை பெருமாளுக்குச் சூட்டிய ஆழ்வார்களும் இல்லை. என்னே நம் கோதையின் தனிச் சிறப்பு!

கோதையின் திருஅவதாரத்திற்கு ஒரு விசேஷ காரணம் உள்ளது. எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன், வராஹ அவதாரம் எடுத்த பொழுது, அவர் தனது திருமூக்கின் மேல் பூமிப் பிராட்டியை காப்பாற்றி எடுத்துக் கொண்டு வரும் பொழுது, பூமிப்பிராட்டியோ ஆனந்தம் அடைவதற்கு மாறாக அழுது கொண்டிருந்தாள். பகவான் வருத்தத்துடன் அவளிடம் “காப்பாற்றுகிற நேரத்தில் ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?” என்று வினவ அதற்கு பிராட்டி, “நான் கூக்குரலிட்டு அழுதபொழுது ஓடோடி வந்து (பார்யையான) என்னை ரக்ஷித்தீர்கள்”. இதே போல் இந்த பூமியிலே உள்ள ஜீவர்கள் கூப்பிட்டால் வருவீர்களா? வந்து ரக்ஷிப்பீர்களா? என்று கேட்டாள். 

இதற்கு பகவான், பூமாதேவியின் கேள்விக்கு பதில் கூறும் வகையில் மூன்று கட்டளைகளைக் கூறினார்.



1) புஷ்பங்களால் தன்னை (பகவானை) அர்ச்சித்தல். 

2) தன்னுடைய (பகவானின்) திருநாமங்களை உரக்கச் சொல்லுதல். 

3) தன்னுடைய (பகவானின்) திருவடிகளில் ஆத்மாவை சமர்ப்பித்தல். 

இந்த மூன்றையும் கேட்ட பூமிப்பிராட்டி, தனது முந்தானையில் மூன்று முடிச்சுக்களாக முடிந்து கொண்டாள். இதை நிறைவேற்றுவதற்காகவே ஸ்ரீஆண்டாளாக இப்புவியில் அவதாரம் செய்தாள். அதை “திருப்பாவையின்” மூலம் உலகிற்கு அழகாக எடுத்துக் காட்டினாள். திருப்பாவையில் உள்ள 30 பாசுரங்களை 3 பத்து பாசுரங்களாகப் பிரித்து முறையே மேற்சொன்ன மூன்று கட்டளைகளையும் நிறைவேற்றி ஜீவர்களுக்கு வழி காட்டினாள். இதை நாம் அனைவரும் பின்பற்றி நல்வழியில் செல்லலாமே! 

ஸ்ரீஸ்வாமி தேசிகன், தனது ஸ்தோத்ரமான “ஸ்ரீ கோதா ஸ்துதியில்” கோதையின் ப்ரபாவத்தை மிக விமரிசையாக கொண்டாடுகிறார். பொறுமையின் பிறப்பிடம், கருணைக்கடல், ஜீவர்களின் விஷயத்தில் அதிக வாஜ்ஜை மற்றும் ஜீவர்களுக்காக எம்பெருமானிடத்தில் பரிந்து பேசி, எம்பெருமானின் சிக்ஷையிலிருந்து ஜீவர்களைக் காப்பாற்றி தனது விசேஷ புருஷகாரத்தினை வெளிப்படுத்தி எம்பெருமானின் திருவடிகளில் சேர்க்கிறாள். நமது ஸ்ரீஸ்வாமி தேசிகனும், கோதையின் ப்ரபாதத்தில் ஈடுபட்டு திருப்பாவை பாசுரங்களில் எண்ணிக்கைக்கு நிகராக இல்லாமல், ஒரு ஸ்லோகம் குறைவாகவே (திருப்பாவை 30 பாசுரங்கள், ஸ்ரீகோதா ஸ்துதி 29 ஸ்லோகம்) செய்து ஸ்தோத்திரத்தை பூர்த்தி செய்கிறார். நாம் அனைவரும் கோதையின் திருவடிகளில் சரணடைந்து அவள் காட்டிய பாதையை கெட்டியாகப் பிடித்து, பின்பற்றி எம்பெருமானின் விசேஷ கடாக்ஷத்திற்கு பாத்திரர்களாவோமாக!

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

நன்றி - சப்தகிரி ஜனவரி 2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக