மயக்கும் தமிழ் - 34 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

திருவடி சேர்க்கும் திருவாய்மொழி!

ஆழீ எழ, சங்கும் வில்லும் எழ, திசை
வாழி எழ, தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ, முடி பாதம் எழ, அப்பன்
ஊழி எழ  உலகம் கொண்டவாறே!

திருவாய்மொழி

ஆழ்வார்களின் தலைமகனாக கருதப்படுகிற நம்மாழ்வாரின் தேன் சிந்தும் பாசுரம் இது. எம்பெருமானுடைய வெற்றிச் செயல்கள் எல்லாவற்றுக்கும் முதன்மையாக அவன் திருஉலகு அளந்தருளின பெரிய பெரிய வெற்றிச் செயல்களை அருளிச் செய்கிறார். இந்தப் பாசுரத்தில்...

ஆழீ எழ
வாழி எழ
மோழை எழ
ஊழி எழ

இந்தத் தமிழையெல்லாம் இந்த அற்புதங்களையெல்லாம் நாம் வேறு எங்கு காண முடியும்? 

அதனால் தான் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை வேதத்திற்கு ஒப்பானது என்கிறார்கள் ஆசார்ய பெருமக்கள். திருமால் அதாவது எம்பெருமான் வாமனனாக இந்த உலகில் அவதாரம் எடுத்த போது திருவாழியாழ்வான் என்று சொல்லப்படுகின்ற சக்கரப்படை முன்னே தோன்றியது. அதன் பின்னர் ஸ்ரீபாஞ்ஞசன்னியம் என்று கருதப்படுகின்ற வெண் சங்கும் பின்னர் கோதண்டம் என்று சொல்லப்படுகின்ற வில்லும் தோன்றின. எல்லாத் திசைகளில் இருந்தும் வாழ்க வாழ்க என்று வாழ்த்தொலிகள் எழுந்தவண்ணம் இருந்தன. அதைத் தொடர்ந்து எம்பெருமானின் கதையும் வாளும் தோன்றியது.

படிப்படியாக எம்பெருமானின் அவதாரத்தை நம்மாழ்வார் அவருக்கே உரிய தனிபாணியில் விவரிப்பது தனிச் சிறப்பாக இருக்கிறது. எம்பெருமானின் திருமுடியும் திருவடியும் ஒரு சேர எழுந்தன. அதனால் மகாபலியால் உண்டான துன்பம் நீங்கி உலகுக்கு நல்ல காலம் உண்டாயிற்று. இப்படி என் அப்பன் உலகத்தை அளந்து கொண்ட விதத்தை என்னவென்று சொல்வது? ஆழி எழ என்று தொடங்குகிற பாசுரத்தில் எம்பெருமானை சொல்லும்போது அப்பன் என்று அழைக்கிறார். எம்பெருமானிடத்தில் எவ்வளவு நெருக்கமும் உருக்கமும் இருந்தால் இப்படி வார்த்தைகள் வந்து விழும்! எம்பெருமான் தனக்கு செய்த பேருபகாரத்தால் இப்படி நம்மாழ்வாருக்குள் வார்த்தைகள் வந்து தானாகவே விழுகிறது என்கிறார்கள், ஆசார்யப் பெருமக்கள். இதனால் தானோ என்னவோ நம்மாழ்வாரை இந்த வைணவ உலகமும் நாடும் நகரமும் ஞானத் தந்தையாகப் போற்றி மகிழ்கிறது. எம்பெருமானின் கருணையைப் பெற்ற பின்பு அதை வைப்பு நிதியாக வைத்துக் கொள்வதுபோல் ஆசைப்பட்டு மகிழ்ச்சியில் தத்தளிக்கிறார் ஆழ்வார். அந்த உணர்வினால் உந்தப்பட்டு அவர் படைத்த அற்புத பாசுரம்தான் இந்தப் பாசுரம்...

கோலமலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய அன்பேயோ
நீலவரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப
கோல வராகம் ஒன்றாய், நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்!
நீலக்கடல் கடைந்தாய்! உன்னைப் பெற்று இனி போக்குவனோ?

எம்பெருமானுடைய பெருங்கருணையும் அன்பும் ஆசியும் கிடைத்த பிறகு அதை நழுவ விடுவேனா? என்கிறார், நம்மாழ்வார். நீல நிறம் பெற்ற பாற்கடலைக் கடந்து உயரிய அமுதம் அளித்தவனே! உன்னை அடைவதைத் தவிர வேறு என்ன வேலை எனக்கு இருக்க முடியும்? உன் திருவடி அடைந்த பிறகு எனக்கு இனி என்ன வேண்டும் என்கிற எதிர் கேள்வியும் கேட்கிறார் ஆழ்வார். கரிய நிறத்தை உடைய ஒரு மலையானது இரண்டு பிறையைக் கவ்விக்கொண்டு புறப்பட்டாற் போன்று ஒப்பற்ற அழகிய வராகமாகி, பாதாளத்தில் அழுந்திக் கிடந்த பூமியை தந்தத்திலே கொண்டு காப்பாற்றியவனே! அதைப் போலவே பிறவிக் கடலில் மூழ்கின என்னை அந்த துன்பத்திலிருந்து காப்பாற்றியவனே! எந்தையே என் தந்தையானவனே என அன்போடு ஆண்டவனை அழைக்கிறார்.

நம்மாழ்வாருடைய உவமையும் உவமானமும் அடடா வியக்க வைக்கிறது!

‘‘அழகிய தாமரைப் பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியாரிடத்தில் அன்பு கொண்டவனே! அந்த அன்பின் மிகுதியாலே அந்தத் தாயாரால் ஏற்கப்பட்ட என்னிடத்திலும் மிக்க அன்புடையவனாய் இருப்பவனே! கையிலே கிடைத்திருக்கிற அற்புதமான மாணிக்கத்தை அதாவது மாணிக்கக் கற்களை யாராவது கடலில் வீசி எறிவார்களா? அதைப்போல உன்னுடைய திருவடி நிழல் சம்மந்தம் எனக்கு கிடைத்த பிறகு நான் எப்படி உன்னை உன் நினைவுகளை மறக்க இயலும். இந்த உணர்வுகள் அவரிடம் மிதமிஞ்சி இருப்பதனால்தான் பாசுரத்தின் கடைசியில் உன்னைப் பெற்று இனி போக்குவனோ?’’ என்கிறார் ஆணித்தரமாக... திருவாய்மொழிப் பாசுரம் முழுவதும் ஒரே பக்திப் பரவசம்தான். பரிபூரண சரணாகதி உணர்வுதான். சரணம்... சரணம்... சரணம்... நின் தாள் சரணம் என்ற சிந்தனையோடு பயணம் செய்திருக்கிறார். எந்த நிலையிலும் உன்னை என்னால் மறக்க முடியாது என்கிறார் இந்த பாசுரத்தை பாருங்கள்...

‘‘சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக, எய்தற்க; யானும்
பிறப்பில் பல்பிறவிப் பெருமானை
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே!’’

அவதார ரகசியத்தை உணர்ந்து அவனை மறவாமல் அனுபவிப்பதே என் வாழ்வாக அமையட்டும்! சொர்க்க நரகங்கள் பற்றி எனக்குக் கவலையில்லை என்கிறார். என்ன சொல்ல வருகிறார் தெரியுமா?‘‘இந்த வாழ்க்கைக்குப் பிறகு உள்ள மரணத்திற்குப் பிறகு சிறப்பிற்கு இடமாயுள்ள வீட்டினையோ சுவர்க்கத்தையோ அடைந்தாலும் சரி, அடையா விட்டாலும் சரி எனக்கு எந்தவொரு நிர்பந்தமும் இல்லை, கவலையும் கிடையாது. உன்னை என்றும் மறவாமல் உன்னையே சதாசர்வ காலமும் சிந்திப்பவனாக இருக்க வேண்டும். அதனால் தான் என்றும் மகிழ்வனே, எந்தச் சூழ்நிலையிலும் உன்னை மறவாதிருக்கும் மனம் வேண்டும். உன் அருளாலே உன் தாள் வணங்கும்படி இருக்கக்கூடிய சூழ்நிலையையும் நீதான் உருவாக்க வேண்டும் அதுவும் எப்படி சொல்கிறார் தெரியுமா? மறப்பு ஒன்று இன்றி, ஏனென்றால் நிகழ்கால வாழ்வில் நாம் நல்லதை எத்தனை நெஞ்சில் தேக்கி வைத்திருக்கிறோம். கெட்ட எண்ணங்களும் உணர்வுகளும் நம்மை விட்டு நீங்க மறுக்கின்றன. நல்லது உடனடியாக மறந்துபோய் விடுகிறது.

பகை இலன் என்ற பின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது

என்கிறார் கம்பநாட்டாழ்வார். நம்மாழ்வாரின் திருவாய்மொழி முழுவதும் நேர்மறைச் சிந்தனைகள்தான். நல்ல எண்ணங்களும் நல்ல நினைவுகளும் நம்மை நன்றாக வழி நடத்தக்கூடிய வாழ்வின் திசைகாட்டிகளாக, வழிகாட்டிகளாக அமையும் என்பதை ஆழம் கால் பட்டு சொல்கிறார் ஆழ்வார். தனக்கும் பரம்பொருளுக்கும் உள்ள நெருக்கத்தை முத்தான பாசுரங்களால் மயக்கும் தமிழில் அவர் எடுத்துச் சொன்னதை சிந்தனையில் வைப்போம்.

நன்றி - தினகரன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை