வெள்ளி, 6 டிசம்பர், 2019

மயக்கும் தமிழ் - 35 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

என் கண்ணின் கருமணியே

களங்கனி வண்ணா. கண்ணணே என்றன் கார்முகி லேஎன நினைந்திட்டு,
உளங்கனிந் திருக்கு மடியவர் தங்கள் உள்ளத்து ளூறியதேனை,
தெளிந்தநான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலினுள்ளே,
வளங்கொள் பேரின்பம் மன்னிநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந்தேனே.

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் ஓர் அற்புதமான பாசுரத்தை படைத்திருக்கிறார். கண்ண பெருமானை எப்படி அழைக்கிறார் தெரியுமா? உள்ளத்துள் ஊறிய தேன் என்கிறார். கண்ணன் மேல் மாசற்ற அன்பு இல்லாவிட்டால் இதுபோன்ற வார்த்தைகள் வந்து விழுமா? தேன் தானும் கெடாது, தன்னைச் சேர்ந்த பொருளையும் கெட விடாது. அதைப்போல பக்தனை பாதுகாப்பது பரந்தாமனின் மாபெரும் கடமை என்கிறார். கண்ணன் நீல நிறம் இல்லையா? அதனால் குளிர்ந்த மேகத்திற்கு கார்முகிலே என்கிறார். உள்ளத்தில் தூய்மையான எண்ணங்கள் இருந்தால்தானே வார்த்தைகள் எந்தப் பிசிறும் இல்லாமல் இப்படி அணிவகுக்க முடியும்? வளங்கொள் பேரின்பம் மன்னி நின்றானை என்கிறார். அப்படி என்றால் என்ன அர்த்தம்? பக்தர்கள் பரம சந்தோஷமாக எப்போதும் இருப்பதற்கு உண்டானதை செய்து கொண்டே இருப்பவனாம். அப்படிப்பட்ட கண்ணனை நாம் வணங்கி வழிபட வேண்டாமா? 

அது மட்டுமா அந்த ஊருக்கு மேலும் என்ன சிறப்பு என்பதை இந்தப் பாசுரத்திலேயே சொல்லி விடுகிறார் திருமங்கையாழ்வார். 

தெளிந்த நான்மறையோர் நாங்கை நன்னடுவுள் அதாவது நான்கு வேதங்களையும், சாஸ்திர சம்பிரதாயங்களையும் கரைத்துக் குடித்த பெருமக்கள் வாழ்கிற ஊராம் திருநாங்கூர் சீர்காழிக்குப் பக்கத்தில் இருக்கிறது. தை அமாவாசைக்கு அடுத்தநாள் திருநாங்கூர் எங்கும் பக்திப் பரவசம்தான். பதினோறு பெருமாள்களும் தனித்தனியாக கருட வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். திருமங்கையாழ்வார் தன் தர்ம பத்தினியான குமுதவல்லி நாச்சியாரோடு ஹம்ச வாகனத்தில்... அடடா! இதையெல்லாம் அனுபவிப்பதற்கு தனி பாக்கியம் வேண்டும். திருநாங்கூரிலேயே பல திவ்யதேசப் பெருமாளை தரிசிக்கலாம்.

திருநாங்கூர் மணிமாடக்கோயில், வண்புருஷோத்தமப் பெருமாள், வைகுந்த விண்ணகரப் பெருமாள், சிந்தனைக்கு இனியவரான செம்பொன் பேரருளாளப் பெருமாள், திருத்தெற்றியம்பலப் பெருமாளான பள்ளிகொண்ட ரங்கநாதர், குடமாடு கூத்தரான அரிமேய விண்ணகரப் பெருமாள், திருக்காவளம்பாடி கோபால கிருஷ்ண பெருமாள், திருமணிக்கூட வரதராஜப் பெருமாள், திருபார்த்தன்பள்ளி பார்த்தசாரதிப் பெருமாள், திருவாலிப்பெருமாளான வரதராஜப்பெருமாள் அண்ணன் கோயில் என்று அழைக்கப்படும் திருவெள்ளக்குளம் பெருமாள், திருத்தேவனார் தொகை என்று அழைக்கப்படுகிற கீழச்சாலை மாதப்பெருமாள் என்று இத்தனை வைணவ திவ்ய தேசத்து உற்சவப் பெருமாள்களும் திருநாங்கூர் மணிமாடக் கோயிலுக்கு வந்து அணிவகுத்து நிற்கிற காட்சி திருமங்கையாழ்வார் சொல்வதுபோல் அடியார்கள் உள்ளத்தில் ஊறிய தேனாக இருக்கிறது. இந்த ஒவ்வொரு திவ்யதேசத்திற்கும் தனித்தனி சிறப்புகள் உள்ளன. திருவாலி தலத்து திவ்யதேசப் பெருமாளைப்பற்றி குலசேகராழ்வாரின் அற்புதப் பாசுரம்.

ஆலிலைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே!
வாலியைக் கொன்று அரசினை வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரைய வைக்கும் கணபுரத்தென் கருமணியே
ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமானே! தாலேலோ!

இந்தப் பாசுரத்தின் அர்த்தத்தைப் பார்க்கலாமா? பிரளயம் ஏற்பட்டபோது ஆலமரத்து இலையிலே குழந்தை வடிவத்துடன் வந்து உலகங்களையெல்லாம் திருவயிற்றில் வைத்துக் காத்தவனே! வாலியைக் கொன்று அவனது தம்பியான சுக்ரீவனுக்கு அரசாங்கப் பதவியைக் கொடுத்தவன் எல்லாச் செல்வ வளமும் குடிகொண்டிருக்கும் திருக்கண்ணபுரத்தில் வாசம் செய்பவனே! என் கண்ணின் கருமணியே! திருவாலி திருநகரிக்குத் தலைவனே! அயோத்தி அரசனே!
இந்தப் பாசுரத்தில் வடக்கே அயோத்தியில் ஆரம்பித்து ராமாயணக் கதையை சொல்லி, அதன் பிறகு திருக்கண்ணபுரத்தில் நித்யவாசம் செய்யும் எம்பிரானே, என் கண்ணின் கருமணியே திருவாலி திவ்யதேசத்தில் அதிபதியாக மக்களை காப்பவனே என்கிறார், குலசேகராழ்வார். குலசேகராழ்வார் காலத்தால் திருமங்கையாழ்வாருக்கு முற்பட்டவர். திருவாலி திருநகரி என்பது திருமங்கையாழ்வார் மூச்சுக் காற்று உலவுகிற மண். அப்படிப்பட்ட திருவாலி திருநகரிப் பெருமாளை மனமுருகி உருகிப் பாடிப் பரவசப்பட்டிருக்கிறார், குலசேகராழ்வார்!

இயற்கை எழில் கொஞ்சுகிற இந்த ஊர்களெல்லாம் மனஅமைதிக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். இங்கே ஒவ்வொரு திவ்யதேசப் பெருமாளையும் திருமங்கையாழ்வார் அவருக்கே உரிய பாணியில் பாசுரங்களை படைத்து பரவசப்பட்டிருக்கிறார். இங்கே எல்லாம் திருமங்கை மன்னனின் ஆன்மா காற்றில் கரைந்திருப்பதை பக்திப் பரவசத்துடன் உணர முடிகிறது! திருமங்கையாழ்வார் எட்டாம் நூற்றாண்டில் படைத்த அமுதத்திற்கு நிகரான பாசுரங்கள் இன்றைக்கும் வாழ்வியல் அர்த்தம் நிறைந்ததாக இருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சுகிற இடம் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிற புனிதத் தலங்களாக இந்த திவ்யதேசங்கள் அமைந்திருக்கின்றன. வைணவத்தின் அடிநாதமான சரணாகதி தத்துவத்தை தன்னுடைய எல்லாப் பாசுரத்திலும் முக்கியப் பொருளாக அதுவும் கருப்பொருளாக வைத்திருக்கிறார் ஆழ்வார். ஒவ்வொரு திவ்யதேசமும் தனித்தனி சிறப்புகளால் சிறப்பும் பெருமையும் பெற்றிருப்பதாகப் பெருமிதத்துடன் சொல்கிறார் திருமங்கையாழ்வார். திருத்தேவனார்தொகை அதாவது கீழச்சாலை அண்ணன் பெருமாள் கோயிலுக்கு மிக அருகில் உள்ள திவ்யதேசம். இந்த அழகிய ஊரைப் பற்றி திருமங்கையாழ்வாரின் அற்புதப் பாசுரம்.

‘‘இந்திரனும் இமையவரும் முனிவர்களும்
எழிலமைந்த சந்த மலர்ச் சதுர்முகனும்
கதிரவனும் சந்திரனும் எந்தை!
மெக்குருளென நின்று அருளுமிடம்
எழில் நாங்கை அந்தர நற்பொழில்
புடைசூழ் திருத்தேவனார் தொகையே!’’

இந்தப் பாசுரத்தின் அர்த்தத்தை சொல்லியா தெரிய வேண்டும். ஒரு முறை பக்தியோடு படித்தாலே தானாகவே அர்த்தம் தெரிந்து விடுமே! தேவேந்திரனும் தேவர்களும் முனிவர்களும் அழகான வேதங்களையுடைய தாமரைப் பூவில் தோன்றிய பிரம்மாவும் சூரியனும் சந்திரனும் வந்து ‘எம்பெருமாளே எங்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று பகவானிடத்தில் வேண்டுகோள் வைக்க அவர்களுக்கு அருள் செய்த இடம் இந்தப் புனித இடம் அது மட்டுமா? ‘அந்தர நற்பொழில் புடை சூழ்’ என்கிறார் ஆழ்வார். மாதவப் பெருமாள் இன்றைக்கும் திருத்தேவனார் தொகை என்று அழைக்கப்படுகிற கீழச்சாலையில் எல்லோருக்கும் அருள்பாலித்து வருகிறார். திருநாங்கூரில் இருக்கும் ஆறு திவ்யதேசங்களும், சுற்றி இருக்கிற திவ்யதேசங்களும் மிகவும் மங்களகரமானவை. அருள் ததும்புகிற இடம். பக்தி மணம் கமழும் இந்த இடங்களுக்கு ஒரு முறை குடும்பத்துடன் சென்று வாருங்கள். வேண்டியதைப் பெற்று சந்தோஷமாக வாழலாம். திருநாங்கூர் திவ்யதேசங்கள் எம்பெருமாள் நித்யவாசம் செய்யும் அற்புதத் திருத்தலங்கள்.

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக