வெள்ளி, 6 டிசம்பர், 2019

மயக்கும் தமிழ் - 36 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

மாலவனின் அருள் நின்று தழைக்கும்!

நீரகத்தாய் நெடுவரையின் உச்சிமேலாய்!
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய், ஒண்துறை நீர் வெஃகா உள்ளாய்!
உள்ளுவார் உள்ளத்தாய், உலகம் ஏத்தும்
காரகத்தாய்! கார்வானத்து உள்ளாய் கள்வா!
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய்! பேராது என் நெஞ்சில் உள்ளாய்!
பெருமான் உன் திருவடியே பேணினேனே!

திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகத்தில் உள்ள ஓர் அற்புதமான பாசுரம். நகரேஷு காஞ்சி என்பார்கள். இந்த பாசுரத்தின் மூலம் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து திவ்யதேசங்களையும் ஒன்றிணைத்திருக்கிறார் திருமங்கை ஆழ்வார். தன்னுடைய ஆடல்மா குதிரையில் அவர் பயணப்பட்டு தித்திக்கும் தேன் தமிழ் பாசுரங்களை தந்த வள்ளல் இல்லையா நம் ஆழ்வார்! இந்தப் பாசுரத்தில் என்ன சொல்ல வருகிறார்? காஞ்சிபுரத்தில் உள்ள திருநீரகம் என்ற திவ்யதேச திருப்பதியில் நிலைத்து நிற்பவனே, சொர்க்கலோகத்தில் இருப்பவர்களும் வழிபடும் திருப்பதி திருமாலே! நிலாத்துங்கள் துண்டத்தில் ஒளி வீசுபவனே, எல்லா வளமும் நிறைந்த காஞ்சிபுரத்தில் திருஊரகத்தில் எழுந்தருளியிருப்பவனே திருவெஃகா ஆலயத்தில் இருப்பவனே! 

நினைத்தவர்கள் உள்ளத்தில் உறைபவனே! எல்லா உலகங்களும் புகழ்ந்து துதிக்கும் திருக்காரகம் என்னும் திருப்பதியின் தலைவனே! திருக்கார்வானத்தில் வாழ்பவனே திருக்கள்வனூரை சேர்ந்தவனே! அழகிய காவிரியின் தெற்குப் பக்கத்தில் இருக்கும் திருப்பேர்நகர் தெய்வமே, என்னுடைய நெஞ்சத்தில் நீங்காது இருக்கும் பகவானே! உன்னுடைய திருவடிகளை வணங்குகிறேன் என்கிறார் உருக்கமாக இந்தப் பாசுரத்தில்... காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாளை மட்டும் இல்லை, திருப்பதி மலையப்ப சுவாமியையும், திருப்பேர் நகர் என்று தூய தமிழில் அழைக்கப்படுகின்ற கோவிலடி திவ்யதேசப் பெருமாளையும் இந்தப் பாசுரத்தில் குறிப்பிட்டு வணங்குகிறார். பாசுரத்தின் முடிவில் என்ன சொல்ல வருகிறார் தெரியுமா?


பேராது என் நெஞ்சில் உள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணினேனே! நாமெல்லாம் திருக்கோயிலுக்கு சென்று வந்தால் அந்த நேரத்தோடு அந்த நினைவுகளை மறந்து விடுவோம். ஆனால் திருமங்கை ஆழ்வாருக்கு அப்படி இல்லையாம். அவருடைய நெஞ்சத்து உணர்வுகளில் இந்தப் பாசுரத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து பெருமாளும் குடிகொண்டு இருக்கிறானாம். பரவசமும் பக்தியும் நெருக்கமும் உருக்கமும் இல்லாவிட்டால் இதெல்லாம் சாத்தியம்தானா? அதிலும் இந்தப் பாசுரத்தில் கள்வா என்று குறிப்பிடுகிறார். பெருமானை 108 திவ்யதேச திருப்பதிகளிலேயே மிகச் சிறிய உருவில் இருக்கும் பெருமான் இவர்தான். திருக்கார்வானத்துப் பெருமாளும் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே இருக்கிறார். இது பரமபதத்திற்கு நிகரான ஸ்தலம் என்கிறார்கள். திருக்காரகத்துப் பெருமாள் பெயர் கருணாகரப் பெருமாள். 

தன்னைப் பார்க்க வரும் பக்தர்கள் மீது கருணை மழையை பொழிபவர். இந்தப் பெருமாளை வணங்கினால் கல்வித்திறன் அதிகரிக்கும் என்கிறார் விஷயம் தெரிந்தவர்கள்! திருவெஃகாவில் பள்ளிகொண்ட பெருமாள் மூலவர் பெயர் சொன்னவண்ணம் செய்த பெருமாள். பள்ளிகொண்ட பெருமாளை பார்க்க பார்க்க கொள்ளையழகு. பன்னிரு ஆழ்வாரில் பொய்கையாழ்வார் அவதரித்த இடம். இந்த இடம் இந்தக் கோயிலின் வாசலில் இருக்கும். இந்தக் குளத்தில்தான் பொய்கை ஆழ்வார் அவதரித்தார் என்கிறார்கள்! பிரமாண்ட புராணத்திலும் இந்த திருவெஃகா திவ்யதேச மகிமைகள் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள்! மற்ற எல்லா இடங்களிலும் இடமிருந்து வலமாக சயனத் திருக்கோலம் கொண்டிருப்பார் பெருமாள். ஆனால், இந்த திருவெஃகா திருத்தலத்தில் வலதுபுறத்திலிருந்து இடதுபுறமாக பள்ளி கொண்டிருக்கிறார். சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கதை நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். பக்தனுக்காக பகவானும் கேட்டுக்கொண்ட அற்புத தலம் இந்த திவ்யதேசம்.

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா  துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நியுமுன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்.

திருமழிசையாழ்வாருக்கு கணிகண்ணன் என்ற அற்புதமான சீடன் ஒருவன் இருந்தான். திருமழிசையாழ்வாரும் இந்தச் சீடனும் இந்தப் பெருமாளிடம் அதீத பக்தி வைத்திருந்தனர். திருமழிசையாழ்வாரின் மீது பற்றும், திருமாலின் மீது அதீத பற்றும் வைத்திருந்தான் கணிக்கண்ணன். அற்புதமான புலமையோடு கவிபாடும் திறமை உள்ளவன். கணிக்கண்ணனுடைய திறமையைக் கேள்விப்பட்ட அப்பகுதி மன்னன் தன்னைப் போற்றி பாடு என்று சொல்ல... இந்த ஊரையே எனக்கு பரிசாக கொடுத்தாலும் திருமாலைப் பாடிய இந்த வாய் வேறு யாரையும் பாடாது என்று சொல்லி விட்டான். இச்செந்நாவின் இன் கவி பெருமாளுக்கு மட்டும்தான் என்று சொல்ல, இதைக் கேட்டு கோபம் கொண்ட மன்னன் கணிக்கண்ணன் நாடு கடத்த உத்தரவிட்டான். 

தன் பக்தனுக்கு நேர்ந்ததை எண்ணி துயரம் தாங்காமல் திருமழிசை ஆழ்வாரும் இந்த ஊரை விட்டுச் செல்ல முற்படுகையில் திருவெஃகா பெருமாளிடம் என் பக்தனும் நானும் இங்கிருந்து கிளம்புகிறோம். உனக்கு மட்டும் எங்களை விடுத்து இங்கே என்ன வேலை என்று அன்போடு கேட்க உன்னுடைய பாம்பினை படுக்கையை சுருட்டிக் கொண்டு கிளம்பி வா என்று உருக்கத்தோடு சொல்ல ஆழ்வாரின் கட்டளை ஏற்று பெருமாள் சென்றதாகவும் புராணம் செப்புகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் உண்மையான பக்தனுக்கு இடையே பகவானின் பிரிய முடியாத பந்தத்தை காட்டுகிறது. பகவானுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள நெருக்கம் உருக்கம் மேலான அன்பு இங்கே தெரிய வருகிறது. இங்கேதான் நம்மாழ்வார் நினைவுக்கு வருகிறார்.

‘‘சொன்னால் விரோதம் இது
ஆயினும் சொல்லுவேன்; கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் 
கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் 
திருவேங்கடத்து
என் ஆனை, என் அப்பன் எம்பெருமான் 
உளனாகவே!’’

நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் அர்த்தம் நிறைந்த பொருள் படைத்த பாசுரம் இது. என் பாட்டிற்கு அதாவது பாசுரத்திற்கு கருப்பொருளாக இருப்பவன் எம்பெருமாள் அவன் எங்கிருக்கிறான் தெரியுமா? தேனைக் குடித்த வண்டுகள் மகிழ்ச்சியில் ரீங்காரம் செய்யும் திருவேங்கடமலையில் இருக்கிறார்கள். அவனைப் பாடும் இந்த வாயால் சாதாரண மானிடர்களை என்னால் எப்படி பாட முடியும்? என்கிறார். இதே நிலைதான் திருமழிசை ஆழ்வாருக்கும், கணிக்கண்ணனுக்கும் மன்னன் பொருள் வரும் போகும். ஆனால், மாலவனின் அருள் என்றும் நின்று தழைக்கும். கச்சியம்பதி என்று அழைக்கப்படுகிற காஞ்சிபுரத்திற்குத்தான் எத்துணை சிறப்பு! பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிற வரம் தரும் வரதராஜப்பெருமாள் கோயிலில் நடைபெறும் வைகாசி மாத கருட சேவை உலகப் பிரசித்தி பெற்றது.

இங்கேதானே ராமானுஜருக்கு குருவாக விளங்கிய திருக்கச்சி நம்பி எம்பெருமானோடு தினமும் பேசியவர். தொண்டை மண்டலத்தின் தலைநகராக விளங்கிய இடம், சிற்பங்கள், கலை, பண்பாடு, கல்வியில் சிறந்து விளங்கிய பண்பாடுகளின் கலைக்களஞ்சியம் இந்தக் காஞ்சிபுரம். காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு பின்புறம் உள்ள பாண்டவ தூதப் பெருமாள் இன்றைக்கெல்லாம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அமர்ந்த திருக்கோலத்தில் 25 அடி உயரத்தில் பெருமாளின் விஸ்வரூப தரிசனம்! காஞ்சிபுரம் சென்று ஆழ்வார்கள் போற்றிப் பரவசப்பட்ட கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். வேண்டியதை பெற்று மகிழ்ச்சியாக வாழுங்கள்.

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக