மயக்கும் தமிழ் - 33 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே!

பிறந்த ஆறும், வளர்ந்த ஆறும், பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்குத் 
திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும், 
நிறம் தன் ஊடுபுக்கு எனது ஆவியை நின்று நின்று, 
உருக்கி உண்கின்ற; இச்சிறந்த வான்சுடரே! 
உன்னை என்று கொல் சேர்வதுவே?

திருவாய்மொழிப் பாசுரம்

நம்மாழ்வாருக்குத்தான் கண்ணபெருமானின் மீது எத்துணை காதல், அன்பு, பிரேமை, மயக்கம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். எம்பெருமான் கர்மங்களுக்கு கட்டுப்படாதவன் எம்பெருமானே! உன் அடியார்களைப் பாதுகாப்பதற்காக இங்கே வந்து பிறந்தாய்! நீ பிறந்த விதமும் வளர்ந்த  விதமும் நினைத்தால் என் நெஞ்சம் உருகுகின்றது. உன் லீலைகளை எல்லாம் பார்த்தால் வியப்பு மேலிடுகிறது. எதற்கும் கட்டுப்படாதவன் ஏழை பக்தர்களின்  அன்பில் நீந்தி விளையாடுகிறாய்! ஆழ்வார் பாசுரத்திலே சொல்கிறார் பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும்  மகாபாரதப் போரில் பஞ்சபாண்டவர்கள் பக்கம் நின்று அதாவது தர்மத்தின் பக்கம் இருந்து கொண்டு அதர்மத்தை வீழ்த்தினாய் அந்தப் போரில் நீ செய்து காட்டிய  வித்தைகள் ஒன்றா? இரண்டா? 

எனது ஆவியை நின்று நின்று, உருக்கி உணர்கின்ற இச் சிறந்த வான்சுடரே! உன்னை என்று கொல் சேர்வதுவே? உன் கம்பீரச் செயல்கள் அதன் மேன்மைகள்  எல்லாம் என் இதயத்தில் அடிமனதின் சுவடுகளாகப் பதிந்து போய் விட்டன. நினைத்து நினைத்து நெஞ்சம் உருகி, உருகி நான் படாதபாடு படுகின்றேன். உன்  மாயங்கள்தான் என்ன அதை எப்படி நான் எளிமையாகச் சொல்ல முடியும்? சிறந்த வான்சுடரே என்ற வார்த்தையால் கிருஷ்ணபரமாத்மாவை புகழ்கிறார். அப்படி  என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? பக்தர்களின் இருளைப் போக்கி அங்கே ஒளியை புகுத்துகிறவன். வான்சுடரே என்று வானளாவப் புகழ்கிறார். இப்படி உன்னை  நினைத்து என் உயிர் உருகுகிறது. இப்படி எத்தனை நாள் நான் இன்பவேதனையை அனுபவிப்பது. உன்னைப் பிரியாதபடி எப்போதும் நான் உன்னுடன் சேர  முடியும் என்பதைத்தான் உன்னை என்று கொல் சேர்வதுவே? என்று பரமாத்மாவிடமே அன்போடு கேட்கிறார், நம்மாழ்வார். இதே கருத்தை அப்படியே ஆண்டாளும்  தன் திருப்பாவை பாசுரத்தில் முன் வைக்கிறார்.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கில்லானகித் தாள் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம், பறை தருகியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

ஒட்டு மொத்த சரணாகதி என்பார்களே அது இந்தப் பாசுரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது! தேவகி, வசுதேவர் தம்பதிக்கு மகனாகப் பிறந்த கண்ணன்,  கம்சனின் கொடுஞ்செயல்களுக்கு முடிவு கட்ட பிறந்தன்றே, அதே இரவில் யசோதை நந்தகோபரிடம் சேர்க்கப்பட்டான், சேர்க்கப்பட்டான் என்று சொல்வதை விட  சேர்ந்தான். உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!  கண்ணா உன்னை சரணடைந்து விட்டோம். பகவானை பக்தர்கள் சரணடைந்தால் என்ன கிடைக்கும் என்பதை இதைவிட தெளிவாக ஆண்டாள் மிகவும்  எளிமையாக இனிமையாக எடுத்துச் சொல்கிறாள். வருத்தம் தீரும். மகிழ்ச்சி புது வெள்ளமாகப் பாயும், உன் பெருங்கருணையால் இவையெல்லாம்  கிடைக்கும்போது எங்களுக்கு வேறென்ன வேண்டும்? உன் அருட்பார்வை ஒன்று போதாதா? நம்மாழ்வாரும் ஆண்டாளும் தத்தம் பாசுரங்களில் தெரிவிப்பது என்ன?  நீ கொடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். 

எங்களுக்கு நீயே வேண்டும். உன் அருள் அத்துணை சக்தி வாய்ந்தது. பின்னாளில் மகாபாரதத்தில் கூட பஞ்சபாண்டவர்கள் கண்ணனின் அருளைக் கேட்டார்கள்.  மாறாக கௌரவர்களோ கண்ணனின் பொருளைக் கேட்டார்கள். பொருள் அழியக்கூடியது. அருள் என்றும் அழியாதது. அதுவும் சர்வலோக ரட்சனான கிருஷ்ணனின்  பேரருள் என்றால் சர்வ சாதாரணமா என்ன? இதை உணர்ந்துதான் கண்ணனின் பெருமை நினைந்து நினைந்து நம்மாழ்வாரும், ஆண்டாள் நாச்சியாரும் உருகி  உருகி பாசுரத்தை படைத்திருக்கிறார்கள். அதிலும் கூட இந்த ஆழ்வார்களுக்கு கண்ணனின் பரிபூரண அருள் கிடைத்திருக்கிறது. ஆண்டாள் கண்ணனிடமே கரைந்து  போனாள். நம்மாழ்வாருக்கோ முதல் மரியாதையை ஏற்படுத்தித் தந்திருக்கிறான் பரமாத்மா. எந்தச் சூழலிலும் உன் திருவளைப் பற்றி நிற்க வேண்டும் என்று  விரும்பும் நம்மாழ்வார் திருவாய்மொழியில் மிக மிக அற்புதமான பாசுரத்தை படைத்திருக்கிறார்.

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்;
களைகண் மற்று இலேன்; 
வளைவாய் நேமிப் படையாய் ! குடந்தைக் கிடந்த மாமாயா!
தளரா உடலம், எனது ஆவி சரிந்து போம் போது
இளையாது உனதாள் ஒருங்கப் பிடித்துப் போது இசை நீயே!

திருவாய்மொழி

உனது திருவடிகளே தஞ்சம் என்று பிடித்தபடி தளராதபடி பார்த்தருள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி விரும்பித் தொழுகிறார் ஆழ்வார்!

என்ன சொல்ல வருகிறார் ஆழ்வார் தெரியுமா? ஒரு சாமான்ய பக்தனின் நிலையிலிருந்து நீ என் துன்பத்தைப் போக்கினாலும் சரி, போக்காவிட்டாலும் சரி அது  உன் தலைப்பட்ட விருப்பம். ஆனால் எனக்கு எப்போதுமே நீதான் காக்கும் கடவுள். உன்னை விட்டால் எனக்கு வேறு நாதி இல்லை, எனக்கு வேறு வழி  கிடையாது என்கிறார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை தன் வாழ்வில் கடைபிடித்ததோடு நிற்காமல் தன் பக்தர்களுக்கும் வழிகாட்டியாய்  திசைகாட்டியாய் விளங்கிய நம்மாழ்வார், ஆண்டாள் நாச்சியார் வழியைப் பின்பற்றி இறைவனின் பரிபூரண பேரருளுக்குப் பாத்திரமாவோம்!

நன்றி - தினகரன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை